Tuesday, May 30, 2017

முதன்மையானது ... மாடா? நாடா?இந்நிலையில் மோடி சர்க்காரின் பாஜக அரசு இந்திய சமூகத்தின் ஒரு பகுதி மக்களை மனதில் நினைத்து அவர்களை பழிவாங்குவதாக தப்புக் கணக்கு போட்டு எடுத்த முட்டாள் தனமான முடிவு உண்மையில் ஒட்டு மொத்த தேசத்தின் பொருளாதாரத்தை நிலைகுலையச் செய்ய தொடுத்த யுத்தமாகும். இந்திய அரசியல் அமைப்பு ஒவ்வொரு இந்தியனுக்கும் தந்துள்ள அடிப்படை உரிமையை மனு சட்டங்களின் அடிப்படையில் பறிக்கும் முடிவாகும். >>> இக்வான் அமீர் <<<

''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''

125 கோடி மக்கள் வாழும் உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடான இந்தியாவில்,  வேதகாலம் தொட்டே மாட்டிறைச்சி உண்பது சமய நம்பிக்கையுடன் கலந்த ஒன்று என்று வேத, இதிகாசங்களின் பல்வேறு பகுதிகளில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்து சமயக்கருத்துகளுக்கு எதிராக பாஜக செயல்பட்டு வருவது வருத்தமளிக்கிறது.

மாடுகளின் உடலிருந்து வெறும் 30 விழுக்காடு பகுதி மட்டுமே இறைச்சிக்காக பயன்படுத்தப்படுகிறது.

ஆனால், அதன் 70 விழுக்காடு பகுதி அதாவது மாட்டு கொம்புகள், வால், தோல், ரத்தம், எலும்புகள் இவை அனைத்தும் நாம் அன்றாடம் பயன்படுத்தும் உணவுப் பொருட்களின் உற்பத்திக்கான முக்கியப் பொருளாக பயன்படுத்தப்படுகின்றன. அத்தோடு வணிக சந்தையில் லட்சக்கணக்கான ரூபாயை வருவாயாக ஈட்டித் தருகின்றன. 

உதாரணமாக நமது நாட்டின் 125 கோடி பேரும் ஏதோ ஒருவகையில் சர்க்கரையை பயன்படுத்தியே ஆக வேண்டியுள்ளது. மாட்டின் எலும்புத்தூள் கலக்காமல் சர்க்கரை உற்பத்தி இல்லை. சோப்பு, பற்பசை போன்ற முக்கிய தயாரிப்புகளிலும் மாட்டின் எலும்புத் தூள் பயன்படுத்தப்படுகிறது.

நமது காவல்துறையும், ராணுவமும் பயன்படுத்தும் காலணிகளும், பெல்ட்டுகளும் மாட்டுத் தோலிலிருந்து தயாரிக்கப்படுபவை. மாட்டுத் தோலிலிருந்து கிடைக்கும் ஜெலடின் என்ற பொருளிலின் தூள் உணவு பொருட்களிலும், மாத்திரைகளின் மேல் பூச்சுக்காகவும் பயன்படுத்தப்படுகிறது.

மாட்டின் ரத்தம் டானிக்குகளும், ஷு பாலிஷும் தயாரிக்க பயன்படுத்தப்படுகிறது.

மாட்டு வால் முடியிலிருந்து பிரஷ்களும், டஸ்டர்களும் தயாரிக்கப்படுகின்றன.

மாட்டின் குடற்பகுதியைப் பயன்படுத்தி அறுவை சிகிச்சைக்கான நூல், பாட்மிட்டன் ராக்கெட் இழைகள், இசைக்கருவிகளுக்கான நாண்களும் தயாரிக்கப்படுகின்றன.

மாட்டு சுரப்பிகளிலிருந்து இன்சுலின் போன்ற முக்கிய மருத்துவப் பொருட்கள் தயாரிக்கப்படுகின்றன.

மாட்டு கொழுப்பிலிருந்து பிஸ்கட் போன்ற உணவுப் பொருட்கள் தயாரிக்கப்படுகின்றன. 

மாட்டிறைச்சி ஏற்றுமதியில் உலகில் இந்தியா இரண்டாவது இடம் வகித்து கோடிக்கணக்கான வருவாயை ஈட்டித் தரும் நிலையில் இனி இறைச்சி ஏற்றுமதியும் தடை செய்யப்படும்.

இப்படி மாடு மறைமுகமாய் அன்றாடம் நமது முக்கிய உணவுப் பொருட்களின் பயன்படாகவும், பொருளாதாரத்தின் முக்கிய அம்சமாகவும் உள்ளது.

இந்நிலையில் மோடி சர்க்காரின் பாஜக அரசு இந்திய சமூகத்தின் ஒரு பகுதி மக்களை மனதில் நினைத்து அவர்களை பழிவாங்குவதாக தப்புக் கணக்கு போட்டு எடுத்த முட்டாள் தனமான முடிவு உண்மையில் ஒட்டு மொத்த தேசத்தின் பொருளாதாரத்தை நிலைகுலையச் செய்ய தொடுத்த யுத்தமாகும். இந்திய அரசியல் அமைப்பு ஒவ்வொரு இந்தியனுக்கும் தந்துள்ள அடிப்படை உரிமையை மனு சட்டங்களின் அடிப்படையில் பறிக்கும் முடிவாகும்.

இனி நாம் அடிப்படையான உணவுப் பொருட்களை பயன்படுத்த முடியாது.

நமது காவல்துறையும், ராணுவமும் உள்ளுரில் தயாரிக்கப்பட்ட காலணிகளையும், பெல்ட்டுகளையும் அணிய முடியாது.

முக்கிய மருந்து பொருட்களையும், அறுவை சிகிச்சைக்காக பயன்படுத்தும் பொருட்களையும் இறக்குமதி செய்ய வேண்டி வரும். 

அதனால், ஒட்டு மொத்த நாட்டின் பிரச்னையை சிறுபான்மையினர் தங்கள் பிரச்னையாக முடிவெடுத்துக் கொண்டு தெருவில் இறங்க வேண்டிய அவசியமில்லை. பதட்டப்பட வேண்டியதுமில்லை. இறைச்சி என்பது உணவு பொருள் மட்டுமே. இதிலும் ஏராளமான சலுகைகள் (ஒன்றில்லாவிட்டால் மற்றொன்று என்று) வழிகாட்டப்பட்டுள்ளன.

