Wednesday, August 12, 2015

லென்ஸ் கண்ணாலே – 006. என்கவுண்டர் செய்யாதீர்கள்!எட்வர்ட் மைக்கேல் பீர் கிரில்ஸ். பிரிட்டீஷ் சிறப்பு விமானப் படையின் முன்னாள் படை வீரர். எவரெஸ்ட் சிகரம் தொட்டவர். கராத்தேயில் கருப்புப்பட்டை வாங்கியவர். ஒருமுறை தென்னாப்பிரிக்காவில் பாராசூட்டிலிருந்து குதிக்கும்போது, முதுகுதண்டில் மூன்று இடங்களில் கடும் எலும்பு முறிவுக்கு ஆளானவர். ஜுன் 2005-ல், வெப்பகாற்று பலூனில் பறந்தவாறு அதன் கீழ் தொங்கிக் கொண்டிருந்த மேசையில் விருந்தினர்க்கு விருந்து படைத்து உலக சாதனைப் படைத்த சாகஸகாரர்.

இப்படி பல்வேறு சாகஸங்கள் படைத்த சாதனை வீரர் எட்வர்ட் மைக்கேல் பீர் கிரில்ஸ் யார் என்று தெரியுமா? Man vs. Wild (2006), The Island with Bear Grylls (2014) மற்றும் Bear Grylls: Surviving the Island (2014) போன்ற டிஸ்கவரி சானலின் புகழ் பெற்ற தயாரிப்பாளர் மற்றும் நடிகர்.

எட்வர்ட் மைக்கேல் பீர் கிரில்ஸ் டிஸ்கவரி சானலில் சாகஸங்கள் செய்வது ஒருபுறம் இருக்கட்டும். அதற்கு எல்லாவிதத்திலும் திறனாளர் அவர்! ஆனால், அவரது சாதனைகளைப் படம் பிடிக்க காமிராவுடன் அவரைத் தொடர்கிறாரே காமிரா மேன் அவர் எப்படிப்பட்ட திறமையாளராக இருப்பார் என்பதை சிந்தித்துப் பாருங்கள்.

எட்வர்ட் மைக்கேல் பீர் கிரில்ஸ்
துணிச்சல், அர்ப்பணிப்பு. ஈடுபாடு இல்லாமல் நீங்கள் சிறந்த புகைப்படக்காரராக இருக்க முடியாது என்பது நினைவிருக்கட்டும்.

ஒருமுறை எண்ணூர் அனல் மின்நிலையத்தின் கழிவுகள் கடலில் கொட்ட கட்டப்பட்டிருக்கும் பாலத்தின் மீது ஏறி படம் பிடிக்க வேண்டும் என்று தீர்மானித்தேன். கூட பயிற்சி அளிக்க புதுக்கல்லூரியில் அப்போது பயின்று வந்த எனது மாணவன் மெஹர் அலியை அழைத்துக் கொண்டேன். முதல் முறையாக அவன் என்னோடு வருகின்றான்.

குறிப்பிட்ட இடம் சென்று பார்த்த எனக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது

சுமார் 10 ஆண்டுகளுக்கு மேலிருக்கும் அந்த இடத்துக்கு சென்று!

முப்பது அடி உயரமும், சுமார் 200 மீட்டர் நீளமும் கொண்ட அந்த பாலத்தின் மீது ஏறிச் செல்ல ஏணி ஒன்று இருந்தது தெரியும். ஆனால் உப்புக் காற்று அரித்து ஏற முடியாதவாறு ஏணி சிதைந்திருந்தது. பக்கத்தில் வசித்து வந்த மீனவ கிராமத்தினர் பாலத்தின் மீதிருந்து கைத்தூண்டில்களால் மீன் பிடிக்க வசதியாக அவர்களாகவே தடிமனான இரு கயிறுகளைக் கட்டித் தொங்க விட்டிருந்தார்கள். கயிற்றைப் பற்றிப் பிடித்து எட்வர்ட்டை போன்ற ஒரு சாகஸம் செய்தால்தான் மேலே ஏற முடியும் என்ற நிலை. கடலரிப்பைத் தடுக்க சுற்றியும் பாறைகளை கொட்டியிருந்தார்கள்.


