Friday, February 10, 2017

இந்திய ஜனநாயகத்தில் நமது பொறுப்புகள்


ஆர்எஸ்எஸ் அணிவகுப்பை நடத்த அனுமதி அளித்ததற்காக முதல்வர் பன்னீர் செல்வத்தை தூற்றுவதும், சசிகலா முதல்வராக வந்தால் ஆர்எஸ்எஸ் அமைப்பை ஒடுக்கி சிறுபான்மையினரின் காவல் தெய்வமாக மாறிவிடுவார் என்று நம்புவதெல்லாம் அபத்தமானது! ஏனென்றால் இந்துத்துவ அதி தீவிரவாத பாசிஸம் என்பது சிந்தனை ரீதியானது. சமூகத்தின் எல்லா மட்டங்களிலும் ஊடுருவக்கூடியது. ஏற்கனவே எல்லா துறைகளிலும் ஊடுருவி இருப்பது - இக்வான் அமீர்

'''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''
நான் அதிமுக கட்சியைச் சேர்ந்தவன் அல்ல. ஆனாலும், எனது தொகுதியில் நிறுத்தப்படும் வேட்பாளர்களின் தகுதிக்கேற்ப சில நேரங்களில் அதிமுகவை ஆதரித்தும் வாக்களித்தும் இருக்கிறேன். எதிர்த்தும் வாக்களித்திருக்கிறேன். 

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உயிருடன் இருக்கும்வரை அவரை, கடுமையாக விமர்சித்தும் இருக்கிறேன். ஆனால், அவர் நோயுற்றபோதும், அதைத் தொடர்ந்து இறந்ததாக சொல்லப்பட்டபோதும் அந்த அனுதாபம் என்னையும் தொற்றிக் கொண்டது என்ற உண்மையை ஒப்புக் கொண்டாகதான் வேண்டும். அதற்கு பல காரணங்கள் இருந்தாலும், அவர் பெண் என்ற ஒரு முக்கிய காரணமும் அதில் உண்டு.

நடிகை சிலுக்கு ஸ்மிதா தற்கொலை செய்து கொண்டபோது அவர் சம்பந்தமாக சமரசம் இதழில் ஒரு கட்டுரை எழுதி அனுதாபம் தெரிவித்து கடும் எதிர்ப்பை சம்பாதித்துக் கொண்டவன் நான். மௌலானா குத்புதீன் பாகவி தனது மரண காலம்வரை அதை சொல்லியே என்னை கிண்டலடிப்பதும் உண்டு. ஆனாலும் என் நிலையில் நான் தெளிவாகவே இருக்கிறேன். ஒரு எழுத்தாளன் எப்போதும் துணிச்சலுடன் உண்மையை உரைத்தவண்ணமாகவே இருக்க வேண்டும் என்பதில் எந்தவிதமான சமரசமும் இல்லை.

அந்த அடிப்படையில் காலமெல்லாம் எனது விமர்சனத்துக்கு ஆளானா ஜெயலலிதாவின் மரணம் என்னை பாதிக்கவே செய்தது. அந்த பாதிப்பை இரங்கலாக.. “ஒற்றைப் போராளி வீழ்ந்தார்“ என்ற கட்டுரை வடிவில் எனது வலைப்பூவில் http://ikhwanameer.blogspot.in/2016/12/blog-post_97.html பதிவும் செய்தேன்.

அதேபோல, இரும்பு மனுஷி எனப்படும் ஜெயலலிதாவின் மிக மெல்லிய உணர்வுகளை வெளிப்படுத்தும் விதமாக அவரின் நேர்காணல் ஒன்றை அவருடைய இறுதி ஊர்வல காட்சிகளோடு https://www.youtube.com/watch?v=NM4qPP4-5uo&t=1s காணொளியாக பதிவேற்றமும் செய்திருந்தேன். இன்றைக்கும் எனக்கு மிகவும் பிடித்த காணொளி இது.

கடந்த சட்டமன்ற தேர்தல்களின் வெற்றி தோல்விகள் குறித்து நான் எழுதியிருந்த கட்டுரை, ”நாகூரானின் வாக்கு யாருக்கு?” http://ikhwanameer.blogspot.in/2016/05/blog-post_14.html  அந்த கட்டுரையின் முக்கிய பகுதிகளை வாசிப்புக்காக அடியில் தந்துள்ளேன்.
2014-ம், ஆண்டு, விழிகள் வெளிப்புற படப்பிடிப்புக்காக, சென்னைக்கு வடக்கே ஏறக்குறைய ஒரு முப்பது கிலோ மீட்டர் தொலைவிலிருக்கும் காட்டுப்பள்ளிக்கு சென்றிருந்தபோதுதான் முதன் முதலாக நாகூரானை சந்தித்தேன். (காணொளிக்கு: https://www.youtube.com/watch?v=tpixA1-gGY8)

நாகூரான் என்றதும் முஸ்லிம் என்று கருதிவிட வேண்டாம். குழந்தை இல்லாத ஒரு தலித் தம்பதிக்கு நாகூராரை வேண்டி பிறந்த குழந்தையாதலால் இந்தப் பெயர் வைக்கப்பட்டது. ஒரு கையில் புட்டி தண்ணீர், மறு கையில் ஒரு கழி, தலைப்பாகை சகிதமாக அந்த நண்பகல் வெய்யிலில் ஆட்டு மந்தையுடன் வந்த நாகூரான் அந்தப் பகுதியின் நடமாடும் வரலாற்று புத்தகமாக இருந்தார். அவர் ஆடுகளை மேய்ச்சலுக்காக ஓட்டிவந்த மேய்ச்சல் நிலம் அனல் மின்நிலைய விரிவாக்கத்துக்காக அரசால் ஆக்கிரமிக்கப்பட்டிருந்தது.

ஏற்கனவே சுற்றியும் எண்ணூர் அனல் மின்நிலையம், வடசென்னை அனல் மின்நிலையம், வல்லூர் அனல் மின்நிலையங்கள். இவை போதாதென்று நூற்றுக் கணக்கான ஏக்கர் காடுகள் அழிக்கப்பட்டு காட்டுயிரிகள் உயிரிழக்கும் அபாயம். ஆயிரக்கணக்கான மீனவர்கள் தங்கள் பாரம்பர்ய மீன்பிடித் தொழில் இழக்கும் அபாயம். அனல் மின்நிலைய நிலக்கரி சாம்பல் கழிவால் பாதரசம் வெளிப்பட்டு பூமி மலடாகி நச்சு வடிவாகிப் போகும் அபாயம். (காணொளிக்கு: https://www.youtube.com/watch?v=1NrfuRgf8wg)

இத்தகைய சூழல்மாசுவின் அபாயங்கள் சுற்றிப் படர்ந்துள்ள பூமியில்தான் நாகூரானை சந்தித்தேன். அதையெல்லாம் அறிந்து கொள்ளும் கல்வி அறிவு  அவரிடம் நான் எதிர்பார்க்க முடியாது. உண்மையும் அதுதான். அந்த ஆபத்துகள் ஏதும் நாகூரானுக்கு தெரியவில்லை. கடைசியாக விடை பெறும்போது, அவர் கட்டியிருந்த  கரை வேட்டியை சுட்டிக் காட்டி அவரது வாக்கு யாருக்கு என்று கேட்டபோது, அவர் பளிச்சென்று பதில் சொன்னார்.

அண்மையில், அதே காட்டுப்பள்ளியைத் தாண்டி காளாஞ்சி கிராமத்தில் காட்டுயிரி ஆய்வுக்காக சென்றிருந்தேன். அங்கு கட்டுமானப் பணிகளில் ஈடுபட்டிருந்த நாமக்கல் பகுதியைச் சேர்ந்த தெலுங்கை தாய்மொழியாக கொண்டிருந்த அந்த ஏழை உழைப்பாளிகளை அவர்கள் விருப்பப்படி படமெடுத்து முடித்தேன். கடைசியாக, ”உங்கள் வாக்கு யாருக்கு?” - என்று கேட்டபோது அவர்கள் இரண்டு ஆண்டுகளுக்கு முன் நாகூரான்  சொன்ன அதே பதிலைதான் பளிச்சென்று இப்படி சொன்னார்கள்.

”நாங்கள் எம்ஜிஆர் காலத்திலிருந்தே இரட்டை இலைதான் சாமி!”

ஒரு நாகூரானோ, ஒரு சில ஏழை தொழிலாளர்களோ மட்டும் சொன்ன கருத்துக்கள் அல்ல இவை. வாரத்தில் இரண்டு முறைகள் காட்டுயிரி ஆய்வுக்காகவும், தினமும், ஒளிப்படங்களுக்காகவும் செல்லும் பல பகுதிகளில் நான் சந்தித்த மீனவ மக்கள், இருள இன ஏழைபாழைகள், ஒடுக்கப்பட்டோர், விவசாய கூலிகள் மற்றும் நடுத்தர மக்கள் இவர்கள் எல்லாம் தெரிவித்த ஒரே சின்னம் இரட்டை இலை.

ஆக, இறைவன் நாடினால், ஜெயலலிதா வெல்வது உறுதியாகிவிட்டது. ஜெயலலிதா அம்மையாருக்கு எனது வாழ்த்துக்கள்!

- என்று அந்தக் கட்டுரையில் நான் தெளிவாக தெரிவித்திருந்தேன்.

எனது கணிப்பைப் போலவே ஜெயலலிதாக அதிபெரும்பான்மைப் பெற்று ஆட்சியும் அமைத்தார். கடைசியில் அவருக்கான நேரம் முடிந்து காலத்தில் கரைந்தும் விட்டார்.

இப்போது, தலைமைச் செயலகத்தைக் கடக்கும்போதெல்லாம் ஒரு வெறுமையைதான் உணர முடிகிறது. கம்பீரமான அந்த கோட்டை களையிழந்து கிடக்கிறது. கனத்த மனதுடன்தான் கடந்து செல்ல முடிகிறது.

அதிமுக கட்சியுடனும், அதன் தலைவருடனும் கொள்கை ரீதியாக எந்த சம்பந்தமும் இல்லாத என்னைப் போன்ற ஆயிரக்கணக்கானவர்களுக்கு ஆழ்மனதில் ஏற்படும் பாதிப்புகள், ஒரு கால் நூற்றாண்டுக்கும் அதிகமாக  அவரது நிழலாக நின்ற சசிகலாவுக்கு ஏன் ஏற்படவில்லை என்று வியப்பாக இருக்கிறது.

உண்மையில், ஆதாயங்களோடு பெரும் கணக்கிட்டுதான் சசிகலா ஜெயலலிதாவுடன் இருந்தாரா? என்ற சந்தேகத்தையும் நடப்பு சம்பவங்கள் எழுப்புகின்றன.

ஜெயலலிதாவுக்கு பிரச்னைகள் ஏற்படும் போதெல்லாம் “ஸ்டாண்ட்-பை“ முதல்வராக இருந்தவர் பன்னீர் செல்வம்.

ஜெயலலிதாவின் மரணத்திற்கு பின்னும் அந்த தொடர்ச்சி தொடர்ந்திருக்கும் என்றுதான் நான் கணித்திருந்தேன். அரசியல் பின்னணிகளோ, அரசியல் போராட்ட முன்னெடுப்புகளோ இல்லாத சசிகலா பன்னீர் செல்வத்தை தஞ்சாவூர் பொம்மையாய் உருட்டி ஆட எந்த தடையும் இல்லை. ஜெயலலிதாவின் மரணத்துக்கு பிறகு இந்த வெள்ளுடை ஆசாமிகள் எல்லாம் சற்றே நிமிர்ந்திருந்தார்கள். ஆனால், அடிமைத்தனம் இன்னும் ஆழ்மனதில் பதிந்தேயிருந்தது.

சசிகலா புத்திசாலியாக இருந்திருந்தால், ஆட்சி, அதிகாரத் தொடரை தனது கட்டுக்குள் வைத்து அரசியல் ஆட்டத்தை தொடர்ந்திருப்பார். மத்திய அரசுடன் புரிந்துணர்வுடன் இருந்து தனது பிரச்னைகளுக்கெல்லாம் ஒரு முடிவை கண்டிருப்பார். அது விவேக வெளிப்பாடாக இருந்திருக்கும். இந்த மகாபாரத காட்சிகள் எல்லாம் அரங்கேறியிருக்க வேண்டிய அவசியமும் ஏற்பட்டிருக்காது!

கேட்பார் பேச்சைக் கேட்டு கெட்டுப்போன கதையாய் தற்போது சசிகலா எடுத்த முடிவுகள் எல்லாம் அவருக்கு எதிராககத்தான் திரும்பும் வாய்ப்புகள் உள்ளன. 

ஊர் இரண்டுபட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம் என்பார்களே… இங்கே ஒரு கூத்தாடி அல்ல பல கூத்தாடிகளுக்கு கொண்டாடமாகிவிட்டது இப்போது.

நடப்பு அரசியல் போர்க்களம் சம்பந்தமாக மற்றொரு முக்கிய விஷயத்தையும் பதிவு செய்தாக வேண்டும் அதாவது முதல்வர் பன்னீர் செல்வம் மோடி சரக்காருக்கு வேண்டப்பட்டவரோ, சசிகலா அம்மையார் பாசிஸத்தை விரும்பாதவரோ அல்ல. எல்லாம் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள். சுயஆதயங்களுக்காக எதையும் செய்பவர்கள்.  கடந்த காலங்களில் மக்களுக்கான திட்டங்களை எல்லாம் பெட்டி பெட்டிகளாக மாற்றிக் கொண்டவர்கள் என்றெல்லாம் சொல்லப்படுபவர்கள். 

ஆர்எஸ்எஸ் அணிவகுப்பை நடத்த அனுமதி அளித்ததற்காக முதல்வர் பன்னீர் செல்வத்தை தூற்றுவதும், சசிகலா முதல்வராக வந்தால் ஆர்எஸ்எஸ் அமைப்பை ஒடுக்கி சிறுபான்மையினரின் காவல் தெய்வமாக மாறிவிடுவார் என்று நம்புவதெல்லாம் அபத்தமானது! ஏனென்றால் இந்துத்துவ அதி தீவிரவாத பாசிஸம் என்பது சிந்தனை ரீதியானது. சமூகத்தின் எல்லா மட்டங்களிலும் ஊடுருவக்கூடியது. ஏற்கனவே எல்லா துறைகளிலும் ஊடுருவி இருப்பது.

இந்திய நாட்டில் தொடர்ந்து தடை செய்யப்பட்ட அமைப்பாக இருந்த அதே சங்பரிவார குழுவினர்தான் தற்போது இந்திய அமைப்பின் உயரிய ஆட்சி அதிகாரத்தில் மிருகபலத்துடன் அமர்ந்திருப்பவர்கள்.

அதனால், லாப, நட்டங்களை தங்களை மட்டும் முன்வைத்து பார்க்கும் அளவுகோலை சிறுபான்மை சமூகத்தார் தூக்கி எறிந்திட வேண்டும். பொத்தாம், பொதுவாக சமூக நலன் குறித்து கவலைப்படுபவர்களாகவே அவர்கள் தங்களை மாற்றிக் கொள்ள வேண்டும்.

அடுத்து அதிதீவிர இடதுசாரிகள், சூழலியலாளர்கள் இவர்கள் எல்லாம் தாங்கள் ஏதோ ஒரு காரணத்தால் பாதிக்கப்பட்டதற்காக, பன்னீர் செல்வத்தை வேண்டப்படாதவராக பார்க்கும் போக்கும் சரியானதல்ல.

மக்கள் நலன் நாடும் தலைவர்கள் அதிகார பீடங்களில் அமரும்வரை ஜாலியன்வாலாபாக் படுகொலைகள் http://ikhwanameer.blogspot.in/2017/01/blog-post_23.html  தொடர்ந்தவாறேதான் இருக்கும் என்பதை இந்த அறிவுஜீவிகளுக்கு தெரியாததல்ல. இதில் பன்னீர் செல்வமோ, சசிகலாவோ விதிவிலக்கானவர்களும் அல்ல.

அதனால், ஒட்டுமொத்த ஆற்றல்களையும் ஒருங்கிணைக்க முடியாமல் பிளவுட்டிருக்கும் சிறுபான்மையினரும், தொடர்ந்து தோல்விகளால் வரலாற்றில் பதித்துக் கொண்டிருக்கும் இடதுசாரிகளும் அதிகார மீட்புக்கான வழிமுறைகளை, தீர்வுகளைத் தேட வேண்டியது முக்கியமானது.

தற்போது புரையோடிப் போயிருக்கும் மொத்த அமைப்பையும் புரட்டிப்போடும் காலத்துக்காக வெறுமனே காத்திராமல், அதற்கான செயல்ரீதியான பணிகளில் ஈடுபடுத்திக் கொள்வதே புத்திசாலிதனமானது.

தேனீர் விற்பனை செய்தவராக தன்னை அடையாளப்படுத்திக் கொள்ளும் ஒருவர் நாட்டின் பிரதமராக இந்திய ஜனநாயகம் அனுமதிக்கிறது. 

பணியாளராக சேர்ந்த ஒருவர் ஒரு மாநிலத்தின் மொத்த அதிகாரத்தையும் கைப்பற்றும் முயற்சிகளுக்கான வழிதேடல்களும் இதே ஜனநாய கட்டமைப்பில் முடிகிறது என்னும்போது, மக்கள் நலன் நாடும் மக்கள் தலைவர்கள் இதே ஜனநாயக அமைப்புக்கு உட்பட்டு அதிகார அமைப்பை கைப்பற்ற என்ன தடை?

1 comment:

  1. தங்களது கண்ணோட்டமும் அதனால் விளைந்த நிலைபாடும் ஏற்புடையதே.. நானும் அதில் உடன்படுகிறேன்...
    உபைதுல்லாஹ்

    ReplyDelete