Thursday, April 13, 2017

ரத்த களறியாகிக் கொண்டிருக்கும் மோடியின் இந்தியா!

 
பாலைக் கறந்து அன்றாடம் தங்கள் வயிற்றைக் கழுவும் ஐந்து முஸ்லிம் விவசாயிகள் சந்தையிலிருந்து கறவை மாடுகளை வாங்கிவரும்போது, இடைமறித்து நடத்திய கொலை வெறித்தாக்குதலில் சம்பவம் நடந்த இரண்டு நாளில் 55 வயது பஹ்லுகான் மருத்துவமனையில் உயிரிழந்தார்.  -இக்வான் அமீர்

''''''''''''''''''''''''''''''''''''''

70 வயதைக் கடந்த முதியவர் முஹம்மது சுலைமான் சோகமே உருவாக அமர்ந்திருக்கிறார். எதிரே, கட்டிலில் அவரது மகன், துள்ளிக் குதித்து விளையாட வேண்டிய பருவத்து 20 வயது இளைஞன் அஸ்மத் வேரருந்த மரமாய் கிடக்கிறார்.

படுகாயமுற்று கிடக்கும் தனது மகன் அஸ்மத்தின் நடுங்கும் விரல்களை, முதுமையால் நடுங்கும் தனது கைகளுக்குள் ஆதரவாய் வைத்து வருடிவிடுகிறார் முதியவர் சுலைமான், ”இறைவா! எனது கண்மணி அஸ்மத்தைக் காத்தருள்..!” – என்று உதடுகள் முணுமுணுக்கின்றன. தோளிலும், மார்பிலும் தூக்கி தாலாட்டி, சீராட்டி வளர்த்த அன்பு மகன், உடைந்த மண்டையோடு, முறிந்த முதுகெலும்போடு, கண்கள் சிதைக்கப்பட்டு, நெஞ்சு மிதிக்கப்பட்டு உயிருக்கு போராடிக் கொண்டிருந்த அந்தக் கோலத்தைக் காண சகிக்காமல் அவரது கண்களிலிருந்து கண்ணீர் பெருக்கெடுக்கிறது.

அண்மையில், ராஜஸ்தான் மாநிலம் ஆள்வாரில், “கோ-ரக்ஷர்கள்“ என்ற பெயரில் இந்துத்துவ வெறிப்பிடித்த மாட்டுக் காவலர்களால் கொலை வெறித்தாக்குதல்களுக்கு ஆளாகி குற்றுயிரும், குலையுயிருமாய் கிடப்பவர்தான் அஸ்மத். தனது மகனுக்கு நீதி கிடைக்கும், குற்றவாளிகள் தண்டிக்கப்படுவார்கள் என்று மோடி இந்திய அரசின் மீது இன்னும் நம்பிக்கை இழக்காமலிருக்கிறார் முதியவர் முஹம்மது சுலைமான்.

முஹம்மது சுலைமான்
ஹரியானாவின் அந்த கிராமப்புறத்து வீட்டுக்கு நலம் விசாரிக்கவருவோரிடம் எல்லாம், ”என் மகனுக்காக பிரார்த்தியுங்கள்!”- என்று கைகளைப் பிடித்துக் கொண்டு வேண்டுகிறார் முதியவர் சுலைமான்.

இதுவரை 70 ஆயிரத்துக்கும் அதிகமாக செலவழித்துவிட்டோம். என் மகனை காப்பாற்ற முடியாமல் போய்விடுமோ என்ற அச்சத்திலேயே நான் இருக்கிறேன்!”- என்று அரற்றுகிறார். மோடியின் பாசிஸ இந்தியாவில் மூன்றாம் தர குடிகளாய் போன ஒரு சமூகத்தின் மெல்லிய மூச்சுக் காற்று அது.

”பாலுக்காக 90 ஆயிரம் ரூபாய் கொடுத்து சந்தையிலிருந்து கறவை மாடுகளை வாங்கிக் கொண்டு வரும்போது நடந்த இந்த துரதிஷ்டம் இனி யாருக்கும் நடக்கக்கூடாது!” புலம்புகிறார் முதியவர் முஹம்மது சுலைமான்.

