Sunday, August 2, 2015

அழைப்பது நம் கடமை: 3, படிப்பினை மிக்க அந்த இறைத்தூதரின் வரலாறுஇந்த பூ உலகுக்கு அனுப்பப்பட்ட இறைவனின் தூதர் அவர். ஆதி பிதா ஆதம் நபிக்குப் பிறகு அனுப்பப்பட்டவர். 950 ஆண்டுகள் இறைவனின் பக்கம் மக்களை தொடர்ந்து அழைத்தவர். அவர்தான் நூஹ் நபி!

நூஹ் நபி, "இறைவனைத் தவிர வேறு யாருக்கும் அடிபணியாதீர்கள். இறைவனுக்கு இணைதுணை கற்பிக்காதீர்கள்!"-என்றே தமது அழைப்பாக மனிதகுலத்துக்குச் சமர்பித்தார்.

"அல்லாஹ்வைத் தவிர வேறு யாருக்கும் அடிபணிய வேண்டாம்!" - என்பதே எல்லா இறைத்தூதர்களின் அழைப்பின் சாரமாகும்.

திருக்குர்ஆன் சொல்கிறது: "நாம் ஒவ்வொரு சமூகத்திற்கும், ஒரு தூதரை அனுப்பினோம். மேலும், அல்லாஹ்வுக்கு அடிபணியுங்கள்! தாஃகூத்துக்கு அடிபணிவதை தவிர்த்துக் கொள்ளுங்கள்!"-என்று (அவரின் வாயிலாக அனைவரையும்) எச்சரித்தோம்!" (திருக்குர்ஆன் - 16:36)

இன்னும் இறைவன் கூறுகின்றான்: "உமக்கு முன்னர் நாம், நம்முடைய எத்தனை தூதர்களை அனுப்பியிருந்தோமோ அவர்கள் அனைவரிடத்திலும் நீர் கேட்டுப் பாரும்: 'கருணை மிக்க ஏக இறைவனைத் தவிர வழிபடுவதற்கு வேறு கடவுளரை நாம் நியமித்திருந்தோமா, என்ன?" (திருக்குர்ஆன் - 43:45)

ஒரு லட்சத்துக்கும் மேலாக அனுப்பப்பட்ட தூதர்கள் வாயிலாக அருளப்பட்ட திருவேதங்களின் அழைப்பும் இதுதான்.

நூஹ் நபியின் தெளிவான அழைப்பு இது: "அல்லாஹ்வைத் தவிர வேறு யாருக்கும் நீங்கள் அடிபணியாதீர்கள்!'-என்று நான் உங்களுக்குத் தெளிவாக எச்சரிக்கை செய்பவன் ஆவேன். (இல்லையானால்) துன்புறுத்தும் நாளின் வேதனை உங்களைப் பிடித்துக் கொள்ளுமோ என்று நான் அஞ்சுகின்றேன்!". (திருக்குர்ஆன் - 11:26)

நூஹ் (அலை) அழைத்தார்: "என் சமூகத்தினரே, நான் உங்களுக்குத் தெள்ளத் தெளிவாக எச்சரிக்கை செய்யக்கூடிய தூதர் ஆவேன். (நான் உங்களுக்கு இதனை உணர்த்துகின்றேன்) அல்லாஹ்வுக்கு அடிபணியுங்கள்! அவனுக்கே அஞ்சுங்கள்" (திருக்குர்ஆன் - 71:2,3)

நூஹ் நபி தமது சமூகத்தினரை இறைவனின் பக்கம் பெரும் முயற்சி மேற்கொண்டு அழைத்தார். இரவு-பகல்  பாராமல்... தனிமை - வெளிப்படை என்று தயங்காமல் தமது அழைப்பைத் தொடர்ந்தார். ஆனாலும் அவரது சமூகத்தார் அவரது அழைப்பை ஏற்கவில்லை. அவர்கள் வழிகேட்டிலேயே மூழ்கியிருந்தார்கள். நூஹ் நபியையும் அவரது தோழர்களையும் எதிரிகளாகவே கருதினார்கள். அவர்கள் மீது கடும் பகைமைக் கொண்டார்கள்.
சமூகத் தலைவர்கள் வெளிப்படையாகவே இப்படி சொன்னார்கள்: "அதற்கு அவருடைய சமூகத் தலைவர்கள் பதில் கூறினார்கள்: 'நீர் வெளிப்படையான வழிகேட்டில் மூழ்கியிருப்பதையே நாங்கள் காண்கின்றோம்" (திருக்குர்ஆன் - 7:60)

