Sunday, July 9, 2017

மனசோட மடல்கள்: நன்மைகள் பகிர்ந்தளிக்கப்படும் நாள் வரும் முன்...

என் அன்பு நெஞ்சங்களே, உறவுகளே, சகோதர-சகோதரிகளே!

உங்கள் அனைவர் மீதும் இறைவனின் சாந்தியும், சமாதானமும் பொழிவதாக..!

மனித உறவுகளில் ஏற்படும் விரிசலுக்கு உச்சவரம்பு மூன்று நாள் என்று நிர்ணயித்த கையோடு மீண்டும் அந்த உறவுகளைப் புதுப்பித்துக் கொள்ள அழகிய வழிமுறையாய் சலாம் என்னும் முகமனை நபிகளார் முன்மொழிகிறார். பிணங்கியுள்ள ஒருவர் மற்றொருவருக்கு, “இறைவனின் சாந்தியும், சமாதானமும் உண்டாகட்டும்!” என்று பரஸ்பரம் பறிமாறிக் கொள்ளும் வாழ்த்து மீண்டும் சகோதரத்துவ உறவுக்கு வழிகோலுகிறது. இதயங்களை இணைக்கிறது. அத்தோடு இறையருளைப் பெற்றுத் தருகிறது.

ஒவ்வொரு பிணக்கிலும் யாராவது ஒருவர் மற்றொருவருக்கு நிச்சயம் பாதிப்பை ஏற்படுத்தியே இருப்பார். இந்த இழப்பை ஈடுகட்டுவதன் முதல் நிலையாக, பாதிப்பை ஏற்படுத்தியவர் வருந்துவதோடு அந்த வருத்தத்தை வாய்மொழியாய் வெளிப்படுத்தும்போது, அந்தப் பிரச்சினை முற்றுப் பெற்றதாகிவிடும்.

“தன்னுடைய சகோதரரின் உரிமைகளைப் பறித்துக் கொண்டவர், தன்னுடைய சகோதரனின் கண்ணியத்தைக் களங்கப்படுத்தியவர் இன்றே உடனடியாக அந்த உறவுகளைச் சீர்செய்து கொள்ளட்டும். இல்லையேல் மறுமைநாளில், அநீதி இழைத்தவரின் நன்மைகள் அவர் இழைத்த அநீதிக்கு ஏற்றாற் போல அநீதி இழைக்கப்பட்டவருக்குப் பகிர்ந்தளிக்கப்படும். ஒருவேளை அப்படி நன்மைகள் இல்லாத பட்சத்தில் அநீதி இழைக்கப்பட்டவரின் தீமைகள் அநீதி இழைத்தவரின் பதிவேட்டில் சேர்க்கப்படும்!” என்று பொருள்படும்படி நபிகளார் எச்சரிக்கிறார்.

அதேபோல, அடுத்தவரால் பாதிப்புக்குள்ளானவர் தனது மென்மையான போக்கால் அவருடைய தவறுகளை மன்னித்துவிடும்படியும் மற்றொரு தரப்பினரையும் நபிகளார் அறிவுறுத்துகிறார். மனிதரிடையே எழும் கருத்துப்பிழைகள் மனங்களில் கொதிநிலையில் இருக்க ஒருபோதும் இஸ்லாம் அனுமதிப்பதில்லை. அவை தணிக்கப்பட்டு சகஜநிலையை அடையவே மார்க்கம் விரும்புகிறது.

ஒருமுறை நபிகளார் தமது தோழரை நோக்கி கேட்கிறார். “சகோதரர்களே. தீயவர் யார் என்று நான் அடையாளப்படுத்தட்டுமா?”

அங்கு கூடியிருந்தோர், அதைத் தங்களுக்கு எடுத்துரைக்கும்படிக் கேட்கின்றனர்.

“உங்களில் மிகவும் தீயவர் யார் என்றால், யார் எப்போதும் பிறரைவிட்டுத் தனிமையில் இருக்கிறாரோ, யார் தன்னுடைய பணியாட்களிடம் கொடுமையாக நடந்து கொள்கிறாரோ, யார் பிறருக்கு அன்பளிப்பு தர மறுக்கிறாரோ அவரேதான்!” என்றுரைத்தார் நபிகளார்.

