Wednesday, May 17, 2017

முதுமைக் கரைச் சேர்த்த காலம்ஆஹா.. காலம் என்னமாய் விரைந்து முதுமைக் கரை சேர்த்துவிட்டது..!

”நாங்கள் எல்லாம் அந்தக் காலத்துலேன்னு!” - சொல்ல வைத்துவிட்டது..!

இன்று காலை மாடி தோட்டத்தில் கள்ளிச் செடி பூக்களை படம் எடுத்துக் கொண்டிருந்தன கண்கள். ஆனால், உள்ளம் முழுக்க சுற்றித் திரிந்தன நினைவுகள்.

சும்மா கிடக்குமா மனம்? கண்களை மூடி கும்மிருட்டில் “தன்னைத் தேடினாலும்“ ஓடியோடி மௌனத்தை உடைக்கும் எண்ணங்களின் தொகுப்பாயிற்றே..!

தமிழகத்தில் பிறந்து, குழந்தைப் பருவத்து சில சொற்பமான ஆண்டுகளை ஆந்திரத்தின் அந்த குக்கிராமத்தில் கழித்தது நினைவுக்கு வருகிறது.

நானாக ஒரு சிலேட்டை எடுத்துக் கொண்டு அந்த பாலப்பாடச் சாலைக்கு சென்று சுற்றித் திரிந்ததும், மிகவும் வியப்புடன் பள்ளியைச் சுற்றியும் இருந்த பசுமையான தோட்டத்தைக் கண்டு மயங்கி நின்றதிலிருந்து ஆரம்பித்ததோ எனது பசுமைப் பயணம்.

அரை நிர்வாணமாக வந்து நிற்கும் ஏனாதி வம்பனிலிருந்து, கம கம என்று மணக்கும் கிளி மூக்கு மாம்பழமொன்றை அம்மா குதிர் பானைக்குள் ஒளித்து வைத்ததும், அதை அம்மாவுக்குத் தெரியாமல் எடுத்துத் தின்று அடி வாங்கியதும் இன்னும் பசுமையாக நினைவில் எழுகிறது.

வீட்டுப் பக்கத்தில் இருந்த கழிவுநீர் கால்வாய் குட்டைக்குள் நான் தவறி விழுந்ததும், சலவைக்காரப் பெண்ணொருத்தி ஓடி வந்து என்னை காப்பாற்றியதுமான நினைவுகள் பல நூறு மைல்களைத் தாண்டி, கண நேரத்தில் என்னமாய் சென்னையின் எனது மாடி தோட்டத்தில் என்னை வலம் வந்து நிற்கின்றன.

ஆஹா.. காலம் என்னமாய் விரைந்து முதுமைக் கரை சேர்த்துவிட்டது..!

வீட்டுப் பக்கத்திலிருந்த குளத்திலிருந்து இரவில் எழும் தவளைகளின் உரத்த சம்பாஷணையும், கோடையில் காய்ந்து வெடித்துக் கிடக்கும் அதன் வெடிப்புகளிலிருந்து எட்டிப் பார்க்கும் தண்ணீர் பாம்புகளுமாய் நினைவுகள் வலம் வருவதை தடுக்க முடியவில்லை.

அறுவடைக் காலங்களில், பிஞ்சு கரங்களின் உழைப்புக்குக் கிடைக்கும் வெகுமதியான இரு கரம் நிறைந்த நெல்மணிகள் செட்டிக் கடையின் வெல்ல வளையமாய் மாறி நக்கி திரிந்த பருவம் புன்முறுவல் பூக்கச் செய்கிறது.

கோழியை விரட்டிச் சென்ற நேரம் பார்த்து பக்கத்து வீட்டு வாலும், காதும் துண்டிக்கப்பட்ட நாயொன்று வள்ளென்று பாய்ந்து இடது முழங்காலைப் பற்றி குதறியதும், அம்மா பக்கத்திலிருந்த காட்டுக்கு ஓடி பிரண்டையும், கால் அணா செம்பு நாணயத்தையும் இணைத்து காலில் கட்டிய அந்த மருத்துவம் பல ஆண்டுகள் கடந்த பின்னும் கைகள் இன்னும் முழங்காலை இனம் தெரியாத உணர்வலையால் தடவச் சொல்கின்றன.

சென்னையின் புறநகர் வசிப்பிடமானபோது, மாமா மீன் பிடிக்க தூண்டில் போடும் இடம் சென்று வேடிக்கைப் பார்த்ததும், மாலை நேர இலவச டியூஷன் வகுப்புக்கு செல்லாத காரணமாக தேடி வந்த தந்தை தர தரவென்று இழுத்துச் சென்று சக மாணவிகள் முன் அடித்து துவைத்ததும் இன்னும் நாணச் செய்கிறது!

ஒவ்வொரு பழுத்த இலையாய் உதிரும்போதும், துளிர் இலையாய் இருந்த காலம், தளிர் இலையிலிருந்து பழுத்த இலைக்குமாய் தாவி நிற்கிறது பருவம்.

ஆஹா.. .. காலம் என்னமாய் விரைந்து முதுமைக் கரை சேர்த்துவிட்டது..! அனுபவங்கள்தான் ”நாங்கள் எல்லாம் அந்தக் காலத்துலேன்னு!” - சொல்ல வைக்கிறது!

No comments:

Post a Comment