Saturday, July 25, 2015

வைகறை நினைவுகள் – 6, அதிபதியின் தர்பாரில் ஆஜரான, ஓர் அடியான்!


சர்வதேச முஸ்லிம் சமூக இளைஞர்களிடையே எங்கெல்லாம் சிந்தனை ரீதியான இஸ்லாமி மறுமலர்ச்சியும், எழுச்சியும் ஏற்படுகிறதோ அதன் பின்னணியில் இடம் பெறும் முக்கிய நூல்களில் முதன்மை இடத்தில் வகிக்கும் நூல் அது. அதுதான் என் வாசிப்பில், அறிவுக் கண்ணைத் திறந்தது. பெயர்கள், தாடி, தொப்பி, ஆடை, வழிப்பாட்டு முறைகள், உணவு பழக்க வழக்கங்கள் என்பதையொல்லாம் தாண்டி, இஸ்லாத்தை ஒரு வாழ்க்கை நெறியாக காட்டியது. இஸ்லாம், ஒரு ஓடையல்ல; அது ஒரு பெரும் சமுத்திரம் என்று அடையாளப்படுத்தியது.

அநேகமாக உலகின் எல்லா மொழிகளிலும் மொழியாக்கம் செய்யப்பட்ட நூல் அது. ஒரு வாகனத்துக்கான முதன்மை உந்துவிசையாக எப்படி ஸ்டார்டர் மோட்டார் பயன்படுகிறதோ அப்படி தன் நிறத்தை இழந்து பல்வேறு இஸங்கள், சித்தாந்தங்களுக்கு அடிமைப்பட்டிருக்கும் முஸ்லிம் இளைஞர்களின் அறிவுக் கண்ணைத் திறக்க உதவும் நூல் அது.

அந்த நூல்தான் ‘இதுதான் இஸ்லாம்!’

இஸ்லாம் சம்பந்தமாக என் வாசிப்பின் முதல் நூல் இது.

இதைத் தொடர்ந்து குத்பாத் பேருரைகள்.

குக்கிராமங்களின் வெள்ளி மேடை தோறும் சென்ற நூற்றாண்டின் அந்த தலைச்சிறந்த அறிஞர் பெருமகனார் ஏழை, பாழைகளிடையே, கல்லாத எளிய விவசாயிகளிடையே ஆற்றிய எளிய உரைகளின் தொகுப்பு. கலிமா முதற்கொண்டு ஹஜ் பயணம்வரையிலான முஸ்லிம்களின் அத்தனை வணக்கமுறைகளின் அடிப்படைகள் குறித்து விளக்கும் மிகச் சிறந்த நூல்.

நான் இந்த இடத்தில் உங்களிடையே எனது வேண்டுகோளாக முன் வைப்பது தயவு செய்து உங்கள் வீட்டு நூலகங்களில் இந்த இரண்டு நூல்களை தவறாமல் வாங்கி வையுங்கள். இளம் தலைமுறைக்கு ஒரு பாட திட்டம் போல படிக்க ஆவலூட்டுங்கள்.

அதைத் தொடர்ந்து முஸ்லிமின் அடிப்படை கடமை, இளைஞனே விழித்தெழு! என்று எனது வாசிப்பின் எல்லை பரந்து, விரிந்தது.

சரி..! நூல்களைக் குறிப்பிட்டு நூலாசிரியரை சொல்லாமல் விட்டது உங்களுக்கு நான் இழைத்த பெரும் துரோகமாககூட இருக்கலாம். உண்மைதான் சகோதர, சகோதரிகளே எனது மனதுக்கு நான் இழைத்துக் கொள்ளும் வஞ்சகம்கூட இது.


1980-களின் பிற்பகுதியில் இஸ்லாத்தை மனதார ஒப்புக் கொண்டு செயல்படுத்த முன்வந்த அந்த காலகட்டத்தில், இந்த நூல்களை வாசிக்க கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்ததாக காலஞ்சென்ற மௌலானா குத்புத்தீன் பாகவி சொல்ல கேட்டிருக்கிறேன். “மதரஸாவில் ஓதும் போது தலையணைக்கு கீழாக மறைத்து வைத்து படிப்பார்கள். நானும்தான்!” - என்பர் மெளாலான நகைச்சுவையுடன் தனது குறுந்தாடியை நீவி விட்டவாறு சரிந்து விழ இருக்கும் தொப்பியை சீர் செய்தவாறு.

அதனால், சென்ற நூற்றாண்டின் மாபெரும் சிந்தனையாளரான அவருடைய புத்தகங்களை யாருக்காவது படிக்க கொடுக்க வேண்டுமென்றால்கூட, அட்டைப் படம் மற்றும் அதற்கு பிறகு உள்ள நூலசிரியர் குறித்த தகவல்களை கிழித்தெறிந்துவிட்டு படிக்க கொடுக்கும் அனுபவமும் உண்டு. கருத்துக்கள் சேர்ந்தால் போதும், கருத்தைச் சொன்னவரை பிறகு தேடிக் கொள்ளட்டும் என்ற விவேகமான அணுகுமுறையால்தான் அப்படி செய்ய வேண்டி வந்தது.

இறைவன், மௌலான மௌதூதி என்ற அந்த மாபெரும் அறிஞரின் பிழைப் பொறுப்பானாக! சுவனங்களில் உயர்ந்த இடங்களில் அமர்த்துவானாக!

பொய்யும். புனைதலிலும் என்னிலிருந்து என் சமூகத்தை ஒதுக்கிவிட்டால், பிறகு எனது மாபெரும் லட்சியத்துக்கான அறப்போருக்கு ஆள்வளத்தை எங்கு சென்று தேடுவது? 


வெறும் வெண்மை நிறத்தைக் கொண்டு ஒரே தோற்றத்திலிருக்கும் படிகாரம், சர்க்கரை, வெள்ளைக் கல் என்று எடைபோட முடியாது. அந்த வெண்மை நிறத்தோடு உரசிப் பார்த்து, சுவைத்துப் பார்த்து, முகர்ந்து பார்த்து என்று பல்வேறு சோதனைகளுக்கு ஆளாக்கி வைரமாய் இஸ்லாத்தை தேர்வு செய்த ஒரு கடும் பிரயத்தனம் அது.

வைரச் சுரங்கத்திலேயே பிறந்து, வளர்ந்து அதிலேயே முழு வாழ்வையும் கழிக்கும் இஸ்லாத்தின் உடமைதாரர்களுக்கு வேண்டுமானால் இத்தகைய முயற்சி தேவையற்றதாக இருக்கலாம் அல்லது அவர்களின் உடமை எத்தனை பெரு மதிப்பிற்குரியது, சிறப்புக்குரியது என்பதை தெரிந்து கொள்ள அவசியம் இல்லாமல் இருக்கலாம். அந்த அறியாமையின் விளைவாக, அது அகிலங்களின் அதிபதியின் விருப்பத்துக்குரியது. அன்பு நபிகளாரின் தளராக முயற்சியில் தழைத்தோங்கியது என்ற மதிப்பீடுகளில் அலட்சியம் இருக்கலாம்.

ஆனால், வெறும் பெயரளவில் மட்டுமே முஸ்லிமாக நடமாடிக் கொண்டிந்த எனக்கு, எனது 28 வயது காலத்தின் எண்ணற்ற நன்மைகளை இழந்து என் கடின தேடலில் கிடைத்த பொக்கிஷம் இஸ்லாம்.  அதை பத்திரமாக பாதுகாத்துக் கொள்வதுடன், யுக முடிவுநாள்வரை வரவிருக்கும், எனது கொள்கைவழி சந்ததியினருக்கும், மனித சமூகத்துக்கும் சேர்க்க வேண்டிய பொறுப்பும் எனக்கிருக்கிறது.

ஆக, இதுதான் இஸ்லாம், குத்பாத் பேருரைகள் என்று ஆரம்பித்த எனது வாசிப்பு நூல்களின் எண்ணிக்கை பெருக.. பெருக.. நான் பெரும் அதிஷ்டசாலி என்பதை அறிந்தேன். இறையருள் என் மீது பொழிவதை உணர்ந்தேன்.

எனது துரதிஷ்டம் பாருங்கள். வழிவழியாய் ஒரு முஸ்லிம் குடும்பத்தில் பிறந்து வளர்ந்திருந்தாலும், இஸ்லாம் குறித்த எந்த அடையாளங்களும் என்னிடம் இல்லை. அதனால்தான், என்னை அறிமுகப்படுத்திக் கொள்ளும் போதெல்லாம் நான் எனது 28 வயதில் இஸ்லாத்தை தழுவியவன் என்று தயக்கமின்றி சொல்லிக் கொள்வேன்.

சிறுக.. சிறுக எனது வாசிப்பு.. அதிகரித்து அதன் அடுத்த பரிணாமமாக திருக்குர்ஆனிடம் என்னைக் கொண்டு  சேர்த்தது.


 உலகங்களின் அதிபதியான அந்த மாபெரும் பரம்பொருளின் சந்நிதியில் இந்த பாவி ஆஜராகிவிட்டேன்! அவனது தூதர்களில் இறுதியானவரும், உலக மக்களுக்கு அருளாக வந்தவருமான அன்பு நபிகளாரிடம் என்னை ஒப்புக் கொடுத்துவிட்டேன்.

அதன் பிறகு என்னைவிட பெரும் அதிஷ்டசாலி வேறு யாராக இருக்க முடியும்?

அதிஷ்டசாலி என்பது உண்மைதான்! அதே நேரத்தில் எனது கற்றலின் அதன் அடிப்படையிலான செயலுருவின் எல்லை விரிந்து நின்றது.

ஒரு குழந்தையைப் போல திருக்குர்னை ஓதுவதற்கான ஆரம்ப பாடங்களை படிக்கத் தொடங்கினேன். என் தொழுகைக்கான சிறு சிறு சூறாக்களை அதாவது திருக்குர்ஆனின் வசனங்களை மனம் செய்ய ஆரம்பித்தேன்.

எனது மனன முறையை நீங்கள் தெரிந்து கொண்டால் வியப்படைவீர்கள். எனது பள்ளி நாட்களிலேயே இத்தகைய வழிமுறைதான் நான் கடைப்பிடித்து வந்ததால் அதை அப்படியே பிற்காலத்தில் செயல்படுத்தினேன்.

பள்ளி நாட்களில், ஒரு கிலோ மீட்டர் தொலைவுக்கு நான் கடலோர சாலையில் நடந்து திரும்பினால் ஒரு கட்டுரையை (சம்மரி) மனனம் செய்துவிடுவேன் என்றே பொருள். ஒவ்வொரு வரியாக மனம் செய்து அடுத்தடுத்த வரிகளை கூட்டிக் கொண்டே திரும்ப திரும்ப மனனத்தில் சேர்த்துக் கொள்வது என்ற எளிய முறையை நான் பின்பற்றினேன்.

சரி… அசோக் லேலண்டின் பணியாளரான நான் எப்படி மனனம் செய்வது? அதற்கான நேரத்தை எப்படி ஒதுக்குவது?

அதற்கும் ஒரு வழி கண்டுபிடித்தேன். பழைய திருமண அழைப்பிதழ்களை சேகரிப்பது. அவற்றில் அரபி உச்சரிப்பை தமிழில் எழுதிக் கொள்வது, சில இடங்களின் உச்சரிப்பு அடையாளத்துக்கு சிவப்பு மையில் ஆங்கில எழுத்துக்களை குறியிடுவது. அந்த அட்டையை ஒரு நூலில் கட்டி நான் பணிப்புரியும் எந்திரங்களில் தொங்கவிட்டுவிடுவது. இப்படி தொடங்கியது தொழுகைக்கான எனது ஆயத்தங்கள்.

என்னை இஸ்லாமிய வார்ப்பில் வடிவமைத்துக் கொண்டிருந்த ஆரம்பக்கட்ட அதேநேரத்தில், எனது துணைவியார் தனது சமய கொள்கை, கோட்பாடுகளில் லயித்திருந்தார். குழந்தைகள் அவர்களது போக்கில் வளர்ந்து கொண்டிருந்தார்கள்.

என்னையும், சீர்த்திருத்திக் கொண்டு என் குடும்பத்தாரையும் சீர்த்திருத்தும் யுத்திகளாய் நான் என்னவெல்லாம் கடைப்பிடித்தேன் என்பதை இறைவன் நாடினால்… அடுத்த வைகறை நினைவுகளில்…


 பின்னிணைப்பு:

1. காலையில், கத்தாரிலிருந்து ஒரு போன் வந்தது. மறுமுனையில் மாஷாணமுத்து. அசோக் லேலண்ட் நிறுவனத்தில் நான் அதிகாரியாக பணி உயர்வு அடைந்த அந்த புதிதில் இன்வெண்ட்ரி வந்துவிட அதற்கான அட்டவணைப் பணிகளுக்கும், தகவல்களுக்கும் பெருந்துணையாக நின்ற எனது இளம் நண்பர். தற்காலிக பணியாளராக இருந்த அவர் வைகறை நினைவுகளை படித்துவிட்டு மிகவும் மகிழ்ச்சியுடன் உரையாடினார். தற்போது, ஓமனில் ஒரு பணிக்கான நேர்முக தேர்வை சந்திக்க இருப்பதாகவும், அதற்காக துஆ செய்யும் படியும் (இது அவரது சொல்தான்) கேட்டுக் கொண்டார். இறைவன் தன் கருணையால் மாஷாணமுத்துவுக்கு வெற்றியைத் தருவானாக!

2. அடுத்ததாக, முதுநிலை மேலாளராக இருந்து என்னோடு விருப்ப ஓய்வு பெற்ற சங்கரன் அய்யா. ERP (Enterprise resource planning) என்ற வணிக மேலாண்மை மென்பொருளிலிருந்து SAP-க்கு (Systems, Applications & Products in Data Processing) என்ற மென்பொருளுக்கு எனது நிறுவனம் நகர்ந்தபோது, நிறுவனத்தின் அனைத்து அதிகாரிகளும் தடுமாற ஆரம்பித்தனர். அந்த நேரத்தில் எனக்கு பொறுமையாக எனது சந்தேகங்கள் அனைத்துக்கும் விடை  சொல்லிக் கொடுத்தவர், எனது பிரிவில் எனக்குச் சிறப்புப் பயிற்சி அளித்தவர் சங்கரன் அய்யா. அவரும் அழைத்து வைகறை நினைவுகளை சிலாகித்தார்.

3.    இப்படி ஏகாம்பரம், உபைதுல்லாஹ் போன்ற நண்பர்கள் எல்லாம் என்னை தொலைபேசியில் அழைத்து வைகறை நினைவுகள் குறித்து பேசினார்கள்.

4.    சமூக நீதி முரசின் பொறுப்பாசிரியர் சகோதரர் வலியுல்லாஹ்வும் இப்படி அழைத்து பேசியவர்களில் ஒருவர்.

5. அதேபோல, வடபழனியிலிருந்து எனதருமை நண்பர் யூஸீஃப் அலி அழைத்து வைகறை நினைவுகள் சம்பந்தமாக சில ஆலோசனைகளும் தந்தார். 

இவர்கள் அனைவருக்கும் நன்றி.

‘’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''
இதற்கு முந்தைய நினைவுகளை பகரிந்து கொள்ள இணைப்புகள்:


வைகறை நினைவுகள் பகுதி 1: கருணையாளனான இறைவன் அவரது பாவங்களை மன்னிப்பானாக:  - http://ikhwanameer.blogspot.in/2015/07/1.html
 
வைகறை நினைவுகள் பகுதி 2: இந்நேரம் புதைச்ச இடத்தில் புல் முளைச்சிருக்கும்: http://ikhwanameer.blogspot.in/2015/07/2.html
 
வைகறை நினைவுகள் பகுதி 3: நிழலாய் நின்ற அந்த இருவர்: http://ikhwanameer.blogspot.in/2015/07/3.html
 
வைகறை நினைவுகள் பகுதி 4: நீண்ட தேடல்களின் அந்த முடிவில்: http://ikhwanameer.blogspot.in/2015/07/4.html
 
வைகறை நினைவுகள் பகுதி 5: மறக்க முடியாத அந்த இரவு: http://ikhwanameer.blogspot.in/2015/07/5.html
 

No comments:

Post a Comment