“யார் அடுத்தவர்க்கு எதிராக காழ்ப்புணர்வு கொண்டிருக்கறாரோ அவர்தான் மிகவும் தீயவர்” என்று சொன்ன நபிகளார் இன்னும் கொடிய தீயவர் யார் என்பதையும் கூறினார்.

“அடுத்தவர் தவறுகளை மன்னிக்காதவர்கள். அடுத்தவர் தம்மை மன்னிக்கும்படி கேட்டுக் கொண்டும் அவரை மன்னிக்க மறுப்பவர்கள்” என்று நபிகளார் பல்வேறு நிலை மனிதர்களை அடையாளப்படுத்தி தமது தோழர்களை எச்சரிக்கிறார். http://tamil.thehindu.com/society/spirituality/%E0%AE%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D/article9555288.ece

கொடிய குணமும், கடினமான மனமும் கொண்ட மனிதர்கள் இறைவனின் அருளிலிருந்து அதிக தொலைவில் இருப்பதால் இவர்கள் நரகின் அடிப்பகுதியில் வைக்கப்படுவார்கள். கண்களில் பெரும் கனலும், இதயத்தில் பாறையென கடினமும் கொண்ட மனிதன் அபாக்கியவான் ஆவான்.

இறைவனின் பேரருளால், அவனது அருளைச் சுமந்து மனிதரிடையே மனித வடிவில் வந்துதித்த நபிகளார் சக மனிதர்களின் துன்பங்களை களைபவராக இருந்தார். மனிதர்களின் மன காயங்களுக்கு மருந்திடுபவராகவும், அவர்கள் துன்பங்களின் துயர் துடைப்பவராகவும், தவறிழைக்ககும்போது அவர்கள் மீது அனுதாபங்கொண்டு அரவணைத்து நல்வழிப்படுத்துபவராகவும், செல்வந்தர்களைக் கொண்டு ஏழைகளுக்கு உதவி செய்பவராகவும், பறிப்போன உரிமைகளைப் பெற்றுத் தருபவராகவும், அதற்காக போராடும் போராளியாகவும் அவர் இருந்தார்.

நபிகளாரின் வாழ்வை அறிவு மற்றும் உண்மை என்னும் அழகான ஆபரணங்களால் அழகுப்படுத்தி வைத்தான் இறைவன். அவர்களின் வாழ்க்கை ஒழுக்கதின் சிகரமாக விளங்கியது. அன்பாலும், இரக்கத்தாலும் நிரம்பி வழிந்தது. சக மனிதர்களின் துன்பத்துயரங்களைக் கண்டு உருகும் குணம் அவர்களது. அடுத்தவர்க்கு உதவி செய்ய ஓடோடும் பரோபகாரி அவர்.

இந்த அருங்குணங்களை முன்வைத்துதான் நபிகளார் மக்கள் மனங்களை வெல்ல முடிந்தது என்று சாட்சியமளிக்கிறது திருக்குர்ஆன்: “நபியே, இறைவனின் மாபெரும் அருளினாலேயே நீர் இவர்களிடம் மென்மையாக நடந்து கொள்கிறீர். நீர் கடுகடுப்பானவராகவும், வன்னெஞ்சராகவும் இருந்திருந்தால், இவர்கள் எல்லோரும் உம்மை விட்டு விலகிப் போய் இருப்பார்கள்”

இந்த அருங்குணங்களின் வெளிப்பாடை உஹது என்னும் இடத்தில் நடந்த அதே பெயராலேயே இஸ்லாமிய வரலாற்றில் வழங்கப்படும் யுத்தத்தில் காணலாம்.  இந்த போரில் நபிகளாரை ஒழித்துவிட எல்லாவித முயற்சிகளையும் எதிரிகள் மேற்கொண்டனர். நபிகளாரின் தரப்பில் பெரும் உயிர்ச்சேதம் ஏற்பட்டதோடு அவரது உயிருக்கு பெரும் அறைக்கூவலாக இருந்த போர் அது.  எதிரிகளின் அம்பு நபிகளாரின் தலைக்கவசத்தைத் துளைத்து அவரது முன்பற்களில் சில உடைந்து போயின. கன்னங்களில் பெரும் காயம் ஏற்பட்டது.  இந்தத் தீரா துயர் கண்டு நபித்தோழர்களில் சிலர் எதிரிகளைச் சபிக்க நபிகளாரிடம் வேண்டி நின்றார்கள். ஆனால், மனிதர்களின் மீது அளவற்ற பேரன்பு கொண்ட நபிகளாரோ, ”என் சமூகத்தார் என்ன செய்கிறார்கள் என்று அறியாமல் செய்கிறார்கள்; இவர்களை நல்வழிப்படுத்துவாய் இறைவா!”  - என்று இறைவனிடம் இறைஞ்சி நின்றார்.

