Wednesday, July 22, 2015

லென்ஸ் கண்ணாலே: 002, உங்களுக்கான காமிரா எது?


“ஒருமுறை லண்டனுக்குச் சென்றிருந்தபோது, சில ஒளிப்படச் சாதனங்களை வாங்க ஒரு கடைக்குப் போனேன். அந்தக் கடை லண்டனில் விலை உயர்ந்த ஆடம்பர பொருள்கள் விற்கும் பலபொருள் அங்காடித் தொகுதியில் இருந்தது.

வேறு எங்கும் கிடைக்காத காமிராவுக்கான சில பொருள்களைத் தேடிதான் அங்கு சென்றிருந்தேன். சற்று நேரம் காத்திருக்க வேண்டியிருந்தது.

எனக்கு அருகில் ஒருவர் இருந்தார். பெரிய பணக்காரராக இருப்பார் என்பதை அவரது தோற்றமே சொல்லியது. அவர் வாங்கியிருந்தது மிகவும் விலையுயர்ந்த காமிரா. அத்துடன் அந்த காமிராவுக்கான லென்ஸ், ஃபில்டர்கள் மற்றும் உதிரிப்பாகங்கள் என்று எல்லாவற்றையும் வாங்கினார்.

பில் தொகையைக் கண்டு நான் அசந்து போனேன்.

பணம் கட்டி முடித்ததும், விற்பனையாளர் பொருட்களை பாக்கிங் செய்ய தொடங்கினார்.

அந்த பணக்காரரோ, விற்பனையாளரைத் தடுத்து, “கொஞ்சம் இருங்கள்!” – என்றார். “நீங்கள் பாக்கிங் செய்வதற்கு முன் இந்தப் பொருட்களை எவ்வாறு பயன்படுத்துவது என்று சொல்லித் தந்தால் நல்லது!” – என்றாரே பார்க்கலாம்.

உண்மைதான்..! அவர் வாங்கியிருந்த காமிரா மற்றும் அதன் சாதனங்கள் அனைத்தும் ஒளிப்பட அனுபவசாலிகள் மட்டுமே பயன்படுத்துபவை. அவர்கள் மட்டுமே அவற்றை எப்படி கையாள்வது என்று அறிவார்கள். ஆனால், அத்தகைய சாதனங்களை வாங்கிய இந்த பணக்காரர் அவற்றைக் குறித்து விஷய ஞானமே இல்லாதிருந்தார். யாரோ அவருக்கு தவறாக வழிகாட்டியிருக்கிறார்கள். “ஒரு சாதாரணமான காமிரா வாங்குங்கள்!” – என்று மட்டுமே அவருக்கு ஆலோசனை சொல்லியிருக்க வேண்டும்.

இந்த சம்பவத்தை குறிப்பிட்டுவிட்டு, நல்ல ஒளிப்படக்கலை என்பது வெறும் காசு கொடுத்து வாங்குவது அல்ல!” – என்கிறார் புகழ்பெற்ற ஒளிப்படக் கலைஞர் ஆரி மில்லர்.

ஒரு காமிராவை எப்படி எந்த அளவுக்குப் பயன்படுத்தலாம் என்று ஒரு வரம்பு உண்டு. அதனால், காமிராவை வாங்கும்போதே அது எதற்காக பயன்படப் போகிறது என்று தெளிவாக தெரிந்து வைத்திருக்க வேண்டும். இது தெரியும்போதுதான் வாங்கும் காமிராவை எந்த வரம்புவரை பயன்படுத்தலாம் என்ற தெளிவு கிடைக்கும். அதன் வரம்பு மீறி அதை கையாளவும் முடியாது என்று தெரிந்திருக்கும். அதன் மதிப்பு மற்றும் அதன் முக்கியத்துவம் குறித்தும் புரிந்திருக்கும்.

90-களில், ஒரு நோன்பு நேரம் என்னுடைய சாதாரணமான கோடாக் கேமிராவுக்காக ‘பிலிம்’ சுருள் வாங்க சென்னை பாரிமுனை சென்றிருந்தேன். அப்போது நான் மணிச்சுடர் நாளேட்டின் அதிகாரப்பூர்வமான கட்டுரையாளர் மற்றும் செய்தியாளர். ‘அபாபீல்’ என்ற புனைப் பெயரில் அரசியல் கட்டுரைகளையும், ‘மழலைப் பிரியன்’ என்னும் பெயரில் குழந்தைகள் இலக்கியத்தையும், சின்னக்குயில் என்னும் புனைப் பெயரில் கவிதைகளும் எழுதி வந்தேன். காலஞ்சென்ற முஸ்லிம் லீக் தலைவர் மூதறிஞர் சிராஜுல் மில்லத் அப்துஸ் ஸமது சாஹெப் நான் சமரசம் மற்றும் தினமணியில் ஏற்கனவே எழுதுவதை கண்டு, சகோ. தரமணி ரஸீல் மொய்தீன் மூலமாக என்னை நேரிடையாக அழைத்து இந்தப் பொறுப்பை ஒப்டைத்திருந்தார்.

