Wednesday, August 10, 2016

இஸ்லாம் வாழ்வியல்: நபிகள் வாழ்வில்: மனிதரில் சிறந்தவன்நபிகளார் தமது இறுதி பேருரையில் இப்படி அழுத்தம் திருத்தமாக சொல்லிக் காட்டுகிறார் "மக்களே! இந்த துல்ஹஜ் மாதமும், இந்த துல்ஹஜ் 9ம் நாளும், இந்த மக்கா மாநகரமும் எவ்வளவு புனிதமானவையோ, அவ்வாறே சக மனிதர்களின் உயிர்களும், உடமைகளும் மானம் மரியாதையும் புனிதமானயே..!” - இக்வான் அமீர்

'''''''''''''''''''''''''''''''''''''''''"""""""""""""""""""""""""""""""""""""
அது நபிகளாரின் திருச்சபை.

நபிகளார் தமது தோழர்களை நோக்கி, ”புறம் பேசுதல் என்றால் என்ன என்பதை நீங்கள் அறிவீர்களா தோழர்களே?” – என்று கேட்டார்.

அதற்கு நபித்தோழர்கள், ”இதற்கான விளக்கத்தை இறைவனும், இறைவனின் திருத்தூதருமாகிய தாங்கள்தான் அறிவீர்கள்!” – என்றார்கள்.

“உங்கள் சகோதரர் குறித்து அவர் வெறுக்கும் விதமாக பேசுவதுதான் புறம்பேசுவதாகும்!” – என்றார் நபிகளார்.

“நாங்கள் கூறும் விஷயம் எங்கள் சகோதரரிடம் காணப்பட்டாலுமா புறம்பேசுவதாகும்?” – என்று கேள்வியை எழுப்பினார்கள் நபித்தோழர்கள்.

“ஆம்.. நீங்கள் கூறுவது உங்கள் சகோதரரிடம் காணப்பட்டால் அது புறம் பேசுவதாகும். அவ்வாறு இல்லாவிட்டால் அது அவர் மீது நீங்கள் சுமத்திய அவதூறு ஆகும்” – என்று நபிகளார் எச்சரித்தார்.
உண்மையிலேயே சக மனிதர்களிடம் குறைகளைக் காணும்போது, அவர் மனம் திருந்த வேண்டும் என்ற கவலையில் அக்கறையுடன் சொல்லப்படும் அறிவுரைகளை யாரும் புறக்கணிக்கமாட்டார்கள். இதே அக்கறை மற்றும் கவலையோடு அவரது பொறுப்பாளர்களிடம் முறையிடும்போதும் அது பிரச்னையாக வாய்ப்பில்லை.

ஏனென்றால், இந்த அணுகுமுறையும் குறைகளைக் களையும் ஒரு நல்வழிமுறையாகிவிடும்.

ஆனால், சக மனிதனின் குற்றங்குறைகளை வெளிப்படுத்தி அவனை சமுதாயத்தார் முன்னிலையில் அவமானப்படுத்தி தலைக்குனிவை ஏற்படுத்த வேண்டும் என்ற நினைப்பதும், சம்பந்தப்பட்ட நபர் இல்லாத நிலையில் அவர் குறித்து குற்றங்குறைகளைப் பேசுவதும் எதிர்விளைவுகளை உருவாக்கும் என்பதையே நபிகளார் ரத்தினச் சுருக்கமாக விளக்கமளிக்கிறார்.

சில சந்தேகங்கள் பாவத்தில் கொண்டு சேர்க்கும். அதனால், இறைநம்பிக்கையாளர்கள் அதிகமாக சந்தேகம் கொள்வதை தவிர்த்துக் கொள்ளும்படி திருக்குர்ஆன் எச்சரிக்கிறது. சக மனிதர்களின் தவறுகளை துருவித்துருவி விசாரிப்பதை தடுக்கிறது. இந்த இழிச் செயல் இறந்துவிட்ட தனது சகோதரனின் உடலை உண்பதற்கு ஒப்பான அருவருப்பான செயல் என்றும் எச்சரிக்கிறது.


நபிகளார் தமது இறுதி பேருரையில் இப்படி அழுத்தம் திருத்தமாக சொல்லிக் காட்டுகிறார் "மக்களே! இந்த துல்ஹஜ் மாதமும், இந்த துல்ஹஜ் 9ம் நாளும், இந்த மக்கா மாநகரமும் எவ்வளவு புனிதமானவையோ, அவ்வாறே சக மனிதர்களின் உயிர்களும், உடமைகளும் மானம் மரியாதையும் புனிதமானயே..!”

தனது நாவாலும், கைகளாலும் சக மனிதர்களுக்கு தீது விளைவிக்காதவனே மனிதர்களில் சிறந்தவனாவான்.

“ஒவ்வொரு நாளின் விடியலின் போதும், மனிதனின் உடல் உறுப்புகள் அனைத்தும் நாவிடம், ”இறைவனுக்கு அஞ்சிக்கொள்! உனது அசைவில்தான் எங்களது உயர்வும், தாழ்வும் அடங்கியுள்ளது!” – என்று வேண்டுகோள் விடுப்பதற்கு ஒப்பானது.

நபிகளாரின் விண்ணேற்ற நிகழ்வின்போது, சில மனிதர்கள் கூரிய செம்பு நகங்கள் கொண்ட கரங்களால் தங்கள் முகங்களையும், மார்புகளையும் பிராண்டி ரத்தகளறியாக்கிக் கொண்டிருந்த கொடுமையைக் கண்டார். வானவர் தலைவரான காப்ரீயல் எனப்படும் ஜிப்ரீயலிடம் அவர்கள் குறித்து விசாரித்தார். ”இவர்கள் அவதூறு பேச்சுகளால் சக மனிதர்களின் இறைச்சியை உண்டவர்கள். அவர்களின் கண்ணியத்தை சீர்க்குலைத்தவர்கள்!”- என்று விளக்கமளித்தார் ஜிப்ரீயல்.

புறம்பேசுவது பாலியல் தொழிலைவிட கொடியது என்று நபிகளார் எச்சரிக்கிறார்.

ஏனென்றால் பாலியல் தொழில் என்னும் பெரும் பாவம் புரிபவன் தன் தவறுக்காக மனம் திருந்தி பாவமன்னிப்புக் கேட்கும்போது இறைவன் அவனது பாவங்களை மன்னிக்கும் வாய்ப்புண்டு.

ஆனால், புறம்பேசுதல் மூலமாக சக மனிதனின் மானம், மரியாதைகளைக் குழித்தோண்டிப் புதைத்தவனை அவனால் பாதிக்கப்பட்டவர் மன்னிக்கும்வரை இறைவனும் மன்னிக்கமாட்டான்.

புறம்பேசி அதனால் பாதிக்கப்பட்ட மனிதரிடம் நேரிடையாகச் சென்று தனது தவற்றை ஒப்புக் கொண்டு மன்னிப்பு பெற வாய்ப்புண்டு. ஆனால், அவர் இறந்துவிட்ட நிலையில் செய்ய வேண்டியதென்ன?

”நீங்கள் எவரைப்பற்றி புறம் பேசினீரோ அவருடைய பாவங்கள் மன்னிக்கப்பட வேண்டும் என்று இறைவனிடம் இறைஞ்சி மன்றாடுவது புறம்பேசியதற்கான பரிகாரங்களில் ஒன்றாகும். ”இறைவா..! புறம் பேசிய என்னையும், அதனால் பாதிக்கப்பட்ட எனது சகோதரரையும் மன்னிப்பாயாக!” – என்று பிரார்த்திப்பது ஒன்றே வழி என்று அறிவுறுத்துகிறார் நபிகளார்.

(தி இந்து, ஆனந்த ஜோதி இணைப்பில் 11.08.2016 அன்று பிரசுரமான எனது கட்டுரை)
No comments:

Post a Comment