இப்படி இரக்கமே பிரதானம் என்பதை நபிகளாரால் போதிக்கப்பட்ட இஸ்லாம் முஸ்லிம்களுக்கு கட்டளையிடுகிறது. இதனை அவர்களின் இறைநம்பிக்கையின் ஒரு அளவுகோலகவும் நிர்ணயிக்கிறது. 

”பூமியில் உள்ளோர் மீது இரக்கம் கொள்ளுங்கள். வானத்தில் இருப்பவன் உங்கள் மீது இரக்கம் காட்டுவான்” - என்கிறார் நபிகளார். இரக்கம் காட்டுவது என்பது சக மனிதர்களிடம் மட்டுமல்லாமல் தன்னைச் சுற்றியிருக்கும் எல்லா உயிரிகளுக்கும் பொதுவானதாக சுட்டுகிறார்.

”இறைவன் பூமியையும், வானங்களையும் படைத்தபோது, அவன் நூறு கருணைகளையும் சேர்த்தே படைத்தான். அந்த ஒவ்வொரு கருணையின் விசாலமும், வானம்-பூமி இவற்றுக்கு இடைப்பட்ட தூர அளவிலானது. இதன் ஒரு தன்மையைத்தான் அவன் பூமிக்கு அனுப்பி வைத்தான். அதனால்தான் ஒரு தாய் தன் குழந்தையிடம் பேரன்பு கொள்கிறாள். விலங்குகளும், பறவைகளும் தங்களுக்குள் இரக்கம் காட்டிக் கொள்கின்றன” – என்கிறார் நபிகளார்.

அனுபங்களால் அறிவு விசாலமடைவதுபோலவே, பல்வேறு நிலைகளில் மனிதனின் கருணையும் வளர்ந்து பற்றிப் படர்கிறது. இத்தகைய கருணையை அழிக்க அனுமதிப்பது அந்த மனிதனை நரகிற்கு வழிநடத்தும் பாதையாகிவிடும்.  http://tamil.thehindu.com/society/spirituality/%E0%AE%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%82%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%87%E0%AE%B0%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/article9692432.eceஅன்பு சகோதர, சகோதரிகளே!

1980-களின் பிற்பகுதியில், சிவப்பு சித்தாந்தங்களிலிருந்து விலகி இஸ்லாமிய கொள்கை, கோட்பாடுகளில் மனம் லயித்து, அற்புதமான அந்த வாழ்வியலை தாங்கி திரிந்த வேளையில் சாமரம் வீசி வரவேற்றார்கள் என்றா எண்ணுகிறீர்கள்? கடும் எதிர்ப்புகளை எல்லாம் சமாளிக்க வேண்டியிருந்தது என்பது வியப்புக்குரியது அல்லவா? அதிலும் சொந்த சமூகத்து உறுப்பினர்கள் தந்த துன்பத்துயரங்களுக்கு ஒரு எல்லையில்லாமல் போனது என்பது எவ்வளவு துரதிஷ்டவசமானது.

வழிகேடர்கள் என்று சிலர் அழைக்க, இன்னும் சிலர் ஷியாக்கள் என்றார்கள். இன்னும் சிலரோ காதியானிக்கள் என்றெல்லாம் அழைத்தார்கள்.

பள்ளிவாசல்களில் திருக்குா்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்பை வாசிக்கவிடவில்லை. திருநபிகளாரின் பொன்மொழிகளை பகிர அனுமதிக்கவில்லை. பிறந்து வளர்ந்த ஊரில் இந்த நிலை என்றால், அண்டை பகுதிகளில் ஜும்ஆ உரையாற்ற அழைத்துவிட்டு அதற்கான தயாரிப்போடு, நிறுவனத்தில் விடுமுறை விண்ணப்பித்துவிட்டு சம்பந்தப்பட்ட பள்ளிவாசலுக்கு சென்றால், நம்மை பேசவிடாமல் அவமதித்து அனுப்பிய நிகழ்வுகள், திருக்குர்ஆன் மொழிபெயர்ப்புகளை அறிமுகப்படுத்த பள்ளிதோறும் சுமந்து சென்றால், அவற்றை தொட்டு பார்க்கவும் மறுத்ததோடு, அடித்துவிரட்டாத குறையாக ஊர் எல்லைவரை கூடவே வந்து வெளியேற்றிய சம்பவங்கள்.

