Monday, July 18, 2016

இஸ்லாம் வாழ்வியல்: இறைவன் பேசமாட்டான்!

பதினைந்து நாட்களுக்குப் பிறகு, அன்சாரித் தோழர் திரும்பவும் நபிகளாரின் அவைக்கு வந்தார். ”இறைவனின் தூதரே, தாங்கள் சொன்னபடியே இந்த பதினைந்து நாட்களும் விறகு வெட்டி விற்று குடும்பத்தாரின் தேவைகள் போக இதோ இந்த பத்து திர்ஹம்களை சேமித்துள்ளேன்!” என்றார்.- இக்வான்  அமீர் 

''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''
நபிகளாரின் திருச்சபைக்கு மதீனாவின் அன்சாரித் தோழர் ஒருவர் வந்தார். தனக்கு ஏதாவது பொருளாதார உதவி செய்யும்படி வேண்டி நின்றார்.

”சகோதரரே..! உம்மிடம் ஏதாவது பொருளிருக்கிறதா? – என்று நபிகளார் அவரிடம் விசாரித்தார்.

”இறைவனின் தூதரே, தரையில் விரித்து படுக்க, போர்வையாக பயன்படுத்தும் விரிப்பொன்றும், ஒரு குவளையையும் தவிர என்னிடம் வேறொன்றும் இல்லை!” – என்றார் தமது ஏழ்மைநிலையை வெளிப்படுத்தியவாறு உதவி கேட்டு வந்தவர்.

”சரி அந்த இரண்டையும் என்னிடம் கொண்டு வாருங்கள்” - என்று அந்த அன்சாரித் தோழரைப் பணித்தார் நபிகளார்.

விரைவிலேயே அந்த இரண்டு பொருட்களும் கொண்டுவரப்பட்டன.

நபிகளார் விரிப்பையும், குவளையையும் ஏலம் விட்டார். இரண்டு திர்ஹம் கிடைத்தது. அவற்றை அன்சாரித் தோழரிடம் அளித்த நபிகளார், ”சகோதரரே! இதோ இவற்றில் ஒரு திர்ஹமுக்கு ஏதாவது உணவுப் பொருட்களை வாங்கிச் சென்று வீட்டாருக்கு வழங்குங்கள்.  இரண்டாவது திர்ஹத்தை வைத்து ஒரு கோடாரியை வாங்கி வாருங்கள்!” – என்றார்.

அன்சாரித் தோழர் நபிகளார் சொன்னது போலவே செய்தார். ஒரு திர்ஹமுக்கு உணவுப் பொருட்களை வாங்கி வீட்டாருக்கு கொடுத்தார். ஒரு திர்ஹமுக்கு கோடாரியையும் வாங்கிக் கொண்டு நபிகளாரிடம் வந்தார்.

கோடாரியைப் பெற்றுக் கொண்ட நபிகளார் தம் கைப்பட ஒரு கைப்பிடியைச் செய்து பொருத்தி அந்தத் தோழரிடம் கொடுத்தார்.

”சகோதரரே, நான் சொல்வதைப் போலச் செய்யுங்கள். தினமும் காட்டிற்கு சென்று விறகை வெட்டி அதை கடைவீதிக்குக் கொண்டு சென்று விற்று வாருங்கள். பதினைந்து நாட்கள் கழித்து என்னை வந்து பாருங்கள்!”என்றார் நபிகளார்.

அன்சாரித் தோழர் நபிகளார் சொன்னபடியே நடந்து கொண்டார்.

நாள்தோறும் காட்டுக்கு செல்வதும், விறகு வெட்டி விற்பதுமாய் நாட்களைக் கழித்தார்.

பதினைந்து நாட்களுக்குப் பிறகு, அன்சாரித் தோழர் திரும்பவும் நபிகளாரின் அவைக்கு வந்தார். ”இறைவனின் தூதரே, தாங்கள் சொன்னபடியே இந்த பதினைந்து நாட்களும் விறகு வெட்டி விற்று குடும்பத்தாரின் தேவைகள் போக இதோ இந்த பத்து திர்ஹம்களை சேமித்துள்ளேன்!” என்றார்.

நபிகளாரின் திருமுகம் மகிழ்ச்சியால் பௌர்ணமி நிலவாய் தகதகத்தது.

”சகோதரரே! வியர்வைச் சிந்தி உமது உழைப்பால் ஈட்டிய இந்தத் தொகை நீங்கள் உதவி கேட்டு யாசிப்பதைவிட சிறந்தது. இது மறுமை நாளன்று உங்கள் முகத்தில் படிய இருந்த யாசிப்பின் கறையையும் போக்கிவிட்டது!” – என்று யாசிக்கும் செயலிலிருந்து அவரைத் தடுத்து உழைப்பின் பக்கம் திசைத்திருப்பி விட்டார்.


உழைத்து ஈட்டும் வருமானம் மற்றும் பொய்மை, ஏமாற்று தில்லுமுல்லுகள் கலக்காமல் வணிகத்தால் ஈட்டிய  வருமானம் மற்ற எல்லா வருவாய்விட  சிறந்ததாகும்.

பொய்ப் பித்தலாட்டங்கள் செய்து பொருளீட்டும் வணிகர்களிடம் மறுமை நாளில் இறைவன் பேசமாட்டான். அவர்களின் குற்றங்குறைகளை மன்னித்து சுவனத்தில் நுழையவும் விட மாட்டான். மிகவும் கைச்சேதமான நிலைமை இது.

பொய் சத்தியம செய்து ஈட்டப்படும் வருமானம் ஆரம்பத்தில் வளர்ச்சியைப் போல தெரிந்தாலும் உண்மையில் அது வணிகத்தின் வளர்ச்சியை குன்றச் செய்துவிடும்.

நாணயமற்ற வணிகம் இஸ்லாத்தின் பார்வையில் ஹராம் எனப்படும் தடுக்கப்பட்ட ஒன்றாகிவிடும்.

நாணயமான வணிகன் மறுமையில் நபிமார்கள், உண்மையாளர்கள், உயிர்த்தியாகிகள் இவர்களுடன் எழுப்பப்படுவான்.

நுகர்பொருளின் தரத்தை உறுதிப்படுத்துவது நுகர்வோரை அதிகரித்துத் தரும். அவர்களின் நம்பிக்கையைப் பெற்றுத் தரும்.

”எவர் வணிகத்தில் மென்மையையும், நல்லொழுக்கத்தையும் பின்பற்றி வருகிறாரோ அத்தகையவர்களிடம் இறைவன் கருணைக் காட்டுவான்!” – என்று நற்செய்தியைத் தெரிவிக்கிறார் நபிகளார்.

•    நுகர்வோர் நலன் நாடுவது
•    வணிகத்தில் நேரந்தவறாமையைக் கடைப்பிடிப்பது
•    பணியாளர்களுடன் இணைந்து கடுமையாக உழைப்பது
• பணியாளரிடம் தாராளமனப்பான்மையுடன் நடந்து கொள்வது சிறந்த வணிகரின் இலக்கணங்களாகும்.

ஒருமுறை மதீனாவின் கடைவீதியில் நபிகளார் நடந்து சென்றார்.

வழியில் தானியக் குவியல் ஒன்றைக் கண்டார். சட்டென்று நின்றவர் தானியக் குவியலுக்குள் கையை விட்டு தானியங்களை அள்ளினார். அத்தனையும் ஈரமாக இருக்கக் கண்டு முகம் சுளித்தார்.

நிலைமையைப் புரிந்து கொண்ட அந்த வணிகர், ”இறைவனின் திருத்தூதரே! எதிர்பாராதவிதமாக பெய்த மழையில் இந்தத் தானியக் குவியல் நனைந்துவிட்டது!” – என்று விளக்கமளித்தார்.

”அப்படியானல், இவற்றை வாங்க வருபவரிடம் இதன் உண்மையான தரத்தை தெரிவித்து விற்பனைச் செய்யுங்கள்” – என்று அறிவுறுத்திவிட்டு அங்கிருந்து சென்றார்.

விலையேற்றத்துக்காக உணவுப் பொருட்களை பதுக்கி வைத்து மக்களை சிரமத்துக்குள்ளாக்கும் வணிகரை நபிகளார் பாவிகள் என்று கடுமையாக விமர்சிக்கிறார்.

அதேபோல, அளவைகளில் மோசடி செய்பவருக்கு கேடுதான் என்று திருக்குர்ஆனும் சாடுகிறது.

வணிகத்தில் அறியாமல் ஏற்படும் தவறுகளுக்கு பரிகாரமாக அதிகமாக தான, தர்மங்கள் செய்யும்படியும் நபிகளார் அறிவுறுத்துகிறார்.

(தி இந்து ஆனந்த ஜோதி இணைப்பில் 14.07.2016 அன்று  வெளியான எனது கட்டுரை) 


No comments:

Post a Comment