Sunday, June 10, 2018

ரமலான் நோன்புக் கட்டுரை: வாழ்வே பிரார்த்தனை


ரமலான் மாதத்தில் உலகம் முழுவதும் உள்ள கோடிக்கணக்கான முஸ்லிம்கள் ஒரே நேரத்தில் நோன்பு நோற்கிறார்கள். இதன் மூலம் ரமலான் முழுவதும் நன்மையும், நல்லொழுக்கமும் மனித வாழ்வில் சூழ்ந்துகொள்கின்றன. தவறுகளிலிருந்து விலகி வாழ்வதும், நன்மைகள் பக்கம் விரைந்தோடுவதுமான சூழல் ஏற்படுகிறது. மொத்தத்தில் ரமலான் நன்மைகள் பூத்துக் குலுங்கும் வசந்தகாலமாக மாறி நிற்கிறது.~இக்வான் அமீர்
''''''''''''''''''''''''''''''''''''''''''''

தொழுகை, நோன்பு, ஜகாத், ஹஜ் போன்று கடமையாக்கப்பட்ட நடைமுறைகள் அனைத்துமே இறைவனுக்குப் பணிந்திருப்பதற்கான நோக்கம்கொண்டவை. இத்தகையக் கடமைகள் மூலமாக மனிதனின் முழு வாழ்வையும் பிரார்த்தனையாக மலரச் செய்ய வேண்டும் என்பதே இவற்றின் அடிப்படை.

நாள்தோறும் ஐந்து முறை குனிந்து, பணிந்து இறைவனை வணங்குவது தொழுகை. ஆண்டுதோறும் ரமலான் மாதத்தில் வைகறையில் இருந்து அஸ்தமனம்வரை குறிப்பிட்ட நேரம் உண்ணாமலும் அருந்தாமலும் இருப்பது நோன்பு. செல்வந்தர்கள் ஆண்டுதோறும் தம் செல்வத்திலிருந்து ஒரு குறிப்பிட்ட பகுதியைப் பிரித்து தவறாமல் தருவது ஜகாத். வசதிபடைத்தோர் தம் ஆயுளில் ஒருமுறை மெக்கா மாநகரம் சென்று கஅபாவைத் தரிசிக்க மேற்கொள்ளும் புனிதப் பயணம் ஹஜ்.

இந்தக் கடமைகளை நிறைவேற்றிவிட்ட ஒருவர் இனி மனம்போல வாழலாம் என்று கருதவே முடியாது. இந்தக் கடமைகளின் நல்ல நோக்கம் அறிந்து அவற்றை நிறைவேற்ற முயலும் பயிற்சி மூலமாகக் கிடைக்கும் நன்மைகளை அக வாழ்விலும் பயன்படுத்த வேண்டும். புற வாழ்விலும் செயல்படுத்த வேண்டும். ஆக முழு வாழ்வையும் வழிபாடாகவே மாற்றிக்கொள்ள வேண்டும என்பதே இவற்றின் அடிப்படையாகும்.

அத்தகைய அதி முக்கிய நோக்கம் கொண்ட இறைவணக்கம்தான் நோன்பு. கடமையாக்கப்பட்ட மற்ற வணக்கங்களைவிட பிரத்யேகமான இறைவழிபாடு இது. எப்படியென்றால், நோன்பைத் தவிர்த்து மற்றைய வழிபாடுகள் எல்லாமே வெளிப்படையானவை. சக மனிதர்கள் பார்க்கக் கூடியவை.

நோன்போ மறைவானது

தொழுகை நிலையில் தொழுகையாளியை எல்லோரும் பார்க்க இயலும். செல்வந்தன் ஜகாத் அளிப்பதை அதைப் பெறுவதன் மூலமாக வறியோர் பார்க்க முடியும். லட்சோப லட்சம் மக்களோடு மேற்கொள்ளப்படும் ஹஜ் எனப்படும் புனித யாத்திரையும் இப்படிதான். வெளிப்படையானது. ஆனால், நோன்போ மறைவானது. இறைவனுக்கும், அவனது அடியாரான நோன்பாளிக்கும் மட்டுமே தெரிந்த இறை வணக்கமாகும். மறைவாக உண்ணவும், அருந்தவும் எவ்வளவோ வாய்ப்புகள் கிடைத்தும் நோன்பாளி ஒருகாலும் அப்படி செய்வதில்லை.

தன்னை இறைவன் கண்காணிக்கின்றான் என்ற உள்ளுணர்வோடு அவர் மாலைவரை பசித்திருப்பது இறைவன் மட்டுமே அறிய முடியும். ஒரு நாளைக்கு 12-லிருந்து 14 மணி நேரம் என்று ரமலான் மாதம் முழுவதும் தொடர் பயிற்சியாக 360 மணி நேரம் நோன்பாளி நோன்பு நோற்கிறார். இது அவரது இறைநம்பிக்கைக்கான தேர்வாகும். இந்தத் தேர்வின் மூலமாக வெளிப்படும் இறையச்சத்தின் மூலமாக எல்லா பாவங்களிலிருந்தும் ஒதுங்கி நிற்கும் பக்குவம் அவர் பெறுகிறார். அகத்திலும் புறத்திலும் தூயவராகத் திகழும் வாய்ப்பை அடைகிறார்.

நீங்கள் இறையச்சமுள்ளோராய் மாறுங்கள்

இந்த அடிப்படை நோக்கத்தை உணர்த்தவே திருக்குர்ஆன், “இறைநம்பிக்கையாளர்களே, உங்களுக்கு முன்னிருந்தோர் மீது கடமையாக்கப்பட்டதைப் போலவே உங்கள் மீதும் நோன்பு கடமையாக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் நீங்கள் இறையச்சமுள்ளோராய் மாறக்கூடும்” என்கிறது.

ரமலான் மாதத்தில் உலகம் முழுவதும் உள்ள கோடிக்கணக்கான முஸ்லிம்கள் ஒரே நேரத்தில் நோன்பு நோற்கிறார்கள். இதன் மூலம் ரமலான் முழுவதும் நன்மையும், நல்லொழுக்கமும் மனித வாழ்வில் சூழ்ந்துகொள்கின்றன. தவறுகளிலிருந்து விலகி வாழ்வதும், நன்மைகள் பக்கம் விரைந்தோடுவதுமான சூழல் ஏற்படுகிறது. மொத்தத்தில் ரமலான் நன்மைகள் பூத்துக் குலுங்கும் வசந்தகாலமாக மாறி நிற்கிறது.

அதனால்தான் நோன்பின் மாண்பைக் குறித்து விளக்கும்போது, “மனிதனின் ஒவ்வொரு செயலும் இறைவனிடத்தில் பல மடங்கு பெருகுகிறது. ஒரு நன்மை பத்து மடங்கிலிருந்து 700 மடங்குவரை அதிகரிக்கிறது. ஆனால், இதிலிருந்து நோன்புக்கு விதிவிலக்கு உண்டு. அது எனக்கே உரித்தானது. நானே அதற்கு கூலியாவேன்!” என்று இறைவன் நோன்பாளிக்கு அருள்வதாக நபிகளார் தெரிவிக்கிறார்.

(தி இந்து - ஆனந்த ஜோதி இணைப்பில் - 31 மே, 2018 அன்று வெளியான எனது கட்டுரை)

இந்துவின் இணைப்புக்கு:http://tamil.thehindu.com/society/spirituality/article24036979.ece

1 comment: