Wednesday, July 29, 2015

யாகூப் மேமன்: நீங்காத நினைவுகளோடு சில ஆத்மாக்கள்!தன்னைத்தானே தூக்கு மேடைக்கு ஒப்புக் கொடுத்த துரதிஷ்டசாலி யாகூப்  மேனன். அதுவும், ஜுலை 30 அவரது பிறந்த நாளிலேயே அவரது மரணமும் நிச்சயிக்கப்பட்ட துரதிஷ்டசாலி! அரசியல்வாதிகளின் விருப்பப்படி இந்திய சட்டங்கள் தீர்ப்பெழுதி உயிர் துறக்க இன்னும் சில மணி நேரமே இருக்கும் அதிஷ்டம் கெட்டவர். நாட்டில் 279 மரண தண்டனை குற்றவாளிகள் வரிசையில் காத்திருக்கிறார்கள். இதில் 1997-ம், ஆண்டிலிருந்து காத்திருப்பவர்களும் அடக்கம். இந்நிலையில், அவசரம் அவசரமாக முடிவுரை எழுதப்பட்டு தூக்கு மேடைக்கு தள்ளப்பட்டவர்தான் யாகூப் மேமன்.

“இந்த நாடு பட்டதாரியாக்கி என்னை சிறப்பித்தது. நான் வாழ கண்ணியத்தை வழங்கி கௌரவித்தது. அப்படிப்பட்ட நாட்டுக்கு நான் அழிவை ஏற்படுத்த வேண்டிய அவசியம் என்ன இருக்கிறது?” – என்ற கேள்வியை எழுப்புகிறார் ஹீஸைன் ஜைதியிடம் யாகூப் மேமன்.

மூத்த பத்திரிகையாளரும், கருப்பு வெள்ளி நூலாசிரியருமான ஹீஸைன் ஜைதி தனது மும்பை குண்டுவெடிப்புகள் சம்பந்தமான ஆய்வு நூலான ‘கருப்பு வெள்ளி’ ( Black Friday, S. Hussain Zaidi, Penguin Books India) நூலுக்காக யாகூப் மேமனை சந்திக்க சென்றிருந்தார். அப்போது சிறைச்சாலையில் யாகூப் மேமன் சொன்னது இது.

'தூக்கு தண்டனை ஒழிக்கப்பட வேண்டும்' என்ற வழக்கமான குரலுடன், யாகூப் மேமன் கருணை மனுவை பரிசீலிக்க வேண்டும் என்று குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜிடம் நாட்டின் முக்கியப் பிரமுகர்கள் மனு ஒன்றை அளித்தனர்.

ஓய்வுபெற்ற நீதிபதிகள், முக்கிய அரசியல் தலைவர்கள், சமூக ஆர்வலர்கள், கலைஞர்கள் என நம் சமூகத்தில் கவனிக்கத்தக்க பலர் கையெழுத்திட்ட அந்தக் கோரிக்கை மனுவுடன், இந்திய உளவு அமைப்பில் முக்கியப் பங்குவகித்த மறைந்த அதிகாரி பி.ராமன் எழுதிய கட்டுரை ஒன்று இணைக்கப்பட்டதும் முக்கியமானது.

உளவு அமைப்பு 'ரா'-க்கு தலைமை வகித்தவரும், பாகிஸ்தான் உளவுப் பிரிவை கவனித்து வந்தவருமான பி.ராமன் எழுதிய அந்தக் கட்டுரையின் முக்கிய அம்சம், 'யாகூப் மேமனை தூக்கிலிடக் கூடாது. ஏன்?' – என்பதே.

யாகூப் மேமன் தூக்கு தண்டனை வழக்கு விவகாரத்தின் தற்போதைய நிலையின் சுருக்கம் இதுதான்:

1993-ம் ஆண்டு மார்ச் 12-ம் தேதி மும்பையில் அடுத்தடுத்து 12 இடங்களில் நடந்த குண்டு வெடிப்பில் 257 பேர் இறந்தனர். 700-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். இவ்வழக்கில் யாகூப் மேமனு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. இதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மேல் முறையீட்டு மனுவும், பின்னர் தாக்கல் செய்யப்பட்ட மறு ஆய்வு மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டன. இதற்கிடையே யாகூப் மேமனின் கருணை மனுவை குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி தள்ளுபடி செய்தார்.

இதையடுத்து கடைசி சட்ட நிவாரணமாக கருதப்படும் கியூரேட்டிவ் மனுவை உச்ச நீதிமன்றம் கடந்த 21-ம் தேதி தள்ளுபடி செய்தது. இதைத் தொடர்ந்து யாகூப் மேமனை நாக்பூர் மத்திய சிறையில் வரும் 30-ம் தேதி தூக்கில் இடுவதற்கான ஏற்பாடுகளை மகாராஷ்டிர அரசு மேற்கொண்டது.

இதன் தொடர்ச்சியாக, மகாராஷ்டிர ஆளுநர் வித்யாசாகர்ராவிடம் யாகூப் மேமன் கருணை மனு தாக்கல் செய்தார். மேலும் தூக்கு தண்டனை நிறைவேற்றுவதற்கு தடை விதிக்க கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். "எனக்கு சட்டரீதியான பரிகாரங்கள் இன்னும் நிறைவடையவில்லை. மகாராஷ்டிர அரசு அளவுக்கு மீறி அவசரம் காட்டுகிறது" என்று அவர் தனது மனுவில் கூறியுள்ளார். இந்த மனு மீது உச்ச நீதிமன்றத்தில் தற்போது தள்ளுபடி செய்யப்பட்டுவிட்டது.

1993-ம் ஆண்டு நடந்த மும்பை குண்டு வெடிப்பு வழக்கில் யாகூப் மேமனுக்கு எதிராக நேரடி சாட்சியங்கள் இல்லை. இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட மற்ற 6 பேரின் வாக்குமூலங்கள் அடிப்படையில் மேமன் குற்றவாளி என்று முடிவு செய்யப்பட்டார். இந்த 6 பேரில் 5 பேர் அதன்பிறகு, பிறழ்சாட்சியாக மறுதலித்தனர்.

குண்டுவெடிப்புகளுக்கு நிதியுதவி அளித்தாக யாகூப் மீது குற்றம்சாட்டப்பட்டது, அவர் அதனை தெரியாமல் செய்ததாகக் கூறினார். இவருடன் குற்றம்சாட்டப்பட்டவர்கள், அதாவது உண்மையில் குண்டு வெடிக்கச் செய்தவர்கள் குறைந்த தண்டனையைப் பெற்றனர் அல்லது அவர்களது மரண தண்டனை ஆயுளாக குறைக்கப்பட்டது.

ஆனால், தகுந்த சாட்சியங்கள் இல்லாத நிலையிலும், குண்டுவெடிப்புகளுக்காக தூக்கிலிடப்படும் ஒரே தனிநபராக தூக்குமேடை ஏறப்போகிறார் யாகூப் மேனன்.

பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ-யின் பாதுகாப்பை உதற முடிவெடுத்து அந்த 'கடிமனான மற்றும் ஆபத்து விளைவிக்கக் கூடிய' நடைமுறையை விளக்கி, 1999-ம் ஆண்டு இந்திய தலைமை நீதிபதிக்கு எழுதியுள்ளார் யாகூப் மேமன்.

1994-ம் ஆண்டின் அவரது இந்த முடிவுக்குப் பிறகே விசாரணையில் அவர் முழு ஒத்துழைப்பு வழங்கியதோடு, சதியில் ஈடுபட்ட தனது குடும்பத்தினரையும் ஐ.எஸ்.ஐ. பிடியிலிருந்து வெளியேற்றி சரணடையச் செய்ய இணங்க வைக்கும் முயற்சியில் விசாரணை அதிகாரிகளுக்கு பெருமளவு உதவி புரிந்துள்ளார்.

சதி தொடர்பான முக்கிய விவரங்களையும் விசாரணையில் அவர் வெளியிட்டுள்ளார். இந்தப் பின்னணியிலேயே ராமன், யாகூப் மேமன் தூக்குத் தண்டனையை மறுபரிசீலனை செய்ய வேண்டிய தேவை உள்ளதாக எழுதினார்.

இந்நிலையில், ஜூலை 30-ம் தேதி அவருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்படும் உத்தரவு வெளியாகியுள்ள நிலையில், இந்த உத்தரவில் ஏகப்பட்ட சட்டப்பிறழ்வுகள் இருப்பதாக அறிவுஜீவிகளும் சட்ட வல்லுநர்களும் கருதுகிறார்கள்.

முதலில் சம்பந்தப்பட்ட நபரின் அனைத்து சட்ட அணுகுமுறைகளும் முடிந்த பிறகே தூக்கு தண்டனை நிறைவேற்ற உத்தரவு பிறப்பிக்கப் படவேண்டும் என்று விதிமுறைகள் கூறுகின்றன.

மேமன் விவகாரத்தில் ஜூலை 30-ம் தேதி யாகூப் மேமன் தூக்கிலிடப்பட வேண்டும் என்ற உத்தரவு வெளியானது. ஆனால், அவரிடம் இந்தத் தகவல் அளிக்க வேண்டுமென்றே காலதாமதம் செய்யப்பட்டுள்ளதும் யாகூபின் ரிட் மனு தாக்கலின் போது தெரியவந்துள்ளது. 


தூக்குத் தண்டனை அளிக்கப்படுவதற்கு முன்பாக குற்றவாளி அதனை எதிர்த்து தன்னால் முடிந்தளவு சட்ட நடைமுறைகளை அணுக வாய்ப்பளிப்பதை மாநில அரசுகள் உறுதி செய்வது அவசியம். ஆனால் அவர் சட்டத்தின் உதவியை நாட முடியாதவாறு உத்தரவு அவசரம் அவசரமாகப் பிறப்பிக்கப்பட்டது ஏன் என்ற கேள்வி தற்போது, எழுந்துள்ளது.

உச்ச நீதிமன்றத்தில் யாகூப் மேமனின் கியூரேட்டிவ் மனு இருக்கும்போது, ஏப்ரல் 30-ம் தேதி மாநில அரசு எப்படி தூக்கு தண்டனை நிறைவேற்ற உத்தரவை பெற முடியும்? அப்போது ஜூலை 21, 2015-ல் யாகூப் மேமனின் கியூரேட்டிவ் மனு தள்ளுபடி செய்யப்படும் என்று மாநில அரசுக்கு முன் கூட்டியே தெரியுமா?

இது போன்ற ஏராளமான குளறுபடிகளும், கேள்விகளும் இந்த உத்தரவின் மூலம் எழுவதாக நிபுணர்களும், அரசியல் நோக்கர்களும் கருத்துகளை பதிவு செய்து வருகின்றனர்.

சரி.. ‘ரா’ உளவுதுறையின் தலைவராக இருந்த பி.ராமன் கட்டுரை சொல்வதுதான் என்ன?

‘யாகூப் மேமனை தூக்கிலிடக் கூடாது. ஏன்?’ – என்ற வினாவுடன் 'மேமன் சகோதரர்களும் மும்பை குண்டு வெடிப்புகளும்' என்ற தலைப்பில் அவர் எழுதிய கட்டுரையின் சுருக்கம் இது:

'யாகூப் மேமனை தூக்கிலிடும் நீதிமன்ற உத்தரவையும், நீதிமன்றத்தில் யாகூப் மேமனின் திடீர் கோபாவேசம் பற்றியும் ஊடகங்கள் மூலம் நான் படித்தறிந்த பிறகு என மனம் தர்மசங்கடத்தில் ஆழ்ந்துவிட்டது.

இந்த விசாரணைக் காலம் முழுதும் அரசு தரப்பு கோருவது போல் 'நான் பழைய டெல்லியில் கைது செய்யப்படவில்லை, நேபாள தலைநகர் காத்மாண்டுவில் கைது செய்யப்பட்டேன்' என்று யாகூப் மேமன் தொடர்ந்து வலியுறுத்தி வந்துள்ளார். இதனை அரசு தரப்பு ஏற்காமல், அவருக்கு கடும் தண்டனை அளிக்க வேண்டும் என்று வாதாடியது.

இந்த வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட அனைவருக்கும் மேல்முறையீடு செய்ய உரிமை உண்டு, மேல்முறையீடு மனு நிராகரிக்கப்பட்டால், இந்திய குடியரசுத் தலைவரிடம் கருணை மனு கொடுக்கவும் உரிமை உண்டு.

இந்தக் கட்டுரையை நான் எழுத வேண்டுமா? என்று என்னையே நான் பலமுறை திரும்பத் திரும்ப கேட்டுக் கொண்டு வருகிறேன்.

•    எழுதாமல் விட்டால் நான் ஒரு தார்மிகக் கோழையாகி விடுவேனோ?

•    நான் இதனை எழுதிவிட்டால், இந்த வழக்கின் ஒட்டுமொத்த முடிச்சுகளும் அவிழ்க்கப்பட்டு விடுமா?

•    சந்தேகத்துக்கிடமற்ற குற்றவாளி எனது கட்டுரையினால் தப்பி விடக்கூடிய வாய்ப்புள்ளதோ?

•    எனது கட்டுரையை நீதிமன்றம் தீங்கானது என்று கருதுமோ?

•    நான் நீதிமன்ற அவமதிப்பு செய்கிறேனோ?

இந்தக் கேள்விகளுக்கு உறுதியான பதில்கள் கிடையாது. இருந்தாலும் நான் ஏன் இதனை எழுத முற்பட்டேன் என்றால், என்னுடைய பார்வையில், தூக்கிலிடப்படக் கூடாது என்று நான் நினைக்கும் ஒருவரைக் காப்பாற்றுவது முக்கியம் என்ற எனது நம்பிக்கையாகும்.

'ரா' உளவு அமைப்பின் பயங்கரவாத - எதிர்ப்பு பிரிவின் தலைவராக, மார்ச் 1993 முதல் ஆகஸ்ட் 31, 1994 வரை நான் இந்த வழக்கின் புற விவகாரங்களை விசாரணை செய்துள்ளேன்.

ரா அமைப்பின் மிகச் சிறந்த கள அதிகாரிகள் உதவியுடன் நான் இந்த விசாரணையில் மேற்கொண்ட பணிகளை பி.வி.நரசிம்ம ராவ் வெகுவாக பாராட்டினார். அப்போதைய பிரதமரான அவர், ‘இந்த வழக்கு விசாரணையின் தொடர்பான எங்களது பணிகள் தங்கத்துக்குச் சமமானது!’ - என்று பாராட்டினார்.

யாகூப் மேமன் வழக்கில் அவருக்கு எதிரான சூழ்நிலைகளை மட்டுப்படுத்தும் சூழல்கள் இருப்பதை நான் கண்டுணர்ந்தபோது, நான் மன உளைச்சலுக்கு ஆளானேன்.

யாகூப் மேமனின் குடும்பத்தினர் சிலரை இந்த வழக்கில் அரசு தரப்பு நீதிமன்றத்தின் பார்வைக்குக் கொண்டு வரவில்லை. மேலும், இந்தச் சூழ்நிலைகளை இந்த வழக்கு பரிசீலனைக்கு எடுத்து கொள்ள வேண்டும் என்பதையும் அரசு தரப்பினர் நீதிமன்றத்துக்கு வலியுறுத்தவில்லை. அவருக்கு மரண தண்டனை பெற்றுத் தரும் ஆர்வத்தில், தண்டனையைத் தீர்மானிக்கும் சில சூழல்களை நீதிமன்றத்தின் பார்வைக்கு கொண்டு வரவில்லை.