மெஹர் அலி என்னைப் பார்க்க, நானும் பார்த்திடலாம் ஒரு கை என்று பார்வையாலேயே சொன்னேன்.

கடலோரம் பாறைகள் நிறைந்த அத்தகைய இடங்களில் பாறைகள் பாசிப்பிடித்து வழுக்கும். கொஞ்சம் கடல் மண்ணைக் அவற்றின் மீது கொட்டி எச்சரிக்கையாக பிடிமானத்துடன் நடக்க வேண்டும்.

நான் எச்சரிக்கை செய்வதற்குள் இளங்கன்று பயமறியாது என்பது போல, மெஹர் அலி ஒரு எகிரு எகிறி கயிற்றருகே செல்ல முயல பாறை சறுக்கிவிட சறுக்கு மரம் போல கடலுக்குள் செல்ல ஆரம்பித்தான். நல்லவேளை சமயோசிதமாக செயல்பட்ட நான், சருக்கி விழுந்த அவனது கையைப் பற்றிப் பிடித்து இழுத்து கரைச் சேர்த்தேன்.


கடைசியில், சிராய்ப்பு ரத்த காயங்களுடன் கயிற்றில் தொங்கி சாகஸம் செய்தவாறு பாலத்தில் ஏறி படங்கள் (படங்கள்) பிடித்தோம். என்னிடம் டிஜிட்டல் காமிரா இல்லாத நேரம் அது. கையில் இருந்தது ‘பானாசோனிக் ஹாண்டி காம்’, எனது சாம்சங் காலக்ஸி எஸ்-2 செல்போன் மட்டுமே!

படம் எடுக்கும்போது, காமிராவை கிளிக் செய்யும்போது, கை நடுக்கம் கூடாது. அதற்கு ஏற்றாற் போல காமிராவை பிடிக்க ஆரம்பத்திலேயே பழக்கப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று ஏற்கனவே உங்களுக்கு சொல்லியிருக்கிறேன்.

அடுத்தது, எதனைப் படம் எடுக்க வேண்டுமோ அதற்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுத்து ஃபோகஸ் செய்ய வேண்டும் என்றும் தெரிவித்தேன். தேவையில்லாமல் பெரிய சுவரோ, புல்வெளியோ, வானமோ, மண் வெளியோ மரம் செடியோ படத்தை ஆக்கிரமித்து விடாதபடி பார்த்துக் கொள்ளும்படியும் சொன்னேன்.

சட்டையணியா சாமியப்பன் மற்றும் நம்மாழ்வார் பசுமைக்கரங்கள் ஆர்வலர்கள்
நீங்கள் எவரைப் படம் எடுக்க விரும்புகின்றீர்களோ அவரை, உங்கள் அம்மாவை, அப்பாவை, அன்பான கணவரை, மனைவி மக்களை மையமாகக் கொண்டு அவர்கள்தான் படத்தின் முக்கியமானவர்கள் என்று கருதி படம் எடுங்கள்.

சரி ரமளான் பெருநாள் சந்திப்புகளில் குடும்பமாக வரும் உற்றார், உறவினர் நண்பர்களை படம் எடுப்பது எப்படி?

“இதென்ன பெரிய விஷயம்? அவர்களை அப்படியே சுவற்றருகே வரிசையாக நிற்க வைத்து படம் எடுத்துவிட்டால் போச்சு!”

தயவுசெய்து, அப்படி செய்துவிடாதீர்கள். இத்தகைய செயல் ஏறக்குறைய என்கவுண்டருக்கு ஒப்பானது. ‘சுட்டுத்தள்ளுதல்’ என்றும் அழைக்கலாம். அதனால்தான், தயவுசெய்து சுட்டுவிடாதீர்கள் என்கிறேன்.

பிறகு எப்படி எடுப்பது என்கிறீர்களா?