பாலைக் கறந்து அன்றாடம் தங்கள் வயிற்றைக் கழுவும் ஐந்து முஸ்லிம் விவசாயிகள் சந்தையிலிருந்து கறவை மாடுகளை வாங்கிவரும்போது, இடைமறித்து நடத்திய கொலை வெறித்தாக்குதலில் சம்பவம் நடந்த இரண்டு நாளில் 55 வயது பஹ்லுகான் மருத்துவமனையில் உயிரிழந்தார்.

தாக்குதலில் படுகாயமுற்று உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த அஸ்மத், அந்த திகில் சம்பவத்தை அதிர்ச்சியுடனேயே விவரித்தார்:

”பாலுக்காக வாங்கிவந்த கறவை மாடுகளுக்கான முறையான ஆவணங்களைக் காட்டியும், அந்தக் கொலை வெறிக் கும்பல் எங்களை விடுவதாக இல்லை. ஆரம்பத்தில் 10 பேராக இருந்தவர்கள் இன்னும் அதிக எண்ணிக்கையில் சேர்ந்து கொலை வெறியோடு எங்களைத் தாக்க ஆரம்பித்தார்கள். சாலையின் மறுபக்கத்தில் பஹ்லுக்கானை இன்னும் சிலர் தாக்கிக் கொண்டிருந்தார்கள். குற்றுயிரும் குலையுயிருமாய் கிடந்த எங்களை உயிருடன் கொளுத்த முயற்சித்தார்கள். நல்லவேளை போலீஸார் வந்ததால் நாங்கள் உயிருடன் மீட்கப்பட்டோம்!”- என்கிறார் அச்சம் அகலாமல் அஸ்மத்.

மாட்டுக் காவலர்களால் படுகொலைச் செய்யப்பட்ட பஹ்லுகானின் இளைய மகன் இர்ஷாத் தாக்குதலில் அதிஷ்டவசமாய் படுகாயங்களுடன் உயிர் பிழைத்தவர் சொல்கிறார்: “நாங்கள் ஜெய்பூர் மாட்டுச் சந்தையில், கறவை மாடுகளை வாங்கி வரும்போது, வழியில் இரு சக்கர வாகனத்தில் வந்த சிலர் எங்களை வழிமறித்தார்கள். நாங்கள் அவர்களிடம் கால்நடைகளுக்கான முறையான ஆவணங்களைக் காட்டியும், அதை அவர்கள் பொருட்படுத்தவில்லை. எங்களை கொலைவெறியுடன் தாக்க ஆரம்பித்தார்கள். எங்கள் வாகனத்தை ஓட்டிவந்த ஓட்டுநரின் பெயரைக் கேட்டு (இந்து சமயத்தவர்) அவரை விரட்டிவிட்டு எங்களைத் தொடர்ந்து தாக்க ஆரம்பித்தார்கள். கால்நடைகளை களவாடி சென்றதோடு, படுகாயமுற்று கிடந்த எங்களிடமிருந்து 75 ஆயிரம் ரூபாயும், எங்களது செல்போன்களையும், பர்ஸ் மற்றும் அடையாள அட்டைகளையும் பறித்துக் கொண்டார்கள். எங்கள் ஆடைகளை கிழித்து நிர்வாணப்படுத்தியதோடு உயிருடன் கொளுத்தவும் முயன்றார்கள். சரியான நேரத்தில் போலீஸார் வந்ததால் நாங்கள் உயிர் பிழைக்க முடிந்தது.”

இதுதான் மோடியின் ஜொலிக்கும் இந்தியா..! நீதிக்கு ஏங்கும் மண்ணின் மைந்தார்கள் சொந்த நாட்டிலேயே அகதிகளாக மாறிக் கொண்டிருக்கும் இந்தியா..!

(Source:indiaTomorrow.net)
  

No comments:

Post a Comment