Monday, August 3, 2015

வைகறை நினைவுகள் - 10: மாஸ்டர் அண்ணாமலைஒன்பதாவது படித்துக் கொண்டிருந்த நேரமது.

பள்ளிக்கூடங்கள், ‘கல்விப் பணம் பறிக்கும் தொழிலகங்களாக’ மாறாத காலம்.

அதனால், எண்ணூர், கத்திவாக்கம் அரசினர் உயர்நிலைப் பள்ளி (தற்போது மேல்நிலைப் பள்ளி) என்னைப் போன்ற ஏழை மாணவர்களின் அறிவின் சுரங்கமாக இருந்தது. அற்புதமான ஆசிரியர்களின் கடினமான வடிவமைப்பின் அழகியல் வடிவமைப்பே நாங்கள்! பேறு பெற்றவர்கள்!

என் அறிவின் ஊற்றாக இருந்த அந்த ஆசிரிய, ஆசிரியை தேவதைகளின், அறிவுச்சுடரேற்றிய அந்த அம்மா, அப்பாக்களின் நினைவுகள் இறைவன் நாடினால், பிறிதொரு நேரத்தில்.

மாலையில் பள்ளி முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது, வழியில், புதரில் கருப்பும், வெள்ளையும் கலந்து, ரோஸ் வண்ண மூக்குடன் ஒரு அழகான நாய்க்குட்டி.

இயற்கை மற்றும் உயிரினங்களின் மீதான நேசிப்பு என் ‘வேர்களின்’ எந்த புண்ணியவான், புண்ணியவதிக்கு இறைவன் அருள்புரிந்தானோ தெரியவில்லை. அந்த மரபணு, விழுதுகளான என்னையும், எனக்கு அடுத்ததாக எனது இளைய மகள் மர்யத்தையும் தொற்றிக் கொண்டது.

செடிகளும், வளர்ப்புப் பிராணிகளும் இல்லாமல் என் வாழ்க்கையே இல்லை என்பது இளம் பருவத்திலிருந்தே ஆரம்பித்துவிட்டது.


அவ்வகையில், நான் குடியிருந்த குடிசை வீட்டைச் சுற்றி தோட்டமிட்டிருந்தேன். தெருவில் வளர்ப்பதற்கு ஆளில்லாத குட்டி நாய்களுக்கும், பூனைக்குட்டிகளுக்கும் என் சட்டையின் கதகதப்புக்குள் புகலிடம் அளித்தேன்.

நாய்களின் மீதான இந்த சிநேகிதம் இனியும் என்னால் பராமரிக்க முடியாது என்ற நிலைமை ஏற்பட்ட, சமீபகாலம்வரை இருந்தது.

பாதுகாப்புக் கருதி வளர்க்கப்பட்ட அவற்றை வீட்டிலிருந்து அப்புறப்படுத்தி வளர்ப்பதற்காக என்று பத்துக்கு பத்து அளவில் சிறு வீடே அமைத்திருந்தேன்.

கல் சுவர்கள் எழுப்பி, மேலே கல்நார் தகடுகள் இட்டு, தமிழகத்து இனமான கோம்பை, சிப்பிப்பாறை முதற்கொண்டு ஜெர்மன் ஷெப்பர்ட்டு, டால்மேஷன், டாபர்மேன், கிரேட் டேன் என்று மிகச் சிறந்த காவல் நாய்கள் என்னிடம் ஒவ்வொரு காலத்துக்கும் ஏற்றார் போல இருந்தன.

என்னைக் கேட்டால் உலகிலேயே மிகவும் அன்புள்ள விசுவாசம் கொண்ட இனம் நாய் இனம் என்றுதான் சொல்லுவேன். அந்த நண்பனின் கண்களை நேருக்கு நேர் சந்திக்கும் வாய்ப்பு உங்களுக்கு வாய்க்குமானால், கண்களில் அது வெளிப்படுத்தும் அன்பில் நீங்கள் கரைந்துப் போவீர்கள் நண்பர்களே!

இரத்தக் கழிச்சல் நோய்த் தாக்கிய ஜெர்மன் ஷெப்பர்ட் இனத்து எனது தோழி ஒருத்தி, வெளியூருக்கு சென்றிருந்த நான் திரும்பிவரும்வரை தனது உயிரைக் கையில் பிடித்து வைத்திருந்தாள் தெரியுமா உங்களுக்கு? நான் திரும்பி வந்ததும் என் மடியில் உயிர் நீத்த நெஞ்சைப் பிழியும் நிகழ்வு அது. தனது எஜமானன் மீது அந்த உயிரினம் கொண்ட அளவுக் கடந்த விசுவாசத்தால் நான் நிலைத்தடுமாறி சிறு குழந்தையைப் போல பல நாட்கள் தேம்பி.. தேம்பி அழுத்திருக்கிறேன்..

