Wednesday, December 6, 2017

பொதுவெளியில், ஒற்றைச் சொல்லாடல்களால் குறைந்துவிடப் போவதுதான் என்ன?

 
நான் அழுத்தமாக சொல்ல வருவது இதுதான்:

நபிகளார் முஸ்லிம்களுக்கு மட்டும் சொந்தமானவர் அல்ல. அவர் மொத்த மனித இனத்துக்கானவர்.

இன்னும் விரிவாக சொல்லப்போனால் நபிகளார் மொத்த உயிரினத்துக்கானவர்.

அதனால், அவரை முஸ்லிம்  சமுதாயத்துக்குள் மட்டும் வைத்து கொண்டாடிக் கொண்டிருக்க வேண்டாம். பொதுவெளியில் அன்னியப்படுத்தவும் வேண்டாம். ~ இக்வான் அமீர்

''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''
எனது பெருமதிப்பிற்குரிய நண்பர் கோவை Abdul Hakkim அப்துல் ஹகீம் ஒரு செய்தியை இன்பாக்ஸில் https://www.facebook.com/jih.kovai.1/posts/524138047961762 அனுப்பியிருந்தார். அதை சொடுக்கினால் மற்றொரு பக்கத்தில் கண்ணாடி என்ற தலைப்பில் ஓர் அழகிய நபிமொழி அதன் விரிவாக்கத்துடன் இருந்தது.

அதை அப்படியே கீழே தந்துள்ளேன்.

நண்பர்கள் அதை முதலில் படித்துவிட்டு தொடர்ந்து எனது கருத்துக்களை வாசித்தல் நலம் என்று கருதுகிறேன்.

''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''
கண்ணாடி..!!
'''''''''''''''''''''''''''
அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “ஒரு முஸ்லிம் பிற முஸ்லிமின் சகோதரராவார். அவருக்கு உதவி-ஒத்தாசை ஏதுமளிக்காமல் அவரை வெறுமனே விட்டுவிடமாட்டார். அவரிடம் பொய்யுரைக்கமாட்டார். அவருக்கு அநீதி இழைக்கவும் மாட்டார். மேலும், திண்ணமாக உங்களில் ஒருவர் தம் சகோதரருக்குக் கண்ணாடியாவார். அவரிடம் ஏதேனும் குறையை அவர் கண்டால் அதனை அவரை விட்டு அகற்றிவிடட்டும்.” நூல்: திர்மிதி, மிஷ்காத்

இந்த நபிமொழியில் ஒரு முஸ்லிம் மற்றொரு முஸ்லிமுக்கு கண்ணாடி போன்றுள்ளார் என்று கூறப்பட்டுள்ளது. இந்த உவமை மூலம் ஒரு முஸ்லிமுடன் மற்றொரு முஸ்லிமுக்கு உள்ள தொடர்பு பின்வரும் முறைகளில் அமைந்திருப்பது தெரியவருகிறது.

• உண்மையில் முகத்தில் எவ்வளவு கரைகள்-குறைகள் உள்ளனவோ அவற்றையே கண்ணாடி காண்பிக்கின்றது. அவற்றில் குறைப்பதுமில்லை, கூட்டுவதுமில்லை.

• அக்குறைகளைக் கூட முகக் கண்ணாடியின் முன்னாள் இருக்கும்போது மட்டுமே காட்டுகிறது.

• எவரேனும் ஒருவர் கண்ணாடியில் தன் குறைகளைக் கண்டதும் கண்ணாடியின் மீது கோபத்தை வெளிப்படுத்தினார் என்று கேள்விப்பட்டதில்லை. மாறாக நன்றி கூறாமல் மௌனமாய் இருந்தவாறு கண்ணாடியை பாதுகாப்பாக வைக்கின்றனர்.

• கண்ணாடி முகத்திற்கு முன் இருக்கும் வேலையில்தான் முகத்தின் குறைகளைக் காண்பிக்கிறது.

கண்ணாடி உவமை மூலம் அண்ணல் நபி (ஸல்) அவர்கள் இதில் நமக்கு கீழ்காணும் நான்கு அறிவுரைகளை வழங்குகின்றார்கள்.

