Thursday, July 30, 2015

வைகறை நினைவுகள் – 7, சுமக்க முடியாத பாரத்தை சுமத்துவதில்லை!ஏப்ரல் 10, 2012 அன்று மாலை சுமார் 3.30 மணியளவில் நிறுவனத்தில் நடந்த ஒரு விபத்தில் இருந்து என்னால் வேகமாக நடக்க முடியாமல் போனது. அதனால், என் நடையைப் போலவே, நினைவுகளையும் வேக வேகமாக கொண்டு செல்ல முடியாமல் தவிக்கிறேன்.

சாதாரணமான எடையல்ல; ஒரு அரை டன் எடை!

இன்று நினைத்தாலும் பிரமிப்பாக இருக்கிறது.

“சுமக்க முடியாத பாரத்தை இறைவன் யார் மீதும் சுமத்துவதில்லை!” - என்ற திருக்குர்ஆனின் வரிகள் நினைவுக்கு வருகின்றன.

ஒவ்வொரு மனிதனின் சகிப்பின் எல்லையை அறிந்தவன் அந்த படைப்பாளன் அல்லவா? அதனால், இந்த எளியவனையும் அந்த விபத்திலிருந்து இந்த சிறு நடைமாற்றத்துடன் காப்பாற்றிவிட்டான். இல்லையென்றால், ஒரு காலை இழந்து மாற்றுத் திறனாளிகளின் பட்டியலில் இடம் பெற்றிருப்பேன்.

நடந்தது இதுதான்.

அசோக் லேலண்ட் நிறுவனத்தில் மூத்த அதிகாரியாக பணிபுரிந்துவந்த காலம் அது.

பகல் பணி (Day Shift) இன்னும் சில நிமிடங்களில் முடிந்துவிடும்.

இரவு பணியாளர்களுக்கு (Night Shift) பணிகளை ஒப்படைத்துவிட்டு அதன் பிறகு ஒரு முக்கிய வேலையை முடித்தாக வேண்டும். லட்சக் கணக்கான மதிப்புள்ள சரக்குகளை வெளியில் அனுப்புவதற்காக அதற்கான டாக்குமெண்டுகளை தயாரிக்கும் பணி அது.

அடுத்த நாள் விடுமுறை நாள். சரக்கு வாகனம் தங்கிவிட்டால் எதிர்முனையில், சரக்கு சேர்வதில் தாமதமாவதுடன், டிரான்போர்ட்டருக்கும் வாகன வாடகையில், நஷ்டமாகிவிடும்.

ஏற்கனவே போன தொடரின் பின் இணைப்பில் குறிப்பிட்டது போல நிறுவனம், ERP (Enterprise resource planning) என்ற வணிக மேலாண்மை மென்பொருளிலிருந்து SAP-க்கு (Systems, Applications & Products in Data Processing) என்ற மென்பொருளுக்கு நகர்ந்திருந்த நேரமது.

என்னைவிட்டால் நிறுவனத்தில் வேறு யாருக்கும் சரக்குகளை வெளியேற்றுவதற்காக டாக்குமெண்ட்டுகளை தயாரிக்கும் கையாளும் வழிமுறைகள் தெரியாது.

இத்தகைய ஒரு சூழலில், பிளானிங் டிபார்ட்மெண்டிலிருந்து எனது சக அதிகாரி ஒருவர் புதிதாக வடிவமைத்திருந்த மாதிரிகளை எடை போடுவதற்கு கொண்டு வந்திருந்தார்.

எனது பொறுப்பில் இரண்டு டன்கள்வரை எடைபோடும் எடை எந்திரம் இருந்தது. அவருக்கு ஒத்தாசையாக இருக்கும் என்று எனது அவசர வேலைகளை சற்று நிறுத்திவிட்டு எடை போடுவதற்கு வசதியாக எந்திரத்தின் பக்கத்தில் நின்றிருந்தேன். சுவற்று ஓரமாக, கிராங்கேஸ்களை அடுக்குவதற்காக பயன்படும் ‘பேலட்’ ஒன்று நிறுத்தப்பட்டிருந்தது.

ஒவ்வொரு கிராங்கேஸீம் சுமார் 100 கிலோக்கும் அதிகமாக எடை இருக்கும். பத்து கிராங்கேஸ்களை ஒரு பேலட்டில் அடுக்கலாம்.

கனத்த அந்த பேலட்டின் எடை அரை டன்னுக்கும் (500 கிலோ) அதிகமாக இருக்கும். பாதுகாப்புக் கருதி அதை அங்கிருந்து அப்புறப்படுத்தும்படி நான் ஏற்கனவே பணியாளர்களிடம் சொல்லியிருந்தும் அவர்கள் ஏனோ அப்புறப்படுத்தவில்லை.

இந்நிலையில், எடை போடுதற்காக வந்திருந்த பிளானிங் டிபார்ட்மெண்ட் பணியாளர்களில் ஒருவர், சுவற்று ஓரமாக நிறுத்தப்பட்டிருந்த அந்த பாலட்டை ஏதோ செய்ய போய், “டமார்” என்று இரும்பு விழும் சத்தமும், அந்த பணியாளர் துள்ளி குதித்து ஓடியது மட்டும் பார்க்க முடிந்தது. அதற்கு மேல் நடந்தது என்னவென்று தெரியவில்லை.

அடுத்து அலறிக் கொண்டே எனது பகுதியின் பணியாளர் தோழர்கள் என்னிடம் ஓடிவருவது தெரிந்து.

பார்த்தால் அந்த பாலட் எனது இடது முழங்காலின் பக்கவாட்டில் பட்டு சரிந்து இடது கால் மேல் விழுந்திருந்தது. உடல் வியர்த்துக் கொட்ட, கடுமையான வலியைப் பொருத்துக் கொண்டு நிற்பதை தவிர வேறு வழி எனக்குத் தெரியவில்லை.

ஓடிவந்த பணியாளர்களில் இருவர், மிகவும் சிரமப்பட்டு அந்த பாலட்டை தூக்க இன்னும் சிலர் அதிலிருந்து எனது காலை விடுவித்து என்னை மீட்டு ‘காபினுக்கு’ கொண்டுவந்தார்கள்.

சற்று நேரத்தில் நிறுவனத்தின் ஆம்புலன்ஸ் வந்தது.

முதல் உதவிக்கான மெடிகல் டிபார்ட்மெண்டில் நான் அணிந்திருந்த கனத்த இரும்பு தகடு வைத்த பாதுகாப்பு காலணியை (Safety Shoe) கழற்றினார்கள்.

எந்த எலும்பு உடைந்து எங்கே துரித்திக் கொண்டுள்ளதோ என்ற பயத்தில் மெது மெதுவாக பார்வையை திருப்பிப் பார்த்தேன். ஒன்றும் தெரியவில்லை. அதன்பிறகு, காலுறையை கழற்றினார்கள்.

காலை பார்க்க பயமாக இருந்தது. நல்லவேளை எந்த எலும்பும் முறிந்து துருத்திக் கொண்டு வெளிவரவில்லை. ஆனால், உள் காயத்தால், இடது கால் ரத்தம் கட்டி வீங்கிவிட்டிருந்தது.

எக்ஸ்ரே எடுத்துப் பார்க்க வேண்டும் என்றார்கள்.

வெளியில் மருத்துவமனையில் சேர்ப்பதற்காக நிறுவன விபத்து பட்டியலை மருத்துவர் தயாரித்துக் கொண்டிருந்தபோது, அவரை அருகில் அழைத்தேன்.

