Tuesday, June 14, 2016

எனது நூல்கள்: சிறார் இலக்கியம்: முதல் மனிதனின் கதை: என்னுரை


ஒவ்வொரு மனிதனும் நியாயமான தன் அன்றாட தேவைகளுக்கு தனது வாழ்வில் பல லட்சங்களை சம்பாதிக்க வேண்டியிருக்கிறது. ஆனால், மனிதனின் வாழ்நாள் என்பது, ஒரு 50 ஆயிரம் நாட்களையும் தாண்டுவதில்லை என்பது உங்களுக்குத் தெரியுமா?

மனிதனின் ஆயுட்காலம் நூறு ஆண்டுகள் என்று வைத்துக் கொண்டாலும் அவன் 40 ஆயிரம் நாட்களையும் நெருங்குவதில்லை; 40 ஆயிரம் நாட்கள்கூட அவன் இந்த உலகத்தில் வாழ்வதில்லை என்பது எவ்வளவு விசித்திரம்!

ஒரு துளி நீரிலிருந்து வெளிப்பட்ட கண்ணுக்கே தெரியாத ஒரு நுண்ணுயிரிதான் மனிதனின் துவக்கம்.

அதன்பின், ரத்தக் கட்டியாகி, பரிபூரண தேவைகளுடன் அமைந்த கருவறை என்னும் ஆலையில் எலும்பு, தசை, தோல் என்று அடுக்கடுக்கு போர்வைகளுடன் நாளொரு மேனி பொழுதொரு வண்ணமாக வடிவமைப்புகள் பெறுபவனே மனிதன்.

•    வாழ்க்கையும் நிஜம்.
•    சுக, துக்கங்களும் நிஜம்,
•    வெற்றித் தோல்விகளும் நிஜம்.
•    வலியும், சந்தோஷங்களும் நிஜம். அதுபோல,
•    மரணமும் நிஜம்.

ஆக பிறப்பிலிருந்து இறப்பு வரையிலான இடைப்பட்ட காலத்தில் வாழும் நிஜமான வாழ்க்கைக்கான வழிகாட்டல் அவசியம்.

இறப்புக்கு பின்னே உள்ள நிலைமை குறித்து ஆய்வும் அதைவிட அவசியம்.

வெறும் உக்கி, மக்கி மண்ணோடு மண்ணாகி ‘மௌனத்தில்’ மனித வாழ்க்கை கரைந்து போனால் பரவாயில்லை!

ஆனால், ஒருவேளை.. ஆம்… ஒருவேளை… இறப்புக்கு பின் ஒரு வாழ்க்கை, வாழ்ந்த வாழ்க்கையின் எதிர்வினைகளாய் அதில் நல்லது, கெட்டதுகள் என்று இருந்துவிட்டால் … என்ற தேடலின் முடிவாய் நான் தேர்ந்தெடுத்ததுதான் இஸ்லாம்.

தன்னை பகுத்தறிவாளனாக காட்டிக் கொள்பவனும் தனக்கு எதிர்வினைகளாய் அமைந்த நம்பிக்கையின் அடித்தளங்களில்தான் வாழ்வியல் வீடமைக்கிறான்.

தன்னை இறைமறுப்பாளனாக காட்டிக் கொள்பவனும் தனக்கென்ற பொருள்முதல்வாதம் போன்ற நம்பிக்கைகளின் கட்டமைப்பில்தான் வாழ்வியலைத் தேர்வு செய்கிறான்.

சக மனிதர்களை கடவுள்களாக்கிக் கொள்கிறான். மனோ இச்சைகளை தெய்வங்களாக்கிக் கொள்கிறான். மனித படைப்புகளை மூலதனமாக வேதங்களாக்கிக் கொள்கிறான்.

இவர்கள் இருவரோ அல்லது பலரோ வேறு வேறானலும் வாழும்வரை அனுபவி என்ற ஒரே மனோநிலை கொண்டவர்கள். யாருக்கும் அஞ்சத் தேவையில்லை என்று சொந்த மனித சமூகத்தில் அவலங்களை சிருஷ்டித்து சுகம் காண்பவர்கள்.

பகுத்தறிவு மனோநிலையில், அடுத்தவர் உரிமைகளைப் பறிக்கும் பலவான்களாக, ஏகாதிபத்தியவாதிகளாக, இரும்பு திரைக்குள் மக்களை அடக்கியாளும் சர்வாதிகாரிகளாக வரலாற்றில் இடம் பெற்றவர்கள்; இடம் பெற போகிறவர்கள்.

அதேபோலதான்,

•    இறைவன் ஒருவன்! கண்ணுக்குத் தெரியாத மாபெரும் சக்தியானவன். சகலங்களின் உரிமையாளன். அதிபதி.
•    அவனது சட்டங்களின் அடிப்படையில்தான் சகல லோகங்களின் இயக்கமும் நடக்கிறது.
•    அதனால்தான் உலகில் அமைதி நிலவுகிறது.
•    மனிதனும் அந்த சட்டங்களுக்கு உட்பட்டு வாழ முன்வரவேண்டும்.
•    படைப்புகள் அனைத்தும் பெரும் நோக்கத்துக்காகவே படைக்கப்பட்டவை. வீணுக்காக அல்ல.
•    ஒவ்வொரு வினையும் அதற்கு இணையான எதிர்வினை கொண்டது.
•    விதைப்பவைதான் முளைக்கும்.
•    படைப்புகள் ஒருபோதும் இறைவனாக முடியாது!

என்று பகுதித்தறிவு ரீதியான தர்க்கத்தில் விடைகண்டு இறைநம்பிக்கையாளனாக தன்னை வடிவமைத்துக் கொள்கிறான்.

குரங்கிலிருந்து தோன்றியவன் என்ற மிருகவாதத்திலிருந்து விடுபட்டு மனிதனாய் மீண்டெழுகிறான். தான் இறைவனின் பிரதிநிதி என்ற அந்தஸ்தை உணருகின்றான். தன் அதிபதி அளித்த வாழ்வியல் அமைப்பை பின்பற்றி அமைதி விரும்பியாய் வாழ எத்தனிக்கின்றான். சமூகம் முழுக்க அமைதியையும். சுபிட்சத்தையும் விதைக்க முயல்கிறான். அதற்காகவே தனது வாழ்வை அர்ப்பணிக்கின்றான்.

•    இறைவன் உண்டு; இல்லை என்னும் நம்பிக்கையை அடித்தளமாக கொண்ட இவர்கள் இருவரும் சமமாவார்களா? அல்லது
•    இருவேறுபட்ட பின்விளைவுகள் தரும் இவர்கள் இருவரின் சித்தாந்தம்தான் சமமாகுமா?இத்தகைய பல கேள்விகளை எழுப்பி இறைமறுப்பிலிருந்து இறைநம்பிக்கையின் பக்கம் அழைப்பதே மனிதனின் கதை என்னும் இந்த நூலின் நோக்கமாகும்.

இது 1994-1995ம், ஆண்டுகளில் சமரசம் இதழில் ‘ஆதிமனிதனின் கதை’ என்னும் தலைப்பில் தொடராக வந்து, வாசகர்களின் பெரும் வரவேற்பை பெற்றது.

கதைத்தல் அதாவது சொல்வதுதான் கதை என வழங்கப்படுகிறது. அவ்வகையில் மனிதனின் கதை திருக்குர்ஆனின் திருவசனங்களை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்ட வரலாற்று நூல் எனலாம்.

இந்த நூலை, பிரசுரிக்க முன்வந்த ‘சாஜிதா’ புக் சென்டரின் உரிமையாளர் சகோதரர் ஜக்கரிய்யாவுக்கு நன்றி.

இறைமறுப்பு மற்றும், நாத்திகவாதம் என்னும் கொடும் நோய்த்தாக்குதல்களிலிருந்து தங்கள் பிள்ளைகளை மீட்டெடுக்க நினைக்கும் ஒவ்வொரு பெற்றோருக்கும் இந்த நூல் பெரும் உதவியாய் இருக்கும் என்று நம்புகின்றேன்.

தமிழ் கூறும் நல்லுலகம் வழக்கம்போல எனது நூல்களுக்கு தொடர்ந்து ஆதரவு அளிக்கும் என்றும் நம்புகின்றேன்.

இறைவன் நமது வாழ்வின் நோக்கத்தைப் புரிந்து செயல்படுத்த அருள்புரிவானாக! உலக மக்களின் அமைதிக்கும், சுபிட்சத்துக்கும் துணைப் புரிவானாக!

அன்புடன்,

‘மழலைப்பிரியன்’ (இக்வான் அமீர்)
‘மனித நேயக் குடில்’
14, 5வது குறுக்குத் தெரு.
உலகநாதபுரம், எண்ணூர்,
சென்னை 600057.
தொலைபேசி: 044 – 25751374,
செல்பேசி: 9840220125.
மின்னஞ்சல் முகவரி: ikhwan57@gmail.com ikhwan57@rediffmail.com

No comments:

Post a Comment