சரி.. நாம் நினைவுகளுக்குள் வருவோம்.

புதருக்குள்ளிருந்த நாய்க்குட்டியை எடுத்து மார்போடு அணைத்தேன். செல்லமாக அதன் முதுகில் தடவிக் கொடுத்தேன். வீட்டுக்கு எடுத்துக் கொண்டு நடந்தேன்.


இன்னும் கொஞ்சம் தூரத்தில் வீடு வந்துவிடும்.

ஆனால், எதிரே வந்த ‘தாமோதரன்’ என்ற பெயர் கொண்ட வளர்ந்த மாணவன் என்னிடமிருந்து நாய்க்குட்டியைப் பிடுங்கிக் கொண்டதோடு நில்லாமல் தர மறுத்த என்னை அடிக்கவும் செய்தான்.

யாரிடமும் சண்டை சச்சரவுக்கு போகாத அமைதி விரும்பியான நான், எனது இயலாமையை எண்ணி அழுது கொண்டே வீடு வந்து சேர்ந்தேன்.

அடுத்த நாள் முதல்வேலையாக, பழைய காக்கி பேண்டின் (பள்ளி சீறுடை) கீழ்ப்பகுதியை வெட்டி அதன் ஒரு முனையைக் கட்டி, மண் நிரப்பி மறுமுனையும் கட்டி உயரமாக கயிற்றில் தொங்க விட்டேன்.

 

நாய்க்குட்டியைப் பிடுங்கிக் கொண்ட அந்த தடியன் தாமோதரனை மனதில் நினைத்துக் கொண்டு இரு கைகளாலும் ஓங்கி குத்தலானேன்.

இது தினமும், நடந்து கொண்டிருந்தது.

ஒருநாள். அந்த வழியாக வந்த எனது மாமா இந்த விசித்திரமான செயலைக் கண்டு என்னவென்று விசாரித்தார். அழுதுகொண்டே நடந்ததைச் சொன்னேன்.

எல்லாவற்றையும் பொறுமையுடன் கேட்டுக் கொண்ட அவர், “உன்னைத் தற்காத்துக் கொள்ள ‘பாக்ஸிங்’ கற்றுக் கொள்கிறாயா?” – என்று கேட்டார்.

பழி வெறியிலிருந்த நான் உடனே தலையாட்டினேன். அவர் அடுத்த நாளே என்னை மாஸ்டர் அண்ணாமலையின் பாக்ஸிங் கிளப்பில் சேர்த்துவிட்டார்.

அப்போது எனக்கு வயது சுமார் 14 இருக்கும். தகுந்த போஷாக்கு உணவில்லாமல் வறுமையில் வளர்ந்ததால் மிகவும் மெலிந்த உடல்.

சில ஆண்டுகளுக்கு முன்வரை எனது உடல்வாகு மெலிந்துதான் இருந்தது. மிஸ்டர் ஸ்லிம் என்றுதான் வீட்டார் அழைப்பார்கள். எனக்கும் சதைப் பிடிக்கும்; தொப்பை வரும் என்று நான் கனவிலும் நினைக்கவில்லை.

நான் குத்துச் சண்டை கற்றுக் கொள்ள மாஸ்டர் அண்ணாமலையிடம் சென்றபோது, அந்த கிளப்பில் 30-க்கும் மேற்பட்டோர் பயிற்சியில் ஈடுபட்டிருந்தனர். ஓரிரு மாதங்களில் பார்த்தால் இரண்டு மூன்று பேர்களே மிஞ்சினார்கள். அதிலும் குத்துச் சண்டை போட்டிகள் ஏற்படான நிலையில் நான் தனியொருவனாகவே பயிற்சிகள் மேற்கொள்ள வேண்டிய கட்டாய நிலை.

மாஸ்டர் அண்ணாமலை, எண்ணூர் பவுண்டரியில் பணிபுரிந்து வந்தார். பகல் இரவு என்று மாறி மாறி அவரது பணி இருக்கும். அதற்கேற்ப எனக்கு பயிற்சி அளிப்பார்.

தமிழகத்தின் பராம்பரிய தற்காப்புக் கலையாக விளங்கும் வீர விளையாட்டு குத்துச் சண்டை. மரபுவழியில் குறிப்பிட்ட குடும்பங்களின் குழுக்களாக விளங்குவது. அந்த வகையில், சார்பட்டா பரம்பரை, இடியப்ப நாயக்கன் பரம்பரை மற்றும் எல்லப்ப செட்டி பரம்பரை என்று பிரதானமான பிரிவுகளாக அழைக்கப்படுகின்றன. இவர்கள் ஒருவர் மற்றொருவரை எதிர்த்து போட்டியிடுவார்கள். அவ்வகையில் எனது மாஸ்டர் அண்ணாமலை இடியப்ப நாயக்கன் பரம்பரையை சேர்ந்தவர்.

குத்துச் சண்டையில் ஈடுபட்டிருப்போர் எல்லாம் ஒவ்வொரு காலகட்டத்திற்கு ஏற்ப ஒரு குறிப்பிட்ட பகுதியில் சேருவார்கள். சண்டைக்கு ஏற்பாடு அங்குதான் நடக்கும். சண்டை செய்யும் நபர்கள், நாள் முடிவாகும். அதைத் தொடர்ந்து பயிற்சி போட்டி என்று நடக்கும்.

எனது போட்டியின் காலங்களில் பெரும்பாலும் தனியாகவே நான் கிளப்பில் பயிற்சியை மேற்கொள்வேன்.

உடல் பயிற்சிகளை செய்து முடித்துவிட்டு, பிறகு ஸ்கிப்பிங் அதன் பின் மூட்டையைக் குத்துவது என்று வரிசை கிரமமாக அவை இருக்கும்.

பயிற்சியில் காட்டிய ஈடுபாடும், அசாத்தியமான துணிவும் என்னை மாஸ்டரின் முதல் தர மாணவனாக்கியது. அதனால், அவரது வீட்டில் எனக்கு சிறப்புச் சலுகைகள் ஏராளமாக கிடைத்தன.

மாஸ்டர் அண்ணாமலை தனது வீட்டு வளாகத்திலேயே பாக்ஸிங் கிளப் அமைத்திருந்தார்.


பள்ளிக்கூடத்தைவிட்டு நேராக பாக்ஸிங் பயிற்சிக்காக சென்றுவிடுவேன். குளிக்க பித்தளை பக்கெட் நிறைய தண்ணீர், உடற்பயிற்சிகள் செய்து முடித்ததும், ஒரு பெரிய டம்ளர் நிறைய வீட்டிலேயே கறந்த பசும்பால். பயிற்சிக்கான மூட்டையை குத்தும்போது. ஒவ்வொரு ரவுண்டுக்கும் நானாக மணி பார்த்துக் கொள்ள அலாரம் என்று மாஸ்டரின் மனைவி… நன்றிக்குரிய அந்த அம்மையார், தவறாமல் கொண்டுவந்து கொடுப்பார்.

காலை நேரங்களில் கடற்கரையோரமாக (முழு கடற்கரையும் இருந்த நேரத்தில்… தற்போது கடற்கரை மறைந்து பாறைகளே கரையாகிவிட்ட அவலம்) அலைகளின் ஊடே ஓட்டப் பயிற்சி மேற்கொள்வது. பள்ளிக் கூடம் செல்வது. மாலையில் குத்துச் சண்டை பயிற்சி. இரவு நேரங்களில் ரயில்வே ஸ்டேஷன் விளக்கு வெளிச்சத்தில் படிப்புமாய் கழிந்த நாட்கள் அவை.

நான் போட்டியிட்ட சண்டைகள் சில டிராவில் முடிந்தன. சிலவற்றில் தோல்வி. இன்னும் சிலவற்றில் வெற்றி என்று ஏற்ற இறக்கமாக இருந்தன. ஆயினும் எனது ஒவ்வொரு போட்டியிலும் வேகமும், நுட்பமான பிரயோகங்களும், ஓரிடத்தில் நிற்காமல் ரிங்க் முழுவதும் ஆக்கிரமித்து சண்டையிடுவதுமாய் நான் பின்பற்றிய முறைமைகளும் ஏராளமான ரசிகர்களை கொண்டு வந்து சேர்த்தது. தோல்வியுற்ற போட்டிகளில் ரசிகர்கள் எனக்குத் தனியாக கோப்பைகள் அளித்து சிறப்பித்தது என்று பெருமைக்குரியதாகவே எனது குத்துச் சண்டை பக்கங்களும் நகர்கின்றன.

மாஸ்டர் அண்ணாமலை சமீபத்தில் இறக்கும்வரை, எல்லோர் முன்னிலையிலும் என்னை தனது முதன்மை மாணவன் என்றே அழைப்பார். “இவனது லெப்ட் பேசும்!” - என்பார் அதாவது இடது கை ஓயாமல் குத்திக் கொண்டும் எதிராளியை திணறடிக்கும் என்றும் பொருள்.

வறுமை சூழ்ந்த அந்த நிலையில், உண்ண போதிய உணவில்லாமலும், பயிற்சிக்கான தகுந்த சாதனங்கள் இல்லாத நிலையிலும் என்னால் சிறந்த குத்துச் சண்டை வீரன் என்று பெயரெடுக்க முடிந்தது.

போட்டி ஏற்பாடான அந்தக் காலத்தில் மாமிக்கு பயந்து மாமா ரகசியமாக ஆப்பிள் போன்ற பழங்களைக் கொண்டு வந்து தருவார்.

அதேபோல, என்னுடன் படித்த நண்பர்களில் ஒருவரான ஜஃபர் அலி தனது கடையிலிருந்து (அலி ஸ்டோர்ஸ்) உளுந்து, சர்க்கரை என்று இலவசமாக கொடுப்பார்.

எனது தந்தையார் சுடச் சுட சூஃப் தயாரித்து தருவார். எண்ணெய் தேய்த்து மசாஜ் செய்து குளிக்க வைப்பார்.

எனது நாய்க்குட்டியைப் பறி கொடுத்ததால் விபத்தாய் அறிமுகமான குத்துச் சண்டை என்னை முரட்டு மனிதானாக மாற்றவில்லை. துணிச்சலும், தைரியம் நிறைந்த இளைஞனாகவே வார்த்தெடுத்தது.

அதன் பிறகு எந்த தாமோதரனுக்கும் நான் பயப்படவில்லை. யாருக்கும் என்னிடம் வாலாட்டும் துணிச்சலும் இல்லை.

இறையருளால், என்னைக் காப்பாற்றிக் கொள்ள எனக்குத் தெரியும் என்ற நம்பிக்கை இதுவரையிலும் உண்டு.

இறைவன் நாடினால் அடுத்து, நபிகளாரின் பாசறைக்கு திரும்பி வந்து நானடைந்த மாற்றங்களை எனது சொந்த குடும்பத்தில் செயலாக்கியது எப்படி? வைகறை நினைவுகள் தொடரும்.

'''''''''''''''
இதற்கு முந்தைய நினைவுகளை பகிர்ந்து கொள்ள இணைப்புகள்:
'''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''
வைகறை நினைவுகள் பகுதி 1: கருணையாளனான இறைவன் அவரது பாவங்களை மன்னிப்பானாக:  - http://ikhwanameer.blogspot.in/2015/07/1.html

வைகறை நினைவுகள் பகுதி 2: இந்நேரம் புதைச்ச இடத்தில் புல் முளைச்சிருக்கும்: http://ikhwanameer.blogspot.in/2015/07/2.html

வைகறை நினைவுகள் பகுதி 3: நிழலாய் நின்ற அந்த இருவர்: http://ikhwanameer.blogspot.in/2015/07/3.html

வைகறை நினைவுகள் பகுதி 4: நீண்ட தேடல்களின் அந்த முடிவில்: http://ikhwanameer.blogspot.in/2015/07/4.html

வைகறை நினைவுகள் பகுதி 5: மறக்க முடியாத அந்த இரவு: http://ikhwanameer.blogspot.in/2015/07/5.html

வைகறை நினைவுகள் பகுதி 6: அதிபதியின் தர்பாரில் ஆஜரான ஓர் அடியான்: http://ikhwanameer.blogspot.in/2015/07/6.html

வைகறை நினைவுகள் பகுதி 7: சுமக்க முடியாத பாரத்தை சுமத்துவதில்லை: http://ikhwanameer.blogspot.in/2015/07/7.html

வைகறை நினைவுகள் பகுதி 8: யாகூப் மேமன் தண்டனை கூனி குறுகிப் போகிறேன் நான்: http://ikhwanameer.blogspot.in/2015/07/7_31.html


வைகறை நினைவுகள் பகுதி 9: இறைவனின் பிரதிநிதியா? குரங்கின் சந்ததியா?: http://ikhwanameer.blogspot.in/2015/08/9.html


No comments:

Post a Comment