1. உண்மையில் ஒரு முஸ்லிமிடம் எந்த அளவுக்கு குறைகள் உள்ளனவோ அந்த அளவிற்கு மட்டுமே அவரது குறைகளை எடுத்துக் கூறுங்கள்.
2. குறைகளை நேரடியாக அவரின் முன்னால் கூறவேண்டுமே தவிர அவர் இல்லாதபோது கூறாதீர்கள்.
3. குறைகளைச் சுட்டிக்காட்டுபவரை அல்லது விமர்சிப்பவரை கோபித்துக்கொள்ளாதீர், மாறாக அவருக்கு நன்றி கூறுங்கள்.
4. பிறரை விமர்சிப்பதாலும் அல்லது அறிவுரை கூறுவதாலும் தான் சிறந்தவன், உயர்ந்தவன் என்பதை வெளிப்படுத்தலாகாது. தற்புகழ்ச்சியையோ தேவையற்ற புகழையோ விரும்பலாகாது.

'''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''
மேலே குறிப்பிட்டுள்ள நபிமொழியும், அதன் வீச்சும் மிகவும் பிரமாண்டமானது. ஒவ்வொரு இறைநம்பிக்கையாளரையும் வசீகரிப்பது. சமயங்களைத் தாண்டி ஒவ்வொரு தனிநபரையும் ஈர்த்து சீர்த்திருத்த வைப்பது.

ஒரு முஸ்லிமாக நின்று முஸ்லிம்களுக்கான வெளியில் இதே நபிமொழியை கேட்டு நான் ஈர்க்கப்பட்டிருக்கிறேன்.

அண்ணலாரின் ஆளுமைப் பண்பால் எனக்கு முன்னிருந்தோர் ஈர்க்கப்பட்டதைப் போலவே ஈர்ப்புக்கு ஆளாகி நானும் அந்த மாபெரும் வரலாற்றில் கரைந்திருக்கிறேன்.

ஆதாரப்பூர்வமான அண்ணலாரின் சொல்லுரைகளைத் தேடித்தேடி வாசித்திருக்கிறேன். அந்த ஆதாரங்களை எனது எழுத்து, சொல்லுக்கு குழிகற்களாக அமைத்திருக்கிறேன். அவற்றை எனது வாழ்வில் பொருத்தி அதை செம்மைப்படுத்தி அழகாக்கி இருக்கிறேன்.

ஆனால், இந்த செம்மையை, நபிகளாரின் ஆளுமைப் பண்புகளை, நட்சத்திரப்பூக்களாய் மின்னும் அந்த ஒளிக்கீற்றுகளை பொதுவெளியில் சேர்ப்பது எப்படி?

இதற்கான எனது அனுபவங்களைப் பகிர்ந்து கொள்வதற்கு முன் நீங்கள் ஏற்கனவே வாசித்த கண்ணாடியை நானும் 'தி இந்து தமிழ் ஆனந்த ஜோதி' இணைப்பில் எழுதியிருக்கிறேன்.

கீழே தந்துள்ள அவ்வரிகளை சற்றும் சிரமம் பார்க்காமல் வாசிக்கும்படி உங்கள் அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன்.

''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''
நபிகள் மொழி: கண்ணாடியின் ஐந்து குணங்கள்
'''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''

உங்களில் ஒருவர் மற்றொரு சகோதரருக்குக் கண்ணாடி போன்றவராவார். எனவே, தம் சகோதரரிடம் ஒரு குறையைக் கண்டால் அதனைக் களைய முயற்சி மேற்கொள்ளுங்கள்.

கண்ணாடி நேருக்கு நேராக குற்றங்குறைகளைக் காட்டிவிடுகிறது. விலகி நின்றால் மௌனமாகிவிடுகிறது. பிறர் குற்றங்களை நேருக்கு நேராகக் காட்ட வேண்டும். அவர்கள் குறித்து புறம் பேசக் கூடாது. இதுவே முதல் அம்சம்.

முகத்தில் உள்ள குறைகளை உள்ளதை உள்ளபடியே காட்டுகிறது கண்ணாடி. மிகைப்படுத்தியோ குறைத்தோ ஒருக்காலும் காட்டுவதில்லை. சக மனிதர்களின் குற்றங்குறைகளை மிகைப்படுத்தியோ, குறைத்தோ காட்டாதீர் என்பது இரண்டாம் அம்சம்.

