Wednesday, July 26, 2017

மலைத்து நிற்கிறேன் நான்

லட்சங்கள் கோடிகள் என்று பொருளியல் மதிப்பீட்டில் கணக்கிட்டாலும், மனிதனின் வாழ்நாள் என்னவோ சில ஆயிரங்கள்தான் என்பது எவ்வளவு விசித்திரமானது!

நூறாண்டுகள் வாழ்வதாக வைத்துக் கொண்டாலும், 36600 நாட்கள்தான் இந்த உலகில் மனிதன் வாழ முடியும் என்பது எவ்வளவு யதார்த்தமானது..!

இந்த ஆயுளை சர்வசாதாரணமாக கடக்கின்றன சில விலங்குகள், விருட்சங்கள், இன்னும் சில உயிரிகள் என்பதும் அப்பட்டமானது..!

இந்த யதார்த்ததை மனித மனம் ஏற்றாலும், ஏற்க மறுத்தாலும் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளைத் தாண்டி இந்தப் பூமியில் மனித இனம் வாழ்ந்து கொண்டிருக்கிறது என்பது நிதர்சனம். 

இதற்கு இன்னும் முன்னர் லட்சக்கணக்கான ஆண்டுகளாய் இந்த பிரமாண்டமான பிரபஞ்சமும் இயங்கிக் கொண்டிருக்கிறது என்பதும் சத்தியம்.

பூமி பந்தோடு மனிதனை ஒப்பிட்டால் கடற்கரையோரமாக உள்ள மணலின் ஒரு துகள் என்று வேண்டுமானால் சொல்லலாம்.

இந்த மனிதத் துகளின் உற்பத்தி எவ்வளவு விந்தையானது..!

ஒரே ஒரு துளியிலிருந்து புறப்பட்ட கண்ணுக்குத் தெரியாத ஒரு உயிரிக்குள், உயிராற்றலுக்குள் இயங்கும் அத்தனை மனித உறுப்புகள். ஒப்பற்ற இந்த அமைப்பைக் கண்டு நவீன அறிவியல் தொழில்நுட்பம் செயலிழந்து போகும் அதிசயம்!

வெறும் சில தாதுக்களின் கலவையான மனிதனை சக மனிதன் அறிவியல் கூடங்களில் உற்பத்தி செய்யமுடியாத அளவு நுணுக்கம். கட்டமைப்பு என்று ஏக பிரமிப்பு.

படைப்பாற்றலின் பிரமிப்பு ஒருபுறம் செயலிழக்கச் செய்கிறதென்றால், பரிபாலிக்கும் ஆற்றலோ மூச்சடைக்க வைக்கிறது. 

50-களின் பிற்பகுதியில் சென்னையில் பிறந்து, சில ஆண்டுகள் ஆந்திரத்தில் சாமான்ய ஏனாதி (இருளர்) சிறுவர்களோடு தோழமை..!

பள்ளியில் சேர இன்னும் வயதாகவில்லை என்ற நிலையில்,

மாலை நேரத்தில், வயலுக்குள் கல்விக்கூடமோ என்ற வியப்புறும்வண்ணம் இருந்தது அந்த கிராமத்துப் பள்ளி.

பள்ளியைச் சுற்றியும் பசேல் என்றிருக்கும் தோட்டத்தைக் கண்டு மலைப்போடு பசுமையுடன் பரிச்சயம் கொண்ட அந்தக் குட்டிப்பையன் என்னுள் இன்னும் நடமாடுவதை மறக்க முடியாமலிருக்கிறேன் நான்.

அறுவடைக்காலங்களில் கடைசியாக கதிரறுத்த வயலில் மிச்சம் மீதியிருக்கும் பணிகளை செய்து வயல்காரர் அள்ளித் தரும் நெல்மணிகளை பிஞ்சு கைகளில் ஏந்தி, சில நேரங்களில் மடிப்பிச்சைப் போல சட்டையை நீட்டி நெற்மணிகளை பெற்ற காலமது.

