Thursday, August 17, 2017

சுவர்க்கத்தின் நடுவில் ஒரு வீடுசமூக அமைப்பில் பொய் எங்கெல்லாம் உலா வர வாய்ப்புள்ளதோ அந்த இடங்களையெல்லாம் சுட்டிக்காட்டி நபிகளார் அறிவுறுத்தியுள்ளார். அதன் செயலுருவாக்கத்தை கடுமையாக கண்டித்தும் உள்ளார். பொய்ப் பிரயோகிப்பவர்களுக்கு கடும் தண்டனை காத்திருக்கிறது என்று எச்சரித்தும் உள்ளார். இதன் விளைவாக ஒரு சாதாரண பணியாள்கூட மக்களைத் தவறாக வழி நடத்த முடியாது. ஒரு சாமான்யன்கூட உண்மையின் முக்கியத்துவத்தைப் புறக்கணித்துவிட முடியாது. 
-இக்வான் அமீர்

'''''''''''''''''''''''''''''

ஒருமுறை நான் நபிகளாரின் இல்லத்தில் இருக்கும்போது எனது தாயார் "என்னிடம் வந்தால் உனக்கொன்றை தருவேன்..!" - என்று என்னை அழைத்தார்.

அப்போது நபிகளார், "குழந்தைக்கு என்ன தரப்போகிறீரகளம்மா..?" - என்று விசாரித்தார்.

"பேரீத்தம்பழம் தரப் போகிறேன் இறைவனின் தூதரே!"- என்றார் எனது தாயார்.

"ஞாபகமிருக்கட்டும்... ஒருவேளை பேரீத்தம் பழத்தை குழந்தைக்குத் தரவில்லை என்றால்... நீங்கள்  பொய் சொன்னதாக இறைவனிடம் பதியப்படும்" - என்று நபிகளார் அறிவுறுத்தியதாக நபித்தோழர் அப்துல்லாஹ் இப்னு அம்ர் பதிவு செய்கிறார்.

ஒரு குழந்தையை அழைப்பதற்காககூட எதையாவது தருகிறேன் என்று சொல்லி அதை தராமலிருப்பது ஏமாற்றுச் செயலாகும் என்று பெற்றோரை இஸ்லாம் எச்சரிக்கிறது. குழந்தைகளின் உள்ளங்களில் நேர்மை, உண்மை இவற்றின் விதைகளை அதிகதிகமாக தூவுங்கள் என்றே அது தனது பின்பற்றாளர்களை எச்சரிக்கிறது.

குழந்தைகள் பொய்மையின் நிழல்கூட படாதவர்களாக திகழ்ந்து, உண்மையாளர்களாக வளர்ந்து, நேர்மையான உருவங்களில் வாழ்ந்து, சொல்லாலும், செயலாலும் வாய்மையாளர்களாக சமூகத்தில் உலா வர வேண்டும் என்று இஸ்லாம்  விரும்புகிறது. குழந்தை வளர்ப்பில் பொய் பெரும் பாவம் என்று அறிவுறுத்துவதோடு, வாழ்வின் அனைத்துத் துறைகளிலும் இளந்தலைமுறையினர், நேர்மையாளர்களாகவே கட்டமைக்கப்பட வேண்டும் என்பது அதன் அழுத்தான கட்டளையாகும்.

நபித்தோழி அஸ்மா பின்த் யஜீத் மற்றொரு சம்பவத்தை பதிவு செய்கிறார்:

"நான் ஒருமுறை நபிகளாரிடம், "பெண்களாகிய எங்களில் ஒருசிலர் ஒரு பொருளின் மீது ஆசைப்பட்டும் அதன் மீது ஆசை இல்லை என்று கூறுவதும் பொய்யாகுமா இறைவனின் திருத்தூதரே?" - என்று கேட்டேன். அதற்கு நபிகளார், "பொய்... பொய்யாகவே எழுதப்படும்!" -  என்று பதிலளித்தார்.

சமூக அமைப்பில் பொய் எங்கெல்லாம் உலா வர வாய்ப்புள்ளதோ அந்த இடங்களையெல்லாம் சுட்டிக்காட்டி நபிகளார் அறிவுறுத்தியுள்ளார். அதன் செயலுருவாக்கத்தை கடுமையாக கண்டித்தும் உள்ளார். பொய்ப் பிரயோகிப்பவர்களுக்கு கடும் தண்டனை காத்திருக்கிறது என்று எச்சரித்தும் உள்ளார். இதன் விளைவாக ஒரு சாதாரண பணியாள்கூட மக்களைத் தவறாக வழி நடத்த முடியாது. ஒரு சாமான்யன்கூட உண்மையின் முக்கியத்துவத்தைப் புறக்கணித்துவிட முடியாது.

சிலசமயம், நண்பர்களிடையே அரட்டை அடிக்கும்போது, வேடிக்கைக்காக பொய் மூட்டைகளை அவிழ்த்துவிடுவதுண்டு. சொல்பவரோ அல்லது கேட்பவரோ பொய் என்று இதை மனதில் நினைப்பதில்லை. அதைக் கண்டிப்பதுமில்லை.

வேடிக்கைப் பேச்சில், தவறான தகவல்களைத் தருவதிலோ, கற்பனையாக மிகைப்படக் கூறுவதிலோ தவறு என்ன இருக்கிறது? என்று எண்ணுவோருக்கு இஸ்லாத்தின் தெளிவான செய்தி இதுதான்: "வேடிக்கையாகப் பேசுவதில் ஒரு தவறும் இல்லை. அதேநேரத்தில் இந்த வேடிக்கையும், சிரிப்புகளும் வாய்மை என்ற வரம்புகளுக்குள்ளாகவே இருக்க வேண்டும். பொய் எப்போதும் பொய்தான். உண்மை பொய்யிலிருந்து முற்றிலும் வேறுபட்டது. தனித்துவம் வாய்ந்தது.

இதுகுறித்து நபிகளாரின் எச்சரிக்கையும், நற்செய்தியும் இது: "அடுத்தவரை சிரிக்க வைக்க வேண்டும் என்பதற்காக பொய்யான கதைகளைக் கூறுபவனுக்கு மரணம் உண்டாகட்டும். அவனுக்கு அழிவு காத்துக் கொண்டிருக்கிறது.

அதேபோல, "வேடிக்கையில் ஈடுபட்ட நிலையிலும், பொய்யைவிட்டு விலகி இருப்பவனுக்கு சுவர்க்கத்தின் நடுவில் ஒரு வீடு உண்டு என்று நான் உறுதி அளிக்கிறேன்"

வேடிக்கை, விவாதங்களில் பொய் சொல்வதை விட்டுவிடாதவரை ஒருவர் தனது இறைநம்பிக்கையில் முழுமைப் பெற முடியாது. அவர் மற்றைய விவகாரங்கள் அனைத்திலும் உண்மையாக இருந்தாலும் சரியே..!

வேடிக்கைப் பேச்சுகள் எல்லா நிலைகளிலும் சிரிப்பூட்டுவதில்லை..! மகிழ்ச்சியூட்டுவதுமில்லை. அப்போது கட்டவிழ்த்துவிடும் பொய்களின் பின்விளைவுகளால் குடும்பங்களில் சுமூகநிலை பாதிக்கப்படுகிறது. சிலபோது விபரீதங்களை விளைவிக்கிறது. குடும்ப உறவுகளை சீர்க்குலைக்கிறது. பகைமையை வேர்விடச் செய்கிறது என்பதே உண்மை.

(தி இந்து, ஆனந்த ஜோதி இணைப்பில் 17.08.2017 அன்று வெளியான எனது கட்டுரை)  

படம்: நன்றி: Subhan's Photography:  https://www.facebook.com/groups/716821555091965/

செக்கிழுத்த செம்மல் அறிஞர் மொஹானி

டாக்டர் அம்பேத்காருடன் அறிஞர் மொஹானி

1931 ம் ஆண்டு அஹமதாபாத்தில் கூடிய காங்கிரஸ் பொதுக்குழுவில் அறிஞர் மொஹானி "இந்தியாவுக்கு பூரண விடுதலை" என்ற தீர்மானத்தை முன்மொழிந்தபோது இந்தியா ஆச்சரியத்தில் விழியுயர்த்தியது! ஆம் அதுவரை "பூரண விடுதலை" என்ற கற்பனை கூட இந்தியாவில் காணப்படவில்லை!

இந்தத்தீர்மானம் நிறைவேற்றப்படாதா என மக்கள் எதிர்பார்த்தனர்!

ஆனால் யாரும் எதிர்பாராத வகையில் தீர்மானத்துக்கு எதிர்ப்பு காந்திஜீயிடமிருந்தே எழுந்தது! இதன் விளைவாக தீர்மானம் தோகடிக்கப்பட்டது!

ஆனால் இதில் முரண்நகை என்ன தெரியுமா? எட்டு ஆண்டுகள் கழித்து லாஹூர் காங்கிரஸ்ஸில் "பூரண விடுதலை" என்ற தீர்மானம் அதே காந்தியால் முன்மொழியப்பட்டு நிறைவேற்றப்பட்டதுதான்!

அறிஞர் மொஹானி அவர்கள் எட்டு ஆண்டுகளுக்கு முன்பு எண்ணிய எண்ணம் காந்திஜியால் எட்டு ஆண்டுகள் கழித்து வடிவம் பெற்றது!

அறிஞர் மொஹானி மிகச் சிறந்த உர்து கஜல் கவிஞராகவும் விளங்கினார்!

"சுப்கே சுப்கே ராத் தின்" https://www.youtube.com/watch?v=5bLN85bo48s என்ற அவரது "கஜல்" பாடல் மிகவும் பிரசித்திப் பெற்றது.

இந்தப் பாடல், "நிக்காஹ்" என்ற ஹிந்தித் திரைப்படத்தில் ஒலித்து 80 களில் இந்தியாவைக் கலக்கியது!

மிகச் சிறந்த ஊடகவியலாளரான, அறிஞர் மொஹானி, தன் எழுத்தாற்றலைத் தேச விடுதலைக்கு அர்ப்பணிக்கும் முகமாக "உருது முஹல்லா" என்ற பத்திரிக்கையை ஆரம்பித்தார்; அப்பத்திரிக்கை பிரிட்டீஷ் ஏகாதிபத்தியத்திற்கு எதிராக மக்களைச் சிந்திக்க வைக்கும் அதிர்ச்சி வைத்தியமாக அமைந்தது.

ஒருமுறை உருது முஹல்லாவில் பிரிட்டீஷாருக்கு எதிரான அக்னி வார்த்தைகளைத் தாங்கிய ஓர் இளைஞனின் கவிதை பிரசுரமானது. அக்கவிதை ஏற்படுத்திய சலசலப்பினால் கொதித்துப்போன ஆங்கில அரசு அறிஞர் மொஹானிக்கு நோட்டீஸ் அனுப்பியது. அக்கவிதையை எழுதியவர் யார் என்பதை எங்களுக்கு அறிவிக்க வேண்டும் என்று அந்த நோட்டீஸ் அச்சுறுத்தியது. அதை தெரிவிக்க, மொஹானி மறுத்து விட்டார். மிகச் சிறந்த ஊடகவியலார் என்று வரலாற்றில் உயர்ந்தார்.

கவிதையைப் பிரசுரித்த பத்திரிக்கையின் ஆசிரியர் நான், எனவே அதற்கு நான் தான் பொறுப்பு. எழுதியவரை அடையாளம் காட்டமுடியாது. வேண்டுமானால் என்மீது நடவடிக்கை எடுங்கள் என்று அந்த நோட்டீசுக்குத் துணிச்சலுடன் பதிலளித்தார்.