உங்கள் சகோதர்களின் குறைகளைக் கண்டறிய அவர்களைப் பின்தொடர்ந்து திரியாதீர்கள். தமது சகோதரரின் மறைவான குறைகளை வெளிப்படுத்த ஒருவர் முற்படுவாராயின், இறைவனும் அந்த மனிதரின் மறைவான குறைகளை வெளிப்படுத்திவிடுவான். பிறகு அவர் அவமானத்தால் கூனிக்குறுகிப் போக வேண்டியிருக்கும் என்று நபிகளார் பிறிதொரு சந்தர்ப்பத்தில் எச்சரிக்கிறார்.

கண்ணாடி, எவ்வித எதிர்பார்ப்பும் சுயலாபமும் இன்றித் தனது கடமையைச் செய்கிறது. யாரிடமும் பகைமை, குரோதத்தைக் காட்டுவதில்லை. யாரையும் பழிவாங்குவதுமில்லை. கோபதாபங்களின்றி, எதிரிலிருப்பவர் அழகிய தோற்றம் பெறக் கண்ணாடி உதவுவதுபோலவே சக மனிதர்களின் அகம், அழகுபெற உதவ வேண்டும் என்பதே மூன்றாவது அம்சம்.

கண்ணாடியில் முகம் பார்ப்பவர், தமது குற்றங்குறைகளைக் கண்டு வெறுப்படைவதில்லை. கோபப்படுவதில்லை. கோபத்தைக் கண்ணாடி மீது காட்டுவதுமில்லை. மாறாக அழகுபடுத்திக் கொள்வதிலேயே முனைப்பு காட்டுகின்றான். மகிழ்ச்சியோடு கண்ணாடியைத் துடைத்து வைத்துப் பாதுகாக்கிறான். உங்கள் குற்றங்குறைகளை நளினமாகச் சுட்டும்போது வெறுப்படையாதீர்கள். கோபப்படாதீர்கள். மாறாக, மகிழ்ச்சியடைந்து, சக மனிதர்களின் தோழமையைப் பாதுகாத்துக் கொள்ளுங்கள். சீர்த்திருத்தத்துக்குத் தயாராகுங்கள் என்பதே கண்ணாடி சொல்லும் அடுத்த அம்சம்.

தோழமைக்குக் கண்ணாடி உவமானப்படுத்தப் பட்டிருப்பது சக மனிதர்களிடம் நிலவும் நட்பும் தோழமையும் அன்பின் வடிவமாக நலன்விரும்பியாகத் திகழ வேண்டும் என்பதற்குத்தான்!

நீங்கள் உங்கள் நண்பர்களின், சக மனிதர்களின் சுகதுக்கங்களில் பங்கெடுங்கள். உங்கள் விமர்சனங்கள், மன உருக்கம் என்னும் அந்த அன்பில் கரைந்துவிடும். உள்ளங்கள் பிணைந்துவிடும்.

அன்பளிப்புகள் சிறியதானாலும் பெரிதானாலும், அவை மனித உள்ளங்களைப் பிணைக்கும் என்பதை உறுதிப்படுத்தி நபிகளார் இப்படிச் சொல்கிறார்.

“ஒருவர் மற்றொருவருக்கு அன்பளிப்புகளை அளித்தவண்ணம் இருங்கள். இதனால், பரஸ்பரம் அன்பு பெருக்கெடுக்கும். உள்ளங்களிலிருந்து கபடங்கள் விலகும். ஒருவர் ஓர் ஆட்டின் கால்களை எனக்கு அன்பளிப்பாக வழங்கினாலும் நான் அவற்றை அவசியம் ஏற்றுக்கொள்வேன். ஒருவர் ஆட்டின் கால்களை சமைத்து விருந்து வைத்தாலும் நான் கட்டாயம் அந்த விருந்தை ஏற்றுக்கொள்வேன்!”

http://tamil.thehindu.com/society/spirituality/%E0%AE%A8%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%90%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AF%81%E0%AE%A3%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/article8532117.ece

''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''
எழுத்து நடையோ, சொற்சிறப்புகளோ அவற்றுக்கான வலியுறுத்தலோ எனது எழுத்தின் நோக்கமல்ல என்பதை முதலிலேயே தெரிவித்து விடுகிறேன்.

என்னிலும் அழகாய் எழுதுபவர்கள், சொல்லடுக்குபவர்கள், திறமையானவர்கள் அதிகமதிகம் என்பதை நன்கறிவேன்.

நான் அழுத்தமாக சொல்ல வருவது இதுதான்:

நபிகளார் முஸ்லிம்களுக்கு மட்டும் சொந்தமானவர் அல்ல. அவர் மொத்த மனித இனத்துக்கானவர்.

இன்னும் விரிவாக சொல்லப்போனால் நபிகளார் மொத்த உயிரினத்துக்கானவர்.

அதனால், அவரை முஸ்லிம்  சமுதாயத்துக்குள் மட்டும் வைத்து கொண்டாடிக் கொண்டிருக்க வேண்டாம். பொதுவெளியில் அன்னியப்படுத்தவும் வேண்டாம்.

உலக மக்களுக்கு அருளாக அனுப்பப்பட்ட அண்ணலாரை எல்லோரும் கொண்டாட விடுங்கள். அவரை எல்லோரும் அணுகும்விதமாக சொல்லாடல்களைக் கையாளுங்கள். மண்ணுக்கேற்ற மைந்தராய் அவர் மனித உள்ளங்களை ஈர்க்க வழிவிட்டு நில்லுங்கள்.

முஃமின் என்பவர் முஸ்லிம் என்பது விளங்கிக்  கொள்ளக்கூடியதுதான். ஆனால், பொதுவெளியில் இறைநம்பிக்கைக் கொண்டவர் என்றால் குறைந்துவிடப்போவதுதான் என்ன?

அந்த ஒற்றைச்சொல்லாடலால், நபிகளார் எனக்குமானவர், என் நலனும் நாடுபவர் என்று ஒவ்வொரு சமயத்தாரும் எண்ணி பூரிக்க வழிவகுத்தால்தான் என்ன?

ஆதாரங்கள், குறிப்பெண்கள் எல்லாம் தவிர்த்து நேரிடையாய் செய்தியை வைத்தால்தான் என்ன?

எந்த மொழி சிறந்தது என்ற சர்ச்சைக்குள் சிக்காமல், மூலமொழிக்குள்ளேயே நிற்காமல் அவரவர் அழகிய தாய் மொழியில் நபிகளாரை பேசவிட்டால்தான் என்ன?

அடைப்புக்குறிக்குள் எல்லாம் நபிகளாரை வாட்டாமல் பொதுவெளியில் எல்லோருக்குமானவர் என்றொரு உறவை பிணைத்தால்தான் என்ன?

இது போன்ற கேள்விகள், இன்னும் பல கேள்விகள் என்னுள் அடுக்கடுக்காய் எழுவதை என்னால் தடுக்கவே முடியவில்லை.
எனது இந்தக் கருத்தில் முரண்படுவர்கள் ஏராளமானோர் இருக்கலாம். ஆதரிப்போரும் இருக்கலாம்.

முரண்படுபவர் தமது கருத்துக்களை முன்வைப்பதைவிட்டு எனக்கு ‘பட்டப் பெயர்களை’ சூட்டாமலிருக்கட்டும்.

ஏனென்றால், எனக்கு நபிகளாரைவிட்டால் வேறு நாதியில்லை என்பதில் மட்டும் உறுதியான நம்பிக்கை இருக்கிறது.

நாத்திகனாக திரிந்து இளமையை வீணடித்த எனக்கு இறைநம்பிக்கை ஊற்றைக் அடையாளம் காட்டி தாகம் தீர்த்தவர்.

ஒப்பற்ற அருங்குணங்களால் என்னை புடம்போட வைத்து என் வாழ்வின் தடம் மாற்றியவர்.

வாழ்வின் அடிதோறும் காலத்தால் அழியாத பொன்மொழிகளால், ஒப்பற்ற வழிமுறைகளால் என்னை கைத்தாங்கலாய் வழி நடத்தி இறையன்புச் சுனையை சுவைக்க வைப்பவர்.

சோர்ந்திருக்கும் போதெல்லாம் தாயுமானவராய் நினைவில் எழுந்து இறையருள் பொழிய வழி வகைச் செய்பவர்.

நாயகமே..! நீரின்றி எனக்கு உய்வில்லை… இறையன்பை பெற்றுத்தரும்  வேறு யாருமில்லை என்றே சான்றளிக்கிறேன்.
 


No comments:

Post a Comment