Sunday, September 13, 2015

லென்ஸ் கண்ணாலே:009- காமிரா எப்படி இயங்குகிறது?


என்ன அற்புதமான காட்சி அது!

அதை கண்டு வியந்து போகிறீர்கள்!

அதோ..! அதோ..! அங்கே பாருங்களேன்.. அந்த முள் புதரைத் தாண்டி.. அந்த கால்வாயில் … !!!

நீங்கள் விரல் நீட்டி காட்டிய இடத்தில்,

அழகான செந்நாரை ஒன்று நின்று கொண்டிருக்கிறது.சிறு அசைவும் அந்த பறவையை ஆபத்து என்று எச்சரித்து அங்கிருந்து பறக்க வைத்துவிடும்.

அதனால், முள் புதர்களுக்கு பின்னால் சத்தமில்லாமல் அமர்ந்து கொள்கிறீர்கள்! சரியாக சொல்ல வேண்டும் என்றால் பதுங்கிக் கொள்கிறீர்கள்.

அதன் பின்னர், தோளிலிருந்து கையில் எடுத்து குறி பார்த்து சுடுகிறீர்கள்!

“கிளிக்..!”

என்ன பயந்து விட்டீர்களா? வனச் சட்டங்கள்படி வேட்டையாடுவது குற்றம். அதுவும் தண்டனைக்குரிய குற்றம்!

ஆனால், நாம் சுட்டதோ காமிராவால்!


வீட்டுக்கு போய் படத்தை பெரிசாக்கி பார்த்தால் வண்ணங்களுடன் அற்புதமாக நாரை பதிவாகி இருப்பதைக் கண்டு ஆனந்தப்படுகிறீர்கள் அல்லவா?

உண்மையிலேயே அது அற்புதமான தருணம்தான்!

கண்ணால் கண்டு மனம் கவரப்பட்டு காட்சி ஆக்கியது ஆயிற்றே! காலத்துக்கும் போற்றப்பட வேண்டி ஒன்றல்லவா அது!

சரி இப்படி அழகழகான படங்களை எடுக்கும் காமிரா எப்படி செயல்படுகிறது? எப்படி இயங்குகிறது? என்று என்றைக்காவது நாம் சிந்தித்திருப்போமா?

காமிராவின் இயக்கம் சம்பந்தமாக எளிமையாக தெரிந்து கொள்வது நமக்கு அதற்கு அடுத்தடுத்து வரும் பாடங்களுக்கு பெரும் உதவிகரமாக இருக்கும். நுட்பமான நுணுக்கங்களை கையாள உதவிகரமாக இருக்கும்.

நான் துவக்கத்திலேயே தெரிவித்திருக்கிறேன். கண்ணும், காமிராவும் ஒன்றுதான்! விழியாலும், லென்ஸ் வழியேயும் பார்ப்பது ஒன்றுதான்!

முந்தைய பாடங்களை கொஞ்சம் நினைவு படுத்திப் பாருங்கள்.


கருக்கலின் இருட்டு. கருமை சூழ்ந்து சுற்றியும் இருப்பவை தெளிவற்றவையாக தெரிகின்றன. ஆனாலும் வைகறை உதயத்துக்காக இருட்டு சிணுங்கிக் கொண்டு விலகுவதால் என்னவோ ஓராயிரம் வர்ண ஜாலங்கள் வானத்தில் படர்கின்றன.

சற்று நேரத்தில் பொழுது பளீர் என்று புலரும்போது, கிழக்கில் அடிவானத்தைத் துளைத்துக் கொண்டு சிவந்து உதயமாகும் சூரியன் குளுமையாய் தெரிகிறது.

அதே சூரியன் நேரம் செல்ல செல்ல கீழ் வானத்தில் மேலெழுந்து பிரகாசமான ஒளியைப் படரச் செய்து, கண்களை கூச செய்கிறது.

அதன் பின் உச்சி, மேற்கு வானம் என்று பல நிலைகளில் அந்த ஒளி மாறுகிறது. அந்தியில் மீண்டும் குளுமையாகி இருள் படர்கிறது.


இரவின் முதல் துவக்கமான அந்த இருள் அந்தி மயக்கத்தால் ஓராயிரம் வர்ண ஜாலங்களாகி மறைந்து இரவு பிறக்கிறது. இருள் கப்பிக் கொள்கிறது.

மீண்டும் பார்க்கும் பொருட்களை உற்றுப் பார்க்க வேண்டும் அல்லது மின் விளக்கைப் பொருத்த வேண்டும் என்பதே யாதார்த்தம்.

இப்போது கண்களை, காமிராவோடு ஒப்பிட்டுப் பாருங்கள்.

