Saturday, February 18, 2017

படிப்பினைகள் தரும் தாயிப் பயணம்கிருத்துவ சமயத்தை சேர்ந்த அத்தாஸ் இராக்கை பூர்வீகமாகக் கொண்டவர் என்பதை நபிகளார் தெரிந்து கொண்டார். மலர்ந்த முகத்துடன் நபிகளார், ”எனதருமை சகோதரர் யூனுஸ் (Jonah) அவர்களின் நகரத்தைச் சேர்ந்தவரா நீங்கள்?” – என்று அன்புடன் விசாரிக்கவும் செய்தார்.

”யூனுஸை உங்களுக்கு எப்படி தெரியும்?” - என்று பணியாள் வியப்புடன் கேட்க, ”அத்தாஸ், யூனுஸ் என்னைப் போலவே இறைவனின் தூதராவார்!” என்று நபிகளார் பதிலளித்தார். உண்மையின் வசீகரத்தால் ஈர்க்கப்பட்ட அத்தாஸ் உடனே பணிந்து நபிகளாரின் தலையிலும், கரத்திலும், பாதத்திலும் முத்தமிட்டலானார். •இக்வான் அமீர்
''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''
நபிகளார் வாழ்ந்த காலத்து அரபு சமூக கட்டமைப்பில் தனிநபர் ஒவ்வொருவரும் ஏதாவது ஒரு கோத்திரத்தாரின் பாதுகாப்பை பெற்றிருப்பது தவிர்க்க இயலாததாக இருந்தது. இந்த வழக்கத்தையொட்டிதான் மக்காவில், நபிகளார் தமது நபித்துவத்து ஆரம்ப நாட்களில் பனு ஹாஷிம் கோத்திரத்தின் தலைவரான தமது பெரிய தந்தையார் அபுதாலிபின் பாதுகாப்பை பெற்றிருந்தார். அபுதாலிபின் மரணத்துக்கு பிறகு கோத்திரத் தலைமைத்துவம் மற்றொரு சிறிய தந்தையான அபுலஹபின் வசம் வந்தது. அபுலஹபோ நபிகளாரின் போதனைகளை கடுமையாக எதிர்த்து வந்தவர். அதனால், அடைக்கலம் தர அவர் மறுக்கவே சிக்கல் ஆரம்பித்தது. இதிலிருந்து மீண்டு தமது பணிகளைத் தொடர ஆதரவு தேடி நபிகளார் மேற்கொண்ட அயலக பயணம்தான் தாயிப் பயணம்.

இளம் நபித்தோழரும், வளர்ப்பு மகனுமான ஜையித் இப்னு ஹாரிதாவுடன் மக்காவுக்கு கிழக்கில் 65 மைல் தொலைவில் அமைந்திருந்த கோடை வாசஸ்தலமான தாயிப் நகரத்தை நோக்கி நபிகளார் மேற்கொண்ட பயணம் அது. தாயிப் நகரில் நபிகளாரின் உறவினர் சிலர் இருப்பினும், அதிகாரம் என்னவோ அபு யாலைல், மசூத் மற்றும் ஹபீப் என்ற மூன்று தனிநபர்களிடம் இருந்தது.

நபிகளாரின் கோரிக்கையை ஏற்று அடைக்கலம் தர இந்த மூவரும் மறுத்துவிட்டார்கள். அத்துடன், அவமதிக்கவும் செய்தார்கள். அவர்களில் ஒருவர், ”ஒருவேளை, இறைவனால் தேர்ந்தெடுக்கப்பட்ட இறைத்தூதர் நீங்களாக இருந்தால், நான் கஅபாவின் திரைச்சீலையை கிழித்தெறிவேன்!” – என்றார். அடுத்தவரோ,”இறைவனுக்கு உம்மை விட்டால் வேறு யாரும் இறைத்தூதராக கிடைக்கவில்லையோ?” – என்று நகைத்தார். மூன்றாவது பிரமுகரோ, ”நீர்தான் இறைவனின் தூதர் என்றால், உம்மிடம் உரையாட எனக்குத் தகுதியில்லை அல்லது நீர் இறைத்தூதர் இல்லை என்றால், என்னிடம் உரையாட உமக்குத் தகுதியில்லை!” – என்று நையாண்டி செய்தார்.

நபிகளாரை உடனடியாக தாயிப்பை விட்டு வெளியேற சொன்னதோடு நில்லாமல், அவர் மீது வன்முறையும் கட்டவிழ்த்துவிடப்பட்டது. இதன் விளைவாக அடைக்கலம் தேடி தாயிப் சென்ற நபிகளார் சொல்லடியோடு கல்லடிப்பட்டு இருள் கப்பிய அந்த வேளையில், ஊருக்கு வெளியிலிருந்த ஒரு திராட்சைத் தோட்டத்தில் புகலிடம் தேடி சென்றார்.

உடடெல்லாம் குருதி மயமான அந்த நிலையிலும் நபிகளார் தமது இயலாமைக் குறித்தும், இறைவனிடம் அடைக்கடலம் தேடியும், பிரார்த்தித்தவாறே இருந்தார்.