மும்பை போலீஸ் மற்றும் சிபிஐ ஆகியவை ஐபி அமைப்பின் உதவியுடன் நடத்திய மிகச் சிறந்த விசாரணையாகும் இது. இறுக்கமான இந்த வழக்கில் விசாரணையைக் கையாண்டு, வலி நிறைந்த ஒரு பணியில் அனைத்துச் சாட்சிகளையும் சேகரித்து நீதிமன்றத்தின் முன்னால் வைத்த அதிகாரிகள் குறித்து இந்த தேசம் பெருமைகொள்ள வேண்டும்.

எனவே, பயங்கரவாதம் என்ற காட்டுமிராண்டிச் செயலை நடத்தியவர்களுக்கு மரண தண்டனை அளிக்கப்படவேண்டும் என்றாலும், அரசு தரப்பினர் மரண தண்டனை கோரக் கூடாது என்பதற்கான மாற்று, மட்டுப்படுத்தக் கூடிய சூழ்நிலைகளை நீதிமன்றத்துக்கு இந்த விசாரணையாளர்கள் அடிக்கோடிட்டுக் காட்டும் முயற்சியை எடுத்திருக்க வேண்டும். அப்படி எடுத்திருந்தால், அது இந்த விசாரணையாளர்கள் குறித்த (மதிப்பீடு கூடியிருக்கும்) ஒளிவட்டம் இன்னும் பிரகாசமாகக் கூட ஒளிவிட்டிருக்கும்.

யாகூப் மேமன் பழைய டெல்லியில் கைது செய்யப்பட்டார் என்று அரசு தரப்பு கூறுவது சரிதான். தன்னை அவர்கள் டெல்லியில் கைது செய்யவில்லை என்று யாகூப் மேமன் கூறுவதும் சரிதான்.

ஜூலை 1994-ல், எனது ஓய்வுக்கு சில வாரங்கள் முன்னதாக, காத்மாண்டுவில் யாகூப் மேமனை நேபாள காவல்துறை உதவியுடன் பிடித்துள்ளனர். நேபாளத்தின் வழியாக வாகனத்தில் இந்திய ஊர் ஒன்றுக்கு அழைத்து வரப்பட்டு, பிறகு வான்வழி ஆய்வு மைய விமானம் மூலம் டெல்லியில் அவர் கொண்டு வரப்பட்டு முறைப்படி கைது செய்யப்பட்டார். பிறகு விசாரணைக்கு கொண்டு செல்லப்பட்டார். இந்த இத்தனை நடவடிக்கையையும் எனது ஒருங்கிணைப்பின் கீழ் நடைபெற்றது.

பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ. மீது கடும் அதிருப்தி ஏற்பட்டதால், காத்மாண்டுவில் உள்ள தனது உறவினர் மற்றும் வழக்கறிஞரைச் சந்தித்து ஆலோசனை பெறவே யாகூப் மேமன் காத்மாண்டுவுக்கு வந்திருந்தார். அதாவது, மும்பை போலீஸ் முன்பு சரணடைய அவர் ஆலோசனை மேற்கொள்வதற்காக காத்மாண்டு வந்திருந்தார்.

உறவினர் மற்றும் வழக்கறிஞர் 'சரணடைய வேண்டாம்' என்று அறிவுறுத்தினர். காரணம், நீதி கிடைக்காமல் போகலாம் என்று அவர்கள் எச்சரித்தினர். எனவே, கராச்சிக்குத் திரும்பிவிடுமாறு யாகூபுக்கு அவர்கள் ஆலோசனை வழங்கினர். அவர் கராச்சிக்கு விமானம் ஏறுவதற்கு முன்னதாக நேபாள போலீஸால் சந்தேக அடிப்படையில் பிடிக்கப்பட்டார். அவசரம் அவசரமாக இந்தியா கொண்டு வரப்பட்டார்.

அவர் விசாரணை அதிகாரிகளுக்கு ஒத்துழைப்பு வழங்கினார். மேலும் ஐ.எஸ்.ஐ. பாதுகாப்பில் இருந்த யாகூப் மேமனின் மற்ற குடும்ப உறுப்பினர்கள் கராச்சியிலிருந்து துபாய்க்கு வந்து மும்பை போலீஸில் சரணடையச் செய்ய விசாரணை அதிகாரிகளின் நடைமுறைக்கு யாகூப் மேமன் உதவினார். இந்த நடவடிக்கையின் துபாய் பகுதியின் ஐபி மூத்த அதிகாரி ஒருவர் ஒருங்கிணைத்தார். துபாய் நடவடிக்கைக்கு நானோ, ரா-வோ பங்களிக்கவில்லை.

