Saturday, August 15, 2015

வைகறை நினைவுகள் – 13, ஒரு கேள்விக்கு விடை தேடி நான்


1990 களின் முற்பகுதி என்று நினைக்கிறேன்.

வேலூர் இஸ்லாமிக் சென்டரில் ஜமாஅத்தே இஸ்லாமியின் மாநில மாநாடு ஒன்று நடந்தது. அதற்கு சிறப்பு விருந்தினராக அன்றைய அகில இந்திய தலைவர் மெளாலனா சிராஜுல் ஹஸன் கலந்து கொண்டார்.

ஜமாஅத்தே இஸ்லாமியின் தமிழகத்து பெருந்தலைவர்கள் எல்லாம் அந்த நிகழ்ச்சியில் பங்கெடுத்திருந்தனர். மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் உறுப்பினர்கள், ஊழியர்கள் என்று தொண்டர்கள் திரளாக வந்திருந்தனர்.

நிகழ்ச்சியில், கேள்வி, நேரம் வந்தது. தொண்டர்களின் பல்வேறு கேள்விகளுக்கு பதில் சொல்லப்பட்டாலும் மெளாலனா சிராஜுல் ஹஸன் ஒரு விஷயத்தை அழுத்தம், திருத்தமாக சொன்னது எனக்கு சரியென்றே பட்டது.

‘மக்கள் பிரச்னைகளுக்காக ஜமாஅத் எடுக்கும் போராட்ட நிலைபாடு என்ன?’ என்பது ஒரு பிரதான பிரச்னையாக கேள்விகளில் எழுப்பப்பட்டது.

ஜமாஅத்தின் தொண்டர் பலம் மிகவும் குறைவாக இருந்த அந்த சூழலில் மெளலானா, “நாம் வானத்தில் மிதந்தவாறு பிரச்னைகளைப் பார்க்க கூடாது. பூமியில் இறங்கிப் பார்க்க வேண்டும்!” – என்றார் அதாவது அவர் சொல்ல வந்தது, ‘தொண்டர்கள் குறைவாக உள்ள ஒரு சூழலில், அதிக பணிகளை எதிர்பார்க்க முடியாது. இந்நிலையில், செய்ய வேண்டிய முதன்மை பணி என்ன? என்ற நிகழ்வை யதார்த்தமாக பாருங்கள்!” – என்பதுதான்!

எனக்குள்ளும் ஒரு கேள்வி எழுந்தது.

“மக்கள் பிரச்னைகளுக்கான போராட்டங்களில், ஜமாஅத்தின் வழிமுறைகள் என்ன?” – இந்தக் கேள்வியை நான் கேட்கவும் செய்தேன்.

இந்த கேள்வியின் விரிவை நீங்கள் புரிந்து கொண்டிருப்பீர்கள் என்று நினைக்கிறேன்.


‘பொதுஜனம் பாதிக்கப்படும்போது அவர்களின் அந்த அடிப்படைப் பிரச்சனைகளை தீர்ப்பதற்காக எத்தகைய போராட்ட வழிமுறைகளை கையாள வேண்டும்? இது சம்பந்தமாக தனது தொண்டர்களுக்கு ஜமாஅத் வலியுறுத்துவது என்ன?’- என்பதே கேள்வியின் விரிவாக்கம்.

கம்யூனிஸ்ட் இயக்கங்களிலிருந்து வெளிவந்த என்னைப் போன்றோருக்கு இந்தக் கேள்விக்கான பதில் எளிதானது. அந்த ஒற்றைவரி பதில் இதுதான்: ”மக்களைத் திரட்டி, தெருவில் இறங்கி போராட வேண்டும்!”.

போராட்டங்கள் இன்றி மனித வாழ்க்கைக்கான இருப்புகள் சாத்தியமேயில்லை! என்பதே உலக வரலாறு. உலகின் ஒவ்வொரு ஜீவராசியும் தனது இருப்பைத் தற்காத்துக் கொள்ள ஒவ்வொரு கணமும் நடத்தும் வாழ்வியல் போராட்டம் இது.

மௌலான சிராஜுல் ஹஸனை நோக்கி எனது கேள்வியின் நீட்சி இன்னும் தொடர்ந்தது. “… ஒருவேளை, அப்படி (தெருவில் இறங்கி) போராடும்போது, வன்முறையற்ற அந்த போராட்டமாயினும் வெகுஜனம் பாதிக்கப்படுமே! அத்தகைய போராட்டங்களால் வெகுஜனங்களின் இயல்பான வாழ்க்கை பாதிக்கப்படுவதற்கான வாய்ப்பிருக்கிறதே! இதற்கு ஜமாஅத் எத்தகைய வழிமுறைகளை தொண்டர்களுக்கு போதிக்கிறது?”

மெளலானாவுக்கு தமிழ் தெரியாது. அவர் மெளலான மஸ்தான் அலி பாகவீயின் உதவியோடு தமிழில் மொழிமாற்றி உரையாற்றிக் கொண்டிருந்தார்.

எனது இந்த கேள்விக்கான பதிலை மௌலான மஸ்தான் அலி பாகவியால் உள்வாங்க முடியவில்லை. அவர் என்னை சமாதானப்படுத்த முயன்றதையும் நான் ஒப்பவில்லை.

கடைசியில் அந்த சர்ச்சை என்னவென்று (நான் எனது சந்தேகங்களை அகில இந்திய தலைவரிடம் தெளிவுப்படுத்திக் கொள்ள மட்டுமே கேட்டேன். மற்றபடி எந்த வாத, விவாதங்களிலும் ஈடுபடும் உள்நோக்கமே இல்லை) மெளலான சிராஜுல் ஹஸன், மெளலானா மஸ்தான் அலி பாகவியிடம் விசாரிக்க… அவர் என்னை அறிமுகப்படுத்திய விதத்தில் அந்த மேடையில் எனக்கு அளிக்கப்பட்ட பதில் என்ன தெரியுமா?

“அவர் கம்யூனிஸ இயக்கத்திலிருந்து வந்தவர். அப்படிதான் கேட்பார். விடுங்கள்!”

நான் பரிதாப நிலைக்கு ஆளானேனா? அல்லது எனது கேள்விகளுக்கு பதில் அளிக்க முடியாமல் ஒற்றைவரியில் இப்படி சொன்ன அந்த தலைவர்கள் பரிதாபத்துக்குரியவர்களா என்பதை நீங்களே தீர்மானித்துக் கொள்ள வேண்டும்.

நான் அறிந்தவரை தம்மை தற்காத்துக் கொள்ளும் ஒரு கட்டத்தைத் தவிர, எந்தவிதமான ஆயுதமும் ஏந்தாமல், ஆட்சியாளரை நடுங்க நடுங்க வைத்த அன்பு நபிகளாரைப் போன்ற உறுதியான ஒரு போராளியை நான் இதுவரையிலும் கண்டதில்லை. இனியும் இந்த உலகம் அத்தகைய போர்க்குணம் வாய்ந்தவரை காணப் போவதுமில்லை! அன்னாரின் வாழ்க்கை முழுவதும் சிந்தாந்த ரீதியாக அடிமைப்பட்டுக் கிடந்த எளியோரின் தளைகளை தகர்த்தெறியும் ஒரு வர்க்கப் போராட்டமாகவே எனக்குப்படுகிறது.


நீங்கள் அனைவரும் என்னை மன்னிக்க வேண்டும் நான் நபிகளாரை இப்படி பார்ப்பதற்கு!

அண்ணலார் மனித இனத்தைக் கூறுப்போடவில்லை என்பது உண்மைதான். ஆனால், ஒடுக்கப்பட்டவர்களின், பிற்படுத்தப்பட்டவர்களின் முதன்மைத் தலைவராகவே அவர் இருந்தார் என்பதையே நான் அழுத்தம் திருத்தமாக சொல்கிறேன்.

கூர்முனை மழுங்காதவனாகவே அதன்பின்னும் ஜமாஅத்துடனான எனது பயணம் தொடர்ந்தது.

ஆனால், இந்த கேள்விக்கான விடை தேடல் தொடர்ந்து கொண்டேயிருந்தது.

சகோதர, சகோதரிகளே! நண்பர்களே! இந்த இடத்தில் சித்தாந்த ரீதியாக என்னை வடிவமைத்த சில ‘குருமார்களை’ உங்களுக்கு அறிமுகப்படுத்த விரும்புகிறேன்.

குருமார்கள் என்ற இந்த சொல்லாடல் நான் நயம் கருதிதான் சொன்னேன். இதை சர்ச்சையாக்க வேண்டாம்!

என்னை வடிவமைத்த எனது ஆசான்களில் மிகவும் முக்கியமானவர் மூதறிஞர் ஜமீல் அஹ்மது சாஹெப். ஒரு அசாத்தியமான அறிவுஜீவி. பெரும் படிப்புகளை படித்த பட்டதாரி இல்லை ஆயினும், பட்டதாரிகளையெல்லாம் தனது அறிவாற்றலால் திணறிடிப்பவர். உருது தாய்மொழியாயினும், தமிழில் பெரும் புலமையைப் பெற்றவர். அவரது அறிவார்த்த பாசறையில் பயிலும் பாக்கியம் அளித்த இறைவனுக்கே எல்லா புகழும்.

 இரவு நேரங்களில், அவரிடம் பேச புறநகரிலிருந்து நான் புறப்பட்டு பெரம்பூரிலுள்ள ஐ.எஃப்.டிக்கு வருவேன். அந்த சந்திப்புக்குபிறகு நடு இரவில் மீண்டும் எனது இருப்பிடத்துக்கு திரும்பி அதிகாலையிலேயே எனது பணிக்கும் செல்ல வேண்டும். அறிவுதேடல் முன்பாக இவை எனக்கு பெரும் சிரமங்களாக படவில்லை.

என்னுடைய சந்தேகங்களை தெளிவுப்படுத்திக் கொள்ள கேள்வி கணைகளால் ஜமீல் அஹ்மது சாஹெப்பைத் துளைத்தெடுப்பேன். எல்லா கேள்விகளுக்கும் நான் சமாதானம் அடையும்வரையில் பதில் அளிப்பார்.

சமரசம், தினமணி, மணிச்சுடர் போன் பத்திரிகைகளில் முன்னணி கட்டுரையாளராக நான் இருந்த நேரம்.

எனது எழுத்துக்களை சிலர் முடக்க நினைத்தபோது, நான் சோர்ந்து போன அத்தருணங்களில், “இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள். உங்கள் திறமைகளுக்கு நீங்கள்தான் இறைவனிடம் பதில் அளிக்க வேண்டும். அவர்கள் அல்ல!” – என்று திரும்பவும் எழுதுகோலை கையிலெடுக்க வைப்பார். நான் எழுதுகிறேனா இல்லையா என்று தொடர்ந்து கண்காணிப்பார். சில தலைப்புகளைக் கொடுத்து எழுதவும் சொல்வார்.

ஏற்கனவே தெலுங்கு மொழியை அறிந்திருந்த என்னை ஹைதராபாத்திலிருந்து, சில புத்தகங்களை வரவழைத்துக் கொடுத்து அவற்றை மூல நூல்களாகக் கொண்டு எழுத வைப்பார்.

மூதறிஞர் ஜமீல் அஹ்மதுவைப் பற்றி நான் உங்களிடம் இன்னும் விரிவாக பேச வேண்டியிருக்கிறது. இறைவன் நாடினால், அவற்றை பிறிதொரு சந்தர்ப்பத்தில் பார்ப்போம்.

இந்த நேரத்தில், அறிஞர் பெருமகனாரிடம் நான் தேடி விடை கண்ட ஒரே ஒரு விஷயத்தை மட்டும் சொல்லி முடித்துவிடுகிறேன்.

