Monday, August 31, 2015

வைகறை நினைவுகள் 17: பாகல் கொடி

 

பேராசிரியர் மௌலானா இஃஜாஜ் அஸ்லம் சாஹெப் பற்றி சென்ற நினைவுகளில் பகிர்ந்துகொண்ட போது, பின்னூட்டமாக, சகோதரி ரிஸ்வானா ஷகீல் அவரின் எடுப்பான சிறப்புகளை நினைவு கூர்ந்தார்.

ஒரு இயக்கத்தின் தலைவர் என்ற நிலையைத் தாண்டி ஒரு அன்பான ஆலோசகராகவும், அவர் எனக்கிருந்தார். அவரது மகளின் திருமணத்துக்காக வாணியம்பாடி சென்றபோது, பள்ளியில் மிக எளிமையாக அவர் தனது மகளின் திருமணத்தை நடத்தி வியப்பளித்தார். பொதுவாழ்விலும், தனிநபர் வாழ்விலும் ஒரு சிறந்த ஆளுமைக்குரியவர் அவர் என்பது மறுக்க முடியாதது.

எனது மூத்த மகளின் இஸ்லாமிய அறிவெழுச்சிக்காக உத்திரப் பிரதேசத்தின் வரலாற்று புகழ்மிக்க ராம்பூரின் ஜாமியத்துஸ் ஸாலிஹாத் மகளிர் அரபி பாடசாலைக்கு அனுப்ப வேண்டியிருந்தது. மதரஸாவின் சேர்க்கைக்கும், ஆண்டுதோறும் விடுமுறை நாட்களில் பிள்ளைகள் தமிழகம் அழைத்து வரவும் பெருமளவில் அஸ்லம் சாஹெப் தானே பயண திட்டமிடுவார். குழுவாக பிள்ளைகளை அழைத்து வருவார். (அப்போது, அவரது இரண்டு மகள்களும் அங்குதான் ஓதினார்கள்) எனது மகளின் ஐந்தாண்டுகள் ஆலிமா பட்டப்படிப்பு அவரின் பெருமளவு உதவியால்தான் முடிந்தது எனலாம்.

ஆக பெரும் ஆளுமைகளுடனான எனது தொடர்பு அவர்களின் குணாம்சங்களை ஓரளவு என்னுள்ளும் உள்வாங்கி வடிவமைத்துக் கொள்ள முடிந்தது.


இப்படி பேராசிரியர் மௌலானா இஃஜாஜ் அஸ்லம் சாஹெப் மூலமாக கதை சொல்லியாக நான் உருவெடுத்தது முதல் காரணம் என்றால், மர்ஹீம் அப்ஸல் உசைன் சாஹெப், மாயில் கைராபதி (ராம்பூரில் அவரது இல்லத்திலேயே சந்தித்திருக்கிறேன்) குர்ரம் முராத் போன்ற குழந்தை இலக்கியவாதிகளின் மொழியல் நடையும் என்னுள் பாதித்து நிறமேற்றியது.

இப்படிதான் நான் மழலைப் பிரியன் என்ற கதை சொல்லியானேன்.

மிக எளிய வார்த்தைகளை தேர்வு செய்து குழந்தைகளோடு நேருக்கு நேர் உரையாடுவது ஒரு தனி கலைதான்! மெல்ல.. மெல்ல பழக்கிக் கொண்டேன் அல்லது குழந்தைகளிடமிருந்தே நான் கற்றுக் கொண்டேன்.

நேரிடையாக கதை சொல்வது, குழந்தைகளுக்காக எழுதுவது, சமீபத்தைய தொழில்நுட்ப வளர்ச்சியைப் பயன்படுத்தி மிக எளிய முறையில் காணொளிகளை உருவாக்கி யுடியூபில் பதிவேற்றம் செய்வது என்று இது வளர்ந்து கொண்டேயிருக்கிறது. (Tell Me Nanaji: https://www.youtube.com/watch?v=unfrsskQs0Q

Jungle Stories: https://www.youtube.com/watch?v=F2Ohi9QlDLg இறைவன் நாடினால், சிறார்களுக்கான குறும்படங்களைத் தாண்டி கார்டூன் படங்கள் வரை முயற்சி நீள்கிறது.

