Sunday, August 2, 2015

வைகறை நினைவுகள்: 9: இறைவனின் பிரதிநிதியா? குரங்கின் சந்ததியா?80-களின் பிற்பகுதி அது. 

ஆண்டு சரியாக நினைவில்லை!

அசோக் லேலணட் சங்க தேர்தல்களில் ஆர்.கே. என்று சுருக்கமாக அழைக்கப்படும் அன்றைய தொழிற்சங்க பிதாமகனான குசேலரை எதிர்த்து, சிஐடியு சார்பில் பெருந்தலைவர் தோழர் வி.பி.சிந்தன் நிறுத்தப்பட்டிருந்தார்.

மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் தொழிற்சங்க பிரிவுதான் சிஐடியு என்பது.

அதி தீவிரமாக இடதுசாரி இயக்கத்தில் என்னை குடும்பத்துடன் அர்ப்பணித்துக் கொண்டிருந்த நேரமது. பயம் என்பதே அறவே அற்ற மனப்பான்மை. சுரண்டலை எதிர்த்து இரத்த நாளமெல்லாம் புடைத்திருந்த காலம்.

சுயநலவாதிகள்தான் பயப்படுவார்கள். பொதுநலவாதி, பிறருக்காக உழைப்பவன் அவர்களின் நலன் நாடுபவன் அச்சப்பட வேண்டிய அவசியம் என்னதான் இருக்கிறது? இழப்பதற்கு ஒன்றுமில்லை; அடிமைச் சங்கிலியைத் தவிர! அச்ச உணர்வை, துச்சமாக கருதிதான் ஒவ்வொரு போராளியும் களத்துக்கு வருகிறான்.

நான் ஒரு ஓவியன் என்பது உங்களுக்குத் தெரியுமா? உங்களைப் பார்த்துக் கொண்டே கோட்டோவியங்களால் என்னால் இப்பவும் படம் வரைந்திட முடியும்.


பள்ளி நாட்களில், பிற மாணவர்களுக்கான புத்தகங்களை பைண்டிங் செய்து கொடுத்து அதில் கிடைக்கும் பணத்தில் தூரிகை, ஆயில் பெயிண்டிங் போன்ற ஓவியருக்கான விலை மதிப்பான சாதனங்களை திரட்டி வைத்திருந்தேன் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்.

ஓவியம் கற்றுக் கொள்ள அப்போது சென்னை, சிந்தாதரிப்பேட்டையில் பிரபலமாக இயங்கிவந்த (‘சந்துனுவின் சித்திர வித்யாலயம்’) அந்த அஞ்சல்வழி ஓவியப் பள்ளியில் சிலகாலம் சேர்ந்து பயின்றிருக்கிறேன்.

குறிப்பாக கேலிசித்திரங்களை வரைவதில் எனக்கு அலாதியான விருப்பம். இன்னும் எனது http://mrpamaran.com/ இணையத்தில் கேலிசித்திரம், கருத்துப்படங்களுக்கான ஒரு பகுதி உள்ளது குறிப்பிடத்தக்கது. உலகின் தலைச்சிறந்த கேலி சித்திரக்காரர்களின் படங்களை அதில் இடம் பெறச் செய்கிறேன்.

அசோக் லேலண்ட் நிறுவனத்தில் நடக்கவிருக்கும் தொழிற்சங்க தேர்தலுக்கு எனது பங்காக கார்டூன்களை வரைவது என்று தீர்மானமானது. ஏனென்றால் பிரச்னைகளை மையப்படுத்தி ஆர்.கேயையும், அவர்களது சீடர்களையும் பல்வேறு தளங்களில் கிண்டலடித்து கேலி சித்திரங்களை தீட்டி நிறுவனத்தின் பல இடங்களில் ஒட்டிக் கொண்டிருந்தவன் நான். நிறுவனத்தில் சலசலப்பை ஏற்படுத்திக் கொண்டிருந்தவன் இந்த அடியேன்!

சங்க தேர்தல்கள் நடைபெற ஓரிரு நாட்களே இருந்த நிலையில், திடீர் என்று தவிர்க்க முடியாத சொந்த காரணங்களால் நான் பேரணாம்பேட் வரை செல்ல வேண்டிவந்தது.