முஸ்லிம் சமூகம் உலகளாவிய சமூகமாகையால், தியாகத் திருநாள் போன்ற நாட்களை எண்ணி கலங்கிக் கொண்டிருக்க வேண்டியதில்லை. உலகின் எந்தப் பகுதி முஸ்லிம்களிடமும் தனது பங்குக்கான குர்பானியை நிறைவேற்றிக் கொள்ள முடியும்.

இந்தியாவையும், அதன் அமைப்பையும் சீர்கெடுக்க பதவியேற்றிருக்கும் பாசிசவாதிகளை விரட்டியடிப்பதற்கான வழிமுறைகளை காண பொது சமூகத்துடன் கரம் கோர்த்து இணைந்து செயல்பட வேண்டிய தருணமிது.

நம் முன்னோர்களின் அரும், பெரும் தியாகத்தால் கிடைத்த இந்திய விடுதலை பறிபோய் நாடு மீண்டும் அடிமைப்படாமல் காப்பதே மாட்டை விட மிக முக்கியமான பொறுப்பு என்பதை உணர வேண்டிய காலமிது.


Sunday, May 28, 2017

உயிரே..! உயிரே..!


மாட்டிறைச்சி அரசியல் இந்திய உபகண்டத்தை உலுக்கிக் கொண்டிருக்கும் இவ்வேளையில்,  2004-ல், மதுரையிலிருந்து வெளிவந்துக் கொண்டிருந்த சிந்தனை மாத பத்திரிகையின் ஆகஸ்ட் இதழில் வெளியான எனது கட்டுரையை நடப்பு நிகழ்வுகளுக்கு பொருத்தமானதாக கருதி மீள்பதிவு செய்கிறேன். - இக்வான் அமீர்

'''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''
அன்புள்ள சகோதரருக்கு,

தங்களை இம்மடல் நல்ல உடல் நிலையுடனும், தூய நல்லெண்ணங்களுடனும் சந்திக்கும் என்று நம்புகின்றேன். அதற்காக இறைவனைப் பிரார்த்திக்கின்றேன்.

எனக்கு நினைவு தெரிந்த காலந்தொட்டு செல்லப் பிராணிகளும், செடி, கொடி இயற்கையுமே என்னோடு மிகச் சிறந்த தோழர்கள். எல்லா வகையான பிராணிகளையும் நான் வளர்த்திருக்கிறேன்.  வாடகைக்கு இருந்த வீடுகள் எல்லாவற்றிலும் செடி, கொடிகள், வீட்டுத் தோட்டம் என்றே காலம் கழிந்திருக்கிறது. அதுவே சில நேரங்களில் பாதகமாகி வீடு காலி செய்யும் அளவுக்கு கொண்டு சேர்த்ததும் உண்டு. நான் அதைப்பற்றி எல்லாம் கவலைப்பட்டதில்லை.

நான் வளர்த்த உயிர்கள் எனக்கு ஆசானாகி வாழ்வின் முக்கிய பாடங்களைப் போதித்துள்ளன. நட்ட மரங்கள் இன்று பல்வேறு இடங்களில் சக மனிதனுக்குத் தோழமை உணர்வோடு சூழலைக் காப்பதால் அதிலும் சந்தோஷம்தான்!

இயற்கைச் சூழலோடுவே வாழ்க்கை..! என்றோர் உறுதியான தீர்மானம் எப்போதும் எனக்குண்டு. என் குடிலை அமைக்கும் பணிகள் தொடரும்போதுகூட கட்டுமான மேஸ்திரி, ”இந்த தென்னையை வெட்டிவிட்டால் நல்லா இருக்கும். இல்லேன்னா தளத்தில் உரசும். இந்த நாவல் மரம் எதற்கு தேவையில்லாமல்?” – என்றெல்லாம் கேட்டபோது, ”வெறும் மரமா இது மேஸ்திரி! இது உயிர். பத்தாண்டுகளாக என்னோடு தோழமையுடன் இருக்கும் உயிர்” – என சொல்லிவிட்டு, ”மேஸ்திரி தளத்தை கொஞ்சம் வளைச்சுக் கட்டுங்க” – என்று உறுதியுடன் சொன்னது நினைவில் எழுகிறது.

ஒருமுறை எனது வளர்ப்பு பிராணி ஒன்று கடும் தொற்றுநோயால் பாதிக்கப்பட்டு   அது என்னைப் பார்த்த ஒரு பார்வை..! ”என்னைக் காக்க மாட்டாயா தோழா?” – என் உள்ளத்தைத் துளைத்தெடுத்த அந்தப் பார்வை என் அத்தனை சிரமங்களையும் மறக்கடித்தது.

இரவு 10 மணிக்கு நானும், என் மகளும் ஒரு வாரத்துக்கும் மேலாக 20 கி.மீட்டர் தொலைவிலிருந்த வேப்பரி கால்நடை மருத்துவமனையின் அவசர சிகிச்சைப்  பிரிவுக்கு அழைத்துச் சென்று ஒரு வழியாக காப்பாற்றிய பின் கிடைத்த நிம்மதி வார்த்தைகளால் விவரிக்க இயலாதது. மீண்டும் உள்ளத்தைத் துளைத்தெடுக்கும் அதேபார்வையால், ”நன்றி தோழா!” – என்று அந்த உயிரினம் நன்றியை வெளிப்படுத்திய விதம் கண்டு அதன் அன்புக்கு நான் அடிமையாகிவிட்டேன் என்றே சொல்ல வேண்டும்.

என் செல்லப் பிராணிகள் சம்பந்தமான மற்றொரு சம்பவம் இது.

வீட்டு மாடியில் நான்கு ஜோடி புறாக்களை வளர்த்து  வந்தேன். ஏற்கனவே பூந்தோட்டம் அங்கு உண்டு. வெகு சொற்ப காலத்திலேயே அந்தப் புறாக்கள் பெரும் கும்பலாய் பல்கிப் பெருகிவிட்டன. இதன் மூலமாக நேரிடையாக நான் அடைந்த பாதிப்பு என் மாடித் தோட்டம் முற்றிலும் அழிந்து போனதுதான்.  ஒரு செடியைக்கூட விடாமல் புறாக்கள் “மொட்டை“ அடித்துவிட்டன.

இந்த நிலையைத் தவிர்த்திருக்க நான் இரண்டு வகையாக செயல்பட்டிருக்க வேண்டும். முதல்நிலை அதிகப்படியான புறாக்களை விற்பனை செய்திருக்க வேண்டும் அல்லது இரண்டாம் நிலையாக, உணவாக அவற்றைப் பயன்படுத்தியிருக்க வேண்டும். அப்படி செய்திருந்தால் புறாக்களின் வளர்ச்சியைக் கட்டுப்படுத்தியிருக்க முடியும். அவற்றின் சமநிலையைக் காத்திருக்கவும் முடியும். அன்பும், இயல்பான இரக்கமும் என்னை அப்படி செய்யவிடாததால் (உணவாக பயன்படுத்த மனம் ஒப்பாததால்) கடைசியில் புறாக்களை என் நண்பர்களுக்கு இலவசமாகவே கொடுத்துவிட வேண்டி வந்தது.

ஒருமுறை, கடல் சீல்கள் பெருகிவிட்டது என அதை வேட்டையாட ஒரு திட்டத்தை உருவாக்கி விரட்டி..  விரட்டி தடியால் அடித்துக் கொன்ற சம்பவங்களை ஆவணப்படமொன்றில் கண்டு அதிர்ச்சியுற்றேன். அந்த அதிர்ச்சி விலகும் முன்னரே, மற்றொரு சம்பவமாக ஆப்பிரிக்காவில் யானைகள் பெருகிவிட்டதாக காரணம் காட்டி அவற்றை தேடி தேடிச் சென்று சுட்டுக் கொன்ற சம்பவங்களும் உண்டு.  சென்னை உயர்நீதிமன்றம்கூட பெருகிவரும் தெருநாய்களை கட்டுப்படுத்துவது சம்பந்தமாக எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை என்ன?” என்று மாநகராட்சியிடம் கேள்விகளை எழுப்பிய சம்பவங்களும் உண்டு.

உலகில் ஒன்றை ஒன்று சார்ந்து வாழ்க்கை இருப்பது யதார்த்தமானது. எதுவும் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும்வரை யாருக்கும் தொல்லை இருக்காது, மரமாகட்டும், விலங்காகட்டும், பறவைகளாகட்டும், கால்நடைகளாகட்டும், மனிதனாகட்டும் அல்லது கண்ணுக்குப் புலப்படும் உயிர்கள், கண்ணுக்குப் புலப்படாத உயிர்கள் எதுவொன்றாக இருந்தாலும் எல்லாமே உயிர்கள் என்னும் பட்டியலில் அடங்குபவைதான்!

அதேசமயம் யதார்த்தத்தை மீறிய “மிகைத்தல்“ நிலையும் இதில் உண்டு. அதை அடிப்படையாகக் கொண்டுதான் “பௌத்தம்“ மற்றும் “ஜைனம்“ போன்ற சமங்களைச் சார்ந்தோர் மொட்டை அடித்துக் கொண்டு நாசியில் துணியைக் கட்டிக் கொண்டு கையில் மயில் இறகுடன் காணப்படுகிறார்கள்.

தலைமுடியில் பேன், காற்று மற்றும் தரையிலிருக்கும் உயிர்கள் ஆகியவற்றுக்கு துன்பம் விளைவிக்கக் கூடாது என்றும் தத்துவத்தின் வெளிப்பாடே இது.

உலகில் இறைவனின் பிரதிநிதி என்னும் அந்தஸ்தில் இருப்பவன் மனிதன். பூலோகத்தை அடைக்கலப் பொருளாகப் பெற்றிருப்பவன். குறிப்பிட்ட காலம், குறிப்பிட்ட தவணை ஒப்படைக்கப்பட்ட அமானிதம் என்னும் அடைக்கலப் பொருளை சரியான முறையில் பயன்படுத்த வேண்டும் என்பது அவன்மீது விதிக்கப்பட்ட விதி. இறைவேதம் மற்றும் இறைவனின் திருத்தூதர்கள் மூலம் வகுத்தளிக்கப்பட்ட அவனுடைய வாழ்க்கைத் தேவைகளுக்கான அனுமதிக்கப்பட்ட மற்றும் விலக்கப்பட்ட வழிமுறைகளைப் பேணி வாழக் கடமைப்பட்டவன்.

இந்த விஷயத்தில் அனுமதிக்கப்பட்ட (ஹலால்), விலக்கப்பட்ட (ஹராம்) அவனுடைய உணவு தேவையும் உட்பட்டதுதான். உலக இறுதி நாள்வரையிலான மனிதனின் உணவுத் தேவைக்கான வழிகாட்டலும் இறையருளால் மனிதனுக்குக் கிடைத்துள்ளது. அது ஒரு பொதுவிதி. உலகின் எல்லா மனிதர்களுக்கும் பொதுவான வாழ்வியல் விதி அது.

உலகின் ஒரு பகுதியில் வாழும் மனிதன் தனது வாழ்வின் தேவைக்காக (உயிருள்ள) தாவரங்களின் வழியே பெறுவதில் எந்த விதிமுறை மீறலும் இல்லை. அதேபோல, உலகின் மற்றொரு பகுதியான வட-தென் துருவங்களில் வாழும் மனிதன் தனது தேவைக்காக மீனையும், மானையும் வேட்டையாடி உணவுத் தேவைகளை அடைய முயல்வதும் விதிமுறை மீறல் இல்லை.

உண்ணும்பொருள் மனிதனுக்குத் தீங்கு விளைவிப்பவையா? இல்லையா? என்பது பொதுவிதி. உணவுப் பொருளை முறையாக எப்படி தீங்கில்லாமல் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்பது பொதுவிதி.

இதில் மனிதரில் ஒரு சாரர், பிறிதொரு சாரர் மீது எந்த திணிப்பையும் மேற்கொள்ளக் கூடாது. இதுதான் சரி..! அது தவறு..! என்று வியாக்கியானம் பேசி உணவுத் தேவைக்கான அடுத்தவர் உரிமைகளைப் பறிக்கக் கூடாது.

உண்மையிலேயே சில மனித மனங்களில் உறையும் இறையருளான அளவுக்கு மிஞ்சிய கருணையைப் பொதுவிதியாக்கி சக மனிதர்களின் உயிர் வாழ்க்கைக்கு ஊறு விளைவிக்கக் கூடாது. தாங்கள் விரும்பும் சட்டங்களை அடுத்தவர் மீதும் திணிக்கக் கூடாது.

அறிவியல் ரீதியாக உலகில் உயிரற்ற சைவ உணவு என்று எதுவொன்றும் இல்லை.   அதனால், சைவமோ, அசைவமோ எதுவாயினும் இறைவனின் வழிகாட்டுதலின் அடிப்படையில் உணவுத் தேவைக்கான அனுமதிதான். ஒருகாலும் கட்டாயம் அல்ல. யாருக்கு எது விருப்பமோ, அவற்றை உண்ண யாருக்கும் எந்த ஆட்சேபணையும் இல்லை.

அதேசமயம், அசைவம் உண்ண இறைவனின் அனுமதி உண்டு என காரணம் காட்டி, பொட்டலத்தைப் போல மூட்டைக் கட்டியோ, மரக்கட்டைகளைப் போல நெருக்கியோ கதறக் கதற ஆடு, மாடு, கோழி போன்ற கால்நடைகளையும், உயிரினங்களையும் வாகனங்களில் கொண்டு செல்வது தடுக்கப்பட்டது. சுமக்க முடியாத பெரும் சுமையேற்றி வாயில்லா ஜீவன்களைத் துன்புறுத்துவதும் உரிமை மீறல்கள்தான்..!

”ஜீவகாருண்யம் சம்பந்தமாக இஸ்லாத்தின் நிலைப்பாடு என்ன? உயிர்களிடம் அன்பு காட்டுதல்தானே சமயங்களின் உயர் பண்பு? அப்படி இருக்கும்போது, அசைவ உணவு ஏன்?” - என்ற தங்களின் கேள்விக்கான பதிலாகத்தான் நான் இவ்வளவு சொல்ல வேண்டி வந்தது.

பூவினும் மெல்லிய மனித உணா்வுகளை காயப்படுத்திடக் கூடாதே என்ற முழுமையான எச்சரிக்கையுடன் தம் கருத்துக்களைப் பரப்புரைச் செய்த உலக மக்களின் அருளாக இறைவனால் அனுப்பப்பட்ட  நபிகளாரின் வழிமுறையைப் பின்பற்றிதான் நான் நடந்திருக்கிறேன்.

ஒருவேளை இதன்மூலம் தங்களின் உணர்வுகள் பாதிக்கப்பட்டிருந்தால், அதற்கான நிபந்தனையற்ற வருத்தம் தெரிவித்துக் கொள்வதிலும் எனக்கு எந்தவிதமான கூச்சமும் இல்லை. தங்களின் தேடலுக்கு நேரிய வழியைக் காட்ட இறைவனைப் பிரார்த்திக்கின்றேன்.

தங்கள் நலன் நாடும்,

சகோதரன் இக்வான் அமீர்

Saturday, May 27, 2017

சீமானுக்கு ஒரு மடல்அன்புள்ள தம்பி சீமானுக்கு,

”தங்கள் மீது, இறைவனின் சாந்தியும், சமாதானமும் என்றென்றும் நிலவ” பிரார்த்திக்கின்றேன்.

இது ரமளான் மாதம். நாங்கள் நோன்பு நோற்பதிலும், இறைவனின் சமீபத்துக்காக இறை வணக்கங்களிலும் ஈடுபட்டிருக்கும் நேரம். தூங்குவதற்குகூட இந்த மாதத்தில் எங்களுக்கு சரியாக நேரம் கிடைப்பதில்லை. இவற்றை மாமன், மச்சான் உறவு முறையினரான நீங்கள் அறிந்திருப்பீர்கள் என்றே எண்ணுகின்றேன். இப்படிப்பட்ட ஒரு காலக்கட்டத்தில் இந்த மடலை எழுதுகிறேன் என்பது இதன் முக்கியத்துவத்தை உங்களுக்கு உணர்த்தும்.

சீமான்,

உங்களின் பேச்சுக்களை நேரிடையாக கேட்கும் வாய்ப்பு இதுவரை கிடைக்காவிட்டாலும் உங்கள் காணொளிகளை விரும்பி கேட்போரில் நானும் ஒருவன். அந்த அப்பத்தா, அண்ணன், தங்கை, என்று ஒரு மலர் மாலையாய் உறவு முறைகளோடு உறவாடி, எதிர்த்து பேசப்படும் நபரையும் மிகவும் மரியாதையுடன் விளிக்கும் அந்த காணொளிகளை அதுவும் என் குடும்பத்தாரோடு விரும்பி கேட்பேன்.

தமிழன் என்பதற்காக தாங்கள் தரும் விளக்கம் அழகானது.

சிறுபான்மையினர் என்றழைக்கப்படும் முஸ்லிம்கள் உண்மையிலேயே சிறுபான்மை இனத்தவர் அல்ல. அவர்கள் பெரும்பான்மை இனத்து இந்த மண்ணின் மைந்தர்கள். தீண்டாமை ஒடுக்குமுறையிலிருந்து சமத்துவ சமயம் தழுவியவர்கள், தமிழ் இனத்தவர்கள் என்று கொடிதாங்கியாய் உறவுமுறையோடு தாங்கள் மேடையில் பேசுவது அரசியல் அரங்கில் மிகவும் வித்யாசமானது. வட்டார மொழியில், உலக அறிஞர்களின் உதாரணத்தோடு ஆற்றும் உரை லேசானதல்ல.

இலங்கையில் விடுதலைப் புலிகள் முஸ்லிம்களுக்கு இழைத்த அநீதிகளுக்கு மேடையில் வருத்தம் தெரிவித்த நேர்மையும் பாராட்டத்தக்கது. கன்னியாக்குமரியிலிருந்து காஷ்மீர்வரை நீளும் தங்கள் பேச்சு அழகிய சொல்லோவியம்தான்!

தம்பி சீமான் தமிழக அரசியலையும் தாண்டி இந்திய அரசியலில் அதிர்வலைகளை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறார். இத்தகைய நபர்கள் நமது நாட்டில் நிறைய பேர் தேவை என்றுகூட நான் சிலாகிப்பதுண்டு.

எனது ரசிப்புத்தன்மையும், சிலாகிப்பும் ஒருவேளை எனது தொகுதியில் உங்கள் வேட்பாளர்கள் நிற்பின் அவர்களுக்கு வாக்களிப்பதுமான எனது உடன்பாடுகள் நாம் தமிழர் கட்சியின் தம்பி சீமானுக்கு ஆதரவாக இருப்பினும், தங்கள் தமிழ் தேசியத்தின் மீது முரண்பாடுகள் கொண்டவர்களில் நானும் ஒருவன் என்பதை தெளிவுபடுத்திட விரும்புகின்றேன்.

சமத்துவம் பெற இஸ்லாத்தைத் தழுவிய நாங்கள் அதன் பரந்த வெளிக்குள் சிக்கிக் கொண்டதும், யாதும் ஊரே யாவரும் கேளீர் என்ற பொன்மொழிக்கேற்பவே உலகளாவிய தத்துவத்தைப் பின்பற்றி உலகை ஒரு குடும்பமாய் பாவிப்பதன் தாக்கமாகவும் இது இருக்கலாம்.

தனது இனத்தை நேசிப்பதும், அந்த இனத்துக்காக உழைப்பதும், சொந்த இன மானத்துக்காக ரோஷம் கொள்வதும் இயல்பானதுதான். இவை எல்லாம் அனுமதிக்கப்பட்டவைதான். ஆனால், தன் இனத்துக்கான கண்மூடித்தனமான வெறிக்கொள்வதை நபிகளார், கிணற்றில் விழ இருக்கும் ஒட்டகத்தின் வாலைப் பிடித்து இழுப்பதற்கு ஒப்பாகும் என்று அழகிய உதாரணத்துடன் விளக்குகிறார்கள். ஒட்டகத்தோடு, அதன் வாலைப் பிடித்து இழுத்துக் கொண்டிருப்போரும் கிணற்றில் விழுவதை தவிர்க்கவே இயலாது என்பதே இதன் பொருள்.

சீமான், தங்கள் கொள்கை, கோட்பாடுகள் ஏற்கனவே தீர்மானமானவை என்பதை நான் அறிவேன். பெரும் வலியிலிருந்தும், வேதனைகளிலிருந்தும் இழப்பதற்கு இனி ஒன்றுமேயில்லை என்ற வெறுமையிலிருந்தும் உருவானவை என்பதும் தெரியும். இதிலிருந்து மீண்டு எழ வேண்டிய ஒரு பெரும் பொறுப்பு தலைவன் என்ற முறையில் தங்களுக்கு இருக்கிறது என்பதை தாங்களும் அறிவீர்கள்.

நான் முதல்வரானால் தமிழகத்தை எப்படி முன்னெடுத்து செல்வேன் என்று தாங்கள் மேடைகளில் பெருத்த நம்பிக்கையோடு துல்லியமான திட்டங்களை அறிவிப்பது பாராட்ட வேண்டியவைதான்! அதேநேரத்தில் சீமான் என்றொரு தனி மனிதனால் மட்டுமே அவை செயல்படுத்தப்படுபவை என்று எளிதாக நினைப்பது குழந்தைத்தமானதாகவே இருக்கிறது. அரசு எந்திரத்தை நிர்வகிப்பவர்களின் ஒட்டுமொத்த சிந்தனையையும் ஒருசேர திருப்பி ஒத்துழைப்பு பெறுவதற்கு சீமானின் கையில் எந்த மந்திரக்கோலும் இல்லை. அதிலும் ஆதிக்க வெறியர்களின் கையில் அரசு எந்திரத்தின் பெரும் பகுதி சிக்கி உள்ள நிலையில் திடுப்பென்று சிங்கபூர் மாற்றங்களை உருவாக்கிடுவது எளிதானதல்ல.

அதேபோல, ஜப்பானிய இளைஞர் அளவு சுயநலமற்ற இளைஞர்களும் நம்மிடம் இல்லை. நமது இளைஞர்களை மேம்படுத்தி அவர்களை ஒழுக்க மாண்புகளில் தலைச்சிறந்தவர்களாக்க இதுவரை எத்தகைய பயிற்சியும் அவர்களுக்கு அளிக்கப்படவில்லை.

அய்யா மோடி சர்க்காரின் ஒளிமயமான இந்தியா என்ற சொல் ஜாலமாக தங்கள் மேடை பேச்சுகள் ஆகிவிடக் கூடாதே என்ற கவலையில்தான் இதை சொல்கிறேன்.

தங்கள் பேச்சுகளில் நெருப்பு கங்குகளாய் வெளிப்படும் கருத்துக்களை ஆட்சி எந்திரத்தார் வெகு நாட்களுக்கு பொறுத்துக் கொள்ள மாட்டார்கள். வெகு சீக்கிரத்தில் அதிகார எந்திரம் உங்கள் மீது பாயும். நீங்கள் முற்றிலும் ஒடுக்கப்படுவீர்கள் என்ற உண்மையான கவலையினால்தான் இந்த மடல் இந்த அர்த்த ராத்திரியில், நோன்பு காலத்தில் எழுதப்படுகிறது.

பால்தாக்கரேக்களும், உமாபாரதிகளும், யோகி ஆதித்யநாத்களும், சாத்வி ரிதம்பராக்களும் நாமும் ஒன்றல்ல என்பதை முதலில் நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். இந்திய ஜனநாயக அமைப்பின் இரு வேறு கூறுகளாய் நாம் பிரிக்கப்பட்டுள்ளதுதான் நிஜம். இரு வேறு பார்வைகள். இரு வேறு நீதி, நியமங்கள் என்று நமது அமைப்பு அடுக்குமுறைகளாய் உள்ளது.

செக்கிழுத்த செம்மல்களாய், கப்பலோட்டிய தமிழன்களாய், வீரப்பாண்டிய கட்டபொம்மன்களாய் இந்திய அமைப்பில் வெள்ளையனின் சாயல்களில் நமது சட்டங்கள் நம்மீதே பாயும் காலமும் உண்டு. உரிமைகளைக் கேட்டதற்கு காலம் முழுக்க சிறையிலிருந்த காஷ்மீர் சிங்கம் ஷேக் அப்துல்லாஹ்வை தாங்களும் வாசித்திருப்பீர்கள் என்றே நினைக்கிறேன். அமைதி வழியில் போராடிய இரோம் ஷர்மிளாவின் இளமை ஒருவிதமான சிறைக்கம்பிகளுக்குள் கழிந்து போன சமகால வரலாறும் தாங்கள் அறிவீர்கள்.

அதனால் தம்பி சீமானுக்கு இந்த அண்ணனின் அறிவுரை என்னவென்றால், பாத்திகளில் நாற்று வளர்த்தெடுங்கள். அவற்றை பக்குவமாய் எடுத்து பண்படுத்தப்பட்ட வயல்களில் நடுங்கள். நீர்ப்பாய்ச்சி உரமிட்டு, களையெடுத்து மறக்காமல் வேலியிட்டு அறுவடைக்கான காலம்வரை பொறுத்திருங்கள். அதற்கான அறிவு ரீதியான வியூகம் அமையுங்கள்.

தன்னலமற்ற இளைஞர் பட்டாளமும், ஒழுக்கத்தில் தலைச்சிறந்த அவர்களின் உன்னத நடவடிக்கைகளுமே நமது சமூகத்தில் மாற்றங்களை உருவாக்க முடியும். அதிகாரம் மிகவும் முக்கியமானதுதான். அந்த அதிகாரம் கையாலாகாத அதிகாரமாகிவிடக்கூடாது என்பது அதைவிட முக்கியம்.