அந்த நெல்மணிகளுக்கு பண்டமாற்றாய் செட்டியார் கடையில் தரும் இளகிய வெல்லத்தை மணிக்கட்டில் கடிகாரம் போல வளைத்துச் சுற்றி சுவைத்து மகிழ்ந்த பருவம் இன்னும் மனதில் பளிச்சென்று தெரிகிறது.

அதன் பிறகு மீண்டும் சென்னை, பள்ளி படிப்பு நிலைகொண்ட பருவம்.

அறிவாற்றல் கூர்தீட்டப்பட்ட பட்டறை பருவம் அது.

நான்காவது, ஐந்தாவது வகுப்புகளிலேயே ஷேக்ஸ்பியர் பரிச்சயமான நாட்கள்.

அதேபோல, வறுமையின் அத்தனை துன்பங்களையும் அனுபவித்த காலமது.

ஒரே ஒருவேளை இரவு உணவில்தான் ஒரு நாளை கடந்தாக வேண்டும்.

கூரைவீட்டிலிருந்தே வானத்து நட்சத்திரங்களை எண்ணிவிடலாம். சில சமயம் போர்வையாய் கிடைக்கும் அம்மாவின் புடவையின் ஓட்டைகள் அந்த நட்சத்திரங்களையும் மிகைக்கும் அனுபவங்கள் அவை.

ஐந்தாம் வகுப்பு பள்ளி நாட்களிலேயே பள்ளியில் மாதிரி சட்டமன்ற நிகழ்வுகளும், சபாநாயகர் பொறுப்புகளும், அலெக்சாண்டருமாய் பாத்திரங்களில் மின்னிய நாட்கள் நெஞ்சில் எழுந்து புன்னகைக்க வைக்கின்றன.

அதிகாலை ஜில்லிட வைக்கும் குளிருக்கு இதமாக குடிசைக்கு வெளியே குப்பைக்கூளங்களின் கனப்பு வெளிச்சமும், சிறிது வளர்ந்து உயர்நிலை பள்ளிக்குச் சென்றபோது, இரயில் நிலைய மின்விளக்கு வெளிச்சமும்தான் முன்னேற்றத்துக்கு பாதை வகுத்தன.

அரசு நூலகத்தின் அத்தனை புத்தகங்களையும், நூலகரின் கெடுபிடிகளைத் தாண்டி (புத்தகங்கள் கலைந்துவிடும் என்பதால், சிறார் வாசிப்புக்கு சுயமாய் அவர் வயது வரம்பு நிச்சயித்திருந்தார்) வாசித்து புதிய புத்தகங்களை எதிர்நோக்கியிருக்கும் பள்ளிப்பருவத்து சிறுவன் நினைவில் எழுகின்றான்.

வாண்டுமாமா, சாண்டில்யன், கல்கி, லட்சுமி, தமிழ்வாணன், நா.பார்த்தசாரதி, ராஜம் கிருஷ்ணன், வாசந்தி, சிவசங்கரி ஆகியோரின் படைப்பாற்றல் கற்றலில் திளைத்திருந்த பருவம்.

இயற்கை, வளர்ப்பு பிராணிகள் என்று தோழமைகளோடு கழிந்த நாட்கள்.

ஆசையாய் வளர்க்க கொண்டு சென்ற நாய்க்குட்டியை  பிடுங்கிக் கொண்டதோடல்லாமல் அடிக்கவும் எத்தனித்த அனுபவம் குத்துச்சண்டை வீரனாக்கியது. அந்த சுட்டி மாணவன் மீண்டும் வாலாட்டாமலிருக்க அச்சுறுத்தியது.

பள்ளிப்படிப்பை முடித்தபோது, அதற்குமேல் படிக்க வைக்க முடியாது என்று தந்தையார் கைவிரித்திட, கூடபடித்த நண்பர்கள் எல்லாம் கல்லூரிக்கு சென்றபோது, மௌனமாய் தலைகுனிந்து கண்ணீர் சிந்திய துன்பப்படலம்.