அதற்கு நூஹ் நபி பதில் அளித்தார்: "என்னுடைய சமூதாயத்தவரே! நான் எந்த வழிகேட்டிலும் மூழ்கியிருக்கவில்லை. நான் அகிலத்தாருடைய அதிபதியின் தூதனாக இருக்கின்றேன். நான் என் இறைவனின் தூதுச் செய்திகளை உங்களுக்கு எடுத்துரைக்கின்றேன். உங்களுடைய நலன் நாடுபவனாகவும் இருக்கின்றேன். மேலும், நீங்கள் அறியாதவற்றையெல்லாம் அல்லாஹ்விடமிருந்து நான் அறிகின்றேன்" (திருக்குர்ஆன்-7:61,62)

மனிதராக இருப்பவர் இறைத்தூதராக இருக்க முடியாது என்ற தவறான கருத்தையம் சமூகத்தார் இவர் முன் வைக்கிறார்கள்.

"எங்களுடைய பார்வையில் நீர் எங்களைப் போன்ற ஒரு மனிதரே அன்றி வேறில்லை! மேலும், எங்களிடையே யார் மிகவும் இழிவானவர்களோ அவர்கள் மட்டுமே சிந்திக்காமல் உம்மைப் பின்பற்றுவதைப் பார்க்கின்றோம். ஆக, எங்களைவிட எவ்வித சிறப்பும் உமக்கு இருப்பதாக எங்களுக்குத் தெரியவில்லை. உண்மையில், உங்களைப் பொய்யர் என்றே நாங்கள் கருதுகின்றோம்!" (திருக்குர்அன் - 11:27)

இதற்கு நூஹ் நபி இப்படி அழகான பதில் சொன்னார்: "என் சமுதாயத்தினரே! கொஞ்சம் சிந்தித்துப் பாருங்கள். நான் என்னுடைய அதிபதியிடமிருந்து தெளிவான சான்றினைப் பெற்றுள்ளேன். மேலும், அவன் தனது தனிப்பட்ட அருளையும், எனக்கு வழங்கியுள்ளான். ஆனால், அது உங்கள் பார்வைக்குப் புலப்படுவதில்லை. நீங்கள் அதனை ஏற்றுக் கொள்வதில்லை எனில் நாம் அதனை வலிந்து உங்கள் மீது திணிக்க முடியுமா? (திருக்குர்அன்-11:28)

நல்லுரை மனித உள்ளங்களில் பெரும் மாறுதலை உருவாக்கும். பிர்அவ்னிடம் அனுப்பும்போது, தனது தூதர் மூஸா நபிக்கு இறைவன் சொன்னது இது:

"அவனிடம் நீங்கள் மென்மையாகப் பேசுங்கள். அவன் அறிவுரையை ஏற்கக்கூடும் அல்லது அஞ்சக்கூடும்" (திருக்குர்ஆன் - 20:44)

மற்றோர் இடத்தில் அழைப்புப் பணியின் போது கடைப்பிடிக்க வேண்டிய பண்புகளை இறைவன் கற்றுத் தருகிறான்:

"(நபியே!) விவேகத்துடனும், அழகிய அறிவுரைகள் மூலமாகவும், உம் இறைவனின் மார்க்கத்தின் பக்கம் அழைப்பீராக! மேலும், மிகச் சிறந்த முறையில் மக்களிடம் விவாதம் புரிவீராக!"

இறைவனின் திருமுன் நிற்கும் வேளையில் தனது அழைப்பைக் குறித்து இறைவன் கேட்பான். அதற்கு பதில் சொல்லியாக வேண்டும் என்ற பொறுப்புணர்வோடு நூஹ் நபி தமது அழைப்புப் பணியைத் தொடர்கிறார்.

"மேலும், எவர்கள் (எனது பேச்சை) ஏற்றுக் கொண்டிருக்கிறார்களோ அவர்களை நான் விரட்டுபவன் அல்லன். திண்ணமாக, அவர்கள் தங்களுடைய இறைவனைச் சந்திக்க இருக்கிறார்கள். ஆனால், நான் உங்களை அறியாமையில் உழன்று கொண்டிருக்கும் சமுதாயத்தினராய்ப் பார்க்கின்றேன்" (திருக்குர்ஆன - 11:29)

 

எந்த மாய ஜால வித்தைக்கும் சொந்தக்காரர் என்று நூஹ் நபி தம்மைப் பிரகடனப்படுத்தவில்லை.

