Saturday, September 12, 2015

வைகறை நினைவுகள் - 20: பாதுகாத்துவரும் அந்த இரண்டு மடல்கள்!


நாம் எத்தனையோ பேருக்கு மடல்கள் எழுதியிருப்போம். அதேபோல, பல்வேறு நபர்களிடமிருந்து மடல்கள் கிடைக்கப் பெற்றிருப்போம். மகிழ்வும், துன்பமும், வியப்பும், கோபமும் கலந்த பல்வேறு உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் மடல்கள் அவை.

நானும் எனது பள்ளி நாட்களிலிருந்தே அத்தகைய மடல்களை எழுதியிருக்கிறேன். எனது பாட்டி, என்னுடன் படித்த நண்பர்கள், தோழர்கள் என்று பல்வேறு தரப்பினரிடமிருந்து மடல்களைப் பெற்றிருக்கிறேன். அவற்றின் முக்கியத்துவம் கருதி, அவற்றை இன்னும் பல கோப்புகளாய் பாதுகாத்தும் வருகிறேன்.

ஆனால், சகோதர சகோதரிகளே! நண்பர்களே!

எனது 30 ஆண்டு கால இதழியல் துறை வாழ்வில் இரண்டு மடல்களை மட்டும் என்னால் மறக்கவே முடியாது! அவற்றை இன்னும் நான் பயபக்தியோடு பாதுகாத்து வருகிறேன். எனது முன்னேற்றத்துக்கான வாழ்வியல் ஓட்டத்தின் குறிப்பிட்ட எல்லைக்கற்களாக அவற்றை நான் கருதுகிறேன்.

80-களின் பிற்பகுதியிலிருந்தே சமரசம், மணிச்சுடர், முஸ்லிம் முரசு மற்றும் தினமணி போன்ற பத்திரிகைகளில் எனது எழுத்து பயணம் ஆரம்பித்துவிட்டது.

நான் ஆரம்பத்திலேயே குறிப்பிட்டேன்; யாருடைய பரிந்துரையும் இல்லாத, எந்தவிதமான பின்புலமும் இல்லாத திக்கற்றவன். எனக்கு துணையாக இருந்தது இறைவன் மட்டுமே என்று!

அன்றும், இன்றும் இறைவன் நாடினால் என்றுமே இப்படிதான் நான் இருப்பேன். என்னை மாற்றிக் கொள்ள என்னால் முடியவே முடியாது.

பள்ளி நாட்களில் 6-ம் வகுப்பிலிருந்து 8-ம் வகுப்புவரை எனது வகுப்பு ஆசிரியை மேனகா டீச்சரிடமிருந்து நட்சத்திர குறியீடுகளை மட்டுமே மதிப்பெண் அட்டையில் பெற்றவன். யார் முதல்வன்? என்று சக மாணவர்களுக்கிடையே நடக்கும் அந்த கல்வி யுத்தத்தில் ஒரு அரை மதிப்பெண் குறைந்து பின்தங்கிவிட்டாலும் வெட்கமும், நாணமும் என்னை பிடுங்கி எடுத்துவிடும். பொல பொலவென்று ஊற்றெடுக்கும் கண்ணீரோடு அடுத்த யுத்ததிற்கு இன்னும் பல மடங்கு வேகத்தோடு தயாரிப்புகளில் மனம் ஈடுபடும். அடுத்த தேர்வில் முதலிடத்திற்கு வரும்வரை அந்த முயற்சிகள் ஓயவே ஓயாது!

மின்விளக்கு காணாத வீட்டில் காடா விளக்கு வெளிச்சமும், அதிகாலை குளிருக்கு இதமாய் வீட்டுக்கு முன் கணப்பாய் மூட்டும் குப்பைக் கூளங்களின் வெளிச்சமும், இரவில் ரயில் நிலையத்தின் மின் விளக்கொளி வெளிச்சமுமாய் கல்வியை கற்று வளர்ந்தவனுக்கு யாருடைய பரிந்துரையும் தேவையில்லைதானே!