திராட்சைத் தோட்டமோ உத்பா மற்றும் ஷைபா என்ற இரண்டு சகோதரர்களுக்கு சொந்தமானது. நபிகளாரின் நிலையைக் கண்டு இரக்கம் கொண்ட அவர்கள், இளைப்பாற அனுமதித்தார்கள். கூடவே, தட்டு நிறைய திராட்சைக்கனிகளைப் தங்களின் பணியாள் கிருத்துவ சமயத்தைச் சேர்ந்த அத்தாஸிடம் கொடுத்தனுப்பினார்கள்.

அத்தாஸிடம் திராட்சைக் கனிகளைப் பெற்றுக் கொண்ட நபிகளார், “இறைவனின் திருநாமத்தால்” என்று பொருள்படும் “பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்!” – என்று மொழிந்துவிட்டு உண்ண ஆரம்பித்தார்.

அதுவரையிலும் அந்தப் பகுதியில் கேட்காத இந்த சொல்லாடல், அத்தாஸீக்கு வியப்பளித்தது. அதை, நபிகளாரிடம் வெளிப்படுத்தவும் செய்தார்.

கிருத்துவ சமயத்தை சேர்ந்த அத்தாஸ் இராக்கை பூர்வீகமாகக் கொண்டவர் என்பதை நபிகளார் தெரிந்து கொண்டார். மலர்ந்த முகத்துடன் நபிகளார், ”எனதருமை சகோதரர் யூனுஸ் (Jonah) அவர்களின் நகரத்தைச் சேர்ந்தவரா நீங்கள்?” – என்று அன்புடன் விசாரிக்கவும் செய்தார்.

”யூனுஸை உங்களுக்கு எப்படி தெரியும்?” - என்று பணியாள் வியப்புடன் கேட்க, ”அத்தாஸ், யூனுஸ் என்னைப் போலவே இறைவனின் தூதராவார்!” என்று நபிகளார் பதிலளித்தார். உண்மையின் வசீகரத்தால் ஈர்க்கப்பட்ட அத்தாஸ் உடனே பணிந்து நபிகளாரின் தலையிலும், கரத்திலும், பாதத்திலும் முத்தமிட்டலானார். 
இந்த சம்பவத்தை உத்பாவும், ஷைபாவும் பார்த்தவாறே இருந்தார்கள். ”இவர் நமது பணியாளை தனது பக்கம் ஈர்த்துக் கொண்டிருக்கிறார் அதோ… பார்..!” என்றார் ஒருவர் மற்றொருவரிடம்.

அத்தாஸ் திரும்பி வந்ததும், ”அவர் முன் பணிவதும், கை,கால்களில் முத்தமிடுவதும் உனக்கு அவமானமாக இல்லையா?” – என்று கண்டிக்கவும் செய்தார்கள்.

”இந்த உலகில் இவரைவிட எனக்கு முக்கியமான நபர் வேறு யாரும் இல்லை. அவர் என்னிடம் சொன்னது, ஒரு இறைத்தூதர் அன்றி வேறு யாராலும் சொல்ல முடியாதது!” - என்று அத்தாஸ் உறுதியுடன் சொன்னார்.

தாயிப் நகரத்தை நோக்கிய ஒரு வரலாற்றுப் பயணத்தில் நபிகளார் மூன்று விதமான மக்களைச் சந்தித்து மூன்று விதமாக நடத்தப்பட்டார்.

முதலாவதாக ஒரு பிரிவினர், நபிகளார் மீது சொல்லடியும், கல்லடியும் சொறிந்தார்கள். இரண்டாவது பிரிவினரோ, நபிகளாரை விருந்தினராய் உபசரித்தார்கள். மூன்றாவதாக திராட்சைத் தோட்டத்து ஏழைப் பணியாளர் நபிகளாரின் நபித்துவத்துக்கு சாட்சி சொன்னார்.

முடிவு என்பது முற்றில்லாதது என்ற படிப்பினைத் தரும் வரலாற்று சம்பவம் இது. ஒதுங்கக்கூட நிழலற்ற வெட்டவெளி என்று விரக்தி தரும் நிலையில், ஒதுங்கி இளைப்பாற ஒரு சிறு மரம் நிச்சயம் தென்படலாம். ஆதரவற்றோர் என்று மனம் தளரும் நிலையில் ஆதரவாய் அரவணைக்க சிலர் ஓடோடி வரலாம். அதனால், ஒரு சிலர் தரும் துன்பத் துயரங்களைக் கண்டு திகைத்து நிற்கவோ, துவண்டுவிடவோ தேவையில்லை.

எந்நிலையிலும், எதிர்மறையாக செயல்படாமலிருப்பதும், வாய்மையில் நிலைத்திருப்பதும் இறையன்பைப் பெற்று தரும். மக்கள் மனங்களை கொள்ளைக் கொள்ளும் என்கிறது நபிகளாரின் தாயிப் பயணம்.

(தி இந்து தமிழ், ஆனந்த ஜோதி 16.02.2017 அன்றைய இணைப்பில் வெளியான கட்டுரை)


No comments:

Post a Comment