"அல்லாஹ்வின் கருவூலங்கள் என்னிடம் உள்ளன என்றும், நான் மறைவானவற்றை அறிபவன் என்றும் உங்களிடம் கூறவில்லை. நான் ஒரு வானவர் என்றும் உங்களிடம் வாதிடவில்லை" ( திருக்குர்ஆன் - 11:31).

மறுமையில் நடக்கவிருக்கும் விஷயங்கள் அனைத்தும் அறிந்தவன் அல்லஹ்தான் என்று தெள்ளத் தெளிவாக தெரியப்படுத்திவிடுகிறார்.

அவரது அழைப்பை ஏற்றுக் கொண்டவர்கள் ஏழை-பாழைகள், சமூக அந்தஸ்து அறவே இல்லாதவர்கள். ஆனால், உண்மையை ஒப்புக் கொண்டவர்கள். சத்தியத்துக்கு சான்று பகர முன்வந்தவர்கள். அவர்களின் இறைநம்பிக்கைக் குறித்து இறைவன் மட்டுமே அறிந்தவன்.

"எவர்களை உங்கள் கண்கள் இழிவானவர்களாக காண்கின்றனவோ அவர்களைக் குறித்து அல்லாஹ் எந்த நன்மையும் அவர்களுக்கு அளிக்கவில்லை என்றும் நான் கூற மாட்டேன். அவர்களின் நெஞ்சங்களின் உள்ளவற்றை அல்லாஹ்தான் நன்கறிகின்றான். அவ்வாறு கூறினால் திண்ணமாக நான் அக்கிரமக்காரனாகி விடுவேன்!" (திருக்குர்ஆன் - 11:31)

தமது பொறுப்பு என்னவென்பதையும் தெளிவுபடுத்திவிடுகின்றார் நூஹ் நபி:

"நாங்கள் உம்மை ஏற்றுக் கொள்ள வேண்டுமா? மிகவும் கீழ்த்தரமான மக்கள் உம்மைப் பின்பற்றிக் கொண்டிருக்கின்றார்கள! அதற்கு நூஹ் கூறினார்: 'அவர்களின் செயல் எப்படிப்பட்டதென்று எனக்கென்ன தெரியும்? அவர்களுடைய கணக்கெல்லாம் என் அதிபதியின் பொறுப்பில் உள்ளது. நீங்கள் சற்று உணர்ந்து செயல்படக்கூடாதா?' நம்பிக்கை கொள்வோரை விரட்விடுவது என் பணியன்று. நானோ தெளிவாக எச்சரிக்கை செய்பவனாக இருக்கின்றேன்" (திருக்குர்ஆன்- 26:111-115)

பல்லாண்டு இந்த அழைப்புத் தொடர்கிறது. ஒரு சிலரைத் தவிர, மக்கள் நூஹ் நபியின் அழைப்பை ஏற்றுக் கொள்ளவில்லை.

"நாம் நூஹை அவருடைய சமுதாயத்தாரிடம் அனுப்பினோம். அவர் ஐம்பது குறைய ஓராயிரம் ஆண்டுகள்  அவர்களிடையே வாழ்ந்தார். இறுதியில் அவர்கள் கொடுமைப் புரிந்து கொண்டிருக்கவே வெள்ளப் பிரளயம் அவர்களைச் சூழ்ந்து கொண்டது" (திருக்குர்ஆன் - 29:14)

தலைமுறை தலைமுறையாக தீயவர்கள் தங்கள் இளந்தலைமுறைக்கு நூஹ் நபியை எதிரியாகவே காட்டினார்கள். அவரை எதிர்ப்பதை தங்களின் மதக் கொள்கையாகவே மாற்றிவிட்டார்கள். தந்தையின் சொல்லே மந்திரமாக பிள்ளைகள் நடந்துகொண்டார்கள். இறைவனை நிராகரிப்பது அவர்களின் சமூகக் கோட்பாடவே மாறிவிட்டது.

"இவர்களின் சந்ததியில் யார் பிறந்தாலும் தீயவனாகவும், நிராகரிப்பாளனாகவும்தான் இருப்பான்" (திருக்குர்ஆன் - 71:27)

கடைசியில், அந்த நிராகரிப்பாளர்களின் மனவஞ்சம் எந்தளவுக்கு கடுமையாக ஆகிவிட்டதென்றால்.. இறைவனின் தண்டனை கொண்டுவரும்படி அறைகூவல் விடுமளவுக்கு அவர்கள் எல்லை கடந்து விடுகின்றார்கள்.

