Friday, July 24, 2015

லென்ஸ் கண்ணாலே:004, வாய்ப்பு என்பது ஒருமுறைதான்


1979 என்று நினைக்கிறேன்.

எனது பயிற்சி காலம் முடிந்து தேர்ச்சி நிலையில்  தற்காலிகமான பணியில் அப்போது நிறுவனத்தில் இருந்தேன். ‘வெர்டிகல் டர்ரெட் லேத்’  என்னும் அரை பனை உயர எந்திரங்கள் இரண்டை ஒரு சேர இயக்க வேண்டிய பணி.

கனரக வாகனங்களின் டயர் பொருந்தும் இடமான பிரேக் ட்ரம்களை மெஷினிங் செய்ய வேண்டிய பணி அது. ‘டர்ரெட் இண்டெக்ஸ்’ எனப்படும் மிகவும் கனமான ஐங்கோண வடிவ பகுதியில் வெட்டுக் கருவிகள் பொருத்தப்பட்டு அது ஒவ்வொரு நிலையிலும் சுழன்று நிற்கும் விதத்தில் அதற்கான மோட்டார் இணைப்பும் ‘பானல் போர்ட்டுக்கு’ மேலேயே இருக்கும். இதை நாம்தான் இயக்க வேண்டும்.

இந்த ‘வெர்டிகல் டர்ரெட் லேத்’ எந்திரத்தில் அதுவரை பணிபுரிந்த இருவருக்கு நடைபெற்ற விபத்தில் விரல்கள் துண்டிக்கப்பட்டிருந்தன. இந்த எச்சரிக்கையுடன்தான் நான் கவனமாக இருந்தேன். ஆனாலும். ஒரு பிசுபிசுப்பான தூறல் விழுந்து கொண்டிருந்த மழை நாளின் இரவு பணிநேரத்தில், கையுறையுடன் அந்த இண்டெக்ஸ் மேல் கையை வைத்துக் கொண்டு ‘சுவிட்ஸ்’-ம் ஆன் செய்து விட்டேன். கண்ணிமைக்கும் நேரத்தில், கையுறையோடு என் விரல் அதில் சிக்கிக் கொண்டு அடுத்த நிலைக்கு சென்று நின்றது. நல்ல வேளை விரல் துண்டாகவில்லை. எலும்புமுறிவோடு, இடது கையின் விரல்களில் ஒன்று நுனியில் வளைந்த தோற்றத்துடன் நிரந்தரமாகிவிட்டது.

எனக்கு ஏற்பட்ட அந்த அனுபவத்திலிருந்து நான் கற்றுக் கொண்டது, செய்யும் ஒவ்வொரு செயலையும் கவனத்துடன் பழக்கமாக்கிக் கொள்ள வேண்டும் என்பதுதான். அந்த பழக்கம் வாழ்க்கையின் ஒரு பகுதியாகிவிட வேண்டும்.

உதாரணமாக,

•    பள்ளிவாசலுக்கு தொழ செல்லும்போது, கைக்கடிகாரத்தை கழற்றி, ஒளு மேடையில் வைக்காமல், பாண்ட் பாக்கெட்டில் போட்டுக் கொள்வது.

•    வாகனத்தை நிறுத்தி இறங்கும்போது, மறக்காமல் சாவியை எடுத்து வைத்துக் கொள்வது.

•    வாகனத்தை ஸ்டார்ட் செய்வதற்கு முன்னால் சைட் ஸ்டாண்ட் போட்டிருந்தால் அதை தட்டிவிட்டு அதன்பிறகே ஸ்டார்ட் செய்வது.

•    காமிராவை சுமந்து செல்லும் பையை எப்போதும், நம்மைவிட்டு பிரியாமல் பார்த்துக் கொள்வது என்று பழக்கமாக்கிக் கொள்ள வேண்டும்.

அவ்வகையில், நீங்கள் அழகிய ஒளிப்படங்களை எடுத்து உலகப் புகழ் அடைவதற்கு முன்னால், உங்கள் காமிராவை எப்படி கையாள வேண்டும் என்பதையும், பழக்கமாக்கி கொள்ள வேண்டும். 


காமிராவை அதற்கான பையிலிருந்து எப்படி எடுப்பது? எப்படி பிடித்து கிளிக் செய்வது? எப்படி லென்ஸ்களை கழற்றி மாட்டுவது? படம் எடுத்து முடித்ததும் மீண்டும் அதற்கான இடங்களில் எப்படி வைப்பது? என்று அனைத்தையும் வாழ்க்கையில் அனிச்சையான பழக்கங்களாக்கிக் கொள்ள வேண்டும்.

