Friday, January 27, 2017

கனத்து கிடக்குது மனம்..!

"மூத்த அதிகாரி என்ற சட்டையைக் கழற்றி ஒரு சுதந்திர இதழியலாளனாக பொதுவெளியில், நான் வெளிவந்து நின்றபோது, அது மற்றொரு உலகமாகவே பட்டது. நிறுவனத்தில் எனது நிர்வாக பணி அழுத்தம் தந்த சுமையால் நான் ஏழாண்டுகள் பொதுவெளி ஊடகங்களிலிருந்து முற்றிலும், தொடர்பற்று போயிருந்த நிலை அது. ஒரு காலத்தில் நான் கோலோச்சிய ஊடகங்களில் எல்லாமே, எல்லோருமே மாறிப்போயிருப்பதைக் கண்டு திகைத்து நிற்கதான் முடிந்தது. சரி.. சிறுபான்மை ஊடகங்களில் பணியாற்ற எத்தனித்தபோது, அப்பாடா… எத்தனை தனித்தனி வீடுகள்! எத்தனை தனித்தனி கதவுகள்!! எதை நான் தகர்த்து உள் நுழைவேன் கடவுளே!" - இக்வான் அமீர்

'''''''''''''''''''''''''''''''''''''''''
ஏனோ தெரியவில்லை.. சமீபத்திய எனது பொழுதுகளில் சுணக்கம்.

ஒவ்வொரு பொழுதிலும், ”உலகம் பிறந்தது எனக்காக..!” - என்றொரு முணுமுணுப்புடன் துவங்கும் உற்சாகம் பின்தள்ளப்படுகிறதோ என்ற கவலை என்னைச் சூழ்ந்து கொள்கிறது.

மதியம் உணவு உண்ணும்போது, எனது துணைவியாரிடம் இப்படி கவலையுடன் கேட்டேன்:

“நான் எதற்கும் பயன்படாதவனாகிவிட்டேனோ..?”

எனது கேள்வியின் அழுத்தம் அவருக்கு புரிய வாய்ப்பில்லை.

”என்னவாச்சு..? நல்லாதானே பொழுது போயிட்டிருக்கு..! காலையிலே எழுந்ததும், கோழிகள், லவ்பேர்ட்ஸ், புறாக்கள், மாடி தோட்டம் என்று கழிகிறது. முடிந்ததும், கம்யூட்டரில் எழுத்து வேலைகள்னு நைட்டெல்லாம் தூங்காமலேயே கழியுது. என்னாச்சு உங்களுக்கு?”

அதற்கு மேல் பாவம்.. அவருடன் விவாதித்து பயனில்லை. ஒரு சராசரி குடும்பத்தலைவியான அவருள் எனது கவலைகள் நுழைவதை நான் ஒருபோதும் அனுமதிப்பதில்லை!

2013-ம் ஆண்டு. எனது வாழ்வை பொருளாதாரம், சமூக அந்தஸ்து என்று சகலவற்றிலும் என்னை மெருகேற்றி மேம்படுத்தி வைத்திருந்த பணியைத் துறந்து, விருப்ப ஓய்வு பெற்று வந்தது தவறோ? இந்த உறுத்தல் அவ்வப்போது மேலெழுவது வழக்கம்தான்! இன்று அது சற்று தூக்கலாக இருந்தது.

நிறுவனத்திலிருந்து வெளியேறி ஏதாவது ஒரு ஊடகத்துறைக்கு முழுநேரமாய் சென்றுவிடதான் திட்டம். வண்ணமய கனவுகள் எல்லாம்.

ஆனால், பொதுவெளி ஊடகங்களில் நுழைவதில் பல்வேறு சிக்கல்கள் என்றால் சிறுபான்மை ஊடகங்களோ கண்டும் காணாத மனப்போக்கில் அவரவர்களுக்கான உருக்குக் கோட்டைகளுக்குள் நின்று அச்சுறுத்தின. 

இந்நிலையில், முஸ்லிம் காட்சி ஊடகம் ஒன்று பணிக்கு அமர்த்தி, ஒரு பத்து நாளைக்குள் என்னை வீட்டுக்கு அனுப்பிவிட்ட துரதிஷ்டம்!  வாழ்வில் முதன்முதலாக பட்ட இழிவு.

அதுவும் அந்த ஊடகத்து தற்போதைய நிர்வாக இயக்குனரும் நானும், பல ஆண்டுகளுக்கு முன் வேறொரு காட்சி ஊடகத்தில் நிகழ்ச்சி தயாரிப்பாளர்களாக இருந்திருந்தும் இந்த அவலநிலை ஏற்பட்டது ஜீரணிக்க முடியாததானது! என்னோடு முகம் கொடுத்துகூட பேசாமல், எனக்கான நேரம் ஒதுக்கி என்னை அமர வைத்து பேசாமல் வீட்டுக்கு அனுப்பிய இழிநிலை அது.

