Wednesday, June 22, 2016

மாற்றான் தோட்டத்து மல்லிகை: ”கனவுகளைச் சிதைக்காதீர்!”

கடல் கடந்து வாழும் சகோதரி Geetha Mathi தனது முகநூல் பக்கத்தில் பதிவேற்றம் செய்திருந்த பதிவு இது. குழந்தைகள் பொதி சுமக்கும் குழந்தைகளாக்காமல் அவர்கள் சமூகத்தின் அற்புத சிற்பிகளாக்க வேண்டும். இளமையின் கனவுகளைச் சிதைக்காமல் வார்த்தெடுக்க வேண்டும். இது சம்பந்தமாக எனது சிறார் வலைப்பூவில் ஒரு பரிசு கதையாய் சித்தரித்துள்ளேன். இணைப்பு: http://mazalaipiriyan.blogspot.in/2012/11/blog-post_3.html அயலகத்தார் எப்படியெல்லாம் தமது சிற்பிகளை வடிவமைக்கிறார்கள்? நமது கல்விமுறை எத்தகைய மண்ணாங்கட்டிகளை, சுயநலவாதிகளை வார்த்தெடுத்து கொண்டிருக்கிறது என்ற ஒப்பீடுக்காக இந்த கட்டுரையை மாற்றான் தோட்டத்து மல்லிகை பகுதியில் மீள்பதிவு செய்கிறேன். - இக்வான் அமீர்.

''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''

Geetha Mathi
குழந்தைகள் ஒரு விளைநிலம் மாதிரி. அந்த விளைநிலத்தில் நீங்க விதவிதமான விதைகளை விதைத்துக்கொண்டே இருக்கணும். எந்த விதை பற்றிக்கொண்டு வளரத்தலைப்படுகிறதோ.. அது மென்மேலும் வளரத் துணைசெய்யணும். அதற்கு தண்ணீர் ஊற்றி வளர்க்கணும். ஒரு நிலையில் அது தானே தன்னை வளர்த்துக்கொண்டு விருட்சமாகும் என்றொரு அழகான கருத்தை நண்பர் உமாநாத் Umanath Selvan புதுயுகம் தொலைக்காட்சியில் நடைபெற்ற தந்தையர் தின நிகழ்வில் முன்வைத்தார்.

இதே கருத்தையொட்டி சில வருடங்களுக்கு முன் ஆஸ்திரேலியப் பள்ளிகள் குறித்த என் தொடரில் நான் எழுதியவற்றை இங்கு மீள்பதிவு செய்ய விரும்புகிறேன்.

உயர்நிலைக்கல்வி என்பது ஏழாம் வகுப்பிலிருந்து ஆரம்பம். மொத்தம் எட்டுப் பாடங்கள். ஆங்கிலம், கணிதம், அறிவியல் போன்ற அடிப்படைப் பாடங்களும், கலை, சமூகவியல், தொழில்நுட்பம், மொழி, சுகாதாரம் மற்றும் உடற்கல்வி போன்ற தொழிற்கல்விப் பாடங்களும் கற்றுத்தரப்படுகின்றன. ஐந்து தொழிற்கல்விப் பாடங்களிலும் பல பிரிவுகள் உண்டு. அவற்றை கீழே முதல் கமெண்டில் தந்துள்ளேன். எல்லாப் பள்ளிகளிலும் எல்லாப்பிரிவுகளும் இருக்கவேண்டிய அவசியமில்லை என்றாலும் பெரும்பாலான பள்ளிகள் பெரும்பாலான பிரிவுகளைக் கொண்டுள்ளன. ஆஸ்திரேலியாவில் பத்துக்கு ஒன்பது பள்ளிகள் இந்த முறையில்தான் கல்வியைப் போதிக்கின்றன.

ஐந்து பிரிவுகளிலிருந்தும் பிரிவுக்கு ஒன்றாக ஐந்து பாடங்களைத் தேர்ந்தெடுத்து ஆறு மாதங்கள் (ஒரு செமஸ்டர்) படிக்க வேண்டும். எதையெதைத் தேர்ந்தெடுப்பது என்பது மாணவனின் விருப்பம். அடுத்த ஆறு மாதங்களுக்கு வேறு ஐந்து பாடங்கள்.ஒருமுறை தேர்ந்தெடுத்தவற்றை மறுமுறை தேர்ந்தெடுக்க இயலாது. படிப்பு என்பது, கோட்பாடு, செய்முறை, செயலறிவு அதற்கான வாய்ப்புகள் என்று எல்லாவற்றையும் உள்ளடக்கியது. இப்படிப் படிப்பதால், பத்தாம் வகுப்பு முடித்த ஒரு மாணவனுக்கு கிட்டத்தட்ட நாற்பது வெவ்வேறு விதமான தொழிற்கல்வியில் பரிச்சயம் உண்டாகியிருக்கும்.