“எனக்கான பணி ஒன்று காத்திருப்பதையும். அதை முடிக்காவிட்டால்.. நிறுவனத்துக்கும், டிரான்ஸ்போர்ட்டருக்கும் ஏற்படும் பெருத்த இழப்பையும்” சொன்னேன். 


எனது சக அதிகாரியான அந்த மருத்துவ நண்பர் என்னை கண்ணாலேயே எரித்துவிடும் அளவுக்கு முறைத்தார்.

ஒருவழியாக அவரிடம் கெஞ்சி கூத்தாடி, அடுத்த நாள் விடுமுறை நாளாகையால் நல்லதொரு மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சைப் பெற்றுக் கொள்கிறேன் என்று வலியுறுத்தி அந்த வலி வேதனையுடன் ஆம்புலன்ஸிலேயே மீண்டும் எனது டிபார்ட்மெண்டுக்கு திரும்பினேன்.

எனது சுக, துக்கங்களில் பங்கெடுக்கும் நண்பரான ஆடிட்டிங் டிபார்ட்மெண்டைச் சேர்ந்த மணியன் அய்யா அவர்களை அழைத்து, எனது அருகில் அமர்த்திக் கொண்டேன்.

மயக்கம் வருவது போலிருந்தது.

எனது மேலதிகாரிகள் என்ன செய்வது என்று தெரியாமல் என்னை சூழ்ந்து கொண்டார்கள்.

எல்லோருக்கும் நான் தைரியம் சொல்லி, அனுப்பிவிட்டு வேலையில் கவனம் செலுத்தலானேன். பக்கத்தில் டிரான்ஸ்போர்ட்டர் சங்கடத்தில் நெளிந்து கொண்டிருந்தார். அவரையும் பார்வையாலேயே அமைதிப்படுத்தினேன்.

ஒரு வழியாக எல்லா டாக்குமெண்ட்டுகளையும் தயாரித்துவிட்டேன். அதன் நகல்களை பிரிண்ட் எடுத்து டிரான்ஸ்போர்ட்டரிடம் ஒப்படைத்தேன். ‘கேட்டு’க்கும் (செக்யூரிடி) தகவல் அளித்துவிட்டு எழுந்தபோது, மணி மாலை 6 நெருங்கிக் கொண்டிருந்தது.

பிறகென்ன?

மணியன் அய்யாவை அனுப்பிவிட்டு ஆம்புலன்ஸில் ஏறி வீட்டுத் தெருமுனையில் இறங்கிக் கொண்டேன். எனது காலுக்கு போட்டிருந்த தடித்த கட்டுகள் தெரியாமலும், தெருவாசிகள் யாருக்கும் சந்தேகம் வராமலும் மெதுவாக நடந்து வீட்டுக்கு வந்து கட்டிலில் படுத்துக் கொண்டேன்.

சகஜமாக இருப்பதாக காட்டிக் கொண்டு சற்று நேரம் கழித்து மகளிடம் மெதுவாக நடந்ததைச் சொன்னேன்.

“அம்மாவிடம் மெதுவாக சொல்லணும். இல்லையென்றால் அவருக்கு பி.பி. அதிகரித்துவிடும்” - என்றும் எச்சரித்தேன்.

‘தான் வாழ்வதே எனக்காக!’ என்று வீட்டை விட்டு என்னோடு வந்த நாளிலிருந்து ஒரு கொள்கையோடு இன்று வரை எனது நிழலாக இருக்கும் எனது மனைவி அற்புதமான ஒரு மனுஷி. அந்த அற்புதங்களை தனியாக மற்றொரு நினைவுகளில் இறைவன் நாடினால், கண்டிப்பாக தெரிவிப்பேன்.

ஒரு பத்துநாள் ஓய்வுக்கு பிறகு மருத்துவர் சொல்லியும் கேட்காமல் மீண்டும் பணிக்கு சென்றுவிட்டேன்.