எனது வயது, அனுபவம், படிப்பு, இதற்கு முன் நான் வகித்த பதவிகள் எல்லாம் துச்சமாக தூக்கி எறியப்பட்ட அந்த பத்து நாட்கள் அவை.

ஆனால், ஆசியாவின் மிகப் பெரிய வாகன உற்பத்தி ஆலையில் பணியாளராக நான் இருந்தபோது, இந்தியா மற்றும் பல்வேறு வெளிநாட்டு பகுதிகளுக்கும் நிர்வாக தலைவராக இருந்தவர் சேசஷாயி. எனது நிறுவன செயல்பாடுகள் மற்றும் வெளிப்புற ஊடக செயல்பாடுகளுக்கு கைப்பட எழுதி கொடுத்த  பாராட்டு கடிதமும், நேரில் அழைத்து எனக்களித்த மதிப்பீடுகளும் முரண்களாய் நினைவில் எழுவதை தடுக்க முடியவில்லை.

ஆக, மூத்த அதிகாரி என்ற சட்டையைக் கழற்றி ஒரு சுதந்திர இதழியலாளனாக பொதுவெளியில், நான் வெளிவந்து நின்றபோது, அது மற்றொரு உலகமாகவே பட்டது.

நிறுவனத்தில் எனது நிர்வாக பணி அழுத்தம் தந்த சுமையால் நான் ஏழாண்டுகள் பொதுவெளி ஊடகங்களிலிருந்து முற்றிலும், தொடர்பற்று போயிருந்த நிலை அது.

ஒரு காலத்தில் நான் கோலோச்சிய ஊடகங்களில் எல்லாமே, எல்லோருமே மாறிப்போயிருப்பதைக் கண்டு திகைத்து நிற்கதான் முடிந்தது. 

சரி.. சிறுபான்மை ஊடகங்களில் பணியாற்ற எத்தனித்தபோது, அப்பாடா… எத்தனை தனித்தனி வீடுகள்! எத்தனை தனித்தனி கதவுகள்!! எதை நான் தகர்த்து உள் நுழைவேன் கடவுளே!

மீண்டும் போராட்ட களமானது வாழ்க்கை.

அச்சுறுத்திய அந்தப் பொழுதுகளை துச்சமாய் தூக்கியெறிந்து வழக்கம்போலவே, உலகம் பிறந்தது எனக்காக என்ற அதே துள்ளலுடன் களத்தில் நான். 

எழுத்து ஊடகங்களிலிருந்து முற்றும் விலகாமல், மின்னணு ஊடகங்களுக்கான தட மாற்றங்களாக பாதையை சீரமைத்துக் கொள்ளும் முனைப்பில் நான்.

இது ஒரு பக்கம் என்றால், மற்றொரு பக்கத்திலோ,

வழக்கமாக நான் எழுதிக் கொண்டிருந்த பொதுவெளிப் பத்திரிகையில் என் எழுத்துக்கள் தொடர்ந்து, சில வாரங்களாக வெளியாகவில்லை என்ற கவலை!  நிர்வாக ஒதுக்கீடுகளால் அவை வேறொருவருக்கு பறிபோன நிலை என்று மீண்டும் மன அழுத்தமாய் எனது போராட்டம் தொடர்கிறது.

இந்த நினைப்பும், ஆழ் மனதை கனக்கச் செய்கிறதோ என்னவோ..!

ஏறக்குறைய ஒரு முப்பது ஆண்டுகள் நான் எழுதுவது எனது சமகாலத்து நண்பர்களுக்கு தெரிந்திருக்கும். ஆனால், இந்த முப்பது ஆண்டுகளின் ஒவ்வொரு பொழுதையும் நான் ஒரு போர்க்களமாகவே கடந்திருக்கிறேன் என்பது யாருக்கும் தெரியாது!

ஏன் எழுதவில்லை? ஏன் இப்படி எழுதுகிறீர்கள் என்ற கேள்விகளின் 'தங்கமலை ரகசியம்' எனக்கும், என்னை படைத்தவனுக்கு மட்டுமே தெரிந்தவை என்ற உண்மையை எப்படி சொல்வேன்?

முரண்பாடுகளோடு எனது உடன்பாடுகளை சுமந்து சென்றதை எப்படி விளக்குவேன்?