பள்ளிவாசல் நிர்வாகத்தில் தலையிடுவதாக கூறி பகிரங்கமாகவே பள்ளிவாசலின் அறிவிப்பு பலகையில், இவர்கள் தீவிரவாதிகள் நிர்வாகத்தில் பங்கேற்க எவ்வகையிலும் அனுமதியில்லை என்று நிர்வாகக் குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களின் அறிவிப்புகள். ஒரு கட்டத்தில் பள்ளிவாசல் லெட்டர் பேடில் தீவிரவாதிகள் என்று எழுதி காவல்துறை, உளவுதுறைக்கு அளிக்கப்பட்ட புகார்கள் என்று பல்வேறு கசப்பான அனுபவங்களின் நிகழ்வுகள்.

அடித்து விரட்ட மிரட்டல்கள், ரவுடிகளின் உதவி தேடல்கள், தாக்குவதற்காக பள்ளி வளாகத்துக்குள்ளேயே உடைக்கப்பட்ட டியூப் லைட்டுகள் என்று அத்தனை அராஜங்களும் தலைவிரித்தாடிய வேளை அது.

இவற்றை நிகழ்த்தியவர்கள் எல்லாம் இஸ்லாம் தெரியாதவர்கள் அல்ல. சமூக சீர்த்திருத்தவாதிகள், சமுதாய அரசியல் பணிகளில் ஈடுபட்டவர்கள் என்று எல்லா குழுவினரும் எங்களுக்கு எதிராக அணிதிரண்டிந்த காலமது.

சரி… இவ்வளவு அராஜகங்கள், அக்கிரமங்கள் அரங்கேறிய வேளையில் இதற்கான எதிர்வினையாக செய்தது என்ன? என்ற கேள்வி உங்களுக்குள் எழுவதை உணர முடிகிறது.

இறைவனின் பெரும் கிருபை..! இந்த பிரச்னைகளை சமாளிக்க.. இதைவிட இன்னும் அதிகளவு பிரச்னைகளை சமாளிக்க எங்களுக்கு எங்கள் தலைவர்கள் திருக்குா்ஆன், திருநபிகளாரின் வழிமுறைகளிலிருந்து அழகிய பயிற்சி அளித்திருந்தார்கள்.

•    தீமையை மிகச்சிறந்த நன்மையைக் கொண்டு தடுத்துக் கொள்ளல், நன்மையும், தீமையும் ஒருகாலும் சமமாக மாட்டா.
•    நெருப்பை நீரூற்றிதான் அணைக்க வேண்டும். பதிலுக்கு தீ வைப்பதல்ல.
•    திருக்குா்ஆன், திருநபிகளாரின் பொன்மொழிகளை பள்ளிவாசலுக்குள் ஓத அனுமதிக்காவிட்டால்.. பள்ளியின் வளாகத்தில் அமர்ந்து அந்தப் பணியாற்றுங்கள். அங்கும் அனுமதி மறுக்கப்பட்டால் வளாகத்தின் வெளிக்கதவருகே அமர்ந்து கொண்டு உங்கள் பணிகளைத்  தொடருங்கள். அங்கும் அனுமதிக்காவிட்டால் வளாகத்துக்கு வெளியே சாலையில் அமர்ந்து அந்தப் பணியாற்றுங்கள்.
•    அமைதியை கடைப்பிடியுங்கள்.
•    வன்முறை ஒருகாலும் பிரச்னைக்கு தீர்வளிப்பதில்லை.

மௌலான குத்புத்தீன் பாகவியிலிருந்து, மௌலானா அப்துல் ஹபீஸ் ரஹ்மானி, மூதறிஞர் ஜமீல் அஹமது , பேராசிரியர் இஹ்ஜாஸ் அஸ்லம் வரை ஒரே மாதிரியான வழிகாட்டுதல்கள்.