ஆங்கில அரசு அறிஞர் மொஹானி மீது நடவடிக்கை எடுத்தது. கோர்ட்டுக்கு அவரை அலைக்கழித்தது. இறுதியில் ஆறுமாதச்சிறைத் தண்டனை வழங்கியது. உருது முஹல்லா பத்திரிக்கையைத் தடை செய்தது. அப்பத்திரிக்கை அச்சிடப்பட்ட ஹஜ்ரத்துக்கு சொந்தமான அச்சுக்கூடத்தை ஜப்தி செய்தது.

”யாரோ எழுதிய கவிதைக்காக நீங்கள் இத்தனைத் துன்பங்களை அனுபவிக்க வேண்டுமா?” – என்று மொஹானியிடம் கேட்டபோது, அது யாரோ எழுதிய கவிதைதான். ஆனால் எனக்கு உடன்பாடான கவிதை. என் தேசநலன் நாடும் வார்த்தைகளைச் சுமந்த கவிதை. அக்கவிதையை என் பத்திரிக்கையில் பிரசுரித்ததற்காக நான் பெருமைப்படுகிறேன். அதற்காக எனக்கு இத்தணடனை என்றால், என் தேசத்தின் விடியலுக்காக இத்தண்டனையை மகிழ்வோடு ஏற்கிறேன்!. – என்று பதிலளித்தார்.

ஹஜ்ரத் மொஹானி அவர்கள் கைது செய்யப்படும்போது அவரது மனைவியார் நிறைமாதக் கர்ப்பிணி. குழந்தையை ஈன்ற அத்தாய், தன் கணவனிடம், அவரது, வாரிசைக் காட்ட குழந்தையைக் கையில் ஏந்திக் கொண்டு ஒவ்வொரு சிறைச்சாலையாக அலைந்தார். எந்தச் சிறையில் அவர் அடைக்கப்பட்டிருக்கிறார் என்ற குறைந்தபட்ச தகவலைக்கூட தர ஆங்கில அரசு மறுத்து விடுகிறது.

மூன்று நாட்கள் பட்டினியுடன் பல சிறைகளுக்கும் அலைந்த அத்தாய், இறுதியில் தன் கணவனைச் சந்தித்தார்.

தனது வாரிசை முதன் முதலாகப் பார்த்த அறிஞர் மொஹானி பாசம் பொங்க, சிறைக் கம்பிகளினூடே குழந்தையை வாங்கி முத்தமிட்டார். 

தன் குழந்தைக்கு ஒரு தந்தை, முத்தமிட்டது குற்றமா?

ஆங்கில அரசு அதனையும் குற்றமாக்கியது. சிறை விதிகளை மீறி நடந்தார் என்று குற்றம் சாட்டி மேலும் இரண்டாண்டுகள் சிறைத் தண்டனை வழங்கியது. இதைத் தொடர்ந்து சிறைச்சாலையில் அறிஞர் மொஹானி செக்கிழுத்த கொடுமையும் நடந்தது!

செக்கிழுத்த செம்மல் மொஹானி என்று இந்திய சுதந்திரப் போராட்ட வரலாறு பேசட்டும்.

Monday, August 14, 2017

70 ஆண்டுகள் கழிந்தும்...


"எழுபதாண்டுகள் கழிந்தும்...மாறாத என் அரசியல் நாயகர்கள்!"

பகலில் வரலாற்றை உருவாக்குகின்றேன்! 25.11.1919 - இல், அரசாங்கக் கட்டளையின்படி அலி சகோதரர்கள் விடுதலையடைந்து நேராக, அமிர்தரஸில் நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டில் கலந்து கொள்ள சென்றார்கள். அங்கு ஒருவர், முஹம்மது அலியைப் பார்த்து, "தாங்கள் வெளிவந்துவிட்டீர்களா?" - என்று கேட்க, அவர், "ரிட்டர்ன் டிக்கெட் வாங்கிக் கொண்டுதான் வந்திருக்கின்றோம்!" - என்றார் புன்னகையுடன். ~இக்வான் அமீர்

''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''

"நாங்கள் இரவு 11 மணிக்கு வழக்கம்போல தூங்கச் சென்றோம். இரவு 2 அல்லது 2.30 மணிக்கு நோன்பிற்காக சஹர் (நோன்புக்கால காலை உணவு) செய்தோம். சுமார் 4 மணிக்கு பங்களாவின் வாசலில் காலடிச் சத்தங்கள் கேட்டு விழித்துக் கொண்டேன். "யார் அது?" என வினவியதற்கு, "தாங்கள் தானா, மிஸ்டர் ஷவ்கத் அலி?" - என டிப்டி கமிஷனரான மிஸ்டர் புலூட்டன் கேட்டார். இவர்கள் கைது செய்ய வந்திருக்கிறார்கள் என உணர்ந்து கொண்டேன்....

..... புலூட்டன் கைது செய்ய வந்திருப்பதாக அறிந்ததும் முஹம்மது அலி, "இதோ..! தயாராக இருக்கின்றேன்!"- எனக் கூறினார்.

இதற்குள்ளாக தாயாரும்,  புர்கா அணிந்து வந்து எங்களுடன் வருவதாக சொன்னார் புலூட்டன், "இவ்விருவரையம் அழைத்துச் செல்லத்தான் எங்களுக்கு உத்திரவு!" - எனக் கூறிவிட்டார்.

முஹம்மது  ஹீஸைன் (குடும்ப உறுப்பினர்) என்னுடன் கட்டித் தழுவும்போது அழுது விட்டான். நான் பலமாக அவன் கன்னத்தில் ஓர் அறை கொடுத்து, "ஜாக்கிரத்தை, வெள்ளையன் முன் அழக்கூடாது!" - என கத்தி எச்சரித்தேன்"

ஆங்கிலேயருக்கு சிம்ம சொப்பனமாக விளங்கிய அலி சகோதரர்களில் ஒருவரான மெளலானா ஷவ்கத் அலியின் டைரிக் குறிப்பு ஒன்றே மேலே காணப்படுவது.

இந்திய விடுதலைப் போரில், அலி சகோதரர்கள் என்று சிறப்புப் பட்டம் பெற்ற சகோதரர்களில் மூத்தவர் ஷவ்கத் அலி. இளையவர் முஹம்மது அலி.

முஹம்மது அலி தமது 18 வயதில் பி.ஏ. முதல் வகுப்பில் தேர்ச்சிப் பெற்று சாதனைப் படைத்தார். அதன்பின், ஆக்ஸ்போர்ட்டிலுள்ள லிங்கன் கல்லூரியில் 1898 முதல், 1902 வரை கல்வி கற்றார். மேலைக் கல்வி கற்ற அதேசமயம், சிறந்த சமயப் பற்றாளராகத் திகழ்ந்தார். அங்கு பி.ஏ.ஹானர்ஸ் படித்துத் தேறினார்.

1902 - இல், முஹம்மது அலி இங்கிலாந்திலிருந்து இந்தியா திரும்பினார். சிறிது காலம் ராம்பூர் சமஸ்தானத்தில் கல்வி அதிகாரியாகப் பணியாற்றினார். அதன்பின் இரண்டு வருட நீண்ட விடுப்பில் கல்கத்தா சென்று காம்ரேட் பத்திரிகையைத் தொடங்கினார். 1911 ஜனவரி 11- ஆம், நாள் வெளியான காம்ரேட் வெறும் இரு நூற்றைம்பது ரூபாய் கைமாற்றில் ஆரம்பிக்கப்பட்டு, இந்தியப் பத்திரிகை வானில் தாரகையாய் மிளிர்ந்தது. அரசியல் பிரமுகர்கள் எல்லாம் அதன் வாசகர்கள்.

ஒத்துழையாமை இயக்க நாட்களில் மெளலானா அவர்களின் பேச்சினால் ஏற்பட்ட உத்வேகத்தில் முப்பது நாட்களில் ... முப்பதாயிரம் ஆண்களும், பெண்களும் சிறை நிரப்பும் போராட்டங்களில் பங்கு கொண்டனர்.

பகலில் அரசியல் பணிகளும், இரவில் எழுத்து பணிகளுமாய் மூழ்கி இருக்கும் மௌலானா முஹம்மது அலி, "நான் பகலில் வரலாற்றை உருவாக்குகின்றேன். இரவிலோ வரலாற்றை எழுதுகின்றேன்!" - என்பார்.

வெள்ளையர் ஏகாத்பத்தியத்தின் கொடுந்துன்பங்களுக்கும், வெஞ்சிறைச் சாலைகளுக்கும் அலி சகோதரர்கள் அஞ்சியதில்லை. 1915 - மே, 15 - ஆம் தேதி இந்தியப் பாதுகாப்புச் சட்டத்தை முன்னிறுத்தி ஷவ்கத் அலியும், முஹம்மது அலியும் கைது செய்யப்பட்டு சிந்துவாரா சிறையில் அடைக்கப்பட்டனர்.

25.11.1919 - இல், அரசாங்கக் கட்டளையின்படி அலி சகோதரர்கள் விடுதலையடைந்து நேராக, அமிர்தரஸில் நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டில் கலந்து கொள்ள சென்றார்கள். அங்கு ஒருவர், முஹம்மது அலியைப் பார்த்து, "தாங்கள் வெளிவந்துவிட்டீர்களா?" - என்று கேட்க, அவர், "ரிட்டர்ன் டிக்கெட் வாங்கிக் கொண்டுதான் வந்திருக்கின்றோம்!" - என்றார் புன்னகையுடன்.


1923, ஆகஸ்ட் கடைசி வாரத்தில் ஜான்ஸியில் முஹம்மது அலி விடுதலை செய்யப்பட்டார். விடுதலைக்குப் பின் அவர் பேசிய முதல் கூட்டத்தில், "நான் விடுதலையானது.. எனக்கு மிகுந்த மன வருத்தத்தைத் தருகிறது. ஏனென்றால்... நாட்டினுடைய பெரும் சுமை என் மீது சுமத்தப்பட்டுவிட்டது. என் அண்ணன் ஷவ்கத் அலியைவிட நான் அதிகமாக நேசிக்கும் அந்தப் பெருந்தலைவர், காந்திஜி இங்கு இல்லாத நிலையில் நான் சிறிய சிறையிலிருந்து.. பெரிய சிறைக்கு வந்திருப்பதாகவே உணர்கின்றேன்! இனி என் முதல் கடமை, விடுதலையின் (சுயராஜ்ஜியம்) திறவுக்கோலைத் தேடி எடுத்து இந்தியாவின் ஆன்மா அடைப்பட்டுக் கிடக்கும் எரவாடா சிறைக் கதவைத் திறப்பதுவேயாகும்!" - என்றார்.

நாட்டு விடுதலைக்காக.. முதன் முதலில் சிறைப் புகுந்த பெருமை மௌலானா முஹம்மது அலியையே சாரும். அரசியல் போர்க்களங்களின் இடைவிடாத போராட்டங்களில் பல்லாண்டுக் கால தொடர் சிறைவாசத்தை அலி சகோதரர்கள் அனுபவித்தார்கள். அவர்களின் விடுதலையின் போது, வறுமையின் கோரம் தாண்டவமாடியது. உண்ண உணவின்றி, இருந்த இடத்திற்கு வாடகை கொடுக்கப் பணமின்றி சிரமப்பட்டனர். அந்த நிலைமையிலும், மக்கள் திரட்டிக் கொடுத்த ரூபாய் 12 ஆயிரம் பண முடிப்பையும் , அவர்களைக் கவுரவித்து அணிவித்த ஆயிரம் பவுன் மதிப்புள்ள தங்கச் சரிகை மாலையையும் கிலாஃபத் நிதியில் சேர்த்துவிட்டனர்.