காஷீவலாக எதார்த்தமாக படம் பிடியுங்கள்
அவர்களை காஷீவலாக எதார்த்தமாக படம் பிடியுங்கள். சைக்கிள் ஓட்டும்போது, உஞ்சலாடும்போது, மரம் ஏறி மாங்காய் பறிக்கும்போது, குளத்தில் நீச்சல் அடிக்கும்போது, மருதாணி தடவிக்கொள்ளும்போது  என்று யதார்த்தமாக எடுத்துப் பாருங்கள்! சிலுவையில் அறையாத அந்தப் படங்கள் ஜீவனுள்ளவையாக இருக்கும். மனதில் மகிழ்ச்சி கொப்பளிக்கும்.

அதைவிட்டு வரிசையாக நிற்க வைத்து, “காமிராவைப் பாருங்கள்… ஸ்மைல் பிளீஸ்!” - என்று வற்புறுத்தி அவர்களை கட்டாயமாக இளிக்க வைத்து.. படம் எடுப்பதை தவிர்த்துக் கொள்ளுங்கள்.

ஒருவேளை சில நினைவுகளுக்காக சிலரை கூட்டமாக நிற்க வைத்து படம் எடுக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டதென்றால்… எத்தனைப் பேரை நிற்க வைக்க வேண்டும். இடுப்பளவு படமா? முழு படமா என்று ஏற்கனவே தீர்மானித்துக் கொள்ளுங்கள். ஆனால், படத்தில் நிற்பவர்களைக் கணுக்கால்களுக்குக் கீழாக வெட்டி விடாதீர்கள். இது இயற்கையாக இராது.

அதேபோல, சாய்ந்தவாறு படம் எடுக்க வேண்டும் என்ற சூழல்களில் தவிர காமிராவை சாய்த்து படம் எடுக்காதீர்கள். உயரமான மரங்கள், கட்டிடங்கள், குளோசப்பாக எடுக்க வேண்டிய மனிதர்கள் என்ற நிலைகளில் தவிர மற்ற நேரங்களில் ஒருகாலும் காமிராவை திருப்பாதீர்கள்.

பாக்கு மரத்தோப்பில் ஊடுபயிராக மிளகு
அடுத்தது தொழில்முறை போட்டோகிராபர்கள் ‘Rule of Thirds’ முப்பிரிவுகள் விதி என்றொரு விதிமுறையை வலியுறுத்துகிறார்கள். இப்படி எடுக்கும் படங்கள் சிறப்புக்குரியவையாக இருக்கும் என்பது அவர்கள் கருத்து.

அதாவது படத்தை 2 நேர்கோடுகள், 2 படுக்கைவசக் கோடுகள் என்று 9 பகுதிகளாக பிரித்துக் கொள்வது. படமெடுக்கும்போது முக்கியமாக கருதும் பகுதிகளை இந்தக் கட்டங்களில் அடுக்குவதுதான் இந்த விதியின் நோக்கம்.

இன்றைய ‘காமிராவில் கலைவண்ணம்’ பகுதியின் இறுதியாக சில பின்னூட்டங்களாக வந்த கேள்விகளைப் பார்க்கலாம்:

•    சகோதரர் Abzal Sulthan தனது நோக்கியா N70-ல் எடுத்த மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்தின் பின்னணி காட்சிகள் கொண்ட படத்துக்கு கருத்து கேட்டிருந்தார்.

•    ஏற்கனவே முந்தைய அத்தியாயங்களில் இது சம்பந்தமாக தெளிவாக விளக்கப்பட்டுள்ளது. எந்த சாதனங்கள் எதற்காக உள்ளனவோ அந்த சாதனங்களை அதற்காக மட்டுமே பிரதானமாக பயன்படுத்த வேண்டும். மற்றைய வசதிகள் எல்லாம் உபரிதான்!

‘’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’
•    சகோதரி நளீரா உஸ்மான், Naleera Uduman, “மொபைலில் படம் எடுக்கும்போது, வெளிச்சம் கூட்ட முடியுமா? என்கிறார்.

