Friday, September 23, 2016

இஸ்லாம் வாழ்வியல்: ஒவ்வொருவரும் பொறுப்பாளரே..!ஒருவர் தமது பொருளொன்றை மற்றொருவரின் பாதுப்பில், பொறுப்பில் ஒப்படைப்பதற்கு “அமானிதம்“ என்பார்கள் அதாவது அந்த பொருள் அடைக்கலமாக ஒப்படைக்கப்பட்டது என்பதாகும். அப்படி ஒப்படைக்கப்பட்ட பொருள் பணமோ, செல்வமோ, நிலபுலன்களோ, பதவிகளோ எதுவாயினும் பொறுப்போடு பாதுகாத்திட வேண்டியது அதைப் பெற்றுக் கொண்டவரின் கடமையாகும். இது மறுமையில் , இறைவனின் சந்நிதானத்தில் பதில் சொல்ல வேண்டிய பெரும் பொறுப்பாகும்.

அமானிதம் என்ற சொல்லுக்கான பொருளை இன்னும் விரிவான முறையில் நபிகளார் விளக்குகிறார்:

”உங்களில் ஒவ்வொருவரும் பொறுப்பாளரே..! உங்கள் பொறுப்பில் உள்ளவர் குறித்து நீங்கள் விசாரிக்கப்படுவீர்கள். ஆட்சியாளர் தமது பொறுப்பில் உள்ளவர்கள் குறித்து கேள்விகள் கேட்கப்படுவார். குடும்பத்தலைவர் தமது குடும்பத்தார்க்கு அவர் நிறைவேற்ற வேண்டிய பொறுப்புகள் சம்பந்தமாக விசாரிக்கப்படுவார். குடும்பத்தலைவியும் பொறுப்பாளரே! அவர் தமது பொறுப்பில் உள்ளவர்களுக்கு நிறைவேற்ற வேண்டிய கடமைகள் குறித்து கேள்வி கேட்கப்படுவார். எஜமானர் பொறுப்பாளரே! அவர் தமக்கு கீழ்ப் பணிபுரியும் பணியாட்களுக்கு நிறைவேற்ற வேண்டிய பொறுப்புகள் குறித்து கேள்விகள் கேட்கப்படுவார்!” – என்று அமானிதத்துக்கு நெடிய பொருளைத் தருகிறார் நபிகளார்.

துரதிஷ்டவசமாக அமானிதம் என்ற சொல் தனது அசல் பொலிவை இழந்து வரும் நேரமிது. மோசடியும், பித்தலாட்டமும் மிகைத்துப் போன சூழலில், ”தன்னை நம்பி ஒப்படைக்கப்பட்ட பொருட்களைக் காப்பாற்றாதவன் இறை நம்பிக்கையற்றவன். தந்த வாக்குறுதியை நிறைவேற்றாதவன் இஸ்லாத்தைப் புறக்கணித்தவன்!” – என்று நபிகளார் கடுமையாக விமர்சிக்கிறார். இம்மையின் வெற்றிகள் அனைத்தும், மறுமையின் கொடுமைகளிலிருந்து பாதுகாப்பு தருபவையாக இருத்திடல் வேண்டும். ”இறைவா! நான் பசி, பட்டினியிலிருந்து உன்னிடம் பாதுகாவல் தேடுகின்றேன். ஏனெனில், இது தீய தோழனாவான். இறைவா..! நேர்மை தவறுவதிலிருந்தும் நான் உன்னிடம் பாதுகாவல் தேடுகின்றேன். ஏனெனில், இது மோசமான நண்பனாவான்” -என்று மனிதனைப் பலவீனப்படுத்தும் இரண்டு விஷயங்களை குறிப்பிட்டு இறைவனிடம் பாதுகாவல் தேடுகிறார் அவர்.

ஒருவர் மற்றொருவரிடமிருந்து நிலமொன்றை வாங்கினார். அதை உழும்போது, அந்த நிலத்தில் பொற்காசுகள் புதையலாக கிடைத்தன. அதை நிலத்தை தமக்கு விற்றவரிடம் ஒப்படைக்க எடுத்துச் சென்றார் அவர்.  ஆனால், நிலத்தை விற்றவரோ, நிலத்தை விற்பனை செய்தது, அந்த நிலத்திலிருப்பவற்றையும் சேர்த்துதான். அதனால்,  அந்த புதையல் நிலம் வாங்கியவருக்குதான் சொந்தம் என்று திட்டவட்டமாக சொல்லிவிட்டார். கடைசியில்,  வழக்கு நீதிபதியிடம் சென்றது. வழக்கை தீர விசாரித்த நீதிபதி, உங்களுக்கு குழந்தைகள் உள்ளனரா?” – என்று கேட்டார். ”ஆம்..! எனக்கொரு  மகன் இருக்கிறான் - என்று ஒருவர் சொல்ல, ”எனக்கு ஒரு பெண் இருக்கிறாள்!” - என்று இருவரும் பதிலளித்தார்கள்.

”அப்படியானால், இருவருக்கும் மண முடித்து வையுங்கள். அவர்களின் முன்னேற்றத்துக்காக இந்த புதையலாய் கிடைத்த பொற்காசுகளை செலவழியுங்கள்!” – என்று சிக்கலான அந்த வழக்கை தமது சாதுர்யமான தீர்ப்பால் நீதிபதி தீர்த்து வைத்தார்.

வாக்கு சுத்தமான வாழ்வியலை தமது தோழர்க்கு எடுத்துரைக்கும்போது முன் வாழ்ந்து சென்ற ஒரு சமுதாயத்தார் குறித்து நபிகளார் சுட்டிக் காட்டிய சம்பவம் இது.அதிகாரம் நிறைந்த உயர் பொறுப்புகளுக்கு ஆட்களை நியமிக்கும்போது, எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.

”இறைவனின் திருத்தூதரே..! ஆளுநர் பொறுப்புக்கு என்னையும் நியமிக்க மாட்டீர்களா?” – என்று கேட்டார் நபித்தோழர் அபூதர்.

”வேண்டாம்.. அபூதரே..!  நீங்கள் மிகவும் பலவீனமானவர். இந்தப் பொறுப்பு ஓர் அடைக்கலப் பொருளாகும். மறுமை நாளில் கண்ணியத்தை இழக்கச் செய்வதற்கும், அவமானத்துக்கும் இது வழிவகுத்துவிடும். அதேநேரத்தில், இந்தப் பொறுப்பின் எல்லா சுமைகளோடும் ஏற்றுக் கொண்டு திறம்பட தமது பொறுப்புகளை நிறைவேற்றுபவர்கள் மறுமையில் காக்கப்படுவார்கள்!” - என்று நபிகளார் நபித்தோழர் அபூதரை எச்சரிக்கின்றார்.

ஒருவர் உயரிய கல்வி அறிவு பெற்றிருக்கிறார், மிகச் சிறந்த அனுபசாலியாக இருக்கிறார் என்பது மட்டுமே அவரை எல்லா பதவிகளுக்கும் தகுதியாக்கிவிடாது. அதேபோல, ஒருவர் நற்பண்புகளால் நிறைந்தர் என்பதும், சில சுமையான பொறுப்புகளைச் சுமப்பதற்கு தகுதி பெற்றவர் என்பதும் ஆகாது,

ஒருவர் நபிகளாரின் திருச்சமூகம் வந்தார். ”இறைவனின் தூதரே! இறுதித் தீர்ப்புநாள் எப்போது வரும்?” – என்று வினா எழுப்பினார். அதற்கு நபிகளார் அடுத்தவர் நம்பி ஒப்படைத்த அமானிதப் பொருட்கள் – அடைக்கலப் பொருட்கள் காணாமல் போகும் காலம் வந்துவிட்டால் உலக முடிவு நாட்கள் நெருங்கிவிட்டன என்று அறிந்து கொள்ளுங்கள்!”-என்றார்.

மீண்டும் அந்த மனிதர் கேட்டார்:  ”நம்பி ஒப்படைக்கப்பட்ட பொருள் காணாமல் போகும் காலம் என்றால் என்ன? – இறைவனின் தூதரே! ”

அதற்கு நபிகளார் சொன்னார்: ”பொறுப்புகளைத் தகுதியற்றவரின் கைகளில் ஒப்படைக்கும் காலம் நெருங்கியதும், இறுதி நாளை எதிர்பார்த்திருங்கள்!”

(தி இந்து, ஆனந்த ஜோதி இணைப்பில்  22.09.2016 அன்று பிரசுரமானது)

Tuesday, September 20, 2016

Monday, September 19, 2016

இக்வான் காமெடி: ரொம்ப ஓவர்..! ”இது ரொம்ப ஓவரா தெரியலியா கோபாலு..?”

இஸ்லாம் வாழ்வியல்: இப்ராஹீம் நபியின் பிரார்த்தனை!
"இப்ராஹீம் நபி பாலையில் கால் வைத்தபோது, காய்ந்த சருகுகள், தீய்ந்த தாவரங்கள் தவிர அவரை கைநீட்டி வரவேற்க வேறு ஆளில்லை. அந்த மாபெரும் இறைத்தூதரையும் அவரது குடும்பத்தாரையும் வரவேற்க அங்கு யாருமேயில்லை. தாகித்த பாலகனுக்கு நீருட்ட அன்னை ஹாஜிரா சபா, மர்வா மலைக்குன்றுகளுக்கு இடையே ஓடியோடி நீர்த்தேடி களைத்து நின்ற துயரச்சம்பவம் நிகழ்வு பெற்ற இடமது. கடைசியில், குழந்தை இஸ்மாயீலின் கை,கால்பட்டு வற்றாத ஜம், ஜம் நீரூற்று பீரிட்டது. இதுவரையிலும் அந்த அற்புத நீரூற்று லட்சபோப லட்சம் மக்களின் தாகத்தை தணித்துக் கொண்டிருக்கிறது."•இக்வான் அமீர்
'''''''''''''''''''''''''''''''

”இப்ராஹீம் நபியின் பிரார்த்தனை விளைவாக பிறந்தவன்தான் நான்!” – என்கிறார் ஒருமுறை நபிகளார்.

மக்காவிலுள்ள கஅபாவை நிர்மாணிக்கும் வேளையில்தான் இப்ராஹீம் நபிகளாரும், அவரது மைந்தர் இஸ்மாயீலும்  அந்த பிரார்த்தனைப் புரிகிறார்கள்.

திருக்குர்ஆனின் பதிவாக உள்ள அந்த இறைஞ்சுதல் இதுதான்:

”எங்கள் இறைவனே! எங்கள் இருவரையும், உனக்கு முற்றிலும் வழிபடுபவர்களாக ஆக்கி வைப்பாயாக! எங்கள் வழித்தோன்றல்களிலிருந்து முற்றிலும் உனக்குக் கீழ்ப்படிந்து வாழும் ஒரு சமூகத்தைத் தோற்றுவிப்பாயாக! மேலும், இந்த மக்களுக்காக இவர்களிலிருந்தே ஒரு தூதரை தேர்ந்தெடுப்பாயாக! அவர் உன்னுடைய வசனங்களை மக்களுக்கு ஓதிக் காட்டுபவராகவும், வேதத்தையும், ஞானத்தையும் கற்றுக் கொடுப்பவராகவும், அவர்களை தூய்மைப்படுத்துவராகவும் திகழச் செய்வாயாக!“ – என்று ஒரு நீண்ட பிரார்த்தனை அவர்களின் உள்ளங்களிலிருந்து ஊற்றெடுக்கிறது.

இப்ராஹீம் நபியின் இந்த பிரார்த்தனைக்கும், நபிகளாரின் வருகைக்கும் இடைப்பட்ட காலம் சுமார் இரண்டாயிரத்து ஐநூறு ஆண்டுகள்! சீர்க்கெட்டுப் போயிருந்த மொத்த அமைப்பையும் புரட்டிப்போட்டு புத்தம் புதிய சமூக அமைப்பொன்றை நிர்ணயிக்கவே இந்த நீண்ட நெடிய காலத்தை இறைவன் நிர்ணயித்தான்.

இறைவனின் திட்டப்படி இப்ராஹீம் நபி நாகரீகத்தின் தொட்டிலாக இருந்த இராக்கிலிருந்து புலன்பெயர்ந்து மனித சஞ்சாரமேயற்ற ஒரு புற்பூண்டும் முளைக்காத, உலகின் மொத்தப் பகுதிகளோடும் துண்டிக்கப்பட்ட அரபு நாட்டின் பகுதியான பாலை நிலப்பரப்பில் மனைவி, மக்களான ஹாஜிரா இஸ்மாயீலோடு குடியேறினார்.

”இறைவா! என் குடும்பத்தார் சிலரை எந்த விவசாயம் செய்வதற்கான வசதியற்ற ஒரு பள்ளத்தாக்கில், கண்ணியத்திற்குரிய உன்னுடைய கஅபா இல்லத்தருகே குடியமர்த்தி விட்டேன். தொழுகையை நிலைநிறுத்தி நின்னைப் பணிந்து துதிக்கவே இவ்வாறு செய்தேன்! அதனால், இவர்கள் மீது அன்பு கொள்ளும்படி மக்களின் மனங்களில் மன மாற்றங்களை உருவாக்குவாயாக! இவர்களுக்கு வாழ்வாதாரத்தை வழங்குவாயாக! இதன் மூலம் இவர்கள் உனக்கு நன்றியுடையவராய் மாறக்கூடும்!” – என்று சமூகசூழல்களையும், இயற்கை சூழல்களையும் முன்வைத்து அவற்றின் சொந்தக்காரனான இறைவனிடமே இப்ராஹீம் நபி கையேந்துகிறார்.

மனித இனத்தை நெறிப்படுத்த வேண்டிய கடினமான பணி அது. அதுவரையிலான மனித பண்பாடுகள் தோல்வியுற்ற நிலையில் இந்தப் பணியை கையிலெடுக்க வேண்டிய நிலை. இந்த தோல்விகளிலிருந்து படிப்பினைப் பெற்று பற்பல தலைமுறைகளைத் தாண்டி அதுவரையும் நிலவி வந்த ஒழுக்கச் சீர்கேடுகளின் சாயலே இல்லாத முற்றிலும் புத்தம் புதிய உயரிய நிலையுடைய பண்பாட்டை தோற்றுவித்தலுக்கான இடைவெளிதான் இந்த நீண்ட நெடிய 2500 ஆண்டுகள் தாண்டிய இடைவெளி.இப்ராஹீம் நபி பாலையில் கால் வைத்தபோது, காய்ந்த சருகுகள், தீய்ந்த தாவரங்கள் தவிர அவரை கைநீட்டி வரவேற்க வேறு ஆளில்லை. அந்த மாபெரும் இறைத்தூதரையும் அவரது குடும்பத்தாரையும் வரவேற்க அங்கு யாருமேயில்லை. தாகித்த பாலகனுக்கு நீருட்ட அன்னை ஹாஜிரா சபா, மர்வா மலைக்குன்றுகளுக்கு இடையே ஓடியோடி நீர்த்தேடி களைத்து நின்ற துயரச்சம்பவம் நிகழ்வு பெற்ற இடமது. கடைசியில், குழந்தை இஸ்மாயீலின் கை,கால்பட்டு வற்றாத ஜம், ஜம் நீரூற்று பீரிட்டது. இதுவரையிலும் அந்த அற்புத நீரூற்று லட்சபோப லட்சம் மக்களின் தாகத்தை தணித்துக் கொண்டிருக்கிறது.

சொந்த - பந்தம், நாடு நகரம் என்று அனைத்தையும் இழந்து பாலைவெளியில் குடியேறிய இப்ராஹீம் நபிக்கு முதுமையில் பெயர் சொல்ல பிறந்த இஸ்மாயீல் சிறுவனானபோது, மீண்டும் ஒரு சோதனை குழந்தையை பலிகேட்டு! கடைசியில், மனித பலிகளுக்கு முற்றிலும் தடையாக ஆடொன்று பதிலியானது!

எதை இழக்க மனிதன் துணியமாட்டானோ அதை வரிசையாக எல்லாம் இழக்க இப்ராஹீம் நபி துணிந்து நின்றார். தியாகத்தின் உச்சமாக மகனையும் துறக்க சித்தமானார். மிகச் சிறப்புக்குரியவர் என்று உலக மக்கள் கண்டுணரவே இறைவனின் இந்த ஏற்பாடு.

இளைஞர் இஸ்மாயீல் வளர்ந்து ஜம், ஜம் நீரூற்று பெருக்கெடுத்த பகுதியிலேயே ஜுர்ஹும் கோத்திரத்துப் பெண்ணை மணந்து நிரந்தரமாக தங்கிவிட்டார்.

அரேபிய பாலைவனத்தில் இஸ்மாயீலின் சந்ததிகள் இப்படிதான் பல்கிப் பெருகினர்.

இப்ராஹீம் நபியின் பிரார்த்தனை அங்கீகரிக்கப்பட்ட நேரம் அது. மக்காவின்  பனு ஹாஷிம் கோத்திரத்தைச் சேர்ந்த வஹப் இப்னு அப்து மனாப்பின் மகளான ஆமினாவின் வயிற்றில் குழந்தை முஹம்மது சூல் கொண்ட அருளுக்குரிய தருணம். மாய, மந்திர அற்புதங்கள் ஏதும் நிகழ்த்தாமல் உலகைப் புரட்டிப்போடும் ஒரு மாபெரும் பணிக்காக “அல்முருஅ“ என்ற அடைமொழியால் குழந்தை முஹம்மது அடையாளப்படுத்தப்பட்டது. மிக.. மிக.. உயரிய பண்பாளரை அரபு நாட்டினர் குறிக்கும் சொல் இது.

பிரபல வரலாற்று பேராசிரியர் பிலிப் கே ஹிட்டி, “ஹிஸ்டரி ஆஃப் அரப்ஸ்“ என்னும் நூலில் அரபு மக்களின் பண்புகளை விமர்சிக்கும்போது, “சிக்கலான நேரங்களில் நிலைகுலையாத பண்பாளர், அடுத்தவர் உரிமைகளை மீட்டெடுக்கும் போர்க்குணம் மிக்கவர்கள், உயரிய பண்பு, பெருந்தன்மை, விருந்தோம்பலில் நிகரற்றவர்கள் என்று பதிவு செய்கிறார். இத்தகைய மனித பண்பாளர்களிலிருந்துதான் இப்ராஹீம் நபியின் பிரார்த்தனையாக முஹம்மது நபிகளார் (ஸல்) ஜனிக்கிறார். தமது வாழ்நாளுக்கு பின்னாலும் மனித இனத்துக்கான சீர்த்திருத்தம் என்ற அந்த அரும் பணியை தாங்கிச் செல்லும், தோழர், தோழியர் கொண்ட தோழமைக் குழுவினரை நபிகளார் உருவாக்கினார்.

அனுதினமும் இயற்கை பெரும் மோதலோடு அரபு மக்களின் வாழ்வியல் கழிந்ததால் அவர்கள் இயல்பிலேயே சுயநலமற்றவராய் திகழ்ந்தார்கள். ஆரம்பத்தில் மிகவும் சொற்ப எண்ணிக்கையிலிருந்த இவர்கள்தான் முழு அரபுலகின் பிரதிநிதிகளாக விளங்கினார்கள். நபிகளாரின் வாழ்வியல் சீர்த்திருத்த அரும்பணிக்காக அனைத்தையும் இழக்க முன்வந்தார்கள். ”எங்கள் திருத்தூதர் பாதங்களில் ஒரு சிறுமுள் தைக்கவும் அனுமதியோம்!” – என்று தங்கள் உயிரை அர்ப்பணிக்கவும் தயாரானார்கள். நபிகளாரின் இலட்சிய சமூகத்தின் குழிக்கற்களானார்கள்.

(தி இந்து, ஆனந்த ஜோதி இணைப்பில் 15.09.2016 அன்று பிரசுரமான எனது கட்டுரை) 

 

Monday, September 12, 2016

இஸ்லாம் வாழ்வியல்: “பாவகறைகளைப் போக்கும் பயணம்!“
காம, குரோதங்களிலிருந்து விலகி, இல்லற இன்பங்களைத் துறந்து, தேவையற்ற வீண் பேச்சுக்கள், தூஷணைகள், கோபதாபங்கள், புறம்பேசுதல், கோள்சொல்லுதல் போன்ற அனைத்துத் தீய பண்புகளையும் பொசுக்கிவிடும் வேள்வி அது. மனிதனை தூயவனாய் புடம் போடும் ஒரு வேள்வி அது!

ஒவ்வொரு ஹஜ் பயணியும் அணியும் இஹ்ராம் என்னும் வெள்ளுடை சமாதானத்தின் சீருடை. அரசனோ-ஆண்டியோ, செல்வந்தனோ-ஏழையோ அனைவரும் ஒன்றுதான் எனச் சொல்லும் சமத்துவத்தின் பேருடை அது! ஆடம்பர பட்டோடபங்களைத் இழந்து இறைவன் திருமுன் அனைவரும் சமம் என நினைவுறுத்தும் நல்லுடை அது. •இக்வான் அமீர்

'''''''''''''''''''''''''''''''''

இன்றைக்குச் சற்றேறக்குக்குறைய 4000 ஆண்டுகளுக்கு முந்தைய வரலாற்றுப் பேழையிது!

“இறைவன் ஒருவன்! அவன் இணை-துணையில்லாதவன்!” – என்ற இந்த ஓரிறைத் தத்துவத்தை உரக்க உச்சரித்து வீடு-வாசலையும், நாடு-நகரத்தையும், சொந்த-பந்தங்களையும், பொன்-புகழையும் துறந்து கொள்கையின் கோமானாய் வரலாற்றில் உயர்ந்து நிற்பவர் இப்ராஹீம் நபி என்றால்… இறைவனின் ஆணைக்கேற்ப சிரம் தாழ்த்தி சுயமாக தம்மை ஒப்புக் கொடுத்தவர்தான் அவரது மகன் இஸ்மாயீல் நபி!

இப்பெருந்தகைகள் இறைவனின் விருப்பப்படி கஅபா ஆலையம் கட்டிட முனைப்பு காட்டிய சமயம், அவர்களின் நெஞ்சிலிருந்து அளவிலா அன்பு கண்ணீராய்ப் பெருக்கெடுத்த வழிகிறது. பிரார்த்தனை வடிவில் கசிந்துருகுகிறது:

“எங்கள் இறைவனே! எங்களுடைய இந்தப் பணியை ஏற்றுக் கொள்வாயாக…. எங்கள் இருவரையும் உனக்கு முற்றிலும் கீழ்ப்படிந்தவர்களாக – முஸ்லிம்களாக ஆக்கி வைப்பாயாக! எங்கள் வழித்தோன்றல்களிலிருந்து முற்றிலும் உனக்குக் கீழ்ப்படிந்து வாழும் ஒரு சமூகத்தைத் தோற்றுவிப்பாயாக!... இம்மக்களுக்காக அவர்களிலிருந்தே ஒரு தூதரை எழுப்புவாயாக! அவர் உன்னுடைய வசனங்களை அவர்களுக்கு ஓதிக் காட்டுபவராகவும், வேதத்தையும், ஞானத்தையும் கற்றுத் தருபவராகவும், அவர்களின் வாழ்க்கையைத் தூய்மைப்படுத்துபவராகவும் திகழ வேண்டும்”

பொட்டல்வெளியில், புற்பூண்டுகூட முளைக்காத பாலைவெளியில் ஓர் ஆலயம் கட்டி, வெறும் பிரார்த்தனையோடு உலகின் கேந்திரமாக அது திகழ வேண்டுமென 4000 ஆண்டுகளுக்கு முன் கண்ட கனவு பலித்தது!


பொட்டல்வெளியில் கஅபா கட்டப்பட்டது உண்மைதான். அது முயற்சி! ஆனால், அதனோடவே வெளிப்பட்டது நம்பிக்கை இப்படி: “என் இறைவனே! மக்காவாகிய இந்நகரத்தை அமைதி அளிக்கக்கூடியதாய் ஆக்கிவைப்பாயாக! நான் என் மக்களை விவசாயம் இல்லாத ஒரு பள்ளத்தாக்கில் கண்ணியத்திற்குரிய உன் இல்லத்தற்கருகில் குடியமர்த்தி விட்டேன். அவர்கள் இங்கு தொழுகையை நிலைநிறுத்த வேண்டும் என்பதற்காக! அவர்கள் மீது அன்பு கொள்ளும்படி மக்களின் உள்ளங்களை ஆக்குவாயாக! இவர்களுக்கு உண்பொருளை வழங்குவாயாக!”- இப்படி உறுதியுடன் பரம்பொருளை சார்ந்து வாழும் நம்பிக்கை அது. இதில்தான் பொட்டல்வெளி உயிர்பெற்றது. அகில உலக முஸ்லிம்களின் ஓரிறை தலைமைக் கேந்திரமாக கஅபா உருப்பெற்றது.

இத்தகைய நம்பிக்கையின் அடிப்படையிலான கஅபா என்னும் இறையில்லத்தை ஒவ்வொரு இறைநம்பிக்கையாளரும் தம் வாழ்நாளில் ஒருமுறை ‘சந்திக்க’ நாடும் நாட்டமே ‘ஹஜ்’ எனப்படுகிறது.

ஹஜ் பயணம் மனிதனின் பாவங்களை தொலைத்திட உதவும் ஒரு வழி. அண்ணல் நபிகளார் அதைத்தான் நவின்றார்கள்:

“ஒருவர் இந்த கஅபா ஆலயத்தை தரிசிக்க வருகை தந்து, மன இச்சை சம்பந்தமான சொல் எதனையும் பேசாமலும், இறைவனுக்கு மாறு செய்யும் செயல் எதனையும் செய்யாமலும் இருந்தால் அவருடைய அன்னை அவரைப் பெற்றெடுத்த அதே நிலையில் – பாவங்கள் அனைத்தும் மன்னிக்கப்பட்ட – தூய நிலையில் தன் வீட்டுக்குத் திரும்பிச் செல்வார்!”

ஹஜ்ஜுப் பயணம் இறைநம்பிக்கையாளர்களிடம் உண்டாக்கும், உற்சாகம், உத்வேகம் உணர்வுகளின் கதம்பம். வார்த்தைகளில் வடிக்க இயலாத தெய்வீகம். நினைத்தாலே உள்ளமெல்லாம் குளிர்ந்திடும் நல்லின்பம்.

பூமி பெரிதுதான்! ஆனால், அது சில சமயங்களில் சிறுத்துப் போவதுண்டு.. ஹஜ் போன்ற நாட்களில்!

ஆறுகள் கடலில் சங்கமிக்கும் என்பது நிஜம்தான்! ஆனால், முழு உலகமே திரண்டு ஓரிடத்தில் நின்றிடும் நாள் ஹஜ்ஜுப் பெருநாளாகும்.

எத்தனை நிறங்கள்..! எத்தனை மொழிகள்..! எத்தனை.. எத்தனை மனிதர்கள்..! மனித சமூகம் முழுவதும் திரண்டு வந்ததோ என ஐயம் எழுப்பும் இடம் அது.

ஓயாமல் ஒலிப்பது கடல் அலை மட்டுமா? “அல்லாஹீம்ம லப்பைக்க.. அல்லாஹீம்ம லப்பைக்க.. அதாவது இறைவா..! நான் வந்துவிட்டேன்! இறைவா..! நான் வந்துவிட்டேன்!” – என ஒவ்வொரு ஹஜ் பயணியும் மாறாத லயத்துடன் ஒலிக்கும் ‘தல்பியா’ முழக்கமும்கூடத்தான்!


ஹஜ்ஜின் தொடக்கமே ஒரு வேள்வி!

காம, குரோதங்களிலிருந்து விலகி, இல்லற இன்பங்களைத் துறந்து, தேவையற்ற வீண் பேச்சுக்கள், தூஷணைகள், கோபதாபங்கள், புறம்பேசுதல், கோள்சொல்லுதல் போன்ற அனைத்துத் தீய பண்புகளையும் பொசுக்கிவிடும் வேள்வி அது. மனிதனை தூயவனாய் புடம் போடும் ஒரு வேள்வி அது!

ஒவ்வொரு ஹஜ் பயணியும் அணியும் இஹ்ராம் என்னும் வெள்ளுடை சமாதானத்தின் சீருடை. அரசனோ-ஆண்டியோ, செல்வந்தனோ-ஏழையோ அனைவரும் ஒன்றுதான் எனச் சொல்லும் சமத்துவத்தின் பேருடை அது! ஆடம்பர பட்டோடபங்களைத் இழந்து இறைவன் திருமுன் அனைவரும் சமம் என நினைவுறுத்தும் நல்லுடை அது.

இறைவனை உணர்வது. அவனுக்கு இணைத்துணை கற்பிக்காமலிருப்பது. இறைவன் காட்டிய வழியில் நடப்பது. அதிலேயே நிலைத்திருப்பது. நற்சமூகம் அமைப்பது ஒவ்வொரு முஸ்லிம் மீதும் பொறுப்பாகும்.

இதற்கு நல்லுதாரணங்களாக இப்ராஹீம் மற்றும் அவரது அருமை மகனார் இஸ்மாயீல் நபியும் திகழ்கிறார்கள். இவர்களின் நற்பணிகளின் தொடராக அண்ணல் நபிகளாரின் வாழ்வியலையும், அன்னாரின் தியாகங்களையும், அர்ப்பணிப்புகளையும் முன்னிறுத்தி வாழ முஸ்லிம்கள் முன்வர வேண்டும். இந்த பெருந்தகைகள் உருவாக்க முயன்ற அமைதி தவழும் சமூகத்தை, மனித நேய சமூகத்தை உருவாக்க பாடுபடுவதும் இவர்கள் மீதுள்ள கடமையாகும். இந்தநினைவுகளை பசுமையாக்கிட உதவும் பயணம்தான் ஹஜ்ஜுப் பயணமாகும்.

''''''''''''''''''''''''''''''''''''''
தி இந்து ஆனந்த ஜோதி இணைப்பில் 24.09.2015 அன்று பிரசுரமான எனது கட்டுரை. 

Sunday, September 11, 2016

எனது பார்வையில்: எனக்கு ஆண்களை மிகவும் பிடிக்கும்..!மூன்று ....... லட்சுமிகள் - அக்கா, தங்கைகள் மறக்கவே முடியாத அச்சாய் என் மனதில் பதிந்து போனவர்கள். எனது உயர்நிலைப் பள்ளி நாட்களில், எல்லா திறமைகளுடனும் முதல்வனாக இருந்த என்னை சரிய வைத்த பெயர் அது. அரும்பு மீசை துளிர்விடும் அந்தப் பருவத்தில் என்னை கவிதைப் பாட வைத்த பெயர். மனதைப் பிழிந்து பிழிந்து எழுத வைத்த பெயர்.

அதனால், இந்த லட்சுமிகள் தாங்கி வரும் பெயர்கள் என்னை இப்போதும் எனது பள்ளிப் பருவத்து 70-களில் நுழையச் செய்துவிடும்.

இப்படியான ஒரு பெயர் கொண்ட தோழி Jaya Lakshmi அண்மையில் எனது முகநூல் நட்பு வட்டாரத்தில் இணைந்தவர். இந்தப் பெயரால், 70-களின் வியப்புடனேயே எட்ட நின்று வியக்கிறேன் நான். முகநூல் வட்டத்தில் சில பெண்கள் தங்களை சகோதரிகள் என்று சொல்வதை விரும்பவில்லை என்று தெரிவித்து பதிவிட்டிருந்த காரணத்தினால்தான் நான் இங்கு தோழி என்ற சொல்லாடலை கையாள வேண்டியிருந்தது. இதனால், நெருக்கமோ, விலகலோ பொருளாகாது என் வரம்பு என்னவென்று ஏற்கனவே தீர்மானமாக தெரிவதால்! இது ஒரு அடையாள சொல்லாடல் என்பது மட்டுமே நிஜம்.

தோழி Jaya Lakshmi ன் இந்த முகநூல் பதிவு https://www.facebook.com/permalink.php?story_fbid=1615544308740289&id=100008542061563 என்னை ஏனோ கவர்ந்ததால்... மிகவும் மகிழ்வுடன் எனது வலைப்பூவின் “எனது பார்வையில்“ மீள்பதிவு செய்கிறேன். ஒவ்வொரு மனிதனுள்ளும், மனிஷியுள்ளும் எத்தனை எத்தனை எண்ண ஆர்ப்பரிப்புகள் என்ற வியப்புடனேயே... நான்..! - இக்வான் அமீர்

“““““““““““““““““““““““““““““““““
Jaya Lakshmi


பெண்மையை மதித்த பாரதி இனத்திற்கு இது சமர்ப்பணம்:

"அவளுக்கு ஆம்பிளைகளை தான் பிடிக்கும்'' என்னைப்பற்றிய மற்றவர் கருத்து...

என்றுமே நான் ஆதை மறுத்ததில்லை.இதை எதிர்பாலின ஈர்ப்பு என்றாலும் கவலைப்படமாட்டேன்.

என் வாழ்வின் முதல் ஆண் என் தந்தை.அறிவும்,அன்பும் நிறைந்தவர்.நான் அறிந்தவை பெரும்பாலும் என் தந்தையின் சீதனம்.சிறு விஷயத்தையும் எப்படி அழகாய் செய்வது என்பதை கற்றுத்தந்தவர்.ஆணின் தைரியத்தை என்னுள் விதைத்து வளர்த்தவர்.இறக்கும் வரையிலும் அவருக்கு'டே ராஜா'தான் நான்.என் தாயுமானவர்.

அடுத்து என் தாத்தா.

தாயின் தந்தை.அவரின் கண்டிப்பும்,காேவமும் ஊரறிந்தது.ஆனால் பேரப்பிள்ளைகள் விஷயத்தில் குழந்தையாகி விடுவார். நானும் தம்பியும் பெரும்பாலும் தாத்தாவிடம் தான். எந்த பேரப்பிள்ளைக்கு உடம்பு சரியில்லை என்றாலும் ஊருக்கு தூக்கி சென்றுவிடுவார்.அன்பாகப்பேசயே மருந்தை குடிக்கவைத்து விடுவார்.

சுந்தரவடிவேலு-அண்ணன். பெரியம்மா மகன். இவர் பிறந்ததிலிருந்தே தாத்தா தான் வளர்த்தார். கிட்டதட்ட 11 வயதுவரை என்னை உப்புமூட்டை சுமந்தே நடந்தவன். இருவருக்கும் அப்படி ஒரு ஈர்ப்பு. யாராவது என்னை'கருவாச்சி' என்றழைத்தால் மண்டையை உடைத்து விடுவான். ஆனால் அவன் மட்டும் அப்படித்தான் அழைப்பான்.

மற்ற அண்ணன்களுக்கு நான் 'தங்கம், அம்மிணி'தான்.

பெரும்பாலான குடும்ப சண்டைகளில் இன்று வரை எங்கள் பக்கம்தான் நிற்பார்கள்.

காெஞ்சம் வளரந்தபின்.

+2வில்.

எங்கள் வகுப்பில் 11 பேர். 3 ஆண்கள் 8 பெண்கள். அதில் மனாேகரன்தான் ராெம்ப குளாேஸ். நிறைய விஷயங்களை ரசிக்க கற்றுத் தந்தவன்.

பெண்கள் பசங்களிடம் பேசுவதே ராெம்ப குறைவு. என்னைத்தவிர எல்லாேருமே நல்லா கலரா அழகா இருப்பாங்க. நாலு பென்ச். இரண்டு வரிசை. முதல் வரிசையில் மூன்று பேரை அமரச் சாென்னாலும் வரமாட்டாங்க. நான் மட்டும் தான். எனக்கு பின்னால் பசங்க. நா அப்படி அமர்ந்ததே அவர்களை மரியாதை படுத்தியது பாேலுணர்ந்தார்கள். இரண்டாம் வருடத்தில் நானும் மனாேவும் ராெம்ப நெருக்கம். அவன் பள்ளிக்கு வரலைனா எனக்கு தலைவலி வந்துவிடும். இதனால் நாங்கள் இருவரும் காதலிப்பதாக கிசுகிசு கூட கிளம்பியது. ஆனால் அவன் ஒரு பெண்ணையும் நான் வேறாெருவரையும் காதலிப்பது எங்களுக்கு மட்டுமே தெரிந்த ரகசியம். இப்படி ஒரு நட்பு எப்படி சாத்யமானதென்று இதுவரை எனக்கே தெரியாது. தாெடர்பற்று பாேனாலும் நான் மிகவும் விரும்பிய நட்பு அது.

அடுத்து வந்த பதினாெரு ஆண்டுகளை என் வாழ்விலிருந்து கிழித்து விட்டேன்.

அதற்கடுத்து வந்த இந்த பதினெட்டு ஆண்டுகளில் முக்கியமானவர்கள்

கிருஷ்ணன்  என் அன்பான கணவர்.

அடுத்து மகாலிங்கம் என் பாஸ்.

முதலாமவரின் ஆறுதலும், தேற்றுதலும் இல்லாதிருந்தால் நான் என்னவாகியிருப்பேன் என்று எனக்கே தெரியாது.

இரண்டாமவர் என் உழைப்பை சரியான முறையில் பயன்படுத்தி தானும் உயர்ந்து என்னையும் உயர்த்தியவர். அடுத்து பென்சில் கம்பெனியின் நிர்வாகத்தினர். உற்பத்தியை விட பெண்களின் பாதுகாப்பையே முன்னிருத்துபவர்கள். ஒற்றை ஆளாய் இரவு 12 மணி வரை இருந்திருக்கிறேன். இது பாேல எந்த நிறுவனமும் இருக்க முடியாது என்று அழுந்தச் சாெல்வேன். இங்கிருந்த பத்து ஆண்டுகளும் என் வாழ்வில் வசந்தகாலமே.அடுத்து நீங்கள்தான்.

பாெழுது பாேக்காய் ஆரம்பித்த நட்புகளில் தான் எத்தனை அன்பு. முகமறியாவிட்டாலும் எத்தனை கரிசனம். நண்பனாய், தம்பியாய், தகப்பனாய் எத்தனை உறவுகள். மார்க்கிற்கு என் நன்றிகள். முகநூல் நட்பில் ஒரே ஒருவரை தவிர யாரையும் சந்தித்து இல்லை. ஆனாலும் நான் வியாபாரம் ஆரம்பித்தபாேது பாெருளுதவி செய்ய வந்த நட்பை என் உயிருள்ளளவும் மறக்கமுடியாதே. எப்பாெழுது பேசினாலும் நான் மறுத்ததற்கு ஆதங்கப்படுவார். இந்த ஒரு வார்த்தையே எனக்கு கூடுதல் பலமளிக்குமல்லவா.

எனக்கு நண்பர்கள் குறைவுதான். ஆனால் நிறைய பேருக்கு நான் உயிர்த்தாேழி. ஆண்களாேடு ஒத்துப்பாேகுமளவு என்னால் பெண்களாேடு இருக்கமுடிவதில்லை.

பெரும்பாலான பேச்சுக்கள் வீண் புரளியிலும் வேண்டாத சண்டையிலுமே முடிப்பதினால் என்னவாே.

சந்தாேஷ்... என் தங்கை மகன்.

எங்கள் மகிழ்ச்சியே அவன் மகிழ்ச்சி. எங்கள் முகம் காெஞ்சம் சாேர்ந்தாலும் தானும் வாடிவிடுவான். அன்புச்செல்வம் அவன்.

எல்லாேருமே நல்லவங்கதானா உனக்குனு யாராே கேக்கறீங்கனு தெரியுது. எனக்கு பூக்களைத்தான் பிடிக்கும்.

என் தாேட்டத்து பூக்கள் மட்டுமே உங்கள் பார்வைக்கு. முட்களை நானே விரும்பாத பாேது உங்களுக்கு எப்படி தருவேன்.

இதில் ஓரிருவரைத்தவிர யாரிடமும் ஆழமான அன்பைத் தவிர வித்யாசமாய் உணர்ந்ததில்லை நான்.

தங்கள் ஆளுமையினாலும், அன்பாலும் ஆட்காெண்டவர்களை எப்படி தவிர்ப்பேன்..

இது ஆண்களைப் பற்றிய பதிவல்ல.

பெண்களுக்கானது.

சரியான நண்பர்களை தேர்ந்தெடுக்கும் பாேது நம் வாழ்க்கைப் பயணமும் சிறப்பானதாகும்.

மறுபடியம் சாெல்வேன் எனக்கு

ஆண்களை

மிகவும் .... பிடிக்கும்.