Tuesday, July 21, 2015

லென்ஸ் கண்ணாலே:001, அனுபவங்களின் பகிர்வின்றி அறிவின் ஊற்றல்ல!


அன்பு சகோதர, சகோதரிகளே, நண்பர்களே!

உங்கள் அனைவர் மீதும் இறைவனின் சாந்தியும், சமாதானமும் என்றென்றும் நிலவுவதாக!

'காமிராவில் கலைவண்ணம்!' - என்னும் இந்த ஒளிப்பட தொடர் மூலம் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மிகவும் மகிழ்ச்சி.

நான்காம் வகுப்பு படிக்கும்போது ஷேக்ஸ்பியரில் ஆரம்பித்த எனது வாசிப்பு, தினத்தந்தி சிந்துபாத் தொடர் என்று தொடர்ந்து அரசு கிளை நூலகத்தின் அத்தனை புத்தகங்களையும் வாசிக்க வைத்த அற்புதமான தருணங்களை கடந்து வந்த அனுபவத்தை வாழ்க்கை அளித்திருக்கிறது.

எனது பள்ளி தலைமை ஆசிரியை அவர்களின் வீட்டுப் பணிகளை செய்து தந்து, பள்ளி நூலகத்திலிருந்து சொற்ப தவணைக்குள் பெற்ற ஷேக்ஸ்பியருக்குள் நான் நுழைந்தது ஆச்சரியமாக உள்ளது.

சிந்துபாத் தொடரை படிக்க சிகை அலங்காரம் செய்யும் கடையில் நீண்ட நேரம் காத்திருந்து ஒரு கட்டத்தில் ஆவலை அடக்க முடியாமல் படிப்பவரின் எதிரே தரையில் அமர்ந்து அந்த நான்கு படம், சில வரி வசனங்களை, வாசிக்க முயலும்போது, கழுத்தைப் பிடித்து வெளியே நெட்டித் தள்ளிய அந்த நாவித சகோதரர் இன்றும் மனக்கண்ணில் தெரிகிறார். இன்று சிகை அலங்காரம் செய்து கொள்ளும்போதெல்லாம் அந்த சம்பவம் நெஞ்சில் நிழலாடும்.

எத்தனைமுறை புத்தக அலமாரிகளுக்குள் பதுங்கிக் கொண்டு புத்தகம் வாசித்தாலும் அத்தனை முறையும் நூலகர் புத்தகங்களை நான் கலைத்துவிடுவேன் என்று மோப்பம் பிடித்து வந்து விடுவார். ஒருவித சிநேகித உணர்வுடன் “தம்பி, உனக்கு இன்னும் வயசாகலே!” – என்று என்னை நூலகத்தைவிட்டு வெளியே அனுப்பி விடுவார். இன்று இறையருளால் வீட்டில், ஒரு தனி நூலகம் அமைத்திருக்கும் நான் அதே நூலகத்தை கடந்து செல்லும்போதெல்லாம் முக மலர்ச்சியுடன் கடக்கிறேன்.

இந்த அனுபவங்களை, வாசிப்புகளை உள்வாங்கி வளர்ந்து ஒரு கட்டத்தில் அவற்றை அடுத்தவர் வாசிக்க எத்தி வைக்கும் அனுபவத்தை அளித்த இறைவனுக்கே புகழனைத்தும்.

1986 - களில் ஆரம்பித்து, இதுவரையிலும் ஓயாமல் அறப்போர் புரியும் எனது எழுத்தாணியின் பயணம் தமிழ் பேசும் நல்லுலகில் ஏற்கனவே  அறிமுகப்படுத்தியிருக்கும் என்பதால் ஓராயிரம் சங்கடங்களுடன்தான் அறிமுகத்துக்காக இந்த சில அனுபவங்களை மட்டுமே இங்கே பகிர்ந்து கொண்டேன்.

ஒவ்வொருவரும், ஒரு வாசகராய், எழுத்தாளராய், ஒளிப்பதிவாளராய் இருக்கும் சமூக ஊடகமான இந்த வலைப்பூவில் நான் சொல்லவிருப்பது என்ன?

அனுபவங்கள் அன்றி வேறில்லை சகோதர, சகோதரிகளே!

அனுபவங்களே ஆசான்கள்! 

உண்மை!

இது அனுபவங்களின் ஒரு பகிர்வின்றி அறிவின் ஊற்றல்ல.

முகநூல் சிறகுகள் குழுமத்தின், சகோதரர் அஹ்மது கபீரும், அருமை சகோதரி உம்மு உமரும்தான் இந்த தொடருக்கான பிரதான மூல கர்த்தாக்கள்! அவர்கள்தான் என்னை காமிரா சம்பந்தமாக எழுதத் தூண்டியவர்கள். அவர்களுக்கு எனது நன்றி. அதிலும் குறிப்பாக அற்புதமான முகப்பை உருவாக்கிய உம்மு உமரின் தோழி சகோதரி Sharmila Kasim - க்கும் எனது நன்றிகள் மற்றும் பிரார்த்தனைகள்.

அனுபவ எழுத்துக்களிலிருந்து ஒரு கட்டத்தில் அடைந்த பரிணாம வளர்ச்சிதான் எனது ஒளிப்பதிவுகள். இது எனது அறிவோட்டத்தை இன்னும் விசாலமாக்கியது.