ஒருமுறை நண்பர் ஒருவர் விலையுயர்ந்த காமிரா ஒன்றால் படம் பிடித்துவிட்டு, படங்கள் நன்றாக வரவில்லை என்று சலித்துக் கொண்டார். நல்ல படங்களை எடுக்க அவருக்கு தெரியவில்லை என்பதுதான் உண்மை.

மங்கலான படங்கள், ஷேக் ஆன படங்கள் என்று அவர் எடுத்த ஒவ்வொரு படத்துக்கு பின் அவர் செய்த தவறுகளை சுட்டிக் காட்ட வேண்டியதாகி விட்டது.

நீங்கள் தேர்வு செய்யும் படங்களை எடுக்கும் முன் காமிராவை எப்படி கையாள்வது என்ற சிறு நுணுக்கங்கள் இவை.

செல்போன் என்றால், லென்ஸ் மீது விரல்கள் படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

கையடக்கமான காமிராக்கள் என்றால் பிளாஷ் ஒளிரும் இடத்தில் விரல்கள் மறைப்பதிலிருந்து கவனமாக இருக்க வேண்டும்.

அதேபோல, DSLR காமிராக்கள் என்றால், கழுத்தில் மாட்டிக் கொண்டு இருகைகளையும் நெஞ்சோடு அணைத்துக் கொண்டு (படம்) இயக்க பழக்கமாக்கிக் கொள்ள வேண்டும்.

படமெடுக்கும்போது கை நடுக்கம் இல்லாமல் பார்த்துக் கொள்வது மிகவும் முக்கியமானது. காமிரா ஆடவில்லை என்றால் படங்களும் அற்புதம் என்று அடித்துச் சொல்ல முடியும்.


இன்றைய டிஜிட்டல் யுகத்தில் ஒன்றுக்கு நான்காய் படங்களை எடுத்துக் கொள்ளலாம் என்பது நிஜம்தான். அதனால், ஷேக்கான படங்களுக்கு பதிலாய் வேறு படங்களை எடுக்கலாமே என்று நினைக்கலாம். இந்த நினைப்பு தவறானது என்று களத்தில் நீங்கள் காமிராவுடன் இறங்கும்போது புரிந்துவிடும்.

இரண்டு நாட்களுக்கு முன் நடந்த நிகழ்ச்சி.

சென்னையிலிருந்து வடக்கில் உள்ள பழவேற்காடுக்கு செல்லுவதற்கு இரண்டு வழிகள் உள்ளன. ஒன்று மீஞ்சூர் வழியாக செல்வது. அப்படி செல்லும்போது, வழியில் பல்வேறு கிராமங்களை கடந்து செல்ல வேண்டும்.

அடுத்தவழி கடலோரமாக காட்டுப்பள்ளி வனம் வழியாக மீனவர் கிராமங்களை கடந்து செல்வது.

காட்டுப்பள்ளி வழியாக சென்றால் பாதை சரியாக இல்லாவிட்டாலும், இயற்கை எழில்கொஞ்சும் காட்சிகள் குறைவில்லாமல் கிடைக்கும். (வடசென்னை அனல் மின்நிலையத்துக்காக நூற்றுக் கணக்கான வனப் பகுதிகள் ஏற்கனவே கையகப்படுத்திவிட்டதால், மின் தயாரிப்பு என்ற பெயரில் தற்போது காடுகளை அழிக்கும் பணியில் அரசாங்கமே முனைப்புடன் இறங்கிவிட்டதால் இந்த இயற்கை எழிலும் இன்னும் சில நாளில் எரிசாம்பலாகிவிடும்)

பழவேற்காடுக்கு இந்த முறை செல்ல தேர்வு செய்தது மீஞ்சூர் வழி.

பல்வேறு கிராமங்களை கடந்து செல்லும்போது, வழியில் காட்டூர் என்னும் கிராமத்தில் பாதையின் இடதுபுறத்து காலி நிலத்தில் கர்ப்பிணி இளம் பெண் ஒருவர் ஒரு கோடாறியால் மரங்களைப் பிளந்து கொண்டிருந்தார். நான் முடிவெடுப்பதற்குள் எனது வாகனம் அங்கிருந்து 100 மீட்டர் தொலைவு கடந்து விட்டது. 

 வாகனத்தை திருப்பி படமெடுக்க வேண்டிய இடத்துக்கு (இத்தகைய படங்களை) வந்தால் அந்த பெண் சுதாகரித்துக் கொள்வார். பிறகு படம் பிடிக்க முடியாது. இந்த நிலையில், அந்த நூறு மீட்டர் தூரத்தை கடந்து செல்லும் வழியிலேயே கால நிலைக்கு ஏற்ப (வானம் மங்கி, தூரல் போட்டுக் கொண்டிருந்த சொதப்பலான சூழல்) காமிரா செட்டிங்குகளை மாற்றிக் கொண்டேன்.

கடைசியில் அந்தப் பெண் மரங்களைப் பிளந்து கொண்டிருந்த இடத்துக்குச் சென்று வேறு எங்கேயோ படம் எடுப்பதாய் வழியில் உள்ளவர்களுக்கு போக்குக் காட்டி, சட்டென்று திரும்பி அந்தப் பெண்ணை படம் எடுக்க ஆரம்பித்தபோது, நான் எதிர்பார்த்த அளவு அந்த படங்கள் அமையவில்லை. இரண்டு முறை கிளிக் செய்யும்போதே எனக்கு திருப்தியில்லாமல்தான் காமிராவை இயக்கினேன்.

வயிற்று சுமையோடு, வாழ்வியல் சுமையும் முகத்தில் எதிர்பட அந்த தலித் பெண் கோடாறியை ஆக்ரோஷமாக இறக்கும் அந்தக் காட்சி எனக்கு அமையவேயில்லை.

பட்டப் பகலில் சாலையில் அமர்ந்து நான் படம் எடுப்பதை பார்த்துவிட்ட அந்தப் பெண் கோடாறியை ஓர் ஓரமாக வைத்துவிட்டு திரும்பி நின்றுவிட்டார்.

அவர் திரும்பியபோது, ஒரே ஒரு முறை மரக் கட்டைகளைப் பிளக்கும்படி மன்றாடலாய் சைகை செய்தும் வெட்கத்தால் அவர் மறுத்துவிட்டார்.

ஒளிப்படக்காரனுக்கு ஒரே ஒருமுறைதான் இத்தகைய எதேச்சையான (ஸ்ட்ரீட் போட்டோஸ்) சந்தர்ப்பங்கள் கிடைக்கும். அதை அவன் நழுவ விடக் கூடாது.

நான் கோட்டைவிட்டதற்கான பல காரணங்கள் உண்டென்றால், நீங்கள் காமிராவை அசைத்து அற்புதமான படத்தை ‘ஷேக்’ செய்து கோட்டை விடக்கூடாது என்பதற்குதான் இவ்வளவும் சொல்ல வேண்டியுள்ளது.

"அதிகம் உழைக்கணும் போலிருக்கே!” – என்று முணுமுணுப்பது கேட்கிறது!

முயல்கள் குறிப்பிட்ட இடத்தில் குளிக்கும் காட்சியைப் படம் பிடிக்க ஒரு போட்டோ கிராபர் இடுப்பளவு நீரில் சுமார் 20 ஆண்டுகள் காத்திருக்க வேண்டியிருந்தது என்று நான் படித்திருக்கிறேன். பிறகுதான் அற்புதமான நீருக்கு மேலாக சிலிர்த்து குதிக்கும் படங்களை அவரால் எடுக்க முடிந்தது. உலகப் புகழ் பெறவும் முடிந்தது.

உழைப்பு, அர்ப்பணிப்பு, ஈடுபாடு இல்லாமல் எதைதான் சாதிக்க முடியும் நண்பர்களே?

சரி.. ஒரு படத்தை பிரேமுக்குள் அடக்குவதற்கான சூத்திரம் என்ன? அதற்கான விதி என்ன?

…. இறைவன் நாடினால், வண்ணங்கள் படரும்...

முந்தைய தொடர்களை வாசிக்க:

001. அனுபவங்களின் பகிர்வன்றி.. அறிவின் ஊற்றல்ல - http://ikhwanameer.blogspot.in/2015/07/blog-post_21.html

002. உங்களுக்கான காமிரா எது? - http://ikhwanameer.blogspot.in/2015/07/2_22.html

003. கையாள்வது எளிது! ஆனாலும், கடினம்! : http://ikhwanameer.blogspot.in/2015/07/3_23.html

1 comment:

  1. ஆகா..
    விசயங்கள் பல உள்ளன..
    ஈடுபடும் செயலில் மனபூர்வமாக முழுமையாக ஈடுபட வேண்டும் என்பதை தெரிந்து கொண்டேன்..

    ReplyDelete