நீங்கள் எதை எதை பார்க்க முடிகிறதோ அவற்றை காமிராவால் பார்க்க முடியும். பளீர் வெளிச்சம் கண்கள் பாதிப்பதைப் போலவே, காமிரா லென்ஸீம் இத்தகைய சிக்கலுக்கு ஆளாகும்.

அதேபோல கும்மிருட்டில் கண்களுக்கு ஏற்படும் அதே தடுமாற்றமே காமிராவுக்கும் ஏற்படும்.

இதை கவனத்தில் வைத்துக் கொண்டால் காமிராவின் அத்தனை இயக்கங்களையும் எளிதாக கையாண்டு அற்புதமான படங்களை எடுக்க முடியும். இறைவன் நாடினால், உலகப் புகழ் பெற்ற ‘போட்டோ கிராபரா’ மாற முடியும்.

சரி… காமிராவின் இயக்கத்தை இந்த 7 அம்சங்கள்தான் தீர்மானிக்கின்றன.

1. வெளிச்சம் அல்லது ஒளி (LIGHT)

2. லென்ஸ் (LENSE)

3. அபெர்சர் (APERTURE) அதாவது ஒளி ஊடுருவ லென்ஸின் விட்டம் விரிந்து சுருங்கும் அளவு.

4. நேரம் (SHUTTER SPEED – Exposure Duration) அதாவது காமிராவின் மூடி திறக்கும் ஒரு கதவு வழியே ஒளி ஊடுருவதற்கான நேரம்.

5. ஐஎஸ்ஓ (ISO – Sensation of Sensor) அதாவது சென்ஸார் திரை தொடு உணர்வின் அளவு.

6. படம் பிடிப்பதற்கான தொகுப்பு (COMPOSITION - Placement or Arrangement of Visual Elements)

7. ஈர்க்கப்படுதல் (INSPIRATION).


மேலே குறிப்பிட்டுள்ள இந்த ஏழு அம்சங்களையும் பொருத்திப் பார்க்க ஆரம்பத்தில் குறிப்பிட்ட சம்பவத்தை காட்சிப்படுத்திப் பாருங்கள்.

அற்புதமான ஒரு நாரையைக் கண்டு ஈர்க்கப்பட்ட (INSPIRATION). நீங்கள், அந்த நாரையுடன் என்னவெல்லாம் (COMPOSITION) சேர்ந்திருக்க வேண்டும் என்று தீர்மானித்து காட்சிப்படுத்துகிறீர்கள்.

காமிராவை எடுத்து நீங்கள் படமெடுக்கப்போகும்போது,

அந்தசூழலில் உள்ள வெளிச்சம் (LIGHT), காட்சிப்படுத்தவிருக்கும் நாரையின் பின்புலத்தையும் (Background) கணிக்கிறீர்கள்.

அதன்படி நீங்கள் பயன்படுத்த இருக்கும் லென்ஸ் (LENSE) மற்றும் காமிராவின் உள்ளமைப்பு தொழில்நுட்பத்தில் (Aperture, Shutter Speed and ISO) செய்யவிருக்கும் மாற்றங்கள் என்று தீர்மானிக்கிறீர்கள்.

பிறகு, காமிரா ஆடாத ஒரு கிளிக். அற்புதமான ஒரு படம்!

காமிராவின் செயல்பாட்டை எளிதாக புரிந்து கொள்ள சில படங்களை இத்துடன் இணைத்துள்ளேன். APERTURE, SHUTTER SPEED மற்றும் ISO இவற்றை இறைவன் நாடினால் வேறொரு தனிப்பாடத்தில் பார்க்கலாம்.

இறைவன் நாடினால் கலைவண்ணம் படரும்...

'''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''
முந்தைய தொடர்களை வாசிக்க:

001. அனுபவங்களின் பகிர்வன்றி.. அறிவின் ஊற்றல்ல - http://ikhwanameer.blogspot.in/2015/07/blog-post_21.html

002. உங்களுக்கான காமிரா எது? - http://ikhwanameer.blogspot.in/2015/07/2_22.html

003. கையாள்வது எளிது! ஆனாலும், கடினம்! : http://ikhwanameer.blogspot.in/2015/07/3_23.html

004. வாய்ப்பு என்பது ஒருமுறைதான்! : http://ikhwanameer.blogspot.in/2015/07/4_24.html

005.படமெடுக்க நினைப்பதை மட்டுமே படம் பிடியுங்கள் : http://ikhwanameer.blogspot.in/2015/07/5_30.html

006. என்கவுண்டர் செய்யாதீர்கள் : http://ikhwanameer.blogspot.in/2015/08/6.html

007. பிளாஷை பயன்படுத்துவது எப்படி? : http://ikhwanameer.blogspot.in/2015/08/7.html

008. புகைப்படக் கலையின் கதை : http://ikhwanameer.blogspot.in/2015/08/8_31.html

No comments:

Post a Comment