Thursday, November 8, 2018

அலிகர் பூசாரிகள் கொலையும் முஸ்லிம் என்கவுன்டரும் - உண்மை என்ன?


(உத்தரப் பிரதேச என்கவுன்டர் கொலைகள் தொடர்பாக பிபிசி நடத்திய கள ஆய்வு தொடர்பான அதன் செய்தியாளர் பிரியங்கா துபேயின் தொடர் இது. இந்த முதல் தொடரைத் தொடர்ந்து இன்னும் இரண்டு தொடர்கள் வர இருப்பதாக பிபிசி அறிவித்துள்ளது. மனித உரிமைகள் மீறலுக்கு அப்பட்டமான உதாரணம் இது. பாதிக்கப்பட்ட அனைத்து மக்களின் உணர்வுகளையும் உள்வாங்கி, அவர்களுக்கு நீதி கிடைக்கும் நாளை எதிர்நோக்கி எனது வலைப்பூவில் இதை பகிர்கிறேன். பிபிசிக்கு எனது மனமார்ந்த நன்றி - இக்வான் அமீர்)

கடந்த ஒரு வருடத்தில் உத்தரப்பிரதேச போலீசாரால் நடத்தப்பட்ட 1500க்கும் மேற்பட்ட என்கவுன்டர்களில் குற்றம் சாட்டப்பட்ட 67 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 

மாநிலத்தில் நடைபெறும் என்கவுண்டர்களைப் பார்த்து கவலையடைந்த உச்சநீதிமன்றம், உத்தரப்பிரதேச மாநில அரசிடம் இருந்து விளக்கம் கோரியுள்ளது.

இது தொடர்பாக எதிர்கட்சிகள் சந்தேகங்களை எழுப்பும் நிலையில், என்கவுன்டர்களின் இலக்கு குற்றவாளிகள் மட்டுமே என்று அரசும், மாநில நிர்வாகமும் கூறுகின்றன.

உத்தரபிரதேசத்தில் நடைபெற்ற என்கவுன்டர்களை விசாரிப்பதற்காக அக்டோபரில் பிபிசி குழுவினர் கள ஆய்வு மேற்கொண்டனர்.

அலிகர், ஆஜம்கர், மீரட், பாக்பத் மற்றும் லக்னோ மாவட்டங்களுக்கு சென்ற பிபிசி குழுவினர், என்கவுன்டரில் உயிர் பிழைத்தவர்கள், இறந்தவர்களின் குடும்பத்தினர், உறவினர்கள், போலீஸ் அதிகாரிகள் மற்றும் அமைச்சர்களுடன் பேசியது.

இது தொடர்பாக, என்கவுன்டர் மேற்கொண்ட சிறப்பு அதிரடிப் படையினர், பயங்கரவாத தடுப்பு படையினர், சிறப்பு நடவடிக்கைக் குழு, காவல்நிலையங்களில் பணிபுரியும் போலீஸ் அதிகார்கள், போலீஸ் ஐ.ஜி என பல தரப்பிடனரிடமும் பேசினோம். சர்ச்சைக்குரிய என்கவுன்டர்கள் தொடர்புடைய டஜன் கணக்கான ஆவணங்களை ஆய்வு செய்த பிறகு, எங்கள் சிறப்புக் குழுவினர் கண்டுபிடித்த உண்மைகளை, சிறப்புத் தொடராக உங்கள் முன் வைக்கிறோம். சிறப்புத் தொடரின் முதல் பாகத்தில் அலிகர் என்கவுன்டர் பற்றிய எங்கள் புலனாய்வு...

சுமார் ஒரு மாதத்திற்கு முன்னர், அலிகரில் ஆறு சாமியார்கள் மற்றும் விவசாயிகளை "இரக்கமற்று" படுகொலை செய்த குற்றவாளிகள் என்று கூறி உத்தரப் பிரதேச மாநில போலிசார் அத்ரெளலியில் மேற்கொண்ட என்கவுன்டரில் இரண்டு முஸ்லிம் இளைஞர்கள் கொல்லப்பட்டனர்.

பிபிசியின் சிறப்பு புலனாய்வில் போலீஸ் மற்றும் சாட்சிகளின் கூற்று ஒன்றுக்கொன்று முரண்படுகிறது. இது என்கவுன்டர்களின் மீதான சந்தேகத்தை வலுப்படுத்துகிறது.

கொல்லப்பட்ட சாமியார்கள் மற்றும் விவசாயிகளின் குடும்பங்களே இந்த என்கவுன்டர் மீது சந்தேகத்தை எழுப்புகின்றன.

கடந்த செப்டம்பர் மாத இறுதியில் லக்னோ நகரில் நடத்தப்பட்ட என்கவுன்டரில் ஆப்பிள் நிறுவனத்தில் பணிபுரியும் விவேக் திவாரி என்பவர் தவறுதலாக சுட்டுக் கொல்லப்பட்ட பிறகுதான், தொடர் என்கவுன்டர்கள் நிறுத்தப்பட்டன.

விவேக் திவாரி என்கவுன்டரில் பலியான விவகாரம் வெளியான பிறகு போலிசார் அதற்கு சப்பைக்கட்டு கட்டினார்கள். வண்டியை நிறுத்தச் சொன்ன பிறகும் அவர் நிற்காமல் சென்றதால்தான் அவர் மீது துப்பாக்கி பாய்ந்ததாக போலீசார் தெரிவித்தனர். விவேக்கை துப்பாக்கியால் சுட்ட போலீஸ் கான்ஸ்டபிள் கைது செய்யப்பட்டார். ஆனால் விவேக்கின் மரணம், போலீசாரின் என்கவுன்டர் மற்றும் அணுகுமுறை தொடர்பான பொதுமக்களின் கவனத்தை ஈர்த்தது.