சுருக்கமாக சில வரிகளில் சொல்லப்பட்ட முக்கியமான இந்த செய்தியை தாங்கள் உணர்ந்து கொள்வீர்கள் என்று நினைக்கிறேன். எனது இனத்தில் தோன்றிய நல்லதொரு அரசியல் அறிஞரை நான் இழக்க விரும்பவில்லை என்ற கவலையின் வெளிப்பாடாகவே இதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். எனக்கு வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் எனது அறிவுரைகள் தொடர்ந்து கொண்டே இருக்கும் தாங்கள் விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் சரியே..!

சிந்தியுங்கள். செயல்படுங்கள். வெற்றிப் பெறுவீர்கள் என்ற வாழ்த்துக்களுடன் இந்த மடலை முடிக்கிறேன்.

என்றும் பிரியங்களுடன்,

உங்கள் அண்ணன்,

இக்வான் அமீர்
மூத்த இதழியலாளர்.

Wednesday, May 17, 2017

முதுமைக் கரைச் சேர்த்த காலம்ஆஹா.. காலம் என்னமாய் விரைந்து முதுமைக் கரை சேர்த்துவிட்டது..!

”நாங்கள் எல்லாம் அந்தக் காலத்துலேன்னு!” - சொல்ல வைத்துவிட்டது..!

இன்று காலை மாடி தோட்டத்தில் கள்ளிச் செடி பூக்களை படம் எடுத்துக் கொண்டிருந்தன கண்கள். ஆனால், உள்ளம் முழுக்க சுற்றித் திரிந்தன நினைவுகள்.

சும்மா கிடக்குமா மனம்? கண்களை மூடி கும்மிருட்டில் “தன்னைத் தேடினாலும்“ ஓடியோடி மௌனத்தை உடைக்கும் எண்ணங்களின் தொகுப்பாயிற்றே..!

தமிழகத்தில் பிறந்து, குழந்தைப் பருவத்து சில சொற்பமான ஆண்டுகளை ஆந்திரத்தின் அந்த குக்கிராமத்தில் கழித்தது நினைவுக்கு வருகிறது.

நானாக ஒரு சிலேட்டை எடுத்துக் கொண்டு அந்த பாலப்பாடச் சாலைக்கு சென்று சுற்றித் திரிந்ததும், மிகவும் வியப்புடன் பள்ளியைச் சுற்றியும் இருந்த பசுமையான தோட்டத்தைக் கண்டு மயங்கி நின்றதிலிருந்து ஆரம்பித்ததோ எனது பசுமைப் பயணம்.

அரை நிர்வாணமாக வந்து நிற்கும் ஏனாதி வம்பனிலிருந்து, கம கம என்று மணக்கும் கிளி மூக்கு மாம்பழமொன்றை அம்மா குதிர் பானைக்குள் ஒளித்து வைத்ததும், அதை அம்மாவுக்குத் தெரியாமல் எடுத்துத் தின்று அடி வாங்கியதும் இன்னும் பசுமையாக நினைவில் எழுகிறது.

வீட்டுப் பக்கத்தில் இருந்த கழிவுநீர் கால்வாய் குட்டைக்குள் நான் தவறி விழுந்ததும், சலவைக்காரப் பெண்ணொருத்தி ஓடி வந்து என்னை காப்பாற்றியதுமான நினைவுகள் பல நூறு மைல்களைத் தாண்டி, கண நேரத்தில் என்னமாய் சென்னையின் எனது மாடி தோட்டத்தில் என்னை வலம் வந்து நிற்கின்றன.

ஆஹா.. காலம் என்னமாய் விரைந்து முதுமைக் கரை சேர்த்துவிட்டது..!

வீட்டுப் பக்கத்திலிருந்த குளத்திலிருந்து இரவில் எழும் தவளைகளின் உரத்த சம்பாஷணையும், கோடையில் காய்ந்து வெடித்துக் கிடக்கும் அதன் வெடிப்புகளிலிருந்து எட்டிப் பார்க்கும் தண்ணீர் பாம்புகளுமாய் நினைவுகள் வலம் வருவதை தடுக்க முடியவில்லை.

அறுவடைக் காலங்களில், பிஞ்சு கரங்களின் உழைப்புக்குக் கிடைக்கும் வெகுமதியான இரு கரம் நிறைந்த நெல்மணிகள் செட்டிக் கடையின் வெல்ல வளையமாய் மாறி நக்கி திரிந்த பருவம் புன்முறுவல் பூக்கச் செய்கிறது.

கோழியை விரட்டிச் சென்ற நேரம் பார்த்து பக்கத்து வீட்டு வாலும், காதும் துண்டிக்கப்பட்ட நாயொன்று வள்ளென்று பாய்ந்து இடது முழங்காலைப் பற்றி குதறியதும், அம்மா பக்கத்திலிருந்த காட்டுக்கு ஓடி பிரண்டையும், கால் அணா செம்பு நாணயத்தையும் இணைத்து காலில் கட்டிய அந்த மருத்துவம் பல ஆண்டுகள் கடந்த பின்னும் கைகள் இன்னும் முழங்காலை இனம் தெரியாத உணர்வலையால் தடவச் சொல்கின்றன.

சென்னையின் புறநகர் வசிப்பிடமானபோது, மாமா மீன் பிடிக்க தூண்டில் போடும் இடம் சென்று வேடிக்கைப் பார்த்ததும், மாலை நேர இலவச டியூஷன் வகுப்புக்கு செல்லாத காரணமாக தேடி வந்த தந்தை தர தரவென்று இழுத்துச் சென்று சக மாணவிகள் முன் அடித்து துவைத்ததும் இன்னும் நாணச் செய்கிறது!

ஒவ்வொரு பழுத்த இலையாய் உதிரும்போதும், துளிர் இலையாய் இருந்த காலம், தளிர் இலையிலிருந்து பழுத்த இலைக்குமாய் தாவி நிற்கிறது பருவம்.

ஆஹா.. .. காலம் என்னமாய் விரைந்து முதுமைக் கரை சேர்த்துவிட்டது..! அனுபவங்கள்தான் ”நாங்கள் எல்லாம் அந்தக் காலத்துலேன்னு!” - சொல்ல வைக்கிறது!

