Tuesday, March 28, 2017

மதசார்பின்மைப் போராட்டம் முஸ்லிம்களுக்கு மட்டுமல்ல.. நான்கில் மூன்று பகுதி இந்துக்களையும் உள்ளடக்கியது..!


மதசார்பின்மைக்கான போராட்டம் முஸ்லிம்களை பாதுகாப்பதற்கான போராட்டம் மட்டுமல்ல. உண்மையில், அது இந்த நாட்டு குடிமக்களில் நான்கில் மூன்று பங்கு இந்துக்களையும் சேர்த்து பாதுகாப்பதற்கான போராட்டம் என்பதையும் நாம் மறந்துவிடக்கூடாது!

இந்த நாட்டின் மதச்சார்பின்மைக் கொள்கையை இந்துக்கள்தான் தேர்வு செய்தனர். ஆனால், இன்றைய ஊடகங்களோ முஸ்லிம்களை மட்டும் பாதுகாக்கும் கவசமாகவே அதை சித்தரிக்கின்றன.

இந்திய அரசியலமைப்பை வடிவமைத்த 299 மக்களவை உறுப்பினர்களில் 255 பேர் (அதாவது 85 விழுக்காடு பேர்) தங்களின் விருப்பப்படிதான் மதசார்பற்ற நாடாக இந்தியாவை வடிவமைத்தார்கள். ஆனால், 1980-ஆம், ஆண்டிலிருந்து இந்த மதச்சார்பின்மை சமூக நீதியிலிருந்து தனியாக பிரிக்கப்படுவதை மக்கள் ஒருபோதும் அனுமதிக்கக்கூடாது. ஒன்றுடன் ஒன்று தொடர்புடைய இந்த இரண்டுக்கும் சேர்த்துதான் போராட்டங்கள் அமைய வேண்டும்.

அரசு புள்ளிவிவரங்களின்படி இந்திய நாட்டின் 52 விழுக்காடு பேர் அன்றாடங்காய்ச்சிகள் – தினக்கூலிகள். அவர்கள் எந்த சமூகத்தைச் சார்ந்தவர்கள் என்று யாரும் கவலைப்படுவதில்லை. அதேபோல, நாட்டின் 51 விழுக்காடு பேர் ஒதுங்க வீடில்லாதவர்கள். இந்தப் பட்டியலில் பிராமண சமுதாயத்தவரோ, தாக்கூர் சமூகமோ, பூமிஹார் சமுதாயத்தவரோ (பீகாரில் வசிக்கும் பிராமண சமுதாயம் போன்ற மேல்குடி மக்கள்)  ஓரிரு விலக்குகள் தவிர யாருமே இடம் பெறவில்லை

நாட்டில் சோறு போடும் விவசாயிகள் தற்கொலை செய்து கொள்வது நாள்தோறும் அதிகரித்துவருகிறது. வேலை வாய்ப்பின்மை பெருகிவருகிறது. நிலவிவகாரங்கள் சம்பந்தப்பட்ட ஆயிரக்கணக்கான வழக்குகள் நிலுவையில் உள்ளன. பணவீக்கம் அதிகரித்துவருகிறது. மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த இந்தப் பிரச்னைகளை யாரும் ஏறெடுத்தும் பார்க்க தயாராக இல்லை. ஆனால், “ஆண்டி ரோமியோ“ படைகளை உருவாக்குவதில்தான் அதிக அக்கறை காட்டிக் கொண்டிருக்கிறார்கள்.

ஒரு சமூகம் தனது அடிப்படைப் பிரச்னைகளை புறக்கணிக்கும்போது, வெகு விரைவிலேயே அது நோய்த்தாக்கிய சமூகமாய் பலவீனப்பட்டு போய்விடும்.

Prof. Manoj Jha
சிறுபான்மை இன முஸ்லிம்கள் தாக்கப்படுவதை உடனடியாக தடுத்து நிறுத்தாவிட்டால் அந்த படுகோரப் பசிக்கு பிற இனங்களும் இரையாவதைத் யாராலும் தடுக்கவே முடியாது.

சர்வாதிகாரி ஹிட்லர் முதன் முதலாய் தாக்கியது ஜனநாயக விரும்பிகளைத்தான். யூதர்களை அல்ல. அதன் பிறகு ஒவ்வொரு இனமாய் அந்த தாக்குதலுக்கு ஆளானதை யாராலும் தடுக்க முடியவில்லை. முஸ்லிம்களுக்கு எதிரான தாக்குதல்களை தடுத்து நிறுத்தாவிட்டால் பிற இனங்கள் மீதான தாக்குதல்களையும் தடுக்கவே முடியாது. குருதியின் சுவையறிந்த கொலைஞன் அடுத்தடுத்து கொலைகளை செய்ய அச்சப்பட மாட்டான்.

இரத்த வெறிப்பிடித்தவன் தன்னை சைவ விரும்பி என்று சொல்லிக் கொள்வது விந்தையாக இருக்கிறது. இத்தகைய வெறிப்பிடித்தவனுக்கு தொடராய் அடுத்தடுத்து இரத்தம் தேவைப்பட்டுக் கொண்டே இருக்கும். மக்கள் இது குறித்து விழிப்புடன் இருப்பது அவசியம்.

வாக்குரிமை பறிப்பு என்பது நாடு துண்டாடிய காலகட்டத்தில்கூட நடந்ததில்லை. இந்த கொடுமை சமீபத்தைய உ.பி. தேர்தல்களின் நிகழ்ந்துள்ளது. ஆனால், அது பெரிதாக பேசப்படவில்லை. செய்தியாக்கப்படவில்லை. இதற்கு பாஜக வை மட்டும் குறைச் சொல்லி பலனில்லை. இந்த பாவங்களுக்கு நாம் அனைவரும் சேர்ந்துதான் காரணம். தேர்தல்களில் பாஜக வெற்றிப் பெற்றதற்கு கவலைப்படுவதைவிட, இந்த வெற்றிகளில் பிரிவினையின் நெடி வீசியதுதான் அதிக கவலைக்குரியது. 1947-களில் கூட நாம் இப்படி பிளவுபட்டு நிற்கவில்லை.

இன்று நாம் உ.பியில் தோல்வியைத் தழுவி இருக்கலாம். நாளை நிச்சயம் வெற்றிப் பெறலாம். ஏன் குஜராத்தில்கூட நாம் வெற்றி முரசு கொட்டலாம்.

அதனால் வெற்றிகளுக்கான கொண்டாட்டங்களும் வேண்டாம். தோல்விக்கான விரக்தியும் வேண்டாம். எப்போதும், திட்டமிட்ட கருத்துக்களின் அடிப்படையில் வெற்றிப் பெறுவதில் கவனமாக இருங்கள்.

(25.03.2017 அன்று, தில்லியில் ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில், “இந்தியா இன்று மற்றும் நாளை“ - என்னும் தலைப்பில், பீகாரை ஆளும் ராஷ்ட்ரீய ஜனதா தள் கட்சியின் செய்தித் தொடர்பாளர், பேராசிரியர் மனோஜ் ஜா ஆற்றிய உரையிலிருந்து … இக்வான் அமீர்)


No comments:

Post a Comment