Tuesday, September 22, 2015

காலப்பெட்டகம்: நூற்றாண்டே சாட்சியாக..!


அவர் மௌலான அபுல் கலாம் ஆசாத்துடன் நெருங்கி பழகியிருக்கிறார்.  அவரது சொற்பொழிவுகளைக் கேட்டிருக்கிறார். கட்டுரைகளைப் படித்திருக்கிறார். மாபெரும் கவி அல்லாமா இக்பால் மனதில் பிரவாகமெடுத்த கவிதைகளை எல்லாம் அள்ளி அள்ளிப் பருகினார். அவருக்கு மௌலானா அன்வர் ஷா கஷ்மீரியின் இமாமத்தில் (தலைமையில்) தொழும் நற்பாக்கியம் கிடைத்தது. ஹஸன் அஹ்மது மதனீ, முஃப்தி கிஃபாயதுல்லாஹ் போன்ற பெரும் மார்க்க அறிவு ஜீவிகளுடன் கலந்துரையாடும் வாய்ப்பு கிடைத்தது. அவர் தமது இளமையில் சில நாட்களை ஸயீத் அதாவுல்லாஹ் ஷா புகாரியின் கல்விப் பாசறையில் பயின்றிருக்கிறார். இந்த அனுபவங்கள் எல்லாம் அவரை மிகச் சிறந்த சிந்தனையாளராக்கும் மைல்கற்களாக அமைந்தன.

இஸ்லாமிய பேரரசுகளின் வளமும் செழுமையும், பண்பாடும், கலாச்சாரமும் அந்த அரசுகள் தந்த அமைதியான வாழ்க்கை அமைப்பும், முஸ்லிம்கள் இஸ்லாமிய பேரொளியில் ஸ்பெயினிலிருந்து இந்தோனேஸியாவரை  ஆண்ட உன்னதங்களும் கண்களில் மிளிர்ந்தன. உலகாசையில் விழுந்த முஸ்லிம்கள் தங்கள் இலக்கையும், குறிக்கோளையும் மறந்து போனதால்.. அடைந்த இழப்புகள் அவரது இரவுகளை வேதனை மிக்க தூங்கா இரவுகளாக்கின. முஸ்லிம்கள் இஸ்லாமிய ராஜபாட்டையிலிருந்து விலகி நடந்ததால்.. இதன் பிறகு ஒரு புதிய இஸ்லாமிய பெயர் தாங்கி அமைப்பு உருவானதை அவரால் சகித்துக் கொள்ள முடியவில்லை. இதனை மாற்றியமைத்து புதுயுகங்களை சமைக்க இஸ்லாம் ஒன்றே தீர்வு என்பதை அவர் திட்டவட்டமாக நம்பினார்.

இந்த நேரத்தில் வெள்ளையனை விரட்டியடிக்க உக்கிரமான பன்முகப் போராட்டங்கள் இந்தியாவில் நடைப்பெற்றுக் கொண்டிருந்தன. பிரிட்டீஷ் ஆட்சியாளர்கள் இந்தியர்களின் சுதந்திரப் போராட்டத்தை நசுக்க இந்து-முஸ்லிம் சகோதரத்துவத்தையும், நல்லிணக்கத்தையும் சீர்குலைக்க நச்சு விதைகளை விதைக்கிறார்கள். பிரித்தாளும் சூழ்ச்சியை மேற்கொள்கிறார்கள். இதன் விளைவாக 1915-இல், மதன் மோகன் மாளவியா இந்த மகா சபையை நிறுவினார். பின்னாளில் அது வகுப்புவாத அமைப்பாக உருவெடுத்தது. 1925-இல், கேசவ பலிராம் ஹெட்கேவார் நாக்பூரில் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தை ஆரம்பித்தார். 1923-இல், நாக்பூரில் நடந்த வகுப்புக் கலவரங்களையொட்டி இந்துத்துவவாதிகள் செய்த பொய்யான பிரச்சாரங்கள் ஆர்.எஸ்.எஸ் உருவெடுக்க காரணங்களாயின.

