Sunday, January 22, 2017

இளைஞர்களே வீடு போய் சேருங்கள்..!

மெரீனா சென்ற மகன் இன்னும் வீடு திரும்பலியே... என்னும் தலைப்பில் ஆரம்பத்திலேயே முகநூலில் நான் ஒரு பதிவிட்டிருந்தேன்.அதற்கு நிறைய ஆறுதல் பின்னூட்டங்கள் எனக்கு!  (https://www.facebook.com/photo.php?fbid=742723152547383&set=a.107624929390545.15685.100004291150487&type=3&theater) - இக்வான் அமீர்
''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''

அதே கலையோடுதான் நான் இப்போதும்..! ஏனென்றால், நான் கவலைப்பட்டது என் குடும்பத்து பிள்ளைக்காக அல்ல..! அந்த திறந்தவெளியில் அறப்போர் நடத்திக் கொண்டிருக்கும் எனது சகோதர, சகோதரிகளின் லட்சோப லட்சம் பிள்ளைகள் பற்றிய கவலையே அது.

லட்சக்கணக்கான பிள்ளைகள் இன்னும் வீடு திரும்பலியே என்ற கவலை உறுத்திக் கொண்டிருப்பதற்கு காரணம் இல்லாமல் இல்லை. ஏனென்றால் சாணக்கியர்கள் சதா வியூகங்களுடன், திறம்பட செயல்படும் ஆட்சி, அதிகாரத்துடன், ஆள், அம்பாரிகளுடன் பின்வாங்கி நிற்கிறார்கள் என்றால் இந்த மௌனத்தின் பொருள் ஓரிரு வார்த்தைகள் அல்ல.

உண்மையில் ஜல்லிக்கட்டு என்ற பெயரில் மெரீனாவில் திரண்டிருந்தது காளை மாடுகளை அவிழ்த்துவிட வேண்டும் என்பதற்கான கூட்டம் மட்டுமல்ல. தமிழர் பண்பாட்டு வாழ்வியல் கட்டிகாக்கப்பட வேண்டும்  என்ற செய்தியை சுமந்து நிற்கும் தொடர்ந்து ஒடுக்கப்படும் ஒரு இனத்து குரலின் வெளிப்பாடு அது.

மெரீனா கடற்கரையில் திரண்டிருந்த லட்சக்கணக்கான மக்களில் எந்த கொள்கை, கோட்பாடுகளும் ஊடுருவாத மாணவர்களும் இருந்தார்கள், அதேபோல, சித்தாந்தத்திற்காக எதையும் அற்பணிக்கும் கொள்கைவாதிகளும் இருந்தார்கள் என்பது முக்கியமானது.  இவர்கள் அனைவரும் ஆரம்பத்திலிருந்து செய்த தவறுகளில் முக்கியமானவை  நிஜங்களை ஆழக்குழித் தோண்டி புதைக்கும், ஆள்வோரின் எடுபிடிகளாக விளங்கும் ஊடகங்களையும், மக்கள் தொண்டிற்காக தங்களை அர்ப்பணித்துக் கொண்ட ஊடகங்களையும் புறக்கணித்தது என்று சொல்லலாம். இதற்கான நியாயங்கள் கூட இருக்கலாம்.

ஆனால், சாதுர்யம் என்பது முற்றிலும் வேறான ஒரு அறிவு என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

அதேபோல, அரசியல்வாதிகளை விலக்கி வைத்தது பெரும் தவறு.

நமது வாழ்வும், தாழ்வும் எல்லாமே இந்த அரசியல் அமைப்புக்குள்தான் என்பதுதான் உண்மை அதாவது தொடர்ந்து மாறிவரும் நமது அரசியல் அமைப்பு அதன் கட்டமைப்புக்குள் நுழைந்து அதிகாரம் பெறும்போது, நம்மாலும், மக்களுக்கான மாற்றங்களை கொணர முடியும் என்பதுதான் உண்மை.