எல்லாதுறைகளிலும், எல்லோரும் சிறப்பாக செயல்பட முடியாது. ஆயினும், நம்மால் முடியும். மிக எளிதாக… இருக்கும் சக்தி சாமர்ததியங்களைக் கொண்டு செய்ய முடியும் என்பதற்கான முயற்சியே மேலே கொடுத்துள்ள யுடியூப் இணைப்பு காணொளிகள்.

நம்பிக்கையூட்டவும், முடியும் என்பதைக் காட்டவும் சிறு பிள்ளைகளை காமிரா இயக்குனர்களாக வைத்து, மாணவர்கள் மூலமாக எடிட்டிங் செய்ய வைத்து, என்னைப் போல காமிரா என்றாலே அலறும் நபர்களை பேச வைத்து பதிவேற்றம் செய்யப்பட்ட காணொளிகள் அவை.

நான் நேற்று குறிப்பிட்டது போல. கதைச் சொல்லியாய் நான் மாறிய பிறகு சொன்ன கதைகளில் ஒன்று இப்போது சொல்கிறேன் அங்கும் இங்கும் பார்க்காமல் கவனமாக கேளுங்கள்:

''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''
 

கதைக்கான தலைப்பு: பாகல் கொடி

வேலி ஓரத்தில் பாகல் விதை ஒன்று முளைவிட்டது.

நீர்ப்பாய்ச்ச யாருமில்லை. பாதுகாக்க ஆளுமில்லை.

வளர்ந்து செழிக்க வசதி வாய்ப்புகளும் போதவில்லை.

ஆனாலும், பாகல் கொடி தளரவில்லை. மெல்ல… மெல்ல துளிர் விட்டு வளர்ந்தது. பூமியெங்கும் வேர்ப் பாய்ச்சி நீரை உறிஞ்சியது.

விரைவிலேயே, செடி கொடியானது.

இப்போது பற்றிக் கொள்ள கொழு கொம்பும் இல்லை.

அதனால், பாகல்கொடி சோர்ந்துவிடவில்லை. “நான் வளர்ந்து செழிப்பேன்!” – என்று உறுதி பூண்டது.

கற்களைப் பற்றிக் கொண்டு மேலே ஏறியது. சிறு புற்களையும் பிடித்துக் கொண்டு மேலே.. மேலே ஏறியது.

மேல் மூச்சு.. கீழ் மூச்சு வாங்கியபோதும், “விடமாட்டேன்!” – என்று உரத்துக் கூவியது. தொடர்ந்து கொடியை படரவிட்டது.

“ஆஹ்.. அய்யோ..! முட்கள்!” – முட்கள் குத்தியபோது, பாகல் கொடி வலிதாளாமல் அலறியது. கூரிய முட்கள் அதை குத்திக் கிழித்தன. தாள முடியாத வேதனையை உருவாக்கின. துன்பத்தையும், துயரத்தையும் பாகல் கொடி பொறுமையுடன் சகித்துக் கொண்டது.

கூரிய முட்களில் படருவது எப்படி என்று சிந்தித்து திட்டமிட்டது.

அனுபவங்கள் அதற்கு பாடங்கள் ஆயின.

இப்போது முட்களையே பந்தலாக்கிக் கொண்டு கொடி லாவகமாய் ஏறியது. “நான் செழித்து வளராமல் விடமாட்டேன்!” – என்று திடமான உறுதி பூண்டது. தன் இலட்சியத்தை நோக்கி மெல்ல மெல்ல நகர்ந்தது. அதன் ஒவ்வொரு பிடிமானத்திலும் விவேகமும், பலமும் தென்பட்டன.

சில வாரங்கள் சென்றபின்-

முள்வேலி முழுவதும் பாகல் கொடி செழித்துப் படர்ந்திருந்தது. பச்சைப் பசேலென்று போர்வையாய் அது முட்களைப் போர்த்திவிட்டது.

மஞ்சள் நிறப் பூக்கள் வேலி எங்கும் பூத்து சிரித்தன. இளம் பிஞ்சு காய்கள் அதிலிருந்து வெளிப்பட்டு குலுங்கின.

பாகல் கொடியின் இலட்சியம் காய்த்துக் குலுங்குவது. அது தன் இலட்சியத்தின் இறுதி எல்லையைத் தொட்டுவிட்டது. அந்த வெற்றியைக் குறித்து அது ஆர்ப்பரிக்கவில்லை. உரக்க எக்காளமிட்டு குதிக்கவுமில்லை. காய்த்தப் பாகல் காய்கள் கீழ் நோக்கி தொங்கி பாகல் கொடியின் தன்னடக்கத்தைப் பறைச்சாற்றின.