காமிராவுக்கு பிலிம் வாங்கிவிட்டு வழியில் நடந்த ஒரு சாலை விபத்தை படம் பிடித்துவிட்டு வீடு திரும்ப 56-N க்காக பீச் ஸ்டேஷன் பேருந்து நிறுத்தத்தில் நின்றிருந்தேன். நோன்பு திறக்க இன்னும் சில மணி நேரமே இருக்க பிதுங்கிப் போன நெரிச்சலில் பேருந்தில் ஏறி உள்ளே வந்து நிற்பதற்குள் போதும் போதுமென்றாகிவிட்டது. எண்ணூரை நெருங்கும்போதுதான், உட்கார இடம் கிடைத்தது. சோர்வுடன் தொங்குப் பையை மடியில் போட்டு கொண்டு அமர்ந்தபோது அதிர்ச்சியாக இருந்தது. எனது காமிராவை பேருந்து திருடர்கள்,  கூட்ட நெரிச்சலைப் பயன்படுத்தி, பையில் பிளேடால் வெட்டி திருடியிருந்தார்கள்.

இந்த அனுபவம் காமிராவை மிகவும் எச்சரிக்கையாக வைத்திருக்க வேண்டும் என்று சொல்லி தந்தது. அந்த அனுபவத்திலிருந்து காமிரா வைத்திருக்கும் பையை வெளியிடங்களுக்கு செல்லும்போது, தொழுகைக்காக பள்ளிவாசல்களில் செல்லும்போதுகூட பக்கத்திலேயே வைத்திருக்கும் எச்சரிக்கை உணர்வை தந்தது.

காமிரா என்பது செய்தியாளர்களுக்கு மிகவும் முக்கியமானது. அதைவிட முக்கியம் அதிலிருக்கும் மெமரிகார்ட்.

ஆக, காமிராவை நீங்கள் எதற்கு பயன்படுத்தப் போகிறீர்கள் என்று திட்டவட்டமாக தீர்மானித்துக் கொள்வது தவிர்க்க இயலாதது.

உங்கள் குடும்பத்தார், உங்கள் வீடு, வாசல், தோட்டந்துறவுகள், சுற்றலா, காட்டுயிர் ஆய்வு என்று வகைப்படுத்தி அதற்கான காமிராவை தேர்வு செய்யுங்கள்.

காமிரா எப்படி செயல்படுகிறது என்பது நம் எல்லோருக்கும் தெரிந்திருக்கும். விழியின் அறிவியல் பூர்வமான காட்சிப்படுத்தும் அடிப்படையை ஒட்டிதான் காமிராவும் செயல்படுகிறது என்பதை நாம் படித்திருப்போம்.

காலையில், நடை பயிற்சிக்காக கடலோரம் சென்றுவிட்டு சற்று களைப்பாற அமர்கிறோம். 'கருக்கல்' விலகி கடலின் மீது போர்த்தப்பட்டிருக்கும் கருமைத் திரை கிழிந்து, நீலக்கடல் கொஞ்சம் கொஞ்சமாக வெளிப்பட்டுக் கொண்டிருக்கும் அற்புதமான தருணம் அது.

இப்படி உதயம், அஸ்தமனம் ஆகிய இரு நிகழ்வுகளில் சூரியன் உதிப்பதற்கும், மறைவதற்கும் முன்னும், பின்னுமுள்ள சுமார் 45 நிமிடங்கள் ஒளிப்படக்காரர்களின் 'பொன்னான தருணங்கள்' (Golden Hours) எனப்படும். https://www.youtube.com/watch?v=URFcrKlTgFY வானத்தில் வர்ணஜாலங்கள் குழைந்து குழைந்து மாறிக் கொண்டிருக்கும் நேரமது.

இத்தகைய ஒரு தருணத்தை ரசித்துக் கொண்டிருக்கும் நமக்கு….

ஆரம்பத்தில் கருக்கலில் சற்று உற்று நோக்கி பார்க்க வேண்டியிருக்கும். நேரம் செல்ல சூரியனின் உக்கிரம் கண்களை கூசக் செய்யும். இதேபோல, அந்தியில் அஸ்தமனத்துக்கு பின் இருட்டில் பார்ப்பது சிரம்மாக இருக்கும்.

இந்த அடிப்படை காமிராவுக்கும் பொருந்தும்.

கண்களால் பார்க்க முடிந்த அத்தனையும், காமிராவால் பதிவு செய்ய முடியும். உச்சி வெய்யிலில் உற்றுப் பார்க்க முடியாத நிலையில் கண்களுக்கு சிரமம் ஏற்பட்டு கருப்பு கண்ணாடி அணிவது போல, அந்த நேரத்தில் படம் பிடிக்கும்போது, காமிரா லென்ஸீக்கும் 'ஃபில்டர்கள்' என்ற தனி வசதி செய்ய வேண்டியிருக்கும்.

இருட்டில் படம் பிடித்துதான் ஆக வேண்டும் என்றால், இருட்டில் நாம் டார்ச் விளக்கு பயன்படுத்துவது போல, காமிராவுக்கும் 'பிளாஷ்' போன்ற ஒளி சம்பந்தமான சில தொழில் நுட்பங்கள் பயன்படுத்த தெரிந்திருக்க வேண்டும்.

எனது நண்பர் ஒருவர் ஆங்கிலத்தில் இப்படி சொல்வார்:

What is photography?

Light, Color and Timing.

இந்த மூன்றையும் தீர்மானிக்கும் முக்கிய மூன்று அம்சங்கள் எவை? என்பதை அடுத்தது பார்ப்போம்.

>>> இறைவன் நாடினால் பார்வைகள் விரியும்..

இதற்கு முந்தைய தொடரை வாசிக்க:
'''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''
001 அனுபவங்களின் பகிரவன்றி..! அறிவின் ஊற்றல்ல..!
http://ikhwanameer.blogspot.in/2015/07/blog-post_21.html

No comments:

Post a Comment