வெறும் ஏட்டுப்படிப்பு மட்டுமே வாழ்க்கை இல்லை என்பதை மாணவர்கள் உணர்கின்றனர். கண்முன் விரிந்திருக்கும் மாபெரும் உலகில் வாழ இத்தனை வழிகள் இருக்கின்றன என்பதையும் உணர்கின்றனர். ஒரு வேலை போனால் இன்னொன்று என்று வாழமுடியும் என்னும் நம்பிக்கை கொள்கின்றனர். வாழ வழியில்லாமல் தற்கொலை செய்துகொள்ளும் அபாயத்திலிருந்து அறிவுபூர்வமாக வெளியேறுகின்றனர். சுய விருப்பத்துடன் தங்கள் பாதையைத் தாங்களே தேர்வு செய்து மனநிறைவு பெறுகின்றனர்.

இது போன்ற வாய்ப்புகள் வழங்கப்படாதவரை ஒருவர் தன்னிடம் இருக்கும் திறமையை தானே அறிய இயலாமல் போய்விடுகிறது. இதுவரை ஒரு மாணவன் தான் படித்த பாடங்களில் பெற்ற மதிப்பெண்கள் மற்றும் ரிப்போர்ட்களின் அடிப்படையில் அவனுக்கு எதில் அதிக நாட்டம் என்பதும் எதில் அவன் முழுத்திறமையும் வெளிப்படுகிறது என்பதும் தெரியவந்திருக்கும். இந்தப் பாடங்களில் தேர்ச்சி சதவீதம் முக்கியமில்லை. மாணவர்களின் திறனைக் கண்டுபிடித்து வெளிக்கொணர்வதும், அத்திறனை மேம்படுத்த ஆலோசனை வழங்குவதுமே ஆசிரியரின் வேலை.பத்தாம் வகுப்பில் மாணவர்களைப் பாடாய்ப் படுத்தும் பொதுத்தேர்வு இல்லை என்பதும் வியப்பான உண்மை. பத்தாம் வகுப்பு முடிந்ததும், பள்ளி மாணவர்களில் பாதிபேர் பள்ளியை விட்டு விலகுகின்றனர். ஒரு மாணவன் தன் எதிர்காலத்தை நிர்ணயிக்க வேண்டிய கட்டம் இது. படிப்பில் அதிக நாட்டமிருக்கும் பிள்ளைகள் பதினொன்றாம் பன்னிரண்டாம் வகுப்புகளுக்குத் தங்களை தயார் செய்து கொள்ள, தொழிற்கல்வியில் நாட்டமிருக்கும் பிள்ளைகள் பள்ளியை விட்டு விலகி, தொழிற்கல்விக் கூடத்தை நாடுகின்றனர். அதனால் மேற்படிப்பான மருத்துவம், பொறியியல் போன்றத் துறைகளில் தேவையற்ற போட்டிகள் தவிர்க்கப்படுகின்றன.

தொழிற்பயிற்சிக் கூடத்துக்குச் சென்ற மாணவர்கள் ஒன்றிரண்டு வருடங்கள் முறையாகப் பயின்று பட்டயம் பெற்று தங்கள் வாழ்க்கையை நிலைநிறுத்திக் கொள்கின்றனர். மேற்படிப்பு படிக்கும் மாணவர்களுக்கு படிப்பு முடியும்வரை அரசின் உதவித்தொகை தொடரும். பெற்றோர் அனுமதித்தால் அவர்கள் தொடர்ந்து பெற்றோருடன் தங்குவர். அல்லது வெளியே தங்கி, பகுதி நேர வேலை செய்து அந்த வருமானத்தைக் கொண்டு தங்கள் மேலதிக செலவுகளைக் கவனித்துக் கொள்வர். இனி அவரவர் வாழ்க்கை அவரவர் கையில்.

1.தொழில்நுட்பம் (Technology) :
1. Introduction to IT
2. Advanced IT
3. Woodwork
4. Metal craft
5. Food and culture
6. Experience with food
7. People and food
8. Cake mixing and decoration
9. Social occasions
10. Gourmet food
11. Textiles
12. Creative crafts and character
13. Aviation A&B
14. robotics

2. மொழி -LOTE ( Language Other Than English)
1. Japanese A
2. Japanese E
3. Japanese
4. French A
5. French E
6. French
7. Chinese Mandarin
(A – Accelerated, E – Extension)

3. கலை (The Arts):
1. General art
2. Drawing
3. Advanced drawing
4. Costume and set design
5. Ceramics
6. Sculptures
7. Painting
8. Print making
9. Experimental art
10. Drama
11. Media studies
12. Music
13. Advertisements and business graphics
14. Architecture domestic
15. Architecture commercial
16. Visual communication & design
17. Photography
18. Graphics

4. சமூகவியல்(social studies):
1. Australian History
2. American History
3. Asian History
4. Current issues & global studies
5. Australian Geography
6. Environmental geography
7. Teenagers and law
8. Money matters
9. Work life
10. Movies
11. Mind & Meaning

5. சுகாதாரம் மற்றும் உடற்கல்வி (Health & Physical Education)
1. Human sexuality
2. Health & Lifestyle
3. Child development studies
4. General P.E.
5. Advanced P.E.
6. Racquet sports
7. Handball games
8. Stickball games
9. Football games
10. Power sports
11. Sports coaching
12. Leisure studies
13. Outdoor ed. A&B
14. Individual movement
15. Life saving
16. psychology

Tuesday, June 14, 2016

அழைப்பது நம் கடமை - 14: ' நம்புங்கள் .. இது இறைவனின் மார்க்கம்! '


பல நூற்றாண்டுகள் கழிந்தாலும், இனவாதிகளின் பண்புகள் ஒரே மாதிரியாகத்தான் இருக்கும்! காலந்தோறும், அவர்கள் இரத்த வெறிப்பிடித்தாடுவார்கள். பிரபஞ்ச வாழ்வியல் திட்டமான இஸ்லாத்தையும் அதைப் பின்பற்றி வாழும் முஸ்லிம்களையும் கொன்றொழிக்கவே முயல்வார்கள்.

உலகில் இஸ்லாத்தைப் போல பேரழிவுகளைச் சந்தித்த வாழ்க்கை நெறி வேறு இருக்க முடியாது! வரலாற்று அறிஞர்கள் வியக்கிறார்கள் இந்த உண்மையைக் கண்டு!

இதுவரை உலகில் லட்சக்கணக்கில் முஸ்லிம்கள் கொல்லப்பட்டனர். அவர்களது உடமைகள் சூறையாடப்பட்டன. மனைவி, மக்கள் கற்பழித்துக் கொல்லப்பட்டனர். தப்பிப் பிழைத்தவர்கள் காலத்துக்கும் அச்சத்துடன் பல தலைமுறை  வரைக்கும் அந்த பீதியில் உறைந்திருந்தார்கள்.

''இனி அவ்வளவுதான்! இஸ்லாம் அழிந்துவிடும்! அது வளருவதற்கான வாய்ப்புகள் இல்லவே இல்லை!''- என்று எதிரிகள் உறுதியுடனிருந்த நேரத்தில் அந்த அதிசயம் மீண்டும்.. மீண்டும் நிகழ்கிறது! இஸ்லாம் என்னும் விருட்சம் இன்னும் ஆழ வேர்ப்பரப்பி வானுயர கொப்பும், கிளைகளுமாக துளிர்விட்டு மகாவிருட்சமாக வளர்கிறது!

நேற்றைய 'அந்தலூசியா' என்றழைக்கப்படும் ஸ்பெயின் முதற்கொண்டு இன்றைய குஜராத் வரையிலான நிகழ்வுகள் முஸ்லிம்களுக்கு எதிரான கொடுமைகளை... அடக்குமுறைகளை...  கொன்றொழிப்புகளை இனத்துடைத்தெறிதலைதான் காட்டுகின்றன!

ஒவ்வொரு காலக்கட்டத்திலும் தோன்றிய இறைவனின் பிரியத்துக்குரிய நல்லடியார்களின் அளப்பரிய தியாகங்களால் மீண்டும் மீண்டும் அந்த அற்புதம் நிகழ்கிறது. அதிலும் குறிப்பாக 13-ஆம், நூற்றாண்டை எடுத்துக் கொண்டால்.. பயத்தால் உடல் சிலிர்த்துவிடும். வரலாறு நெடுக இரத்த வாடை அடிக்கும் அந்த கொடுர சம்பவங்கள் இப்போதும் நம்மை சிலிர்க்க வைக்கும்.

ஒரு நகரைத் தொடர்ந்து மறு நகரம்.. ஒரு பகுதியைத் தொடர்ந்து மறு பகுதி... ஒரு நாட்டைத் தொடர்ந்து மறு நாடு... என்று உலக முஸ்லிம்கள்  கடும் சேதங்களை அடைந்து கொண்டிருந்த நேரம் அது. பகைமை உக்கிரத்தால்.. முஸ்லிம்களும் அவர்கள் பின்பற்றும்  மார்க்கமான இஸ்லாமும் இனி தீர்ந்துவிடும் என்று வரலாறு நடுங்கிக் கொண்டிருந்த நேரம்.

அந்த கோர கொலைப் பட்டியலின் குறைந்தளவு புள்ளிவிவரம் இது:

நிஷாபூர்             -   17 லட்சத்து 47 ஆயிரம் பேர் .
பாக்தாத்              -   16 லட்சம் பேர்.
 ஹீரட்                 -    10 லட்சம் பேர்.
சமர்கண்ட்         -    9 லட்சத்து 80 ஆயிரம் பேர்.
மெர்வ்                 -    7 லட்சம் பேர்.
அலெப்போ       -    80 ஆயிரம் பேர்.
பால்க்                  -    முற்றிலும் அழிந்து போனது.
கிஹ்வா             -    முற்றிலும் அழிக்கப்பட்டு விட்டது.
ஹர்ரான்            -    முற்றிலும் அழிந்தது.

உலகின் பேராபரணம் என்று வர்ணிக்கப்படும் நகரம் பாக்தாத்! நீண்ட நெடிய சோதனை மிக்க அந்த ஆறு வாரங்களில் இந்த அழகான ஆபரணம் குரங்குக் கையில் கிடைத்த பூமாலையைப் போல பிய்த்து எறியப்பட்டது. யூப்ரட்டீஸ் நதி குருதியால் வெள்ளப் பெருக்கெடுத்து ஓடியது. மென்மைக்கும் அழகுக்கும் பேர் போன நகரப் பெண்கள் கொடுரமாக கற்பழித்துக் கொல்லப்பட்டனர்.

ஐந்து நூற்றாண்டுகளுக்கு பொத்தி.. பொத்தி.. பாதுகாத்து வந்த அறிவு... பெரும் சிரமங்களுக்கிடையே சேர்த்து வைக்கப்பட்டிருந்த உலகின் தலைச் சிறந்த நூலகம், தீ வைத்துக் கொளுத்தப்பட்டது. அரிய நூல்கள் சாம்பலாக்கப்பட்டன.

கல்வி-கேள்விகளுக்கும், அற்புதமான கலாச்சாரத்துக்கும், வணிகத்துறைக்கும் கேந்திரமாக விளங்கிய பாக்தாத் மயானக் காடானது. கலைநயத்தைப் பறைச்சாற்றும் பல அற்புதமான கட்டிடங்கள் தகர்க்கப்பட்டன. ரத்த வெறிப்பிடித்த ஆட்சியாளன் செங்கிஸ்கான் நாற்பதாண்டு காலம் முஸ்லிம்களை நடுநடுங்க வைத்தான்.
 அன்றைக்கு ஆட்சியிலிருந்த முஸ்லிம் அரசர் 'முஹம்மது குவாரிஷா' செய்த ஒரு சிறு தவறால் வந்த வினை இது. அன்றைய காலகட்டத்தில் மிகப் பெரும் சக்தியாக விளங்கியவர் இவர். அவருடைய நாட்டுக்கு வணிகம் நிமித்தமாக வந்த மங்கோலியக் குழுவினரை அனுமதி பெறாத காரணம் காட்டி அவர்களைக் கொலைச் செய்ய உத்திரவிட்டார். அதற்கு முறையாக தூதர்களை அனுப்பி எதிர்ப்புத் தெரிவித்த செங்கிஸ்கானின் தூதர்களையும் கொன்றார்.

மனித நேயமற்ற இந்த இரண்டு சம்பவங்கள்தான் செங்கிஸ்கானை பழி வாங்கும் உக்கிரத்தில் தள்ளியது. வரலாற்றில் எராளமான முஸ்லிம்கள் உயிரிழக்கக் காரணமானது.

மங்கோலியப் படைகள், மத்திய ஆசியா, பாரசீக வளைகுடா, புடா பெஸ்ட், மாஸ்கோ என்று புயல் வேகத்தில் இந்தியாவின் தில்லிவரை வந்து சேர்ந்தன.

உலகின் வேறொரு மூலையிலிருந்தவர்கள் சுவீடன் நாட்டவர். அவர்களுக்கு செங்கிஸ்கானால் எந்த ஆபத்தும் இல்லாவிட்டாலும்கூட மங்கோலியர் பெயரைக் கேட்டு நடு நடுங்கினார்கள் அவர்கள்.

வெறும் ஆட்சி - அதிகாரம், ஆடம்பர மோகங்களில் (இன்றைய அரபு ஆட்சியாளர்களைப் போல) திளைத்திருந்த முஸ்லிம்களை வெல்வதற்கு எந்த சிரமமும் இல்லை. ஒரு மங்கோலியன் நூறு முஸ்லிம்களை கொலை செய்யுமளவுக்கு கோழைகளாக இருந்தார்கள். தங்களது உயிர், உடமைகளைக் காத்துக் கொள்ள இயலாமல் அவர்கள் செத்து மடிந்தார்கள்.

'மங்கோலியப் படை தோற்றுவிட்டதென்று யாராவது சொன்னால்... நம்பவே நம்பாதீர்கள்!' - என்று அரபு பழமொழி வழக்கத்தில் ஏற்படுமளவுக்கு நிலைமை மோசமாக இருந்தது.

மங்கோலியர் சாம்ராஜ்ஜியம் கொடி கட்டிப் பறந்தபோது, முஸ்லிம் ஆட்சியாளர்கள் ஒழுக்க வீழ்ச்சியில் மூழ்கித் திளைத்தார்கள். ஊழல், அதிகார வெறி அவர்களிடையே மிகைத்துப் போனது. உலகாயதப்போக்கே அவர்களிடம் பிரதானமாக காணப்பட்டது.

