Monday, December 5, 2016

இரங்கல்: ஒற்றைப் போராளி வீழ்ந்தார்..!'''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''
துரதிஷ்டவசமாக கடைசிவரை அவரை கருநிழல்களாக பற்றிப் பீடித்திருந்த நிழல் அதிகாரங்களை புறக்கணித்திருந்தால் இன்னும் அவர் சிறப்பாக செயல்பட்டிருக்க முடியும். மக்கள் நலப்பணிகளில் மிகச் சிறப்பாக ஈடுபட்டிருக்க முடியும். அவர் தன் வாழ்நாளில் ஒரு சிறந்த வழிகாட்டியைப் பெற்றிருந்தால் ஒரு எளிய மனுஷியாக வாழ்ந்து உலகின் தலைச்சிறந்த மக்கள் அரசியல் அதிகார நாயகியாக மிளிர்ந்திருக்கவும் முடியும். 
                                                                                                                               >>> இக்வான் அமீர்

'''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''
"என் தந்தையை 3 வயது இருக்கும் பொழுதே இழந்து விட்டேன், 22 வயதில் தாயையும் இழந்துவிட்டேன். என் குடும்பத்தில் எவரும் 60 வயதை எட்டியதில்லை.... நான் எட்டிவிட்டேன் என்பது இறைவனின் அருள்! இனி எஞ்சிய வாழ்நாள் என்பது எனக்கான கூடுதல் அவகாசம்.  அதை மக்களுக்காகவே அர்ப்பணிப்பேன்!”-  24.02.2008 – அன்று மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதா சொன்னது இது. சொன்னபடியே ஏறக்குறைய அவர் வாழ்ந்தும் காட்டிவிட்டார்.

இந்திய அரசியலில் ஒரு விடிவெள்ளியாக திகழ்ந்த ஜெயலலிதா இன்று நம்மிடையே இல்லையாயினும், அவர் வாழ்க்கையிலிருந்து நாம் பெற வேண்டிய படிப்பினைகள் ஏராளம்.

ஒற்றையாய் இருந்து, ஒற்றையில் போராடி, ஒரு கட்டத்தில் தமது அன்புக்குரிய வாழ்க்கைத்துணை உறவுகள், மெல்லிய உணர்வுகள் எல்லாம் ஆணாதிக்க சமூகத்தால் பலவந்தமாக பிடுங்கப்பட்டநிலையிலும், பின்னாளில் அந்த அரசியல் உறவையும் இழந்து, அதைத் தொடர்ந்து அரசியல் வாரிசுரிமைக்காக ஒற்றையாகவே போராடி தன்னை நிலை நிறுத்திக் கொண்டவர் அவர். அதுவும் பெண்ணியம் புதைக்கப்படும் ஒரு சமூக அமைப்பில் நினைத்துப் பார்க்க இயலாத ஒன்றாகும்.

மறைந்த முதல்வர் ஜெயலலிதா, ஜனநாயக அமைப்பின் ஒற்றை ராணியாகவே இருந்ததால் என்னவோ அவர் ஆணாதிக்கத்தை தமது காலடியில் பணிய வைத்தார்.

துரதிஷ்டவசமாக கடைசிவரை அவரை கருநிழல்களாக பற்றிப் பீடித்திருந்த நிழல் அதிகாரங்களை புறக்கணித்திருந்தால் இன்னும் அவர் சிறப்பாக செயல்பட்டிருக்க முடியும். மக்கள் நலப்பணிகளில் மிகச் சிறப்பாக ஈடுபட்டிருக்க முடியும். அவர் தன் வாழ்நாளில் ஒரு சிறந்த வழிகாட்டியைப் பெற்றிருந்தால் ஒரு எளிய மனுஷியாக வாழ்ந்து உலகின் தலைச்சிறந்த மக்கள் அரசியல் அதிகார நாயகியாக மிளிர்ந்திருக்கவும் முடியும்.

காலம் எல்லோருக்கும், எல்லா வசதிகளும் கொடுப்பதில்லை. அவ்வகையில் கிடைத்த அனைத்தையும் முடிந்தளவு சிறப்பாக்க நினைத்த மக்கள் தலைவர்தான் ஜெயலலிதா.

உடல்நலக் குறைவு காரணமாக கடந்த 75 நாட்களாக அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த முதல்வர் ஜெயலலிதாவின் உயிர் நேற்று இரவு (05.12.2016) 11.30 மணிக்கு பிரிந்ததாக நள்ளிரவு 12.15 மணிக்கு மருத்துவமனை நிர்வாகத்தால் அதிகாரப் பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

ஆரம்பத்தில், காய்ச்சல், நீர்ச்சத்து இழப்பு மற்றும் சில மருத்துவக் காரணங்களுக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஜெயலலிதாவுக்கு உலகின் தலைச் சிறந்த மருத்துவக் குழுவினரால், சர்வதேச அளவிலான உயரிய மருத்துவ தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி சிகிச்சை அளிக்கப்பட்டது.  ஆனாலும், சிகிச்சை முறைகள் பலனளிக்கவில்லை. மனிதன் மரணத்தை வெல்ல முடியவில்லை!

அறிவியல், தொழில்நுட்பங்களும், மனித முயற்சிகளும் முற்றாக செயலிழந்து போகும் தருணங்களில் மரணமும் ஒன்று. ”நீங்கள் எங்கிருந்தாலும், மரணம் உங்களை வந்தடைந்தே தீரும். நீங்கள் உறுதிமிக்க கோட்டைகளில் இருந்தாலும் சரியே!”” – என்று அழுத்தம் திருத்தமாக உலகின் நிலையாமையை, மனிதனின் இயலாமை மறைநூல் எடுத்துரைக்கிறது. 

இந்த யதார்த்தத்தை வாழும் காலத்திலேயே ஜெயலலிதாவுக்கு முன்னிலைப்படுத்தும் நல்லாலோசகர் அமையவில்லை. நாட்டின் பிரதமர் மோடிவரை அரசியல் தாக்கத்தை உருவாக்கி தனது உடலுக்கு மரியாதை செய்ய வைக்கும் அளவுக்கு செல்வாக்குப் படைத்த ஜெயலலிதா இன்னும் மாபெரும் ஆளுமைகள் நிறைந்த ஓர் அற்புத உலகத் தலைவராக உருவெடுத்திருக்க முடியாமல் போனது மற்றுமோர் துரதிஷ்டமே..! 


No comments:

Post a Comment