"இறுதியில் அவர்கள், நூஹே நீர் எங்களிடம் தர்க்கம் புரிந்து விட்டீர். அதுவும் அளவுக்கு அதிகமாக தர்க்கம் புரிந்து விட்டீர். அதுவும் அளவுக்கு அதிகமாக தர்க்கம் செய்துவிட்டீர். நீர் உண்மையாளராயின் எந்த வேதனையைப் பற்றி எங்களை அச்சுறுத்திக் கொண்டிருக்கின்றீரோ அந்த வேதனையை எங்களிடம் கொண்டு வாரும்! - என்று கூறினார்கள். அதற்கு மறு மொழியாக நூஹ் கூறினார்: அல்லா ஹ் நாடினால்.. அவனே அதனை உங்களிடம் கொண்டு வருவான். (அது வந்துவிட்டால்..) அதனைத் தடுத்து நிறுத்தும் அளவுக்கு நீங்கள் வலிமையுடையவர்கள் அல்லர்" (திருக்குர்ஆன்-11:32,33)

 

மக்களிடம் உள்ள பிடிவாதம், தீயவிருப்பங்கள், சுயநலப்போக்குகள், நன்மையில் ஆர்வமின்மை போன்ற செயல்கள் அவர்களுக்குப் பாதகமாகவே அமைந்துவிடுகின்றன. இந்தச செயல்களால்.. அவர்கள் நேர்வழி அடைவதற்கான நற்பேற்றை இறைவன் அளிப்பதில்லை. வழிகேட்டில் செல்ல அந்த மக்கள் விரும்பும்போது. அதிலேயே அவர்களை இறைவன் ஆழ்த்தியும் விடுகின்றான். இந்த நிலையில் மேற்கொள்ளப்படும் அழைப்புப் பணிகள் எந்தப் பலனையும் அளிக்காது.

நூஹ் நபியின் விஷயத்தில் இப்படிதான் நடந்தது. மக்கள் எல்லைமீறிப் போன அந்த இறுதி நேரத்தில் இறைத்தூதர் நூஹ் நபியின் எச்சரிக்கை இதுவாக இருந்தது:

"உங்களை வழிகேட்டில் ஆழ்த்த வேண்டும் என்று அல்லாஹ் நாடியிருந்தால்.. உங்களின் நன்மைக்காக நான் எது கூறினாலும் அது உங்களுக்கு எவ்விதப் பலனையும் அளளித்திடமாட்டாது. அவன்தான் உங்கள் இறைவன். அவன் பக்கமே நீங்கள் திரும்பக் கொண்டு செல்லப்படுவீர்கள்" (திருக்குர்ஆன்-11:34)

நூஹ் நபியின் அழைப்புப் பணி இறுதிக் கட்டத்தை அடைகிறது.

அவர் தமது பொறுப்புகளை சரியாக நிறைவேற்றிவிட்ட நிலையில், இறையருளுக்கான நற்செய்தியும், நிராகரிப்பாளர்களின் தண்டனைக்கான எச்சரிக்கையுமாக இறைவனின் கட்டளை நூஹ் நபிக்கு வருகிறது.

"மேலும், நூஹீக்கு இவ்வாறு வஹி அனுப்பப்பட்டது: உம்முடைய சமுதாயத்தினரில் எவர்கள் நம்பிக்கை கொண்டிருக்கின்றார்களோ அவர்களைத் தவிர இனி வேறொருவரும் நம்பிக்கை கொள்ளப் போவதில்லை. எனவே, அவர்களின் தவறான செயல்களுக்காக நீர் துயரப்பட வேண்டாம்!" (திருக்குர்ஆன்-11:36)

மக்களில் இனி ஒருவரும் திருந்த வாய்ப்பில்லை என்ற நிலைமை. எந்நேரமும் இறைவனின் தண்டனை இறங்கவிருக்கும் நேரம். அழைப்புப் பணியில் ஈடுபட்டிருந்த நல்லோர் காக்கப்பட இறைவன் நூஹ் நபிக்கு ஆலோசனை வழங்குகின்றான்.


