Friday, August 14, 2015

வைகறை நினைவுகள் – 12, அதோ என் இப்ராஹீமா..!இரண்டு நாட்களுக்கு முன் நோன்பு துறப்பதற்கான ஒரு நிகழ்ச்சிக்காக அழைப்பு வந்திருந்தது. 27.06.2015 அன்று மாலை சென்னை எண்ணூர் காமராஜர் நகர் வியாபாரிகள் சங்க மாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சி அது.

ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் எண்ணூர் பெண்கள் வட்டம் சார்ப்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அந்த நிகழ்ச்சியின் தொகுப்பாளர் சகோதரி ஏ. சபீனா. துவக்க உரையாற்றியது எஸ். சாஜிதா. சிறப்புரையாற்ற மானுட வசந்தம் தயாரிப்பாளர் வி.எஸ். முஹம்மது அமீன் வந்திருந்தார். நிகழ்ச்சியின் துவக்கமாக சகோதரி எஸ்.சூரத்பானு அரபியில் திருக்குர்ஆன் வாசிக்க, அதன் தமிழ் மொழியாக்கத்தை சகோதரி என். ஃபாத்திமா வாசித்தார்.


ஆண்டுதோறும் நடைபெற்று வரும் பெண்களுக்கான இந்த நிகழ்ச்சிக்கு நூற்றுக்கணக்கான பெண்கள் திரண்டு வருவார்கள். அதை ஆவணப்படுத்த நான் சென்றிருந்தேன்.

மூச்சைப் பிடித்துக் கொண்டு நிகழ்ச்சியில் துவக்க உரையாற்றிக் கொண்டிருந்த எஸ். சாஜிதா… முழு புர்கா தரித்து சரளமாய் பேசிக் கொண்டிருந்த சாஜிதா மறைந்து போய் இப்ராஹீமா உயிர் பெற்றாள்.

ஆம்.. சுமார் இருபது ஆண்டுகளுக்கு முன் குட்டைப் பாவாடை அணிந்து நவநாகரீக இளைஞியாக எஸ்.ஐ.ஈ.டி கல்லூரி மாணவியாக அறிமுகமானவள்தான் இப்ராஹீமா.


இறைத்தூதர் நபிகளாரின்ள கொள்கை வழி வாரிசுகள் என்ற ரீதியில் அன்னாரின் இயக்கத்தை முன்னெடுத்து செல்ல வேண்டிய பொறுப்புணர்வு இஸ்லாத்தைத் தழுவியவுடனேயே என்னைத் தொற்றிக் கொண்டது.

ஒருநாளின் பெரும் பகுதியை பணியிடம் ஆக்கிரமித்துக் கொண்டது. அதன்பின், மாலையிலிருந்த இரவு உறங்கும்வரையிலான மற்ற நேரமோ வீடு மற்றும் வாழும் பகுதி மக்களுக்கு என்று நேரத்தைப் பகுத்து பணியாற்றிக் கொண்டிருந்த காலம்.

இறைவனின் பிரதிநிதி ‘கலீஃபா’ என்ற அந்தஸ்தில் அந்த பொறுப்புணர்வை சீரும், சிறப்புமாக செய்ய வேண்டும் என்று கங்கணம் கட்டிக் கொண்டு செயல்பட்டு வந்த நேரம்.


அசோக் லேண்ட் நிறுவனம், மற்றும் வாழும் பகுதி ஆகியவற்றில் முதல் முதலாவதாக செய்த பணி ஒரு நூலகம் ஆரம்பித்தது. சமூகத்தாரிடையே வாசிக்கும் திறனை அதிகரித்தது. மற்றும் அவர்களுக்கு அறிவூட்டியது. அதற்கு இணையாக திருக்குர்ஆனை வாசிக்க சிறுவர் முதல் முதியவர்வரை மதரஸா - பாடசாலை மற்றும் முதியோர் கல்விக்கான திட்டம் தீட்டியது.

பெரும் கூச்ச சுவாபி நான்; இப்போதும்தான்!

அப்படிப்பட்ட நான், அதுவரையிலும் கற்றுக் கொண்டிருந்தவற்றை கற்பிக்க தேர்வு செய்தது சிறார், சிறுமிகளை!