தலைமைத்துவ தகுதியின்மைக்கு 'குவாரிஜயம் ஷா' மட்டுமே உதாரணம் அல்ல. அப்பாஸிய கலீஃபா 'அல் முஸ்த அஸிமின்' நிலைமையும் அதுதான்! குவாரிஜம் ஷாவின் அரசாட்சி வீழ்ந்தது என்று கேள்விப்பட்டதும், தனிப்பட்ட வெறுப்பை பொது வெறுப்பாக்கி அகமகிழ்ந்தார் அப்பாஸிய கலீஃபா அல் முஸ்த அஸீம். மங்கோலியர்கள் பாக்தாத்தை அடையும் முன்னரே கலீஃபாவின் ஆலோசகர்கள் தமது படைவீரரை விலக்கிக் கொள்ளும்படி கலீஃபாவுக்கு அறிவுறுத்தினார்கள். இந்தக் கோழைத்தனம் அப்பாஸிய ஆட்சி வீழ்வதற்கு போதுமானதாக இருந்தது.

இந்தக் கொடுமைகளாலும் இஸ்லாம் அழிந்துவிடவில்லை.

'தான் இறைவனின் பேரழிவு!', 'இறைவனால் அனுப்பப்பட்ட வேதனை!'- என்று தன்னைத்தானே அதிகாரப்பூர்வமாக அறிவுறுத்திக் கொண்டான் செங்கிஸ்கான்! கைப்பற்றிய  நாட்டு முஸ்லிம் பெண்களின் கற்பைச் சூறையாடினான். கொலைக்காரர் குஜராத் மோடி செய்தது போலவே நிறைமாத கர்ப்பிணிப் பெண்களையும் கற்பழித்து ... வயிற்றைக் கிழித்து.. குழந்தைகளை வாளால் குத்திக் கொன்றான். ஒரு தலைமுறைக்கு முஸ்லிம்களைத் துன்பங்களும், துயரங்களும் சூழ்ந்து கொண்டன.

அதன் பிறகு இறைவனின் பேரருள் மீண்டும் முஸ்லிம் சமுதாயம் மீது பொழிந்தது. தனது அடியார்கள் சோதனைகளால் பெற்ற படிப்பினைகள் போதும்! என்று கருணை வாய்ந்த இறைவன் எண்ணினான் போலும்! மீண்டும் இஸ்லாத்துக்கு சாதகமாக காற்று வீச ஆரம்பித்தது.

பாக்தாத் செங்கிஸ்கான் பேரனால் முற்றிலும் அழிக்கப்பட்டுவிட்டது. அதன் பிறகு செங்கிஸ்கானின் கொள்ளுப் பேரன் 'பெர்க்' இஸ்லாத்தைத் தழுவினார்.

மங்கோலியர்களின் கொடும் சகாப்தம் முடிவுக்கு வந்தது.

 

மிக முக்கியத்துவம் வாய்ந்த இந்த வரலாற்று நிகழ்வுகளில் இரண்டு சாமான்யமானவர்களின் பங்கு முக்கியமானது!

'பெர்க்' அல்லது 'பரகா கான்' என்று அழைக்கப்படும் செங்கிஸ்கானின் கொள்ளுப் பேரனுக்கு இஸ்லாம் இரண்டு வணிகர்களால் பரிச்சயமானது. இந்த முயற்சியின் விளைவாக இஸ்லாம் ரஷ்யா, கிழக்கு ஐரோப்பா வரை சென்று சேரக் காரணமானது!

பாரசீகத்ததைச் சேர்ந்த வணிகரான ஜமாலுத்தீன் தனது வணிகப் பயணம் நிமித்தமாகச் செல்லும் போது, மங்கோலிய இளவரசன் துக்ளக்கின் உயர் பாதுகாப்புப் பகுதியான விளையாட்டுத் திடலுக்குள் நுழைந்துவிட்டார். தெரியாமல் நடந்துவிட்ட சம்பவத்துக்கு அவர் கைது செய்யப்பட்டு இளவரசன் முன்பாக நிறுத்தப்பட்டார்.

செங்கிஸ்கானின் பரம்பரையில் உதித்த துக்ளக்கிற்கு பாரசீக முஸ்லிம்கள் என்றால்... விலங்குகளைவிட மட்டமானவர்கள் என்று நினைப்பு! பௌத்தமும், கிருத்துவமும் அவரது அரசாங்கத்தின் அதிகாரப்பூர்வமான மதங்களாக இருந்தன என்பது குறிப்பிடத்தக்கது!

இந்த எண்ணத்தாலேயே துக்ளக் ஜமாலுத்தீனை ஏளனமாகப் பார்த்து கிண்டலாகச் சொன்னானர்: "பாரசீகர்களைவிட நாய்கள் எவ்வளவோ மேல்!"

கொஞ்சமும் அச்சப்படாமல் ஜமாலுத்தீன் பதிலளித்தார்:

"உண்மைதான் அரசே! நாங்கள் இஸ்லாத்தைத் தழுவியிருக்காவிட்டால்.. தெரு நாய்களைவிட கேவலமாக இருந்திருப்போம்!"

சலனமற்ற இதயத்திலிருந்து அச்சமற்று வெளிப்பட்ட இந்த பதில் துக்ளக்கை சிந்திக்க வைத்தது. இஸ்லாம் பற்றி அறிந்து கொள்ள அதுவே திருப்புமுனையாக அமைந்தது!

ஜமாலுத்தீன் துக்ளக்குக்கு இஸ்லாம் குறித்து விரிவான முறையில் பரிச்சயம்  செய்தார். இஸ்லாத்தை ஏற்றுக்கொள்ள முடிவெடுத்த துக்ளக் ராஜாங்க காரணங்களையொட்டி தனது முடிவை அறிவிக்க சிறிது அவகாசம் கேட்டார். சிறிதுநாள் கழித்து தன்னை வந்து பார்க்கும்படியும், தனது வாக்குறுதியை நினைவுறுத்தும்படியும் ஜமாலுத்தீனை அவர் கேட்டுக் கொண்டார்.

ஊர் திரும்பிய ஜமாலுத்தீன் சிறிது நாளிலேயே நோயுற்றார். மரண வேளையில் அவர் தனது மகனான ரஷீதை அழைத்தார். இளவரசர் துக்ளக் குறித்து நடந்தவற்றை விவரித்தார். இஸ்லாம் ஏற்றுக் கொள்வது சம்பந்தமான உறுதிமொழியை அவருக்கு நினைவுறுத்தும்படி கேட்டுக் கொண்டார்.

துக்ளக் அரியணையில் அமர்ந்திருந்த சமயம் அது.

அவரை சந்திப்பது அவ்வளவு எளிதாக இல்லை. கடைசியில் அரண்மனை அருகே தொழுகைக்கான அழைப்பை விடுத்து துக்ளக்கின் கவனத்தை ஈர்த்தார் ரஷீத். அதன் பின் துக்ளக் இஸ்லாத்தைத் தழுவுவதற்கு உதவினார். 'துக்ளக் தைமூர் கான்' என்ற பெரும் பிம்பம் வரலாற்றில் பதியக் காரணமானார்.

துன்பங்களும், துயரங்களும் சத்தியத்தை என்றென்றும் சூழ்ந்திருப்பவை! பெரும் மலையிலிருந்து உருண்டுவரும் நீர்வீழ்ச்சியைப் போன்றவை! பாக்தாத், ஆப்கான், நேற்றைய குஜராத் எல்லாமே இறைவனின் சோதனைகள்தான்!

இந்த துன்பங்களுக்கும், துயரங்களுக்கும் மறுபக்கம் உண்டு என்பதற்கு சாமானியர்களான ஜமாலுத்தீன் மற்றும் ரஷீத் போன்றோரின் அழைப்பியல் வரலாறே சாட்சி!

ஆமாம்! அழைப்புப் பணியில் ஈடுபடுவோர் உறுதியுடன் நம்புங்கள்... இது இறைவனின் மார்க்கம்!

வாள் வீச்சுகளையும், துப்பாக்கித் தோட்டாக்களையும், நவீன லேசர் ஆயுதங்களையும் தாண்டி வரலாற்றில் நிலைத்திருக்கும் மார்க்கம்!

கியூபாவின் குவாண்டனாமோ சிறைச்சாலைகளும், ஈராக்கின் அபூகாரிப் சிறைகளையும் தாண்டி மீண்டெழும் மார்க்கம்!

நம்புங்கள் தோழர்களே! இது இறைவனின் மார்க்கம்! படைத்தவனால் தனது படைப்புகளுக்காக அருளப்பட்ட பேரருள் மார்க்கம்!

- இறைவன் நாடினால்.. அழைப்பது தொடரும்.


 அழைப்பது நம் கடமை: முந்தைய தொடர்களை வாசிக்க:
''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''

1. அந்தக் கடலோரக் கிராமத்தின் கதை : http://ikhwanameer.blogspot.in/2015/07/1_23.html 
2. கிராமவாசியின் செயலும், நபிகளாரின் அணுகுமுறையும் : http://ikhwanameer.blogspot.in/2015/07/blog-post_49.html 
3. படிப்பினை மிக்க அந்த இறைத்தூதரின் வரலாறு : http://ikhwanameer.blogspot.in/2015/08/3.html 
4. அழைக்க வேண்டும் ஏன்? : http://ikhwanameer.blogspot.in/2015/08/4.html 
5. சகல லோகங்களின் இறைவன் : http://ikhwanameer.blogspot.in/2015/08/5.html 
6. சான்று வழங்குதல் என்றால் என்ன? http://ikhwanameer.blogspot.in/2015/08/6_14.html 
7. கடல் பிளந்தது. நெருப்பு குளிர்ந்தது : http://ikhwanameer.blogspot.in/2015/08/13_18.html 
8. அந்த நாள் வரும்முன் : http://ikhwanameer.blogspot.in/2015/08/8.html 
9. அழைப்பாளர்களின் இலக்கு: http://ikhwanameer.blogspot.in/2015/08/9_22.html 
10 ஊடகங்களின் இரண்டு அளவுகோல்கள்: http://ikhwanameer.blogspot.in/2015/08/10_24.html 
11.அடிப்படை விஷயங்களும், அழைப்பாளர்களும் : http://ikhwanameer.blogspot.in/2015/09/11.html 
12. கடைநிலைக் காவலராய் ஒரு ஜனாதிபதி : http://ikhwanameer.blogspot.in/2015/09/12.html

 எனது நூல்கள்: சிறார் இலக்கியம்: முதல் மனிதனின் கதை: என்னுரை


ஒவ்வொரு மனிதனும் நியாயமான தன் அன்றாட தேவைகளுக்கு தனது வாழ்வில் பல லட்சங்களை சம்பாதிக்க வேண்டியிருக்கிறது. ஆனால், மனிதனின் வாழ்நாள் என்பது, ஒரு 50 ஆயிரம் நாட்களையும் தாண்டுவதில்லை என்பது உங்களுக்குத் தெரியுமா?

மனிதனின் ஆயுட்காலம் நூறு ஆண்டுகள் என்று வைத்துக் கொண்டாலும் அவன் 40 ஆயிரம் நாட்களையும் நெருங்குவதில்லை; 40 ஆயிரம் நாட்கள்கூட அவன் இந்த உலகத்தில் வாழ்வதில்லை என்பது எவ்வளவு விசித்திரம்!

ஒரு துளி நீரிலிருந்து வெளிப்பட்ட கண்ணுக்கே தெரியாத ஒரு நுண்ணுயிரிதான் மனிதனின் துவக்கம்.

அதன்பின், ரத்தக் கட்டியாகி, பரிபூரண தேவைகளுடன் அமைந்த கருவறை என்னும் ஆலையில் எலும்பு, தசை, தோல் என்று அடுக்கடுக்கு போர்வைகளுடன் நாளொரு மேனி பொழுதொரு வண்ணமாக வடிவமைப்புகள் பெறுபவனே மனிதன்.

•    வாழ்க்கையும் நிஜம்.
•    சுக, துக்கங்களும் நிஜம்,
•    வெற்றித் தோல்விகளும் நிஜம்.
•    வலியும், சந்தோஷங்களும் நிஜம். அதுபோல,
•    மரணமும் நிஜம்.

ஆக பிறப்பிலிருந்து இறப்பு வரையிலான இடைப்பட்ட காலத்தில் வாழும் நிஜமான வாழ்க்கைக்கான வழிகாட்டல் அவசியம்.

இறப்புக்கு பின்னே உள்ள நிலைமை குறித்து ஆய்வும் அதைவிட அவசியம்.

வெறும் உக்கி, மக்கி மண்ணோடு மண்ணாகி ‘மௌனத்தில்’ மனித வாழ்க்கை கரைந்து போனால் பரவாயில்லை!

ஆனால், ஒருவேளை.. ஆம்… ஒருவேளை… இறப்புக்கு பின் ஒரு வாழ்க்கை, வாழ்ந்த வாழ்க்கையின் எதிர்வினைகளாய் அதில் நல்லது, கெட்டதுகள் என்று இருந்துவிட்டால் … என்ற தேடலின் முடிவாய் நான் தேர்ந்தெடுத்ததுதான் இஸ்லாம்.

தன்னை பகுத்தறிவாளனாக காட்டிக் கொள்பவனும் தனக்கு எதிர்வினைகளாய் அமைந்த நம்பிக்கையின் அடித்தளங்களில்தான் வாழ்வியல் வீடமைக்கிறான்.

தன்னை இறைமறுப்பாளனாக காட்டிக் கொள்பவனும் தனக்கென்ற பொருள்முதல்வாதம் போன்ற நம்பிக்கைகளின் கட்டமைப்பில்தான் வாழ்வியலைத் தேர்வு செய்கிறான்.

சக மனிதர்களை கடவுள்களாக்கிக் கொள்கிறான். மனோ இச்சைகளை தெய்வங்களாக்கிக் கொள்கிறான். மனித படைப்புகளை மூலதனமாக வேதங்களாக்கிக் கொள்கிறான்.

இவர்கள் இருவரோ அல்லது பலரோ வேறு வேறானலும் வாழும்வரை அனுபவி என்ற ஒரே மனோநிலை கொண்டவர்கள். யாருக்கும் அஞ்சத் தேவையில்லை என்று சொந்த மனித சமூகத்தில் அவலங்களை சிருஷ்டித்து சுகம் காண்பவர்கள்.

பகுத்தறிவு மனோநிலையில், அடுத்தவர் உரிமைகளைப் பறிக்கும் பலவான்களாக, ஏகாதிபத்தியவாதிகளாக, இரும்பு திரைக்குள் மக்களை அடக்கியாளும் சர்வாதிகாரிகளாக வரலாற்றில் இடம் பெற்றவர்கள்; இடம் பெற போகிறவர்கள்.

அதேபோலதான்,

•    இறைவன் ஒருவன்! கண்ணுக்குத் தெரியாத மாபெரும் சக்தியானவன். சகலங்களின் உரிமையாளன். அதிபதி.
•    அவனது சட்டங்களின் அடிப்படையில்தான் சகல லோகங்களின் இயக்கமும் நடக்கிறது.
•    அதனால்தான் உலகில் அமைதி நிலவுகிறது.
•    மனிதனும் அந்த சட்டங்களுக்கு உட்பட்டு வாழ முன்வரவேண்டும்.
•    படைப்புகள் அனைத்தும் பெரும் நோக்கத்துக்காகவே படைக்கப்பட்டவை. வீணுக்காக அல்ல.
•    ஒவ்வொரு வினையும் அதற்கு இணையான எதிர்வினை கொண்டது.
•    விதைப்பவைதான் முளைக்கும்.
•    படைப்புகள் ஒருபோதும் இறைவனாக முடியாது!

என்று பகுதித்தறிவு ரீதியான தர்க்கத்தில் விடைகண்டு இறைநம்பிக்கையாளனாக தன்னை வடிவமைத்துக் கொள்கிறான்.

குரங்கிலிருந்து தோன்றியவன் என்ற மிருகவாதத்திலிருந்து விடுபட்டு மனிதனாய் மீண்டெழுகிறான். தான் இறைவனின் பிரதிநிதி என்ற அந்தஸ்தை உணருகின்றான். தன் அதிபதி அளித்த வாழ்வியல் அமைப்பை பின்பற்றி அமைதி விரும்பியாய் வாழ எத்தனிக்கின்றான். சமூகம் முழுக்க அமைதியையும். சுபிட்சத்தையும் விதைக்க முயல்கிறான். அதற்காகவே தனது வாழ்வை அர்ப்பணிக்கின்றான்.

•    இறைவன் உண்டு; இல்லை என்னும் நம்பிக்கையை அடித்தளமாக கொண்ட இவர்கள் இருவரும் சமமாவார்களா? அல்லது
•    இருவேறுபட்ட பின்விளைவுகள் தரும் இவர்கள் இருவரின் சித்தாந்தம்தான் சமமாகுமா?இத்தகைய பல கேள்விகளை எழுப்பி இறைமறுப்பிலிருந்து இறைநம்பிக்கையின் பக்கம் அழைப்பதே மனிதனின் கதை என்னும் இந்த நூலின் நோக்கமாகும்.

இது 1994-1995ம், ஆண்டுகளில் சமரசம் இதழில் ‘ஆதிமனிதனின் கதை’ என்னும் தலைப்பில் தொடராக வந்து, வாசகர்களின் பெரும் வரவேற்பை பெற்றது.

கதைத்தல் அதாவது சொல்வதுதான் கதை என வழங்கப்படுகிறது. அவ்வகையில் மனிதனின் கதை திருக்குர்ஆனின் திருவசனங்களை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்ட வரலாற்று நூல் எனலாம்.

இந்த நூலை, பிரசுரிக்க முன்வந்த ‘சாஜிதா’ புக் சென்டரின் உரிமையாளர் சகோதரர் ஜக்கரிய்யாவுக்கு நன்றி.

இறைமறுப்பு மற்றும், நாத்திகவாதம் என்னும் கொடும் நோய்த்தாக்குதல்களிலிருந்து தங்கள் பிள்ளைகளை மீட்டெடுக்க நினைக்கும் ஒவ்வொரு பெற்றோருக்கும் இந்த நூல் பெரும் உதவியாய் இருக்கும் என்று நம்புகின்றேன்.

தமிழ் கூறும் நல்லுலகம் வழக்கம்போல எனது நூல்களுக்கு தொடர்ந்து ஆதரவு அளிக்கும் என்றும் நம்புகின்றேன்.

இறைவன் நமது வாழ்வின் நோக்கத்தைப் புரிந்து செயல்படுத்த அருள்புரிவானாக! உலக மக்களின் அமைதிக்கும், சுபிட்சத்துக்கும் துணைப் புரிவானாக!

அன்புடன்,

‘மழலைப்பிரியன்’ (இக்வான் அமீர்)
‘மனித நேயக் குடில்’
14, 5வது குறுக்குத் தெரு.
உலகநாதபுரம், எண்ணூர்,
சென்னை 600057.
தொலைபேசி: 044 – 25751374,
செல்பேசி: 9840220125.
மின்னஞ்சல் முகவரி: ikhwan57@gmail.com ikhwan57@rediffmail.com