Saturday, August 22, 2015

அழைப்பது நம் கடமை - 9 - அழைப்பாளர்களின் இலக்கு!


யூதர்களும், கிருத்துவர்களும் இறைவனின் திருச்  செய்தியை பின்பற்ற மறுத்தார்கள். அதை அடுத்தவர்க்கு எடுத்துரைக்கவும் மறந்தார்கள். இறைவனின் கோபத்துக்கு ஆளானார்கள். இவை படிப்பினை மிக்க முஸ்லிம் சமுதாயத்துக்கான வரலாறுகளாகும். இறைவனின் கோபத்திலிருந்து தப்பித்துக் கொள்ள இறைவனின் எச்சரிக்கையிலேயே அறிவுரையும் இருக்கிறது.

"நாம் இறக்கியருளிய தெளிவான அறிவுரைகளையும், வழிகாட்டுதல்களையும் அவற்றை மக்கள் அனைவருக்காகவும் நம் வேதத்தில் எடுத்துரைத்த பின்னரும், எவர் அவற்றை மறைக்கின்றாரோ, அவர்களை நிச்சயமாக அல்லாஹ் சபிக்கின்றான். மேலும், சபிப்போர் அனைவரும் அவர்களைச் சபிக்கிறார்கள். ஆனால், யார் (இந்தத் தவறிலிருந்து) திருந்தி தம் செயல்முறையை ஒழுங்குப்படுத்திக் கொண்டு (தாம் மறைத்திருந்தவற்றை) எடுத்துரைக்கின்றார்களோ, அவர்களை நான் மன்னிப்பேன். நான் பெரிதும் மன்னிப்பவனாகவும், கருணை புரிபவனாகவும் இருக்கின்றேன்!" - ( திருக்குர்ஆன் - 2:159,160)

மன்னிப்பதற்கு இறைவன் வைத்துள்ள நிபந்தனைகள் இவை:

  • இறைவனின் திருச்செய்தியை மற்றவர்களுக்கு எடுத்துரைக்காத கடமையை செய்யத் தவறியதற்காக பாவமன்னிப்புக் கோர வேண்டும். 
  • தங்களைச் சீர்த்திருத்திக் கொண்டு இறைவனின் திருப்பணியை தொடர வேண்டும்.

வெறும் கையளவு முஸ்லிம்கள் மக்காவில் இருந்த அந்தக் காலம்! அதுவும் விரல்விட்டு எண்ணிவிடக் கூடியவர்கள் அவர்கள். இவர்களைத் தவிர பெரும்பான்மையினராக இருந்தவர்கள் இறைமறுப்பு குறைஷியர்தான்!

இறைநம்பிக்கைக் கொண்ட சிறுபான்மை முஸ்லிம்கள் குறைஷிகளால் கடுமையாக துன்புறுத்தப்பட்டார்கள். எதிரிகள் இஸ்லாமிய இயக்கத்தினரை வேறோடு வேரடி மண்ணோடு கெல்லி எறிந்திட துடியாய் துடித்தார்கள். அதற்காக தங்களின் அனைத்து சக்தி சாமார்த்தியங்களையும் பயன்படுத்தினார்கள். ஆள் பலம், ஆயுத பலம் என்று அனைத்தையும் பிரயோகித்தார்கள்.

ஆனால், 14 நூற்றாண்டுகளுக்குப் பிறகு இஸ்லாமிய எதிரிகளின் முயற்சிகள் பலனளிக்கவில்லை என்பதை இன்று நாம் கண்ணாரப் பார்க்கின்றோம்.

அரபுலகையும் தாண்டி உலகின் மூலைமுடுக்கெல்லாம் இஸ்லாம் வாழும் நெறியாகத் திகழ்ந்து கொண்டிருக்கிறது. இன்று பல்லாயிரம் மைல்களுக்கு அப்பாலுள்ள இந்தியாவின் தழிழகம்வரை அந்த இஸ்லாமிய இயக்கம் பரவி ஆல்போல் தழைத்து வளர்ந்துள்ளது.

ஆபத்துகளிலும், பிரச்சினைகளிலுமே இஸ்லாம் என்ற விருட்சம் வேர் பிடித்து வானுயர வளர்ந்திருக்கிறது! 