அதனால், தினமணியிலும் எனது வளர்ச்சி என்பது நூற்றுக் கணக்கான வாசகர் கடிதங்கள் என்ற அடிமட்டத்திலிருந்து தகுதியின் அடிப்படையில் கூர்த்தீட்டப்பட்டு இடைவிடாத அந்த எழுதுகோல் அறப்போராட்டத்தில் பின்னாளில் அதே இதழின் ஆஸ்தான கட்டுரையாளனாய் வளர்த்தது. “வாப்பா! தினமணியின் ஆஸ்தான கட்டுரையாளரே!” – என்றுதான் என்னை தினமணியின் ஆசிரியர் இராம.திரு. சம்பந்தம் செல்லமாக அழைப்பார்.

இப்படி, என்னை வடிவமைத்தது என்னுள் இயல்பாய் இருக்கும் போர்க்குணமும், கடும் உழைப்பும் எல்லாவற்றுக்கும் மேலாக இறைவனின் பேரருளுமின்றி வேறில்லை!

அன்று நான் ஆரம்பித்த அதே வேகம் இன்றும் நான் நிறுத்துவதாக இல்லை. தி இந்து நாளேடுவரை அதே வேகத்தில் எந்தவிதமான சிபாரிசுளும் இல்லாமல் இன்றும் நான் ஓடிகொண்டுதான் இருக்கிறேன்.

1995-ம், ஆண்டு.


தினமணி சிறப்புப் பகுதியான வேளாண்மணிக்கு, ‘மலேரியாவுக்கு சிறந்த மருந்து’ என்னும் தலைப்பில் தும்பை செடியின் சிறப்பை வலியுறுத்தி ஒரு கட்டுரையை அனுப்பியிருந்தேன். அது 07.11.1995 அன்றைய வேளாண்மணியில் . ‘தும்பை – அற்புத மருந்து’ என்னும் தலைப்பில் பிரசுரமும் ஆனது. அதன் பொறுப்பாசிரியர் கட்டுரையின் முதல் பாராவை எடிட் செய்து சில வரிகளை சேர்த்திருந்தார். இது எதேச்சையாக நடந்தது. வேண்டும் என்றே செய்வதற்கு எந்த முகாந்திரமும் இல்லை. அவர் எடிட் செய்தது கட்டுரை பிரசுரம் ஆகும்வரை எனக்குத் தெரியாது. ஒருவேளை அதன் பொறுப்பாசிரியர் என்னிடம் கேட்டிருக்கலாம்.

அந்தக் கட்டுரையை நான் இப்படி துவக்கியிருந்தேன்:


“வயல்வரப்புகளில், பாதையோரங்களில் எளிதாகக் கிடைக்கும் செடி தும்பைச் செடி. இதில் வெள்ளை நிறத்தில் கொத்து, கொத்தாய் பூக்கள் காணப்படும்…..”

ஆனால், எடிட்டிங்கில் அது இப்படி ஆகியிருந்தது:

“தும்பைப் பூ விநாயகர் பெருமானுக்கு உகந்த மலர் மட்டுமல்ல. விநாயகனே வெவ்வினையை வேரறுக்கவல்லான். விநாயகனே விண்ணுக்கும், மண்ணுக்கும் மருந்தாவான் என்பது ஒரு பக்திப் பனுவல். ஆனால், உண்மையிலேயே தும்பைச் செடி பல நோய்களுக்கு ஒரு அருமையான மருந்து…..”

இதற்கான பின்னூட்டமாய் வந்த நான் மறக்க முடியாமலிருக்கும் கடிதம் இதுதான். அதிர்ச்சியையும், அந்தக் காலகட்டத்தில் பெரும் சோகத்தையும் என்னுள் உருவாக்கிய கடிதம் அது.

ஆரம்பத்திலிருந்து நான் எழுதிய எனது எழுத்துக்கள் அனைத்துமே இதுவரையிலும் நான் பாதுகாத்து வருகிறேன். இவைதான் எனது சொத்து, சுகங்கள். இவற்றை அடுத்த தலைமுறைக்கு கொண்டு சேர்க்க வேண்டும். நூல்களாக வடிவம் பெற வேண்டும் என்ற விருப்பத்தால் இந்த சேகரிப்பு தொடர்கிறது. என்றைக்காவது ஒரு ராஜகுமாரன் வருவான் என்று காத்திருக்கும் ராஜகுமாரியின் நப்பாசையோடு நான் காத்திருக்கிறேன்.

இந்த கால கட்டத்தில், மணிச்சுடர் மற்றும் சமரசம் போன்ற இதழ்களில் அதிகளவில் பங்களித்துள்ளேன். மணிச்சுடர் சிராஜுல் மில்லத், மூதறிஞர் அப்துஸ் ஸமதின் பொறுப்பில்தான் இயங்கி வந்தது. அபாபீல், மழலைப்பிரியன் மற்றும் சின்னக்குயில் என்னும் புனைப் பெயர்களில் மணிச்சுடரில் நான் எழுதி வந்தேன். மற்ற பத்திரிகைகளில் எனது எழுத்துக்களைப் படித்து சகோதரர் தரமணி ரஸீல் மொய்தீன் மூலமாக என்னை நேரில் வரவழைத்து கட்டுரையாளர் பொறுப்பளித்தவர் மூதறிஞர் அப்துஸ் ஸமது சாஹெப்தான்.

எனது சிறுவயதில் சமய நல்லிணக்கத்துடனும், சமூக அக்கறையுடனும் நான் முதிர்ச்சியாக எழுதிய கட்டுரைகளைக் கண்டு, ‘அபாபீல்’ என்ற புனைப் பெயருக்கு உரியவர் அப்துஸ் ஸமது சாஹெப்தான் என்று ஆரம்பத்தில், சிலர் நினைத்தனர்.

இன்னும் சிலரோ, யாரோ வயதானவர் எழுதுவதாக கருதிவந்தனர்.

காலம் சென்ற நீடூர் சய்யித் சாஹெப் உட்பட இந்த கருத்துதான் கொண்டிருந்தனர்.

பிறகு அபாபீல் எழுத்துக்களுக்கு உரியவன், இந்த எளியவன்தான் என்று அறிந்து வியப்புற்றனர். பாராட்டினர்.

சமரசத்தில் பிற சமயங்களை சாடல் என்பது அறவே இல்லாதது.

இந்நிலையில்தான் தினமணி வேளாண்மணி கட்டுரைக்கு பின்னூட்டமாய் ஒரு மொட்டை கடிதம் வருகிறது இப்படி:


“இக்குவான் அமீர் என்றும் அப்பாபியல் என்றும், இன்னும் பலவிதமாக பெயர்களை வைத்துக் கொண்டு நடமாடித் திரியும் படாடோப வேஷதாரி, பல குரல் மன்னன், இரட்டை வேடதாரியை தமிழகம் நன்கறியும்.

இந்த இக்குவான் மணிச்சுடர் சமது சாகிபை ஒருபுறம் காக்காய் பிடித்துக் கொண்டு இந்துக்களை இழித்துரைத்து கட்டுரைகள் பல எழுதுவான். மறுபுறம், கோயங்காவின் கோமணத்தை நக்கிக் கொண்டு தினமணியில் தன்னை விளம்பரப்படுத்திக் கொண்டிருக்கின்றான்.

தினமணி 7.11.95 அன்று சிறப்புப் பகுதியில் அவன் நஜீஸைக் கக்கி இருக்கும் நாரலை சற்றே கவனித்துப் பாருங்கள். அவன் சார்ந்திருக்கும் ஜமாஅத்தே இஸ்லாமி இயக்கத்திற்கு இவனை ‘முர்த்தத்’ என்று அறிவிக்க தைரியம் உண்டா?