இன்று நாம் வெறுக்கும் இதே அரசியல் அமைப்பில்தான் எத்தனையோ எளிய மக்கள் பிரதிநிதிகளும் மக்களுக்காக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். மாறும் என்ற நம்பிக்கையோடு தொடர்ந்து போராடிக் கொண்டிருக்கிறார்கள்.

”இவ்வளவு பெரிய கூட்டத்தினர் கட்டுக்கோப்போடு இருக்கிறார்களே எப்படி?” -என்று என் நண்பர்களில் சிலர் கேட்டபோது, ”இவ்வளவு பெரிய கூட்டம் என்பது முதல் தவறு. இருபது – முப்பது பேர் அல்லது ஐம்பது – நூறு பேர் என்று ஒன்றிணைந்த சிறு குழுக்கள் அவர்கள். ஒத்த சிந்தனையாளர்கள். அந்த சிறு குழுக்களுக்கான தகவல் பறிமாற்றங்களும் எளிது. அதனால், ஒழுங்கமைப்பு ஓரளவு சீர்குலையாமலிருக்கிறது.  அதேநேரத்தில் அவர்களை அறியாமலேயே திசை திரும்பிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், இவ்வளவு பெரிய கூட்டம் ஒரு தலைமையின் கீழ் ஒன்றுபட்டிருக்குமானால் நமது தேசத்தின் தலைவிதி இந்நேரம் முற்றிலும் மாறியிருக்கும்!” - என்று நான் அதற்கு பதிலளித்தேன். 

இந்த பதிலால் என்னிடம் வினா எழுப்பியவர்கள் அல்லது நீங்கள் சமாதானமடைகிறீர்களோ இல்லையோ… நான் மெரீனாவில், கண்டதை, கேட்டதை வைத்தே இந்த பதிலைச் சொல்கிறேன்.

ஜல்லிக்கட்டு என்ற பெயரில், லட்சக்கணக்கானோர் திரண்ட இந்த கடற்கரையில் வெறும் பீட்டாவுக்கு எதிரான கோஷங்கள் எழவில்லை. இந்திய நாட்டின் அரசியல் விவகாரங்கள் அக்குவேறு, ஆணிவேராக விமர்சன கண்ணோட்டத்துடன் முழங்கப்பட்டன. தமிழக ஊழல் அரசியல் நாயகர்கள் மட்டும் விமர்சிக்கப்படவில்லை. டெல்லியை ஆளும் மதவாதிகளின் முகமூடிகளும் தோலுரிக்கப்பட்டன.

நான் ஆரம்பத்தில் சொன்னதுபோல, பூரண ஆயுதம் தரித்த ஒரு பெரும் படையோடு, அதை முடுக்கிவிட எல்லா அதிகார மையங்களையும் தன்னகத்தே கொண்ட பலமான அமைப்போடு சில அப்பாவிகள் களத்தில் இறங்கிய கதைதான் இது!

ஒரு நாற்பது ஆண்டுகள் காக்கி உடுப்போடு பணியிலிருந்த ஒரு தொழிலாளி என்ற முறையில் எனக்கு நிறைய அனுபவங்கள் உண்டு.  அதிலும், பல்வேறு காலக்கட்டங்களில் பல்வேறு அரிய தொழிற்சங்க தலைவர்களுடன் தோளிணைந்து நின்று போராட்டங்களை முன்னெடுத்தவன் என்ற அனுபவத்தையும் காலம் தந்திருக்கிறது.  மீசை முளையாத அந்தப் பருவத்திலேயே ஒவ்வொரு போராட்டத்திலும் வெற்றி தோல்விகள் கண்டவன் என்பதாலும்  என்னுள் ஒரு பதட்டம் சூழ்ந்து கொள்வதை தவிர்க்க முடியவில்லை. 

ஏனென்றால், போராட்டங்களை எப்படி கொண்டு செல்ல வேண்டும்? அவற்றை எப்படி..? எங்கு முடிக்க வேண்டும் என்ற அனுபவம் இல்லாத இளைஞர்கள்தான் ஜல்லிக்கட்டு என்ற பெயரில் திரண்டிருப்பவர்கள்.