பெரும் விபத்தில் சிக்கிய எனது இடது கால் இறையருளால் தப்பித்ததும், அதன் அடையாளமாக நடைமாறிபோனதும் இப்படிதான்.

இதன் விளைவாக தொழுகையின் அமர்வுகளில் ஆரம்பத்தில் அமரவே முடியாத அளவுக்கு சிரமமும், தற்போது குறுகிய காலம் மட்டுமே அமர முடியும் என்ற நிலைக்கும் தள்ளப்பட்டுள்ளேன். எல்லா புகழும் இறைவனுக்கே!

‘’’’’’’’’’’’’’’’’’’’’’’’’'''''''''''''''''''''''''

ஷேக் முஹம்மது சுலைமான்
முடிவாக இரண்டு பின்னூட்டகளில் முதலாவதாக சகோதரர் ஷேக் முஹம்மது சுலைமான் எனக்கு அனுப்பியிருந்த மின்னஞ்சலும் அதற்கு நான் அளித்த பதிலும் இது:

அஸ்ஸலாமு அலைக்கும் அன்பு சகோதரரே!

தங்களின் வைகறை நினைவுகள் அல்ஹம்துலில்லாஹ் சமுதாய மக்களின் மனதில் ஊடுருவி ஓர் தாக்கத்தை ஏற்படுத்தும், ஏற்படுத்தி கொண்டிருக்கிறது என்கிற வேளையில் ஓர் வேண்டுகோள்.

நான் கீழக்கரையை சார்ந்தவன். நீங்கள் கேள்விப்பட்டு இருப்பீர்கள்; எங்கள் பகுதியில் குடும்பம் மற்றும் ஊருக்குள் மட்டுமே சம்பந்தங்கள் செய்வார்கள். இதிலும் வேறுபாடு உண்டு. நான் மேல்நிலை; இவர்கள் கீழ்நிலை என்று தராதர தட்டுகளும் உண்டு. இவற்றில் சமீபகாலமாக, சிறிதளவு மாற்றம் ஏற்பட்டுள்ளது. இந்த மாற்றத்துக்கு இன்றைய இளைஞர்களும் பங்களித்து வருகின்றனர்.

குடும்ப சூழல் கருத்தில் கொண்டோ அல்லது சில நிர்பந்தங்களினால் முடிவுகள் எடுத்தாலோ அதனால் ஏற்படும் ஏச்சுப் பேச்சுக்கள் குடும்ப அளவிலும் கூட தொடர்ந்து கொண்டே இருக்கும்.

‘ஆரம்ப கட்டத்தில், நீங்கள் உங்கள் சுய விருப்பதிற்கு இணங்க மாற்று சமுதாயத்தில் மணம் புரிந்து இருப்பினும் நீங்கள் பின்னாளில், மாறிய பிறகு கூட சில வேதனைகள் மற்றும் ஏச்சுக்கள் குடும்ப அளவில் தொடர்ந்து இருக்கலாம். மகள்களின் திருமண விஷயங்களில் சில சிரமங்களை எதிர்கொண்டும் இருக்கலாம்.

இன்னும் நமது சமுதாயத்தினர் தாவா புரிந்து பலரை நமது மார்க்கம் பக்கம் ஈர்த்து இருப்பினும் இது போன்ற விஷயங்களில் அவர்களின் மனம் இன்னும் பக்குவம் அடையவில்லை. குர்ஆன் மற்றும் ஹதீஸ் உதாரணங்கள் வாய் அளவிலேயே இருக்கின்றன.

அதனால், இதனை பற்றிய சிந்தனைகள் வீரியமாக உங்கள் ‘வைகறை சிந்தனைகளில்’ இருக்க வேண்டும் என்றே விரும்புகிறேன்; அதிலும் சமரசம் இன்றி! இன்றைய காலகட்டத்தில் இது ஓர் அத்தியாவசிய தேவையும் கூட.

எத்தனை பேர் புதிதாக வாழ்க்கை முறையாக மார்க்கத்தினை ஏற்ற மக்களுடன் சம்பந்தம் செய்ய விரும்புகிறோம் அல்லது அப்படி ஒன்றை மனதளவிலாவது நினைகின்றோமா அல்லது ஓர் சாத்தியகூற்றினை அலசுகிறோமா இவை பற்றி விரிவாக எழுதுங்கள்.

உங்கள் எழுத்தே இன்று சகோதரர் சிராஜுல் ஹசனின் பதிவின் காரணமாக கூட இருக்கலாம் .

அனைத்தையும் அறிந்தவன் இறைவனேயாவான். அனைவரின் மனதிலும் மாற்றம் தர வல்லவன் அவனேயாவான்..

வஸ்ஸலாம்

ஷேக் முஹம்மது சுலைமான்

‘’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’''''''''''''''''''
வ அலைக்கும் சலாம் ஷேக் முஹம்மது சுலைமான்,

நன்றி.

சிலவற்றில் சமரசம் இல்லாத எனது போக்கு என்னை பல இழப்புக்குள்ளாக்கியிருக்கிறது. அதனால், உங்கள் அச்சம் தேவையற்றது. எனது போக்கில் நளினம் மிகைத்திருக்கும் என்பது எனது பலவீனமோ என்னவோ!

இறைவன் சுமக்க முடியாத பாரத்தை யார் மீதும் சுமத்துவதில்லை. என்னை நல்ல சுமைத்தாங்கியாகவே அவன் தேர்ந்தெடுத்தான் போலும்! அதனால், பல சுமைகளை தாங்க வேண்டியிருந்தது. இதிலும் சந்தோஷம்தான்!

சகோதரர், சிராஜுல் ஹஸனின் பதிவைக் கண்டேன்.

வைகறை நினைவுகள் அவரது மௌனத்தை கலைத்திருப்பதாகவே நானும் கருதுகிறேன். எல்லா புகழும் இறைவனுக்கே! நல்ல தொடக்கம்.

எனது பக்கங்கள் முற்றிலும் வேறானவை. என்னைத் தொடர்ந்து போராளியாகவே அறிமுகப்படுத்துபவை. எனது பிள்ளைகளின் மண வாழ்க்கை உட்பட.

அதேபோல, நான் கடந்தவந்த, ஒவ்வொரு தருணத்திலும் இறைவனின் பேருதவியைத் தவிர வேறெந்த பின்புலமும் எனக்கில்லை. அது இயக்கம், அமைப்பு அல்லது தனிநபர்களோ யாராக இருந்தாலும் சரியே! யாரின் முதுகுகளிலும் நான் ஏறி முன்னேறியதில்லை.

திடீர் என்று எதிர்பாராமல் யாராவது வருவார்கள் இந்த புத்தகங்களை நாங்கள் வெளியிடுகிறோம் என்பார்கள். இதை செய்கிறோம் என்பார்கள். அப்படிதான் என் வாழ்க்கையில் எல்லாமே நடந்துள்ளன.

இப்படி வெளியானவைதான் எனது 10 க்கும் மேற்பட்ட சிறார் இலக்கியங்களும், நான் பொதுவெளி நாளேடுகளில் எழுத கிடைத்த வாய்ப்புகளும்.

இறைவனே என்னை ஏணியாக இருந்து ஏற்றி விட்டவன்.

அதேநேரத்தில் நான் ஒரு அடி மட்டும் அவனை நோக்கி செல்லவில்லை. பசுவைக் கண்ட கன்றாக ஓடோடி செல்ல முயன்றவாறு உள்ளேன். இறைவனின் பேரன்பான அந்த தாயன்பே என் பயணத்தின் ஊட்டமாக இருந்தது. இருக்கின்றது.

