Sunday, May 15, 2016

எனது கட்டுரைகள்: சிறப்புக் கட்டுரை: தமிழக தேர்தல்களும், பிரெஞ்சு மொட்டையும்...!
'''''''''''''''''''''''''''''''''
மே-2006 மனாருல் ஹுதா இதழில் நான் எழுதிய கட்டுரை இது. எனது 30 ஆண்டு கால எழுத்துப் பணிகளை எனது வலைப்பூவில் (http://ikhwanameer.blogspot.in/) தொகுத்து பதிவேற்றம் செய்யும்போது, தற்போதைய சூழலுக்கு பொருத்தமாக உள்ளதால் அந்தக் கட்டுரையை மீண்டும் பதிவேற்றம் செய்துள்ளேன். அன்றைய காலகட்டத்தில் பேசப்பட்ட கட்டுரை. புள்ளிவிவரங்களும் சம்பவங்களும் அன்றைய காலகட்டத்தைச் சேர்ந்தவை என்பதை நினைவில் வைத்து படிக்கவும்.  - இக்வான் அமீர்

““““““““““““““““““““““
அண்மையில், பத்திரிகையாளர் நண்பர் ஒருவர் தமிழக தேர்தல்களில் முஸ்லிம் அமைப்புகளின் நிலைபாடு குறித்து பெரிதும் வருத்தப்பட்டார். அதற்கு இணையான வருத்தம் ஏற்கனவே எனக்குள் இருந்தது. வருத்தப்பட்டு என்ன பயன்? பலவீனமானவர் குரல் யாரிடம் எடுபடும்?

முஸ்லிம் அமைப்புகள் சார்பாக அரசியல் ஆதரவு நிலபாடு என்பது ஒருவிதத்தில் சகஜமாக எடுத்துக் கொள்ளலாம். ஆனால், தனிநபர் விருப்பு – வெறுப்புகள் அந்த இயக்கங்களின் வழிமுறைகளாகும் போதுதான் சகிக்க முடியவில்லை. அதிலும், குறிப்பாக முஸ்லிம் அமைப்புகள் திராவிட இயக்கங்களின் அறிவிக்கப்படாத அதிகார பூர்வமான வழக்குரைஞர்களாக, கொள்கைப் பரப்பு செயலாளர்களாக மாறிபோனது பரிதாபம். வரலாற்றில் பதிந்துபோன கருப்புப் பக்கங்கள் இவை.

• சமுதாயத்தை வழிநடத்த தகுந்த தலைமையின்மை,
• தமிழகத்தில் நிலவிய சிறுபான்மை எதிர் சூழல்கள்
• இந்த வெற்றிடத்தை நிரப்ப கிடைத்த மக்கள் ஆதரவில் உருவாகிய வெகுஜன அமைப்பு. கடைசியில், அந்த அமைப்பும் தனிநபர் விருப்பு, வெறுப்புகளை தனது கொள்கைகளாக்கிக் கொண்டு பல பிரவுகளாக சிதறுண்டது என்று பல்வேறு அவலங்கள்.

நாள்தோறும் என் மின்னஞ்சல் பெட்டிக்குள் குவிகின்றன இந்த அமைப்புகளின் மட்டரகமான விமர்சனங்கள்.

தமிழகத்தில் மே, 8-ல், நடக்கவிருக்கும் தமிழக தேர்தல்களுக்காக திராவிட கட்சிகள் வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கை விசித்திரமானது. அதிமுக 2001 தேர்தல்களில் அறிவித்த தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தேர்தல் விழாக் காலத்தில் வாக்குறுதிகள் வான்மழைப் பெய்யும் என்பது எல்லா கட்சிகளின் தேர்தல் அறிக்கைகளும் சாட்சி. அவற்றை நிச்சயம் நிறைவேற்றப் போவதில்லை என்று ஏக மனதாக அந்தக் கட்சிகள் தீர்மானித்தவை போல விடும் அறிக்கைகள் அவை!