தனிநாடு கோஷங்கள், விடுதலைப்புலிகள் பதாகைகள், மோடி சர்க்கார் குறித்த அரசியல் விமர்சனங்கள், இந்திய பொருளாதார சிக்கல்கள், இந்திய வெளிவிவாகர அலசல்கள், தமிழர் பண்பாட்டு வாழ்வியலுக்கான கோபங்கள் என்று இந்திய பிரச்னைகள் அனைத்தும் வெளிப்பட்ட இடமே மெரீனா கடற்கரை.

இந்த கடற்கரை, மெளனியாக நின்ற இதே காவலர்களால் ஒரு டியான்மென் சதுக்கமாக மாற முடியாதுதான்!  தக்ரீர் சதுக்கமாகவும் உருவெடுக்க இயலாததுதான்! ஆனால், இதற்கு எந்த உத்திரவாதமும் இல்லை. இன்றைக்கும் “ஜெனரல் டயர்கள்“ இங்கு இருந்து கொண்டுதான் இருக்கிறார்கள்.

ஏனென்றால், நம்மை சுற்றியும் பிணைந்திருப்பவை… நம்மை ஆண்டு கொண்டிருப்பவை வெள்ளையரின் சட்டங்கள். அறவழி போராட்ட நாயகன் காந்தி மகான் மீது பாய்ந்தது போலவே கொடும் வேட்டை நாய்களாய் போராட்டக்காரர்கள் மீது பாய வல்லவை.

அமைப்புகள் நாடுகள் மாறினாலும் ஆட்சியாளர்கள் எப்போதும் தங்கள் ஆட்சி அதிகாரத்தை தக்க வைப்பதில்தான் குறியாக இருப்பார்கள். அதிலும் பாசிஸம் தலைவிரித்தாடும் நமது நாட்டில் இது இன்னும் மோசமான விளைவுகளைதான் ஏற்படுத்தும்.

இளைஞர்களே போதும்… வீடு போய் சேருங்கள்..!  உங்கள் பணிகளை ஒன்றிணைந்து உங்கள் வீடுகளிலிருந்து துவங்குங்கள்! உங்களுக்கான அவகாசத்தை நிர்ணயித்துக் கொள்ளுங்கள்.  தளராமல் நமது அமைப்பின் மாற்றங்களுக்கான அதிகாரம் பெற ஆர்வம் காட்டுங்கள். மாடுகளுக்கான போராட்டம் மட்டுமல்ல... இந்திய நாட்டில் சதா ஒடுக்கப்படும், ஏழை, எளிய மனிதர்களுக்கான போராட்டமாக அது மலரட்டும்.

மதவாதம், இனவாதம் மேலோங்காமலிருந்த இந்த ஒரு வாரத்தை தாண்டிய உங்கள் போராட்டம் உங்கள் அரசியல் பிரவேசத்தின் துவக்கமாக இருக்க எனது வாழ்த்துக்கள்..!

''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''
தொடர்புடைய ஆக்கங்கள்: http://ikhwanameer.blogspot.in/2017/01/blog-post_59.html

2 comments:

  1. The words of concerned articulated in right manner. I read the article today at 08.00 hours and made an attempt to write the comment, due to some issue it was not registered. Now seeing the unpleasant development, i write regretfully how the young mob behavior drifted badly. Its all because of lack of leadership. as you rightly mentioned it was group and sub group swelled to this massive movement. It is similar to how legendary ABHIMANUY breaked into PADMAVYUK and was not knowing come out. The youths started on their own and witnessed its organic growth of adding up ladies and elders. The inexperience mob, lack of vision and strategy they were not known where,when and how to stop or pause. lead the movement endlessly. It is also a valuable argument that lack of political colour helped to make this protest to this level where people volunteered to such a huge level. had it been any political involvement would deter people of different view against the party involved. The protest movement lead by youngsters who are aware about politics but never experienced to withstand gigantic octopus arms of power and political interest involved. praying for peace to exist :-(

    ReplyDelete
    Replies
    1. Thanks for your Valuable Comment Dear Saravanakumar Ji.

      Delete