Thursday, August 17, 2017

செக்கிழுத்த செம்மல் அறிஞர் மொஹானி

டாக்டர் அம்பேத்காருடன் அறிஞர் மொஹானி

1931 ம் ஆண்டு அஹமதாபாத்தில் கூடிய காங்கிரஸ் பொதுக்குழுவில் அறிஞர் மொஹானி "இந்தியாவுக்கு பூரண விடுதலை" என்ற தீர்மானத்தை முன்மொழிந்தபோது இந்தியா ஆச்சரியத்தில் விழியுயர்த்தியது! ஆம் அதுவரை "பூரண விடுதலை" என்ற கற்பனை கூட இந்தியாவில் காணப்படவில்லை!

இந்தத்தீர்மானம் நிறைவேற்றப்படாதா என மக்கள் எதிர்பார்த்தனர்!

ஆனால் யாரும் எதிர்பாராத வகையில் தீர்மானத்துக்கு எதிர்ப்பு காந்திஜீயிடமிருந்தே எழுந்தது! இதன் விளைவாக தீர்மானம் தோகடிக்கப்பட்டது!

ஆனால் இதில் முரண்நகை என்ன தெரியுமா? எட்டு ஆண்டுகள் கழித்து லாஹூர் காங்கிரஸ்ஸில் "பூரண விடுதலை" என்ற தீர்மானம் அதே காந்தியால் முன்மொழியப்பட்டு நிறைவேற்றப்பட்டதுதான்!

அறிஞர் மொஹானி அவர்கள் எட்டு ஆண்டுகளுக்கு முன்பு எண்ணிய எண்ணம் காந்திஜியால் எட்டு ஆண்டுகள் கழித்து வடிவம் பெற்றது!

அறிஞர் மொஹானி மிகச் சிறந்த உர்து கஜல் கவிஞராகவும் விளங்கினார்!

"சுப்கே சுப்கே ராத் தின்" https://www.youtube.com/watch?v=5bLN85bo48s என்ற அவரது "கஜல்" பாடல் மிகவும் பிரசித்திப் பெற்றது.

இந்தப் பாடல், "நிக்காஹ்" என்ற ஹிந்தித் திரைப்படத்தில் ஒலித்து 80 களில் இந்தியாவைக் கலக்கியது!

மிகச் சிறந்த ஊடகவியலாளரான, அறிஞர் மொஹானி, தன் எழுத்தாற்றலைத் தேச விடுதலைக்கு அர்ப்பணிக்கும் முகமாக "உருது முஹல்லா" என்ற பத்திரிக்கையை ஆரம்பித்தார்; அப்பத்திரிக்கை பிரிட்டீஷ் ஏகாதிபத்தியத்திற்கு எதிராக மக்களைச் சிந்திக்க வைக்கும் அதிர்ச்சி வைத்தியமாக அமைந்தது.

ஒருமுறை உருது முஹல்லாவில் பிரிட்டீஷாருக்கு எதிரான அக்னி வார்த்தைகளைத் தாங்கிய ஓர் இளைஞனின் கவிதை பிரசுரமானது. அக்கவிதை ஏற்படுத்திய சலசலப்பினால் கொதித்துப்போன ஆங்கில அரசு அறிஞர் மொஹானிக்கு நோட்டீஸ் அனுப்பியது. அக்கவிதையை எழுதியவர் யார் என்பதை எங்களுக்கு அறிவிக்க வேண்டும் என்று அந்த நோட்டீஸ் அச்சுறுத்தியது. அதை தெரிவிக்க, மொஹானி மறுத்து விட்டார். மிகச் சிறந்த ஊடகவியலார் என்று வரலாற்றில் உயர்ந்தார்.

கவிதையைப் பிரசுரித்த பத்திரிக்கையின் ஆசிரியர் நான், எனவே அதற்கு நான் தான் பொறுப்பு. எழுதியவரை அடையாளம் காட்டமுடியாது. வேண்டுமானால் என்மீது நடவடிக்கை எடுங்கள் என்று அந்த நோட்டீசுக்குத் துணிச்சலுடன் பதிலளித்தார்.