1967-ல், திமுக ஒரு ரூபாய்க்கு மூன்று கிலோ அரிசி வழங்குவதாக தேர்தல் வாக்குறுதி அளித்தது. ஆட்சி பீடம் ஏறியதும், அதை மறுத்துவிட்டது. தற்போது ரேஷன் கடைகளுக்கு அரிசி விநியோகம் செய்ய அரசு, ஆண்டு தோறும் 15 கோடி ரூபாய் செலவிடுகிறது. இரண்டு ரூபாய்க்கு கிலோ அரிசி வழங்க ஆண்டுதோறும் 45 கோடி ரூபாய் சுமையைச் சுமக்க வேண்டியிருக்கும் என்கிறார்கள் அரசியல் வல்லுநர்கள்.

கடந்த தேர்தல்களில் அதிமுக ஒவ்வொரு கிராம பஞ்சாயத்துக்கும் ஒரு வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டி வழங்கப்படும் என்று அறிவித்ததற்கு தற்போது திமுக வீடுதோறும் வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டி என்று அறிவித்துள்ளது.
அதிமுக ஆட்சியில் வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டிகள் வழங்குவது சம்பந்தமான 10 கோடி ஊழல் குற்றச்சாட்டால் கைதும், விடுதலைகளும், தண்டனைகளுமாய் தீர்ப்புகள் வெளியானது நினைவு கூரத்தக்கது.

திமுக மற்றும் அதிமுக கட்சிகளின் இடஒதுக்கீடு சம்பந்தமான வாக்குறுதியும் இதேபோன்றதுதான். ஒருவேளை இந்த கட்சிகளில் ஏதாவது ஒன்று அரியணை ஏறி இட ஒதுக்கீட்டை நிறைவேற்ற முயன்றாலும் நீதி மன்றங்கள் அதைத்தடுத்து நிறுத்தாது என்று திட்டவட்டமாக வாக்கறுதி அளிக்க முடியாது. ஏனென்றால்… ஆந்திரத்தில் நடந்தது இதுதான்!

இந்த அமைப்புகளுக்கான முஸ்லிம்களின் அமோக ஆதரவு தற்போது தவறாக பயன்படுத்தப்படுகிறது. இதுவும் தற்காலிகமானதுதான்! இதன் மற்றொரு பக்கம் கசப்பானது. பரிதாபமானது. முஸ்லிம்களின் சக்தி, சாமார்த்தியங்களை இளைய சக்தியை, பொருளாதாரத்தை, காலத்தை துஷ்பிரயோகம் செய்ததால், இறைவனின் திருச்சந்நிதியில் பதிலளிக்க வேண்டிய இருண்ட பக்கங்கள் அவை.

இஸ்லாத்தின் வருகையின் நோக்கம் வெறும் சீர்த்திருத்தங்கள் மட்டுமோ அல்லது அரசியல் கோஷங்கள் மட்டுமோ அல்ல. அது மனித வாழ்வை பரிபூரணமாக வடிவமைப்பது. மனித வாழ்வின் அனைத்துத்துறைகளையும் படைத்தவனின் கட்டளைகளுக்கு அடிபணிய வைப்பது.

நன்மையை ஏவி, தீமையைத் தடுக்கும் பொறுப்புகள் சுமத்தப்பட்ட இஸ்லாமிய சமூகத்தின் ஒரு குழு அழைப்பியல் பணிகளைத் தொடர்ந்து கொண்டே இருக்கும். இந்தப் பணி மறுமை நாள்வரை தொடர்ந்தவாறே இருக்கும்.