இந்த வழிகாட்டுதல்கள் எல்லாம்

”ஒரு கையில் சந்திரனையும், மறு கையில் சூரியனைக் கொடுத்தாலும் தமது பணிகளிலிருந்து பின்வாங்க போவதில்லை!” – என்று முழங்கிய நபிகளாரின் ஆளுமைப் பண்புகளை நோக்கியே எங்களை நகர்த்தியது.

தூக்க முடியாத சுமைகளோடு சமூகப் பணிகளை ஓரிருவர் செய்து கொண்டிருந்த நிலையில் மூன்றாம் நபர் அந்தப் பணிகளுக்காக களத்தில் இறங்கிய வேளையில் இவர்கள் உண்மையிலேயே மகிழ்ந்திருக்க வேண்டும். தனது பணிகளை பங்கிட்டு கொள்வதற்காக மற்றோர் ஆள் கிடைத்த மகிழ்ச்சியில் இணைந்திருக்க வேண்டும். ஆனால், இதற்கு நேர்மாறாகவே அனைத்தும் நடந்தன.

•    சீரான வழிகாட்டுதல்களும்,
•    அதற்கேற்ப அளிக்கப்பட்ட ஒழுக்கப் பயிற்சிகளும்,
•    இஸ்லாம் குறித்து ஆழமான புரிதலும்,
•    நம்மீது சுமத்தப்பட்ட பொறுப்புகளும்,
•    ஆழ்ந்த நூல் வாசிப்புமாய் வளர்ந்த ஆளுமையும்,
•    இவை எல்லாவற்றுக்கும் முதன்மையாய் இறைவனின் பேரருளும் இணைந்து,

சேர்க்க மறுத்த அதே பள்ளியின் நிர்வாகிகளாய் தொடர்ந்து மக்களால் தேர்வு செய்யப்படும் நிலைமையைத் தந்தது.

சகோதர இயக்கங்கள் அவரவர் பணிகளைத் தடையின்றி செய்ய பெருந்தன்மையை வளர்த்தது.

இது நிகழ்காலம்.

சகோதர, சகோதரிகளே! எனதருமை தோழர், தோழியரே..!

இந்தப் புரிதலும், இணக்கமும், நம் மீது இயல்பாகவே சுமத்தப்பட்டுள்ள பொறுப்புகளும், நம் சொந்த நாட்டில் நமது சொந்த மக்களுக்கு அரியணையில் அமர்த்தப்பட்ட அரசியல் அதிகாரத்தால் நிகழ்காலத்தில் இழைக்கப்பட்டுவரும் அநீதிகளும் நம்மை ஒன்றிணைத்தாக வேண்டும். இதில் நாம் காட்டும் பலவீனங்கள் நம்மை இறைவனின் வெறுப்புக்கு ஆளாக்கிவிடும். நரக நெருப்பை நோக்கி நகர்த்திவிடும். (இறைவன் இத்தகைய இழிநிலையிலிருந்து நம்மைக் காப்பானாக!)

நபிகளார் சுவனம் மற்றும் நரகவாசிகளைப் பற்றி தமது தோழர்களுடன் உரையாடி கொண்டிருந்தார். சுவனவாசிகளின் பண்புகள் குறித்து சொல்லும்போது இப்படிச் சொன்னார்:

“தோழர்களே, சுவனத்திற்கு சொந்தமானவர்கள் மூன்று வகைப்படுவார்கள். அவர்களில் முதலாம் பிரிவினர், தங்கள் பரஸ்பர விவகாரங்களில் மிகவும் நீதியுடனும், நடுநிலையுடனும் நடந்துகொண்டவர்கள். வள்ளல் தன்மையும், நற்செயல்களையும் மக்களிடையே பரப்பியவர்கள். அத்துடன் தமது நடவடிக்கைகளில் மென்மையாகவும், நேர்மையுடனும் நடந்து கொண்டவர்கள்.

இரண்டாம் பிரிவினர், மிகவும் தயாள குணம் மிக்கவர்கள். அவர்கள் தங்களின் உற்றார், உறவினரிடையே இளகிய மனதுடனும், சக மனிதர்களுடன் தாராளத் தன்மையுடனும் நடந்து கொண்டவர்கள். மூன்றாம் பிரிவினரோ, மனைவி, மக்கள் குடும்ப நெருக்கடிகள், வாழ்வியல் தள்ளாட்டங்கள் இவை அனைத்தையும் தாங்கியவர்கள். தடுக்கப்பட்டவற்றிலிருந்து தங்களைத் தற்காத்துக் கொண்டு வாழ்ந்தவர்கள்.”

