Wednesday, August 26, 2015

உடல் நலம்:தூதுவளை: ஒரு முட் செடியின் மகத்துவம்.


தூதுவளை இந்தியாவில் அனைத்து இடங்களிலும் பயிராகும் மூலிகை செடி வகைகளில் ஒன்றாகும். இதற்கு தூதுவளை, சிங்கவல்லி, அளர்க்கம் என்று பல பெயர்கள்உண்டு. இது தோட்ட வேலிகளில் வளரும் முட்கள் நிறைந்த ஒருவகை கொடியாகும். இதன் இலை, பூ, காய், வேர் அனைத்தும்மருத்துவப் பயன் கொண்டவை என்பது முக்கியமானது.
.
தூதுவளை இலையைப் பறித்து நன்கு சுத்தம் செய்து அதனுடன் மிளகு, சின்னவெங்காயம், பூண்டு சேர்த்து நன்கு வதக்கி துவையல் செய்து ஒரு மண்டலம் (48 நாட்கள்) சாப்பிட்டு வந்தால் உடலுக்கு வலு கொடுப்பதுடன் இருமல், இரைப்பு, சளி, வாத – பித்த நோய்கள் முதலியவை நீங்கும் என்கிறார்கள் இயற்கை மருத்துவர்கள்.

தூதுவளையை நிழலில் உலர்த்தி பொடியாக்கியும் அடைபோல செய்து சாப்பிட்டு வந்தால், உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தி கொடுக்கும். ஜீரண சக்தியைத் தூண்டும். குழந்தை பேறு குறைப்பாடுகளைப் போக்கும் என்கிறார்கள் மருத்துவர்கள்.

காது மந்தம், இருமல், நமைச்சல் பெருவயிறு மந்தம் மூக்கில் நீர் வடிதல், வாயில் அதிக நீர் சுரப்பு, பல் ஈறுகளில் நீர்சுரத்தல் போன்றவற்றிற்கு தூதுவளை கீரை சிறந்த மருந்தாகும். இதன் காய்களை சமைத்தோ அல்லது வற்றல், ஊறுகாய் போன்றும் சாப்பிட்டு வருவதும் நல்லது. பித்த நீர் அதிகரிப்பு, கண் நோய்கள் போன்றவை நீங்கும்.


தூதுவளைப் பூவை நிழலில் உலர்த்தி பொடியாக்கி பாலில் கலந்து அருந்தி வந்தால் உடலுக்கு வலு கொடுக்கும். இதன் பழத்தை வெயிலில் காயவைத்து பொடியாக்கி தேன் கலந்து சாப்பிட்டால் மார்புச்சளி, இருமல் போன்றவை நீங்கும். இது சிறந்த மலமிளக்கி. அதேபோல, பாம்பின் விஷ முறிவுக்கும் சிறந்த மூலிகை என்கிறார்கள் மருத்துவர்கள்.

இருபது கிராம் தூதுவளை இலையை நெய்யில் வதக்கி துவையலாகவோ, சட்னியாகவோ, பச்சடியாகவோ தயாரித்து காலை, மதியம், இரவு நேர உணவுடன் சேர்த்துச் சாப்பிட்டால் வந்தால் நல்ல பலனை காண முடியும். இப்படி வாரமிருமுறை சாப்பிட்டு வந்தால் நோய்த் தடுப்பாக மாறிவிடும் என்கிறார்கள் இயற்கை மருத்துவர்கள்.

தூதுவிளங்காய்களைச் சேகரித்து மோரில் ஊற வைத்து வற்றலாகக் காயவைத்து வைத்துக் கொண்டு பனி மற்றும் மழைக்காலங்களில், எண்ணெயில் பொரித்து ஆகாரத்தில் சேர்த்துக் கொண்டால் ஆஸ்துமா நோய் தணியும். நுரையீரல் வலுவடையும்.

தூதுவளை இலையைப் பொடி செய்து வைத்துக் கொண்டு பயன்படுத்தலாம். இது சளி, இருமலை நீக்கும். பசி உணர்வைத் தூண்டும்.  ஆஸ்துமா நோயாளிகளுக்கு இது நல்லது. இப்பொடியை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், நீரிழிவு கட்டுப்படும்.  இதனுடன் திப்பிலிப் பொடியை சமமாக சேர்த்து தேனில் குழைத்துச் சாப்பிட்டால், இருமல் உடனே நின்று விடும்.

தூதுவளையை அடிக்கடி பயன்படுத்தினால் புற்று நோய் வராமல் தடுக்கலாம் என்கிறார்கள் இயற்கை மருத்துவர்கள். தொண்டைப் புற்று, கருப்பை புற்று, வாய்ப்புற்று ஆகிய வற்றிற்கு தூதுவளை மருந்து மிக்க நல்ல பலன் தரும் என்கிறார்கள் அவர்கள்.


புகைப்பழக்கம், மதுப்பழக்கம் போன்றவற்றின் பின்விளைவுகளின் விபரீதம்தான் புற்றுநோயாகும். இந்நோயை ஆரம்ப நிலையில் கண்டுபிடித்துவிட்டால், தூதுவளை இலையைப் பயன்படுத்தி, சில மாதங்களில் முற்றிலும் குணமாக்கிவிடலாம் என்கிறார்கள் இயற்கை மருத்துவர்கள்.

தூதுவளையை ரசமாக்கியும் சாப்பிடலாம்.
 
>> தூதுவளை இலை - ஒரு கையளவு அதாவது சுமார் 50 இலைகள்.
>> மிளகு - 1 தேக்கரண்டி
>> சீரகம் - 1 தேக்கரண்டி
>> நல்லெண்ணெய் - 2 தேக்கரண்டி
>> பூண்டு -  6 பல்லு
>> பெருங்காயத்தூள் - கால் தேக்கரண்டி
>> புளி - பெரு நெல்லியளவு
>> கடுகு - தேவையான அளவு
>> கறிவேப்பிலை - ஒரு கொத்து
>> புதினா - ஒரு கொத்து
>> உப்பு - தேவையான அளவு
>> மிளகாய் வத்தல் - 4 பெரியது
>> கொத்த மல்லி - ஒரு கையளவு

செய்முறை:

வாணலி அல்லது பானில் ஒரு தேக்கரண்டி எண்ணையை லேசாக சுடவைத்து மிளகு, சீரகம், பூண்டு போட்டு தாளிக்கவும். பின்பு அதிலே தூதுவளை இலைகளைப் போட்டு நன்கு வதக்கிய பின் எடுத்து அரைத்து எடுத்துக் கொள்ளவும்.  புளியை தண்ணீரில் நன்றாக கரைத்து அதில் உப்பையும் ஏற்கனவே அரைத்துள்ளவற்றையும் போட்டு கரைத்துக் கொள்ளவும்.

பானில் எண்ணெய் விட்டு காயவைத்து கடுகு, கறிவேப்பிலை, மிளகாய் வற்றல் போட்டு நாலு வதக்கு வதக்கி கரைத்தவற்றை ஊற்றி கொதி வந்தவுடன் பெருங்காயம், புதினா போட்டு இன்னோரு கொதி கொதிக்க வைத்து கொத்தமல்லி போட்டு இறக்கி வைக்கவும் .

அதேபோல, தூதுவளை இலைகுழம்பு செய்தும் சாப்பிடலாம்.

தேவையான பொருட்கள்:
>> தூதுவளை இலை - 2 கப்
>> வாழைக்காய் - 1
>> பூண்டு - 5 பல்லு
>> வெங்காயம் - 1
>> பச்சை மிளகாய் - 1
>> தேங்காய்ப்பால் – கால் கப்
>> கடுகு - சிறிதளவு
>> வெந்தயம் - 1 ரீஸ்பூன்
>> எண்ணெய் – கால் லிட்டர்
>> மிளகாய்ப் பொடி - 2 தேக்கரண்டி
>> தனியா பொடி - 1 தேக்கரண்டி
>> மஞ்சள்பொடி - சிறிதளவு
>> உப்பு தேவைக்கு ஏற்ப
>> புளி – ஒரு சிறிய எலுமிச்சை அளவு

செய்முறை:

இலையை பாதியாக மடித்து வெளிப்புறத் தண்டை முள்ளுடன் கிழித்து எடுத்துவிடுங்கள் அல்லது கத்தரிக்கோல் உபயோகித்து வெட்டிக் கொள்ளவும்.