உலக அரசியலை எடுத்துக் கொண்டால்.. ஸ்டாலினின் 'செம்படையினர்' நாத்திகவாதமே வாழ உரிமையுடையது என்ற எண்ணத்தில் ரஷ்யாவின் முஸ்லிம் பகுதிகளான உஸ்பெகிஸ்தான், கஜகஸ்தான், சமர்கண்ட், நேஷாபூர், புகாரா போன்ற மாநிலங்களை ரத்தக் களரியாக்கினர். அப்பகுதிகளில் வசித்துவந்த முஸ்லிம் அறிஞர்களையும், மேதாவிகளையும் கொன்றொழித்து மசூதிகளையும், பாடசாலைகளான மதரஸாக்களையும் கால்நடை தொழுவங்களாக்கினர்.

நாத்திகவாதம், ஆத்திகவாதத்தை 'கிரெம்ளின்' மாளிகையிலிருந்து விரட்டியடிக்கும் முயற்சியில் வெற்றி பெற்றது. மற்றொருபுறமோ ஜெர்மன் 'நாஜி' தலைவர் ஹிட்லர் தனது இனவாத சித்தாந்தத்தை நிலைநாட்ட மனித பிணங்கள் மீது அரியணை அமைக்கும் தீவிர முயற்சியில் களம் இறங்கியிருந்தார்.

உலகை அமைதி பூங்காவாக்க வேண்டிய இஸ்லாமிய சக்தியோ அரசியல், பொருளாதாரம், அறிவியல் என்று வாழ்க்கையின் பல்வேறு துறைகளாக கூறு போடப்பட்டு இருந்தது. மேற்கத்திய சித்தாந்தம் முஸ்லிம்களின் வாழ்வில் திணிக்கப்பட்டிருந்தது. ஆன்மிக அறநெறிகளுக்கும், வாழ்வின் பிற துறைகளுக்கும் சம்பந்தமில்லை என்ற நம்பிக்கை ஊட்டப்பட்டது. பாரிஸ், லண்டன் கலாச்சாரங்கள் தாரளமயமாக்கப்பட்டு முஸ்லிம் நாடுகள் மேற்கத்திய வர்ணங்களுக்காளாயின.

1888-களிலேயே பிரிட்டீஷ் நாடாளுமன்றத்தில் இஸ்லாம் மற்றும் முஸ்லிம்கள் குறித்து முக்கிய விவாதம் நடந்தது. 'பிளட்ஸ்டோன்' என்ற பிரமுகர், 'இளைஞர்கள் சமூகத்தின் முதுகுத்தண்டு போன்றவர்கள். அதனால், இளைய சக்தியை திசை திருப்ப வேண்டும். முஸ்லிம் இளைஞர்களை நம் பக்கம் கவர்ந்துவிட்டால்.. இஸ்லாமிய வாழ்க்கை முறையை செயல்பட விடாமல் தடுத்துவிட முடியும்!"- என்ற ஆலோசனையை முன் வைத்தார். அத்துடன் நில்லாமல் மேசையிலிருந்து ஒரு புத்தகத்தை எடுத்துக் காட்டி, "இது குர்ஆன்! முஸ்லிம்களின் வழிகாட்டி! இந்த நூலைவிட்டு அவர்களை விலக்க வேண்டும்!"-என்றார்.

இவரது ஆலோசனை ஒருமனதாக ஏற்கப்பட்டது.

பிரச்னைகளின் பிடியில் சிக்கி முஸ்லிம்கள் தடுமாறிக் கொண்டிருந்த நேரம். சிலர் நாட்டு விடுதலைக்காக.. சிலர் தொழிலாளர் உலகுக்காக.. இன்னும் சிலரோ 'பாஸிஸம்' வளர்வதற்காக தத்தமது சக்தி-சாமார்த்தியங்களை செலவழித்துக் கொண்டிருந்தார்கள். உலகமே, ரத்தக் களறியாகி.. மனிதகுலம் பிண மலைகளாய் குவிக்கப்பட்ட துயரம் வாய்ந்த நாட்களவை!