எனது நிறங்களை நான் இழக்காமல் பொத்திப் பொத்தி பத்திரமாய் பார்த்துக் கொண்ட தருணங்கள் அல்லவா அவை?

எனது எழுத்தாணிப் போராட்டக் களம் இப்படி என்றால்… என்னைச் சுற்றியும் வாழும் நலிந்த மனிதர்களின் வாழ்க்கை என்னை தொடர்ந்து பாதித்துக் கொண்டிருக்கிறதே... ஏன்?

எனது உலகம் ஒரு கற்பனை உலகமோ? அடுக்கடுக்காய் வருகின்றன கேள்விகள். பதில் காண முடியாமல் தவிக்கிறேன் நான்.

அண்மையில்தான், தமிழகத்து பல மாவட்டங்களில் வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளின் உயிர்பிரிந்த மரநிழல்களில், கருகிய வயல் வரப்போரங்களில் நின்று திரும்பியிருந்தேன். 

கட்டபொம்மனாய், பறிபோன அந்த உயிர்களின் மதிப்பு வெறும் ஐந்தாயிரம், பத்தாயிரம் ரூபாய்தான் என்றறிந்தபோது, மானஸ்தர்களாக அந்த எளிய விவசாயிகள் எனக்குப் பட்டார்கள். ஆனாலும், அவர்களைக் கொன்றொழித்த வெள்ளுடை அரசியல் நாயகர்களுக்கு யார் தருவர் தண்டனை?

இருண்ட இரவுகளில் அச்சுறுத்தும் அந்தத் தூக்குக்கயிறுகளின் அசைவுகளிலிருந்து இன்னும் நான் மீண்டெழ முடியாமல் தவிக்கிறேன்!

இந்நிலையில்,  கடந்த வாரம் எனது வழக்கமான காட்டுயிர் ஆய்வு மற்றும் ஒளிப்படங்களுக்கான பயணத்தின் போது எதிர்பட்டது அந்த ஏழை,பாழை இருளர்களின் சந்திப்பு.

எனக்கு நினைவு தெரிந்த நாட்களிலிருந்து ஒரு அரைநூற்றாண்டு காலம் என்று வைத்துக் கொள்ளுங்களேன்.. அவர்களின் வாழ்க்கைத் தரம் அப்படியே அவர்களின் செம்பட்டை முடியைப்  போலவே நிறமற்று கிடக்கிறது. https://www.youtube.com/watch?v=4q_9_176FD4&t=35s   https://www.youtube.com/watch?v=-avrrlco8jg&t=61s

பக்கிங்காம் கால்வாய் ஓரமாகவும், காடுகளிலும் கழியும் வாழ்க்கை அவர்களுடையது! மண்ணின் பூர்வ குடிகளான அந்த இருளர் இன மக்களின் அறியாமைகளும், அவர்களின் வாழ்வியல் போக்கும் இன்னும் என் சோகத்தை அதிகரிக்கின்றன.

கடைசியாக, எனது இளம் நண்பர் நாகர்கோவில் டாக்டர் மொஹித்தீன் அத்தனை விஷயங்களையும் உள்வாங்கி சொன்னார்:

"தொடர்ந்து எழுதுங்கள்… குறிப்பிட்ட தலைப்புகளில் எழுதிக் கொண்டேயிருங்கள். அவை பிரசுரமானானலும் சரி… பிரசுரமாகாவிட்டாலும் சரி.. தொடர்ந்து எழுதுங்கள்… உங்கள் வலைப்பூக்களை நிரப்பியவாறு இருங்கள். நமக்கென்று பொதுவெளி ஊடகம் ஒன்று வரும்வரை இந்த போராட்டம் தொடர்ந்வாறே இருக்கட்டும்!"

காலம் சென்ற எனது ஆசான் மூதறிஞர் ஜமீல் அஹ்மது, நான் இப்படி, சோர்வுறும்போதெல்லாம் என்னை அமரவைத்து, அவருக்கு விருப்பமான உப்புத் தடவிய ஆரஞ்சு சுளைகளை என் முன் நீட்டியவாறே அந்த 11 மணி தாண்டிய இரவுகளில் என்னை உற்சாகப்படுத்த சொல்லும் அதே சொற்கள் இவை! இளமை வடிவில்..! 

மனம் கனத்திருந்தாலும், உடல் சோர்ந்திருந்தாலும், என் அறிவாயுத யுத்தத்துக்கு முடிவேயில்லை .... மரணம்வரை என்கின்றன நடப்புச் சூழல்கள்!

          “““““““““““““““““““““““““““““““““

2 comments: