Friday, March 10, 2017

திறமையாளர் வெல்வர் நம்புங்கள்!


இரண்டு மூன்று நாட்களுக்கு முன், சற்று ஓய்வான ஒரு தருணத்தில் முகநூலை சாவகாசமாக நோட்டமிட்டுக் கொண்டிருந்தபோதுதான் அந்த வரிகள் கண்களில் பட்டன.

ஊடக துறையில் பணி புரிய முதல் தகுதி,

1.ஓரிறைக் கொள்கையில் இருக்க கூடாது போலும்

2.அழகு வேண்டும் போலும்

விரக்தியின் விளிம்பில் தள்ளப்பட்ட அபலையின் அபாயக் குரலாய் அது எனக்குள் ஒரு பதற்றத்தைத் தர உடனே சம்பந்தப்பட்ட நபரின் முகநூல் பக்கத்துக்கு சென்று பார்த்தால் இளைஞர். அந்தப் பக்கத்தை தொடர்ந்து, பார்வையிட, ”

”எழுத்தாளர் ஆக வேண்டும் என்றால், அதிக திரைப்படம் பார்க்க வேண்டும் என்பது அடிப்படை கடமையோ ???”

- இந்த வாசகங்களும் காணப்பட்டன.

“இதென்னடா வம்பு?“ - என்று அதே பதற்றத்துடன் நான் மனம் நொந்துபோன அந்த தம்பிக்கு ஆறுதல் சொல்லவும், நடந்ததைத் தெரிந்துகொள்ளவும் அவருடன் தொடர்பு கொள்ள முயன்றபோது, எனது செல்பேசி எண் கேட்டு அவரே பேச ஆரம்பித்தார்.

கல்லூரி மாணவரான அவரது கல்லூரியில் தனியார் தொலைக்காட்சி ஒன்றின் செய்தி பிரிவுக்காக மாணவர்களைத் தேர்வு செய்ய வளாக தேர்வு நடத்தப்பட்டிருக்கிறது. பல கட்டங்களைக் கடந்த அந்த தேர்வில் எல்லா தகுதிகள் இருந்தும் அவர் தேர்வு செய்யப்படவில்லை.

பிறகு விசாரித்தபோது, சிறுபான்மையினர் யாரும் தேர்வு செய்யப்படுவதில்லை என்ற செவி வழி தகவல் கிடைத்திருக்கிறது. அதைக் கேள்விப்பட்டு மனம் நொந்துபோன அந்த இளைஞர் இட்ட பதிவுகள்தான் மேலே உள்ளவை.

அந்த இளைஞரின் ஊடகத்துறை ஆர்வத்தைப் பாராட்டிவிட்டு, அவரோடு எனது இளமைக்கால அனுபவங்களில் சிலவற்றை பகிர்ந்து கொள்ள வேண்டியிருந்தது.

தகுதியான வாய்ப்புகள் எப்போதும் நிராகரிக்கப்படுவதில்லை. வெகுஜன ஊடகங்களில் கால் பதிக்க நினைக்கும் சிறுபான்மையின இளைஞர்கள் அதற்கேற்பவே தங்களை கூர்த்தீட்டிக் கொள்ள வேண்டியது மிகவும் அவசியம்.

1980-களின் பிற்பகுதியில், தினமணியில் எனது எழுத்துக்கள் அஞ்சல் அட்டையில்தான் ஆரம்ப பயணத்தைத் துவங்கின.

ஆம்..! ”அன்புள்ள ஆசிரியருக்கான” வாசகர் கடிதங்கள் அவை.

அந்த கடிதங்களின் நகல்கள் ஐந்து தடிமனான புத்தகங்களாக ஸ்பைரல் பைண்ட் செய்து இன்றும் நான் பாதுகாத்து வருகின்றேன்.

10-15 வரிகளை நுணுக்கி… நுணுக்கி எழுதும் அஞ்சலட்டை கடிதங்கள் பிரசுரமானாலும், பிரசுரமாகாவிட்டாலும் நிச்சயம் ஆசிரியர் குழுவால் வாசிக்கப்படும் என்று நம்ப வேண்டியது அதி முக்கியம்.