எனவே, விசாரணை அதிகாரிகளுக்கு யாகூப் மேமன் வழங்கிய ஒத்துழைப்பும், குடும்பத்தினரை பாகிஸ்தானிலிருந்து வெளியேற்றி சரணடைய வைத்ததற்கு யாகூப் மேமனின் உதவியும் என்னுடைய பார்வையில், மரண தண்டனை பற்றிய பரிசீலனைகளை மட்டுப்படுத்தும் சூழ்நிலைகள் ஆகும்.

சதியில் யாகூப் மேமனோ அவரது குடும்பத்தினரோ ஈடுபட்டது குறித்தோ, அல்லது ஜூலை 1994 வரை ஐ.எஸ்.ஐ உடன் அவர்களுக்கு இருந்த பிணைப்பு பற்றியோ எந்தவித சந்தேகமும் இல்லை. எனவே, ஒரு சாதாரண சூழ்நிலைகளின்படி, ஜூலை 1994-க்கு, முன் யாகூப் மேமனின் நடத்தை மற்றும் செயல்கள் அவருக்கு மரண தண்டனை அளிக்க தகுதியான நியாயங்களை வழங்கியிருக்கும்.

ஆனால், காத்மாண்டுவில் அவர் பிடிபட்ட பின்பு அவரது ஒத்துழைப்பு மற்றும் செயல்கள் இந்த வழக்கு விசாரணையின் அடுத்த கட்டங்களில் மரண தண்டனை விதிப்பின் பொருத்தப்பாடு பற்றிய மாற்றுக் கேள்விகளை எழுப்புகிறது. (ஆதாரம்: Raman's unpublished 2007 article: Why Yakub Memon must not be hanged)


தற்போது, தன்னை ஜூலை 30-ம் தேதி தூக்கிலிட வகை செய்யும் உத்தரவை எதிர்க்கும் யாகூப் மேமன் மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. அதேபோல, அவரது கருணை மனுவையும் மகாராஷ்டிர ஆளுநர் நிராகரித்தார்.

இந்த மனு இன்று நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான 3 நீதிபதிகள் கொண்ட அமர்வின் விசாரணைக்கு வந்தது.

யாகூப் மேமன் மனுவை தள்ளுபடி செய்த உச்ச நீதிமன்றம், தூக்குத் தண்டனை நிறைவேற்ற உத்தரவில் எந்தவித சட்ட நடைமுறைத் தவறுகளும் இல்லை.

மேலும், குடியரசுத் தலைவர் கருணை மனுவை நிராகரித்த பிறகு, யாகூப் மேமன் அதனை எதிர்த்து நீதிமன்றத்திடம் முறையீடு செய்யவில்லை. மேமனின் கியூரேட்டிவ் மனுவை உச்ச நீதிமன்றத்தின் 3 மூத்த நீதிபதிகள் நிராகரித்தது சரியே.

தூக்கு தண்டனை நிறைவேற்ற உத்தரவைப் பெற்ற பிறகு யாகூப் மேமன் அனைத்து சட்ட உதவிகளையும் பெறும் அளவுக்கு கால அவகாசம் இருந்துள்ளது. ஜூலை 13, 2015-ல் மேமனுக்கு அளிக்கப்பட்ட தூக்கிலிடப்படும் உத்தரவு அவருக்கு போதுமான கால அவகாசத்தை அளித்ததாகவே கோர்ட் கருதுகிறது.

ஆளுநரிடமோ, குடியரசுத் தலைவரிடமோ அளிக்கப்பட்டுள்ள கருணை மனு குறித்து தாங்கள் பரிசீலிக்க எதுவும் இல்லை என்று கூறிய உச்ச நீதிமன்றம், குற்றவாளி செய்யும் இத்தகைய முயற்சிகள் நீதித்துறை நடைமுறைகள் மீது தாக்கம் செலுத்தாது.