அது ஒரு அழகிய சுழற்சி. கற்றுக் கொண்டே கற்பிப்பது ஒரு உன்னத அனுபவம். அது இதுவரையிலும் என்னுள் தொடர்ந்து கொண்டேயிருக்கிறது.

அறிவு உங்களின் காணாமல் போன சொத்து! அது எங்கிருந்தாலும் தேடிக் கொள்ளுங்கள்!” – என்ற அன்பு நபிகளாரின் பொன்னுரையை சிரமேற்கொண்டேன். “அறிவைப் பெற்று அதைப் பரப்புபவரே உங்களில் சிறந்தவர்!” - என்ற அண்ணல் நபியின் கண்ணல் மொழியை கண்ணில் ஒற்றிக் கொண்டேன். அதுவே சிறப்புக்குரியதானது!


எஸ்.ஐ,ஓ அமைப்பின் பாலர் வட்டமாக பிள்ளைகள் ஒருங்கிணைக்கப்பட்டு அவர்களின் அறிவு மற்றும் ஒழுக்கப் பயிற்சிக்கான முயற்சிகள் நடைபெற்று வந்தன. அந்நிலையில்தான் சாஜிதா.. மன்னிக்கவும் இப்ராஹீமா என்று அழைப்பதிலேயே ஜீவனிருக்கிறது. அதனால், நான் அந்த பெயரையே குறிப்பிடுகிறேன்.

பாலர் வட்டத்தின் பகுதிவாரி கேந்திரமாக இப்ராஹீமாவின் வீடும் அமைந்தது. உஸ்தாத் என்ற அந்தஸ்து பெருமளவு மதிப்பைத் தேடி தரவல்லது. அதனால், எல்லா இஸங்களையும் தூக்கி வீசிவிட்டு இஸ்லாத்தின் பக்கம் விரைந்து வாருங்கள் என்ற அழைப்பை அவர்கள் தட்ட முடியாமல் தவித்தார்கள். மாலை நேரத்தில் அரபி பாடசாலை, வாரந்தோறும் பெண்களுக்கான சிறப்புரைகள் என்று கடந்தது காலம்.

நான் ஆரம்பத்திலேயே குறிப்பிட்டேன்: இஸ்லாத்தின் செய்தியை மௌன மொழியில் நடத்தையில் செயல்படுத்திக் காட்ட முடியும் என்று!

பெரும் ஈடுபாட்டுடன் சிரத்தையுடன் மேற்கொள்ள வேண்டிய பணி அது. தன்னை அடுத்தவருக்குள் பார்க்கும் முயற்சி.

இத்தகைய ஒரு தொடர் முயற்சியில்தான் இஸ்லாத்தின் உறுப்பினராக தன்னை மாற்றிக் கொண்டாள் இப்ராஹீமா. இறைவனின் பேரருள் அது. இந்த மாற்றங்களுடனேயே அவளது கல்லூரி வாழ்க்கைத் தொடர்ந்தது.

எண்ணூரிலிருந்து, சென்னை சென்ட்ரல் ரயில் மார்க்கமாகவும், அங்கிருந்து பேருந்து வழியிலுமாய் அவளது கல்லூரி நாட்கள் நகர்ந்து கொண்டிருந்த ஒரு நாள்.

அழுதுகொண்டே வந்த இப்ராஹீமா தன்னால் இனியும் கல்லூரிக்கு போகமுடியாது என்று முரண்டு பிடித்தாள். அக்கறையோடு விசாரித்தபோதுதான் உண்மை வெளிப்பட்டது.

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் சில கல்லூரி மாணவர்கள் தினமும் அவளைப் பின்தொடர்ந்து வந்து, பேய், பிசாசு (புர்கா அணிவதால்) தொல்லைத் தருவது தெரிந்தது.

 இப்ராஹீமாவின் தந்தையார் வெட்டு, குத்து என்று குதித்து, இனி கல்லூரிக்கு போக வேண்டாம் என்று கட்டளையிட்டுவிட்டார். இதைக் கேள்விப்பட்ட நான், அந்த விவகாரத்தை தீர்ப்பதற்கு பொறுப்பேற்றுக் கொண்டு அவர் கவலைப்படாமலிருக்கும்படி அறிவுறுத்தினேன்.