லண்டன் வட்டமேஜை மாநாட்டுக்கு வைஸிராய் லார்டு இர்வின் கொடுத்த அழைப்பை ஏற்று மௌலானா புறப்பட்டபோது, அவரது உடல்நிலை கடுமையாய்யப் பாதிக்கப்பட்டிருந்தது. கட்டிலில் படுக்க வைத்தவாறு பம்பாய் துறைமுகத்தில் கப்பலில் ஏற்றிய காட்சி கண்ணீர் வரவழைப்பதாகும். கடுமையான நோய்களால் அவதிப்பட்ட அப்பெரியார் தம் நாடு சுதந்திரம் பெற்றேயாக வேண்டுமென்று முனைப்புடன் பயணம் செய்தார்.

லண்டன் மாநாட்டில், "சமாதானத்திற்காகவும், நேசத்திற்காகவும், சுதந்திரத்திற்காகவும் நாங்கள் இங்கு வந்தோம். இவற்றை எல்லாம் பெற்றே திரும்புவோம்!" - என நம்புகின்றேன். இல்லை என்றால்.. போராட்டக் குழுக்களுடன் இணைந்து விடுவோம். தேசத்துரோகிகள், கலகக்காரர்கள், வரம்பு மீறியவர்கள் என்று நீங்கள் எங்களை அழைத்தாலும் கவலையில்லை!

சுதந்திரத் தாயத்துக்கே நான் திரும்ப விரும்புகின்றேன். இல்லாவிட்டால்.. அந்நிய நாடாக இருந்தாலும், உங்கள் நாடு சுதந்திர நாடாக இருப்பதால்... எனக்கு இங்கேயே ஒரு சவக்குழி தந்துவிடுங்கள்!" - என்று மெளலான முழக்கமிட்டார்.

இந்த வரலாற்றுப் புகழ் மிக்க பேருரைக்குப் பின் அவரது உடல்நிலை மிகவும் சீர்குலைந்தது. 03.01.1931 இல், அவரது ஆவி பிரிந்தது(இன்னா லில்லாஹி).

மௌலானாவின் அடக்கம் சம்பந்தமாக, பிரச்னை எழுந்தது. உடலை இந்தியாவுக்கு அனுப்பினால்.. 'பெரும் எழுச்சி ஏற்படும்!' - என்று பயந்த வெள்ளையர் அரசு, பாலஸ்தீனத்தில் மஸ்ஜிதே அக்ஸாவிற்கு அருகில் நல்லடக்கம் செய்ய ஏற்பாடு செய்தது.

கடைசிவரை இந்திய விடுதலைக்காகப் போராடிய மெளலான முஹம்மது அலி ஜவஹர் உயிரைத் தன் நாட்டுக்காக தந்தாரே தவிர, உடலைத் தரவில்லை!

ஏனென்றால்... அடிமை மண்ணில் சிறைப்பட அவரது உடல்கூட தயாராக இல்லை!

(ஆகஸ்ட் 20, 1995-ல், தினமணி நாளேட்டில் பிரசுரமான எனது கட்டுரை)


Sunday, August 13, 2017

கோராக்பூர் சோகமும், சங்பரிவார் இந்தியாவும்!நினைத்தாற்போல டாக்டர் கபீல் கான் மனித நேயப் பணியும், பிஞ்சுக் குழந்தைகளைக் காக்க அவர் மேற்கொண்ட சாதுர்ய நடவடிக்கைகளும் மதவாத சக்திகளால் ஜீரணிக்க முடியவில்லை. பாசிஸ வெறியர்களால் அதை அங்கீகரிக்கவும் முடியவில்லை - இக்வான் அமீர்
'''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''
உ.பியின் கோராக்பூர் பாபா ராகவ தாஸ் (BRD) அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கடந்த ஐந்து நாட்களாக 60 க்கும் மேற்பட்ட குழந்தைகள் தகுந்த மருத்துவ சிகிச்சைகள் இன்றி பலியான சம்பவம் ஓரிரு நாட்களாகதான் உலகின் வெளிச்சத்துக்கு வந்தது.

முழுக்க... முழுக்க ஆட்சி, அதிகார எந்திரத்தின் கோளாறுகளால், அலட்சியத்தால்.. இந்த பிஞ்சு உயிர்களின் பலி நிகழ்ந்தது.

மாநில அரசு மருத்துவமனையில் போதிய மருத்துவர்கள் நியமிக்காததும், தகுந்த மருந்துபொருட்கள் இல்லாததும், உயிர்காக்கும் ஆக்சிஜன் சிலிண்டர்களின் பற்றாக்குறையுமாய் சேர்ந்து இந்த மரண பலிக்கு காரணமானது.

இந்நிலையில் மரணவாசலில் நின்ற குழந்தைகளைக் காக்க போராடிய குழந்தைகள் நல மருத்துவர் கபீல் கான் குறித்து ஒரு மடல் எழுதியிருந்தேன். அதில் மதவாத சக்திகள் அவரது நற்பணியை அங்கீகரிக்க முடியாமல் அவரை கழுவில்கூட ஏற்றலாம் என்ற அச்சமும் தெரிவித்திருந்தேன். http://ikhwanameer.blogspot.in/2017/08/blog-post_13.html மற்றும் https://www.facebook.com/ikhwan.ameer.9/posts/860537287432635

நினைத்தாற்போல டாக்டர் கபீல் கான் மனித நேயப் பணியும், அவரது சாதுர்ய நடவடிக்கைகளும் மதவாத சக்திகளால் ஜீரணிக்க முடியவில்லை. பாசிஸ வெறியர்களால் அதை அங்கீகரிக்கவும் முடியவில்லை.

தற்போது டாக்டர் கபீல் கான் பணி நீக்கம் செய்யப்பட்டதாக உறுதி செய்யப்படாத தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.

இதுதான் மோடி சர்க்காரும், அவரது சிந்தனை ஊற்றான ஆர்எஸ்எஸ் சங்பரிவார் குழுக்களும் உருவாக்க நினைக்கும் இந்தியா.

நமது ஜனநாயக அமைப்பில் மதவாத சக்திகளை அரியணையில் அமர்த்தி மாபெரும் பிழை இழைத்ததாக, சொந்த மக்களை நோக்கி வருங்கால சந்ததிகள் தூற்ற இருக்கும் இந்தியா.

இது வால்மீகியும், கம்பனும் எழுதாத சங்பரிவார் ராமாயணம்

வனவாசம் இல்லாத ராமாயணம்!

குகன் நீக்கப்பட்ட ராமாயணம்!!

வெறும் பிணங்கள்... அழுகிய பிணங்கள்...

விழிபிதுங்கி... வயிறு கிழிக்கப்பட்டு, கருக்கள் பிடுங்கப்பட்டு,

கங்கையும், காவிரியும் வன்புணர்ச்சிக்கு ஆளாக்கப்பட்ட அழுகிய

பிணங்கள் மீது கட்டமைக்கப்பட்ட

ஆர்எஸ்எஸ் - சங்பரிவார் கனவு காணும் இந்தியா! 

கற்காலத்தைய இந்தியா..!


அன்புள்ள டாக்டர் கபீல் கானுக்கு,


டாக்டர் கபீல் கான்

அன்புள்ள டாக்டர் கபீல் கானுக்கு,

தங்கள் மீது இறைவனின் சாந்தியும், சமாதானமும் என்றென்றும் நிலவுவதாக!

செத்த பிணங்களை வைத்து வணிகம் செய்யும் மருத்துவ உலகில், முடிந்தவரை பிடுங்கி பஞ்சபராரியாக்கும் மருத்துவர் இடையில், தாங்கள் தனி ஆளுமைப் பண்பாளராக மிளிர்வதைக் கண்டு உண்மையிலேயே உள்ளம் பூரிக்கின்றேன் டாக்டர்.

உ.பியின் கோராக்பூர் பாபா ராகவ தாஸ் (BRD) அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கடந்த ஐந்து நாட்களாக 60 க்கும் மேற்பட்ட குழந்தைகள் தகுந்த மருத்துவ சிகிச்சைகள் இன்றி பலியான சம்பவம் ஓரிரு நாட்களாகதான் உலகின் வெளிச்சத்துக்கு வந்து கொண்டிருக்கிறது.

முழுக்க... முழுக்க ஆட்சி எந்திரத்தின் கோளாறுகளால், அலட்சியத்தால்..  இந்த பிஞ்சு உயிர்களின் பலி நிகழ்ந்தது.

மாநில அரசு மருத்துவமனையில் போதிய மருத்துவர்கள் நியமிக்காததும், தகுந்த மருந்துபொருட்கள் இல்லாததும், உயிர்காக்கும் ஆக்சிஜன் சிலிண்டர்களின் பற்றாக்குறையுமாய் சேர்ந்து இந்த மரண பலிக்கு காரணமானது.

வெறுப்பு அரசியல்விதைகளை விதைக்க நேரமில்லாத மதவாத அதிகார வர்க்கத்துக்கு குடிமக்களுக்கான அடிப்படை வசதிகள் குறித்து என்னதான் கவலை. அதுவும் மாநில முதல்வரின் சொந்த தொகுதியிலேயே நடந்துள்ள இந்த உயிரிழப்பு அவர்களின் மக்களுக்கான அக்கறையின்மையைத் தவிர சொல்லும் செய்திதான் என்ன?

டாக்டர் கான் சாப், 

ஒரு மருத்துவர் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு நீங்கள் நிகழ்கால உதாரணம் என்பதில் பெருமையடைகிறேன்.

வெறுப்பு அரசியல்வாதிகள் அதிகார ஆர்ப்பாட்டத்துக்கு இடையே அமைதியாக தாங்கள் செய்திருக்கும் பணி மகத்தானது.

ஆகஸ்ட் 10 அன்றைய நள்ளிரவில், பிராணவாயு வினியோகத்துக்கான பிரதான குழாயில் எச்சரிக்கை மணி ஒலிக்கிறது. பிராணவாயுவின் அளவு குறைந்து போனதற்கான சிவப்பு அடையாள எச்சரிக்கை அது. உயிர்க்காக்கும் பிராணவாயுவின் அளவு ஓரிரு மணிநேரம்கூட தாக்குப்பிடிக்காது என்ற நிலையில் மருத்துவமனை பணியாளர்களும், மருத்துவர்களும் கைகளைப் பிசைந்து நின்ற கொடுமையான வேளை அது.

ஒரு குழந்தை மருத்துவரான நீங்கள் தாயுமானவராக அல்லவா அந்த நேரத்தில் மாறி நின்றீர்கள்..! எவ்வித பதட்டமும் படாமல் நிலைமையை சமாளிக்க முடிவெடுத்தீர்கள்..! சீரான திட்டமிட்டீர்கள்..! நேரடியாக களத்தில் இறங்கினீர்கள்! ஒருவேளை திரும்பிவருவதற்குள் பிராணவாயு குறைந்து போனால்... செயற்கை சுவாசப் பைகளை (Ambu bag) பயன்படுத்தி குழந்தைகளை காக்க வேண்டும்! என்று கீழ்நிலை மருத்துவர்களுக்கு ஆணை பிறப்பித்தீர்கள்.

ஓடோடி சென்று பிராணவாயு உருளைகளுக்கான வினியோகஸ்தரிடம் கெஞ்சியிருக்கிறீர்கள். அதுவரையிலான பாக்கித் தொகை கணக்கு முடிக்காமல் பிராணவாயுவை வழங்க முடியாது என்று கை விரித்த வணிகரிடமிருந்து தோல்வியுடன் திரும்பிவந்த நீங்கள் அத்துடன் நிற்கவில்லை.

