Sunday, February 19, 2017

மறைமுக வாக்கெடுப்பும், அதிகார குவிமையமும்
இதற்கு, நாட்டாமை செய்து கொண்டிருந்தவர்களிடமிருந்து கடும் எதிர்ப்பு கிளம்பியது. கோவை அசம்பாவிதங்கள் என்று ஏக பிரச்னைகளில் சிறுபான்மையினம் சிக்கியிருந்த நேரம். அந்தச் சூழலையொட்டி தீவிரத்தனத்துக்கும் எங்களுக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லையாயினும், எங்களை தீவிரவாதிகள் என்று சொல்லி பிடித்துக் கொடுத்துவிடுவதாக அந்த அச்சுறுத்தல் நீண்டது - இக்வான் அமீர்

''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''

1980-களின் பிற்பகுதி அது. எங்கள் பள்ளிவாசலில் காலங்காலமாக நிர்வாகத்தில் அமர்ந்து நாட்டாமை செய்துவந்த ஒரு குழுவுக்கு எதிராக நாங்கள் களம் இறங்கிய கால கட்டம்.

பள்ளிவாசலில் தேர்தல் இல்லாமல் நியமன முறையில் சிலர் தொடர்ந்து அதிகாரம் செலுத்தி வந்தனர். சுரண்டலும், முறைகேடுகளும் மலிந்துவிட்டிருந்த நேரமது. இது பொதுமக்களுக்கு பிடிக்காத நிலையில்கூட எழுந்து நின்று கேட்க அச்ச உணர்வு அவர்களை ஆட்கொண்டிருந்தது. எதிர்த்து கேட்டவர்கள் சொல்லப்படாத சமூக விலக்கு செய்யப்பட்ட நிலை என்று அதிகார குவிமையத்தின் முரட்டுத்தன வலிமை தொடர்ந்தது.

இடதுசாரி இயக்கங்களிலிருந்து விலகி இஸ்லாத்தின் பக்கம் அப்போதுதான் வந்திருந்தேன் இளைஞனாகிய நான்.

எவ்வித அச்ச உணர்வின்றி சில சிறுவர்களை மட்டும் எனது தரப்பில் வைத்துக் கொண்டு ஜனநாயக முறையிலான மறைமுக வாக்கெடுப்பு வேண்டும் என்று அறவழியில் போராட்டத்தைத் துவக்கினோம்.

வெள்ளிக்கிழமைகளில் பள்ளிவாசலின் ஓரமாக நின்று வாக்குமுறையிலான தேர்தல் வலியுறுத்தி பதாகைகள் ஏந்தி அமைதியாக நிற்பதுதான் எங்கள் போராட்டத்தின் யுக்தி.

இதற்கு, நாட்டாமை செய்து கொண்டிருந்தவர்களிடமிருந்து கடும் எதிர்ப்பு கிளம்பியது. கோவை அசம்பாவிதங்கள் என்று ஏக பிரச்னைகளில் சிறுபான்மையினம் சிக்கியிருந்த நேரம். அந்தச் சூழலையொட்டி தீவிரத்தனத்துக்கும் எங்களுக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லையாயினும், எங்களை தீவிரவாதிகள் என்று சொல்லி பிடித்துக் கொடுத்துவிடுவதாக அந்த அச்சுறுத்தல் நீண்டது.

நாங்கள் கேட்டது பள்ளி நிர்வாகத்தில், மக்கள் அனைவரும் பங்கெடுக்கும் விதமான ஒரு பொதுவான தேர்வு முறை. ஆனால், அந்த முரட்டு நாட்டாமைகளோ அதிகார தக்க வைத்தலுக்காக மக்களின் ஆதரவைத் திரட்டாமல் பொய் குற்றச்சாட்டுகள் மூலமாக எங்களைப் பணிய வைக்கப் பார்த்தது. எங்கள் எதிர்காலத்தை மையமாக வைத்து விளையாடவும் அச்சப்படவில்லை அந்த பதவி வெறியர்கள்.

இந்த அச்சுறுத்தல்கள் எங்களை எவ்விதத்திலும் அசர வைக்கவில்லை. அந்த காலகட்டத்தில், தினமணி, மணிச்சுடர், தீக்கதிர் போன்ற நாளேடுகளில் அதிகமாக எழுதி கொண்டிருந்த நேரமது.

மனிதரிடையே அன்பும், இணக்கமும், சமாதானமும் நிலவ வேண்டும் என்று எழுத்திலும், நடைமுறை வாழ்க்கையிலும் வெளிப்படுத்திக் கொண்டிருந்தது எங்களின் அழுத்தமான வாழ்வியல் அடையாளங்கள்.

கடைசியில் பதவி வெறியர்களின் மூர்க்கத்தனமான நடவடிக்கையின் அடிப்படையில் பொய்யான புகாரையொட்டி நாங்கள் கைது செய்யப்பட்டதும், அதன் பின் மேற்குறிப்பிட்ட எழுத்துவடிவிலான எங்கள் வாழ்க்கைகான ஆவணங்களை திரட்டி காவல்துறையின் உயர்மட்டம்வரை அனுப்பி, அதை சரிப்பார்த்தல், சோதித்தல், தொடர்ந்து எங்களை நச்சரித்தல் என்று தொடர்ந்த நடவடிக்கைகள் இறைவன் நாடினால்… மற்றுமோர் சமயத்தில் பார்க்கலாம்.

நான் இங்கு சொல்ல வந்தது… மறைமுக வாக்கெடுப்புக்கு அச்சப்படுவது என்பது தங்கள் சொல்லாலும், செயலாலும் மக்களை அச்சப்படுத்தி தங்களுக்கு அடிபணிய வைக்கும் ஒரு எதேச்சாதிகார முறைமையை அதிகார விரும்பிகள் எப்போதும் தங்கள் கையில் வைத்திருக்க நினைப்பதுதான்!

இந்த அச்ச உணர்வின் வெளிப்பாடுதான் இரண்டு நாட்களுக்கு முன் சட்டமன்றத்தில் நடந்த ரகளை.

மறைமுக வாக்கெடுப்பு என்பதுதான் சரியான அரசியல் தீர்வாக இருக்க முடியும்.

கிட்டதட்ட ஒரு கால் நூற்றாண்டுக்கும் அதிகமாக எங்கள் பள்ளியில் ஒவ்வொரு தேர்தல் காலம்தோறும் வாக்கு பெட்டிகள்தான் நிர்வாகிகளை தேர்வு செய்கின்றன… இது எதிர் தரப்பினருக்கு பிடிக்காமல் இருந்தாலும் சரியே..!

நியமனங்கள் சர்வாதிகாரத்தின் வெளிப்பாடகிவிடும் என்பதே யதார்த்தம்.

சபாநாயகர் எதிர்கட்சிகளின் கோரிக்கையான மறைமுக வாக்கெடுப்பை ஏற்று அதை பின்பற்றியிருந்தால்… தமிழக சட்டமன்றத்தில் புதிய வழக்கொன்று நாடு முழுவதும் முன்னுதாரணமாகியிருக்கும். வரலாறு தமிழகத்தை அடிகோட்டிட்டவாறே இருந்திருக்கும். போற்றப்பட்ட முடிவாக அது இருக்கும்.

ஆனால், கத்தியின் மீது நடக்கும் சோதனைக்கு ஒப்பான இதை வெறும் அதிகார விரும்பிகள் ஏற்க வாய்ப்பில்லை என்பதை நிரூபித்திருக்கின்றன தொடரும் களேபரங்கள்!


No comments:

Post a Comment