"மேலும், நமது கண்காணிப்பில் நம் கட்டளைக்கேற்ப ஒரு கப்பலைக் கட்டத் தொடங்குவீராக! மேலும், அநீதி இழைத்தவர்களுக்காக என்னிடம் பரிந்துரை செய்யாதீர்! அவர்கள் அனைவரும் மூழ்கடிக்கப்பட வேண்டியவர்கள்!" (திருக்குர்ஆன்-11:37)

தமது சமூகத்தில் இனிமேல், ஒருவரும் நல்லவராக வாய்ப்பு இல்லை என்பதும், அவரது சமுதாயத்தவர் எல்லா நிலையிலும் அவரை துன்புறுத்தி வந்தனர் என்பதும் நூஹ் நபியை மனம் வருந்தச் செய்தது. தமது வாயாலேயே அவர் இறைவனிடம் இப்படி இறைஞ்சலானார்:

"என் அதிபதியே! இந்த நிராகரிப்பாளர்களில் எவரையும் பூமியில் வசிக்க விட்டு வைக்காதே! நீ இவர்களை விட்டு வைத்தால்.. இவர்கள் உன் அடியார்களை வழிகெடுத்துவிடுவார்கள். மேலும், இவர்களின் சந்ததியில் யார் பிறந்தாலும், தீயவனாகவும், நிராகரிப்பாளனாகவும்தான் இருப்பான்!" (திருக்குர்ஆன்-71:26,27)

மனிதனின் புரையோடிப்போன உடல் பகுதி ஒன்றை அறுவை சிகிச்சை மூலம் நீக்காவிட்டால்.. உடலின் நல்ல பகுதியும் பாதித்துவிடும். அதன்பிறகு, அவன் இறப்பெய்துவதிலிருந்து தடுக்க முடியாது என்பது போலதான் இதுவும். பிறக்கப் போகும் இளந்தலைமுறையினரையும் வழிகெடுப்பதிலிருந்து காக்கவே தீயவர்கள் அழிக்கப்பட வேண்டும் என்பது இறைவனின் நியதி. இதுவே பொது நியதிகூட.

இறைவனின் தண்டனை இறங்குவதற்கு முன்னால் நல்லோர் தப்பிப் பிழைக்க பெரும் கப்பல் ஒன்றை செய்யும்படி நூஹ் நபிக்கு இறைவன் ஆணை பிறப்பிக்கின்றான்.

எந்தவிதமான நீர் வளமும் இல்லாத ஒரு கட்டாந்தரையில் கப்பல் கட்டுவது என்பது சாதாரணமான பணியல்ல. மன உறுதியையே சீர்குலைப்பது. ஏற்கனவே எதிரிகளாக நிற்கும் சமுதாயத்தாரின் ஏச்சுக்கும் - பேச்சுக்கும், கேலி கிண்டலுக்கும் ஆளாக்குவது. உளவியல் ரீதியான இந்தத் துன்பங்களையும், பாதிப்புகளையும் அவர் பொறுத்துக் கொண்டார்.

"நூஹ் நபி கப்பலைக் கட்டிக் கொண்டிருந்தார். அவருடைய சமுதாயத் தலைவர்களில் எவரேனும் அவரைக் கடந்து செல்லும்போதெல்லாம் அவரை ஏளனம் செய்தனர்" (திருக்குர்ஆன் - 11:38)

 

மழைப் பொழிவதற்கோ, வெள்ளப் பெருக்கெடுப்பதற்கோ அறிகுறியே இல்லாத சூழலில் கப்பல் கட்டுவது என்பது நிராகரிப்பாளர்களுக்கு விசித்திரமான செயலாக்கப்பட்டது. ஆனால், நம்பிக்கையாளர்களுக்கோ அது இறைநம்பிக்கையின் ஆழமாக தெரிந்தது.