மணிச்சுடர் மௌலானாக்கள் மறையோனுக்கு … என்ன மறுமொழியை தயார் செய்து வைத்துக் கொண்டிருக்கிறார்கள்?

மீண்டும் அவனது கட்டுரைகள் முஸ்லிம்களின் பத்திரிகைகளில் வெளிவருமா? பொருத்திருந்து பார்ப்போம்….!”

- என்று எழுதி அதன் நகல்களை மணிச்சுடர், சமரசம், முஸ்லிம் முரசு மற்றும் தினமணி அலுவலகங்களுக்கு அனுப்பியிருந்தனர்.

மர்ஹீம் மூதறிஞர் அப்துஸ் ஸமது சாஹெப் அந்த மொட்டைக் கடிதத்தை அலட்சிப்படுத்திவிட்டார். முஸ்லிம் முரசு ஆசிரியரும் பொருட்படுத்தவில்லை. தினமணியின் ஆசிரியர் இராம.திரு.சம்பந்தம் மட்டும்தான் அதன் நகல் ஒன்றை என்னிடம் தந்துவிட்டு சிரித்துக் கொண்டே சென்றுவிட்டார்.

அழுக்கான அத்தகைய கடும் வாசகங்கள் எனக்கு புதிதானவை.

நெஞ்சமெல்லாம் கனக்க சமரசம் அலுவலகத்துக்கு சென்றேன். அதன் ஆசிரியர் சிராஜுல் ஹஸனை சந்தித்தேன். என் முக வாட்டத்தைக் கண்டு அவர் என்ன..? ஏது..? என்று விசாரிக்க எனது வலியை பகிர்ந்து கொண்டேன்.

அப்போது சிராஜுல் ஹஸன் சொன்ன அந்த ஒற்றை வரிகள் எனது வருத்தத்தை தூக்கி எறிய வைத்தது. இன்னும் பன்மடங்கு வேகத்தோடு என்னை பாய வைத்தது. அவர் சொன்னார்: “விடுங்க.. இக்வான்..! உங்களைப் பற்றி அவங்களுக்கு என்ன தெரியும்! விட்டுத்தள்ளுங்க..!”

அடுத்த கடிதம்:

24.08.2005 அன்றைய தினமணி தலையங்கப் பக்கதில் ‘உயர்த்தும் ஒரு சொல்!’ - என்னும் தலைப்பில் ஒரு கட்டுரையை எழுதியிருந்தேன். தொழில்துறை சம்பந்தப்பட்ட கட்டுரை அது. அப்போது நான் சென்னை அசோக் லேலண்ட் நிறுவனத்தில் பணியாளராக இருந்தேன்.


தினமணி கட்டுரையைப் படித்துவிட்டு இந்தியா முழுக்க ஆல்போல் தழைத்து வளர்ந்திருக்கும், ஆசியாவின் மிக பெரிய வாகன உற்பத்தி நிறுவனங்களில் ஒன்றின் நிர்வாக இயக்குனரான சேஷசாயி 26.08.2005 அன்று தன் கைப்பட ஒரு கடிதம் எழுதி எனக்கு அனுப்பியிருந்தார்.

இரத்தின சுருக்கமான அந்த கடிதம் இதுதான்:

அன்புக்குரிய இக்வான்,

உங்களுடைய ‘உயர்த்தும் ஒரு சொல்’ என்ற கட்டுரையைப் படித்தேன்.

நம் நிறுவனத்தின் குறிக்கோளையும், அதற்கான புதிய அணுகுமுறை பற்றியும் தெளிவாக எடுத்துச் சொல்லியிருக்கிறீர்கள்.

என்னுடைய வாழ்த்துக்கள்

உங்கள் அன்பான சேஷசாயி.

சேஷசாயி
திருக்குர்அன் சிறப்பளித்து விளிக்கும் ‘கைர உம்மத் – மேன்மை மிக்க சமுதாயத்தின்’ அருங்குணங்கள் பெற்றிருப்பவர் யார் என்பதை எனக்கு யோசிக்க வைத்த கடிதம் இது!