‘பொறுமையும், விடாமுயற்சியும், விவேகமும் வெற்றியைத் தரும்!’ – என வேலி ஓரத்தில் பூத்துக் காய்க்கும் பாகல் கொடி நமக்குப் படிப்பினையைத் தருகிறது.

'''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''

கதை எப்படி இருக்கிறது. அன்றாடம் வேலி ஓரம் நாம் பார்க்கும் ஒரு செடிதான் இந்தக் கதையின் கதாநாயகன்.

குழந்தைகளின் வயது, படிப்பு இவற்றுக்கு ஏற்றாற் போல வார்த்தைகளை எளிமையாக்கி சொல்ல முடியும்.

மழலைப் பிரியன் என்ற கதை சொல்லியாகிய நான், குழந்தைகளிடம் சொல்லி, எழுத்துக்களில் பதிவாக்கி தினமணி கதிர், சிறுவர் இலக்கியத்தில் இந்தக் கதை பிரசுரமானது.

இறைவன் நாடினால்… அடுத்த வைகறை நினைவுகளில்…

‘’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’
வைகறை நினைவுகள் முந்தைய தொடர்களை வாசிக்க:
'''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''
வைகறை நினைவுகள் பகுதி 1: கருணையாளனான இறைவன் அவரது பாவங்களை மன்னிப்பானாக:  - http://ikhwanameer.blogspot.in/2015/07/1.html
வைகறை நினைவுகள் பகுதி 2: இந்நேரம் புதைச்ச இடத்தில் புல் முளைச்சிருக்கும்: http://ikhwanameer.blogspot.in/2015/07/2.html
வைகறை நினைவுகள் பகுதி 3: நிழலாய் நின்ற அந்த இருவர்: http://ikhwanameer.blogspot.in/2015/07/3.html
வைகறை நினைவுகள் பகுதி 4: நீண்ட தேடல்களின் அந்த முடிவில்: http://ikhwanameer.blogspot.in/2015/07/4.html
வைகறை நினைவுகள் பகுதி 5: மறக்க முடியாத அந்த இரவு: http://ikhwanameer.blogspot.in/2015/07/5.html
வைகறை நினைவுகள் பகுதி 6: அதிபதியின் தர்பாரில் ஆஜரான ஓர் அடியான்: http://ikhwanameer.blogspot.in/2015/07/6.html
வைகறை நினைவுகள் பகுதி 7: சுமக்க முடியாத பாரத்தை சுமத்துவதில்லை: http://ikhwanameer.blogspot.in/2015/07/7.html
வைகறை நினைவுகள் பகுதி 8: யாகூப் மேமன் தண்டனை கூனி குறுகிப் போகிறேன் நான்: http://ikhwanameer.blogspot.in/2015/07/7_31.html
வைகறை நினைவுகள் பகுதி 9: இறைவனின் பிரதிநிதியா? குரங்கின் சந்ததியா?: http://ikhwanameer.blogspot.in/2015/08/9.html
வைகறை நினைவுகள் பகுதி 10: http://ikhwanameer.blogspot.in/2015/08/10.html
வைகறை நினைவுகள் பகுதி 11 : நான் தொலைந்து போனது இங்குதான் : http://ikhwanameer.blogspot.in/2015/08/11.html
வைகறை நினைவுகள் பகுதி 12: இதோ என் இப்ராஹீமா: http://ikhwanameer.blogspot.in/2015/08/11_14.html
வைகறை நினைவுகள் பகுதி 13: ஒரு கேள்விக்கு விடை தேடி நான்: http://ikhwanameer.blogspot.in/2015/08/13.html
வைகறை நினைவுகள் பகுதி 14, ஒரே டேக்கில் ஓகே: http://ikhwanameer.blogspot.in/2015/08/14.html
வைகறை நினைவுகள் பகுதி 15: வெளிச்சத்துக்கு வராத பாசங்கள்: http://ikhwanameer.blogspot.in/2015/08/15.html
வைகறை நினைவுகள் பகுதி 16 : கதைச் சொல்லியாய் மழலைப்பிரியன்: http://ikhwanameer.blogspot.in/2015/08/16.html

No comments:

Post a Comment