நீதிபதி குரியன் ஜோசப் முன்னதாக, யாகூப் மேமன் கியூரேட்டிவ் மனுவை தள்ளுபடி செய்த நீதிபதிகள் அமர்வின் முடிவில் சட்ட நடைமுறை தவறுகள் இருப்பதாகச் சுட்டிக் காட்டியுள்ளது பற்றி கருத்து கூறிய நீதிபதிகள், "கியூரேட்டிவ் மனு தள்ளுபடி செய்யப்பட்டது சரியே என்பதாகவே கோர்ட் பார்க்கிறது. அதில் நடைமுறை தவறுகள் இருப்பதாகத் தெரியவில்லை" என்று கூறியது.

கியூரேட்டிவ் மனுவை தள்ளுபடி செய்த நீதிபதிகள் மூத்த நீதிபதிகள் எனவே அதன் மீது தவறுகள் காண முடியாது என்ற அட்டர்னி ஜெனரல் வாதத்தை நீதிமன்றம் ஏற்றுக் கொண்டதாக நீதிபதி மிஸ்ரா தெரிவித்தார்.

மகாராஷ்டிர ஆளுநரிடம் மேமன் அளித்த 2-வது கருணை மனு குறித்து நீதிமன்றம் எதுவும் கூற விரும்பவில்லை. என்று உச்ச நீதிமன்றம் தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளது.

உச்ச நீதிமன்ற உத்தரவை அடுத்து, உடனடியாக மகாராஷ்டிர மாநில ஆளுநர், யாகூப் மேமன் கடந்த வாரம் செய்திருந்த கருணை மனுவை நிராகரித்தார்.

முன்னதாக, இன்று புதிதாக ஒரு கருணை மனுவை குடியரசுத் தலைவருக்கு யாகூப் மேமன் அனுப்பினார்.

மரபுப்படி குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி இந்த மனுவை மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு ஆய்வுக்காக அனுப்பி வைப்பார். உள்துறை அமைச்சகத்தின் பரிந்துரைக்கேற்ப குடியரசுத் தலைவரின் முடிவு அமையும்.

கடந்த ஆண்டு யாகூப் மேமன் குடியரசுத் தலைவருக்கு கருணை மனு தாக்கல் செய்தபோது அவரது மனுவை மத்திய உள்துறை அமைச்சகத்தின் பரிந்துரையை ஏற்று குடியரசுத் தலைவர் நிராகரித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மூத்த பத்திரிகையாளரும், கருப்பு வெள்ளி நூலாசிரியருமான ஹீஸைன் ஜைதியிடம் யாகூப் மேமன் சிறைச்சாலை சந்திப்பின் போது, “… வாய்மையே வெல்லும்! என்று உலகளவில் பறைச்சாற்றும் ஒரே நாடு இந்தியா. நான். இந்த நாட்டின் உயரிய நீதி மாண்புகளில் நம்பிக்கை வைத்துள்ளேன்!”- அப்பாவித்தனமாக தெரிவித்துள்ளது நினைவில் எழுகிறது.

நீதியும், நியமங்களும் அரசியல்வாதிகளின் கைகளில் சிக்கி படாதபாடுபடுவதை பாவம் யாகூப் மேமன் அறிந்திருக்க நியாயமில்லை. தற்போது தூக்குக் கயிறு அவரது தொண்டை எலும்பை முறிப்பதற்கு முன் அவர் இந்தக் கருத்தை ஒருவேளை மறுபரிசீலனை செய்வாரோ என்னவோ..?

ஒவ்வொரு ஆத்மாவும், எங்கிருந்து வந்ததோ அங்கேயே சென்று சேர இருக்கிறது. ஆனால், சில ஆத்மாக்கள் நீங்காத நினைவுகளை விட்டு விட்டு செல்வதென்னவோ உண்மை!No comments:

Post a Comment