வெகுஜன போராட்டங்கள் குறித்து ஜமாஅத்தின் நிலைப்பாட்டை அறிய ஒருநாள் மூதறிஞர் ஜமீல் அஹ்மதுவிடமே என் ஐயப்பாட்டை எழுப்பினேன்.

“இக்வான் சாப்! ஜார்ஜ் பெர்ணாட்ஷா பற்றி உங்களுக்குத் தெரியும். பேரறிஞர். பழுத்த அறிவுஜீவி. அவர் ‘பேவியன் சொஸைட்டி’ என்ற அறிவு ஜீவிகள் கொண்ட ஒரு அமைப்பை துவக்கி வழி நடத்திக் கொண்டிருந்தார். ஒருமுறை மக்கள் பிரச்னைகளை கையிலெடுத்து அந்த அமைப்பினர் லண்டன் தெருக்களில் ஊர்வலம் ஒன்றை நடத்தினார்கள். அந்த அமைதி ஊர்வலத்தில் கலவரம் வெடித்தது என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன். நாம், முதலில் தொண்டர்களின் ஒழுக்க விழுமியங்களை வடிவமைப்போம். போதிய ஆள்வளம் சேர்ந்ததும் அடுத்த கட்டம் நகர்வோம்! இதுதான் நபிகளாரின் வழிமுறை!” – மிக எளிதாக, எளிமையாக எனக்கு விளக்கி விட்டார்.

நடந்து முடிந்த ஆம்பூர் கலவரமும், அங்கு தொடர்ந்து குடிகொண்டுள்ள பதற்றமும் இந்த உரையாடலோடு ஒப்பிட்டு என் நினைவில் எழுவதைத் தடுக்க முடியவில்லை.

இறைவன் நாடினால் வைகறை நினைவுகள் தொடரும்.

'''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''
வைகறை நினைவுகள் முந்தைய தொடர்களை வாசிக்க:
'''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''
 
வைகறை நினைவுகள் பகுதி 2: இந்நேரம் புதைச்ச இடத்தில் புல் முளைச்சிருக்கும்: http://ikhwanameer.blogspot.in/2015/07/2.html 
வைகறை நினைவுகள் பகுதி 3: நிழலாய் நின்ற அந்த இருவர்: http://ikhwanameer.blogspot.in/2015/07/3.html 
வைகறை நினைவுகள் பகுதி 4: நீண்ட தேடல்களின் அந்த முடிவில்: http://ikhwanameer.blogspot.in/2015/07/4.html 
வைகறை நினைவுகள் பகுதி 5: மறக்க முடியாத அந்த இரவு: http://ikhwanameer.blogspot.in/2015/07/5.html 
வைகறை நினைவுகள் பகுதி 6: அதிபதியின் தர்பாரில் ஆஜரான ஓர் அடியான்: http://ikhwanameer.blogspot.in/2015/07/6.html 
வைகறை நினைவுகள் பகுதி 7: சுமக்க முடியாத பாரத்தை சுமத்துவதில்லை: http://ikhwanameer.blogspot.in/2015/07/7.html 
வைகறை நினைவுகள் பகுதி 8: யாகூப் மேமன் தண்டனை கூனி குறுகிப் போகிறேன் நான்: http://ikhwanameer.blogspot.in/2015/07/7_31.html 
வைகறை நினைவுகள் பகுதி 9: இறைவனின் பிரதிநிதியா? குரங்கின் சந்ததியா?: http://ikhwanameer.blogspot.in/2015/08/9.html 
வைகறை நினைவுகள் பகுதி 10: http://ikhwanameer.blogspot.in/2015/08/10.html 
வைகறை நினைவுகள் பகுதி 11 : நான் தொலைந்து போனது இங்குதான் : http://ikhwanameer.blogspot.in/2015/08/11.html 
வைகறை நினைவுகள் பகுதி 12: இதோ என் இப்ராஹீமா: http://ikhwanameer.blogspot.in/2015/08/11_14.html

No comments:

Post a Comment