வரலாற்றுக் கால பிர்அவ்ன் (பாரோ மன்னன்) மூஸா நபியையும் அவர்களைப் பின்பற்றிய முஸ்லிம்களையும் அழித்திட பயங்கரவாத்தை கட்டவிழ்த்துவிட்டான். இஸ்லாத்தை அழிக்க முடியாமல் கடைசியில் நீரில் மூழ்கி இறந்துபோனான்.

இறைத்தூதர்களின் தந்தையார் என்று அழைக்கப்படும் இப்ராஹீம் நபி (அலை) அவர்களின் காலத்து நம்ரூத் (நிம்ரூத்) மன்னனும் இத்தகைய சாயல் கொண்டவன்தான்! இந்தக் கொடுங்கோலனும் ஆள்பலம், மிருகத்தனமான ஆட்சிபலம் இவற்றைக் கொண்டு முஸ்லிம்களை நசுக்கிட முயன்றான். இஸ்லாத்தை அழிக்க முடியாமல் அழிந்து போனான்.

இதைத் தொடர்ந்து மங்கோலிய-தார்த்தாரியர்கள் மனிதத்தன்மையை ஆழக் குழித்தோண்டிப் புதைத்து முஸ்லிம்கள் மீது கட்டவிழ்த்துவிட்ட வன்முறைகள் வர்ணிக்க வார்த்தைகளே இல்லை. இவை வரலாற்றின் கருப்பேடுகள்!


ஆனால், இஸ்லாம் அந்த உக்கிரங்களையெல்லாம் தாண்டி வளர்ந்தது. இத்தனை இன்னல்களையம், இடுக்கண்களையும்  உள்வாங்கி முஸ்லிம்கள் நிலைகுலையாமல் நின்றார்கள். இந்தப் பொறுமை முஸ்லிம்களை அழிக்கவந்த கொடியவர்களைச் சிந்திக்க வைத்து பின்னாளில் அவர்களையும் இஸ்லாத்தின்பால் ஈர்த்தது. மிகச் சிறந்த மனித இன குணவான்களாகவும், மனித நேயம் மிக்கவர்களாகவும் மாற்றியது.

இப்படி எரிமலையின் தீக்குழம்பில் இஸ்லாம் பூத்து மலர்ந்துள்ளது. உலகெங்கும் மனித இனம் இருக்கும்வரை மணம் பரப்ப வல்லது!

இத்தகைய தொடரான கொள்கைப் போராட்டங்களிடையே இன்று முஸ்லிம் நாடுகளின் எண்ணிக்கை இஸ்லாமிய நாடுகளின் அமைப்புப் பட்டியலில் 57 ஆக உயர்ந்துள்ளது. உலக மக்கள் தொகையில் முஸ்லிம்களின் எண்ணிக்கை 1.4 பில்லியனுக்கும் அதிகம். உலகளவில் நான்கு பேரில் ஒருவர் முஸ்லிம்! இஸ்லாம் இன்று வெகு வேகமாக வளர்ந்து வரும் மார்க்கம்.

உதாரணத்துக்காக ...

ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான இங்கிலாந்தில் வெகுவேகமாக இஸ்லாம் வளர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது. இங்கு 2011 ஆம் ஆண்டில் நடத்தப்பட்ட  மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, 2001-2011 இடைப்பட்ட ஆண்டுகளில் 1.5 மில்லியனிலிருந்து 3 மில்லியனாக முஸ்லிம்களின் மக்கள் தொகை அதிகரித்துள்ளது.  இங்கிலாந்தின் பல நகரங்களில் முஸ்லிம்களின் மக்கள்  தொகை 50 விழுக்காட்டைத் தாண்டியுள்ளது. 'இலண்டன்', 'மான்செஸ்டர்' போன்ற பெருநகரங்களில் முஸ்லிம்களின் மக்கள் தொகை 14 விழுக்காடு! இவர்களில் யாரும் அந்நிய நாட்டிலிருந்து வந்து குடியேறியவர்கள் அல்ல. இங்கிலாந்தை தாயகமாகக் கொண்ட வெள்ளையர்கள்!


1994,1995-ஆம், ஆண்டுகளில் ஐ.நா-வால் வெளியிடப்பட்ட ஆய்வறிக்கையின்படி, ஆண்டுதோறும் 6.40 விழுக்காடு முஸ்லிம்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

1998-ஆம், ஆண்டுவரை உலக முஸ்லிம்களின் எண்ணிக்கை 167 கோடியே 84 லட்சத்து 42 ஆயிரம்!