விவேக் திவாரியின் கொலை ஜனவரி மாதம் நடந்தது. அது மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் 2017 ஜூன் மாதம் வெளியிட்ட "குற்றம் செய்தவர்கள் கண்டிப்பாக தண்டிக்கப்படுவார்கள்" என்ற அறிக்கையுடன் தொடர்புபடுத்தப்பட்டு சர்ச்சைகள் உண்டாயின.

அலிகர் என்கவுன்டர்

இந்த விஷயம் புரிந்துக் கொள்வதற்கு சற்று சிக்கலானது என்பதால் முதலில் முழு விவகாரத்தையும் சற்று விவரிக்கிறோம்.

செப்டம்பர் 20ஆம் தேதியன்று காலை அலிகரின் ஹர்துவாகஞ்ச் பகுதியில் போலிஸ் என்கவுண்டர் ஒன்று நடைபெற்றது. ஆங்கிலேயர்களின் ஆட்சியை நினைவுபடுத்தும் இடிபாடுகளில் ஒன்றான அந்த இடத்தில் நடைபெற்ற என்கவுன்டரில் முஸ்த்கின் மற்றும் நெளஷாத் என்ற இரு 'போக்கிரி'கள் இறந்துவிட்டதாக போலிசார் ஊடகங்களிடம் தெரிவித்தனர்.

தொலைக்காட்சி ஊடகங்களும் இருந்த அந்த செய்தியாளர் சந்திப்பில் பேசிய அதிகாரிகள், அலிகர் என்கவுன்டரில் ஒரு காவல்துறை கண்காணிப்பாளர் காயமடைந்ததாக தெரிவித்தனர். இந்த என்கவுன்டரில் கொல்லப்பட்ட 25 வயது முஸ்த்கின் மற்றும் 22 வயது நெளஷாத், இந்த ஆண்டு ஆகஸ்டு மற்றும் செப்டம்பரில் அலிகார் நகரில் நடைபெற்ற ஆறு கொலைகளில் தொடர்புடையவர்கள் என்று போலீஸ் தரப்பு கூறியது.

கொலை செய்யப்பட்ட ஆறு பேர் யார்?

ஒரு மாத காலகட்டத்திற்குள் அலிகர் மாவட்டத்தில் ஆறு கொலைகள் நடைபெற்றுள்ளன. பாலி முகீம்புர் காவல்துறை சரகத்திற்கு உட்பட்ட பகுதியில் முதல் கொலை நடைபெற்றது.

ஆகஸ்ட் 12ஆம் தேதியன்று, பூட்ரா ஆசிரமச் சாலையில் இருக்கும் சிவன் கோயிலில் அடையாளம் தெரியாதவர்கள் தாக்குதல் நடத்தியபோது, ஆலயத்திற்குள் இரண்டு பூசாரிகள் உட்பட மூன்று பேர் இருந்தனர்.

தடிகளால் தாக்கியதில் இருவர் இறந்துபோனார்கள். மூன்றாவது ஆளும் இறந்துவிட்டதாக நினைத்துக் கொண்டு தாக்குதல்காரர்கள் அங்கிருந்து சென்றுவிட்டனர். ஆலயத்தின் பூசாரியான 70 வயது முதியவரும், பக்கத்து கிராமத்தில் வசிக்கும் 45 வயது விவசாயி ஒருவரும் இந்த தாக்குதலில் இறந்தார்கள்.

இரண்டாவது சம்பவம் ஆகஸ்ட் 26ஆம் தேதியன்று அத்ரெளலி குடியிருப்புப் பகுதியில் நடந்தது. தன்னுடைய வயலில் படுத்துத் தூங்கிக் கொண்டிருந்த மண்டூரி சிங் என்ற விவசாயியை பஹர்வாத் என்ற கிராமத்தை சேர்ந்த சிலர் தடியால் அடித்துக் கொன்றனர். தாக்கியவர்களின் அடையாளம் கண்டறியப்படவில்லை என்று கூறப்பட்டது.

மூன்றாவது சம்பவம் ஹர்துவாகஞ்சின் கலாயி கிராமத்தின் அருகில் இருக்கும் துரைனி ஆசிரமத்தில் செப்டம்பர் 14ஆம் தேதி இரவு நடந்தது. அங்கிருந்த ஒரு சாமியாரை அடையாளம் தெரியாத தாக்குதல்காரர்கள் தடியால் அடித்துக் கொன்றனர். அன்று இரவே, ஆலயத்திற்கு அருகில் உள்ள வயலில் பூச்சிக்கொல்லி மருந்து தெளிக்க வந்திருந்த விவசாய தம்பதியினர் கொடூரமாக படுகொலை செய்யப்பட்டார்கள்.

இந்த தாக்குதலில் கொல்லப்பட்ட விவசாயிகள் உத்தரப்பிரதேச மாநில முன்னாள் முதலமைச்சர் கல்யாண் சிங்கின் உறவினர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த கொலைக்கு பிறகு, வழக்குகளை விசாரிக்க வேண்டும் என்ற அழுத்தம் போலீசாருக்கு அதிகரித்தது. செப்டம்பர் 18ஆம் தேதியன்று, ஐந்து பேரைக் கைது செய்த போலீசார், மூன்று பேர் தலைமறைவாகிவிட்டதாக தெரிவித்தனர். இந்த ஆறு கொலை வழக்குகளிலும் குற்றவாளிகள் விரைவாக பிடிக்கப்படுவார்கள் என்றும் போலிஸ் உறுதிகூறியது.

இப்போது நமக்கு பல கேள்விகள் எழுகின்றன. கைது செய்யப்பட்ட சாபிர் அலி என்னும் தினேஷ் பிரதாப் சிங், சல்மான், இர்ஃபான், யசீன், நதீம் ஆகிய ஐந்து பேரும் யார்? அதோடு தலைமறைவாக இருந்ததாக போலீசாரால் கூறப்பட்ட முஸ்த்கின், நெளஷாத், அஃப்சர் ஆகியோருக்கும், குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கும் என்ன தொடர்பு? இந்த அனைத்து விஷயங்களுக்கும், முஸ்த்கின் மற்றும் நெளஷாத் ஆகியோர் என்கவுண்டரில் கொல்லப்பட்டதற்கும் தொடர்பு ஏதாவது இருக்கிறதா?

பிபிசியின் சிறப்புக் குழுவின் விசாரணையில் நமது கேள்விகளுக்கு மாறுபட்ட பதில்கள் கிடைத்தன.

ஆறு கொலைகளுக்கும் காரணமானவர்கள் என்று கூறி முஸ்த்கின் மற்றும் நெளஷாத் ஆகியோர் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டது தொடர்பாக பூசாரிகள் மற்றும் விவசாயிகளின் குடும்பத்தினர் கூறும் தகவல்களும் போலீசார் தெரிவிக்கும் விவரங்களும் முரண்படுகின்றன.

அதோடு, தாக்குதல்ளில் பிழைத்துக் கொண்ட ஒருவர் கூறுவதும் போலீசார் கூறும் தகவல்களுடன் முரண்படுகிறது. அதுமட்டுமல்ல, சம்பவங்கள் நடைபெற்றதாக கூறப்படும் நாட்களும் முன்னுக்கு பின்னாக மாறுபட்டு கூறப்படுவதாக முஸ்த்கின் மற்றும் நெளஷாதின் குடும்பத்தினர் கூறுகின்றனர்.

போலீசார் தரப்பு

அலிகர் என்கவுன்டர் தொடர்பாக மாவட்ட போலீஸ் உயரதிகாரி அஜய் சாஹ்னி பிபிசிக்கு 45 நிமிட பேட்டியளித்தார்.

அவர் கூறியதில் மற்றொரு புதிய கதா பாத்திரமாக எடா நகர் காஜியின் கொலையில் தொடர்புடைய சாபிர் அலி எனப்படும் பிரதாப் சிங் வருகிறார்.

"எடா மாவட்டத்தில் வசிக்கும் சாபிர் அலியின் உண்மையான பெயர் தினேஷ் பிரதாப் சிங். மதம் மாறினாலும், சாதி மற்றும் இட ஒதுக்கீட்டின் பயனைப் பெற்று எடாவில் பஞ்சாயத்து உறுப்பினராக இருந்தார். எடா நகரின் கித்வாய் நகரில் சாபிர் அலிக்கு கொஞ்சம் நிலம் இருந்தது என்பது விசாரணையில் தெரியவந்தது. அதில் ஒரு குறிப்பிட்ட பகுதியை மதராசா ஒன்று அமைப்பதற்காக அவர் நன்கொடையாக கொடுத்துவிட்டார். மதரசாவை நடத்துவதற்காக பிஹாரில் இருந்து முஃப்தி ஷஹ்ஜாத் என்பவர் வரவழைக்கப்பட்டார். மதரசா இயங்கத் தொடங்கியது".

"இதற்கிடையில் நிலத்தின் விலை அதிகமானதால், மதரசாவுக்கு கொடுத்த நிலத்தை விற்க விரும்பினார் சாபிர். ஆனால் முஃப்தி ஷஹ்ஜாத் மதரசாவை விட்டு செல்ல முடியாது என்று உறுதியாக கூறிவிட்டார். பலவாறு பேசிப்பார்த்தும், அச்சுறுத்தியும் முஃப்தி இடத்தை காலி செய்ய மறுத்ததால் சாபிரின் கோபம் அதிகமானது. 2016ஆம் ஆண்டு இருவருக்கு பணம் கொடுத்து, முஃப்தி ஷஹ்ஜாதை துப்பாக்கியால் சுட்டுக் கொல்லச் செய்தார்" என்று சாபிரின் பின்னணியை விரிவாக சொன்னார் சாஹ்னி.

தனது உயிருக்கு சாபிரால் அச்சுறுத்தல் ஏற்படலாம் என்பதை உணர்ந்திருந்த முஃப்தி, சாபிர் தன்னை மிரட்டி வருவது பற்றி தனது மனைவி மற்றும் மகனிடம் கூறியிருந்தார். எனவே முஃப்தியின் மனைவி, தனது கணவர் கொல்லப்பட்ட பிறகு, இந்தத் தகவல்களை போலிசிடம் தெரிவித்து, புகார் அளித்தார். தந்தை கொலை செய்யப்பட்டதை நேரில் பார்த்த மகன் சோயிப், கொலைக்கு சாட்சியம் அளித்தார்.

புகாரை விசாரித்த போலீசார் 40 நாட்களுக்குள் சதித் திட்டம் தீட்டிய சாபிரையும் அவரது மகன் நதீம் என்பவரையும் கைது செய்தது. சிறையில் வைத்தனர். சிறையில் இருந்தபோது அஸ்கர், அஃப்சர் மற்றும் பாஷா என்ற மூவருடன் சாபிருக்கு நட்பு ஏற்பட்டது.

சில நாட்களில் பிணையில் வெளிவந்த சாபிர், முஃப்தி கொலை வழக்கில் தனக்கு தண்டனை கிடைக்கலாம் என்று பயந்தார். எனவே, சிறையில் இருந்த அஃப்சர், அஸ்கர் மற்றும் பாஷாவை ஜாமீனில் வெளியே எடுத்தார். தான் அவர்களை வெளியில் எடுத்ததற்கு பதிலீடாக தனக்கு எதிராக சாட்சியளித்தவர்களை ஏதாவது விவகாரத்தில் சிக்க வைக்கவேண்டும் என்ற நிபந்தனையை சாபிர் முன்வைத்தார்.

இந்த கொலைச் சம்பவங்கள் நடைபெற்ற இடங்களில் இருந்து கிடைத்த ஒரு காகிதத்தில் பெயரும் தொலைபேசி எண்ணும் இருந்தன.

ஹாஜி கெளசர், ஜான் மொஹம்மத் மற்றும் ஃபிரோஜ் என்ற காலே ஆகிய மூவரின் பெயர்கள் அந்த காகிதங்களில் இருந்தன. இவர்கள் மூவருமே எடா நகரில் வசிப்பவர்கள். இவர்கள் மூவருமே முஃப்தி கொலை வழக்கில் சாபிருக்கு எதிராக சாட்சியம் அளித்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது என்கிறார் சாஹ்னி.

"பாலி-முகிம்புரில் நடைபெற்ற முதல் படுகொலைக்குப் பிறகு, எங்களுக்கு கிடைத்த காகிதத்தில் காணப்பட்ட ஒரு மொபைல் எண்ணை ஆராய்ந்தோம். அந்த எண்ணில் இருந்து 3 சாட்சிகளின் தொலைபேசி எண்ணுக்கும் இரவு நேரத்தில் வெகு நேரம் பேசியது தெரியவந்தது.

அதேபோல் இரண்டாவது கொலை நடைபெற்ற இடத்தில் இருந்த காகிதத்தில் இருந்த தொலைபேசியையும் தொடர்பு கொண்ட பிறகு அவர்களிடம் விசாரணை நடத்தியதில் சாபிர் மீதான சந்தேகம் உறுதியானது. அதன்பிறகு சாபிரின் தொலைபேசியை கண்காணிக்கத் தொடங்கினோம். அத்ரெளலியில் உள்ள ஒரு எண்ணுக்கு அடிக்கடி பேசினார். அது பைஸ்ன்பாடாவில் இருந்த முஸ்த்கின் மற்றும் நெளஷதின் தொலைபேசி எண் என்று தெரிவித்தார் சாஹ்னி.

இதையடுத்து, செப்டம்பர் 18ஆம் தேதியன்று பைன்ஸ்பாடாவில் சோதனை நடத்தி, சாபிர், சல்மான், இர்ஃபான், யசீன், நதீம் ஆகியவர்களை போலீஸார் கைது செய்தனர். ஆனால் முஸ்த்கின், நெளஷாத் மற்றும் அஃப்சர் ஆகியோர் தலைமறைவாகிவிட்டனர்.

பிறகு, நெளஷாத் மற்றும் முஸ்த்கின் ஆகியோர் திருடிச் சென்ற பைக்குடன் சேர்த்து அவர்களை பிடிக்க போலீசாருக்கு தொழில்நுட்பம் உதவியது. செப்டம்பர் 20ஆம் தேதி காலையில் அவர்களை நாங்கள் நெருங்கியபோது, அவர்கள் தப்பியோட முயற்சி செய்த நிலையில் நாங்கள் சுற்றி வளைத்துவிட்டோம். போலீசார் மீது அவர்கள் துப்பாக்கிச்சூடு நடத்தியதால், நாங்கள் வேறு வழியின்றி பாதுகாப்புக்காக சுட்டதில் அவர்கள் இருவரும் இறந்தனர்" என்கிறார் போலிஸ் அதிகாரி சாஹ்னி.

நாங்கள் முன்வைத்த கேள்விகளுக்கு பதிலளித்த அவர், "அவர்களது குடும்பத்தைப் பற்றிய தகவல்களை திரட்டியதில் பல விஷயங்கள் முரண்பட்டன. உறவினர்களுக்கு இடையிலேயே திருமணம் செய்துக் கொண்ட இவர்கள், பெயரையும் மாற்றிக் கொண்டு வசிக்கும் இடங்களையும் மாற்றிக் கொண்டனர். இவர்களின் பூர்வீகத்தை விசாரித்தால், அது மேற்கு வங்க மாநிலம் புரூலியா மாவட்டத்திற்கு சென்றது. அது வங்கதேச தொடர்புக்கும் இட்டுச் செல்லுமா என்றும் தெரியவில்லை".

"இவர்கள் இருவரின் மீதும் ஏற்கனவே வழக்குகள் இருந்தன. திருட்டு மற்றும் வழிப்பறி செய்த குற்றத்தில் முஸ்தகின் ஏற்கனவே சிறைக்கு சென்றவர். நெளஷாத் பற்றிய தகவல்கள் சிறைத்துறையில் பதிவாகியிருக்கிறதா என்ற விசாரணையை மேற்கொண்டிருக்கிறோம்" என்று தனது நீண்ட பேட்டியில் காவல்துறை அதிகாரி சாஹ்னி தெரிவித்தார்.

பூசாரி மற்றும் அவரது குடும்பத்தினர்

காவல்துறை ஆணையரிடம் பேசிய பிறகு, சம்பவம் நடைபெற்ற பலி-முகீம்புர் ஆசிரமத்திற்கு சென்றோம். இரண்டு அறைகள் கொண்ட ஆலயம், பூட்ரா ஆசிரமம் என்ற பெயரில் அறியப்படுகிறது.

