Friday, July 24, 2015

வைகறை நினைவுகள்: 5, மறக்க முடியாத அந்த இரவு


என்னை நீங்கள் மன்னிக்க வேண்டும் என்று முதலிலேயே கேட்டுக் கொள்கிறேன்.

ஒவ்வொரு தொடர் நிறைவடையும்போதும். அதன் தொடர்ச்சியை அடுத்த தொடரில் சொல்ல முடியாமல் தள்ளி போகிறது.

இன்றும் அப்படிதான்! எனது பயணத்தில் இன்னும் கொஞ்சம் பின்னால் சென்று பார்க்க என் மனம் விழைகிறது.

அதற்கு முன்பாக,

இன்று வைகறை பொழுதில் அன்பு நண்பர் சேயன் ஹமீது என்னை அழைத்தார். தொடர் நன்றாக உள்ளதாக அவர் மற்றும் அவருடைய குடும்பத்தார் சார்பாகவும் பாராட்டினார். தொடர்ந்து எழுதும்படி சொன்னார்.


அன்பு நண்பர் சேயன் ஹமீதுக்கும் அவரது குடும்பத்தார்க்கும் நன்றி.

அடுத்ததாக ‘உண்மையான முகமூடி’ என்ற பெயர் கொண்ட எனது முகநூல் நண்பர் ஒருவர் என்னை ‘எழுத்தாளராக’  பட்டியலிட்டு அறிமுகப்படுத்தியிருந்தார். அவருக்கும் எனது நன்றி.

இறைவனின் மாபெரும் அருளால், ஒரு முப்பதாண்டு காலம் சமரசம், விடியல், மறுமலர்ச்சி, உணர்வு, மக்கள் உரிமை, மணிச்சுடர், சிந்தனை சரம், மனாருல் ஹீதா, தற்போது அரசியலின் புதிய பாதை, சமூக நீதி முரசு என்று அநேகமாக எல்லா முஸ்லிம் பத்திரிகைகளிலும், தினமணி, தினமணி கதிர் மற்றும் தினமணியின் எல்லா இணைப்புகளிலும் (திரு இராம சம்பந்தம் ஆசிரியராக இருந்த காலத்தில்) தினமணி ரமளான் மலர் ஆசிரியர் குழுக்களிலும், தினமலர். தினகரன், மாலைமலர், தீக்கதிர் தற்போது தி இந்து போன்ற பொதுவெளி நாளேடுகளிலும், கட்டுரையாளாராக, செய்தியாளராக, சிறப்பு செய்தியாளராக, புலனாய்வு செய்தியாளராக பன்முகங்களில் பணியாற்றியிருக்கிறேன். 

கல்ஃப் ஏசியா போன்ற காட்சி ஊடகங்களுக்காக எண்ணற்ற செய்திப்படங்களைத் தயாரித்து தந்திருக்கிறேன்.

விழிகள் என்னும் பெயரில் 300-க்கும் அதிகமான காணொளி பதிவுகள்,

மிஸ்டர் பாமரன், உதயதாரகை, மழலைப்பிரியன் என்று மூன்று இணையதளங்களை நடத்தி வந்தும்,

13 குழந்தை இலக்கிய புத்தகங்களைப் படைத்தும் 30 ஆண்டுகளுக்கு பிறகுதான் சமுதாயம் என்னை அடையாளம் கண்டு கொண்டுள்ளது பிரமிப்பூட்டுகிறது.

அதிலும் சிறுபான்மை சமுதாயத்தைச் சேர்ந்தவன் எதிலும் சோடை போனவனில்லை. அதற்கான எல்லா தகுதிகளும் கொண்டவன்தான் என்று நிரூபிக்க தமிழ் இலக்கியம், இதழியல் மற்றும் மனித உரிமைகள் என்று ஒன்றுக்கு மூன்று முதுநிலைப் பட்டங்களைப் பெற்றிருந்தும், எனக்கான அங்கீகாரம் இப்போதுதான் சமுதாயம் தருகிறதென்பது ஆச்சரியப்பட வைக்கிறது.

அடுத்ததாக, மற்றொரு பத்திரிகையாளர் நண்பரிடமிருந்து இன்று மாலை ஒரு போன் வந்தது. ஒரு குறிப்பிட்ட தமிழ் நாளேடு தொடர்ந்து நோன்பு சம்பந்தமான கட்டுரைகளை வெளியிட்டுவருவதாகவும், அதற்கு பங்களிக்கும்படியும் கேட்டுக் கொண்டார். அத்தோடு விட்டிருக்கலாம். “ஆனால், …” – என்று இழுத்த அந்த நண்பர், “எழுதுவதற்கு அவர்கள் எந்தவிதமான அன்பளிப்புகளையும் அளிப்பதில்லை. நானும் அப்படிதான் எழுதிவருகிறேன். நீங்களும் எழுதினால் நன்றாக இருக்கும்!” - என்றார்.

இதுதான் சமுதாய எழுத்துப் போராளிகளின் உண்மை நிலை. அவர்கள் இரந்துண்டு வாழ்ந்தாலும் சமுதாயத்துக்காக எழுதி கொண்டிருக்க வேண்டும் என்பதுதான் யதார்த்தம்.

எனக்கு முன்னால், இத்தகைய எத்தனை எத்தனையோ இடர்பாடுகளை சந்தித்து உருகி, மருகி அந்நிலையிலும், தங்கள் எழுதுகோல்களின் ஒரு மைத்துளியையும் சமுதாயத்துக்கு எதிராக பயன்படுத்தாத எனது இதழியல் துறைச்சார்ந்த முன்னோர்களை எண்ணி பெருமிதமடைகிறேன். கருணையுள்ள இறைவன் அந்த எழுத்தாணி அறப்போராளிகளின் அனைத்து பாவங்களையும் குற்றங்களையும் மன்னித்து சுவனங்களில் உன்னத இடங்களைத் தந்தருள்வானாக!

இந்த சமுதாயத்தின் அறிவு ஜீவிகளின் நிலை இப்படிதான் இருக்கிறது என்பதை சொல்லவே நான் எனது பயணத்தின் ஊடே இவற்றை சுட்டிக் காட்ட வந்தது.

எனது எழுத்துலக பயண அனுபவங்கள் சுவாரஸ்யமானவை. இறைவன் நாடினால் அவற்றை பிறிதொரு நேரத்தில் பார்க்கலாம்.

எழுத்துலக பயணத்தில் நிலைத்து நின்று நான் போராட எனக்கு அடிப்படை ஆதாரமாக இருந்தது நான் பணி புரிந்து வந்த அசோக் லேலண்ட் நிறுவனம்தான்! எனது அத்தனை பொருளாதார தேவைகளின் முதுகெலும்பாக இருந்ததும் இந்த நிறுவனம்தான்!

பல சந்தர்பங்களில் எழுத்துலகுக்கு முழுமையாக சென்றுவிட நினைத்தும் எனது மூத்த பத்தரிகையாளர்கள் “பணியை விட வேண்டாம்!” என்ற சொன்ன அறிவுரைகளை மந்திர சொல்லாகவே நான் எடுத்துக் கொண்டதால் தப்பித்தேன். இல்லையென்றால் நான் இந்நேரம் காணாமல் சென்றிருப்பேன்.

அதனால், அசோக் லேலண்ட் நிறுவனத்துடனான ஆரம்ப பயணத்தை மட்டும் சுட்டிக் காட்ட விரும்புகிறேன்.


தூறல் போட்டுக் கொண்டிருந்த ஒரு மழை நேரம்.

எனது கூரை வீட்டை நான் செப்பனித்துக் கொண்டிருந்தேன்.

“எத்தனை ஓட்டைகளை அடைப்பது?” – எனக்கு சலிப்பு ஏற்பட்டது.

இந்த கூரை வீட்டின் மகிமை என்னவென்றால், இரவில் படுத்துறங்கும்போது, வானத்தின் அத்தனை நட்சத்திரங்களையும் காணலாம். அதற்கு இணையாக ஏராளமான பொத்தல்களுடன் நான் போர்த்திக் கொண்டிருக்கும் போர்வை; அம்மாவின் புடவை.

கூரையை செப்பனிட்டுக் கொண்டிருந்த அந்த தருணத்தில்தான் தபால்காரர் அசோக் லேலண்டிலிருந்து வந்திருந்த எனக்கான நேர்முக அழைப்பைச் சுட்டும் உள்நாட்டு கடிதம் ஒன்றை தந்தார்.

நேர்முக தேர்வுக்கு போட்டுக்கொள்ள நல்ல சட்டைகூட இல்லாத ஒரு நேரமது.

‘என்ன செய்வது?’

ஒரு திட்டம் உருவாக அதை அம்மாவிடம் சொன்னேன்.

“உன்னால் முடியாது! சும்மா இரு!” - என்று அம்மா மறுக்க நான் நேராக மாமாவிடம் சென்றேன்.

மாமா அசோக் லேலண்டில் பணிபுரிந்து கொண்டிருந்தார்.

11-வது வகுப்பை முடித்திருந்த நான்  அதற்கு மேல் படிக்க வசதியில்லை. இரசாயன துறையில் விஞ்ஞானியாக வேண்டும் என்பது எனது ஆசை.

மாமா எனக்கு செய்த பரிந்துரையின் காரணமாகவே அந்த நேர்முக தேர்வுக்கான அழைப்பு வந்திருந்தது. அந்த பரிந்துரை கடிதம் பின்னாளில் குடும்பத்தில் பூகம்பத்தை ஏற்படுத்திவிட்டது.

மாமா, தனது வாரிசு வேலையில் என்னை பணிக்கமர்த்தி விட்டதாக மாமி அமர்களப்படுத்திவிட்டார்.

ஆனால், நான் வேலைக்கு சென்றதோ அரசு ஒதுக்கீட்டின் அடிப்படையிலான பயற்சியாளராக!

இதை புரிய வைப்பதற்குள் போதும் போதுமென்றாகவிட்டது.

நல்லவேளை! எனது மாமாவின் வாரிசு பணி அவரது பிள்ளைக்கு கிடைத்துவிட்டது. நானும் தப்பித்தேன்!

அப்போது மாமா 10 சதுரத்தில் வீடு கட்ட பேஸ்மெண்ட் போட்டிருந்தார். அந்த அடித்தளத்துக்கு இன்னும் மண் நிரப்பவில்லை. ஓரிரு நாட்களில் கூலி ஆட்களை வைத்து மண் நிரப்ப வேண்டும் என்று பேசி கொண்டிருந்தார்கள்.

நேராக மாமாவிடம் சென்ற நான், ‘மண் நிரப்பும் அந்தப் பணியை என்னிடம் ஒப்படைக்கும்படி’ - கேட்டேன்.  ‘நேர்முகத் தேர்வுக்கு அணிந்து கொள்ள நல்ல சட்டை இல்லை என்றும், கூலியாட்களுக்கு தரும் பணத்தை எனக்கு தரும்படியும்’ – கேட்டுக் கொண்டேன்.

எனது மாமாவுக்கு என்மேல் எப்போதுமே, ஒரு அசாதாரணமாக நம்பிக்கை உண்டு. அந்தப் பணியை என்னிடம் ஒப்படைத்தார்.

பரிதாபமாக அம்மா என்னைப் பார்த்தார். இரவில் நான் வேலைச் செய்யவிருக்கும் இடத்தில் எனக்குத் துணையாக படுத்திருந்தால் போதும் என்று சொல்லி சமாதானப்படுத்தினேன். வெளிச்சத்துக்கு ஒரு காடா விளக்கை மட்டும் எரிய விட்டேன்.

இரவு முழுவதும் 10 சதுர வீட்டுக்கு ஒற்றை ஆளாக விடிவதற்குள் மண்ணை நிரப்பிய அந்த இரவை என்னால் மறக்கவே முடியாது.

மாமா கொடுத்த பணத்துக்கு குறளகம் சென்று காதி கிராப்ட்டில் அப்போதைய டிசைனான கோடு போட்ட தடித்த கதர் துணியை வாங்கினேன். அதை அப்பாவிடம் கொடுத்து சட்டையை தைத்து போட்டுக்கொண்டு நேர்முகத் தேர்வுக்கு சென்ற பசுமையான நினைவுகள் அவை.

வறுமையும், அதை எதிர்த்து நின்ற போர்க்குணமும், ஆன்மிக தேடலுமாய் வாழ்க்கையும் கழிந்து கொண்டிருந்தபோதுதான் எனக்கு இஸ்லாம் பரிச்சயமானது.

எனது தேடலுக்கு வழிகாட்டியாய் இருந்த சில புத்தகங்கள் இறைவன் நாடினால் அடுத்த வைகறை விடியலில்.....

இதற்கு முந்தைய நினைவுகளை பகிர்ந்து கொள்ள இணைப்புகள்:
 
வைகறை நினைவுகள் பகுதி 1: கருணையாளனான இறைவன் அவரது பாவங்களை மன்னிப்பானாக:  - http://ikhwanameer.blogspot.in/2015/07/1.html
 
வைகறை நினைவுகள் பகுதி 2: இந்நேரம் புதைச்ச இடத்தில் புல் முளைச்சிருக்கும்: http://ikhwanameer.blogspot.in/2015/07/2.html
 
வைகறை நினைவுகள் பகுதி 3: நிழலாய் நின்ற அந்த இருவர்: http://ikhwanameer.blogspot.in/2015/07/3.html
 
வைகறை நினைவுகள் பகுதி 4: நீண்ட தேடல்களின் அந்த முடிவில்: http://ikhwanameer.blogspot.in/2015/07/4.html
 No comments:

Post a Comment