படைத்தவனுக்கு தன்னையும், அடிபணிய வைத்து சக மனிதரையும் அடிபணிய வைக்கும் மாபெரும் பணி அது. இந்தப் பணிக்காகவே இறைத்தூதர்கள் அனுப்பப்பட்டார்கள். அன்பு நபிகளார் தங்களின் வாழ்நாளிலேயே அந்தப் பணியை முழுமையாக்கினார்கள். அதைத் தொடரும்படி தங்களின் இறுதி ஹஜ் பேருரையில் அறிவுறுத்தினார்கள். இதைத்தான் நமது முன்னோர்களும் நிறைவேற்றினார்கள். அதன் விளைவாக நமக்கு எட்டியதுதான் இந்த பிரபஞ்ச வாழ்வியல் திட்டம், இஸ்லாம்.

இஸ்லாம் வெறும் சீர்த்திருத்த அமைப்பல்ல. வெறும் இட ஒதுக்கீடுகளுக்கான போராட்ட களமுமல்ல. அதேபோல, அடுத்த சித்தாந்தங்களின் தலைவர்களை தோளில் சுமந்து செல்லும் சிந்துபாத்துகளும் அல்ல முஸ்லிம்கள்!

இஸ்லாம் வெறும் வணக்க வழிபாடுகளின் தொகுப்பு மட்டும் அல்ல. அது படைத்தவனின் கட்டளையை முழுமையாக செயல்படுத்த வேண்டிய பரிபூரண சித்தாந்தம். இந்த பிரபஞ்சத்தின் ஒரு படைப்பான மனித இனத்திலும் இறைகட்டளைகள் செயல்படுத்தப்பட வேண்டிய அமைப்பு. ”லா இலாஹா இல்லல்லாஹ்!” – என்று முழங்கப்படும் கலிமாவின் முற்பகுதியில் இடம் பெறும் “இலாஹ்“ என்னும் சொல் வணக்கத்தை மட்டுமே குறிப்பதல்ல. இறைவனின் சட்டங்களையும் ஒருசேர குறிப்பது. படைத்தவன்தான் சங்களை அளிக்க வல்லவன் என்பதன் மற்றொரு செய்தியையும் உள்ளடக்கியது.

அழைப்பியலை உயிர் மூச்சாக கொள்ளாத இன்னும் எத்தனை அமைப்புகள் தமிழகத்தில் முளைத்தாலும் பெரும் மக்கள் சமுத்திர அமைப்புகளாய் அவை வளர்ந்தாலும், அந்த அமைப்புகளால் முஸ்லிம் சமூகம் தனது இலக்கை நோக்கி நகரவே முடியாது. ஐம்பதுக்கும் மேற்பட்ட முஸ்லிம் நாடுகளில் இதுதான் நடந்துகொண்டிருக்கிறது. அப்படி என்றால் இருக்கும் அமைப்புகள் பயனற்றவையா? என்ற கேள்வி எழுவது சகஜம்.

ஒவ்வொரு செயலுக்கும் ஒரு விளைவு இருக்கவே செய்யும். இது இறைவனின் படைப்பியல் நியதி. சில உரிமைகளுக்காக… சில முயற்சிகளின் விளைவுகள் பூரணமாகிவிடாது என்றுதான் சொல்ல வருகிறேன். இந்நிலையில், தற்போது செயல்படும் சிறிய, பெரிய முஸ்லிம் அமைப்புகள் ஒருங்கிணையாமல் ஒரே குரலில் உரத்து தங்கள் குரலை எழுப்பாமல் பிளவுபட்டு போனால் விளைவுகள் எப்படியிருக்கும் சிந்தித்துப் பாருங்கள்.