நீங்களும் யோசிக்க வேண்டும்!

இறைவன் நாடினால்.. அடுத்த வைகறை நினைவுகளில் ‘அந்த அழகிய ஒளிவிளக்கோடு’ எனது நினைவுகள்…

'''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''
வைகறை நினைவுகள் முந்தைய தொடர்களை வாசிக்க:
 
வைகறை நினைவுகள் பகுதி 1: கருணையாளனான இறைவன் அவரது பாவங்களை மன்னிப்பானாக:  - http://ikhwanameer.blogspot.in/2015/07/1.html
வைகறை நினைவுகள் பகுதி 2: இந்நேரம் புதைச்ச இடத்தில் புல் முளைச்சிருக்கும்: http://ikhwanameer.blogspot.in/2015/07/2.html
வைகறை நினைவுகள் பகுதி 3: நிழலாய் நின்ற அந்த இருவர்: http://ikhwanameer.blogspot.in/2015/07/3.html
வைகறை நினைவுகள் பகுதி 4: நீண்ட தேடல்களின் அந்த முடிவில்: http://ikhwanameer.blogspot.in/2015/07/4.html
வைகறை நினைவுகள் பகுதி 5: மறக்க முடியாத அந்த இரவு: http://ikhwanameer.blogspot.in/2015/07/5.html
வைகறை நினைவுகள் பகுதி 6: அதிபதியின் தர்பாரில் ஆஜரான ஓர் அடியான்: http://ikhwanameer.blogspot.in/2015/07/6.html
வைகறை நினைவுகள் பகுதி 7: சுமக்க முடியாத பாரத்தை சுமத்துவதில்லை: http://ikhwanameer.blogspot.in/2015/07/7.html
வைகறை நினைவுகள் பகுதி 8: யாகூப் மேமன் தண்டனை கூனி குறுகிப் போகிறேன் நான்: http://ikhwanameer.blogspot.in/2015/07/7_31.html
வைகறை நினைவுகள் பகுதி 9: இறைவனின் பிரதிநிதியா? குரங்கின் சந்ததியா?: http://ikhwanameer.blogspot.in/2015/08/9.html
வைகறை நினைவுகள் பகுதி 10: http://ikhwanameer.blogspot.in/2015/08/10.html
வைகறை நினைவுகள் பகுதி 11 : நான் தொலைந்து போனது இங்குதான் : http://ikhwanameer.blogspot.in/2015/08/11.html
வைகறை நினைவுகள் பகுதி 12: இதோ என் இப்ராஹீமா: http://ikhwanameer.blogspot.in/2015/08/11_14.html
வைகறை நினைவுகள் பகுதி 13: ஒரு கேள்விக்கு விடை தேடி நான்: http://ikhwanameer.blogspot.in/2015/08/13.html
வைகறை நினைவுகள் பகுதி 14, ஒரே டேக்கில் ஓகே: http://ikhwanameer.blogspot.in/2015/08/14.html
வைகறை நினைவுகள் பகுதி 15: வெளிச்சத்துக்கு வராத பாசங்கள்: http://ikhwanameer.blogspot.in/2015/08/15.html
வைகறை நினைவுகள் பகுதி 16 : கதைச் சொல்லியாய் மழலைப்பிரியன்: http://ikhwanameer.blogspot.in/2015/08/16.html
வைகறை நினைவுகள் பகுதி 17: பாகல் கொடி : http://ikhwanameer.blogspot.in/2015/08/17.html
வைகறை நினைவுகள் பகுதி 18: மறக்க முடியாத அந்த குட்டிச் சுவர்: http://ikhwanameer.blogspot.in/2015/09/18.html
வைகறை நினைவுகள் பகுதி 19: அந்த இருபது ரூபாய்: http://ikhwanameer.blogspot.in/2015/09/19.html

 


No comments:

Post a Comment