உலகின் இரண்டாவது மிகப் பெரிய சமயம் இஸ்லாம்.

அரபு நாடுகளைச் சேர்ந்தவர்கள் பிற நாடுகளுக்குச் சென்று குடியேறியதால் பரவிய இனமா முஸ்லிம்கள்? அப்படியானால்... உலகின் பிற நாடுகளைச் சேர்ந்த முஸ்லிம்கள் அரபிகளா? இல்லை!

உண்மையில், வரலாற்றின்படி உலக முஸ்லிம்கள் எல்லாம் அந்தந்தப் பகுதியைச் சேர்ந்த மண்ணின் மைந்தர்கள். அவர்கள் எல்லாம் இஸ்லாத்தின் உயரிய கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு இஸ்லாத்தை வாழ்வியல் நெறியாக ஏற்றுக் கொண்டவர்கள். இஸ்லாத்தின் தூதை சிரமேற்கொண்டு நடைமுறைப்படுத்தியவர்கள். தங்களின் உயரிய பண்புகளாலும், கொள்கையாலும் மற்றவர்களையும் ஈர்த்தவர்கள். செயல்முறையில் அழைப்பு விடுத்தவர்கள். அதேபோல, சொல்லாலும், இஸ்லாத்தின் பலவேறு கூறுகளை விளக்கி இறைவனின் திருத்தூதை சமர்பித்தவர்கள். இந்த மூதாதையர்களின் தொடர் பணிகளால்.. மாபெரும் அர்ப்பணிப்புகளால்.. அனைத்தையும் இழந்த வாழ்வியல் போராட்டங்களால்.. நமக்கு கிடைத்த அரிய பொக்கிஷம்தான் இஸ்லாம்! இம்மை - மறுமை ஈருலகின் வெற்றிக்கான அருள்நெறி!


அழைப்புப் பணியின் நோக்கமே இறைவனின் திருப்பொருத்ததிற்கு ஆளாவதுதான். அத்தோடு நல்ல முஸ்லிம் என்று நடைமுறைப்படுத்துவதும்கூட!

நபிகளார் நவில்கிறார்கள்:

:"செயல்கள் அனைத்தின் விளைவுகளும் எண்ணங்களைப் பொறுத்தே அமைகின்றன. மனிதன் எதை எண்ணுகின்றானோ, அதற்குரிய பலன்தான் அவனுக்குக் கிட்டும்!" (புகாரி, முஸ்லிம்)

இறைவனின் திருப்பொருத்தத்தை சம்பாதிப்பதே அழைப்பாளர்களின் தலையாயப் பணியாகும். அழைப்புப்பணிக்குப் பின் பொதிந்துள்ள நோக்கமும் இதுதான்.

அழைப்பாளன் இந்த இலக்கை அடைவதில் கண்ணும்-கருத்துமாக இருக்க வேண்டும். இதன் மூலமே, அவன் சமூகத்திலும்... சூழல்களிலும் வெல்ல முடியும்!

-- இறைவன் நாடினால்.. அழைப்பது தொடரும்.

'''''''''''''''''''''''''''''''''''''''''''''''
அழைப்பது நம் கடமை: முந்தைய தொடர்களை வாசிக்க:
''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''

1. அந்தக் கடலோரக் கிராமத்தின் கதை : http://ikhwanameer.blogspot.in/2015/07/1_23.html

2. கிராமவாசியின் செயலும், நபிகளாரின் அணுகுமுறையும் : http://ikhwanameer.blogspot.in/2015/07/blog-post_49.html

3. படிப்பினை மிக்க அந்த இறைத்தூதரின் வரலாறு : http://ikhwanameer.blogspot.in/2015/08/3.html

4. அழைக்க வேண்டும் ஏன்? : http://ikhwanameer.blogspot.in/2015/08/4.html

5. சகல லோகங்களின் இறைவன் : http://ikhwanameer.blogspot.in/2015/08/5.html

6. சான்று வழங்குதல் என்றால் என்ன? http://ikhwanameer.blogspot.in/2015/08/6_14.html

7. கடல் பிளந்தது. நெருப்பு குளிர்ந்தது : http://ikhwanameer.blogspot.in/2015/08/13_18.html

8. அந்த நாள் வரும்முன் : http://ikhwanameer.blogspot.in/2015/08/8.html

No comments:

Post a Comment