ஆங்கில அரசு அறிஞர் மொஹானி மீது நடவடிக்கை எடுத்தது. கோர்ட்டுக்கு அவரை அலைக்கழித்தது. இறுதியில் ஆறுமாதச்சிறைத் தண்டனை வழங்கியது. உருது முஹல்லா பத்திரிக்கையைத் தடை செய்தது. அப்பத்திரிக்கை அச்சிடப்பட்ட ஹஜ்ரத்துக்கு சொந்தமான அச்சுக்கூடத்தை ஜப்தி செய்தது.

”யாரோ எழுதிய கவிதைக்காக நீங்கள் இத்தனைத் துன்பங்களை அனுபவிக்க வேண்டுமா?” – என்று மொஹானியிடம் கேட்டபோது, அது யாரோ எழுதிய கவிதைதான். ஆனால் எனக்கு உடன்பாடான கவிதை. என் தேசநலன் நாடும் வார்த்தைகளைச் சுமந்த கவிதை. அக்கவிதையை என் பத்திரிக்கையில் பிரசுரித்ததற்காக நான் பெருமைப்படுகிறேன். அதற்காக எனக்கு இத்தணடனை என்றால், என் தேசத்தின் விடியலுக்காக இத்தண்டனையை மகிழ்வோடு ஏற்கிறேன்!. – என்று பதிலளித்தார்.

ஹஜ்ரத் மொஹானி அவர்கள் கைது செய்யப்படும்போது அவரது மனைவியார் நிறைமாதக் கர்ப்பிணி. குழந்தையை ஈன்ற அத்தாய், தன் கணவனிடம், அவரது, வாரிசைக் காட்ட குழந்தையைக் கையில் ஏந்திக் கொண்டு ஒவ்வொரு சிறைச்சாலையாக அலைந்தார். எந்தச் சிறையில் அவர் அடைக்கப்பட்டிருக்கிறார் என்ற குறைந்தபட்ச தகவலைக்கூட தர ஆங்கில அரசு மறுத்து விடுகிறது.

மூன்று நாட்கள் பட்டினியுடன் பல சிறைகளுக்கும் அலைந்த அத்தாய், இறுதியில் தன் கணவனைச் சந்தித்தார்.

தனது வாரிசை முதன் முதலாகப் பார்த்த அறிஞர் மொஹானி பாசம் பொங்க, சிறைக் கம்பிகளினூடே குழந்தையை வாங்கி முத்தமிட்டார். 

தன் குழந்தைக்கு ஒரு தந்தை, முத்தமிட்டது குற்றமா?

ஆங்கில அரசு அதனையும் குற்றமாக்கியது. சிறை விதிகளை மீறி நடந்தார் என்று குற்றம் சாட்டி மேலும் இரண்டாண்டுகள் சிறைத் தண்டனை வழங்கியது. இதைத் தொடர்ந்து சிறைச்சாலையில் அறிஞர் மொஹானி செக்கிழுத்த கொடுமையும் நடந்தது!

செக்கிழுத்த செம்மல் மொஹானி என்று இந்திய சுதந்திரப் போராட்ட வரலாறு பேசட்டும்.

3 comments:

 1. அறிய தகவலுக்கு நன்றி தலைப்பில் எழுத்துப்பிழை இருக்கிறது திருத்தம் செய்வீர்கள் என்று நம்புகிறேன்

  ReplyDelete
  Replies
  1. பின்னூட்டத்துக்கு நன்றி.எழுத்துப்பிழையைச் சுட்டிக்காட்டியமைக்கும் நன்றி

   Delete
 2. செக்கிழுத்தது வ.ஊ.சின்னு மட்டும்தான் வரலாறு நமக்கு சொல்லிக்கொடுத்திருக்கு

  ReplyDelete