இந்த சூழலில் 16 வயதுகொண்ட அந்த துடிப்புள்ள இளைஞர் மனித குலத்துக்கு நேரிய வழியைக் காட்ட வேண்டும் என்று கங்கணம் கட்டிக் கொண்டார். வரவிருக்கும் நவீன அறிவியல் உலகை 'எழுதுகோல்தான்' ஆளப்போகிறது என்ற திடமான தீர்மானத்துக்கு வந்தார். அறிவின் மூல ஊற்றே எழுதுகோல்தானே! திருக்குர்ஆனும் இதற்கு சாட்சியாகவல்லவா இருக்கிறது.


1919 இல், தனது 16 வயதில் அவர் முதன் முறையாக 'ஜபல்பூரிலிருந்து' வெளியான 'தாஜ்' வார இதழின் ஆசிரியர் பொறுப்பேற்றார். மனித உள்ளங்களில் அன்பை பீறிட்டெழச் செய்வது இறைவேதமான திருக்குர்ஆன்தான் என்றும், அதன் பக்கம் திரும்புவது ஒன்றே ஈடேற்றத்துக்கான வழி என்றும் இந்தியர்களுக்கு மட்டுமல்லாமல் உலக மக்கள் அனைவருக்கும் அழைப்பு விடுத்தார்.

1920 இல், தாஜ் இதழ் நின்று போனது. அதன் பிறகு அந்த இளைஞர் தில்லி சென்றடைந்தார். தில்லியில் 'ஜமீயதுல் உலமாயே ஹிந்த'  என்ற அமைப்பு 'முஸ்லிம்' என்ற பெயரால் ஒரு பத்திரிகையை ஆரம்பித்தது. இப்பத்திரிகையின் ஆசிரியராக அந்த இளைஞர் பொறுப்பேற்றார். தமது அற்புதமான ஆக்கங்களால் முஸ்லிம் சமுதாயத்தில் எழுச்சியை உருவாக்க கடுமையாக உழைத்தார்.

1926 இல், சுத்த சன்மார்க்க சங்கத்தின்   தலைவர் பண்டிட் சச்தானந் கொலை செய்யப்பட்டார். கொலையாளி ஒரு முஸ்லிம் இளைஞர். இச்சம்பவம் காங்கிரஸ் இயக்கத்தில் பெரும் புயலை கிளப்பியது. இந்த கொலையை காந்திஜி விமர்சிக்கும்போது, "இஸ்லாம் இரத்தம் சிந்துவதை ஊக்குவிக்கிறது" என்றும், "இஸ்லாத்தின் துவக்கமும் வாள்தான்! அதன் முடிவும் வாளகவும்தான் இருக்க முடியும்!" - என்று சொன்னார்.

காந்தியின் இந்த கடும் விமர்சனத்தின் மீது பலத்த சர்ச்சைகள் எழுந்தன.

இஸ்லாத்தின் மீது சுமத்தப்பட்ட இந்த அபாண்டம் பெரும் பிரச்னையாக வடிவெடுத்தது.

இச்சமயத்தில், மௌலானா 'முஹம்மது அலி ஜவஹர்' தில்லியின் ஜாமியா மஸ்ஜிதில் அவசரகால கூட்டம் ஒன்றை ஏற்படுத்தி சொற்பொழிவாற்றினார். அப்போது அவர், "காந்தியின் விமர்சனத்துக்கு யாராவது தக்க விளக்கமளித்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்?"- என்று தமது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.
கூட்டத்தில் அமர்ந்திருந்த அந்த இளைஞர் மௌலானா முஹம்மது அலி ஜவஹரின் சொற்பொழிவைக் கேட்டு பெரிதும் பாதிக்கப்பட்டார். மௌலானாவின் கேள்வி, "காந்தியின் விமர்சனத்துக்கு யாராவது தக்க விளக்கமளித்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்?"- அவரது நினைவில் எழுந்து அவரது தூக்கத்தைப் பறித்துவிட்டது. அதன் விளைவாக, 'அல் ஜிஹாத் ஃபில் இஸ்லாம்' (இஸ்லாத்தில் ஜிஹாத்தின் உண்மை நிலை) என்ற புத்தகத்தை எழுதினார். உலகில் அமைதியை நிலைநாட்ட வந்த இஸ்லாம் தீவிரவாதத்தைப் போதிக்கிறது என்ற தவறான கருத்தைக் கொண்டோருக்கு அது தக்க பதிலாக இருந்தது. மேற்கத்தியவாதமே அனைத்து பிரச்னைகளுக்கும் தீர்வு என்று நினைத்துவந்த உலகத்தாருக்கு அந்த இளைஞரின் எழுதுகோலிலிருந்து பிறந்த அற்புதம் அது.

'இஸ்லாம் ஜிஹாத்' என்ற பெயரில் 'அல் ஜமியத்' பத்திரிகையில் (அந்த இதழின் ஆசிரியராகவும் அவர் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது) அவருடைய ஆக்கங்கள் வெளிவரலாயின. அதன் பிறகு அது 500 பக்கங்கள் கொண்ட புத்தகமாக அச்சிடப்பட்டது. இஸ்லாமிய இலக்கியத்தில் இன்றுவரை அந்தப் புத்தகம் பேரிலக்கியமாக போற்றப்பட்டு வருகிறது. மார்க்க அறிஞர்கள், அறிவு ஜீவிகள் மத்தியில் பொக்கிஷமாக  கருதப்படுகிறது   மகாகவி அல்லாமா இக்பால். 'அல் ஜிஹாத் ஃபில் இஸ்லாம்' என்னும் இந்தப் புத்தகத்தை உயர்ந்த நூல் என்று மனந்திறந்து பாராட்டியுள்ளார்.

மகாகவி அல்லாமா இக்பால்
தமது 24 வயதுக்குள் உலகின் கவனத்தை திசை திருப்ப காரணமான அந்த இளைஞர்தான் இன்று 'மௌலானா சையத் அபுல் அஃலா மௌதூதி' என்று அழைக்கப்படுகிறார்.

1928 இல், ஜமியத்துல் உலமாயே ஹிந்த் அரசியல் சார்புடைய இயக்கமாக மாறியது. 'அல் ஜமியத்' இதழும் கட்சியின் பத்திரிகையாகிவிட்டது. இந்த நடவடிக்கை மௌலானாவுக்கு பிடிக்கவில்லை. அல் ஜமிஅத்துக்கு விடை கொடுத்துவிட்டு 1932 இல், இஸ்லாம் சம்பந்தப்பட்ட புத்தகங்கள் எழுதுவதில்  கவனம்  செலுத்த ஆரம்பித்தார்.  இந்த  நேரத்தில் ஹைதராபாத்திலிருந்து 'தர்ஜுமானுல் குர்ஆன்' என்ற பெயரில் மாத இதழ் ஒன்று  வெளிவந்து  கொண்டிருந்தது.  மௌலானா அதன் ஆசிரியராக  பொறுப்பு  ஏற்றுக் கொண்டார். திருக்குர்ஆனில்  ஒளிவெள்ளமே  மானுட பிரச்னைகளுக்கான தீர்வு என்று மனங்கவரும் விதமாக படிப்பவர் உள்ளங்களை ஈர்க்கும்விதமாக எழுதலானார்.

1933-1937 வரை இஸ்லாமிய சித்தாந்தத்தை உள்வாங்கி, சமூக -அரசியல்துறைச் சார்ந்த பல்வேறு புத்தகங்களை மௌலானா எழுதினார்கள். அப்போது எழுதப்பட்டவைதான் வட்டி, பர்தா, கணவன்-மனைவி உரிமைகள் மற்றும் கடமைகள், இஸ்லாத்தில் குடும்பக் கட்டுப்பாடு போன்ற உயரிய வாழ்வியல் இலக்கியங்கள்.

இவ்வெளியீடுகள் மேற்கத்திய பிரச்சார சாதனங்களுக்கு பெருத்த தலைவலியாக மாறின. இஸ்லாம் மற்றும் அதன் உன்னத கருத்துக்களை சகித்துக் கொள்ள அவை தயாராக இல்லை. சுரண்டலற்ற, கண்ணியம் வாய்ந்த இஸ்லாமிய சமூக அமைப்பை ஜீரணிக்க மேற்குலக ஆதிக்க சக்திகளால் முடியவில்லை.

மௌலானாவின் புத்தகங்கள் இஸ்லாமிய உலகில் பெரும் அறிவு புரட்சியைத் தோற்றுவித்தன. அதிலும் குறிப்பாக முதலாளித்துவத்துக்கும், கம்யூனியஸத்துக்கும் மூளைச் சலவைச் செய்யப்பட்டிருந்த இளைஞர்களின் உள்ளங்களை ஈர்த்துக் கொண்டன.


1938 இல், அல்லாமா இக்பாலின் அழைப்புக்கிணங்க மௌலானா மௌதூதி ஹைதராபாத்திலிருந்து லாஹீருக்குச் சென்றார். அவர் லாஹீர் சேரும்போது, இந்தியா சுதந்திரமடையப் போகிறது என்ற செய்தி ஊர்ஜிதமானது.

சுதந்திர இந்தியாவில் அமையப் போகும் புதிய அரசு, இந்திய முஸ்லிம்களின் சமூக - அரசியல் வாழ்க்கைக்கு அந்த அரசு தரும் உத்திரவாதம் இவற்றை குறித்த கவலைகள் மௌலானாவின் மனதை அரித்தெடுக்கலாயின.

1941 ஆகஸ்ட், 26 இல், வெறும் 75 பேர் கொண்ட ஒரு சிறு குழுவை ஒன்றுபடுத்தி 'ஜமாஅத்தே இஸ்லாமி' (இஸ்லாமிய கூட்டமைப்பு) என்ற இயக்கத்தை மௌலானா ஆரம்பித்தார்கள். அக்குழுவினரால் ஏகமனதாக தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். ஒருபுறம் இயக்கப் பொறுப்புகள் மறுபுறம் எழுத்துப் பணிகள் என்று மௌலானா சூறாவளியர் சுழன்றார்கள்.

லெனின் இஸ்லாத்தை ஏளனம் செய்யும் வகையில், "வானத்தில் சுவனம் அமைப்பதைவிட பூமியில் சுவனம் அமைப்பதே எங்களது முக்கியப் பணி!" - என்றார்.


இதற்கு பதிலளிக்கும் வகையில் மௌலானா ஒரு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்து பெருந்திரளாய் திரண்டிருந்த மக்கள் கூட்டத்தில், "வானத்தில் சுவனம் அமைப்பதை லட்சியம் கொண்டவரால் மட்டுமே பூமியிலும் சுவனம் அமைக்க முடியும் என்றே கடந்த கால அனுபவங்கள் எடுத்துரைக்கின்றன!" - என்றார். தொடர்ந்து சொல்லும்போது, "ஆகாயத்தில் சுவனம் அமைக்க விருப்பமில்லாதவர்களால் ஆகாயத்திலும் நரகமே; பூமியிலும் நரகமே அமைப்பார்கள்! ஒருகாலம் வரும் ; அன்று மாஸ்கோவில் கம்யூனிஸம் சமாதி கட்டப்படும்!" - என்றார்கள் தீர்க்கதரிசனத்தோடு!

மௌலானா மௌதூதியின் தலைமையில் உருவான இஸ்லாமிய பேரெழுச்சி உலகம் முழுவதும் பரவலாயிற்று. 1970 இல், தேசிய அளவில் பரபரப்பை ஏற்படுத்திய 'தஃப்ஹீமுல் குர்ஆன்' உருதுவில் முழுமை அடைந்தது. திருக்குர்ஆனின் அந்த விளக்கவுரை இன்று உலகின் பல்வேறு மொழிகளிலும், இந்தியர்களின் பெரும் பகுதி மொழிகளில் ஏறக்குறைய 10 க்கும் மேற்பட்ட மொழிகளில் மொழி பெயர்ப்பு செய்யப்பட்டுள்ளது. அதேபோல, மௌலானாவின் பல நூல்கள் உலகின் 70 க்கும் மேற்பட்ட மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளன.

இஸ்லாமிய இலக்கிய உலகில் பல்வேறு  சாதனைகள் புரிந்தோர் எல்லாம் மௌலானாவின் நூல்களையே 'சார்பு' நூல்களாக கொண்டுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. நவீன உலகுக்கு ஈடுகொடுக்கும் விதமாக இறுதி வேத நூலான திருக்குர்ஆனின் கருத்துக்களுக்கு விளக்கவுரை எழுதியவர்களில் தலையாய இடம் பிடித்தவர்கள் மௌலானா அவர்கள்.


1947, ஆகஸ்ட் 15 இல், இந்தயா-பாகிஸ்தான் இரு நாடுகளாக பிரிந்தன. இருபுறமும் வகுப்புக் கலவரங்கள் வெடித்தன. பாகிஸ்தானில் மௌலானா மௌதூதியும், இந்தியாவில் காந்தியும் வகுப்புக் கலவரங்களைத் தடுக்க பெரும் முயற்சி மேற்கொண்டார்கள்.


ஆனால், காந்தியின் முயற்சிகளை மட்டுமே ஊடகங்கள் பிரதானப்படுத்தின. மெளலானாவின் முயற்சிகளையும், அமைதிக்கான பெரும் பணிகளையும் இருட்டடிப்புச் செய்தன. இஸ்லாம், முஸ்லிம்களின் விஷயத்தில் ஊடகங்களின் போக்கு 60 ஆண்டுகளுக்கு முன்பிருந்தும் ஒரே மாதிரியாக தொடர்கிறது.

தனி நபராக இஸ்லாமிய பாதையில் பயணித்த மெளலானாவின் அடிச்சுவட்டில் லட்சோப லட்சம் தொண்டர்கள் உலகின் பல பகுதிகளிலிருந்தும் அணி திரண்டார்கள்.


இஸ்லாமிய வாழ்வியல் திட்டத்தை நவீன சாதனங்கள் மூலமாக மனித குலத்துக்கு எட்டச் செய்ய கடந்த நூற்றாண்டில் பாடுபட்ட மாமனிதர் மௌலானா மௌதூதி ஆவார்.

1978-இல் சவுதி அரசின் 'சவுத் அல் ஃபைஸல்' விருதுக்காக மௌலானா தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். சர்வதேச அளவில் நடக்கும் இந்த தேர்வை சர்வதேச அளவிலான அறிஞர் குழுதான் நடத்துகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

ஈரானில் சர்வாதிகாரி 'ஷா'வின் ஆட்சி இமாம் ஆயதுல்லாஹ் குமைனியின் தலைமையில் நடந்த மக்கள் புரட்சியால் கவிழ்ந்தது. ஈரானின் அதிபராக குமைனி தேர்வு செய்யப்பட்டார்.

அதிபரானதும் குமைனி முதன்மை பணியாக தமது பிரதிநிதி குழு ஒன்றை மெளலானா மௌதூதியை சந்திப்பதற்காக லாஹீருக்கு அனுப்பி வைத்தார்.

மௌலானாவும் இஸ்லாமிய ஆட்சிக்கான நெறிமுறைகளையும், அரிய பல ஆலோசனைகளையும் அக்குழுவினருக்கு வழங்கினார்கள்.

ஒருநாள் ஸ்பெயின் நாட்டிலிருந்து ஒரு கடிதம் மௌலானாவுக்கு வந்தது. அதில் இப்படி எழுதப்படிட்டிருந்தது:

"அன்புள்ள தந்தை நிகர் மெளாலானாவுக்கு,

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

தங்களது புத்தகங்களைப் படித்துதான் நான் இஸ்லாம் தழுவினேன்.

மறுமையில் இறைவனின் சந்நிதியில் தங்களது ஈடேற்றத்துக்கான பரிந்துரையை (சாட்சி) நான் செய்வேன்!"

கடிதத்தை படித்து முடித்த மௌலானாவின் கண்கள் குளமாயின. 

"உண்மைதான்! இந்த இளைஞன் நாளை மறுமையில் என் ஈடேற்றத்துக்காக சிபாரிசு செய்வான் என்பது உண்மைதான்!" - என்றார்கள் கனத்த குரலில்.


27, மே மாதம் 1979 - இல், தமது சக இஸ்லாமிய சேகவரும் மகனுமான டாக்டர் அஹ்மது பாஃரூக்குடன் மௌதூதி சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றார்கள். ஆகஸ்ட் 20 ஆம் நாள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்கள். செப்டம்பர் 4 இல் நுரையீரல் நோய் சம்பந்தமான அறுவை சிகிச்சை நடந்தது. ஆனால், சிகிச்சை பலனளிக்காமல் மௌலானா அவர்கள் செப்டம்பர் 22 அதிகாலையில் இறையடி சேர்ந்தார்கள்.

"இன்னாலில்லாஹி.. வ இன்னா இலைஹி ராஜிவூன்.."

மௌலானாவின் மரணம் முஸ்லிம் உலகுக்கு பெரும் இழப்பாக அமைந்தது. உலக முஸ்லிம் சமுதாயம் சோகப் பெருங்கடலில் மூழ்கியது. சில இளைஞர்கள் மூர்ச்சையடைந்து போனதாக செய்திகளும் வெளியாயின. உலகின் பல்வேறு மூலைகளிலிருந்து இரங்கல் செய்திகள் தொடர்ந்து வந்து கொண்டிருந்தன.

மௌலானாவின் பௌதீக உடல் அமெரிக்காவிலிருந்து பி.ஐ.ஏ. பிரத்யேக விமானத்தில் லாஹீர் கொண்டு வரப்பட்டது. கதாஃபி ஸ்டேடியத்தில் ஜனாஸா தொழுகை நடத்தப்பட்ட. உலகின் பல பகுதிகளிலிருந்தும் திரண்டு வந்திருந்த அறிஞர் பெருமக்கள், அறிவு ஜீவிகள், பாகிஸ்தானின் முன்னாள் அதிபர் ஜியா உல் ஹக் உட்பட பல நாடுகளின் ஆட்சியாளர்கள் அத்தொழுகையில் கலந்துகொண்டார்கள்.

எழுதுகோலையே தனது போராட்டக்கள ஆயுதமாக்கி ஜிஹாத் என்னும் அறப்போர் புரிந்த மாமனிதரின் இறுதித் தொழுகையை இஹ்வானுல் முஸ்லிமீன் இயக்கத்தின் அன்றைய தலைவர் பேரறிஞர் அல்லாமா யூஸீஃப் அல் கர்ளாவி தலைமைத் தாங்கி நடத்தி வைத்தார்கள்.


இன்று மௌலானா மௌதூதி (ரஹ்) அவர்கள் நம்மிடையே இல்லை. ஆயினும், அவர் விட்டுச் சென்ற பணிகள் 'ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்தின்' வடிவில் நாடு முழுவதும் பெரும் விருட்சமாய் படர்ந்துள்ளது.

மெளலானா விட்டுச் சென்ற பணிகளை இன்னும் துடிப்பாக எடுத்துச் செல்ல வேண்டியது நமது பொறுப்பு. இந்தப் பணிகள் திருக்குர்ஆன் மற்றும் திருநபிகளாரின் சுன்னாஹ் - இவை இரண்டும் முஸ்லிம்கள் மீது சுமத்தும் பொறுப்புகளின் அடிப்படையில் கட்டியமைக்கப்பட்டவை.

யாருடைய சிபாரிசும் ஏற்றுக் கொள்ளப்படாத அந்த மறுமை நாளில், அந்த ஒரு ஸ்பெயின் இளைஞன் மட்டுமல்லாமல் இதை எழுதிக் கொண்டிருக்கும் என்னைப் போன்ற ஆயிரக் கணக்கான பேர் மௌலானாவின் பிழைப் பொறுக்க கருணையாளனான இறைவனிடம் இருகரமேந்தி நிற்பார்கள்.

இதற்கு வரவிருக்கும் நூற்றாண்டுகள் சாட்சிகளாக நிற்கும்!

No comments:

Post a Comment