Sunday, May 28, 2017

உயிரே..! உயிரே..!


மாட்டிறைச்சி அரசியல் இந்திய உபகண்டத்தை உலுக்கிக் கொண்டிருக்கும் இவ்வேளையில்,  2004-ல், மதுரையிலிருந்து வெளிவந்துக் கொண்டிருந்த சிந்தனை மாத பத்திரிகையின் ஆகஸ்ட் இதழில் வெளியான எனது கட்டுரையை நடப்பு நிகழ்வுகளுக்கு பொருத்தமானதாக கருதி மீள்பதிவு செய்கிறேன். - இக்வான் அமீர்

'''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''
அன்புள்ள சகோதரருக்கு,

தங்களை இம்மடல் நல்ல உடல் நிலையுடனும், தூய நல்லெண்ணங்களுடனும் சந்திக்கும் என்று நம்புகின்றேன். அதற்காக இறைவனைப் பிரார்த்திக்கின்றேன்.

எனக்கு நினைவு தெரிந்த காலந்தொட்டு செல்லப் பிராணிகளும், செடி, கொடி இயற்கையுமே என்னோடு மிகச் சிறந்த தோழர்கள். எல்லா வகையான பிராணிகளையும் நான் வளர்த்திருக்கிறேன்.  வாடகைக்கு இருந்த வீடுகள் எல்லாவற்றிலும் செடி, கொடிகள், வீட்டுத் தோட்டம் என்றே காலம் கழிந்திருக்கிறது. அதுவே சில நேரங்களில் பாதகமாகி வீடு காலி செய்யும் அளவுக்கு கொண்டு சேர்த்ததும் உண்டு. நான் அதைப்பற்றி எல்லாம் கவலைப்பட்டதில்லை.

நான் வளர்த்த உயிர்கள் எனக்கு ஆசானாகி வாழ்வின் முக்கிய பாடங்களைப் போதித்துள்ளன. நட்ட மரங்கள் இன்று பல்வேறு இடங்களில் சக மனிதனுக்குத் தோழமை உணர்வோடு சூழலைக் காப்பதால் அதிலும் சந்தோஷம்தான்!

இயற்கைச் சூழலோடுவே வாழ்க்கை..! என்றோர் உறுதியான தீர்மானம் எப்போதும் எனக்குண்டு. என் குடிலை அமைக்கும் பணிகள் தொடரும்போதுகூட கட்டுமான மேஸ்திரி, ”இந்த தென்னையை வெட்டிவிட்டால் நல்லா இருக்கும். இல்லேன்னா தளத்தில் உரசும். இந்த நாவல் மரம் எதற்கு தேவையில்லாமல்?” – என்றெல்லாம் கேட்டபோது, ”வெறும் மரமா இது மேஸ்திரி! இது உயிர். பத்தாண்டுகளாக என்னோடு தோழமையுடன் இருக்கும் உயிர்” – என சொல்லிவிட்டு, ”மேஸ்திரி தளத்தை கொஞ்சம் வளைச்சுக் கட்டுங்க” – என்று உறுதியுடன் சொன்னது நினைவில் எழுகிறது.

ஒருமுறை எனது வளர்ப்பு பிராணி ஒன்று கடும் தொற்றுநோயால் பாதிக்கப்பட்டு   அது என்னைப் பார்த்த ஒரு பார்வை..! ”என்னைக் காக்க மாட்டாயா தோழா?” – என் உள்ளத்தைத் துளைத்தெடுத்த அந்தப் பார்வை என் அத்தனை சிரமங்களையும் மறக்கடித்தது.

இரவு 10 மணிக்கு நானும், என் மகளும் ஒரு வாரத்துக்கும் மேலாக 20 கி.மீட்டர் தொலைவிலிருந்த வேப்பரி கால்நடை மருத்துவமனையின் அவசர சிகிச்சைப்  பிரிவுக்கு அழைத்துச் சென்று ஒரு வழியாக காப்பாற்றிய பின் கிடைத்த நிம்மதி வார்த்தைகளால் விவரிக்க இயலாதது. மீண்டும் உள்ளத்தைத் துளைத்தெடுக்கும் அதேபார்வையால், ”நன்றி தோழா!” – என்று அந்த உயிரினம் நன்றியை வெளிப்படுத்திய விதம் கண்டு அதன் அன்புக்கு நான் அடிமையாகிவிட்டேன் என்றே சொல்ல வேண்டும்.

என் செல்லப் பிராணிகள் சம்பந்தமான மற்றொரு சம்பவம் இது.

வீட்டு மாடியில் நான்கு ஜோடி புறாக்களை வளர்த்து  வந்தேன். ஏற்கனவே பூந்தோட்டம் அங்கு உண்டு. வெகு சொற்ப காலத்திலேயே அந்தப் புறாக்கள் பெரும் கும்பலாய் பல்கிப் பெருகிவிட்டன. இதன் மூலமாக நேரிடையாக நான் அடைந்த பாதிப்பு என் மாடித் தோட்டம் முற்றிலும் அழிந்து போனதுதான்.  ஒரு செடியைக்கூட விடாமல் புறாக்கள் “மொட்டை“ அடித்துவிட்டன.

இந்த நிலையைத் தவிர்த்திருக்க நான் இரண்டு வகையாக செயல்பட்டிருக்க வேண்டும். முதல்நிலை அதிகப்படியான புறாக்களை விற்பனை செய்திருக்க வேண்டும் அல்லது இரண்டாம் நிலையாக, உணவாக அவற்றைப் பயன்படுத்தியிருக்க வேண்டும். அப்படி செய்திருந்தால் புறாக்களின் வளர்ச்சியைக் கட்டுப்படுத்தியிருக்க முடியும். அவற்றின் சமநிலையைக் காத்திருக்கவும் முடியும். அன்பும், இயல்பான இரக்கமும் என்னை அப்படி செய்யவிடாததால் (உணவாக பயன்படுத்த மனம் ஒப்பாததால்) கடைசியில் புறாக்களை என் நண்பர்களுக்கு இலவசமாகவே கொடுத்துவிட வேண்டி வந்தது.

ஒருமுறை, கடல் சீல்கள் பெருகிவிட்டது என அதை வேட்டையாட ஒரு திட்டத்தை உருவாக்கி விரட்டி..  விரட்டி தடியால் அடித்துக் கொன்ற சம்பவங்களை ஆவணப்படமொன்றில் கண்டு அதிர்ச்சியுற்றேன். அந்த அதிர்ச்சி விலகும் முன்னரே, மற்றொரு சம்பவமாக ஆப்பிரிக்காவில் யானைகள் பெருகிவிட்டதாக காரணம் காட்டி அவற்றை தேடி தேடிச் சென்று சுட்டுக் கொன்ற சம்பவங்களும் உண்டு.  சென்னை உயர்நீதிமன்றம்கூட பெருகிவரும் தெருநாய்களை கட்டுப்படுத்துவது சம்பந்தமாக எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை என்ன?” என்று மாநகராட்சியிடம் கேள்விகளை எழுப்பிய சம்பவங்களும் உண்டு.

உலகில் ஒன்றை ஒன்று சார்ந்து வாழ்க்கை இருப்பது யதார்த்தமானது. எதுவும் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும்வரை யாருக்கும் தொல்லை இருக்காது, மரமாகட்டும், விலங்காகட்டும், பறவைகளாகட்டும், கால்நடைகளாகட்டும், மனிதனாகட்டும் அல்லது கண்ணுக்குப் புலப்படும் உயிர்கள், கண்ணுக்குப் புலப்படாத உயிர்கள் எதுவொன்றாக இருந்தாலும் எல்லாமே உயிர்கள் என்னும் பட்டியலில் அடங்குபவைதான்!

அதேசமயம் யதார்த்தத்தை மீறிய “மிகைத்தல்“ நிலையும் இதில் உண்டு. அதை அடிப்படையாகக் கொண்டுதான் “பௌத்தம்“ மற்றும் “ஜைனம்“ போன்ற சமங்களைச் சார்ந்தோர் மொட்டை அடித்துக் கொண்டு நாசியில் துணியைக் கட்டிக் கொண்டு கையில் மயில் இறகுடன் காணப்படுகிறார்கள்.

தலைமுடியில் பேன், காற்று மற்றும் தரையிலிருக்கும் உயிர்கள் ஆகியவற்றுக்கு துன்பம் விளைவிக்கக் கூடாது என்றும் தத்துவத்தின் வெளிப்பாடே இது.

உலகில் இறைவனின் பிரதிநிதி என்னும் அந்தஸ்தில் இருப்பவன் மனிதன். பூலோகத்தை அடைக்கலப் பொருளாகப் பெற்றிருப்பவன். குறிப்பிட்ட காலம், குறிப்பிட்ட தவணை ஒப்படைக்கப்பட்ட அமானிதம் என்னும் அடைக்கலப் பொருளை சரியான முறையில் பயன்படுத்த வேண்டும் என்பது அவன்மீது விதிக்கப்பட்ட விதி. இறைவேதம் மற்றும் இறைவனின் திருத்தூதர்கள் மூலம் வகுத்தளிக்கப்பட்ட அவனுடைய வாழ்க்கைத் தேவைகளுக்கான அனுமதிக்கப்பட்ட மற்றும் விலக்கப்பட்ட வழிமுறைகளைப் பேணி வாழக் கடமைப்பட்டவன்.

இந்த விஷயத்தில் அனுமதிக்கப்பட்ட (ஹலால்), விலக்கப்பட்ட (ஹராம்) அவனுடைய உணவு தேவையும் உட்பட்டதுதான். உலக இறுதி நாள்வரையிலான மனிதனின் உணவுத் தேவைக்கான வழிகாட்டலும் இறையருளால் மனிதனுக்குக் கிடைத்துள்ளது. அது ஒரு பொதுவிதி. உலகின் எல்லா மனிதர்களுக்கும் பொதுவான வாழ்வியல் விதி அது.

உலகின் ஒரு பகுதியில் வாழும் மனிதன் தனது வாழ்வின் தேவைக்காக (உயிருள்ள) தாவரங்களின் வழியே பெறுவதில் எந்த விதிமுறை மீறலும் இல்லை. அதேபோல, உலகின் மற்றொரு பகுதியான வட-தென் துருவங்களில் வாழும் மனிதன் தனது தேவைக்காக மீனையும், மானையும் வேட்டையாடி உணவுத் தேவைகளை அடைய முயல்வதும் விதிமுறை மீறல் இல்லை.

உண்ணும்பொருள் மனிதனுக்குத் தீங்கு விளைவிப்பவையா? இல்லையா? என்பது பொதுவிதி. உணவுப் பொருளை முறையாக எப்படி தீங்கில்லாமல் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்பது பொதுவிதி.

இதில் மனிதரில் ஒரு சாரர், பிறிதொரு சாரர் மீது எந்த திணிப்பையும் மேற்கொள்ளக் கூடாது. இதுதான் சரி..! அது தவறு..! என்று வியாக்கியானம் பேசி உணவுத் தேவைக்கான அடுத்தவர் உரிமைகளைப் பறிக்கக் கூடாது.

உண்மையிலேயே சில மனித மனங்களில் உறையும் இறையருளான அளவுக்கு மிஞ்சிய கருணையைப் பொதுவிதியாக்கி சக மனிதர்களின் உயிர் வாழ்க்கைக்கு ஊறு விளைவிக்கக் கூடாது. தாங்கள் விரும்பும் சட்டங்களை அடுத்தவர் மீதும் திணிக்கக் கூடாது.

அறிவியல் ரீதியாக உலகில் உயிரற்ற சைவ உணவு என்று எதுவொன்றும் இல்லை.   அதனால், சைவமோ, அசைவமோ எதுவாயினும் இறைவனின் வழிகாட்டுதலின் அடிப்படையில் உணவுத் தேவைக்கான அனுமதிதான். ஒருகாலும் கட்டாயம் அல்ல. யாருக்கு எது விருப்பமோ, அவற்றை உண்ண யாருக்கும் எந்த ஆட்சேபணையும் இல்லை.

அதேசமயம், அசைவம் உண்ண இறைவனின் அனுமதி உண்டு என காரணம் காட்டி, பொட்டலத்தைப் போல மூட்டைக் கட்டியோ, மரக்கட்டைகளைப் போல நெருக்கியோ கதறக் கதற ஆடு, மாடு, கோழி போன்ற கால்நடைகளையும், உயிரினங்களையும் வாகனங்களில் கொண்டு செல்வது தடுக்கப்பட்டது. சுமக்க முடியாத பெரும் சுமையேற்றி வாயில்லா ஜீவன்களைத் துன்புறுத்துவதும் உரிமை மீறல்கள்தான்..!

”ஜீவகாருண்யம் சம்பந்தமாக இஸ்லாத்தின் நிலைப்பாடு என்ன? உயிர்களிடம் அன்பு காட்டுதல்தானே சமயங்களின் உயர் பண்பு? அப்படி இருக்கும்போது, அசைவ உணவு ஏன்?” - என்ற தங்களின் கேள்விக்கான பதிலாகத்தான் நான் இவ்வளவு சொல்ல வேண்டி வந்தது.

பூவினும் மெல்லிய மனித உணா்வுகளை காயப்படுத்திடக் கூடாதே என்ற முழுமையான எச்சரிக்கையுடன் தம் கருத்துக்களைப் பரப்புரைச் செய்த உலக மக்களின் அருளாக இறைவனால் அனுப்பப்பட்ட  நபிகளாரின் வழிமுறையைப் பின்பற்றிதான் நான் நடந்திருக்கிறேன்.

ஒருவேளை இதன்மூலம் தங்களின் உணர்வுகள் பாதிக்கப்பட்டிருந்தால், அதற்கான நிபந்தனையற்ற வருத்தம் தெரிவித்துக் கொள்வதிலும் எனக்கு எந்தவிதமான கூச்சமும் இல்லை. தங்களின் தேடலுக்கு நேரிய வழியைக் காட்ட இறைவனைப் பிரார்த்திக்கின்றேன்.

தங்கள் நலன் நாடும்,

சகோதரன் இக்வான் அமீர்

2 comments:

 1. மிகவும் அருமையான பதிவு அய்யா ..நீங்கள் குறிப்பிட்டிருக்கும் புறாக்கள் மற்றும் கோழிகள் எங்கள் வீட்டிலும் நடந்துள்ளது ..நிறைய சண்டை கோழிகளை இலவசமாகவும் கொடுத்துள்ளோம் ..
  ஒருவர் மீது திணிக்கப்படும் எந்த ஒரு விஷயமும் எதிர்ப்பையே சம்பாதிக்கும் என்பதை ஆள்பவர்கள் புரிந்துகொள்ளவேண்டிய கட்டாயம் இப்போது வந்துள்ளது ..

  அனைவருக்கும் எளிதில் புரியும் வண்ணம் அழகாக கூறியமைக்கு நன்றி ஐயா

  ReplyDelete
  Replies
  1. மதிப்புமிக்க பின்னூட்டத்துக்கு நன்றி Angelin

   Delete