எனக்கும் சங்கடம், தோழர்களுக்கும் சங்கடம்.

நான் ஊருக்கு விடுப்பில் புறப்பட இருந்த நேரத்தில், “தோழர்களே! நாம் கண்டிப்பாக கார்டுன்களை ஒட்டுகிறோம்! கவலை வேண்டாம்! அந்த பொறுப்பு என்னுடையது!” – என்று உறுதி அளித்துவிட்டு புறப்பட்டேன்.

இங்கிருந்து போகும்போதே, டிராயிங் சார்ட், பேனா, பென்சில்கள் என்று ஓவியம் வரைவதற்கான அத்தனை சாதனங்களையும் கொண்டு சென்றிருந்தேன்.

 

பேரணாம்பேட்டில் ஒரு லாட்ஜில் தங்கி, நான் சென்ற வேலைகளை கவனிக்க வேண்டி இருந்தது. அன்றைய இரவை கேலி சித்திரங்களை வரைவதற்காக ஒதுக்கி வைத்திருந்தேன். ஓரிரு நாட்களில் தொழிற்சங்க தேர்தல்கள் என்ற நிலை.

சாப்பிட்டு முடித்துவிட்டு, இரவில், தரையில் சார்ட்டுகளை பரப்பி படம் வரைந்து கொண்டிருந்த வேளையில், திடீரென்று மின்சாரம் துண்டித்துப் போனது. எங்கும் கும்மிருட்டு. மின்சாரம் திரும்பவும் வரும் வாய்ப்பில்லை என்று தகவலும் வந்தது. அந்த சிக்கலிலிருந்து விடுபட கலங்கிக் கொண்டிராமல் உடனே மெழுகுவர்த்திகளை வரவழைத்தேன். அவற்றின் வெளிச்சத்தில் அன்று இரவு முழுக்க விழித்திருந்து, விடிய விடிய ஒரு டஜனுக்கும் மேலான கேலி சித்திரங்களை வரைந்து முடித்துவிட்டேன்.

அடுத்த நாள் சென்னை வந்தடைந்ததும் முதல் வேலையாக நிறுவனத்துக்குச் சென்றேன். பள்ளிகளில் பயன்படுத்தும் கரும்பலகைகளைப் போல ஏற்கனவே தோழர்கள் தயாரித்து வைத்திருந்த மரப்பலகைகளில் கார்ட்டுன்களை ஒட்டினேன். அவற்றை பிரதான கேட்டுக்கு அருகே பணியாளர்கள் அனைவர் கண்ணிலும் படும் விதமாக வரிசையாக ஒரு கார்ட்டூன் அரங்கைப் போல நிறுத்தி முடிக்கும்வரை நான் ஓயவில்லை.


எனக்குத் தெரிந்து அசோக் லேலண்ட் தொழிற்சங்க வரலாற்றில் நான் விருப்ப ஓய்வு பெற்ற 2013-ம், ஆண்டுவரை இப்படி யாரும் செய்ததில்லை. இனியும் செய்ய முடியாத அளவு நிறுவனத்தில் மாற்றங்கள் நிகழ்ந்துவிட்டுள்ளன.

இப்படி, இத்தகைய போராட்டங்களில் இருந்த நான் என்னை விடுவித்துக் கொண்டு அதாவது காரல் மார்க்ஸ் என்னும் தாடிக்காரரின் பாசறையிலிருந்து விலகி, நபிகளாரின் புரட்சிப் பாசறைக்குள் நுழைந்தேன்.

‘மூலதனத்தி’லிருந்து, நான் ‘திருக்குர்ஆனு’க்கு திரும்பியது இப்படிதான்!

கம்யூனிஸத்துக்கு எதிராக சித்தாந்த ரீதியாக நிறைய விமர்சனங்களை என்னால் வைக்க முடியும் என்றாலும் என்னை உருவாக்கியவர்களை இன்றும் எனது நண்பர்களாக நல்ல மனிதர்களாக, எனது இக்கட்டான நேரங்களின் ஆலோசகர்களாகவே நன்றியுடன் நினைவு கூர்கிறேன். மனிதர்களின் நலன்களுக்காக பாடுபடும் ஒரு குழுவினராகவே சிந்தாந்தங்களைக் கடந்து அவர்களின் மீது அன்பு செலுத்துகிறேன்.

ஒரு கட்டத்தில் இந்த பாசறை மாறிய நிலையில்கூட தீக்கதிரின் குழந்தைகள் பூங்காவில் ஏராளமான சிறுவர் இலக்கியங்களை ‘மழலைப்பிரியன்’ என்னும் பெயரில் படைத்துள்ளேன். முற்போக்கு எழுத்தாளர் சங்கத்திலும் பங்கு கொண்டிருக்கிறேன்.

அதேபோல, நானே வலியச் சென்று இடதுசாரிகளின் பல்வேறு அரசியல் நிகழ்வுகளை பதிவும் செய்கிறேன். அவற்றை ஆவணங்களாக்கி யுடியூபின் எனது ‘விழிகள்’ பகுதியில் பதிவேற்றமும் செய்கிறேன். (https://www.youtube.com/channel/UCzPPNS7B6m5ydvB98g8xNlQ)

இந்த முதிர்ச்சியும், அணுசரணையும் இஸ்லாத்தின் எந்த கொள்கையையும் முன் வைத்து என் தோழர்களிடம் விவாதம் புரியவும் முடியும். புரிந்தும் இருக்கிறேன்.

எனது கொள்கை ரீதியான பாசறை மாற்றத்துக்கு பல காரணங்கள் இருந்தாலும், நான் இறைவனின் பிரதிநிதியாகதான் இருக்க விரும்புகின்றேன். குரங்கின் சந்ததியாக அல்ல.

‘எந்தப் புள்ளியில் கம்யூனிஸத்தின் போதாமையை உணர ஆரம்பித்தீர்கள்?’ - என்பதை நினைவுகளில் பகிர்ந்து கொண்டால் சிறப்பாக இருக்கும் என்று நினைப்போர்க்கு இதுவே எனது சுருக்கமான பதில். அதிலும் குறிப்பாக இந்தக் கேள்வியை எழுப்பிய சகோதரர் Yasar Araft-க்கு இதுதான் எனது பதில்!

இறைவன் நாடினால், அடுத்து வைகறையில் நினைவுகள் தொடரும்.

இதற்கு முந்தைய நினைவுகளை பகிர்ந்து கொள்ள இணைப்புகள்:
 
வைகறை நினைவுகள் பகுதி 1: கருணையாளனான இறைவன் அவரது பாவங்களை மன்னிப்பானாக:  - http://ikhwanameer.blogspot.in/2015/07/1.html
 
வைகறை நினைவுகள் பகுதி 2: இந்நேரம் புதைச்ச இடத்தில் புல் முளைச்சிருக்கும்: http://ikhwanameer.blogspot.in/2015/07/2.html
 
வைகறை நினைவுகள் பகுதி 3: நிழலாய் நின்ற அந்த இருவர்: http://ikhwanameer.blogspot.in/2015/07/3.html
 
வைகறை நினைவுகள் பகுதி 4: நீண்ட தேடல்களின் அந்த முடிவில்: http://ikhwanameer.blogspot.in/2015/07/4.html
 
வைகறை நினைவுகள் பகுதி 5: மறக்க முடியாத அந்த இரவு: http://ikhwanameer.blogspot.in/2015/07/5.html
 
வைகறை நினைவுகள் பகுதி 6: அதிபதியின் தர்பாரில் ஆஜரான ஓர் அடியான்: http://ikhwanameer.blogspot.in/2015/07/6.html
 
வைகறை நினைவுகள் பகுதி 7: சுமக்க முடியாத பாரத்தை சுமத்துவதில்லை: http://ikhwanameer.blogspot.in/2015/07/7.html
 
வைகறை நினைவுகள் பகுதி 8: யாகூப் மேமன் தண்டனை கூனி குறுகிப் போகிறேன் நான்: http://ikhwanameer.blogspot.in/2015/07/7_31.html

No comments:

Post a Comment