முழுமையான இஸ்லாமிய திருச் செய்தியால் சீர்திருந்திய முஸ்லிம்களின் கொள்கைப் பிடிப்பு எப்படியிருக்கும்? அது எப்படிப்பட்ட தியாகங்களை எல்லாம் எதிர்கொள்ளும்? நாம் எத்தகைய முஸ்லிம் ஆளுமைகளை வார்த்தெடுக்க வேண்டும்? இத்தகைய உயரிய ஆளுமைகளை ஒருங்கிணைத்து இயக்கமாக ஆம்… எக்காலத்துக்கும், இயங்கும் இயக்கமாக எப்படி மாற்றியமைக்க வேண்டும் என்பதை உணர்வு பூர்வமாக பேசும் பிரான்சு நாட்டில் நடந்த உண்மை சம்பவத்தை உங்கள் முன் வைக்கிறேன். தன்னுணர்வு என்னும் ஈகோவால் உந்தப்பட்டு சமுதாயத்தை சுயநலங்களுக்காகப் பலியிட நினைப்போருக்கு இதில் படிப்பினை இருக்கிறது.”நான் பள்ளிக்குச் செல்லும் முன் கண்ணாடியில் என் முகத்தைப் பார்க்கும் போதெல்லாம் என்னை அடையாளம் கண்டுகொள்ள திணறுவேன். அந்த நேரங்களில், ”ஏய்..! யார் இந்த மொட்டைத்தலை?” – என்று கூட என்னை அறியாமலேயே முணுமுணுப்பதும் உண்டு. உண்மையில் இந்த அனுபவம் கொடுமையானது!

நானும் என் குடும்பத்தாரும் பிரெஞ்சு முஸ்லிம்கள். ஏற்குறைய 5 மில்லியன் முஸ்லிம்கள் பிரான்சில் வசிக்கிறார்கள் அதாவது மொத்த மக்கள் தொகையில், சுமார் 10 விழுக்காடு. நாட்டின் இரண்டாவது மிகப் பெரிய சமயம் இஸ்லாம்.

எனது பெற்றோரின் பூர்வீகம் துருக்கி. ஆனால், அவர்கள் தங்களின் 15 வயதிலேயே அதாவது என் வயதிலேயே புலம் பெயர்ந்து பிரான்சுக்கு வந்துவிட்டார்கள். நானும் என்னுடைய ஐந்து சகோதரர்களும், கிழக்கு பிரான்சின் ஸ்டார்ஸ்பர்க் நகரத்தில்தான் பிறந்தோம். தற்போது இங்குதான் வசிக்கிறோம். வீட்டில் பிரெஞ்சு, துருக்கி முஸ்லிம் என்று பன்முக கலாச்சாரம் பின்பற்றப்படுகிறது. என் பெற்றோருடன் பிரெஞ்சு மொழியில்தான் நான் உரையாடுவேன். அம்மாவோடு மஸ்ஜித்துக்கு சென்று தொழுவேன். கோடை விடுமுறையில் துருக்கிக்குச் சுற்றலா செல்வோம். மொத்தத்தில் எங்கள் குடும்பம் ஆழ்ந்த சமயப்பற்றுள்ள குடும்பம். ஓர் இறைவனான அல்லாஹ்வை ஏற்றுக் கொண்டுள்ள குடும்பம்.

இஸ்லாத்தின் கொள்கையின்படி, பெண்களின் தலைமுடி வெளியில் தெரியாமல் மறைத்தாக வேண்டும். அந்நிய ஆடவர் கண்களுக்கு படாமல் மறைக்க வேண்டிய அழகுப் பொருள் அது. அதனால், நானும் எனது தாயாரும் வெளியில் செல்லும்போது, தலையை மறைக்கும் விதமாக ஸ்கார்ப் அணிந்துதான் செல்வோம். வீட்டில் அனுமதிக்கப்பட்ட நெருங்கிய உறவினர் முன் மட்டுமே அதை கழற்றுவோம்.

செப். 1, 2004 – ம், ஆண்டு எனது பள்ளி இறுதியாண்டில் பிரெஞ்சு முஸ்லிம்களின் வாழ்க்கை ஸ்தம்பித்துப் போனது. கல்விக்கூடங்களில் சமய சின்னங்களுக்கு தடை விதிக்கப்பட்ட நாள் அது. நான் அதுவரை அணிந்து வந்த ஸ்கார்ப் உட்பட இந்தத் தடை பொருந்தும்.

பிரான்சு மதசார்பின்மையைப் பின்பற்றும் நாடு. 1905-லிருந்து அரசையும், சர்ச்சையும் பிரித்து சட்டம் இயற்றப்பட்டது. எந்தவிதமான சமயத் திணிப்பும் இல்லாமல் அவரவர் சமய நம்பிக்கைகளின்படி வாழ ஒருவிதத்தில் நல்ல சட்டம் இது.

நாங்கள் யாரையும் கட்டாய மதமாற்றம் செய்வதோ அல்லது பிற சமயங்களைவிட எங்கள் சமயம் உயர்ந்தது என்று தம்பட்டம் அடித்துக் கொள்வதோ கிடையாது. எங்களை மிகச் சிறந்த மனிதர்களாக மாற்றிக் கொள்ளும் முயற்சிகளைத் தவிர நாங்கள் வேறொன்றும் செய்வதில்லை. அதனால், இந்தச் சட்டம் எங்களை பாதிக்கவில்லை என்றே சொல்லலாம்.

ஆனால், தற்போதைய புதிய சட்டமோ என் இதயத்தை சுக்கால் சுக்கலாக்கி விட்டது. இஸ்லாமிய மார்க்கமா? அல்லது கல்வியா? என்று இரண்டில் ஒன்றை தேர்வு செய்யும் நிர்பந்தத்துக்கு நான் தள்ளப்பட்டேன். எனது எதிர்காலம் பெருத்த கேள்வியாய் மாறி என்னை அச்சுறுத்தியது. திடீரென்று இந்தச் சட்டத்தை பிரெஞ்சு அரசு கொண்டு வரக் காரணம் என்ன என்று புரியவில்லை.

புதிய சட்டம் அமல்படுத்தப்பட்ட அந்த முதல் நாள் என் வாழ்வை நரகமாக்கிய நாள். பள்ளிக்கு புறப்பட ஆடைகள் அணிய கிட்ட தட்ட ஒரு மணி நேரத்துக்கும் அதிகமானது எனக்கு.

இனி நான் தலைக்கு ஸ்கார்ப் அணிய கூடாது. அதனால் தலையை மறைக்கும் விதமாக பாடகர்கள் அணிவது போல பெரிய அளவிலான தொப்பி ஒன்றை அணிந்து கொண்டேன். இருந்தும் என் சமய விதிகளை மீறும் உறுத்தல் உள்ளத்தை துளைத்தெடுத்தது. வேறு வழி தெரியவில்லை.

கடைசியில், பள்ளிக்குச் சென்றபோது, முதல்வரோ என் உணர்வுகளைப் புரிந்துகொள்ளவில்லை. என்னை வகுப்பறைக்குச் செல்லவிடாமல் தடுத்து தனி அறைக்கு அனுப்பிவிட்டார். புதிய சட்டப்படி இந்த ஆடைக்கு அனுமதி இல்லை என்றார்.

அடுத்த நாளும் இதேபோலதான் நடந்தது. நான் பள்ளியில் தனிமைப்படுத்தப்பட்டேன். என் நிலையை யாரும் புரிந்துகொள்வதாய் இல்லை. என்னோடு இன்னும் சில முஸ்லிம் மாணவிகளுக்கும் இதுதான் நடந்தது. இன்னும் சிலர் பள்ளியைவிட்டே முற்றிலும் நின்று விட்டனர்.

நான் பள்ளிக்குச் செல்ல விரும்பினேன். அதேசமயம் என் சமயத்தின் கட்டளைகளுக்கும் அடிபணியாமல் என்னால் இருக்க முடியாது. என் தலைமுடியை அந்நியருக்கு காட்ட முடியாது. என்ன செய்வது? நான் முடிவெடுத்துவிட்டேன். அது கடினமான செயல்தான்! ஆனால், எனக்கு வேறு வழி தெரியவில்லை.

செப்.5.

நான் என்னுடைய அழகிய பழுப்பு நிற முடி முழுவதையும் மழித்துவிட்டேன். இப்போது மொட்டைத் தலையுடன் நான்.