அதேபோல, வரலாறுகள் வழியே, நபிகளாரின் காலத்திலும் நான் பயணித்து, மகிழ்கிறேன். அழுகிறேன். கோபப்படுகிறேன். புன்முறுவல் பூக்கிறேன். வெட்கி நாணத்தால் தலைகுனிகிறேன். இவற்றில் எதுவும் மிகைத்தல் அல்ல. இந்தக் கற்பனாதிறன் இறையருளால் இயல்பாகவே என்னுள் வாய்த்தது.

நானும் ஜமாஅத்தின் பிறிதொரு தடைகாலத்தை கண்டுள்ளேன். அந்த அவசர நெருக்கடி நேரத்தில் இன்று பெருந்தலைவர்களாக இருக்கும் பல்வேறு நபர்களின் உண்மை முகங்களைக் கண்டிருக்கிறேன். அந்த நேரத்திலும் நான், சமரசமோ அச்சமோ அற்ற போராளியாகவே நடந்து கொண்டிருக்கிறேன். இந்த நினைவுகளும் இறைவன் நாடினால் பறிமாறிக் கொள்ளப்படும்; சமரசமும் அச்சமும் இன்றி!

எனது முன்னோர்கள் செய்த அளவு இல்லாவிட்டாலும், எனது சிறை நினைவுகளும் உண்டு. பீதியூட்டும் நினைவுகள் அவை.

யார் மீதும் எந்த காழ்ப்புணர்ச்சி இன்றி, உள்ளதை உள்ளபடியே நளினமாக நான் எழுத எனக்காக துஆ செய்யவும்.

எந்தவிதமான திட்டமும், குறிப்புகளும் இல்லாமல் திடீர் என்று ஆரம்பித்த தொடர் இது. இறைவன் நாடினால் ரமளானைக் கடந்தும் நீளும் என்று தெரிகிறது.

வஸ்ஸலாம்.

இக்வான் அமீர்.
’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’
அடுத்து சகோதரர் யாஸர் அரஃபாத்திடமிருந்து ஒரு முக்கிய பின்னூட்டம்:
“எந்தப் புள்ளியில் கம்யூனிஸத்தின் போதாமையை உணர ஆரம்பித்தீர்கள்? – என்பதையும் வைகறை நினைவுகளில் பகிர்ந்து கொண்டால் சிறப்பாக இருக்கும்!” – என்று கேட்டுள்ளார் அவர்..

இறைவன் நாடினால், அடுத்த வைகறை நினைவுகளில் அந்த நினைவுகள் பகிர்ந்து கொள்ளப்படும் சகோதரர் Yasar Arafat.
'''''''''''''''''''''''''''''''''''''''''''
இதற்கு முந்தைய நினைவுகளை பகிர்ந்து கொள்ள இணைப்புகள்:
 
வைகறை நினைவுகள் பகுதி 1: கருணையாளனான இறைவன் அவரது பாவங்களை மன்னிப்பானாக:  - http://ikhwanameer.blogspot.in/2015/07/1.html
 
வைகறை நினைவுகள் பகுதி 2: இந்நேரம் புதைச்ச இடத்தில் புல் முளைச்சிருக்கும்: http://ikhwanameer.blogspot.in/2015/07/2.html
 
வைகறை நினைவுகள் பகுதி 3: நிழலாய் நின்ற அந்த இருவர்: http://ikhwanameer.blogspot.in/2015/07/3.html
 
வைகறை நினைவுகள் பகுதி 4: நீண்ட தேடல்களின் அந்த முடிவில்: http://ikhwanameer.blogspot.in/2015/07/4.html
 
வைகறை நினைவுகள் பகுதி 5: மறக்க முடியாத அந்த இரவு: http://ikhwanameer.blogspot.in/2015/07/5.html
 
வைகறை நினைவுகள் பகுதி 6: அதிபதியின் தர்பாரில் ஆஜரான ஓர் அடியான்: http://ikhwanameer.blogspot.in/2015/07/6.html

No comments:

Post a Comment