Thursday, May 11, 2017

பல்கிஸ் பானு: துரத்தும் மனசாட்சியின் குரல்


பல்கிஸ் பானு தனது 3 வயது பெண் குழந்தையான சாலிஹாவை இறுக்கி அணைத்துக்கொண்டார். கும்பலில் ஒருவன், முதலில் அவரிடமிருந்து குழந்தையைப் பிடுங்கி, அதன் தலையை தரையில் அடித்துக் கொன்றான். மூன்று பேர் நெருங்கிவந்து, அவரது ஆடைகளைக் கிழித்தெறிந்தார்கள். அவர்களை பல்கிஸ் பானுவுக்கு நன்றாகத் தெரியும். அவர்களை பானு சிறுவயதில் அண்ணன் என்றும் மாமா என்றும் அவர் அன்போடு அழைத்திருக்கிறார். கர்ப்பமாக இருக்கிறேன் என்ற பல்கிஸ் பானுவின் கதறலுக்கு அவர்கள் காது கொடுக்கவில்லை. அந்த மூன்று பேரும் ஒருவர் மாறி ஒருவராக அவரை வல்லுறவுக்கு ஆளாக்கினார்கள். அப்போது அவரது குடும்பத்தைச் சேர்ந்த 13 பேரும் கொல்லப்பட்டுக் கொண்டிருந்தார்கள். முதல் நாள் குழந்தையை ஈன்ற தாயும், அவரது பிஞ்சுக் குழந்தையும்கூட கொல்லப்பட்டார்கள். - செல்வ புவியரசன் 

''''''''''''''''''''''''''''''''''''

தாமதிக்கப்பட்ட நீதி மறுக்கப்பட்ட நீதியாகும் என்றொரு சொல்வழக்கு உண்டு. ஆனால், பில்கிஸ் பானு வழக்கில் மறுக்கப்பட்ட நீதி நீண்ட நெடிய போராட்டத்திற்குப் பிறகு காலதாமதமாக வழங்கப்பட்டிருக்கிறது. 2002-ல் குஜராத்தில் கோத்ரா ரயில் எரிப்புச் சம்பவத்தையடுத்து நடந்த கலவரங்களின்போது, கூட்டாகச் சேர்ந்து வல்லுறவு குற்றத்தில் ஈடுபட்டதற்காகவும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 14 பேரைக் கொலை செய்ததற்காகவும் 11 குற்றவாளிகளுக்கு 2008-ல் மும்பை சிறப்பு நீதிமன்றம் அளித்த ஆயுள் தண்டனையை உறுதி செய்திருக்கிறது மும்பை உயர்நீதிமன்றம்.

குற்றவாளிகள் 11 பேருக்கும் தூக்குத் தண்டனை வழங்க வேண்டும் என்றுதான் உயர் நீதிமன்றத்தில் சிபிஐ மேல்முறையீடு செய்தது. அதை உயர் நீதிமன்றம் ஏற்றுக்கொள்ளவில்லை. ஆனால், குற்றத்தைச் செய்தவர்கள் மட்டுமின்றி, அவர்களைப் பாதுகாக்க முயற்சித்த ஐந்து காவலர்களும் இரண்டு மருத்துவர்களும்கூட இப்போது தண்டிக்கப்பட்டிருக்கிறார்கள். மும்பை சிறப்பு நீதிமன்றம் மருத்துவர்களையும், பிணங்களை எரித்து தடயங்களை அழித்த காவலர்களையும் தண்டிக்க மறுத்துவிட்டது. வழக்கு பதிய மறுத்த தலைமைக் காவலருக்கு மட்டுமே அது தண்டனை வழங்கியது என்பது குறிப்பிடத்தக்கது. அரசுப் பணியில் இருந்த காவலர்களும் மருத்துவர்களும் தனது பணியைச் செய்ய மறுத்து, குற்றவாளிகளுக்கு உடந்தையாக இருந்திருக்கிறார்கள் என்ற அடிப்படையில் அவர்களுக்கு தண்டனை அளித்திருக்கும் மும்பை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு முன்னோடியான தீர்ப்புகளில் ஒன்றாகும்.

நீதியின் நெடும்பயணம்

குஜராத் கலவரத்தில் ஆயிரத்திற்கும் மேலான முஸ்லிம்கள் கொல்லப்பட்டனர். அஹமதாபாத் நகரிலிருந்து 200 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ராதிக்பூர் கிராமத்தில் ஒரு மதவெறிக் கும்பல் தாக்குதலில் ஈடுபட்டது. முஸ்லிம் குடியிருப்புகளுக்கு தீ வைத்தது. தீ வைக்கப்பட்ட வீடுகளில் பில்கிஸ் பானுவின் வீடும் ஒன்று. அவரது குடும்பத்தினர் வீட்டுக்குப் பின்னாலிருந்த வயல்களுக்குள் ஓடினர்.

பஞ்சாயத்து அலுவலகம், பள்ளிக்கூடம், மசூதி என்று அவர்கள் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு இடமாக பாதுகாப்பு தேடி அலைந்தனர். மசூதியில் அவர்கள் தங்கியிருந்தபோது அவர்களது குடும்பத்தில் ஒரு புதிய வரவும் வந்தது. பல்கிஸின் சகோதரி ஒரு குழந்தையைப் பிரசவித்தார். மசூதியில் தங்குவதும் பாதுகாப்பானதாக இல்லை.

அங்கிருந்து அக்குடும்பம் பாதுகாப்பான இடத்தைத் தேடி பயணத்தைத் தொடர்ந்தது. முக்கியமான சாலைகளைத் தவிர்த்துக் காட்டுப் பகுதிகளின் வழியாகவே அவர்கள் சென்றுகொண்டிருந்தார்கள். அவர்களை கத்திகளோடும் வெட்டரிவாள்களோடும் ஒரு கும்பல் இடைமறித்தது. ‘இதோ முஸ்லிம்கள்… கொல்லுங்கள் அவர்களை… வெட்டுங்கள் அவர்களை’ என்று கூச்சலிட்டது.

குரூரத்தின் உச்சம்

பில்கிஸ் பானு தனது 3 வயது பெண் குழந்தையான சாலிஹாவை இறுக்கி அணைத்துக்கொண்டார். கும்பலில் ஒருவன், முதலில் அவரிடமிருந்து குழந்தையைப் பிடுங்கி, அதன் தலையை தரையில் அடித்துக் கொன்றான். மூன்று பேர் நெருங்கிவந்து, அவரது ஆடைகளைக் கிழித்தெறிந்தார்கள். அவர்களை பல்கிஸ் பானுவுக்கு நன்றாகத் தெரியும். அவர்களை பானு சிறுவயதில் அண்ணன் என்றும் மாமா என்றும் அவர் அன்போடு அழைத்திருக்கிறார். கர்ப்பமாக இருக்கிறேன் என்ற பில்கிஸ் பானுவின் கதறலுக்கு அவர்கள் காது கொடுக்கவில்லை. அந்த மூன்று பேரும் ஒருவர் மாறி ஒருவராக அவரை வல்லுறவுக்கு ஆளாக்கினார்கள். அப்போது அவரது குடும்பத்தைச் சேர்ந்த 13 பேரும் கொல்லப்பட்டுக் கொண்டிருந்தார்கள். முதல் நாள் குழந்தையை ஈன்ற தாயும், அவரது பிஞ்சுக் குழந்தையும்கூட கொல்லப்பட்டார்கள்.

பல்கிஸ் பானு எட்டு வல்லுறவுகளுக்கும், பதினான்கு கொலைகளுக்கும் ஒற்றைச் சாட்சி. குற்றவாளிகள் அத்தனை பேரின் பெயர்களும் விவரங்களும் அவருக்குத் தெரியும். நடந்ததை எல்லாம் விவரமாகக் காவல் நிலையத்தில் சொன்னார். ஆனால் தலைமைக் காவலர் சோமாபாய் கோரி அதை வழக்காகப் பதிவு செய்துகொள்ளவில்லை. பல்கிஸ் பானுவை மீட்பு முகாமிற்கு அனுப்பிவைத்தார்.

தடயத்தை அழித்த காவல் துறை

இரண்டு நாட்கள் கழித்து உள்ளூர் புகைப்படச் செய்தியாளர்கள் சிலர் படுகொலைக்கு ஆளான குடும்பத்தின் உடல்களைக் கண்டுபிடித்தார்கள். அதன் பிறகே அச்செய்தி வெளியுலகத்தை எட்டியது. காவல் துறை வழக்குப் பதிவு செய்ய வேண்டிய கட்டாயத்திற்கு ஆளானது. அழுகிக் கிடந்த பிணங்களிலிருந்து தனது மூன்று வயது குழந்தையையும் குடும்பத்தினரையும் அடையாளம் காட்டினார் பல்கிஸ். வல்லுறவு நடந்து நான்கு நாட்களுக்குப் பிறகே அவர் மருத்துவச் சோதனை செய்யப்பட்டார். கொல்லப்பட்டவர்களுக்கும் சட்ட நெறிமுறைகளுக்கு உட்பட்டு பிணக்கூறாய்வு செய்யப்படவில்லை.

சிபிஐ இந்த வழக்கில் மறுவிசாரணை செய்வதற்காக 2004-ல் பிணங்களை மீண்டும் தோண்டியெடுத்தபோது, மண்டை ஓடுகள்கூட கிடைக்கவில்லை. அப்போதுதான் பிணங்கள் உடனே மக்க வேண்டும் என்பதற்காக உப்பைத் தூவியது தெரியவந்தது. இவ்வழக்கின் ஆரம்பத்திலிருந்தே தடயங்களை மறைப்பதிலும் குற்றவாளிகளுக்கு உதவுவதிலும் காவல் துறை ஈடுபட்டு வந்திருப்பது வெட்டவெளிச்சமானது.

பாலியல் வல்லுறவு நடந்து 15 நாட்களுக்குப் பிறகுதான், பல்கிஸ் பானுவால் மீட்பு முகாமிலிருந்த காவல் துறையிடம் சொல்லி வழக்கைப் பதிய முடிந்தது. காவல் துறை அவரிடம் வெற்றுத்தாள்களில் கைரேகையைப் பதிவு செய்துகொண்டது. அவரை வல்லுறவுக்கு ஆளாக்கியவர்களின் பெயர்கள் உள்ளிட்ட முக்கியமான விவரங்கள் அனைத்தையும் முற்றிலுமாக அழித்துவிட்டது. விளைவாக, 2003 மார்ச் 25 தேதியன்று போதிய சாட்சியங்கள் இல்லையென்று குற்றவியல் நடுவர் இந்த வழக்கை முடித்துவைத்தார்.

உருக்கும் வார்த்தைகள்

தேசிய மனித உரிமை ஆணையத்தின் உதவியோடு உச்ச நீதிமன்றத்தை நாடினார் பல்கிஸ் பானு. உச்ச நீதிமன்றம், இவ்வழக்கை குஜராத் அரசு விசாரிப்பதற்குத் தடை விதித்தது. இரண்டு மாதங்களுக்குப் பிறகு, இவ்வழக்கை சிபிஐ விசாரணை செய்யவும் உத்தரவிட்டது. மேலும், குற்றங்கள் நடந்தபோது முதலமைச்சராக இருந்தவர் நரேந்திர மோடி, அவரது ஆட்சியில் நேர்மையான நீதி விசாரணைக்கு வாய்ப்பில்லை என்று வழக்கு விசாரணையை குஜராத்தில் இருந்து மஹாராஷ்டிராவுக்கு மாற்றியும் உத்தரவிட்டது.

தேசிய மனித உரிமை ஆணையத்தின் தலையீட்டுக்குப் பிறகுதான் பல்கிஸ் பானுவின் வழக்கில் நீதி கிடைத்திருக்கிறது. இவ்வழக்கில் அவருக்கு ஆதரவாக இருந்த மனித உரிமை ஆர்வலர்களுக்கும்கூட குற்றவாளிகளுக்கு தூக்குத் தண்டனை விதிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையில் உடன்பாடில்லை. பல்கிஸ் பானுவும்கூட அதே கருத்தைத்தான் சமீபத்தில் டெல்லியில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் தெரிவித்திருக்கிறார்.

இத்தனை வலிகளுக்குப் பிறகு அவர் சொல்லியிருக்கும் வார்த்தைகள் நம் மனதைப் பிசைகின்றன. மனசாட்சியை அவை துரத்துகின்றன.

“நியாயம் கிடைக்க வேண்டும் என்றே போராடினேன், பழிதீர்க்க வேண்டும் என்று நினைக்கவில்லை. எனக்கு நடந்த கொடுமைகளுக்கு அதிகபட்ச தண்டனை கொடுக்கப்பட வேண்டும். ஆனால் என் பெயரைச் சொல்லி யாரும் சாவதை நான் விரும்பவில்லை. என் மகள் பாதுகாப்பான இந்தியாவில் வளர வேண்டும் என்பதை மட்டுமே விரும்புகிறேன்!”

(நன்றி - தி இந்து-தமிழ் (11.05.2017)