Tuesday, January 24, 2017

இனி முடிவுரை எழுத வேண்டியதும் நீங்கள்தான்!தனது பிரதமரை, தனது முதல்வரை, தனது அமைச்சர்களை அவர்கள் சாடிக் கொண்டிருந்தார்கள். இதில் எனக்கு, உடன்பாடு, முரண்பாடுகள் எவ்வளவு என்பதைக் குறித்தெல்லாம் முக்கியம் இழந்துபோன களம் அது. ஏனென்றால், சமகாலத்து யதார்த்தப்பூர்வமான அரசியல் நாயகர்களாக அந்த இளைஞர்கள் எனக்குப் பட்டார்கள்.- இக்வான் அமீர்
''''''''''''''''''''''''''''
ஜல்லிக்கட்டுக்கான மாணவர் போரட்டத்தின் போக்கை நேரிடையாக கண்டு வந்த பிறகு நான் சொன்னேன்: “இது ஜல்லிக்கட்டுக்காக மட்டும் நடக்கும் போராட்டமாக இல்லை. மொத்த சமூகத்தையும் புரட்டிப்போடும் போர்க்களமாக தெரிகிறது!”

உண்மைதான்…! இந்திய உபகண்டத்தின் தென்பகுதியிலிருந்து வடபகுதிவரையிலான அத்தனை பிரச்னைகளையும் அந்த இளைஞர்கள் கையிலெடுத்து அவற்றின் தீர்வை நோக்கி நகர்வதற்கான ஒரு விழாவாக்கி இருந்தார்கள்.

எந்த தமிழன் அரசியல் ரீதியாக, பண்பாட்டு-கலாச்சார ரீதியாக இந்திய அரசியலமைப்பில் தொடர்ச்சியாய் உதாசீனப்படுத்தப்படுகின்றானோ அதே தமிழன் மற்றும் தமிழச்சிகள்தான் ஒட்டுமொத்த இந்தியர்களின் நலன்நாடும் சங்கொலியை எழுப்பிக் கொண்டிருந்தார்கள்.

ஒரு விசித்திரமான விழா இது.

உலகின் மிகப் பெரிய அழகிய மெரீனா கடற்கரை அரசியல்வாதிகளின் இடுகாட்டு சூழலிலிருந்து மீண்டு, ஜனசமுத்திரமாக மாறியிருந்தது. அங்கு அடக்கப்பட்டிருப்பவர்கள் ஒருவேளை கேட்கும் திறன் பெற்றிருந்தால்… தாங்கள் கடந்த காலங்களில் தமிழகத்துக்கு செய்ய மறுத்த சீர்த்திருத்தங்களை எண்ணி.. எண்ணி வெட்கப்பட்டிருப்பார்களோ என்னவோ..!

ஒருமுனையில், விடியலுக்கான அந்த ஒவ்வொரு பொழுதையும் இளைஞர்கள் அற்புதமாய் நகர்த்திக் கொண்டிருந்தார்கள். மறுமுனையில், ஒட்டுமொத்த இந்திய அரசியல்வாதிகளுக்கும் அறைகூவலாய் அமைந்து பேரச்சம் தந்த பொழுதுகள் அவை.

சாதி,சமய, பேதங்கள், மனிதருக்குள்ளான பிரிவினைகள் என்று அத்தனை அடையாளங்களும் தொலைந்துபோய், வாழ்வியலுக்கான வழிதேடியோர் நடத்திய பேரின்ப தமிழர் திருவிழா அது. இதற்கு தலைமைத்தாங்க இந்திய நாட்டில் தகுதியுள்ள ஒரே இளைஞன் தமிழன்தான் என்று உலகுக்குக் காட்டிய விழா!

அதனால்தான், ஒரு பொழுது, ஒரு இரவு நான் திரட்டிய ஒளிப்படத் தொகுப்புக்கு இளைஞர் திருவிழா என்று பெயரிட்டு பதிவேற்றம் செய்திருந்தேன். https://www.facebook.com/ikhwan.ameer.9/media_set?set=a.743348029151562.1073741908.100004291150487&type=3 https://www.facebook.com/ikhwan.ameer.9/media_set?set=a.743378745815157.1073741909.100004291150487&type=3

அந்த மனித சமுத்திரத்துக்குள் என்னால் சற்றும் பயமில்லாமல் நகர முடிந்தது. எனது குடும்பத்தார் மத்தியில் நான் என்ற பாதுகாப்பை அளித்த நகர்வுகள் அவை.

