Tuesday, August 18, 2015

அழைப்பது நம் கடமை - 7, 'கடல் பிளந்தது! நெருப்பு குளிர்ந்தது!'இறைவனின் பாதையில், மக்களை அழைப்பவர்களின் இறைநம்பிக்கை எஃகு போல உறுதியாக இருந்தால்... இறையருளால்... கடல்களும் பிளந்து வழி பிறக்கும்! சுடு  நெருப்பும் குளிர்ந்து பூஞ்சோலையாக மாறும்! 

ஒரு சாதாரணமான கைத்தடி கடலைப் பிளந்திருக்கிறது. ஒரு இளைஞரை நெருப்புத் தீண்டாமல் பூஞ்சோலையாய் மாறி நின்றது. நீரின் இயல்பு இணைந்திருப்பது. ஆனால், தனது இயல்புக்கும் எதிராக பிளந்தது எப்படி? நெருப்பின் இயல்பு சுட்டெரிப்பது.  அது தனது இயல்புக்கு எதிராக சுடாமல் குளிர்ந்த சோலையாக மாறியது எப்படி? 
இறைவனின் நியதியில் சில படைப்புகள் அவற்றுக்கான இயல்பான குணங்கள் கொண்டுள்ளன. இந்த இயல்பு நிலையில் இறைவன் நாடும்போது, மாற்றங்கள் நிகழும் என்பதற்கு இந்த உதாரணங்களே சான்று!

இப்ராஹீம் நபி, மூஸா நபி ஆகியோரின் வரலாறு இறைநம்பிக்கையாளர்களுக்கு படிப்பினை மிக்கது. அதுவும் இறைவனின் பாதையில் மக்களை அழைக்கும் அழைப்பாளர்களுக்கு உற்சாகமூட்டும்  வரலாற்றுச் சான்றுகளாகும். இறைவனின் பேரருள்! தனது மார்க்கத்தின் பக்கம் யார் முழு நம்பிக்கையோடு அழைப்புக் கொடுக்கிறார்களோ அவர்களை காத்துக் கொள்வது இறைவனின் பொறுப்பில் வந்துவிடுகிறது.

இப்ராஹீம் நபியவர்கள் இளமையின் உச்சத்தில் இருந்தார்கள். அவர்களுக்கு இறைவன் பக்குவத்தையும் - முதிர்ச்சியையும் அளித்திருந்தான். அந்தப் பருவத்தில் தந்தை பெரியார்கூட செய்யத் துணியாத ஒரு செயலை அவர்கள் செய்தார்கள். தமது வாதத்திறமையாலும், சத்தியத்தை எடுத்துரைப்பதற்கு கொழுந்துவிட்டெரியும் பேராவலாலும் தங்கள் அழைப்புப் பணியில் சாதனைப் புரிந்தார்கள்.
இப்ராஹீம் நபியவர்களின் தந்தை தலைமைப் பூசாரியாக விளங்கியவர். அரசனின் பிரதம ஆலோசகராக, ராஜகுருவாக.. ஜோதிடராக இருந்தவர். கற்சிலைகளை வடிவமைப்பதில் தேர்ந்த வல்லமைப் படைத்தவர். தமது சமுதாயத்தவரின் மூடநம்பிக்கைகளின் தலையாய வாசலாக விளங்கியவர். விக்கிரங்களை உருவாக்கி விற்பதில் தொழில் நுட்பம் நிறைந்தவர். அத்தகையவரின் வயிற்றில் பிறந்த இப்ராஹீம் நபியவர்கள் தந்தையைப் பகுத்தறிவின் பக்கம் அழைக்கிறார். இளமையிலேயே சத்தியத்துக்கான அவர்களது 'பகுத்தறிவு தேடல்' ... 'சத்தியத்துக்கான தேடல்' ஆரம்பித்துவிடுகிறது.

"என் அன்பு தந்தையே! கேட்கவும், பார்க்கவும், பேசவும் முடியாதவை.. எந்தவிதமான லாப-நஷ்டங்களைத் தராதவை சிலைகள்! அவற்றை ஏன் வணங்குகின்றீர்கள்?"