பின்பு இலையைக் கழுவி நன்றாக நீர் வடிய விட்டுவிடுங்கள்.
வாழைக்காயை சிறிய துண்டுகளாக வெட்டிக் கொள்ளுங்கள்.
வெங்காயம், பூண்டு, பச்சை மிளகாய் இவற்றை தனித்தனியாக வெட்டி வைத்துக் கொள்ளுங்கள்.

ஒன்றரைக் கப் நீரில் புளியைக் கரைத்து வையுங்கள்.
 
கொதிக்கும் எண்ணெயில்  வாழைக்காய் மற்றும் இலைகளைப் பொரித்துக் கொள்ளுங்கள்.

சிறிதளவு எண்ணையில் கடுகு, பூண்டு, வெங்காயம், பச்சை மிளகாய் என்ற வரிசையில்,  தாளித்து இறுதியாக வெந்தயம் சேர்த்து, புளிக் கரைசல் விடுங்கள்.

இத்துடன் மிளகாய்ப் பொடி, தனியாப் பொடி, மஞ்சள், உப்பு சேர்த்து வாழைக்காய் மற்றும் வதக்கிய தூதுவளை இலைகளையும் சேர்த்து கொதிக்க விடுங்கள்.

கொதிக்க ஆரம்பித்ததும், தேங்காய்ப் பால் விட்டு நன்றாக கொதித்ததும் இறக்கி வையுங்கள்.
 

 தூதுவளையைக் கடைந்தும் சாப்பிடலாம்.

தூதுவளைக் கீரை மிகவும் முள் நிறைந்தது. முதலில் அதில் உள்ள முட்களை நீக்கி நீரில் போட்டு கழுவி அதன் இலைகளை மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும்.

பிறகு அதில் சிறிதளவு நெய்விட்டு வதக்கிக் கொள்ள வேண்டும். அதனுடன் துவரம் பருப்பு அல்லது பாசி பருப்பு, வெங்காயம், பூண்டு, தக்காளி, பச்சை மிளகாய் சேர்த்து வேக வைத்து கடைந்து கொள்ளவும். பின்பு கடுகு, உளுத்தம் பருப்பு போட்டு தாளித்துக் கொள்ளவும்.

தூதுவளை துவையல் இப்படி செய்யலாம்.

சுத்தபடுத்திய கீரை, கடுகு, தோல் நீக்கிய முழு உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு, கொத்தமல்லி, கொத்தமல்லி தழை, இஞ்சி, பூண்டு, காய்ந்த மிளகாய், புளி, உப்பு அனைத்தையும் எண்ணையில் வதக்கி அரைத்து துவையல் செய்து சாப்பிடலாம்.

தூதுவளை தோசை:

>> பச்சரிசி 1 கப்,
>> புழுங்கல் அரிசி 1 கப்,
>> துவரம் பருப்பு, கடலைப்பருப்பு ஆகியவை ஒரு மேஜைக்கரண்டி அளவு,
>> தூதுவளை (இலைகள் மட்டும்) ஒரு கோப்பை அளவு,
>> பச்சை மிளகாய் அல்லது காய்ந்த மிளகாய் 6
>> உப்பு, எண்ணெய் ஆகியவை தேவைக்கு ஏற்ப எடுத்துக் கொள்ள வேண்டும்.

செய்முறை:

அரிசி பருப்பு வகைகளை ஒன்றாக ஒரு மணி நேரம் தண்ணீரில் ஊற வைக்கவும்.

இதனுடன், சுத்தம் செய்த கீரை, மிளகாய் சேர்த்து நன்றாக அரைத்தெடுத்து,  தேவையான அளவு உப்புடன் சேர்த்து கரைத்து 3 மணி நேரம் வைத்திருந்தால் அது புளித்துவிடும்.

சற்று கனமான தோசைகளாக ஊற்றி, சுற்றிலும் எண்ணெய் விட்டு திருப்பிப் போட்டு வேகவைத்து எடுங்கள்.

தேங்காய் சட்னி, கார சட்னி, பூண்டு சட்னி இவற்றோடு தூதுவளை தோசைகளைச் சாப்பிட சுவையாக இருக்கும்.

இறைவனின் படைப்பில் ஒரு முட்செடியின் மகத்துவம் இது.

No comments:

Post a Comment