கல்விக் கற்கும் வாய்ப்பு பொருளியலால் முடங்கிப் போன நிலையில், விஞ்ஞானியாக மாற வேண்டும் என்று நினைத்திருந்த அந்த ஒல்லியான உடல்வாகு கொண்ட அரும்பு மீசை இளைஞனின் அத்தனை கனவுகளும் தொலைந்துபோன பரிதாபம்  நினைவில் எழுகின்றது.

அதன்பின், சென்னை அசோக் லேலண்ட் நிறுவனத்தில் பயிற்சியாளனாக பணியில் சேர்ந்தது... காதல் குறுக்கிட்டது... எதிர்பாராமல் நடந்த திருமணம் என்று பல மலைப்புகளை கடந்து காலம் தள்ளியது விந்தையாக இருக்கிறது.

70-களின் பிற்பகுதியில் பத்திரிகைகளுக்கு எழுதி அனுப்பும் அத்தனை படைப்புகளும் பிரசுரிக்க இயலவில்லை என்று திரும்பி வரும்போது, மனைவியின் கேலி, கிண்டல்களையும் தாண்டி மீண்டும், மீண்டும் எழுத தொடங்கி 80-களில் அச்சேறி, இதுவரையில் அநேகமாய் எல்லா பத்திரிகைகளிலும் எழுதியாகிவிட்டது. குழந்தை இலக்கியத்தில் பன்னூலாசிரியர் என்ற பட்டப்பெயரும் 15 மேற்பட்ட சிறார் நூல்கள் மூலமாக “மழலைப்பிரியனாய் அங்கீகாரம் கிடைத்தது.

கல்லூரிக்கு செல்ல முடியாமல் கண்கலங்கி நின்ற அதே மாணவன் 2000-ம் ஆண்டுகளில் தமிழ் இலக்கியங்களில் இளநிலை மற்றும் முதுநிலை, இதழியலில் முதுநிலை, மனித உரிமைகள் பாடத்தில் முதுநிலை, பின்னாளில் நிறுவனத்தில் அதிகாரியாய் பதவி உயர்வு கிடைத்தபோது, தொழில் சம்பந்தமான மற்றொரு பட்டயப்படிப்பு (Diploma in Materiel Management) என்று இளமையில், இழந்ததை எல்லாம் பெற முடிந்தது.

ஒரு கட்டத்தில் வறுமை மட்டுமே சொந்தம் கொண்டாடியதால் செங்கொடி ஏந்தி மக்கள் போராட்டங்களில் நின்ற முன்னணி தோழனாய் கனல் கக்கி முழக்கமிட்ட இளைஞனின் மனதில் மனித பிறப்பு, வாழ்க்கை, மரணம். அதன்பின் என்ன...? - என்ற தேடல் மேலெழுந்தது.

அந்த தேடலின் தொடராய் சாமியார்கள், சித்தர்கள் என்று கடைசியில் இஸ்லாம் சமயத்துக்கு  கொண்டு வந்து சேர்த்ததுவரையிலான  இந்த 59 ஆண்டுகளில் எத்தனை எத்தனை மலைப்புகளோடு கடந்து நிற்கிறேன் என்பது வியப்புடன் இருக்கிறது.

இந்த இடைப்பட்ட காலத்தில் பாட்டி, அம்மா, அப்பா போன்ற நெருக்கமான உறவுகள், உறவாடிய தோழர்கள், ஒரே தட்டில் சாப்பிட்டு மகிழ்ந்த நண்பர்கள், நன்கு பரிச்சயமான அண்டை, அயலார் எல்லாம் மரணம் என்னும் ஒரு நிரந்தமான தடுப்புக்குள் வெறும் நினைவுகளாகிபோன துயர அனுபவங்கள்.

நமது முறை எப்போது? அதற்கான தயாரிப்பாய் சேர்த்து வைத்திருக்கும் நல்லறங்கள்தான் என்ன? என்று கணம்தோறும் எழும் கேள்விகளுக்கும் பதில் மலைப்பாய் இருக்கிறது.