கோடானு கோடி கோள்கள் துணைக்கோள்கள் கொண்ட இந்த அண்ட வெளியின் சிறு துகள்… அதுவும் கடற்கரை மணற்பரப்பின் ஒரு சிறு மணல் துகளாம், பூமியில் எனக்கு கிடைக்கும் வாய்ப்பு வசதிகளை கொண்டு நான் ஒளிப்படங்களாய் பதிவு செய்து வருகிறேன்.

அழகியல், வாழ்வியல் கலந்த பார்வைதான் எனது சிறப்புக்குரிய களங்கள்.

சிறப்பான படங்கள் என்று முற்றே இல்லாத ஒரு மகா சமுத்திரத்தின் ஒரு துளியாய் நான் கற்றதை பறிமாறும் ஒரு வாய்ப்புதான் இது.

அறிவைப் பெற்று அதை பரப்புவர்தான் உங்களில் சிறந்தவர் என்ற எனது உன்னத தலைவர் அண்ணல் நபியின் ஒரு பொன்னுரையை நிறைவேற்றிய பாக்கியசாலியாக மட்டுமே என்னைப் பார்த்துக் கொள்கிறேன்.

இனி..

'லென்ஸ் கண்ணாலே..!'
'''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''
அண்மையில், ஒரு வெளிப்புற படப்பிடிப்புக்காக இரண்டு நாள் வெளியூர் செல்ல வேண்டி வந்தது. ‘இயற்கையோடு இயைந்து வாழ்தல்’ https://www.youtube.com/watch?v=qxiYWukMdU0 https://www.youtube.com/watch?v=jE2YY03b058 https://www.youtube.com/watch?v=dVoIf3M0PIg https://www.youtube.com/watch?v=uTOLqNJjDtM
சம்பந்தமான பயிற்சி பட்டறை நிகழ்ச்சிகளை ஆவணப்படமாக்க நண்பர் அழைத்திருந்தார். அவரது அழைப்பைத் தட்ட முடியவில்லை.
நிகழ்ச்சியில், இரண்டு ஒளிப்பட நண்பர்களைக் கண்டேன். விலை உயர்ந்த வாகனங்களில், விலையுயர்ந்த ஒளிப்படக் கருவிகள், லென்ஸ்கள் மற்றும் ஒளிப்பட சாதனங்களுடன் அவர்கள் வந்திருந்தார்கள். 


நானும் என்னுடைய மாணவர் மெஹர் அலியும் எடுத்துச் சென்றது வீடியோ படப்பிடிப்புக்கான சாதாரணமான இரண்டு காம் ரிகார்டர்கள், கனான் குயிக் ஷாட் கையடக்க காமிரா, கனான் ரிபேல் டி-3 என்றழைக்கப்படும் DSLR வகையில் அடிப்படை வசதிகள் மட்டும் கொண்ட EOS 1100D காமிரா மற்றும் எனது சாம்சங் காலக்ஸி எஸ் 2 செல்லிடைப் பேசி (அட்டகாசமாக படம் பிடிக்கும். வீடியோ எடுக்கும். https://www.youtube.com/watch?v=ZG5YCVsU3Xw அதனால்தான் இதையும் எனது ஒளிப்பட சாதனங்களில் சேர்த்துக் கொண்டேன்.).

மெஹர் அலி
வெளிப்புற படப்பிடிப்பின் அந்த இரண்டு நாளும், நிகழ்ச்சி நேரம் போக மற்ற நேரங்களில் இயற்கையின் அத்தனை அழகும் வெளிப்படுத்திக் கொண்டிருந்த அந்தப் பகுதிகள் முழுக்க நடந்து சென்று வயல்காடுகள், தோப்புத் துறவுகள். மனித வாழ்வியல் என்று அத்தனையையும் படம் பிடித்தேன்.

இதில் ஏற்கனவே நான் சொல்லியிருந்த நண்பரும் அடக்கம். சீருடை, தொப்பி சகிதமாக அவரது நீண்ட காமிராவையும் சேர்த்து படம் பிடித்தேன்.


கடைசி நாள் அன்று அந்த நிகழ்வுக்கு வந்திருந்த அத்தனை பேரையும் நிற்க வைத்து படம் பிடிக்கும்படி நண்பர் கேட்டுக் கொண்டார்.

நண்பகல் நேரம்.

சூரியன் உச்சியில் இருக்கும்போது, முகம் நிழலாய் கருத்து காணப்படும். இதற்கான பிரத்யேக ஒளிரும் சாதனங்களை பயன்படுத்த வேண்டியிருக்கும்.

அந்த இக்கட்டான நிலையில், மின்னணு ஒளிப்பட கருவியின் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி அந்த நிகழ்வை சிறப்பாக படம் பிடித்தேன்.

ஆக ஒளிப்படங்களை தீர்மானிப்பவை விலையுயர்ந்த ஒளிப்பட சாதனங்களோ, பெரிய பெரிய லென்ஸ்களோ அல்லது நவீன ஃபில்டர்களோ மட்டும் அல்ல.

ஒரு சாதாரணமான ஒளிப்படக் கருவியையும் பயன்படுத்தி மிகச் சிறந்த ஒளிப்படத்தை எடுக்க முடியும் என்பதே அனுபவம்.

- இறைவன் நாடினால்… பார்வை விரியும்!

No comments:

Post a Comment