நூஹ் நபி தமது செயலைக்  கண்டு எள்ளி நகைத்த சமுதாயத்தவரிடம் பதிலளித்தார்:

"நீங்கள் எங்களைப் பார்த்து ஏளனமாக சிரிக்கிறீர்கள் என்றால்.. நீங்கள் சிரிப்பது போன்றே நாங்களும் உங்களைக் குறித்து சிரித்துக் கொண்டிருக்கிறோம். இழிவுபடுத்தக் கூடிய வேதனைக்கு யார் ஆளாகப் போகின்றார் என்பதையும், தடுத்து நிறுத்த முடியாத வேதனை யார் மீது இறங்கப் போகின்றது என்பதையும் வெகு விரைவில் நீங்கள் அறிந்து கொள்வீர்கள்" (திருக்குர்ஆன்-11:38,39)

நூஹ் நபிகளாரின் சமூக மக்களின் இறைநிராகரிப்பும், அதிலேயே நிலைத்திருக்கும் பிடிவாதமும், மறுமையில் அந்த மக்களை பொய்யர்களாக தோலுரித்துக் காட்டும். தங்களுக்கு இறைச் செய்தியை சமர்பிக்க எந்த நபியுமே அனுப்பப்படவில்லை என்று பொய்யுரைக்க வைக்கும்.

இறைவனின் இறுதித்தூதர் முஹம்மது நபிகளார் (ஸல்) கூறியதாக.. நபித்தோழர் அபூ சயீத் (ரலி) அறிவிக்கிறார்கள்:

"நூஹ் நபியும் அவரது சமூகத்தாரும் மறுமையில் நிறுத்தப்படும்போது, நூஹ் நபியிடம் இறைவன் விசாரிப்பான்: 'என்னுடைய செய்தியை உமது சமூகத்தாரிடம் சேர்ந்துவிட்டீரா?' நூஹ் நபி பதிலளிப்பார்: 'ஆமாம் என் இறைவனே! சேர்த்துவிட்டேன்!' அதன் பிறகு இறைவன், அவரது சமூகத்தாரிடம் கேட்பான்: 'என்ன இவர் என்னைக் குறித்த செய்தியை உங்களுக்கு எத்தி வைத்துவிட்டாரா?' அதற்கு அவர்கள் பதிலளிப்பார்கள்: 'இல்லை.. இல்லை இறைவா! எங்களிடம் எந்த இறைத்தூதரும் வரவில்லை. உன்னைக் குறித்து எச்சரிக்கவும் இல்லை'

 

அதன் பிறகு இறைவன் நூஹ் நபியிடம் கேட்பான்: "சரி உமக்கு சாட்சியாக யாராவது இருக்கிறார்களா?' நூஹ் நபியும் பதிலளிப்பார்: 'முஹம்மதுவும் அவரது சமுதாயத்தாரும் இதற்கு சாட்சி!'- என்று சொன்ன நபிகளார் தொடர்ந்தார்கள்: 'நூஹ் நபி எத்தி வைத்த இறைச் செய்திக்கு நாம் சான்று பகர வேண்டியிருக்கும்!' (புகாரி)

இதைதான் அல்லாஹ்வும் கூறுகின்றான்: "மேலும், இவ்வாறே (முஸ்லிம்களான) உங்களை நாம் உம்மத்தன் வஸத்தன், சமநிலையுடைய சமுதாயமாக ஆக்கினோம். நீங்கள் மக்களுக்கு சான்று வழங்குபவர்களாகவும், இறைத்தூதர் உங்களுக்குச் சான்று வழங்குபவராயும் திகழ்ந்திட வேண்டும் என்பதற்காக!" (திருக்குர்ஆன்-2:143)

"நாம் அவருக்கு வஹி அறிவித்தோம். நாம் அறிவிக்கின்றபடியும், நமது கண்காணிப்பிலும் ஒரு கப்பலைத் தயார் செய்யும்! பின்னர் நம் கட்டளை வந்ததும், உலையிலிருந்து தண்ணீர் பொங்கி எழ ஆரம்பித்தால்.. எல்லா வகைப் பிராணிகளிலிருந்தும் ஒவ்வொரு ஜோடியையும், உமது குடும்பத்தாரையும், அதில் ஏற்றிக் கொள்ளும். அவர்களில் யாருக்கு எதிராக முன்னரே தீர்ப்பாகி விட்டதோ அவர்களைத் தவிர! மேலும் கொடுமைக்காரர்களைப் பற்றி நீர் எம்மிடம் எதுவும் பேசாதீர்!"(திருக்குர்ஆன்-23:27)

நூஹ் நபியின் அழைப்பை ஏற்க மறுத்த சொந்த மகன் உட்பட எல்லோரும் அழிக்கப்படுகிறார்கள்.

"திண்ணமாக, இந்த வரலாற்றில் பெரும் சான்றுகள் உள்ளன!" (திருக்குர்ஆன்-23:30)

-- அழைப்பது தொடரும்.

‘’’’’’’’’’’’’’’’’’

No comments:

Post a Comment