Thursday, July 23, 2015

அழைப்பது நம் கடமை - 1: 'அந்தக் கடலோரக் கிராமத்தின் கதை!


கடற்கரையோரம் அமைந்திருந்த அந்த ஊரின் பெயர் அய்லா.

இப்போது இஸ்ரேல் நாட்டு அய்லாத்  துறைமுகம் உள்ள பகுதியில் அது இருந்ததாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

ஜோர்டானின் முக்கியத் துறைமுகமான  ஹீக்பா இதன் பக்கத்தில்தான் உள்ளது.

போக்குவரத்து மிகுந்த பெருநகரம் அய்லா.

மீன்பிடித்தல் அய்லாவாசிகளின் முக்கியத் தொழில்.

அய்லாவாசிகள் செல்வந்தர்களாகவும், அறிஞர்களாகவும், கல்வியாளர்களாகவும் இருந்தார்கள். அந்த சமுதாயத்தாருக்கு 'ஸப்த் - சனிக்கிழமை' சிறப்பு நாளாக இருந்தது. புனித நாளாக இறைவனால் அறிவிக்கப்பட்டிருந்தது.

அன்றைய நாளில் இறைவனை வணங்கி வழிபட வேண்டும். சமயச் சடங்குகளில் லயித்திருக்க வேண்டும். உலகப் பணிகள் எதையும் செய்யக் கூடாது. வணிகம், வேளாண்மை, வேட்டையாடுதல் போன்ற பணிகள்கூட தடுக்கப்பட்டிருந்தன. சமையலுக்காக அடுப்புக்கூட எரிக்கக்கூடாது.என்று கடுமையான நிபந்தனைகள் விதிக்கப்பட்டிருந்தன. இவற்றை மீறுபவர்கள் மரணதண்டனைக்குக்கூட ஆளானார்கள்.

இப்படி காலங்காலமாக இந்தச் சட்டங்கள் பின்பற்றப்பட்டு வந்தன.

சனிக்கிழமைகளில் அந்த அதிசயம் தவறாமல் நடந்துவந்தது. பொழுது விடிந்ததோ இல்லையோ மீன்கள் கூட்டங்கூட்டமாக கடலில் திரண்டுவரும். வலையோ, தூண்டிலோ தேவையில்லை. கையாலேயே மீன்களைப் பிடிக்கலாம். அய்லாவாசிகளுக்க மனமாய் அடித்துக் கொள்ளும்.

ஆனால், அன்று மாலையே மறுபடியும் அந்த அற்புதம் நடக்கும்.

பொழுது சாய்ந்ததும், "மீன்களா? இந்தக் கடலிலா? யார் சொன்னது?" அடுக்கடுக்கான கேள்விகள் எழுப்பும அளவுக்கு மீன்கள் காணாமல் போகும். 


'ஸப்து புனித நாளை ஊர்வாசிகள் பின்பற்றுகிறார்களா? இல்லையா?'- என்று சோதிக்கவே இறைவனின் இந்த ஏற்பாடு.

நீண்ட காலமாக அய்லாவாசிகள் புனித சனிக்கிழமையை பேணுதலோடு பின்பற்றி வந்தார்கள். மன இச்சைகளைப் பின்தள்ளி இறைநம்பிக்கையை வலுப்படுத்தினார்கள்.

ஆனால், நாளாக.. நாளாக.. அவர்களின் மனங்களில் உலகாசை ஊசலாட்டம் போட ஆரம்பித்தது. இதன் விளைவாக மோசடிகளில் ஈடுபடலானார்கள்.

வெள்ளிக்கிழமையே கடலோரம் கால்வாய்களை வெட்டிவிடுவார்கள். கால்வாய்களின் முனைகளில் ஆழமான பள்ளங்களை தோண்டி வைப்பார்கள். சனிக்கிழமை திரண்டுவரும் மீன்கள் கால்வாய்களின் வழியே பள்ளங்களில் விழ்ந்துவிடும். அடுத்த நாள் அதாவது ஞாயிற்றுக்கிழமை விடியலில் சென்று  மீன்களைப் பிடித்துக் கொள்வார்கள். நாங்கள் சனிக்கிழமைதான் மீன் பிடிக்கவில்லையே! இறைவனின் கட்டளைகளை மீறவில்லையே என்று நடிப்பார்கள்..

அய்லாவாசிகளிடம் பேராசை அதிகரித்துவிட்டது. பணம் மட்டுமே வாழ்க்கை என்றாகிவிட்டது. இதன் விளைவாக புனித சனிக்கிழமையின் முக்கியத்துவம் புறக்கணிக்கப்பட்டது. அந்நாளில் வணக்கவழிபாடுகளில் ஈடுபடுவது பெரும் சுமையாக கருதப்பட்டது. வயதானவர்களுக்காகவே சமயச் சடங்குகள் என்ற நிலைமை ஏற்பட்டது.

அய்லாவாசிகளில் நல்லோரும் இருந்தார்கள். அவர்களில் இரண்டு பிரிவினர்.

முதல் பிரிவினர், "இவர்கள் எங்கே நம் பேச்சைக் கேட்கப் போகிறார்கள்? - இவர்களைத் திருத்தவே முடியாது!" - என்று திட்டவட்டமாக ஒரு முடிவுக்கு வந்தவர்கள். தாங்கள் மட்டுமே நல்லவர்களாக இறைவனின் கட்டளைகளைப் பின்பற்றிப் போணுதலோடு வாழ்ந்தவர்கள்.

நல்லோரில் இரண்டாவது பிரிவினரோ, இறைக்கட்டளைகளைப் பின்பற்றியதோடு, 'நாம் மட்டும் நல்லோராக வாழ்ந்தால் போதாது. மற்றவரும் நல்லவர்களாய் வாழ வேண்டும். இறைவனின் தண்டனையிலிருந்து தப்ப வேண்டும்!' - என்ற சிந்தனையுடன் வாழ்ந்தவர்கள்.

அய்லாவாசிகளின் நடத்தை இவர்களைப் பெரிதும் பாதித்தது. 'எப்பாடுபட்டாவது இறைவனின் கோபத்திலிருந்து மக்களைக் காக்க வேண்டும்!' - என்று அவர்கள் முடிவெடுத்தார்கள்.

நல்லோரில் இந்த இரணடாம் பிரிவினர் மக்களிடம், 'அவர்களின் வாழ்க்கையில் எப்படி எல்லாம் சமூகத்தீமைகள் நுழைந்தன.? அவர்களின் தவறுகளின் ஆரம்பம் எதுவாக இருந்தது? இறைவனின் கட்டளைகளை எப்படியெல்லாம் அவர்கள் மீறினார்கள்?' - என்று அக்கறையோடு விவரித்தார்கள். இறைவனின் பக்கம் திரும்பும்படி தொடர்ந்து அழைத்தார்கள்.

இதனால், இவர்களுக்கு சமூக மக்களிடமிருந்து பலவேறு பிரச்சினைகள் ஆரம்பித்தன. கிண்டல், கேலி, ஏச்சுப் பேச்சுகள் என்று தாண்டி வன்முறையும் இவர்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்டது.

இதைக் கண்ட நல்லோரில் முதல் வகையினர், "நாங்கள்தான் ஆரம்பத்திலிருந்தே சொல்கிறோமே! எங்கள் பேச்சைக் கேட்டால்தானே? இவர்களைத் திருத்தவே முடியாது. இவர்கள் எக்கேடாவது கெட்டுப் போகட்டும். இவர்களை விட்டுவிடுங்கள். இறைவனின் தண்டனை இறங்கினால்தான் இவர்களுக்கு அறிவு வரும். நாங்கள் சொல்வதைக் கேளுங்கள். பேசாமல் நமது வேலையுண்டு.. நாமுண்டு என்று இருந்துவிடுங்கள்!" - என்று அறிவுரை சொன்னார்கள்.


இந்த அறிவுரைகளைக் கேட்டு நல்லோரில் இரண்டாம் வகையினர் தங்கள் அழைப்புப் பணியில் தளர்ந்துவிடவில்லை. கவலையுடன் சொன்னார்கள்:

"சகோதரர்களே, எங்களுக்கு மறுமை நாள் நினைவுக்கு வருகிறது.

அந்த நாளில் இறைவனின் திருமுன் நிறுத்தப்படும்போது, எங்கள் பாவங்கள் மன்னிக்கப்பட வேண்டும் என்ற கவலை எங்களைச் சூழ்ந்துள்ளது.

'தீமைகள் பரவுவதை நீங்கள் வேடிக்கைப் பார்த்தீர்களா என்று இறைவன் கேட்டால்.. இல்லை இறைவா! எங்களால் முடிந்த அளவு முயற்சிகள் செய்தோம்! தீமைகளை ஒழிக்க முயன்றோம்!' - என்ற குறைந்த பட்ச பதிலையாவது தரலாமே!

அதேபோல, இறைவன் நாடிவிட்டால்.. எங்கள் அறிவுரைகளைக் கேட்டு தீயவர்கள் திருந்தலாம் அல்லவா?" - அவர்களது பேச்சில் உறுதி வெளிப்பட்டது.

அய்லாவாசிகள் நல்லோராக வாழவில்லை. நல்லோர் சொல்லையும் கேட்கவில்லை. அவர்களுக்கான வாய்ப்பு முடிந்தது. இறைவனின் வேதனையும் இறங்கியது. அவர்கள் குரங்குகளாய் மாற்றப்பட்டார்கள். முகம் சிதைந்து.. காதுகள் சுருங்கி..பயங்கரமான தோற்றத்துக்கு ஆளானார்கள்.

 மூன்றே மூன்று நாட்கள்.. நல்லோரில் முதல் வகையினர் உட்பட அய்லாவாசிகள் அனைவரும் அழிக்கப்பட்டார்கள்.

நல்லோரில் இரண்டாம் வகையினர் மட்டுமே காக்கப்பட்டனர். தாங்களும் நல்லோராக இருந்து.. மற்றவரையும் நல்லவராக்க இறையழைப்புப் பணியில் ஈடுபட்டவர்களே அவர்கள்!  

(இந்த சம்பவம் திருக்குர்ஆன் -7-ம், அத்தியாயத்தில், 166-168 வசனங்களில் இடம் பெற்றுள்ளது)

- அழைப்பியல் தொடரும்.
No comments:

Post a Comment