முயற்சிகளின் முதலாவது வழிமுறையாக கூடுமானவரை எதிர்வினை எழாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். முடிந்தளவு சாத்வீக வழிமுறைகளை கையாளுவதுதான் இதன் இலக்கு.

அதன்படியே ஓரிரு நாட்களிலேயே நிறுவனத்தில் அரைநாள் விடுப்பு எடுத்துவிட்டு தனி ஆளாகவே சென்ட்ரல் நிலையம் சென்றேன்.

என் வருகை இப்ராஹீமாவுக்கும் தெரியும். அவள் ஆட்களை அடையாளம் காட்டிவிட்டு ஒதுங்கிக் கொள்ள வேண்டும் என்பதே அவளிடம் ஒப்படைக்கப்ட்ட பொறுப்பு.

அதன்படியே கல்லூரியிலிருந்து திரும்பிவந்த இப்ராஹீமா தனக்கு தினமும் தொல்லைத் தரும் நபர்களை சைகையால் அடையாளம் காட்டிவிட்டு பெண்கள் பெட்டியில் ஏறிக் கொண்டாள்.

ஒரு இளைஞர் பட்டாளம் எல்லோரும் கல்லூரி மாணவர்களாகவே இருக்க வேண்டும்.

அவர்களில் தனியாக இருந்த ஒரு மாணவனின் தோளில் கையைப் போட்டவாறு அப்படியே முன்னழைத்துச் சென்றேன்.

அந்த குறுகிய தொலைவிலேயே நான் இப்ராஹீமாவின் அண்ணன் என்று பரிச்சயம் செய்து கொண்டேன்.

பயந்து போன அந்த இளைஞன் என்னிடமிருந்து விடுவித்துக் கொள்ளவும், நான் அவனை ஏதும் செய்துவிடுவேனோ என்ற பயத்திலும் தனது நண்பர்களை சத்தம் போட்டு அழைக்கலானான்.

நிலைமை எனக்கு பாதகமாக திரும்பி விடுவதற்குள் எனது அழுத்தமான அறிமுகமாக பத்திரிகையாளன் என்று அடையாளப்படுத்திக் கொண்டேன். அப்போது நான் சமசரம், தினமணி மற்றும் மணிச்சுடரில் சுதந்திர இதழியலாளராக பணியாற்றி வந்தேன் என்பது குறிப்பிட்டத்தக்கது. அந்த சொல்லாடல் அவர்களை அச்சுறுத்தி மதிப்பச்சத்தோடு என்னிடம் உரையாற்ற வைத்தது.

நான் யோசித்து வைத்திருந்தவாறே சொன்னேன்: “தம்பிங்களா, உங்க எல்லோரையும் இதோ இப்பவே போலீஸீலே பிடிச்சுக் குடுத்திட என்னால் முடியும். ஆனால், உங்க எதிர்காலத்து மேலே எனக்கிருக்கிற அக்கறையாலே அதை செய்ய மனம் வரவில்லை.

எங்க சமுதாயத்திலே படிச்ச பெண்கள் மிகவும் குறைவு. அதிலேயும் கஷ்டப்பட்டு வர்ர பெண்களும் உங்களைப் போன்றவர்கள் தருகின்ற தொந்திரவால் பாதியிலேயே படிப்பை விட்டுடுறாங்க!

இந்த விஷயம் எங்கப்பாவுக்கு தெரிஞ்சா என் தங்கையை கல்லூரியை விட்டு நிறுத்திடுவார். என்ன சொல்றீங்க? கல்லூரியை விட்டு நிறுத்திடவா?”

பதறிப்போன அந்த மாணவர்கள், “அய்யய்யோ! சார்.. அப்படியெல்லாம் செஞ்சிடாதீங்க. இனி உங்க தங்கை எங்க தங்கை மாதிரி. நாங்க அவருக்கு முழு பாதுகாப்பா இருப்போம்!” – என்று பதறி நின்றார்கள்.

“ரொம்பவும் சந்தோஷம். உங்க பாதுகாப்பு எதுவும் எங்களுக்கு வேண்டாம். நீங்க தொல்லைத் தராமல் இருந்தாலே போதும்!” என்றவாறு விடைப் பெற்றுக் கொண்டேன்.

இப்படி தாயாகவும், தந்தையாகவும் நிழலிட்டு வளர்ந்தவள்தான் இப்ராஹீமா. எனது பிரத்யேமான சிஷ்யை. எழுத, படிக்க. பேச என்று அனைத்து விஷயங்களின் அறிவும் ஊட்டி வளர்க்கப்பட்டவள்.

இந்த பணியை எனது வீட்டார் கிண்டலாக இப்போதும் சொல்வார்கள். அதிலும் எனது இரண்டாவது மகள் மர்யம், ‘அம்மா! அப்பா ஊரெல்லாம் தயார் செய்தாருமா.. நம்மை கண்டுக்காம விட்டுட்டாரும்மா!” என்பாள்.

இறைவழியில் துவக்கி வைத்த இப்ராஹீமாவின் பயணம் திருமணம் என்ற பந்தத்தால் தடைப்பட்டு போகக் கூடாதென்று அவளுக்கு வரன் பார்க்கும் உறவினராய் மாறி எனது தம்பியையே கணவனாக்கினேன். அதனால் இதுரையிலும் எனது சித்தி மற்றும் அவரது (எனது அம்மாவின் உடன்பிறந்த தங்கை) குடும்பத்தார்க்கு நானும், எனது குடும்பத்தாரும் தீராத பகையாளிகளாக ஆனதும் பின்கதை.

இறைவனின் பெரும் கிருபையால் இன்று ஜமாஅத் பெண்கள் வட்டத்து இளம் தலைவியாக உருவெடுத்து வருகிறாள் இப்ராஹீமா.

இதோ மேடையில் என்னமாய் பேசுகிறாள் பாருங்கள் என் இப்ராஹீமா!

இறைவன் நாடினால்… வைகறை நினைவுகள் நினைவில் எழும்..

''''''''''''''''''''''''''''''''
வைகறை நினைவுகள் முந்தைய தொடர்களை வாசிக்க:
'''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''
வைகறை நினைவுகள் பகுதி 1: கருணையாளனான இறைவன் அவரது பாவங்களை மன்னிப்பானாக:  - http://ikhwanameer.blogspot.in/2015/07/1.html
வைகறை நினைவுகள் பகுதி 2: இந்நேரம் புதைச்ச இடத்தில் புல் முளைச்சிருக்கும்: http://ikhwanameer.blogspot.in/2015/07/2.html
வைகறை நினைவுகள் பகுதி 3: நிழலாய் நின்ற அந்த இருவர்: http://ikhwanameer.blogspot.in/2015/07/3.html
வைகறை நினைவுகள் பகுதி 4: நீண்ட தேடல்களின் அந்த முடிவில்: http://ikhwanameer.blogspot.in/2015/07/4.html
வைகறை நினைவுகள் பகுதி 5: மறக்க முடியாத அந்த இரவு: http://ikhwanameer.blogspot.in/2015/07/5.html
வைகறை நினைவுகள் பகுதி 6: அதிபதியின் தர்பாரில் ஆஜரான ஓர் அடியான்: http://ikhwanameer.blogspot.in/2015/07/6.html
வைகறை நினைவுகள் பகுதி 7: சுமக்க முடியாத பாரத்தை சுமத்துவதில்லை: http://ikhwanameer.blogspot.in/2015/07/7.html
வைகறை நினைவுகள் பகுதி 8: யாகூப் மேமன் தண்டனை கூனி குறுகிப் போகிறேன் நான்: http://ikhwanameer.blogspot.in/2015/07/7_31.html
வைகறை நினைவுகள் பகுதி 9: இறைவனின் பிரதிநிதியா? குரங்கின் சந்ததியா?: http://ikhwanameer.blogspot.in/2015/08/9.html
வைகறை நினைவுகள் பகுதி 10: மாஸ்டர் அண்ணாமலை: http://ikhwanameer.blogspot.in/2015/08/10.html 
வைகறை நினைவுகள் பகுதி 11:நான் தொலைந்து போனது இங்குதான்: http://ikhwanameer.blogspot.in/2015/08/11.html

No comments:

Post a Comment