நட்பு ரீதியாய் அண்டை மருத்துவமனைகளை அணுகி மூன்று பிராணவாயு உருளைகளை காரில் எடுத்து வருகிறீர்கள். அவற்றின் கொள்ளளவு வெறும் அரைமணி நேர பயன்பாடுதான்..!

காலை 6 மணி. பதற்றத்துடனேயே விடிகிறது. அவசர சிகிச்சைப் பெற்று வந்த பல குழந்தைகள் பிராணவாயு இல்லாமல் உயிருக்கு போராடும் தகவல் கேட்டு மீண்டும் பதறியடித்துக் கொண்டு ஒவ்வொரு மருத்துவமனையாய் செல்கிறீர்கள். 12 பிராணவாயு சிலிண்டர்கள் மீண்டும் இரவலாக பெற்று வருகிறீர்கள். இதற்காக நான்குமுறை பயணம் மேற்கொள்ள வேண்டியிருக்கிறது.

இந்நிலையில் மனம் இளகிய பிராண வாயு வினியோகஸ்தர் ஒரு நிபந்தனையுடன் உருளைகளை தர முன்வருகிறார். மோடி சர்க்காரின் பணமில்லா வர்த்தகம் - காஷ்லெஸ் எகனாமி ஏற்கனவே கேலியான நிலையில், கையில் பணம் கொடுத்து பிராணவாயு உருளைகளை வாங்கிக் செல்ல சம்மதிக்கிறார்.

உண்மையிலேயே உங்கள் தாய், தந்தையர் அற்புதமானவர்கள் டாக்டர் கான் சாப். இவ்வளவு தாராளமனம் கொண்டவராக  உங்களை வளர்த்திருக்கிறார்கள்..! உடனுக்குடன் பத்தாயிரம் ரூபாய் சொந்த பணம் கொடுத்து, அதுவரையிலான போக்குவரத்து செலவுகள் எல்லாவற்றையும் ஏற்றுக் கொண்டு பிராணவாயு உருளைகளை நீங்கள் வரவழைத்திருக்காவிட்டால்... எங்கள் இளைய சிற்பிகளில் இன்னும் பலர் பரலோகம் சென்றிருப்பார்கள். எங்கள் தாய்மார்கள் ஆற்றாமையால் காலமெல்லாம் அழுதழுது புலம்பியிருப்பார்கள். எங்கள் ஆட்சியாளர்களோ வாக்குக்காக கிளிசரின் போடாமலேயே கண்ணீர் சிந்தியிருப்பார்கள்.

டாக்டர் கபீல் கானின் போற்றுதலுக்குரிய மனிதநேயப் பண்பை கண்டுக் கொள்ள முடியாமல், இந்நேரம், அநேகமாய் இந்திய ஊடகங்கள் அனைத்தும், பார்வையிழந்திருக்கலாம். செவிப்புலன் பறிபோய் இருக்கலாம். வாய்ப்பேச முடியாமையால் தடுமாறியிருக்கலாம். அதனால், தாங்களும், தங்களின் அரிய சேவையும், அவர்களின் உலகாயதப் புலன்களுக்கு படாமல் போயிருக்கலாம். ஆனால், அந்த சில மணி நேரத்தில் நீங்கள் பெற்றிருக்கும் மன நிம்மதியும், பெற்றோர்களிடமிருந்து பெற்ற ஆசிகளுக்கும், தங்களின் சகாக்களின் நெஞ்சார்ந்த பாராட்டுக்களும், அவற்றின் கனமும் வார்த்தைகளால் வடிக்க இயலாதவை டாக்டர்.

உண்மையிலேயே இவற்றையெல்லாம் நீங்கள் விளம்பரத்துக்காக செய்யும் அரசியல்வாதி இல்லை என்பதே உண்மை.

நீங்கள் சார்ந்த சமுதாயத்தின் இறந்த பெண்மணிகளின் சடலங்களை தோண்டியெடுத்து அவற்றை வன்புணர்ச்சிக்கு ஆளாக்குங்கள் என்று ஆக்ரோஷமாய் முழக்கமிட்டு, மதவாதம் அரசியல் கடிவாளத்தைக் கைப்பற்றிய அதே உத்தரப் பிரதேசத்தில்தான் நீங்களும் பணியில் இருந்தீர்கள்.

உங்கள் உணவு எது? உறைவிடம் எது? கல்வி எது? உணர்வுகள் எவை? என்று உங்கள் வீட்டு உள்ளறைகள் வரை அத்துமீறி நுழைந்து, மூஸா காலத்து பனீஇஸ்வேரலர் சமுதாயம் ஒடுக்கப்பட்டதுபோல, கடும் சட்டங்களால் ஒடுக்கிக் கொண்டிருக்கும் மதவாத சக்திகளின் மத்தியில்தான் அன்றாடம் நடந்தீர்கள். ஆனாலும், உங்கள் தனித்துவமும், ஆளுமையும் எவரும் உங்களை மிஞ்ச முடியாதளவு உயர்ந்தது என்பது எவ்வித சந்தேகமுமில்லை.


மாடுகளுக்குத் தரும் முக்கியத்துவத்தை மனிதர்களுக்கு தர மறுக்கிறது இந்த ஓட்டுக்கான ஆட்சி அதிகாரம். அப்படி மனிதர்களுக்கு முக்கியத்துவம் தந்திருந்தால்...

காராரும் வானத்தில் காணும் முழுநிலவே!
நீராரும் தண்கடலில் கண்டெடுத்த நித்திலமே!
ஆசை தவிர்க்கவந்த ஆணழகே சித்திரமே!
ஓசை யளித்துமலர் உண்ணுகின்ற தேன்வண்டே!
உள்ளம் எதிர்பார்த்த ஓவியமே என்மடியில்
பிள்ளையாய் வந்து பிறந்த பெரும்பேறே!
சின்ன மலர்வாய் சிரித்தபடி பால்குடித்தாய்
கன்னலின் சாறே கனிரசமே கண்ணுறங்கு!

என்று தாலாட்டுப்பாடி தூங்க வைக்க வேண்டிய மழலையரை தகுந்த மருத்துவ வசதிகள் இல்லாமல் பறிக் கொடுத்த தாய்மார்கள் இப்போது, ஒப்பாரி பாட வைத்துவிட்டார்களே நமது ஆட்சியாளர்கள்.

இனி, எதிர்கட்சிகளின் கூப்பாடுகள் விண்ணதிரும்..! முதல்வர் அய்யா ஆதித்யாநாத்தும் அவரது மதவாத கும்பல்களும் மற்றொரு பக்கம் மக்களை திசைத்திருப்ப எத்தனிப்பார்கள். மீண்டும் தீவிரவாதம் என்பார்கள். குண்டுகளை வெடிக்க வைப்பார்கள். இந்தியர் மனங்களை ஒட்ட வைக்க முயலும் அனைத்து முயற்சிகளையும் சீர்க்குலைப்பாரகள். நீங்களாகவே ஒரு மருத்துவரின் அரிய கடமையாய் கருதி, முன்னெடுத்து குழந்தைகளை காத்திருக்கும் முயற்சிகளைக்கூட திசைத்திருப்பி உங்கள் மீதே குற்றம் சுமத்தி தூக்கு மேடையிலேற்றினாலும் வியப்படைவதற்கு ஒன்றுமில்லை டாக்டர்..!

இந்த அனைத்து களேபரத்தின் மத்தியிலும், நல்லதொரு மனிதனை, மருத்துவ சேகவரை கண்ட மகிழ்ச்சி என் மனதில் பொங்கி பிரவாகிக்கிறது.

எப்போதும் கான்கள் உலகுக்கானவர்கள் அல்ல. மனித சேவையில் இறைவனைக் காண்பவர்கள் என்பது பாலூட்டும்போதே அன்னை ஊட்டியது என்று என்னால் உணர்ந்து கொள்ள முடிகிறது. பெருமைப்பட முடிகிறது டாக்டர்.

நீங்கள் நீடூடி வாழ்க என்று மனம் வாழ்த்துகிறது டாக்டர் கபீல் கான்.


பெருமையோடு,

இக்வான் அமீர்
மூத்த இதழியலாளர்.

(மடலுக்கான ஆதார இணைப்பு: http://www.dnaindia.com/india/report-gorakhpur-tragedy-meet-dr-kafeel-khan-the-hero-who-saved-the-lives-of-countless-children-2528035)

 Wednesday, August 9, 2017

ஆகச் சிறந்த வெகுமானம்வாழ்வியல் சோதனைகள் என்னும் முதல் தூண் நிலைக்கொள்ள இறைத்தொடர்புகள் என்னும் இரண்டாவது தூண் மிகவும் இன்றியமையாதது. அதாவது இறைவனுக்கும், இறையடியானுக்கும் இடையேயுள்ள உறவை, பிணைப்பை வலுப்படுத்துவதுதான் இரண்டாவது தூண் எனப்படுகிறது.~இக்வான் அமீர்.
 
'''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''
பொறுமை என்னும் அருங்குணம் ஓர் இறைநம்பிக்கையாளன் வாழ்வில் அடித்தளம் எனலாம். இதுவே ஒவ்வொரு நம்பிக்கையாளனின் இம்மை, மறுமை எனப்படும் ஈருலக வாழ்விலும் வெற்றியைப் பெற்றுத் தருகிறது. அதனால், இறைநம்பிக்கையாளர்கள் பொறுமையை தனது வாழ்வை முன்னெடுத்துச் செல்ல உதவும் ஒளிவிளக்காக எடுத்துக் கொள்ள வேண்டும்.

வாழ்வின் கணம்தோறும் எதிர்படும் பிரச்னைகளில் சில நேரம் வெல்லலாம். பல நேரம் தோல்வியுறலாம். அந்த தோல்விகளை வெற்றிகளாக்க பொறுமை என்னும் அருங்குணத்தால்தான் எதிர்கொள்ள வேண்டியிருக்கும். அதனால், எல்லாவிதமான கஷ்டங்களையும், இழப்புகளையும் சகித்துக் கொள்ள இறைநம்பிக்கையாளர் கற்றுக் கொள்ள வேண்டும். ஒருகாலும் பொறுமையை இழந்து அவரவர் மரணக்குழியை அவரவர் கரங்களாலேயே பறித்துக் கொள்ளக் கூடாது. பொறுப்புகளை எதிர்கொண்டு அவற்றை நிறைவேற்றுவதில் தயக்கம், வாழ்வியல் யதார்த்தத்தை உள்வாங்குவதில் ஏற்படும் குழப்பம், தோல்வியைக் கண்டு மனதில் ஏற்படும் அச்சம் இவை எக்காரணம் கொண்டும் பொறுமையை இழக்கச் செய்து ஓர் இறைநம்பிக்கையாளனை வன்முறைப் பக்கம் திசைத் திருப்பக் கூடாது.

பொறுமை எனப்படும் பெரும் பண்பு, சோதனைகள், இறைநம்பிக்கையின் ஆழமான வெளிப்பாடு என்னும் இரண்டு தூண்கள் மீது நிலைகொண்டுள்ளதாக இஸ்லாம் தெளிவாக எடுத்துரைக்கிறது.

கருணையுள்ள இறைவன் இந்த உலகியல் அமைப்பை வெறும் ஆனந்தம், நிம்மதியும் கொண்டதாக படைக்கவில்லை. சோதனைகள் நிரம்பிய களமாகவே படைத்தான். ஒன்றிலிருந்து மற்றொன்று என்று ஒன்றுக்கு மற்றொன்று மாற்றமான புதுபுது சோதனைகள் மனிதனைப் பின் தொடர்கின்றன. இறைவனின் பேரருளால் சுலைமான் (சாலமன்) நபி பிரமாண்டமான ஒரு சாம்ராஜ்ஜியத்தைப் பெற்றபோது, "இறைவன் ஆட்சி, அதிகாரம் மூலமாக தன்னை சோதிக்க முற்பட்டுவிட்டதாக" தெளிவாக உணர்ந்தார் அவர்.

பரந்து, விரிந்த சாம்ராஜ்ய சிம்மாசனத்தில் அமர்ந்தபோது, சுலைமான் நபி தெளிவாக சொன்னதை திருக்குர்ஆன் எடுத்துரைக்கிறது இப்படி: "இது என் இறைவன் நான் அவனுக்கு நன்றி செலுத்துகின்றேனா? இல்லையா? என்று என்னைச் சோதிப்பதற்காக என் மீது பொழியப்பட்ட அருட்கொடையாகும். எவன் இறைவனுக்கு நன்றி செலுத்துகின்றானோ, அவன் தனக்கே நன்மை செய்து கொள்கின்றான். எவன் நன்றி மறக்கிறானோ அவன் தனக்கே தீங்கு தேடிக் கொள்கின்றான்"

வாழ்வியல் சோதனைகள் என்னும் முதல் தூண் நிலைக்கொள்ள இறைத்தொடர்புகள் என்னும் இரண்டாவது தூண் மிகவும் இன்றியமையாதது. அதாவது இறைவனுக்கும், இறையடியானுக்கும் இடையேயுள்ள உறவை, பிணைப்பை வலுப்படுத்துவதுதான் இரண்டாவது தூண் எனப்படுகிறது.
 
ஒரு மனிதன் இறைவன் மேல் கொண்டுள்ள நம்பிக்கை ஆழமானதா? மேம்போக்கானதா என்பதை சோதனைகள் மூலம்தான் தெரிகிறது. இதைக் குறித்து திருக்குர்ஆன் அழகிய சொல்லோவியமாய் வரைகிறது: "நாங்கள் நம்பிக்கைக் கொண்டோம் என்று கூறுவதால் மட்டும் இவர்கள் விட்டுவிடப்படுவார்கள். மேலும், அவர்கள் சோதனைக்குள்ளாக்கப்பட மாட்டார்கள் என்று மக்கள் எண்ணிக் கொண்டிருக்கிறார்களா என்ன? உண்மையில், இவர்களுக்கு முன் வாழ்ந்தவர்கள் அனைவரையும் நாம் சோதித்தே இருக்கிறோம். உண்மையாளர்கள் யார்? பொய்யர்கள் யார் என்று இறைவன் அவசியம் கண்டறிய வேண்டியுள்ளது."

இந்த உலக வாழ்க்கை ஒரு சோதனைக்களமாக உள்ளபோது, நல்லவர், தீயவர் என்று மனிதரின் இருவேறு தகுதிகள் பகிரங்கமாக வெளிப்படவும், நன்மைக்கு நன்மையும், தீமைக்கான தீமையும் பகிரங்கமாக பெறவுமே இந்த முடிவு.

உண்மையில், பொறுமை ஒரு வெகுமதி என்கிறார் நபிகளார் இப்படி: "பொறுமையை முறைப்படுத்திக் கொள்பவனுக்கு இறைவன் பொறுமையை வழங்குகின்றான். இந்த பொறுமை வழங்கப் பெற்றவரைவிட ஆகச் சிறந்த வெகுமானம் பெற்றவர் வேறு யாருமில்லை!"

'''''''''''''''''''''''''''''''''''''''
தி இந்து, ஆனந்த ஜோதி இணைப்பில் இன்று (10.08.2017) பிரசுரமான எனது கட்டுரைஅதிகரித்துவரும் சூழல்மாசு:


"இனியும் நம்மாலே தாக்குப் பிடிக்க முடியாதுடா சாமி!"

அரசியல் நாயகர்கள் கைவிடும்போது.. வேறு என்னதான் செய்வது?


காற்று அதிகளவு மாசு அடைவது மிகை காற்று மாசு எனப்படுகிறது. மிகை காற்று மாசு ஏற்பட்டால், மாசு துகள்கள் நுரையீரலில் நிரம்பிவிடுகிறன. இதனால், நாம் உயிர் வாழ இன்றியமையாத பிராணவாயுவான ஆக்சிஜனை பிரித்தெடுக்கும் திறன் நுரையீரலுக்கு குறைந்துவிடுகிறது. அத்துடன் உடலுக்கு சீராக ஆக்சிஜன் செல்வது பாதிக்கப்பட்டு மூச்சுத்திணறல் ஏற்படும். ஒவ்வாமையால் சளி பிடிக்கும். நாளடைவில் மாசு நிறைந்த காற்றை வடிகட்டும் திறனை நுரையீரல் இழந்துவிடும். இதே நிலை தொடரும்போது, நுரையீரல் சுருங்கி, நாட்பட்ட மூச்சுக்குழல் அடைப்பு நோய், ஆஸ்துமா ஆகிய நோய்கள் ஏற்படுகின்றன. ~ இக்வான் அமீர்
''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''
வடசென்னை மணலியில் தொடர்ந்து காற்று மாசு அதிகரித்து வருவதால், அந்தப் பகுதியில் வாழும் மக்கள் சுவாச நோய்களால் பாதிக்கப்படும் ஆபத்து உள்ளது.

சென்னையில் தொழிற்சாலைகள் நிறைந்த பகுதி வடசென்னை. அதில் மணலி, இரசாயன ஆலைகளின் கேந்திரமாக உள்ளது. தொழிற்சாலைகள் மற்றும் அதனால் ஏற்படும் கனரக வாகன போக்குவரத்தால், அப்பகுதியில் அண்மைக் காலமாக காற்று மாசடைவது அதிகரித்து வருகிறது. http://tamil.thehindu.com/tamilnadu/article19443454.ece இப்பகுதியில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

காற்றில் மிதக்கும் 2.5 மைக்ரோ கிராம் அளவுள்ள நுண்ணிய துகள்கள், ஒரு கன மீட்டர் காற்றில் எவ்வளவு கலந்துள்ளன என்பதன் அடிப்படையில் காற்று மாசு கணக்கிடப்படுகிறது. ஒரு கன மீட்டர் காற்றில் 60 மைக்ரோ கிராம் வரை நுண்ணிய துகள்கள் இடம்பெற்றிருப்பது, அனுமதிக்கப்பட்ட அளவாகும்.

ஆனால் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் மணலியில் தொடர்ந்து 7 நாட்கள் காற்றில் அதிக மாசு கலந்துள்ளது பதிவானது. கடந்த மாதம் 17, 18 ஆகிய தேதிகளில் அதிகபட்ச சராசரி அளவாக, காற்றில் உள்ள துகள்களின் அளவு, முறையே 362, 361 மைக்ரோ கிராமும், அதே நாட்களில் அதிகபட்சமாக முறையே 417, 500 மைக்ரோ கிராமும் பதிவாகியுள்ளது.

“இப்பகுதியில் தொழிற்சாலைகள் இயங்கும்போது, சாப்பிடும் உணவில் கரித்துகள்கள் விழுந்து கலக்கின்றன. இதனால், ஆஸ்துமா, மூச்சுத் திணறல் இன்னும் தீராத சளித்தொல்லைகளால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். காற்று மாசுவை தடுக்க அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை”- அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் இப்படி புலம்புகின்றனர்.

“பல ஆண்டுகளாக மணலி மற்றும் அதன் சுற்றுப்புறங்கள் காற்று மாசுவால் பாதிக்கப்பட்டுள்ளது. தொழிற்சாலைகளால் ஏற்படும் காற்று மாசுவை தடுக்க மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் நட வடிக்கை எடுப்பதே இல்லை. தற்போதுள்ள நிலை, விஷவாயு நிரப்பிய அறையில் பொதுமக்கள் வசிப்பதற்கு சமமாக உள்ளது. எனவே காற்று மாசுக்கான காரணத்தை மாசு கட்டுப்பாட்டு வாரியம் ஆராய்ந்து, அதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்கிறார் சூழலியல் ஆர்வலர் நித்தியானந்த் ஜெயராமன்.

இந்தக் குற்றச்சாட்டுகளுக்கு மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் ஆயத்த பதில் அளிப்பதற்கு பதிலாக உருப்படியான நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும்.

சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பணனோ, “மணலியில் காற்று மாசுபடுவதை ஆய்வு செய்து உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும்” என்கிறார்.

காற்று அதிகளவு மாசு அடைவது மிகை காற்று மாசு எனப்படுகிறது. மிகை காற்று மாசு ஏற்பட்டால், மாசு துகள்கள் நுரையீரலில் நிரம்பிவிடுகிறன. இதனால், நாம் உயிர் வாழ இன்றியமையாத பிராணவாயுவான ஆக்சிஜனை பிரித்தெடுக்கும் திறன் நுரையீரலுக்கு குறைந்துவிடுகிறது. அத்துடன் உடலுக்கு சீராக ஆக்சிஜன் செல்வது பாதிக்கப்பட்டு மூச்சுத்திணறல் ஏற்படும். ஒவ்வாமையால் சளி பிடிக்கும். நாளடைவில் மாசு நிறைந்த காற்றை வடிகட்டும் திறனை நுரையீரல் இழந்துவிடும். இதே நிலை தொடரும்போது, நுரையீரல் சுருங்கி, நாட்பட்ட மூச்சுக்குழல் அடைப்பு நோய், ஆஸ்துமா ஆகிய நோய்கள் ஏற்படுகின்றன.

இதைத் தவிர்க்க,

• மக்கள் வசிப்பிடங்களை மாற்றியாக வேண்டும் அல்லது

• வீட்டின் வாயில், ஜன்னல் கதவுகளை எப்போதும் மூடி வைக்க வேண்டும்.

• வசதி உள்ளோர் வேண்டுமானால், காற்று சுத்திகரிப்பு கருவிகளை பயன்படுத்தலாம்.

எப்போதும் பாவப்பட்ட ஜனங்களான வடசென்னைவாசிகள் வழக்கமான மௌனத்தில் கரைந்து நிற்காமல் தங்களால் இயன்ற இந்த செயலையாவது செய்ய வேண்டும். அது வடசென்னையை மரங்களால் நிரம்பிய வனங்களாக்கிவிடுவது.

வேறு என்னதான் செய்வது? அரசும், நமது அரசியல் நாயகர்களும் நம்மை காக்காதபோது இயற்கையின் காவலர்களான மரங்களின் துணை நாடுவதை தவிர நமக்கு வேறு வழியே இல்லை.

மரம் மனிதர்களின் உயிர்த்தோழன் என்பது இதற்குதான்..!


Tuesday, August 8, 2017

யோகாவும், உச்ச நீதிமன்ற தீர்ப்பும்:''மத்திய அரசே இது குறித்து முடிவெடுக்க வேண்டும். பள்ளிகளில் என்ன கற்பிக்க வேண்டும் என்று சொல்ல எங்களுக்கு உரிமை இல்லை. அது எங்களின் வேலையும் இல்லை. எங்களால் எப்படி வரையறை செய்ய முடியும்?'' 'பள்ளிகளில் என்ன கற்பிக்கப்பட வேண்டும் என்பது அடிப்படை உரிமை கிடையாது'' என்றும் நீதிபதிகள் கூறி, மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர். 

