Monday, January 23, 2017

குண்டாந்தடிகளைச் சுற்றிய ஜெனரல் டயர்கள்..!

தனது கோரிக்கைகளுக்காக வேண்டி தனது பிரதிநிதிகளை நோக்கி உரத்துக் குரல் எழுப்புவதும், அறவழியில் நிற்பதும் நமது ஜனநாயக அமைப்பில் ஒரு குற்றமாகவே கருதப்படுகிறது. அதனால், குற்றவாளிகளுக்கான சகல மரியாதைகளும் போராடுபவர்களுக்கு அளிக்கப்படுகிறது. அவர்கள் துடிக்க.. துடிக்க பொதுவெளியில் தோலுரிக்கப்படுகிறார்கள். கைது செய்யப்பட்ட வாகனத்தில், சிறைக் கொட்டடியில் என்றெல்லாம் இந்த குண்டாந்தடிகள் மீண்டும்… மீண்டும் ஓய்வின்றி சுழற்றப்படுகிறது. - இக்வான் அமீர் 
 ''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''
காலையில் அந்த காட்சியைக் கண்டதும், எனக்குப் புரிந்துவிட்டது… ”பட்டையைச் கிளப்பப் போறாங்க..!” – கொஞ்சம் சத்தமாகவும் சொல்லிக் கொண்டேன்.

அந்த காட்சி இதுதான்: “போலீஸாரின் விரட்டலுக்கு அஞ்சி மெரீனா கடற்கரையோரம் ஒதுங்கியிருந்தனர் ஜல்லிக்கட்டு இளைஞர்கள். அங்கிருந்த ஆண் போலீஸாரிடம் ஒரு பெண் போலீஸ் அம்மணி, கையில் அடுக்கியிருந்த குண்டாந்தடிகளை பவ்வியமாக நீட்ட, அதை, அவர்கள் ஒவ்வொருவரும் கையில் எடுத்து வாட்களை பதம் பார்ப்பதுபோல, தடவி கொண்டிருந்தார்கள்.

கடைசியில் மிச்சப்பட்ட கைத்தடி அம்மணியுடையது.

அந்த காட்சியின் விளைவு குறித்து மிகவும் அச்சத்துடனிருந்தேன் நான்.

போலீஸார் தாக்குவது ஒருபுறம் இருக்கட்டும். மண்டைகள் உடைவது, ரத்தம் கொட்டுவது இவை எல்லாவற்றையும் தாண்டி போராடுபவர்களுக்கு அச்ச உணர்வை ஊட்டி, போராட்டத்தின் முனையை மழுங்கச் செய்யும் பயிற்சியில் வல்லவர்கள் இந்த காவலர்கள். அதற்கேற்பவே அவர்களின் மிருகத்தனமான அணுகுமுறையும் இருக்கும். லட்டியைச் சுற்றி அடிக்கும் அடிகளும் இருக்கும்.

தனது கோரிக்கைகளுக்காக வேண்டி தனது பிரதிநிதிகளை நோக்கி உரத்துக் குரல் எழுப்புவதும், அறவழியில் நிற்பதும் நமது ஜனநாயக அமைப்பில் ஒரு குற்றமாகவே கருதப்படுகிறது. அதனால், குற்றவாளிகளுக்கான சகல மரியாதைகளும் போராடுபவர்களுக்கு அளிக்கப்படுகிறது. அவர்கள் துடிக்க.. துடிக்க பொதுவெளியில் தோலுரிக்கப்படுகிறார்கள். கைது செய்யப்பட்ட வாகனத்தில், சிறைக் கொட்டடியில் என்றெல்லாம் இந்த குண்டாந்தடிகள் மீண்டும்… மீண்டும் ஓய்வின்றி சுழற்றப்படுகிறது.

இவை எல்லாவற்றின் நோக்கமும் பொதுஜனம் மீண்டும் தனது உரிமைகளைக் கேட்டு ஆயுள் உள்ளவரை தெருவில் இறங்கவே கூடாது என்பதுதான்..!

கலவரங்களை அடக்குவதற்கென்று பயிற்சி பெற்ற காவலர்கள் சட்டம், ஒழுங்கை மட்டும் கட்டுக்குள் கொண்டுவருவதில்லை! கலவரங்களை வலுப்படுத்தும்விதமாக வாகனங்களை நாசப்படுத்தும் பணிகளில் ஈடுபடுவதும் வழக்கம்தான்! இவை எல்லாம் சர்வசாதாரணமாக நாட்டுப்புறங்களில் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிராக நடக்கும் அத்துமீறல் சம்பவங்கள்.

ஆனால், இந்த கொடூர வழிமுறைகளை நகர்புறத்தில் கையாளப்படும்போது, அதாவது வாகனங்களை அடித்து நொறுக்குவது, தீ வைப்பது, வீட்டுக்குள் நுழைந்து வீட்டுப் பொருட்களை அடித்து நொறுக்குவது எல்லாம் – ஒன்று எடுபடுவதில்லை அல்லது நவீன தகவல் தொடர்பு சாதனங்களால் போலீஸாருக்கு எதிரான சாட்சிகளாகவே அவை மாறிவிடுகின்றன.

சென்னையின் ஐஸ் ஹவுஸ், திருவல்லிக்கேணி போன்ற பகுதிகளில் போலீஸார் வாகனங்களை உடைத்து நொறுக்கினர். ஆட்டோக்களை தீ வைத்து கொளுத்தினர். இந்த அத்துமீறல்கள் எல்லாமே காட்சிப்படுத்தப்பட்டு சாட்சிகளாகி காட்டுத் தீயாய் சமூக ஊடகங்களில் பரவ ஆரம்பித்தன.

அதேபோல, இந்த குண்டாந்தடி அடிகளின் எதிர்விளைவு மாலையில், பெரும்பான்மை காட்சிவழி ஊடகங்களில் விவாதமாகவும், செய்திகளாகவும் வெளிப்பட்டது. இதன் மூலம் ஏற்பட்ட நிர்பந்தம் சென்னை காவல்துறை ஆணையர் செய்தியாளர்களை சந்திக்க வைத்தது.  ஆதாரப்பூர்வமான காட்சிவழி சாட்சிகள் இருந்தும்… அத்துமீறல்களுக்கு காரணமானவர்கள் சமூக விரோதிகள் என்று வாய்க்கூசாமல் சொல்ல வைத்தது. கடைசியாக சென்னை உயர்நீதிமன்றம் வரை போலீஸாரின் அடக்குமுறைகள் எதிரொலிக்கவும் செய்தது.

இந்த குண்டாந்தடியடியில் பாதிக்கப்பட்டவர்கள் யார்? மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்கள் எத்தனை பேர்? எத்தனை பேர் கைது செய்யப்பட்டார்கள்? அவர்கள் மீது போடப்பட்டுள்ள வழக்குகள் என்னென்ன? தற்போது, கைது செய்யப்பட்டவர்கள் எங்கே வைக்கப்பட்டிருக்கிறார்கள்? போராட்டக்களத்தில் இருவர் கடத்திச் செல்லப்பட்டார்கள் என்று கூறப்படுகிறதே அதன் உண்மைநிலை என்ன? என்று அடுக்கடுக்காக எழும் கேள்விகளுக்கு பதில் சொல்ல கடமைப்பட்டவர் காவல்துறை தலைவரும் அத்துறையை கையில் வைத்திருக்கும் முதல்வர் பன்னீர்செல்வம்தான்!

இத்துடன், சசிகலாவையும், முதல்வர் பன்னீர்செல்வத்தையும் விமர்சனம் செய்து கோஷமிட்ட ஒரு பெண் கொல்லப்பட்டதாக வதந்திகள் வேகமாக பரவ ஆரம்பித்தன. கடைசியில் விகடன் தரப்பிலிருந்து அவர் பத்திரமாக இருப்பதாக தகவல் வந்து சேர்ந்தது.

இந்த சம்பவங்கள் அனைத்துமே ஏதோ ஒரு அன்னியன் நமது நாட்டின் மீது படையெடுத்து வந்து, துவம்சம் செய்தது போலவே இருந்தது.

சொந்த நாட்டில் சொந்த நாட்டு மக்கள் மீதே ஏவப்பட்ட அடக்குமுறை இது.

சென்னையின் மையப்பகுதியில், பட்டப்பகலில் அரங்கேறிய இந்த மனித உரிமை மீறல்களின் கொடுமை கட்டுக்கடாங்காததை மக்கள் கண்டனர். இங்கேயே இப்படி என்றால், ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிராகவும், வனவாசிகளுக்கு எதிராகவும், உரிமைகள் கேட்டு போராடிவரும் காஷ்மீர் மற்றும் வடகிழக்கு மாநில மக்களுக்கு எதிராகவும் இந்த குண்டாந்தடிகள் எப்படியெல்லாம் பாய்ந்திருக்கும் என்பதை ஊகித்துக் கொள்ளலாம்.

”லட்சக்கணக்கில் திரண்டிருக்கும் மக்களை சில ஆயிரம் போலீஸார் என்ன செய்துவிட முடியும்?” - என்று என் வீட்டார் கேட்டபோது, ”அம்மணிகளே, போராடவருபவர்களின் கவனம் முழுக்க தனது கோரிக்கைகளை நிறைவேற்றிக் கொள்வதில்தான் இருக்கும். ஆனால், ஆள்பவர் கவனம் முழுக்க அவர்களை அடக்கி ஒடுக்குவதில்தான் இருக்கும். இதற்கான கட்டமைக்கப்பட்ட வலிமை, குண்டாந்தடிகளாகவும், கந்தகப் புகையை உமிழும் துப்பாக்கிகளாகவும் இருக்கும்.

தனக்கு பாதுகாப்பு அளிப்பவர் என்று நினைப்புக்கு எதிராக தன்னை முழுமையான எதிரியாக பாவிக்கும் ஒரு கூட்டத்தின் முன் அதிலும் மொத்த அதிகாரத்தையும் தன் கையில் வைத்திருக்கும் ஒரு குழுவின் முன் தாக்குபிடிப்பது எங்ஙனம் தாயே? ஒரு கோடாரி போதுமே பெரும் விருட்சத்தை சாய்க்க..!” – என்ற பதிலைதான் தந்தேன். 

அதிஷ்டவசமாக, ஜெனரல் டயர்கள் உருபெறவில்லை..!

இல்லையென்றால்… மெரீனா கடற்கரை ஒரு நவீன ஜாலியன்வாலாபாக் மயான பூமியாக இந்நேரம் மாறியிருக்கும்!

No comments:

Post a Comment