•    தானியங்கி செட்டிங் உள்ள மொபைல் மற்றும் டிஜிட்டல் காமிராக்களில் படம் பிடிக்கும்போது, சுற்றுச் சூழல்களில் உள்ள பெரும்பான்மை நிறங்களையே தேர்வு செய்து படம் பிடிக்கும் அல்லது பிளாஷை தானியங்கியாக இயக்கும். படம் பிடித்து முடித்ததும் எடிட்டிங்கில் வெளிச்சத்தை சரி செய்து கொள்ள முடியும்.

‘’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’
•    சகோதரி உம்மு உமர் Zoom செய்யும்போது, தானியங்கி காமிரா ஒன்று முன்னிருக்கும் பொருளையோ அல்லது பின்னால் இருக்கும் காட்சிகளையோ ஃபோகஸ் செய்கிறது. என்ன செய்வது? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.  (இதை விளக்க இரு படங்களை இணைத்துள்ளேன்). அடுத்தது தான் எடுத்த ஒரு வண்ணத்துப் பூச்சியின் படத்துக்கு கருத்து கேட்டுள்ளார்.

போகஸ் (மேலே உள்ள படம்)

அவுட் ஆஃப் போகஸ்
•    தானியங்கி காமிரா என்பது முழுவதும் ஆட்டோ செட்டிங் மோடைக் குறிப்பிடுகிறாரா அல்லது ஆட்டோ ஃபோகஸ் செட்டிங்கை சொல்கிறரா என்று தெரியவில்லை. Zoom ஃபோகஸின் போது ஃபோகஸ் புள்ளி எதை மையப்படுத்துகிறதோ அதை தேர்வு செய்து கொள்ளும். தானியங்கி காமிராவில் இதுவே சற்று நேரமெடுத்து தேர்வு செய்யும். அதேபோல, வண்ணத்துப்பூச்சியின் படம் நல்ல படம் என்பதில் சந்தேகமில்லை.

அழகான முறையில் வண்ணத்தி பூச்சிகளை படம் பிடியுங்கள்


ஆனால், பக்கவாட்டில் எடுத்திருப்பதால்தான் இந்த குறைப்பாடு. அவர் எப்படி எடுத்திருக்க வேண்டும் என்று அண்டை வீட்டு கறிவேப்பிலை மரத்தில் பூக்களை மொய்த்துக் கொண்டு பறந்த வண்ணத்துப் பூச்சியையும், எருக்கன் பூக்களின் தேன் உறிஞ்சிக் கொண்டிருந்த வண்ணத்துப் பூச்சியின் படத்தையும் இணைத்துள்ளேன்.

‘’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’
கடைசியாக,

•    சகோதரர் Mohamed Faisel, Oothy-ல், எடுத்த படத்துக்கு அபிப்ராயம் கேட்டிருக்கிறார்.

•    நல்ல படம். ஆனால், எந்த காமிராவில் எடுத்தார்? எடுத்த கால நேரம் விவரத்தை தெரிவித்தால் விளக்கமாக கருத்துக் கூற ஏதுவாக இருக்கும்.

‘’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’
நன்றி சகோதர, சகோதரிகளே! நண்பர்களே! இறைவன் நாடினால் மீண்டும், காமிராவில் கலைவண்ணம் பகுதியில் சந்திப்போம்.

''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''
முந்தைய தொடர்களை வாசிக்க:
'''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''
1. அனுபவங்களின் பகிர்வன்றி.. அறிவின் ஊற்றல்ல - http://ikhwanameer.blogspot.in/2015/07/blog-post_21.html

2. உங்களுக்கான காமிரா எது? - http://ikhwanameer.blogspot.in/2015/07/2_22.html

3. கையாள்வது எளிது! ஆனாலும், கடினம்! : http://ikhwanameer.blogspot.in/2015/07/3_23.html

4. வாய்ப்பு என்பது ஒருமுறைதான்! : http://ikhwanameer.blogspot.in/2015/07/4_24.html

5. படமெடுக்க நினைப்பதை மட்டுமே படம் பிடியுங்கள் : http://ikhwanameer.blogspot.in/2015/07/5_30.html


No comments:

Post a Comment