மலைப்போன்ற இடர்களையெல்லாம் கடந்து, மனைவி, மக்கள், பேரன், பேத்திகளோடு, மகிழ்ந்திருக்கும் தருணமிது.

இந்த பேரண்டத்தில் எதுவும் செய்ய முடியாத கையாலாகாத நிலையில் என் மீது சொரியப்பட்ட, சொரிய்யபடும் இறையருளுக்கு நன்றியோடு பணிந்து துதிக்கிறேன் நான்.

அதேபோல, அழகிய பூமியில் எனது வருகையையொட்டி - 25.07.1957 - உலகின் பல பகுதிகளிலிருந்தும் தங்களின் பேரன்பை வெளிப்படுத்தி, வாழ்த்துக்கள் சொல்லி இன்னும் அழகூட்டிய எனது உடன்பிறவா சொந்தங்கள் ஒவ்வொருவருக்கும் சாத்தியமற்ற நிலையிலும் நேரில் நன்றி தெரிவிக்கவே மனம் விழைகிறது.

சுமக்க முடியாத பாரத்தை யார் மீதும் இறைவன் சுமத்துவதில்லை என்பதற்கு இந்த எளியவனே ஓர் உதாரணம்.

அதனால், வாழ்வியல் பிரச்னைகளுக்கு சோர்வடைந்து விட வேண்டாம் என்பதே இந்தத் தருணத்து எனது அறிவுரை அல்லது அனுபவ பகிர்வு.

நன்றி இறைவா..! நன்றி தோழர், தோழியரே, அன்பு உடன்பிறப்புகளே..!

மனம் நிறைந்த அன்போடு,


இக்வான் அமீர்

(படம்: தம்பி அனஸ் Shahul Hameed https://www.facebook.com/shahulhameednutron கோவை)

முந்தைய வைகறை நினைவுகளை வாசிக்க:
''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''
வைகறை நினைவுகள் பகுதி 1: கருணையாளனான இறைவன் அவரது பாவங்களை மன்னிப்பானாக:  - http://ikhwanameer.blogspot.in/2015/07/1.html
வைகறை நினைவுகள் பகுதி 2: இந்நேரம் புதைச்ச இடத்தில் புல் முளைச்சிருக்கும்: http://ikhwanameer.blogspot.in/2015/07/2.html
வைகறை நினைவுகள் பகுதி 3: நிழலாய் நின்ற அந்த இருவர்: http://ikhwanameer.blogspot.in/2015/07/3.html
வைகறை நினைவுகள் பகுதி 4: நீண்ட தேடல்களின் அந்த முடிவில்: http://ikhwanameer.blogspot.in/2015/07/4.html
வைகறை நினைவுகள் பகுதி 5: மறக்க முடியாத அந்த இரவு: http://ikhwanameer.blogspot.in/2015/07/5.html
வைகறை நினைவுகள் பகுதி 6: அதிபதியின் தர்பாரில் ஆஜரான ஓர் அடியான்: http://ikhwanameer.blogspot.in/2015/07/6.html
வைகறை நினைவுகள் பகுதி 7: சுமக்க முடியாத பாரத்தை சுமத்துவதில்லை: http://ikhwanameer.blogspot.in/2015/07/7.html
வைகறை நினைவுகள் பகுதி 8: யாகூப் மேமன் தண்டனை கூனி குறுகிப் போகிறேன் நான்: http://ikhwanameer.blogspot.in/2015/07/7_31.html
வைகறை நினைவுகள் பகுதி 9: இறைவனின் பிரதிநிதியா? குரங்கின் சந்ததியா?: http://ikhwanameer.blogspot.in/2015/08/9.html
வைகறை நினைவுகள் பகுதி 10: http://ikhwanameer.blogspot.in/2015/08/10.html
வைகறை நினைவுகள் பகுதி 11 : நான் தொலைந்து போனது இங்குதான் : http://ikhwanameer.blogspot.in/2015/08/11.html
வைகறை நினைவுகள் பகுதி 12: இதோ என் இப்ராஹீமா: http://ikhwanameer.blogspot.in/2015/08/11_14.html
வைகறை நினைவுகள் பகுதி 13: ஒரு கேள்விக்கு விடை தேடி நான்: http://ikhwanameer.blogspot.in/2015/08/13.html
வைகறை நினைவுகள் பகுதி 14, ஒரே டேக்கில் ஓகே: http://ikhwanameer.blogspot.in/2015/08/14.html
வைகறை நினைவுகள் பகுதி 15: வெளிச்சத்துக்கு வராத பாசங்கள்: http://ikhwanameer.blogspot.in/2015/08/15.html
வைகறை நினைவுகள் பகுதி 16 : கதைச் சொல்லியாய் மழலைப்பிரியன்: http://ikhwanameer.blogspot.in/2015/08/16.html
வைகறை நினைவுகள் பகுதி 17: பாகல் கொடி : http://ikhwanameer.blogspot.in/2015/08/17.html
வைகறை நினைவுகள் பகுதி 18: மறக்க முடியாத அந்த குட்டிச் சுவர்: http://ikhwanameer.blogspot.in/2015/09/18.html
வைகறை நினைவுகள் பகுதி 19: அந்த இருபது ரூபாய்: http://ikhwanameer.blogspot.in/2015/09/19.html
வைகறை நினைவுகள் பகுதி 20: பாதுகாத்துவரும் அந்த இரண்டு மடல்கள்: http://ikhwanameer.blogspot.in/2015/09/20.html
வைகறை நினைவுகள் பகுதி 21: உள்நாட்டு அஞ்சல் பரிச்சயம் செய்த அழகிய ஒளிவிளக்கு: http://ikhwanameer.blogspot.in/2015/09/21.html
வைகறை நினைவுகள் பகுதி 22: வாழ்க்கையைப் புரட்டிப் போட்ட நடுநிசி இரவு: http://ikhwanameer.blogspot.in/2015/10/22.html
வைகறை நினைவுகள் பகுதி 23:  மர்யம் ஏன் அழுதாள்?:  http://ikhwanameer.blogspot.in/2015/10/23.html
வைகறை நினைவுகள் பகுதி 24:  வேட்டைக்காரன்:  http://ikhwanameer.blogspot.in/2015/12/24.html
வைகறை நினைவுகள் பகுதி 25:  லென்ஸ் விழி வழியே..:  http://ikhwanameer.blogspot.in/2015/12/25.html
வைகறை நினைவுகள் பகுதி 26:  ரஷ்ய கரடியை விரட்டியடித்த திருக்குர்ஆன்: http://ikhwanameer.blogspot.in/2016/02/26.html
வைகறை நினைவுகள் பகுதி 27:  ஈந்து கசிந்த மனம்:  http://ikhwanameer.blogspot.in/2016/02/27.html   
வைகறை நினைவுகள் பகுதி 28: நான் புரிந்துகொண்ட இஸ்லாம்: http://ikhwanameer.blogspot.in/2016/02/28.html
வைகறை நினைவுகள் பகுதி: 29 காலப்பெட்டகம்: நூற்றாண்டே சாட்சியாக…!: http://ikhwanameer.blogspot.in/2016/02/29.html
வைகறை நினைவுகள் பகுதி: 30 - ஓ.. ஜமீலாபாத்..! சாட்சியாய் இருப்பாய்.. நீ.. - http://ikhwanameer.blogspot.in/2016/04/30.html
வைகறை நினைவுகள் பகுதி 31 - என்னவானது எனது அன்பு உள்ளங்களுக்கு..? https://ikhwanameer.blogspot.in/2016/07/31.html
வைகறை நினைவுகள் பகுதி 32 - முதுமைக் கரைச் சேர்த்தக் காலம்  https://ikhwanameer.blogspot.in/2017/05/blog-post_17.html 

 

No comments:

Post a Comment