பிரசுரமான கடிதங்களின் பிரசுரிக்கப்பட்ட வரிகள் எவை? வெட்டப்பட்ட வரிகள் எவை? இவற்றில் நமது உடன்பாடுகள், முரண்பாடுகள் எவை? என்று ஆய்வு செய்வது நமது அடுத்த பணி.

இந்த உடன்பாடு, முரண்பாடு புரிதல்தான் தினமணியின் தலையங்க பக்கம் முதற்கொண்டு, தினமணி கதிர், சிறுவர் மணி, வணிகமணி, வேளாண்மணி, ஆன்மிகமணி என்று அத்தனை இணைப்புகளிலும் ஒரு கால் நூற்றாண்டுக்கும் அதிக காலம் கட்டுரையாளனாய், சிறுவர் இலக்கிய படைப்பாளியாய் கோலோச்ச முடிந்தது. பின்னாளில், 15 புத்தகங்களின் நூலாசிரியர் என்ற சிறப்பிடத்தைப் பெற்றுத் தந்தது. தினமணியின் ஆசிரியர், திரு இராம சம்பந்தம் போன்ற ஆளுமைகளால் ”வாங்க..! தினமணியின் ஆஸ்தான எழுத்தாளரே..!” – என்று பாராட்டுகள் பெறவும் முடிந்தது. தற்போது இறையருளால் தி இந்து தமிழ்வரை நீண்டிருக்கிறது.

அங்கீகாரம் என்பது எளிதில் கிடைக்கும் ஒன்றல்ல. அதற்கு தேவை… கடும் உழைப்பு. தொடரான அறப்போராட்டம். நிலைகுலையாத முயற்சி! தளராத போர்க்குணம் கொண்ட மனம்.

நமது சொந்த குடும்பத்தில், உற்றார்-உறவுகளில் நிலவும், அரசியல் சூழ்ச்சிகள், புறந்தள்ளும் முயற்சிகள் போலவே, ஊடக உலகிலும் இருக்கலாம். ஆனால், திறமை என்னும் ஒளிபிம்பத்தை என்றென்றும் கரும் மேகங்களால் மறைத்து நிற்கவே முடியாது.

ஐயாயிரம், பத்தாயிரம் பிரதிகள் தாண்டாத 50-க்கும் மேற்பட்ட முஸ்லிம் சமூக இதழ்களில் காணப்படாத அரசியலா வெகுஜன ஊடகங்களில் காணப்படுகிறது?

அதனால், நிறைய வாசியுங்கள். எந்த மொழியை எழுத்துக்காக தேர்வு செய்கிறீர்களோ அந்த மொழி அறிவை சொந்த மொழியாக்கிக் கொள்ளுங்கள். அந்த மொழிப்பேசும் மக்களின் மண்ணை, சூழலை, நம்பிக்கைகளை, வரலாறுகளை அத்தனையையும் உங்களுக்குள் அடக்கிக் கொள்ளுங்கள்.

அதேபோல, எதை எழுதுகிறீர்களோ, அதை பின்பற்றுபவராய் முதலில் உங்களை மாற்றிக் கொள்ளுங்கள்.

உண்மைதான்..! அறவாழ்வை விதைக்க அறத்துடன் வாழ கற்றுக் கொள்ளுங்கள். அடுத்தவர் உள்ளங்களை ஈர்க்கும் எழுத்துக்களாய் எழுதப் பழகுங்கள்.பூமிக்கு மேலே, வானத்துக்கு கீழே உள்ள ஒவ்வொன்றையும் உங்கள் பார்வையில் எழுத மறந்து விடாதீர்கள்.

என்று இன்னும் பல செய்திகளை அவருக்கு பட்டியலிட்டுவிட்டு எனது வாழ்வின் நிகழ்வொன்றை தொட்டுக் காட்டும்விதமாய் விடைப்பெறும்போது, கடைசியில் அவரிடம் சொன்னேன்:

”எனது எழுத்துகளின் ஈர்ப்புக்கு எனக்குக் கிடைத்த வெகுமானம் என் மனைவி!”No comments:

Post a Comment