Thursday, July 23, 2015

வைகறை நினைவுகள்: 4, நீண்ட தேடல்களின் அந்த முடிவில்…


அரசு பள்ளியில் படித்த அந்த நான்காம் வகுப்பிலிருந்தே எனது வாசிப்பு ஆரம்பமாகிவிட்டதை ஏற்கனவே தெரிவித்துள்ளேன். இந்த வாசிப்பின் அதி தீவிரம் உயர்நிலைப் பள்ளியின் மாணவனாக இருந்த என்னை இன்னும் அதிகமாய் தொற்றிக் கொண்டது.

புத்தகங்களை கலைத்துவிடுவேன் என்ற கவலையால் அல்லது பணி சோம்பலால் என்னை நூலகர் தோளில் போலீஸ்காரர் போல அழுத்தமாக கையைப் போட்டுக் கொண்டு (வெளிப்பார்வைக்கு சிநேகிதமாய்) வெளியே கொண்டு வந்துவிடுவார்.

விடாமல் எனது நூலக வாசிப்பைக் கண்டு அவரே ஒரு கட்டத்தில் என்னைப் பொறுத்துக் கொள்ளும் சூழலுக்குத் தள்ளப்பட்டபோது. நான் எட்டவாது வகுப்பிலிருந்தேன். ஓரளவு உடல் வளர்ச்சியும் இருந்தால் அவர் என்னை பொறுத்துக் கொண்டாரோ என்னவோ தெரியவில்லை. என்ன இருந்தாலும் அவரும் எனது வாசிப்பின் ஒரு உதவியாளராக இருந்தை நான் நன்றியுடன் நினைவு கூர்கிறேன்.

1970-ம் ஆண்டு என்று நினைக்கிறேன். எட்டாம் வகுப்பின் எனது வாசிப்பிலில் கல்கி இதழும் முக்கியமானதானது. அதில் யோகா சம்பந்தமான ஒரு தொடர் படங்களுடன் வந்து கொண்டிருந்தது. அந்த தொடரைப் படித்துவிட்டு, ஆசிரியர் உதவி இல்லாமல் யோகாசனங்கள் செய்யக் கூடாது என்ற எச்சரிக்கையையும் அதிலிருந்தது. ஆனால், இவற்றைப் புறக்கணித்து ஒரு ஏகலைவனாக அந்த கட்டுரையாளரை மானக்சீக குருவாக அங்கீகரித்து வாரந்தோறும் புது புது ஆசனங்களை விடியற்காலையில் செய்து பார்க்க ஆரம்பித்தேன்.

குடிசை வீட்டின் மினுக், மினுக் மண்ணெணெய் விளக்கு வெளிச்சத்தில் விடியலின் ஏறக்குறைய நான்கு மணிக்கு பல்லியைப் போல களிமண் சுவற்றில் தலைக்கீழாக நின்று சிரசாசனம் செய்து கொண்டிப்பேன்.

அம்மா, “அமீர்..! டேய் அமீர்… எங்கே காலையிலேயே இவன் காணாமல் போயிட்டான்?” -  என்று  தேடிக் கொண்டிருக்கும்போது, ரத்த நாளங்கள் வெடித்துவிடும் அளவுக்கு தலைக்கு பாயும் ரத்த ஓட்டத்தை உணர்ந்தவாறு “என்னம்மா?” – என்பேன் மெதுவாக என் இருப்பை உணர்த்த.

கார்ப்பரேட் சாமியார் ராம் தேவ் பொது மேடைகளில், செய்யும் கழைக்கூத்தாடி வித்தைகள் எல்லாம் எனக்கு அந்த இளவயதிலேயே அத்துப்படி.

ஆசனங்களில் மிகவும் கடினமானவை உட்டியானா, நௌலி என்பார்கள். வெறும் வயிற்றுடன், வயிற்றை பல்வேறு பகுதிகளில் மடித்துக் காட்டும் ஆசானங்கள் அவை. அவற்றை அந்த வயதிலேயே நான் சர்வசாதாரணமாக செய்யக் கற்றுக் கொண்டேன்.


இங்கு இதை ஏன் குறிப்பிடுகிறேன் என்றால்…

வறுமையும், கல்வியின்மையும், அறியாமையும், கணிசமாக உள்ள ஒரு நாடு நமது நாடு. பழங்குடியினர் போன்ற ஆதி இனத்தவர் பெரும் பிரச்னைகளை சந்தித்துவரும் ஒரு நாடு. விவசாயம் தனது முதுகெலும்பாக கொண்ட ஒரு நாடு. அத்தகைய நாட்டின் தலைவரான பிரதமர் மோடி சர்க்கார், ஐநா மன்றத்தில் தமக்குக் கிடைத்த ஒரு அரிய வாய்ப்பை உருப்படியாக பயன்படுத்தியிருக்க வேண்டும். நாட்டு மக்களின் அடிப்படை பிரச்னைகளுக்கான உதவிகளை கேட்டிருக்க வேண்டும். அதைவிடுத்து, ‘யோகாவை’ சர்வதேச தினமாக விடுத்த வேண்டுகோளும், அந்த கொண்டாட்டங்களுக்காக கோடிக்கணக்கான மக்கள் பணத்தை விரயமாக்குவதும் எவ்வளவு அபத்தமானது என்ற வேதனையில்தான்.

இதற்கு மேலாக சமஸ் போன்ற எழுத்தாளர்கள் எல்லாம் தாங்கள் பிழைத்திருப்பதே யோகாவால்தான் என்று அபத்தமாக எழுதுவதும், யோகாவுக்கு எதிராக முஸ்லிம்களும், கிருத்துவர்களும் திரண்டிருப்பதாக சொல்வதும் சகிக்க முடியவில்லை. உண்மையிலேயே அன்றாடம் அவர்கள் தங்கள் இறைவணக்கங்களில் இதைவிட அதி அற்புதமான ஆசனங்களை செய்துவருபவர்கள் என்பதை ஏன் இவர்கள் உணர மறுக்கிறார்கள்?

1970-களிலேயே ஒரு உடற்பயிற்சியாக என்னால் ஏற்றுக் கொண்ட அந்த யோகாசன முறைமைகள்தான் அனைத்து நோய்களுக்கும் தீர்வு என்றால் எல்லா மருத்துவமனைகளையும் மூடிவிட்டு ஆளாளுக்கு ஒரு துண்டை எடுத்துக் கொண்டு இனி வெட்டவெளியில் மூக்கைப் பிடித்துக் கொண்டு அமர்ந்து கொள்ள வேண்டியதுதான்!

நல்ல உணவு, நல்ல காற்று, நல்ல குடிநீர் இவற்றைத் தராமல் சுற்றுச்சூழல்களை போட்டிப் போட்டுக் கொண்டு நாசம் செய்துவிட்டு வெறும் ஆசனங்களால் உடலை நலமாக வைத்துக் கொள்வது எப்படி? என்று ‘யோகாவை’ விண்ணுயர்த்தும் கார்ப்பரேட் அடிமைகளிடம்தான் பதிலைக் கேட்க வேண்டும்.

சரி.. கடந்த காலத்தில் நாம் தொடர்வோம்.

உயர்நிலைப் பள்ளி நாட்களிலேயே எனது ஆன்மிக தேடல்கள் ஆரம்பித்துவிட்டன. மரணம் குறித்த பெரும் சர்ச்சை என்னைத் தொற்றிக் கொண்டது. இரவு நேரங்களில் விழித்தெழுந்து நாம் யார்? எங்கு வந்திருக்கிறோம்? எங்கு போகப் போகிறோம்? என்ற வினாக்கள் என்னைச் சூழ மரண பயம் தொற்றிக் கொள்ளும்.

புத்தக வாசிப்பில் இயற்கை விரும்பியான எனக்கு சித்த மருத்துவ முறைகளும் பரிச்சயமாயின. கண் பார்வையற்ற முதியவரான ஒரு சித்த வைத்தியரிடம் மாணவனாக இருந்தேன். அவர் மூலமாக பாஷணங்கள், சூரணங்கள் இவற்றை புடம் போட்டு மருந்தாக்கும் வித்தைகளையும் கற்றுக் கொண்டேன். ஆனாலும், வாழ்க்கை, மரணம் சம்பந்தமான எனது தேடலுக்கு சரியான விடைகள் கிடைத்தபாடில்லை. 

இந்த கேள்விகளுக்கு விடைத் தேடி, இராமாயணம், மகாபாரதம் என்று இந்து மத நூல்களை எல்லாம் ஆழ்ந்து படித்தேன். கிருத்துவர்களின் பைபிள் வகுப்புகளுக்குச் சென்று அவர்கள் தரும் பைபிளை வாசித்தேன். இந்த ஆன்மிக தேடலின் பயணம் எனது திருமணத்துக்கு பின்னும் தொடர்ந்தது. 


நான் பணிப்புரிந்த அசோக் லேலண்ட் நிறுவனத்தில் வேதாத்திரி மகரிஷி குழுவினர் பலர் இயங்கி வந்தனர். அவர்களில் மதிப்பிற்குரிய நா.பா.மணி மற்றும் சுப்பிரமணி என்று இரண்டு செட்டர்களும் இருந்தனர். இவர்கள் மூலமாக தியான சபைத் தொடர்புகளும் ஏற்பட்டன. தங்கசாலை கொண்டித்தோப்பில் ஒரு சாமியாரிடம் சென்று தீட்சைப் பெற்ற அனுபவமும் உண்டு.

இவ்வளவுக்கும் பிறகும் எனக்கு அமைதி என்பது எட்டாத கனியாகவே இருந்தது.

அடிப்படையில் வேளாண் குடும்பத்தைச் சேர்ந்த ஆந்திரத்து எனது மூதாதையர் கடும் உழைப்பால் வாழ்வியல் போராட்டங்களை செய்து கொண்டிருந்தவர்கள்.

ஒரு விதிவிலக்காக எனது தந்தையார் ஒரு தையற்காரராக இருந்தார். இவர்கள் யாரிடத்திலும் இஸ்லாம் செயலுருவத்தில் இல்லை. வெறும் பெயர் தாங்கிகளாகவே அவர்கள் இருந்தார்கள் என்பதை வருத்தத்துடன் நினைத்துப் பார்க்கிறேன். இறைமார்க்கத்தை நான் தழுவிக் கொண்டபோது, அவர்களின் பிழைப்பொறுக்க கருணையாளனான இறைவனிடம் பிரார்த்திக்கிறேன். மன்னிப்பான் என்ற நம்பிக்கையோடு எனது முன்னோர் நலன் நாடி பிரார்த்தித்துக் கொண்டேயிருக்கிறேன். 

என் மாமா (அம்மாவின் தம்பி) மட்டும் தொழுகைகள், மூன்று நாள், நாற்பது நாள் என்று தாடி, தொப்பியுடன் இருந்தார். ஆனாலும், அவராலும் என்னை ஈர்க்க முடியவில்லை.

திருக்குர்ஆனை ஓதிக் கொண்டிருக்கும் நிலையிலேயே அவர், திடீர் என்று மனைவியிடம் சண்டையிடுவார். திட்டுவார். காது கூசும்  அளவுக்கு பேசுவார். அவரும் எனது முன்மாதிரியாக்கிக் கொள்ள என் மனம் ஒப்பவில்லை. எனது வேலைக்கு பரிந்துரை செய்தவரும், குத்து சண்டை போட்டிகளின் போது உண்ண உணவில்லாமல் இருந்த அந்த நேரங்களில் மனைவிக்கு (மாமி) தெரியாமல் ஆப்பிள் போன்ற பழங்களை இரவு நேரங்களில், எனது தலைமாட்டில் வைத்துவிட்டு செல்லும் அவர் எனது பெரு மதிப்பிற்குரியவர் என்பது வேறு விஷயம். இந்த நேரம்வரை அவரை எதிர்த்து, அவமதித்து ஒரு வார்த்தைகூட பேச என் மனம் ஒப்பியதில்லை.

ஆக எனது தேடல்கள் விடை கிடைக்காத தேடல்களாக இருந்த நிலையில்தான் அறிவு பூர்வமான முறையில் இஸ்லாம் எனக்கு பரிச்சயமானது. அற்புதமான அந்த நூல்களின் வாசிப்பில் இஸ்லாத்தை வெகு இலகுவாக உள்வாங்கவும் முடிந்தது. எனது பெயருக்கு பின்னும் இக்வான் சேர்ந்து கொண்டது.

நான் வாசித்த நூல்கள் யாவை? என்னை அமைதி மார்க்கத்தின் பக்கம் ஈர்த்த அந்த நூலாசிரியர்கள் யார்?

இறைவன் நாடினால்… அடுத்த வைகறை நினைவுகளில்…  

'''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''

இதற்கு முந்தைய நினைவுகளை பகிர்ந்து கொள்ள இணைப்புகள்:
 
வைகறை நினைவுகள் பகுதி 1: கருணையாளனான இறைவன் அவரது பாவங்களை மன்னிப்பானாக:  - http://ikhwanameer.blogspot.in/2015/07/1.html
 
வைகறை நினைவுகள் பகுதி 2: இந்நேரம் புதைச்ச இடத்தில் புல் முளைச்சிருக்கும்: http://ikhwanameer.blogspot.in/2015/07/2.html
 
வைகறை நினைவுகள் பகுதி 3: நிழலாய் நின்ற அந்த இருவர்: http://ikhwanameer.blogspot.in/2015/07/3.html
 No comments:

Post a Comment