தலைமுடியை மழித்துக் கொள்வது என் வாழ்நாளிலேயே கொடும் துயரச் சம்பவம். என் உருவத்தையே மாற்றிக் கொள்வதற்கு ஒப்பான நிகழ்வு அது.

நான் தனியாளாகவே தலைமுடியை மழித்துக் கொள்ள விரும்பினேன். ஆனால், முடியவில்லை. பின்னந் தலை முடியை மழிப்பது பெரும் சிரமமாக இருந்தது.

என்ன செய்வது என்று தெரியாமல் அடுப்பங்கரையைச் சுற்றி சுற்றி வந்தேன். கடைசியில் என் தாயாரின் உதவியை நாடுவது என்று தீர்மானித்தேன். என் அரைகுறை மொட்டைத் தலைக் கோலத்தைக் கண்டதும் என் தாயார் பதறிவிட்டார். பெரும் விம்லுடன் அவருக்கு அழுகை பொத்துக் கொண்டு வந்தது. எனக்கு உதவ அவர் மறுத்துவிட்டார்.

இறுதியாக என் தந்தையார் கலங்கிய கண்களுடன் எனக்கு உதவ முன்வந்தார். என் முடிவு நிச்சயம் அவருக்கு வருத்தமளிக்கவே செய்யும். அதனால், என்னை மன்னித்துவிடும்படி அவரிடம் மெதுவாக சொன்னேன். என்னைக் கட்டியணைத்தவர் எனக்காக பிரார்த்தித்தவாறு எனக்கு உதவ முன்வந்தார்.

தலையை நான் மழித்துக் கொண்டாலும் தலைக்கு தொப்பியை அணிந்துதான் பள்ளிக்குச் செல்ல ஆரம்பித்தேன். எனக்குள் தன்னம்பிக்கை அதிகம் இருந்தாலும் எனது செயல் எனக்குள் பதட்டமளித்தது. ஒவ்வொரு நாளும் தனிமை அறையிலேயே நாட்களை கழிக்க வேண்டிவந்தது.

கடைசியில், ஒரு வழியாக தைரியத்தை வரவழைத்துக் கொண்டு மொட்டைத் தலையுடன் வகுப்பறையில் நுழைந்தேன்.

முதன்முறையாக என்னை மொட்டைத் தலையுடன் கண்ட மாணவர்கள் ஒரு கணம் திகைத்து விட்டார்கள். பிறகு ஆதரவாக கைத்தட்டி என்னை வரவேற்றார்கள். ஆனால், ஆசிரியர்களோ ஆடி போனார்கள். இது அவர்களுக்கு எதிர்மறை செயலாகவே பட்டது. மாறாக, தனது சமய நம்பிக்கைகளை காத்துக் கொள்ள ஓர் இளம் பெண் அரசாங்க சட்டங்களுக்கு அடிபணியும் அதே நேரத்தில் தனது இறைநம்பிக்கையைக் காத்துக் கொள்ளும் நிகழ்வாக அதைக் கருதவில்லை. என் நாட்டுக்கும், என் சமயத்துக்கும் அடிபணிந்த ஒரு பெண் என்பதில் எனக்கு இனம்புரியாத மகிழ்ச்சியே ஏற்பட்டது.

இங்கு ஒரு விஷயத்தை தெளிவாக வலியுறுத்தி சொல்ல விரும்புகின்றேன். என் பெற்றோர் எப்போதும் எனக்கு உறுதுணையாகவே இருக்கிறார்கள். இருப்பினும் இஸ்லாமிய ஆடை அமைப்பை அணிந்து கொள்ளும்படி அவர்கள் ஒரு நாளும் என்னை வற்புறுத்தியதே இல்லை. அதேபோல, மொட்டை அடித்துக் கொள்ளும் ஆலோசனையையும் அவர்கள் எனக்குத் தரவில்லை. எல்லாமே எனது சொந்த முடிவுகள்தான்!