ஆசிரமத்திற்கு எதிரில் இருக்கும் மைதானத்தில் வயதான கிராம வாசிகள் சிலர் அமர்ந்திருந்தனர். ஆசிரம பாதுகாப்புக்காக இரண்டு போலீசார் அங்கு பணியில் இருந்தனர். ஆசிரமத்திற்கு எதிரில் இருந்த கல்லறை இறந்துபோன சாமியார் காளிதாஸ் என்பவருடையது.

"50 ஆண்டுகளுக்கு முன்பு, கிராமத்தினரிடம் இருந்து பணம் சேகரித்து இந்த ஆலயத்தை கட்டினோம்" என்று சொல்கிறார் அங்கு இருந்த 70 வயது முதியவர் லாலாராம். எங்களுக்கு நினைவு தெரிந்த நாளில் இருந்து பாபா காளிதாஸ் இங்கேதான் வசித்து வந்தார். குஷிபுரா கிராமத்தை சேர்ந்த மகேந்திர ஷர்மாவும் அவருடன் இங்கேயே தங்கியிருந்தார்".

வயலில் வேலை முடித்த பிறகு விவசாயி சோனாபாலும் ஆசிரமத்திலேயே தங்கிவிட்டார். இவர்கள் மூவரும் தாக்கப்பட்ட சம்பவம் காலையில்தான் எங்களுக்குத் தெரிந்தது. மாடியில் உறங்கிக் கொண்டிருந்த அவர்களை தாக்கியதில் பூசாரி மகேந்திர ஷர்மாவுக்கு காயங்கள் ஏற்பட்டாலும் அவர் பிழைத்துக்கொண்டார், மற்ற இருவரும் இறந்துவிட்டனர்".

அங்கே அமர்ந்திருந்த மக்கன் சிங் என்ற 65 வயது முதியவர் பேசுகையில், தடியால் அடித்து அவர்களின் மண்டையை உடைத்துவிட்டார்கள். காளிதாஸின் கண்களே வெளியே பிதுங்கிக் கொண்டு வந்துவிட்டது. இப்படி கொடூரமாக துடிதுடிக்க கொலை செய்ததற்கு பதிலாக துப்பாக்கியால் சுட்டு ஒரே நொடியில் கொன்றிருக்கலாம்" என்று கவலைப்படுகிறார்.

அங்கே அமர்ந்திருக்கும் பஞ்சாபி சிங் என்ற கிராமவாசி, "பிரச்சனையே நிலத்தின் உரிமை தொடர்பானதுதான். இத்தனை ஆண்டுகளாக இங்கு கோவில் இருந்தாலும் இப்படி பிரச்சனை வந்ததேயில்லை. சில மாதங்களுக்கு முன்பு, பிடெளல் கிராமத்தில் இருந்து கோவிலுக்கு வந்தவர்கள், இந்த ஆலயத்தின் நிலத்தில் தங்கள் கிராமத்தைச் சேர்ந்த 10-12 பேருக்கு உரிமை இருப்பதாக நில ஆவணங்கள் கூறுவதாக தெரிவித்தனர்" என்கிறார்.

அடுத்த முறை அவர்கள் வந்தபோது நில அளவையரையும் அழைத்து வந்தார்கள் என்று சொல்கிறார் லாலாராம். "ஆலயத்தை சுற்றியுள்ள பகுதிகளை அளந்த அவர்கள், கோவிலை விட்டு வெளியேறுமாறு அச்சுறுத்தல் விடுத்தார்கள்" என்று சொல்கிறார்.

அலிகர் என்கவுன்டரில் கொல்லப்பட்ட முஸ்த்கின் மற்றும் நெளஷாத் பற்றி கிராமத்தினரிடம் கேட்டோம். அதற்கு பதிலளித்த அவர்கள், "பிடெளல் கிராமத்தை சேர்ந்தவர்களே இந்தத் தாக்குதலுக்கு காரணம் என்று ரூப்வாஸ் மற்றும் குஷிபுர் கிராமங்களை சேர்ந்த பஞ்சாயத்து நம்புகிறது. இருவர் கொலை செய்யப்பட்ட பிறகு அந்த கிராமத்தை சேர்ந்த சிலர் கைது செய்யப்பட்டாலும், அவர்களை பிறகு போலிசார் வெளியே விட்டுவிட்டார்கள். இந்த இருவரையும் காரணமே இல்லாமல் சுட்டு கொன்றுவிட்டார்கள். ரூப்வாஸ் கிராமத்தை சேர்ந்த சாமியார்களை கொல்வதால், சர்ராவை சேர்ந்த அவர்களுக்கு என்ன லாபம்?" என்று எதிர்கேள்வி எழுப்புகின்றனர்.

அலிகரின் குடியிருப்பு பகுதியான சர்ராவில்தான் முஸ்த்கின் மற்றும் நெளஷாதின் குடும்பத்தினர் முன்பு வசித்து வந்தனர். பிறகு அவர்கள் அத்ரெளலிக்கு சென்றனர்.

பிடெளல் கிராமத்தின் துளசி மற்றும் பல்லூ என்ற கலுவா ஆகிய இரு இளைஞர்களை முதலில் கைது செய்த போலிசார் பிறகு அவர்களை விடுதலை செய்துவிட்டார்கள்.

சம்பவத்தை நேரில் பார்த்த சாட்சி

ஆசிரமத் தாக்குதலில் உயிர் பிழைத்த மகேந்திர ஷர்மா மட்டுமே அதை நேரில் பார்த்த ஒரே சாட்சி, அவரை சந்தித்தோம். 50 வயதான மகேந்திராவால் அந்த நாளை இன்னும் மறக்கமுடியவில்லை.

தளர்வான குரலில் பேசும் மகேந்திர ஷர்மா, "பல ஆண்டுகளாக பாபா காளிதாஸுடன் அந்த கோவிலில்தான் நான் இருந்தேன். அத்ரெளலியில் இருந்து தாசில்தாருடன் வந்த நில அளவையர், நிலத்தை அளந்தார்கள். அவர்களுடன் பிடெளல் கிராமத்தை சேர்ந்த விஜய் என்ற பெண்ணும் இருந்தார். மே மாதத்தில் மீண்டும் அவர்கள் ஆசிரமத்திற்கு வந்தார்கள். இந்த இடத்தை விட்டு வெளியேறுங்கள் என்று அவர்கள் சொன்னதை அமைதியாக பாபா கேட்டுக்கொண்டார்".

"அதற்கு பிறகு மற்றொரு நாளும் அங்கு வந்த அவர்கள் இப்போது அச்சுறுத்தினார்கள். இங்கிருந்து போகவிட்டால் மோசமான விளைவுகளை சந்திப்பாய் என்று அவர்கள் எச்சரித்துவிட்டு போன ஒரு நாள் கழித்துதான் தாக்குதல் சம்பவம் நடந்தது" என்று விவரிக்கிறார் அவர்.

"அன்று இரவு, சோன்பாலின் வீட்டில் இருந்து சாப்பாடு வந்திருந்தது. எட்டு மணியளவில் நாங்கள் சாப்பிட்டுவிட்டு, மொட்டை மாடிக்கு சென்றுவிட்டோம். பிறகு நான் ஹனுமான் சாலிசா என்ற பக்திப்பாடலை பாடினேன். பிறகு ஒன்பது மணிவாக்கில் நாங்கள் அனைவரும் தூங்கிவிட்டோம்".

"அவர்கள் வந்து தாக்குதல் நடத்தியபோது நான் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தேன். அப்போது தாக்கியதால் என்ன நடந்தது என்றே புரியவில்லை, அடித்தார்கள் எனக்கு மிகவும் வலித்தது, கத்தினேன் என்பதைத் தவிர வேறு எதுவும் புரியவில்லை. ஐந்து நாட்கள் வரையில் என் காதில் இருந்து ரத்தம் வழிவது நிற்கவில்லை என்று அனைவரும் சொன்னார்கள்". யார் தாக்கினார்கள் என்ற கேள்விக்கு சிறிது நேரம் அமைதி காத்த அவர், பிறகு கையைக் கூப்பிக் கொண்டு, பிடெளலை சேர்ந்த இளைஞர்கள் என்று பதிலளித்தார்.

ஹர்துவாகஞ்ச்சில் நடைபெற்ற மூன்றாவது தாக்குதல்

பாலி முகிம்புருக்கு பிறகு செப்டம்பர் 14ஆம் தேதியன்று ஹர்துவாகஞ்சில் துரைனி மாதா கோவிலில் மூன்றாவது நடைபெற்ற தாக்குதலில் உயிரிழந்த பூசாரி ராம்ஸ்வரூப்பின் குடும்பத்தினரை சந்தித்தோம். இன்றும் அந்த சோகத்தின் பிடியில் இருந்து அவர்களால் வெளிவரமுடியவில்லை.

அவரது தம்பி சுந்தர்லாலிடம் பேசினோம். எங்கள் கோவிலுக்கு நல்ல மரியாதை உண்டு. வியாழக்கிழமைதோறும் பக்தர்களின் கூட்டம் அதிகமாக இருக்கும். பாபாவின் மீது அனைவருக்கும் நல்ல மதிப்பு உண்டு. மதுராவில் இருந்துகூட மக்கள் இங்கு வந்து செல்வார்கள். அவர் தன்னுடைய உழைப்பால் இந்த பகுதியையே மேம்படுத்தினார்.

ராம்ஸ்வரூப்பின் சடலத்தை முதலில் பார்த்த சிலரில் சுந்தர்லாலும் ஒருவர். சம்பவத்திற்கு அடுத்த நாள் காலையில் தன் அவரது சடலத்தை பார்த்ததை நினைவுகூர்கிறார் அவர். காலையில் பால் வாங்கி வந்த பிறகு பார்த்தேன். அவர் கட்டிலுக்கு கீழே கொசுவலைக்குள் கிடந்தார். அவரை சுற்றி ரத்தம் காய்ந்துக் கிடந்தது.

அலிகர் என்கவுன்டருக்கு பிறகு பாபாவின் கொலைக்கு நியாயம் கிடைக்கும் என்ற நம்பிக்கை போய்விட்டதாக ராம்ஸ்வரூப்பின் குடும்பத்தினர் தெரிவிக்கின்றனர். சுந்தர்லாலின் கருத்துப்படி, அத்ரெளலியை சேர்ந்த அந்த இரண்டு இளைஞர்கள்தான் பாபாவை கொலை செய்தார்கள் என்பதற்கான எந்த சாட்சிகளும் இல்லை. ஆனால் பாபாவை கொன்றவர்கள் அவர்கள்தான் என்று போலீஸ் சொல்வதாக கேள்விப்பட்டோம். அப்படியென்றால் வழக்கை முடிப்பதற்காக அவர்கள் இப்படி செய்தார்களா? இனிமேல் பாபாவின் கொலைக்கு நியாயம் கிடைக்குமா? என்று வருத்தப்படுகிறார் அவர்.

ராம்ஸ்வரூப் கொலை செய்யப்பட்ட அன்று இரவு, கோவிலுக்கு அருகில் இருந்த வயல்வெளியில் ஒரு தம்பதியினரின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டன. அவர்களும் சஃபேதாபுரா கிராமத்தை சேர்ந்தவர்கள்தான். பாபாவின் வீட்டில் இருந்து பிபிசி குழு அந்த தம்பதிகளின் வீட்டிற்கு சென்றது.

யோகேந்திர பால்-விம்லேஷ்தேவியின் 16 வயது மகள் உட்பட குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் அங்கு இருந்தனர். யோகேந்திர பாலின் தம்பி லலித் குமாருடன் பேசினோம். "அண்னனின் வயது 45, அண்ணிக்கு 42 வயது. வயலில் பூச்சிக்கொல்லி மருந்து அடிக்கச் சென்றவர்கள் திரும்பி வரவேயில்லை. காலை ஒன்பது மணியளவில் அவர்களை நாங்கள் தேடிச் சென்றபோது, கோவிலில் ராம்ஸ்வரூப் பாபா கொலை செய்யப்பட்டிருந்த தகவல் தெரிய வந்தது. எங்களுக்கு பயம் அதிகமானது. சிறிது நேரத்திலேயே அண்ணன் மற்றும் அண்ணியின் சடலங்கள் கோவிலில் இருந்து சுமார் 100 மீட்டர் தொலைவில் கிடைத்தன" என்கிறார் அவர்.

லலித்துடன் நின்று கொண்டிருந்த ஒன்று விட்ட சகோதரர் ராஜ்பால், அலிகர் என்கவுண்டர் பற்றி கேள்வி எழுப்புகிறார். "என்கவுன்டரை நடத்தி போலீஸ் வழக்கை முடித்துவிட்டது. வழக்கு விசாரணையை முறையாக செய்யவேண்டும் என்று எங்கள் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் தல்வீர் சிங் போலீசாரை கேட்டுக் கொண்டிருக்கிறார். அப்போது, இந்த சம்பவத்தில் எங்கள் கிராமத்தை சேர்ந்தவர்களும் சம்பந்தப்பட்டிருக்கலாம் என்று காவல்துறை அதிகாரி தெரிவித்தார். 2-3 நாட்களில் குடும்பத்தினரை அழைத்து விசாரிக்கிறோம் என்று அவர் சொன்னாராம். ஆனால் இதுவரை அப்படி எதுவுமே நடக்கவில்லை. ஆனால் கொன்றவர்களை என்கவுன்டர் செய்துவிட்டார்கள் என்ற செய்தியையும், ஐந்து பேர் இந்த வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்டார்கள் என்பதையும் ஊடகங்கள் மூலமாக செப்டம்பர் 18ஆம் தேதியும், என்கவுண்டர் நடைபெற்ற விஷயத்தை செப்டம்பர் 20ஆம் தேதியும் தெரிந்துக் கொண்டோம்."

"அண்ணனின் சடலம் விறைந்துப் போய் இருந்தது, ஆனால் அண்ணியில் உடலில் இருந்த ரத்தம் காயவேயில்லை. அதைப் பார்க்கும் போது, இருவரின் கொலையும் ஒரே சமயத்தில் நடந்திருக்காது என்றுதான் தோன்றியது. அண்ணியின் உடலில் அதிக காயங்கள் இருந்தன. முதுகெலும்பு, கழுத்தெலும்பு அனைத்தும் மோசமாக சேதமடைந்திருந்தன. கண்கள் வெளியே பிதுங்கியிருந்தன".

"அவர்களுக்கு என்ன ஆயிற்று என்றே தெரியவில்லை. இருட்டில், டார்ச்சாக பயன்படுத்துவதற்காக அவர்கள் வைத்திருந்த பழைய மொபைல் போன் ஒன்று சடலத்தின் அருகில் கிடந்தது. அதோடு ஊதுபத்தி, சிவப்புத் துணியில் சுற்றிய தேங்காய் என கோவிலில் பயன்படுத்தும் சில பொருட்களும் அண்ணியின் அருகில் கிடந்தன."

உச்ச நீதிமன்றத்தை அணுகி சிபிஐ விசாரணை கோரப்போவதாக குடும்பத்தினர் தெரிவித்தனர். ஆனால், இறந்து போன தம்பதியினரின் குழந்தைகளின் எதிர்காலத்தைப் பற்றி யாராலும் எந்த முடிவும் எடுக்க முடியவில்லை.

முஸ்தகின், நெளஷாத், ஹீனாவின் தரப்பு

என்கவுண்டரில் இறந்தவர்களின் வீட்டின் முன்னால் சீருடை அணிந்த போலீசார் பெருமளவில் காணப்பட்டனர். உள்ளூர் உளவுத் துறையைச் சேர்ந்தவர்களும் சாதாரண உடையில் ஆங்காங்கே இருப்பதை பார்க்க முடிந்தது. என்கவுண்டரில் கொல்லப்பட்டவர்களின் குடும்ப உறுப்பினர்களை ஊடகங்கள் பார்த்து பேசவே முடியாது என்ற நிலையே அங்கு காணப்பட்டது.

செங்கல் கூட்டப்பட்ட அடுப்பில், பக்கத்து வீட்டினர் கொடுத்த அரிசியில் ஹினாவின் சகோதரி உணவு சமைத்துக் கொண்டிருந்தார். வெறித்த பார்வையுடன் காணப்படும் ஹினா, சகோதரர் மற்றும் கணவர் இறந்த கவலையுடன், யாராவது உதவிக்கு வரமாட்டார்களா என்ற ஏக்கத்துடன் காத்திருக்கிறார்.

போலீசார் சொல்வதும், ஹினா சொல்வதும் முற்றிலும் மாறுபட்டிருக்கிறது. முஸ்த்கின் மற்றும் நெளஷாதை போலிசார் செப்டம்பர் 16ஆம் தேதியே வீட்டில் இருந்து அழைத்துச் சென்றார்கள் என்று ஹினா கூறுகிறார்.

"ஞாயிற்றுக் கிழமை மதிய நேரம். போலிசார் வீட்டுக்கு வந்தார்கள். கணவரையும் சகோதரரையும் அடித்தார்கள். அதை எங்கள் பகுதியில் இருக்கும் அனைவருமே பார்த்தார்கள். இருவருமையே போலீசார் அவர்களது வண்டியில் ஏற்றிக் கொண்டு போனார்கள். பிறகு அவர்களை கொன்றுவிட்டார்கள். அதற்கு இடையில் மீண்டும் ஒருமுறை போலிசார் வீட்டுக்கு வந்தார்கள். எங்கள் அனைவருடைய ஆதார் அட்டை, எங்கள் திருமண ஆவணங்கள், என்னிடம் இருந்த 230 ரூபாய் என அனைத்தையும் எடுத்துக் கொண்டு போய்விட்டார்கள்".

"மூன்றாவது முறை வந்தபோது, அவர்களின் சடலங்களைப் பார்ப்பதற்காக எங்களை கூட்டிச் சென்றார்கள். முதலில் கணவரின் சடலத்தைப் பார்த்தேன், பிறகு சகோதரரின் உடலைப் பார்த்ததும் மயக்கமாகி கீழே விழுந்துவிட்டேன். அவனுடைய பற்கள் உடைந்திருந்தன. கண்கள் பிதுங்கிக் கிடந்தன. இரண்டு காகிதங்களில் என் கைநாட்டு வாங்கிக் கொண்டு வீட்டுக்கு அனுப்பிவிட்டனர். அவர்கள் இருவரின் சடலங்களையும் முழுமையாக பார்க்கக்கூட விடவில்லை" என்று சொல்லி கண்ணீர் விடுகிறார் ஹினா.

அரசு தரப்பு

அலிகர் என்கவுன்டர் தொடர்பாக எழுந்துள்ள கேள்விகளின் மீதான அரசின் தரப்பை தெரிந்துக் கொள்வதற்காக, லக்னோவில் தலைமைச் செயலகத்திற்கு சென்றோம். அங்கு, மாநில அரசின் மின்துறை அமைச்சர் மற்றும் மாநில அரசின் அதிகாரபூர்வ செய்தித் தொடர்பாளர் ஸ்ரீகாந்த் சர்மாவை சந்தித்தோம்

"மாநிலத்தில் பாதுகாப்பான சூழலை உருவாக்குவதே அரசின் முதல் கடமை" என்று அவர் கூறினார். இதற்கு முன்னர் இங்கு சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ் கட்சி மற்றும் காங்கிரஸ் என ஆட்சியில் இருந்த கூட்டணி கட்சிகள் குற்றவாளிகளுக்கு ஆதரவாக செயல்பட்டன. எங்கள் அரசு பாதுகாப்பு அளிப்பது குற்றவாளிகளுக்கு அல்ல, மக்களுக்கே. குற்றம் செய்தவர் யாராக இருந்தாலும், போலிஸ் அதற்கேற்ற முறையில் பதிலளிக்கும். தவறு செய்தவர்கள் யாரும் மன்னிக்கப்பட மாட்டார்கள்" என்று தெரிவித்தார்.

இது தொடர்பாக பேசுவதற்காக உத்தரபிரதேச மாநில காவல்துறை தலைவர் ஓ.பி சிங்கை சந்தித்தோம். மாநிலத்தில் கடந்த மூன்று ஆண்டுகளாக குற்றங்களின் எண்ணிக்கை குறைந்துவருவதாக அவர் தெரிவித்தார்.

"யார் வேண்டுமானாலும், யாருக்கு எதிராகவும் கேள்வி கேட்கலாம். ஆனால், மாநிலத்தில் குற்ற எண்ணிக்கை குறைந்திருக்கிறது என்பதை தரவுகள் உறுதி செய்கின்றன. எந்தவொரு என்கவுண்டராக இருந்தாலும் அதை ஒரு மாஜிஸ்ட்ரேட் விசாரிப்பார் என்பதுதான் சட்டம். நான் எந்தவொரு குறிப்பிட்ட என்கவுண்டர் பற்றியும் பேசவிரும்பவில்லை. ஆனால் மாநிலம் முழுவதிலும் பாதுகாப்பை மேம்படுத்துவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். சட்டம் ஒழுங்கு நிலைமையை சீர்படுத்துவதிலும் நாங்கள் முழுமையான முயற்சிகளை மேற்கொண்டுள்ளோம்".

"தற்காப்புக்காக துப்பாக்கிச்சூடு நடத்துவது என்பது கடைசியாக மேற்கொள்ளும் நடவடிக்கை. அனைத்து என்கவுன்டர்கள் தொடர்பாகவும் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும், அது போலிசாக இருந்தாலும் சரி, அவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்" என்று சொன்னார் உத்தரபிரதேச மாநில காவல்துறை தலைவர் ஓ.பி.சிங்.

(பிபிசி இணைப்புக்கு: https://www.bbc.com/tamil/india-45977881


No comments:

Post a Comment