Tuesday, August 18, 2015

வைகறை நினைவுகள் – 14, ஒரே டேக்கில் ஓகே!அசோக் லேலண்ட் நிறுவனம் என்பது ஒரு குட்டி இந்தியா எனலாம். பல்வேறு மாநிலத்தார், மொழி பேசுபவர், சமயத்தார் என்று இந்திய நாட்டையே அதில் காண முடியும்.

நான் பேசிக் கொண்டிருக்கும் இந்தக் காலக் கட்டத்தில் 7 ஆயிரத்துக்கும் அதிகமான பணியாளர்கள் பணியாற்றிக் கொண்டிருந்தார்கள். இதில் முஸ்லிம்களின் எண்ணிக்கை 3 விழுக்காடுக்கும் குறைவாகவே இருந்தது.

இங்கு ஒரு விஷயத்தை நான் குறிப்பிட்டேயாக வேண்டும். இது சர்வதேச அளவில் இன்றும்கூட புதிதாக இஸ்லாத்தை தங்களின் வாழ்க்கை நெறியாக ஏற்றுக் கொள்பவர்கள் மனம் நொந்து சொல்லும் வார்த்தைகள். அதிலும் குறிப்பாக மேற்கத்திய நாடுகளைச் சேர்ந்தவர்கள் மன வருத்தத்துடன் சொல்வது. நானும் இதைதான் சொல்கிறேன். இஸ்லாத்தின் கொள்கை, கோட்பாடுகளை நன்கு ஆய்ந்து நான் ஒப்புக் கொள்ளவில்லை என்றால், இந்நேரம் இந்த கொள்கைக்கு அப்பால்தான் இருந்திருப்பேன்.

“இஸ்லாம் வேறு. முஸ்லிம்கள் வேறு என்ற இரு நிலை குழப்பம்தான் அது!”

மருத்துவம் படித்தவருக்கு மருத்துவம் செய்ய தெரியவில்லை என்றால் அவரை என்ன பெயரால் அழைப்பது?

சட்டம் படித்துவிட்டு சட்ட நுணுக்கங்களை அறியாதவரை என்ன பெயரால் அழைப்பது?

போலி டாக்டர். போலி வக்கீல் என்றுதானே!


வெறும் பெயரளவில் இருக்கும் நிலையிலேயே முஸ்லிம்கள் பின்பற்றும் கொள்கையின் வீச்சு 4:1 (உலகின் மக்கள் தொகையில் 4 க்கு 1 என்ற அளவில் முஸ்லிம்களின் விகிதாச்சாரம்) என்ற அளவில் இருக்கிறது.

சொல் வேறு. செயல் வேறு என்றில்லாமல் சொல்லும், செயலும் ஒன்று என சான்று பகரும் முஸ்லிம்கள் இருந்தால்… அந்த அற்புதமான ஒழுக்கவிழுமியங்களின் வெளிப்பாடு அவனைவரின் மனங்களை அல்லவா வென்றிருக்கும்!

அறிவில் மிகவும் சரிந்திருக்கும் முஸ்லிம்களிடையே முதலாவது செய்ய வேண்டிய பணி அவர்களிடையே அறிவொளி ஏற்றுவதுதான் என்பது தீர்மானமானது.


அதன்பின் நிறுவனத்தில் பல பகுதிகளில் நடமாடும் நூலகங்களை ஏற்படுத்த வேண்டி வந்தது. இதற்காக பல இளைஞர்களை தேர்வு செய்து முதற்கட்டமாக அவர்களுக்கு திருக்குர்ஆன் கற்பிப்பது, திருநபிகளாரின் வாழ்வியலை எடுத்துரைப்பது, இஸ்லாமிய வாழ்வியல் சம்பந்தமான போதனைகளை அளிப்பது என்று தேர்ந்தெடுக்கப்பட்ட பணி அது.

அதேபோல, வாரந்தோறும், வெள்ளியன்று ஒரு கட்டத்தில், நிறுவனத்துக்கு அருகாமையிலேயே (மஹல்லாஹ் பள்ளிவாசலின் ஜும்ஆ தொழுகை (வெள்ளிக்கிழமை தொழுகை) நேரமும், நிறுவனத்தின் உணவு இடைவேளை நேரமும் வெவ்வேறானது) தொழுவதற்கான வசதி ஏற்படுத்துவது. மற்றொரு நிலையில், நிறுவனத்தின் உட்புறத்திலேயே தொழுவது. இவ்வாறு முடிவானது.

இந்தப் பணிக்கு முதன்மை இடையூறாக இருந்தது யார் தெரியுமா?

யார் முஸ்லிம்களிடையே தொழுகைக்காக விழிப்புணர்ச்சி ஊட்டுவதாக சொல்கிறார்களோ அவர்கள்தான் என்பது எனக்கு வியப்பாக இருந்தது.

இஸ்லாம் மிகச் சிறந்த ஜனநாயக அமைப்பைக் கொண்டது என்பது அதன் கொள்கையை பாதிக்காத பன்முக கருத்து வேறுபாடுகளிலிருந்து விளங்கிக் கொள்ளலாம். இந்த எளிய வேறுபாடுகள் அதன் இயங்குத்தன்மைக்கான எளிமை அன்றி வேறில்லை. இந்த புரிதல் இல்லாமையே எல்லா பிரச்னைகளுக்கும் காரணம் என்பதே எனது தாழ்மையான கருத்து.

இந்த சிறு சிறு வேறுபாடுகள், அன்பு நபிகளாரின் காலத்திலிருந்தே நிலவி வந்தன என்பதும் முக்கியமானது.
 

இதை நான் இங்கு குறிப்பிடுவதன் நோக்கம் மஹல்லா பள்ளிவாசல் இருக்க, அதன் பக்கதில் தொழவது கூடுமா? என்று பெரும் பிரச்னை நான் மேலே குறிப்பிட்ட நபர்களால் எழுப்பப்பட்டது. ஜும்ஆவே தொழ முடியாத ஒரு நிர்பந்தத்தில் இருப்பவர்கள் வேறு என்ன செய்வது?

அடுத்தது “பணியிடத்தில் தொழவது கூடுமா?” இந்த பிரச்னையும் எழுப்பப்பட்டது.

பணியாளர்களுக்கான உணவு இடைவேளையில்தான் ஜும்ஆ தொழுகை தொழ முடிவாகி இருந்தது.

கடைசியில், இந்த பிரச்னைக்கு தீர்வு காண வேலூர் பாக்கியாத் ஸாலிஹாத்தில் பத்வா வாங்கி வர என்னிடம் பொறுப்பு தரப்பட்டது.

அந்த நேரத்தில் பாக்கியாத்தில், எனது நண்பர்களான கான் ஹஜரத்தும், மௌலானா இல்யாஸ் ஹஜரத்தும் பேராசிரியர்களாக பணியாற்றிக் கொண்டிருந்தனர்.

பாக்கியாத்தின் முஃப்தியைச் சந்தித்து நிலைமை மற்றும் சூழலை விளக்கிச் சொல்லி நிர்பந்தமான சூழல்களில் தொழலாம் என்று பத்வாக்களை பெற்று வந்தது குறிப்பிடத்தக்கது. அன்றிலிருந்து இதுவரையிலும் ஜும்ஆ தொழுகை நிறுவனத்தில் நடைபெற்றுவருவது முக்கியமானது.

ஜும்ஆ தொழவைக்கும் நாலைந்து இமாம்களில் அடியேனும் ஒருவன். அதற்கான பயிற்சியைப் பெறுவதற்கு மௌலானா குத்புத்தீன் பாகவியை தேர்வு செய்தேன்.

 நான் ஏற்கனவே குறிப்பிட்டது போல எனது முக்கிய ஆசான்களில் மெளலானா குத்புத்தீன் அஹமது பாகவியும் ஒருவர். இஸ்லாம் சம்பந்தமான சந்தேகங்களுக்கு தனக்கே உரிய எளிய நடையில் பதில் அளிப்பதில் வல்லவர். எனது ஒவ்வொரு செயல்பாட்டுக்கும் பக்கபலமாக கடைசிவரை இருந்தவர். அஞ்சல் வழி நூலகத்தின் பொறுப்பாளராக இருந்தவர். சகோதரிகளிடையே இஸ்லாமிய அழைப்பியல் பணியாற்றும் எனது திறனை பார்த்து, “வாங்க பெண்கள் அமைப்பின் தலைவரே!” என்று சொல்லி தட்டிக் கொடுப்பவர். அஞ்சல் வழி நூலகத்துக்கு வரும் கடிதங்களை பின்தொடர்வது, அவற்றுக்கு பதில் அளிப்பது, முடிந்தால் நேரில் சந்திப்பது என்று பல பணிகளை ஒப்படைப்பவர்.

ஒருநாள்.

மிக இனிமையான குரலில் திருக்குர்ஆன் வசனங்களை ஓதும் திறமை கொண்ட மௌலானா குத்புத்தீன் பாகவியிடம் ஒரு வேண்டுகோள் வைத்தேன். அதாவது தொழுகைக்கான சூராக்களை எளிமையாக மனனம் செய்ய ஏதுவாக அவர் ஓத ஓத நான் பதிவு செய்து கொள்வது. அதேபோல ஜும்ஆவின் குத்பாவையும் அவர் ஓதிக் காட்டவது. அதையும் பதிவு செய்து கொள்வது என்று எனக்கு உதவும்படி கேட்டுக் கொண்டேன்.

மெளலானா உடன் சம்மதித்தார். அதற்காக ஒரு நாள் நிர்ணயிக்கப்பட்டது.

ஐ.எஃப்.டி வளாகத்தின் பணியாளர் குடியிருப்பில் அந்த ‘டெமோவுக்கான’ இடமும் தேர்வு செய்யப்பட்டது.

அப்போது நான் பிலிப்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பான தடிமனான புத்தக வடிவ டேப் ரெக்கார்டரை வாங்கி உபயோகித்துக் கொண்டிருந்தேன். தரம் வாய்ந்த நல்ல காஸட்டுகளை வாங்கிக் கொண்டு குறிப்பிட்ட இடம் சென்றேன்.

மௌலான குத்புத்தீன் அஹ்மது பாகவி ஜும்ஆ குத்பாவை ஓதிக் காட்டினார்.

அதை ஒலிநாடாவில் பதிவு செய்தேன்.

அடுத்ததாக, திருக்குர்ஆனின் முப்பதாவது பகுதியை ஓத ஆரம்பித்தார்.

அற்புதமான அந்த இனிய கிராஅத்தின் ஒலியில் நான் லயித்துப் போனேன்.

திருக்குர்ஆனின் முப்பதாவது பகுதியின் அத்தனை அத்தியாயங்களையும், வேர்த்து, விறுவிறுக்க இடைவிடாமல் ஓதி, ‘ஒரே டேக்கில் ஓகே’ - செய்தார் மௌலான குத்புத்தீன் அஹ்மது பாகவி!

அவரது நினைவேந்தலில் ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்தின் பெரும் ஆளுமைத் தலைவர்களில் ஒருவரான மெளலான இஹ்ஜாஜ் அஸ்லம் சாஹெப் சொன்னதை இங்கே நினைவு கூர்கிறேன்:

"அன்புக்கினிய நண்பர் மௌலானா குத்புத்தீன் அஹ்மத் பாகவி அவர்களுடன் எனக்கு நாற்பது ஆண்டுகளாக பழக்கம். திருச்சியைச் சேர்ந்தவர் அவர். சென்னை வில்லிவாக்கத்தில் பள்ளிவாசல் ஒன்றில் இமாமாகப் பணியாற்றி வந்தபோது ஜமாஅத்துடன் நெருக்கமானார். அதன் பிறகு தனது இறுதி மூச்சு வரை அவர் ஜமாஅத்துடன் இணைந்து இருந்தார்; இஸ்லாத்திற்காக சேவையாற்றுவதிலும், குர்ஆனின் செய்தியைப் பரப்புவதிலும், இஸ்லாமியக் கல்வியைப் போதிப்பதிலும் முழுமூச்சாக ஈடுபட்டார்.

அவர்  மிகவும் இனியவர்; கண்ணியமான மனிதர்; அதிகம் பேச மாட்டார்; அறிவும் தெளிவும் நிறைந்த அறிஞர். குர்ஆனையும் நபிமொழியையும் நபிவழியையும் நன்றாக விளங்கிக்கொள்கின்ற ஆற்றலை அல்லாஹ் அவருக்கு நிறையவே அளித்திருந்தான். எந்தவொரு விஷயத்தை எடுத்துக்கொண்டாலும் அதன் அடி முதல் நுனி வரை மிக எளிதாக கணித்துக்கொள்கின்ற ஆற்றலையும் அல்லாஹ் அவருக்கு வழங்கியிருந்தான்.

குர்ஆனைத் தமிழில் மொழிபெயர்க்கின்ற சேவையில் அவர் தன்னை முழுமையாக அர்ப்பணித்துக் கொண்டிருந்தார். தமிழில் எளிய நடையில் இனிய மொழியில் மொழிபெயர்ப்பு கிடைப்பதற்கு அவர் பெரும் பங்காற்றினார்.

வாய்மையுடனும் உளத்தூய்மையுடனும் அவர் ஆற்றிய சேவைகள் அனைத்தையும் அல்லாஹ் ஏற்றுக்கொள்வானாக; அவருடைய பிழைகளைப் பொறுத்தருள்வானாக; அவருக்குத் தன்னுடைய கருணையையும் கிருபையையும் அருள்வானாக; பாவங்களை மன்னித்தருள்வானாக; மறுமையில் முடிவே இல்லாத நிலையான வாழ்வின் மிக உயர்வான படித்தரங்களை வழங்குவானாக; அவருடைய குடும்பத்தாருக்கு அழகிய பொறுமையை மேற்கொள்கின்ற நற்பேற்றை அருள்வானாக என நான் அல்லாஹ்விடம் பிரார்த்திக்கின்றேன்.

அவருடைய ஆளுமையை ஹபீஸ் மீரட்டி என்கிற கவிஞரின் கவிதை வரிகளில் சொல்லி விடலாம்:

"ஹயாத் ஜிஸ் கி அமானத் தீஹ் உஸ் கூ லோடா தீ

மை ஆஜ் செய்ன் சே ஸோதா ஹுன் பாவுன் பெஹ்லாயே"


“வாழ்க்கை என்கிற இந்த அமானிதத்தை அதற்கு உரியவரிடம் ஒப்படைத்துவிட்டேன்.

இன்றைக்கு நிம்மதியாக உறங்குகின்றேன் கால்களை நீட்டிக்கொண்டு”


கருணையுள்ள இறைவன் மௌலானாவின் பிழைகளைப் பொறுத்தருள்வானாக! சுவனங்களில் உயர்ந்த பதவிகளைத் தருவானாக!

இறைவன் நாடினால், வைகறை நினைவுகள் நிழலாடும்.

''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''
வைகறை நினைவுகள் முந்தைய தொடர்களை வாசிக்க:


வைகறை நினைவுகள் பகுதி 1: கருணையாளனான இறைவன் அவரது பாவங்களை மன்னிப்பானாக:  - http://ikhwanameer.blogspot.in/2015/07/1.html

வைகறை நினைவுகள் பகுதி 2: இந்நேரம் புதைச்ச இடத்தில் புல் முளைச்சிருக்கும்: http://ikhwanameer.blogspot.in/2015/07/2.html

வைகறை நினைவுகள் பகுதி 3: நிழலாய் நின்ற அந்த இருவர்: http://ikhwanameer.blogspot.in/2015/07/3.html

வைகறை நினைவுகள் பகுதி 4: நீண்ட தேடல்களின் அந்த முடிவில்: http://ikhwanameer.blogspot.in/2015/07/4.html

வைகறை நினைவுகள் பகுதி 5: மறக்க முடியாத அந்த இரவு: http://ikhwanameer.blogspot.in/2015/07/5.html

வைகறை நினைவுகள் பகுதி 6: அதிபதியின் தர்பாரில் ஆஜரான ஓர் அடியான்: http://ikhwanameer.blogspot.in/2015/07/6.html

வைகறை நினைவுகள் பகுதி 7: சுமக்க முடியாத பாரத்தை சுமத்துவதில்லை: http://ikhwanameer.blogspot.in/2015/07/7.html

வைகறை நினைவுகள் பகுதி 8: யாகூப் மேமன் தண்டனை கூனி குறுகிப் போகிறேன் நான்: http://ikhwanameer.blogspot.in/2015/07/7_31.html

வைகறை நினைவுகள் பகுதி 9: இறைவனின் பிரதிநிதியா? குரங்கின் சந்ததியா?: http://ikhwanameer.blogspot.in/2015/08/9.html

வைகறை நினைவுகள் பகுதி 10: http://ikhwanameer.blogspot.in/2015/08/10.html

வைகறை நினைவுகள் பகுதி 11 : நான் தொலைந்து போனது இங்குதான் : http://ikhwanameer.blogspot.in/2015/08/11.html

வைகறை நினைவுகள் பகுதி 12: இதோ என் இப்ராஹீமா: http://ikhwanameer.blogspot.in/2015/08/11_14.html

வைகறை நினைவுகள் பகுதி 13: ஒரு கேள்விக்கு விடை தேடி நான்: http://ikhwanameer.blogspot.in/2015/08/13.html

No comments:

Post a Comment