நாடு முழுவதும் பள்ளிகளில் மாணவர்களுக்கு யோகாவை கட்டாயப் பாடமாக்குவது குறித்த மனுவை உச்ச நீதிமன்ற நீதிபதி எம்.பி.லோகுர் தலைமையிலான அமர்வு விசாரித்து மனுவைத் தள்ளுபடி செய்து அளித்த தீர்ப்பின் போது.
-

சமூக ஊடகங்களும், நமது பொறுப்புகளும்..!திங்களன்று உ.பி. காஸியாபத்தில் நடந்த ஒரு நிகழ்வை ஹாஜிக்கள் தாக்கப்பட்டதாக படத்துடன் தவறான தகவல் ஒன்றை முகநூலில் சிலர் பரப்பியிருந்தனர். அதன் உண்மை என்னவென்று அறியாமல் மெத்தப் படித்த சிலரும், அறிஞர் பெருமக்கள் சிலரும் பின்னூட்டமிட்டிருந்தனர். தவறான அந்த செய்திக்கு விருப்பம் தெரிவித்தனர் சிலர். இன்னும் சிலரோ சபித்திருந்தனர். >>> இக்வான் அமீர் <<<

''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''

நண்பர்களே!

முகநூலும் அவற்றின் பிற இணைப்புகளாய் முக்கியமாக விளங்கும், டிவிட்டர், யுடியூப் போன்றவையும் நமக்கு இலவசமாக கிடைத்துள்ள மிகச் சிறந்த சமூக ஊடகங்கள். ATM போல உடனடியாக பயன்பாட்டுக்கான சாதனங்கள். நடப்புச் செய்திகளை, நிகழ்வுகளை, கருத்துக்களை பகிர கிடைத்த அற்புதமான மின்னணு ஊடகங்கள் இவை.

ஆட்சி அதிகாரத்தை, அரசியல் அவலங்களைத் தோலுரித்துக் காட்ட கிடைத்திருக்கும் நல்லதொரு சந்தர்ப்பம். அச்சு ஊடகங்களையும், மின்னணு செய்தி ஊடகங்களையும் திகைக்க வைத்து அவர்களின் பாரபட்சத்தை தோலுரித்துக் காட்ட கிடைத்துள்ள அரிய வாய்ப்பு.

'மார்க் தம்பி' லட்சக்கணக்கான பயனாளர்களுக்கு செய்துதந்துள்ள நல்லதொரு வசதிக்கு உண்மையிலேயே நாம் அவருக்கு நன்றி தெரிவிக்க வேண்டும்.

நண்பர்களே, அண்மையில் ஒளிப்படங்களுக்கான ஒரு பயணத்தில் சூழலியல் ஆர்வலரான நண்பர் Yukaanthan Yuva யுகாந்தனுடன் பழவேற்காடு சென்றுவிட்டு அங்கிருந்து மீஞ்சூர் வழியே திரும்பிக் கொண்டிருந்தோம்.

மீஞ்சூரில் ரயில்வே கேட் ஒன்றுள்ளது. அந்த கேட் மூடிய நிலையில் பாதசாரிகளும், இரு சக்கர வாகனமோட்டிகளும் அத்துமீறி அந்த ஆபத்துக்குள் நுழைவதால் அடிக்கடி ரயில் விபத்துக்கள் நடக்கும் பகுதி அது.

நாங்கள் சென்றிருந்தபோதும், ரயில்வே கேட் மூடியிருந்தது. இருசக்கர வாகனமோட்டிகள் சகஜமாக குறுக்குவழியில் ரயில் பாதையை கடந்து கொண்டிருந்தார்கள். நான் அவர்களை படமெடுக்க ஆரம்பித்தேன். "ஏன் படமெடுக்கிறீர்கள்?" - என்று அதட்டலான குரல் ஒன்று பக்கத்தில் கேட்க, திரும்பிப் பார்த்தால் காவல்துறை அதிகாரி ஒருவர் புல்லட்டில் மிடுக்குடன் அமர்ந்திருந்தார்.

"ஓ..! அதிகார வர்க்கத்தின் ஆர்ப்பரிப்பு!" - என்று மனதுக்குள் சொல்லிக் கொண்டே, "நான் பத்திரிகையாளன். நான் படமெடுப்பதில் என்ன பிரச்னை உங்களுக்கு?" - என்று கேட்டேன்.

"காவல்துறை அதிகாரி முன்னிலையில் மூடிய கேட்டுக்குள் மக்கள் வாகனங்களில் நுழைவதை படத்துடன் போட்டுடப் போறீங்க சார்?" - என்றார் அவர்.

"அப்படியானால், அத்துமீறும் இவர்களை தடுத்து நிறுத்தி இரண்டு அறை விட வேண்டியதுதானே?' - என்றேன் நான் சிரிப்போடு.

"நீங்க வேற சார். நான் அடிக்க போய்... என் பின்னாலிருந்தே யாராவது செல்போனில் வீடியோ எடுத்து அப்லோடு செய்து என் வேலைக்கு உலை வைக்கவா? நல்லாயிருக்கே நீங்க சொல்றது!"

நான் விளையாட்டாக சொன்னதை அவர் சீரியஸாக எடுத்துக் கொள்ளாவிட்டாலும், விளைவுகளை உணர்ந்தேயிருந்தார்.

அவ்வளவு வலிமையான ஊடகங்களின் ஒருவிதமான எஜமானர்கள் நாம் என்பதை விளக்கவே இந்த நிகழ்வை நான் சொல்ல வேண்டியிருந்தது நண்பர்களே!

அறிவியல் நமக்குத் தந்துள்ள இந்த நல்வாய்ப்பை சரியாக, சீரிய முறையில் பயன்படுத்திக் கொள்வது உத்தமம்.

மாறாக,

>>> மனம் போன போக்கில் பதிவேற்றம் செய்வதும்,

>>> கச்சைக் கட்டிக் கொண்டு சண்டைக்கு வருவதும்,

>>> அடுத்தவர் கருத்தை காது கொடுத்து கேட்க மறுப்பதும்,

>>> அவை உண்மையாக இருப்பினும் சமூக நல்லிணக்கத்தை சீர்க்குலைக்கும் செய்திகளை பரப்புவதும்,

>>> எவ்வித ஆதாரமும் அற்ற சமூக பதட்டத்தை ஏற்படுத்தும் வதந்திகளை செய்திகளாக்குவதும்

ஒரு காலும் விரும்பத்தக்கதல்ல.

உங்களுக்கு மொழி புரியாவிட்டால் தெரிந்தவரிடம் அந்த இணைப்புகளை அனுப்பி செய்தி என்னவென்று தெரிந்து கொள்ளுங்கள்.

உங்களுக்கு மொழி தெரியாவிட்டால்... கற்றவரிடம் உதவியோடு அந்த மொழியைக் கற்றுக் கொள்ளுங்கள்.

கூடுமானவரை உங்கள் செய்திகளுக்கு ஆதாரத்துடன் இணைப்புகளை இணையுங்கள்.

நீங்கள் பரப்பும் பொய்யான தகவல்களால் ஏற்படும் விளைவுகளுக்கு சமூக ரீதியாகவும், ஆத்மார்த்த ரீதியாகவும் நீங்கள்தான் பொறுப்பு; பதில் சொல்ல வேண்டியவர் என்பதை நினைவில் வையுங்கள்.

திங்களன்று உ.பி. காஸியாபத்தில் நடந்த ஒரு நிகழ்வை ஹாஜிக்கள் தாக்கப்பட்டதாக படத்துடன் தவறான தகவல் ஒன்றை முகநூலில் சிலர் பரப்பியிருந்தனர். அதன் உண்மை என்னவென்று அறியாமல் மெத்தப் படித்த சிலரும், அறிஞர் பெருமக்கள் சிலரும் பின்னூட்டமிட்டிருந்தனர். தவறான அந்த செய்திக்கு விருப்பம் தெரிவித்தனர் சிலர். இன்னும் சிலரோ சபித்திருந்தனர்.

அந்த செய்தியின் உண்மை சுருக்கமாக இதுதான்:

உ.பி. முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவால் காஸியாபாத்தில் துவக்கப்பட்ட அஃலா ஹஜரத் ஹஜ் ஹவுஸ் கட்டிடப் பணிகள் முழுமையாக நிறைவடையவிருக்கும் நிலையில், அதை உடனே முஸ்லிம்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியின் சிறுபான்மை அமைப்பினர் நஸீம் கான் தலைமையில் திங்கட்கிழமை ஹஜ் ஹவுஸ் முன்பாக தர்ணாவில் ஈடுபட்டனர்.

அப்போது காவல்துறையினருடன் ஏற்பட்ட மோதலில் இரு தரப்பினருக்கும் காயம் ஏற்பட்டது.

கல்வீச்சில் ஈடுபட்டதாக சிலர் கைது செய்யப்பட்டனர்.

நிலைமை தற்போது கட்டுக்குள் இருப்பதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. http://indianexpress.com/…/ala-hazrat-haj-house-locals-pol…/

இந்திய அரசியலமைப்பில் எதிர்படவிருக்கும் நாட்கள் கடுமையானவை. அவற்றை எதிர்கொள்ள இந்த நாட்டில் அமைதியையும், நல்லிணக்கத்தையும் விரும்பும் ஒவ்வொருவரும் பொறுமையுடனும், விவேகத்துடனும், சாதுர்யத்துடனும், ஒற்றுமையோடும் பிரச்னைகளை அணுக முன்வர வேண்டும்.

அமைதியை தொலைத்துவிட்ட எந்தவொரு சமூகத்திலும் ஆக்கப்பூர்வமான முன்னேற்றங்கள் ஏதுமிருக்கா என்பதை அனைவரும் நினைவில் கொள்க!


Sunday, August 6, 2017

தோழமையோடு நான்காக்கைகள் மிகச் சிறந்த அறிவு கூர்மை உள்ளவை. இந்த உலகில் முதன் முதலில் சிந்திய மனித படுகொலையை கண்ட சாட்சி அவை. ஆதி மனிதனுக்கு சவ அடக்க முறையை கற்றுக் கொடுத்த ஆசான்கள் அவை - இக்வான் அமீர்

வீட்டைச் சுற்றியும் ஏழு தென்னைகள், அதில் ஒரு தென்னையை பற்றிப் பிடித்து வளர்ந்து நிற்கும் கம்மார் வெற்றிலைக்கொடி. கிணற்றருகே நெடிது வளர்ந்து காய்ப்புக்கு வந்திருக்கும் ஒரு புளிய மரம். வீட்டுக்குள்ளேயே வளரந்து நிற்கும் கொய்யா. முதல் மாடியை தொட்டுவிட்ட மூங்கில். எனது ஆயுளில் பல முறை முயன்றும் வளராமல் தற்போது வளர்ந்து காய்ப்புக்கு தயாராக இருக்கும் மூன்று முருங்கை மரங்கள். வீட்டுக்கு தேவையான முட்டைகளுக்காக கூண்டு வளர்ப்பு முறையில் சில நாட்டு கோழிகள். மாடியில் பலவிதமான மலர்கள், மாதுளை, மூலிகைச் செடிகள் கொண்ட நந்தவனம். அந்த நந்தவனத்தின் ஒரு பகுதியில் காதல்பறவைகள், மறுபுறம் புறாக்கள் என்று இயற்கை எழிலோடான எனது குடில்.

மரங்கள் நிரம்பிய வீடாகையால், பறவைகள், அணில் பிள்ளைகள், சில நேரங்களில் அதிரடியாய் வருகைத் தரும் குரங்குகளுக்கு பஞ்சமேயில்லை. அதிலும் குறிப்பாக, காக்கைகளால் நிரம்பிய ஒரு பகுதி அது. வளர்ப்பு பறவைகளின் உணவு சிதறல்கள், குடிநீர் வசதி என்று அருகிலேயே அனைத்தும் கிடைப்பதால்... அதிலும் ஜிஎஸ்டி போன்ற எந்த வரி தொல்லைகளும் இல்லாததால் நிம்மதியாக தென்னை மரங்களில் குடும்பம் நடத்தும் காக்கைகள்.