சுவனவாசிகளை அடையாளப்படுத்திய கையோடு நபிகளார் நரகவாசிகள் பற்றியும் சொல்லலானார்:

“நரகவாசி நேர்மையின்மையை மட்டுமே தனது அடையாளமாக்கிக் கொண்டவன். அதைப் பின்பற்றுவதையே வாடிக்கையாகக் கொண்டவன். அவனது பேராசை, யாரும் அடையாளம் காண முடியாத அளவு மறைவாக இருக்கும். ஆனால், தொடர்ந்து அடுத்தவரின் சொத்துக்களை அபகரித்துக் கொண்டே இருப்பான். கஞ்சத்தனம் மிகைத்திருக்கும். ஆபாச உரையாடல்களில் திளைத்திருப்பான். இங்கிதமற்ற செயல்களில் தொடர்ந்து ஈடுபடுவான்” என்று நபிகளார் நரகவாசிகள் குறித்து ஒரு நீண்ட பட்டியலிட்டார்.

மனித வாழ்வில் எதிர்ப்படும் இன்னல்கள் எல்லையற்றவை. சூழ்நிலைகள் மனிதனை வசப்படுத்த முனைபவை. அவற்றில் சிக்கிக் கொண்டாலோ கேவலமான வாழ்க்கையில் அவனை வீழ்த்திவிடும். இந்தப் புறச் சூழல்கள் மனிதனை விரக்தியின் விளிம்பில் தள்ளி அவனது பிற செயல்கள் அனைத்தையும் முடக்கிவிடும். அன்றாட வாழ்க்கையை பாதித்துவிடும்.

இறை நம்பிக்கையாளன் அச்சமற்றிருக்க வேண்டும் இத்தககைய சூழல்கள் ஓர் இறை நம்பிக்கையாளனைப் பற்றிப் படரும்போது, அவன் அச்சமற்றிருக்க வேண்டும் என்பதோடு அவற்றைத் துணிவுடன் எதிர்த்து நிற்க வேண்டியதும் இன்றியமையாதது. அந்தத் தடைகளையெல்லாம் தகர்த்தெறிந்து தனது இலக்கை நோக்கி நகர்வது முக்கியமானது.

புறச் சூழல்களின் தாக்கம் அதிகமாகும் போதெல்லாம் நபிகளார் இறைவனிடம் பாதுகாவல் தேடுவது வழக்கம். இரண்டு கரங்களையேந்தி இப்படி இறைஞ்சுவதும் நபிகளாரின் பழக்கமாகவும் இருந்தது.

“இறைவா! துன்ப துயரங்களிலிருந்து நான் உன்னிடம் பாதுகாவல் தேடுகின்றேன். விரக்தியிலிருந்தும், சோம்பலிலிருந்தும் நான் உன்னிடம் பாதுகாவல் தேடுகின்றேன். கோழைத்தனத்திலிருந்தும், கஞ்சத்தனத்திலிருந்தும் நான் உன்னிடம் பாதுகாவல் தேடுகின்றேன். கொடுங்கோலர்களின் கொடுமைகளிலிருந்தும் நான் உன்னிடம் பாதுகாவல் தேடுகின்றேன்!”

பொறுமை, தன்னம்பிக்கை என்னும் விண்கலங்கள் மூலமாகவேதான் நிகழ்காலத்திலிருந்து எதிர்காலத்துக்கு மனிதன் கடந்தாக வேண்டும். இந்த மந்திரம் கற்றுக்கொண்டவர்கள் வாழ்வியல் போராட்டங்களைச் சமாளிக்கத் தெரிந்தவராவர். தோல்விகளைக் கண்டு துவளாமல் வெற்றி இலக்கை எட்டுபவராவர். தன்னைப் படைத்தவனற்றி வேறு எவருக்கும் சிரம் பணியாதவராவர். http://tamil.thehindu.com/society/spirituality/%E0%AE%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%B0%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/article9529131.ece

வஸ்ஸலாம்.

என்றென்றும் உங்கள் நலன்நாடும

உங்கள் சகோதரன்,

இக்வான் அமீர்
(மூத்த இதழியலாளர்)

No comments:

Post a Comment