மிகவும் மரியாதையோடு, அரவணைப்போடு, பாதுகாப்போடு இருந்த நான், காட்சிகளை எனது காமிராக்களுக்குள் பதிவு செய்ய முடிந்தது.

மென்மையும், புன்சிரிப்புமாய், ஒழுக்கம், கட்டுக்கோப்பை அந்த சின்னஞ்சிறு இளைஞர், இளைஞிகள் தோளில் சுமந்திருந்தது வியப்பை ஏற்படுத்தியது.

அதே வியப்புடன் அவர்களில் ஓர் இளைஞனிடம் கேட்டேன்: “எங்கேய்யா இவ்வளவு நாள் சென்றிருந்தீர்கள்?”

எனது கேள்வியின் ஆழம் அந்த அரும்பு மீசை இளைஞனுக்கும் புரிந்தது.

அவன் அதேவேகத்தில் பதில் சொன்னான்:”இத்துடன் நாங்கள் விடுவதாயில்லை..! காவேரி, விவசாயிகள் மரணங்கள் என்று ஒவ்வொரு பிரச்னையையும் கையில் எடுக்க உள்ளோம்!”
உள்ளம் நிறைந்த வாழ்த்துக்கள் சொல்லிவிட்டு நான் நகர்ந்தேன்.

ஆனால், என் அடிமனதில் அதிகார வர்க்கத்தின் குரூர முகம் மேலெழுந்து என்னை அச்சமூட்டியதை வெளிப்படுத்திக் கொள்ளவில்லை.http://ikhwanameer.blogspot.in/2017/01/blog-post_23.html
எனது ஒவ்வொரு நகர்விலும் ஒரு பொறியாளர் குழு, ஒரு மருத்துவர் குழு, பன்னாட்டு நிறுவனங்களில் பணிப்புரியும் இளைஞர் குழு, இருசக்கர வாகனங்களை பழுதுபார்க்கும் சாமான்யர்களின் பிசகுபடிந்த உடைகளோடு கூடிய குழு என்றிருந்த ஜனத்திரட்சி அது.

இப்படி, தமிழ் சமூகத்தின் பல்வேறு குழுவினர் தங்கள் கோபத்தை ஒலி வடிவமாக, இசைவடிவமாக, நடன வடிவமாக, நாடக வடிவமாக காட்சிப்படுத்திக் கொண்டிருந்தனர். ஆவேசமற்றிருக்க அவர்கள் ஒன்றும் என்னைப் போல முதியவர்கள் அல்ல.

அந்த காட்சிகளுள் இந்திய சமூகத்தில் நச்சாய் கலந்து மேலோங்கிவரும் மோடி தலைமையிலான மதவாதமும் காட்சிப்படுத்தப்பட்டது.

தமிழகத்தில் குனிந்து, பணிந்தே நிமிர்ந்து நடக்க முற்றிலும் மறந்துவிட்ட அடிமை மக்கள் பிரதிநிதிகளின் அரசியல் தள்ளாமைகளும் தோலுரிக்கப்பட்டது.

தனது பிரதமரை, தனது முதல்வரை, தனது அமைச்சர்களை அவர்கள் சாடிக் கொண்டிருந்தார்கள்.

இதில் எனக்கு, உடன்பாடு, முரண்பாடுகள் எவ்வளவு என்பதைக் குறித்தெல்லாம் முக்கியம் இழந்துபோன களம் அது.

ஏனென்றால், சமகாலத்து யதார்த்தப்பூர்வமான அரசியல் நாயகர்களாக அந்த இளைஞர்கள் எனக்குப் பட்டார்கள்.

சுருக்கமாக சொல்ல வேண்டுமென்றால் யார் யார் எல்லாம் இந்திய சமூக அமைப்பில் மாற்றம் வேண்டும் என்று விரும்பினார்களோ, அவர்கள் எல்லாம் ஒன்று திரண்டு தங்கள் வருத்தங்களை, துன்பங்களை, மாற்றத்துக்கான தேடல்களை பகிர்ந்து கொண்ட எளிய மக்கள் திரள் அது.

மேடையில்லாமல், வெறும் மண் தரையை மேடையாக்கினார்கள் அந்த சின்ன மனிதர்கள்.

ஒலிபெருக்கி வசதியில்லாவிட்டால் என்ன? மின்கலத்தால் இயங்கும் சிறு அளவு ஒலி பெருக்கிகளை, ஒலிப்பான்களையும் தோளில் சுமந்து தங்கள் கருத்துக்கள ஒலித்துக் கொண்டிருந்தார்கள் அந்த பிஞ்சுகள்.

யாருக்கும், எந்த இடைஞ்சலும் இல்லாமல் நடத்தப்பட்ட அந்தக் கூட்டத்தில் இளைஞர்கள் மட்டுமல்ல, சிறார்கள், குழந்தைகள், பெரியவர்கள், முதியவர்கள், கற்றோர், கல்லாதோர் என்று அனைத்து தரப்பு மக்களும் கலந்திருந்தனர்.

ஒவ்வொரு நாளும் ஜனத்திரள் பெருக்கிக் கொண்டிருந்த நிலையில், அந்த பெரும் நிர்பந்தத்தில் பிறந்த அவசரக் குழந்தைதான் சல்லிக்கட்டு நடத்துவதற்கான சட்ட திருத்த மசோதா!

நமது இந்திய சமூக அமைப்பில், ஆள்வோர் மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில்லை என்பதோடு, தங்கள் பிரச்னைகளை, தேவைகளை முன்வைத்து தெருவில் இறங்கிப் போராடுபவர்களையும் விரும்புவதில்லை.

இந்த விருப்பங்களின் நேர்க்கோடாய் அமைந்ததுதான் ஜல்லிக்கட்டு இளைஞர்கள் மீது நடத்தப்பட்ட காவல்துறையின் கொடூர தாக்குதல்.

அந்த இளைஞர்கள் ஜல்லிக்கட்டு என்ற ஒற்றைச் சொல்லை மட்டும் உதித்து போராடி இருப்பார்களேயானால்…

நமது, “மன் கீ பாத்” பிரதமர் மோடி சர்க்கார் நேரிடையாகவே மெரீனா கடற்கரையில் வானிலிருந்து தரையிறங்கியிருப்பார்.

இளைஞர்கள் மீது பூ மழைப் பொழிந்திருப்பார்.

போராட்ட நாயகர்களுடன் குறைவற்ற செல்பிகளையும் எடுத்துக் கொண்டிருப்பார்.
உடன் பீட்டா தடை செய்யப்பட்டிருக்கும்.

அலங்காநல்லூர் வாடிவாசல் பொன்னாலான கதவுகளால் மாற்றப்பட்டு, ஒருவேளை மோடி சர்க்கார் கூட ஏறுதழுவும் ஒப்பனைகள் நடந்திருக்கும்!

நமது முதல்வர் பன்னீர்செல்வம், சசிகலா உட்பட அந்த இளைஞர், இளைஞிகளை கொண்டாடியிருப்பார்கள்.

ஆனால், ஜல்லிக்கட்டைத் தாண்டி தமிழக இளைஞர்கள் அடையாளப்படுத்தியவை நாட்டின் சீர்கேடுகளை! அம்பலப்படுத்தியது அரசியல் அவலங்களை!. வான் உயர ஒலி எழுப்பியது ஒடுக்கப்படும் தமிழ் சமூகத்தின் ஓலங்களை!

இதை ஜனநாயக முகமூடிகளுடன் எதேச்சகார ஆட்சியை நடத்திக் கொண்டிருக்கும் நமது அரசியல் நாயகர்கள் ஒருபோதும் ஒப்பவேமாட்டார்கள்.

அந்த விருப்பமின்மைக்கு அடையாளம்தான் எல்லாம் முடிந்து கலையும் நிலையில் இருந்த அப்பாவிகள் மீது கட்டவிழ்த்துவிடப்பட்ட மனித உரிமை மீறல்கள்.

வெள்ளையர் காலம் தொட்டு இந்திய அரசியல் அமைப்பில் கிடைத்துவரும் அறவழிக்கான பரிசுகள் அவை.

”இனியும்” என்ற சொல் ”இனி இல்லை!” என்று தேடி, தேடி, விரட்டி… விரட்டி.. அதற்கு வலியாலும், வேதனையாலும், பயத்தாலும் வைக்க முயன்ற முற்றுப்புள்ளி.

இந்த காட்டுமிராண்டிதனமான நடவடிக்கை ஒருவிதமான மனநோயின் அடையாளம் என்றுகூட சொல்லாம். ஆட்சி, அதிகாரத்துக்கு எதிராக திரும்புதல் என்ற சந்தேகத்தின் அடையாள மனநோயின் வெளிப்பாடுகூட.

ஆனால், அறிவியல் பூர்வமாக அக்கிரமங்கள், அநீதிகளும், சித்திரவதைகளும் தொடர்ந்து அரங்கேற்றப்படும் நிலையில் மனிதனின் மூளை வலியையும், வேதனையையும் மறக்க வைத்துவிடும். அது சகஜமான செயல்களின் பதிவுகளாக்கிவிடும் என்கிறது உலக வரலாறு. இது எதிர்விளைவுகளை தோற்றுவிக்குமேயன்றி எந்தவிதமான நேர்மறை சிந்தனைகளையும் தராது. அதுவும் திறந்த மனம் கொண்ட இளைஞர்கள் மனதில் நமது அமைப்புக் குறித்து அவநம்பிக்கை ஏற்படுத்திவிடும்.

ஓய்ந்தது..! ஒருவழியாய் எல்லாம் ஓய்ந்தது..! ஆனாலும், அந்த சிரித்த முகங்களும், பெரும் பிரச்னைகளை முழங்கிய முழக்கங்களும் நெஞ்சிலிருந்து விலக மறுக்கிறது. http://ikhwanameer.blogspot.in/2017/01/blog-post_75.html

தமிழன் என்ற அடையாளப் பெயரில் ஒட்டு மொத்த தேசத்துக்காக திரண்ட தூய தேசபக்த இளைஞர்களை எனது ஆயுளில் கண்ட திருப்தியோடு எனது வாழ்த்துக்கள்..!

வலிகளிலிருந்தும், வேதனைகளிலிருந்தும், வாழ்வியல் நிர்பந்தங்களிலிருந்தும் முற்றிலுமாய் வெளியேறி இந்திய அரசியல் வானின் விடிவெள்ளிகளாய் மாற பிரார்த்தனைகள்..!

அனுபவங்களை ஆசானாக்கிக் கொண்டு பெரும் சுமைகளை நீங்கள் சுமந்துதானாக வேண்டும் மறந்துவிடாதீர்!

ஏனென்றால் முதல் அத்தியாயத்தை எழுதியது நீங்கள்தான்..! அதன் முடிவுரை எழுத வேண்டியதும் நீங்கள்தான் இளைஞர், இளைஞிகளே..!

''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''
ஒளிப்படங்கள் பதிவிறக்கம் செய்து கொள்ள விரும்புவோர் எனது இந்த இணைப்பில் Jallikattu தலைப்பில் இருப்பவற்றை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

http://ikhwanameerphotography.blogspot.in/2017/01/jallikattu-agitation-merina-beach.html

http://ikhwanameerphotography.blogspot.in/2017/01/jallikattu-agitation-2.html4 comments:

 1. இதற்கு முந்தைய பதிவை(இளைஞர்களே வீடு போய் சேருங்கள்) அப்போதே படித்து விட்டேன். இந்த பதிவையும் படித்தவுடன் மனது கனத்தது.

  ReplyDelete
  Replies
  1. கனத்த மனதோடுதான் பொழுதுகள் நகர்கின்றன. விடியலைத் தேடிய வெள்ளைப்புறாவாய் காலம் கழிகிறது. ஒரு ராஜகுமாரன் வெள்ளைக் குதிரையில் ஏறி வரும் கனவுகளில் காலம் விரைகிறது.

   நன்றி. தி.தமிழ் இளங்கோ அய்யா!

   Delete
 2. ”எனக்கு ஏன் இந்த மாதிரி எழுத வரவில்லை, நான் நினைப்பதையே இந்தளவிற்கு எழுத்தில் இறக்கி வைக்க முடியவில்லையே” என்றெல்லாம் ஏங்குகின்ற எழுத்து இது.”இளைஞர்களே வீடு போய் சேருங்கள்” என்ற முந்தைய பதிவில் உங்களோடு நான் உடன்பட்டேன் அதில் ஒரு தந்தையின் பரிவும் பொறுப்பும் மிகுந்திருந்தது.நான் அந்த களத்தை கண்ணால் கண்டுணரும் வாய்ப்பை தவற விட்டவன்.அந்த ஏக்கமும் கூட சேர்ந்து கொள்கிறது.எனினும் இது ஒரு தொடக்கம் தான்,அத்தி பூத்தாற்போலன்றி மறுபடியும் தேவைக்கேற்ப பூக்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது.அலங்காரமில்லாத உங்கள் எழுத்து நடை வசீகரிப்பதற்கு அதில் நல்லெண்ணமும் கூடவே சத்தியமும் இருப்பது தான் காரணம் என நான் கருதுகிறேன்.மகிழ்ச்சி அய்யா!!

  ReplyDelete
  Replies
  1. நன்றி மானுடன்.. !

   Delete