ஏறக்குறைய மரம், செடி, கொடிகளோடு நில்லாமல் பறவைகள், அணில், பூச்சிகள் போன்ற சக உயிரிகளுடன் ஒரு புரிந்துணர்வும், இணக்கமும் எப்போதும் உண்டு. அவற்றின் எல்லை மீறல்களை மறந்து மன்னிப்பதும் உண்டு.


இத்தகைய ஒரு சூழலில்தான் தென்னை மரமொன்றில் காக்கைகள் குஞ்சு பொரித்திருந்தன. மாடியில் பயபாடுக்கான குழாய் அருகே இருந்த தென்னைமரம் அது.

காக்கைகள் மிகச் சிறந்த அறிவு கூர்மை உள்ளவை. இந்த உலகில் முதன் முதலில் சிந்திய மனித படுகொலையை கண்ட சாட்சி அவை. ஆதி மனிதனுக்கு சவ அடக்க முறையை கற்றுக் கொடுத்த ஆசான்கள் அவை.

அத்தகைய கூர்மதி மிக்க காக்கைகள்தான் குஞ்சு பொறித்திருந்தன. குறிப்பிட்ட அந்த மரமருகே நான் செல்ல விடாமல் தடுத்தன. தலைக்கு மேலாக பறந்து கொத்துவது போல என்னை எச்சரிக்கவும் செய்தன. ஒருமுறை எல்லை மீறி எனது முகத்தில் கழியவும் செய்தன.

காக்கைகளின் தாய்மையுணர்வை நான் உணர்ந்து கொள்ளாவிட்டால் வேறு யார் அறிந்து கொள்வர்?

தலைக்கு மேலாக தொங்கிக் கொண்டிருந்த தென்னம் ஓலையில், சில அடி தொலைவில் அமர்ந்து கொண்டு என்னை எச்சரித்து கொண்டிருந்த காக்கையை மிக அருகில் இருந்து எடுத்த படம் இது. சிறு அசைவுகளும் காக்கைகளை எச்சரித்துவிடும். ஆனால், என் மீது கொண்ட நம்பிக்கையால் மிக அருகில் அமர்ந்திருந்த அந்த தாய் காகத்தின் துடிப்பை, பதபதைப்பு உணர்த்தவே நான் இந்தப் படத்தில் முயன்றிருக்கிறேன்.

பதற்றம் வேண்டாம் தாயே...! நான் உனது தோழன்.!

Saturday, August 5, 2017

சீமானின் ஆதரவாளனா நான்?

அரசியல் அதிகாரம் ஒரு சாக்கடை.... சாக்கடை என்று மூக்கு சுளிக்க வைக்கும் ஆன்றோர் எனப்படும் கோழைகள், இயலாதோர் வாழ்ந்துவரும் சமூக அமைப்பில்... அரசியல் அதிகாரம் வேண்டாம்..! என்று சுயநல விருட்சத்தின் போதகர்களான இவர்கள் சுவாசிக்க வைத்த நச்சு காற்றின் சுவாசக் குழாய்களை பிடுங்கி எறிந்தவர் சீமான். அதிகாரமே அனைத்தின் உயிர் வாழ்க்கையும்.. அதிகாரம் கைப்பற்றவே என்று நெஞ்சுயர்த்தி உண்மையை உரைக்கும் இளம் தலைவன்தான் சீமான். - இக்வான் அமீர்

''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''

சீமானின் ஆதரவாளனா நான்? இந்த கேள்விக்கு ஒற்றை வரியில் பதிலளித்துவிட்டு யாராலும் கடந்துவிட முடியாது.

ஏனெனில் சீமான் நிகழ்கால அரசியல் நிர்பந்தங்களால் பிறந்த தமிழினக்குழந்தை. சமகால இந்திய அரசியல் வானில் தவிர்க்க இயலாத சக்தியாக வளர்ந்து வரும் இளந்தளிர். மக்களை மட்டுமல்லாமல், மண்ணையும், மலையையும், மரத்தையையும், செடி, கொடிகள், பூச்சிகள் என்று மனிதன் உயிர் வாழ உதவும் சக உயிரிகளையும் நேசிப்பவர். அவை உயிர் வாழ உலகளாவிய உரத்து குரல் கொடுப்பவர்.

இது சாதாரணமான நிகழ்வல்ல. உலக அதிகாரத்தை தங்கள் வலிமையால் மெலியோர் மீது திணித்து வல்லாண்மை செய்து கொண்டிருப்போருக்கு எதிரான கலகக் குரல் என்பேன் நான்.

அதனால், சீமான் என்னும் இந்த குழந்தை தளிர் நடைபோட்டு வளர்ந்து நிற்காதா? செப்பனிடப்பட்ட ஓர் அழகிய பாதையில் நடக்காதா? குறுகிய இனவாதத்திலிருந்து சற்றே விலகி எல்லா இனம் சார்ந்த உரிமைகள் போராடும் தலைமைக்கு உயர்ந்து நிற்காதா என்று ஓராயிரம் ஆசைகளோடு, கனாக்களோடு காத்திருக்கும் தாயன்பு போன்றது சீமான் குறித்த எனது நிலைபாடும்.

"அதிகாரம் என்பது ஒரு வாழ்வியல்!" - அரசியல் சம்பந்தமாக ஒற்றை வரியில் மிக மிக அழகாக சீமான் எடுத்துரைக்கும் விரிவுரை இது. எந்த இந்திய அரசியல் தலைவரும் இதுவரையிலும் எடுத்துரைக்காத ஒரு புதிய கண்ணோட்டம்.

அரசியல் அதிகாரம் ஒரு சாக்கடை.... சாக்கடை என்று மூக்கு சுளிக்க வைக்கும் ஆன்றோர் எனப்படும் கோழைகள், இயலாதோர் வாழ்ந்துவரும் சமூக அமைப்பில்... அரசியல் அதிகாரம் வேண்டாம்..! என்று சுயநல விருட்சத்தின் போதகர்களான இவர்கள் சுவாசிக்க வைத்த நச்சு காற்றின் சுவாசக் குழாய்களை பிடுங்கி எறிந்தவர் சீமான். அதிகாரமே அனைத்தின் உயிர் வாழ்க்கையும்.. அதிகாரம் கைப்பற்றவே என்று நெஞ்சுயர்த்தி உண்மையை உரைக்கும் இளம் தலைவன்தான் சீமான்.

வெறும் ஓட்டுக்களுக்காக எதையும் சகித்துக்கொள்ளும், காம்பரமைஸ் செய்து கொள்ளும் ஒரு சமூக அதிகார அமைப்பில், நான் ஓட்டுக்கானவன் அல்ல. நாட்டுக்கானவன்! என்று ஓட்டு போட்டால் போடு.. போடாவிட்டால் போ..! ஆனாலும் நான் உனக்காக குரல் எழுப்பிக் கொண்டிருப்பவன் என்று வாக்குச் சீட்டுக்கு சோரம் போக விரும்பாத இளம் தலைவன் சீமான்.

அதேபோல, இந்திய அரசியல் அமைப்பில் சில எதார்த்தங்களைத் தாண்டி சீமான் கற்பனையான ஒரு கோட்டைக்குள் தன்னையும், தனது ஆதரவாளர்களையும் சிறைப்படுத்திவிடக் கூடாது என்று பெருத்த கவலையோடு இருப்பவன் நான்.

இந்திய அரசியலமைப்பு என்னும் கட்டுக்கடங்காத வரையறைகளுக்குள் குற்றவாளிகள் நிரபராதிகளாவதும், நாட்டின் உயர் பதவிகளை அலங்கரிப்பதும், அப்பாவிகள் காலமெல்லாம் சிறைப்படுவதும் அல்லது உயிர் பறிக்கப்படுவதும் யதார்த்தம். வரலாறாகிப் போன துரதிஷ்டம். இந்த துரதிஷ்டத்தின் ஓர் அங்கமாக சீமானும் ஆகிவிடக் கூடாதே! அவரது மென்னி நெறிக்கப்படக் கூடதே என்று அனுதினமும் கவலைப்பட்டுக் கொண்டிருப்பவன்!

ஓநாய்கள் வனங்களில் வேட்டையாடும் காலம் போய் நாடு நகரங்களில் குரூர பசியுடன், சிவந்த கண்களுடன், வாய்த் திறந்த அகோரமான பற்களுடன் வேட்டையாட அலைந்து கொண்டிருக்கும் காலமிது.

ஒரு சொல் தேச துரோகியாக்கலாம். ஒரு பார்வை குண்டர் சட்டத்தில் தள்ளலாம். தும்மினாலும், இருமினாலும் எந்தவொரு சட்டமும் பாயலாம் என்ற நிலையில் அரசியல் நிகழ்வுகள் நடந்து கொண்டிருக்கும் காலத்தில் சீமான் கற்பனையில் திளைத்துவிடக் கூடாதே என்ற யதார்தத்தில் பதைக்கிறேன் நான்.

சிங்கையும், சுவீடனும் இன்னும் சீமான் சுட்டிக் காட்டி பேசும் சில அயலகங்களும் சுயநலமற்ற மக்களால் நிரம்பிய தேசங்கள். அங்கு ஒவ்வொரு தனி மனிதனின் உரிமைகளும், சுதந்திரமும், பொறுப்புகளும், கடமைகளும் முக்கியத்துவம் வாய்ந்தவை. அவற்றை தேசப்பிதாவை கொன்றொழித்த ஒரு நாட்டின் குடிமக்களுக்கும், அந்த கொலைக்காரனை போற்றுவதை சகித்துக் கொண்டிருக்கும் அரசியலமைப்பைக் கொண்டாடும் மக்களால் நிரம்பிய நாட்டுக்கும் பொருத்தி பேசுவது சரியாகாது.

இந்திய இறையாண்மைக்குள் தனிநாடு, தனி சட்டங்கள், தமிழக மீனவர் பிரச்னைகள், சர்வதேச சட்டங்களை புறக்கணித்து இன எதிரிகளை ஆயுதங்களால் மட்டுமே எதிர்கொள்ள முடியும் என்று மேடைதோறும் முழங்கும் சீமானின் உரைகள், இவைகளைத் தாண்டி புலிகள் தலைவர் பிரபாகரனோடானான ஆயுதப் பயிற்சிகள் இவைகள் எல்லாமே இவற்றின் விளைவுகள் எல்லாமே சீமான் உணர்ச்சிப் பிழம்புகளால் யதார்த்தங்களைப் புறந்தள்ளப் பார்க்கிறாரோ என்று அச்சுறுத்துகின்றன. பேச்சைக் குறைத்து, செயலாக்கத்தை அதிகரிக்க வேண்டிய தருணமிது.

ஆனாலும், சீமான் எல்லா பலவீனங்களிலிருந்தும் செப்பனிடத்தக்க எளிய தலைவர் என்ற நம்பிக்கை ஆழமாக உள்ளது.

எல்லா எதிரிகளையும், வீழ்த்தி இந்த நாட்டை அன்னியனிடம் அடிமைப்படுத்திட அகோர பசியுடன் காத்திருக்கும்...

நவீன தகவல் தொடர்பு கவசங்களையெல்லாம் தன் வசப்படுத்தி எதிரிகளை துவம்சம் செய்யக் காத்திருக்கும்...

ஒரு பாசிஸ ஆக்டோபஸ் வீழ்த்தப்பட வேண்டும் என்பது மிகவும் எளிய செயல் அல்ல. வெறும் உரை வீச்சால் மட்டும் அது சாத்தியமானது அல்ல.

வெட்ட வெட்ட வீரியமாய் துளிர்விடும் ஒரு விருட்சமாய் தன்னலமற்ற தொண்டர் படைகளை உருவாக்குவது மிகவும் முக்கியம். அந்த இளம் படையினரோ அறிவாற்றலாலும், தங்களின் உயரிய ஆளுமைகளாலும், அளவற்ற அர்ப்பணிப்புகளாலும் மக்கள் மனங்களை கொள்ளைக் கொள்ள வேண்டியது அதனினும் முக்கியம்.

ஏனெனில் இந்தியா ஒரு ஜனநாயக அமைப்பில் தன்னை வார்த்துக் கொண்ட நாடு. இங்கு ஆயுதங்கள் வலுவிழந்து வாக்குச் சீட்டுகளே மேலோங்கி நிற்கின்றன.

அதனால், நமது நாட்டின் அரிய பாரம்பர்ய மாண்புகளை மீண்டும் தழைத்தோங்கச் செய்ய, தற்சார்பு கொள்கைகளால் மறுமலர்ச்சி எய்த இந்த வாக்குச் சீட்டுக்களை அறுவடைச் செய்ய சீமானின் தம்பிகள் முயல வேண்டும்.

கழகங்களை வெறுமனே தூஷித்துக கொண்டிராமல் அவர்கள் ஐம்பதாண்டுகள் எங்கெல்லாம் சறுக்கி விழுந்தார்களோ அதே சறுக்கல்கள் என்னும் தவறுகளில் சிக்காமலிருக்கும் மிக அரிய ஒழுக்க மாண்புகள் அவை.

யாதும் ஊரே..! யாவரும் கேளீர் என்ற உலகளாவிய தத்துவத்தை தனது வாழ்நாளில் செயல்படுத்திக் காட்டியவரும்,

மனித இனம் ஒரே தாய்தந்தையரின் வாரிசுகள் என்ற சகோதரத்துவ ஒருமைப்பாட்டை முழங்கி அதற்கு செயலுருவாக்கம் தந்தவரும்,

கண் முன்னால், ஒரு தீமை அரங்கேறும் வேளையில் அதை பார்த்து சகித்துக் கொண்டிராமல் வலிமை என்னும் கரங்களால் தடுத்து நிறுத்துவதும், அதிகாரம் என்னும் சட்டங்களால் அந்நிகழ்வை ஒடுக்குவதும், அதுவும் முடியாத பட்சத்தில் அது குறித்து தன் நெஞ்சில் வருந்தி அந்த இயலாமைக்கு குருதி கண்ணீர் வடிப்பதும் இறைநம்பிக்கையின் அடித்தரம் -

என்று சொல்லுரைக்கும் சர்வதேச மானுட புரட்சியாளர் நபிகளாரின் சிப்பாய்கள் யாருடைய கொடிகளையும் ஏந்த வேண்டிய அவசியமில்லைதான்!

ஆனால், நற்செயல்களுக்கு யாரெல்லாம் உரத்து குரல் எழுப்புகிறார்களோ அவர்களுக்கு ஒத்துழைப்பு தாருங்கள் என்னும் அதே தத்துவத்தின் சொந்தக்காரர் நபிகளாரும், அவர் போதித்த உலகமறை திருக்குர்ஆனும் இயம்புவதன் வரம்புக்குள் நின்று சீமானை சீர்த்திருத்த முயலும் தொடர் பணிக்கான ஆதரவாகவும், ஒரு தலைவன் எப்படியெல்லாம் தன் மக்களை நேசிக்கிறான்? அவர்களின் அல்லல்கள் ஆற்றாமைகளிலிருந்து அவர்களை விடுவிக்க முயல்கிறான்? அதற்காக அந்த மண்ணிலிருந்தே எப்படியெல்லாம் உதாரணங்களை முன் வைக்கிறான்? என்பதையெல்லாம் என் சமூக தலைவர்கள் உணர்ந்து கொள்ளவே சீமான் குறித்த எனது பகிர்வுகளும்.

காலமும், அனுபவமும் எல்லோரையும் மாற்றும் சீமான் உட்பட. அதனால், அச்சப்பட ஒன்றுமேயில்லை..!

Thursday, August 3, 2017

ஒற்றுமையைச் சிதைக்கும் விவாதம்வீண் சர்ச்சைகளில் மூழ்கித் திளைப்பதையே வாழ்க்கையாக்கிக் கொண்டவர்கள் விவாத வேகத்தில் வரையறை தாண்டிச் சென்று, ஒரு கட்டத்தில் அதைக் கட்டுப்படுத்த முடியாமல் திணற வேண்டியதிருக்கும். அந்நிலையிலும் அவர்களின் நாக்கு நீண்டு கொண்டேயிருக்கும். தங்கள் விவாதச் சொற்கள் மேலோங்கி நிற்க வேண்டும் என்பதையே இவர்கள் இலக்காகக் கொண்டிருப்பதால் உண்மைக்கு மதிப்பளிப்பதில்லை. உண்மையை முதன்மைப்படுத்துவதும் இல்லை. - இக்வான் அமீர்

'''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''
வீணான விவாதங்களிலிருந்து விலகி இருக்கும்படி இஸ்லாம் கட்டளையிடுகிறது. ஏனென்றால், விவாதத்தில் ஈடுபடுபவர்கள் எதிர்தரப்பு வாதம் ஒன்றைப் பற்றிப் பிடித்துக்கொண்டு அவரை வெற்றிகொள்ள முனைகின்றனர். இதன் விளைவாகப் பொய்யானவற்றையும் சரியென்று வாதத்தில் முன்வைக்கிறார்கள். விவாதக் களத்தில் தனது தரப்பு மேலோங்க வேண்டும் என்பது ஒன்றே நோக்கமாகக் கொண்டிருப்பர். விவாதங்கள் நன்மையை ஏற்படுத்துவதற்குப் பதிலாக, வீணான குழப்பத்தையும் கோபத்தையுமே அதிகம் ஏற்படுத்துகின்றன.

தனது ஒழுக்கத்தைச் சீர்திருத்திக் கொள்பவனுக்குக் சுவனத்தின் மேற்பகுதியில் வீடமைத்துத் தருவது போலவே, வீணான விவாதங்களிலிருந்து விலகி இருப்போருக்கும் இறைவன் சுவனத்தின் கீழ்ப்பகுதியில் வீடமைத்துத் தருவதாக நபிகளார் அறிவுறுத்துகிறார்.

சிலர் நாவன்மை மிக்கவராக இருப்பார்கள். பேச்சுத்துறையிலும் சிறப்பானவர்களாக இருப்பர். இது இறையருள். இந்த உண்மையை அறியாமல் அத்தகையவர்கள் தனது நாவன்மை மிக்க பேச்சுக்களால் அடுத்தவர் மீது தமது ஆதிக்கத்தைத் திணிப்பார்கள். அவர்கள் கற்றவரோ கல்லாதவரோ யாராயினும் அவர்களை வெற்றி கொள்ளும்வரை இந்த நாவன்மை மிக்கவர்கள் உறங்க மாட்டார்கள். இந்த ஆதிக்க மனோபாவத்தால் மற்றவர்களின் உணர்வுகள் ஊனப்படுவதுதான் மிச்சம்.

விவாதங்களில் ஈடுபட்டு உரக்கக் குரல் கொடுத்து ஓங்கி முழங்கிடுபவரை, “இறைவனிடத்தில், மிக அதிக வெறுப்புக்குரியவர்கள் சர்ச்சைகள் நிறைந்த விவாதங்களில் ஈடுபடுபவர்களே!” என்று நபிகளார் எச்சரிக்கிறார்.

வீண் சர்ச்சைகளில் மூழ்கித் திளைப்பதையே வாழ்க்கையாக்கிக் கொண்டவர்கள் விவாத வேகத்தில் வரையறை தாண்டிச் சென்று, ஒரு கட்டத்தில் அதைக் கட்டுப்படுத்த முடியாமல் திணற வேண்டியதிருக்கும். அந்நிலையிலும் அவர்களின் நாக்கு நீண்டு கொண்டேயிருக்கும். தங்கள் விவாதச் சொற்கள் மேலோங்கி நிற்க வேண்டும் என்பதையே இவர்கள் இலக்காகக் கொண்டிருப்பதால் உண்மைக்கு மதிப்பளிப்பதில்லை. உண்மையை முதன்மைப்படுத்துவதும் இல்லை.

ஒருமுறை ஒருவர் நபிகளாரின் திருச்சபையில் கலந்துகொண்டார். போலியும் பகட்டுமான அந்த மனிதர் தமது மிடுக்கை வெளிப்படுத்தும்விதமாக ஆடம்பரமான ஆடைகளையும் அணிந்து வந்திருந்தார். நபிகளார் உரையாடும் போதெல்லாம் தேவையில்லாமல் குறுக்கிட்டார். நபிகளாரின் குரலை அழுத்தும் வண்ணம் உரத்தக் குரலில் பேசலானார்.

கடைசியில் அவர் சபையிலிருந்து புறப்பட்டுச் சென்றபோது அங்கிருந்தவர்களிடம் நபிகளார், “இறைவன் இத்தகைய மனிதர்களை விரும்புவதில்லை. கால் நடைகள் தங்கள் உணவை மீண்டும் தாடைக்குக் கொண்டுவந்து அசைபோடுவதைப் போல இவர்கள் தங்கள் நாக்குகளைப் பயன்படுத்துகிறார்கள். இறுதித் தீர்ப்பு நாளில் இறைவன் இத்தகையவர்களின் முகங்களை நரகத்தின் பக்கம் திருப்புவான். எச்சரிக்கையாக இருந்துகொள்ளுங்கள் சகோதரர்களே!” என்று அறிவுறுத்தினார்.

“நாங்கள் வீணான விவாதங்களில் ஈடுபட்டிருப்பதை இறைவனின் தூதர் கண்டால் அன்னாரின் முகத்தில் கனல் தெறிக்க எங்களைப் பார்ப்பார்கள். நபிகளாரின் திருமுகத்தில் அப்போது தேங்கி நிற்கும் கடுமையை அதற்கு முன்னரோ பின்னரோ நாங்கள் கண்டதில்லை” – என்று பல நபித்தோழர்கள், பல்வேறு நிகழ்வுகளில் இதைச் சுட்டிக் காட்டுகிறார்கள்.

இத்தகைய சூழல்களில் நபிகளார் தமது தோழர்களைக் கண்டித்திருக்கிறார். மன்னித்தும் இருக்கிறார். கீழ்க்கண்டவாறு எச்சரித்தும் இருக்கிறார் என்பது முக்கியமானது.

“இறைவனின் நல்லடியார்களே, உங்களுக்கு முன் வாழ்ந்து சென்ற சமுதாயத்தவர்கள் அவர்கள் வீண் விவாதங்களில் ஈடுபட்டிருந்தார்கள் என்பதற்காகவே அழிக்கப்பட்டிருக்கிறார்கள். அதிலிருக்கும் நன்மையைவிடத் தீமையே அதிகம் என்பதால் தர்க்கம் செய்வதை விட்டுவிடுங்கள். நீங்கள் அதிக அளவு பாவம் செய்தவர்கள் என்பதற்கு, நீங்கள் அதிகளவு சர்ச்சைகளில் ஈடுபடுவதே அடையாளம். இறைவன் உங்களுக்கு உயிர் தந்து எழுப்பும் அந்நாளில் உங்களுக்காக தர்க்கம் செய்து வழக்காட யாராலும் முடியாது என்பதால் அந்தக் கொடிய பழக்கத்தை விட்டுவிடுங்கள்!”

(தி இந்து நாளேடு, ஆனந்த ஜோதியில், 03.08.2017 அன்று வெளியான எனது கட்டுரை)