".... என் தந்தையே! உங்களுக்குக் கிடைக்காத ஞானம் எனக்குக் கிடைத்துள்ளது. ஆகவே, என்னைப் பின்பற்றுங்கள். நான் உங்களுக்கு நேர்வழிக் காண்பிப்பேன்!"

" .... என் தந்தையே! நீங்கள் ஷைத்தானுக்கு அடிபணியாதீர்கள். திண்ணமாக ஷைத்தான் கருணைமிக்க இறைவனின் கட்டளைக்கு மாறு செய்பவன் ஆவான்!"

" ... என் தந்தையே! கருணை மிக்க இறைவனின் தண்டனைக்கு நீங்கள் ஆளாகிவிடுவீர்களோ என்றும் ஷைத்தானின் தோழனாகிவிடுவீர்களோ என்றும் நான் அஞ்சுகின்றேன்!"

பொங்கிவழியும் பாசத்தோடு தந்தையை சத்தியத்தின் பக்கம் அழைக்கிறார் இப்ராஹீம் நபி.

"இப்ராஹீம்! நீ நமது தெய்வங்களையா நிராகரிக்கிறாய்? உனது எண்ணத்தை நீ மாற்றிக் கொள்ளாவிட்டால்.. நான் உன்னை கல்லால் அடித்துக் கொன்று விடுவேன்! மரியாதையாக இங்கிருந்து வெளியேறிவிடு. இனி என் முகத்தில் விழிக்காமல் சென்றுவிடு!"


அறியாமையின் வெளிப்பாடு கடுமையாக வந்து பாய்ந்தது. அப்போதும் இப்ராஹீம் நபி பொறுமை இழக்காமல் தந்தையாரின் நலன் நாடுகின்றார்.

"உங்கள் மீது சாந்தியுண்டாகட்டும்! உங்களை மன்னித்தருளுமாறு என் இறைவனிடம் நான் இறைஞ்சுவேன். நிச்சயமாக, என் இறைவன் என் மீது மிகவும் கிருபையுள்ளவனாக இருக்கின்றான். மேலும், உங்களை விட்டும் ஒரே இறைவனான அல்லாஹ்வைத் தவிர, நீங்கள் வணங்கிவரும் தெய்வங்களைவிட்டும் நான் ஒதுங்கிக் கொள்கிறேன்!" (திருக்குர்ஆன்-19:41- 49)

வீட்டாருக்கு அழைப்புத் தந்த பிறகு தமது சமூகத்தார் பக்கம் அழைப்புப் பணியை இப்ராஹீம் நபி திசைத் திருப்புகிறார். பெரும் கவலையும்.. அக்கறையும் .. தைரியமும் .. விவேகமும் நிறைந்தது அந்த வரலாறு!
"அதற்கு முன்பும் இப்ராஹீமுக்கு நாம் நல்லறிவை வழங்கியிருந்தோம். மேலும், நாம் அவரை நன்கு அறிந்திருந்தோம். அவர் தம்முடைய தந்தையிடமும், தம் சமூகத்தாரிடமும் இவ்வாறு கூறியதை நினைத்துப் பாரும்!"

 - என்று திருக்குர்அன் அந்த வரலாற்றுச் சம்பவத்தை ஆரம்பிக்கிறது இப்படி:

"என்ன இது? நீங்கள் இந்த உருவச் சிலைகள் மீது இத்தனை ஆர்வத்துடன் பற்று கொண்டுள்ளீர்களே!"

அதற்கு அவர்கள் பதிலளித்தார்கள்: "எங்கள் மூதாதையர் வணங்கிவந்ததைதான் நாங்கள் செய்கிறோம்!"

"நீங்களும் வழி பிறழ்ந்திருக்கிறீர்கள். உங்கள் மூதாதையரும் பகிரங்கமான வழிகேட்டில் கிடந்தார்கள்"

"இப்ராஹீம் நீங்கள் உண்மையாகத்தான் சொல்கிறீரா? அல்லது கேலி செய்கிறீரா?"

"உண்மையாகத்தான் சொல்கிறேன். இந்த வானங்களையும், பூமியையும் படைத்து அவற்றுக்கு அதிபதியாக இருப்பவன் யாரோ அவனே உங்களின் அதிபதி. அதற்கு நான் சாட்சியளிக்கின்றேன்!" - என்கிறார் இப்பராஹீம் நபி.

சமூகத்து மக்கள் ஊருக்கு வெளியே நடைபெற்ற திருவிழாவுக்குச் சென்றிருந்தபோது, அவர்கள் போற்றிப் பாதுகாத்துவந்த சிலைகளை தூள்-தூளாக நொறுக்குகிறார். அவற்றில் பெரிய சிலையை மட்டும் உடைக்காமல் விட்டு வைக்கிறார். அதன் கைகளில் உடைக்க பயன்பட்ட கோடாறியை சொருகிவிடுகிறார்.

திரும்பி வந்த மக்கள் தங்கள் தெய்வங்கள் துண்டு.. துணுக்குகளாய் சிதறுண்டு கிடந்ததைக் கண்டார்கள். திடுக்கிட்டார்கள்.

"சிலை வணக்கம் கூடாது என்று பிரச்சாரம் செய்துகொண்டிருந்தவர் இளைஞர் இப்ராஹீம்தான்! அவர்தான் இத்தகைய செயலைச் செய்திருக்க வேண்டும் என்று கூட்டத்திலிருந்து ஒருவர் கூற மக்களின் கோபம் அவர் மீது திரும்புகிறது"

"இழுத்துக் கொண்டு வாருங்கள் அவரை! அவருக்கு எல்லோர் முன்னிலையிலும் தரப்போகும் கடும் தண்டனையைக் கண்டு இனி இதுபோல செய்ய வேறு எவரும் கனவில்கூட கற்பனைச் செய்யக்கூடாது!" - என்று கர்ஜிக்கிறார்கள்.

இளைஞர் இப்ராஹீம் அழைத்து வரப்படுகிறார்.

விசாரணை ஆரம்பமாகிறது.

விவேகமும், சாதுர்யமுமான தமது பதில்களால் மக்களின் சிந்தனையைக் கிளறி விடும் அரிய சம்பவம் அது.

"இப்ராஹீம் நீர்தானே எங்கள் தெய்வங்களை உடைத்தது? எங்கள் தெய்வங்களை இழிவுப்படுத்தியது?"

"இப்ராஹீம் சொன்னார்: என்னை ஏன் கேட்கிறீர்கள்? அதோ அந்தப் பெரிய சிலையின் கையில் உள்ள கோடாறியே சொல்லவில்லையா சிலையை உடைத்தது யார் என்று! அந்த சிலையையே கேட்டுப் பாருங்கள்!"

"இப்ராஹீம்! சிலைகள் எப்படிப் பேசுமய்யா!" - எந்த பதிலை நோக்கி சமூக மக்களை திருப்ப இப்ராஹீம் நபி முனைந்தாரோ அந்த பதில் துள்ளிக் கொண்டு வெளிப்பட்டது.

"சிலைகள் பேசா. அவை சக்தியற்றவை!"

உண்மைகள் வெளிப்படாமலிருக்க மக்கள் தங்களை கட்டுப்படுத்திக் கொண்டார்கள்.

"சிலைகள் பேசா. அவை சக்தியற்றவை!"

இது மக்களின் மனசாட்சியை உசுப்பிவிட அவர்கள் சற்று நேரம் உண்மைக்கு அடிபணிந்தவர்களாக தலைகுனிந்து நின்றார்கள்.

ஆனால், வம்பும், பிடிவாதமும் மூதாதையர்களின் மீது கொண்டிருந்த கண்மூடித்தனமான பற்றும் ... இவற்றுக்கும் மேலாக... அவர்களின் மனங்களில் நிறைந்திருந்த கோழைத்தனமும் அவர்கள் என்ன செய்கிறோம் என்று சிந்திக்க விடாமல் செய்தன. உண்மையைச் சொன்னதற்காக இப்ராஹீம் நபியை எதிரியாக்கிவிட்டன.

"எரித்துவிடுங்கள் இவரை! இதுதான் நாம் நமது தெய்வங்களுக்குச் செய்யும் உதவி!"


நெருப்புக் குண்டம் தயாரானது.

விண்ணைத் தொட்டிடும் தீப்பிழம்பாக கொழுந்து விட்டெரிந்தது அறியாமைகளின் கோபக் கணல்.

தக தகக்கும் அந்தத் தணலில் இப்ராஹீம் நபியை தூக்கி எறிகிறார்கள்.

மலைப்போன்ற அசையாத இறைநம்பிக்கை இறையருளைப் பெற்றுத் தருகிறது!

"நெருப்பே! நீ இப்ராஹீமுக்கு குளுமையாகவும், சாந்தமாகவும் ஆகிவிடு!"

- என்று இறைவனிடமிருந்து ஆணைப் பிறக்கிறது.

"கொழுந்து விட்டெரியும் நெருப்பு பூஞ்சோலையாக மாறி நின்றது. தனது அடியாரின் உள்ள உறுதியைக் கண்டு இறைவன் அவரைக் காத்துக் கொண்டான்"  (திருக்குர்ஆன் - 21:51-73)


மூஸா நபி பனீ இஸ்ராயீல்களின் அடிமைத் தளைகளைத் தகர்த்து இறைவனின் ஆணைப்படியே எகிப்திலிருந்து வெளியேறினார்கள்.

பொழுது புலர்ந்தது.

மூஸா நபியும், அவரது கூட்டத்தினரும் தப்பியது பிர்அவ்னுக்குத் தெரிந்தது. பெரும் படையுடன் அவன் அவர்களைப் பின் தொடர்ந்தான்.

மூஸா நபியும், பனீ இஸ்ராயீல்களும் பயணித்த வழியில் செங்கடல் குறுக்கிடுகிறது.

பின்புறத்திலோ பிர்அவ்னின் கொடிய படை! முன்புறமோ பாதையை மறைப்பது போல, பரந்து விரிந்த  செங்கடல்.


 இக்கட்டான அந்த நேரத்தில், இஸ்ராயீல்கள் பயந்து போகிறார்கள்.

"இனி நாம் தொலைந்தோம்!"- என்று அலறுகிறார்கள்.

ஆனால், மூஸா நபி கொஞ்சமும் கலங்கவில்லை. இறைவனின் மீதும் அவனது பாதுகாப்பின் மீதும் அசைக்க முடியாத நம்பிக்கையை அவர் கொண்டிருந்தார். "இறைவன் இருக்கின்றான் நம்மோடு.. கலங்காதீர்கள்!" - என்று தமது தோழர்களை சமாதானப்படுத்தினார்.

அதன் பிறகு, ஒரு சிறு கைத்தடி...

கால்நடைகளுக்கு இலைத் தழைகளைப் பறித்துப் போட உதவும் கைத்தடி...

பாதையில் ஊன்றி நடக்க உதவும் சாதாரணமான கைத்தடி...

அந்த அற்புதத்தை நிகழ்த்துகிறது.

உலகயியல் நடப்புகளில் ஒரு அசாதரணமான சம்பவம் அது. படைத்தவன் தனது படைப்புகளுக்கு "குன்.. ஆகுக!" என்றதும் நடக்கும் படைப்பியல் மாற்றம் அது.

எப்போதும் இணைந்திருப்பது நீரின் இயல்பு! அந்த இயல்பில் நடக்கும் மாற்றம் காலந்தோறும் இறைநம்பிக்கையாளர்களின் நம்பிக்கைக்கான உதாரணமாக காலப்பெட்டகத்தில் பதிந்து போனது. இறைநம்பிக்கையாளர்களின் மனங்கள் மூஸா நபியைப் போல இறைநம்பிக்கையில் எஃகாய் இருந்தால் கடல்கள் பிளக்கும்..! வழிகள் திறக்கும் என்பதற்கான உதாரணம் அது!

ஆம்... மூஸா நபியின் கைத்தடி இறை ஆணையின்படி கடலைப் பிளக்கிறது!

அந்த விறுவிறுப்பு மிக்க வரலாற்று சம்பவத்தைத் திருக்குர்ஆன் சொல்வதைக் கேளுங்கள்:

"மேலும், நாம் மூஸாவுக்கு, 'வஹீ-திருச்செய்தி' அறிவித்தோம்! "என் அடியார்களை அழைத்துக் கொண்டு இரவோடு இரவாகப் புறப்படுவீராக! நீங்கள் பின்தொடரப்படுவீர்கள். இதனபடி பிர்அவ்ன் (படைகளைத் திரட்டுவதற்காக) நகரங்களுக்கு ஊழியர்களை அனுப்பினான். (மேலும், சொல்லி அனுப்பினான்) இவர்கள் மிகச் சிறிய ஒரு கூட்டத்தினர்தான்! மேலும், இவர்கள் நம்மை மிகுந்த கோபமடையச் செய்துவிட்டார்கள். நாம் எப்போதும் விழிப்பாக இருக்கக்கூடிய கூட்டத்தினர் அல்லவா?" (திருக்குர்ஆன்- 26:52-56)

பொழுது விடிந்ததும், பிர்அவ்னும் அவனது படையினரும் பனீ இஸ்ராயீல்களைப் பின்தொடர்ந்து செல்கிறார்கள். இரு கூட்டத்தாரும் ஒருவரை ஒருவர் கண்டு கொண்டபோது, மூஸாவின் தோழர்கள், "திண்ணமாக நாம் பிடிபட்டுவிட்டோம்!"-என்று கூக்குரலிட்டார்கள். அதற்கு மூஸா கூறினார், "ஒருபோதும் இல்லை! என் இறைவன் என்னோடு இருக்கின்றான்! அவன் திண்ணமாக எனக்கு வழிகாட்டுவான்!

மூஸாவுக்கு நாம் வஹீயின் மூலம் கட்டளையிட்டோம். உமது கைத்தடியால் கடலை அடியும். உடனே கடல் பிளந்துவிட்டது. மேலும், அதன் ஒவ்வொரு பகுதியும் மாபெரும் மலை போன்றதாகிவிட்டது.

அதே இடத்திற்கு இரண்டாவது கூட்டத்தாரையும், நாம் நெருங்கி வரச்  செய்தோம்! மூஸாவையும் அவருடன் இருந்த அனைவரையும் நாம் காப்பாற்றிக் கொண்டோம். பிறகு மற்றவர்களை மூழ்கச் செய்தோம்!" - (திருக்குர்ஆன்-26:60-66)

-- இறைவன் நாடினால்.. அழைப்பது தொடரும்.

''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''
அழைப்பது நம் கடமை, முந்தைய தொடர்களை வாசிக்க இணைப்புகள்:

1. அந்தக் கடலோரக் கிராமத்தின் கதை : http://ikhwanameer.blogspot.in/2015/07/1_23.html

2. கிராமவாசியின் செயலும், நபிகளாரின் அணுகுமுறையும் : http://ikhwanameer.blogspot.in/2015/07/blog-post_49.html

3. படிப்பினை மிக்க அந்த இறைத்தூதரின் வரலாறு : http://ikhwanameer.blogspot.in/2015/08/3.html

4. அழைக்க வேண்டும் ஏன்? : http://ikhwanameer.blogspot.in/2015/08/4.html

5. சகல லோகங்களின் இறைவன் : http://ikhwanameer.blogspot.in/2015/08/5.html

6. சான்று வழங்குதல் என்றால் என்ன? http://ikhwanameer.blogspot.in/2015/08/6_14.html

No comments:

Post a Comment