என் தந்தையார் கார் ஓட்டுநராக பணிபுரிபவர். எனக்கு பிரான்சு மக்களிடையே ஏற்பட்டுவரும் மதிப்பச்சம் மிக்க செல்வாக்கு என் தந்தையாரின் முதலாளியை எரிச்சலுறச் செய்தது. அவர் என் தந்தையாரிடம் கடுமையாக நடந்து கொள்வதை அறிந்து நான் வருத்தமுற்றேன்.

என் பள்ளியில் பணிபுரியும் சில ஆசிரியர்கள் என் செயலால் கோபப்பட்டு ”இனி நீ ஒரு காலும் முக்காடு அணியும் வாய்ப்பே இல்லை. ஏனென்றால், பிரான்சில் இனி எந்த இடத்திலும் சமயச் சின்னங்களை அணியக் கூடாது என்ற சட்டம் வரத்தான் போகிறது. இனி நீ வாழ்நாள் முழுவதும் மொட்டைத் தலையுடன் அலைய வேண்டியதுதான்!” – என்று கோபத்தை கொட்டித் தீர்த்தார்கள்.

அவர்கள் சொல்வது தவறு என்பதை நிரூபிக்க நான் விரும்புகின்றேன். தலைக்கு அணியும் ஆடை என் கண்ணியம் சம்பந்தமானது. வெறும் ஒரு துண்டு துணி சம்பந்தப்பட்டது அல்ல. இன்னும் தெளிவாகச் சொல்லப் போனால்.. எனது உரிமை. ஆம்.. எனது ஆடை..! எனது உரிமை..!! எனது ஆடை அலங்காரத்தின் ஒரு பகுதி அது.

பொழுது புலர்ந்ததும், முதல் பணியாய் என் தலையை மறைத்துக் கொள்ள நான் தேர்ந்தெடுத்துள்ள ஆடை, சமூகத்தை பாதிக்காதவரை அந்த ஆடையை எப்படி அணிய வேண்டும் என்று தீர்மானிக்க வேண்டியது நான்தான்!

எனது பள்ளிப் படிப்பு முடியும்வரை நான் மொட்டைத் தலையுடன்தான் இருப்பேன். வாரம் ஒருமுறை என்னுடைய பெற்றோரின் குளியலறையில் என் தலையை மழித்துக் கொள்கிறேன்.

இரண்டு வயதுடைய என் குட்டித் தம்பி ஹஸனுக்கு எனது மொட்டைத் தலை பிடிக்காது. ”அக்கா! நீ ரொம்பவும் அசிங்கமாக இருக்கே!” – என்பான் மழலை மொழியில். தொடர்ந்து, ”உன் முடியை பிடித்திழுத்து விளையாட முடியலே போ..!” – என்று சிணுங்குவான்.

யார் என்ன சொன்னாலும் கவலையில்லை. என் கொள்கைதான் எனக்கு முக்கியம்.


ஒரு பெண் மொட்டை அடிப்பது கூடுமா? கூடாதா? என்ற விவாத களமல்ல இதன் நோக்கம்.

இறைவனின் கட்டளையை நிறைவேற்ற எந்தத் தியாகத்தையும் செய்யத் தயார். அழகுக்கு அணி சேர்க்கும் கூந்தலையும் இழக்கத் தயார். ஆனால், இறைவனின் ஒரே ஒரு கட்டளையைகூட புறக்கணிக்க தயாராக இல்லை என்று அதை நடைமுறைப் படுத்திக் காட்டிய அந்த பிரெஞ்சுப் பெண் எங்கே!

சமுதாயம் எக்கேடு கெட்டாலும் பரவாயில்லை. தம் பதவி, புகழ், பணத்திற்காக எதைச் செய்யவும் தயார் என்றிருக்கும் நம் சமுதாய அமைப்புகளின் தலைவர்கள் எங்கே!!No comments:

Post a Comment